சிறுகதை: புண்ணியாத்மா.

சிறுகதை: புண்ணியவாத்மா.இங்கே வந்தவர்களில், இந்த இருபது வருசங்களில் எத்தனை பேர்கள் கழன்று போய் விட்டார்கள்..இப்ப, இவனும்? நினைக்க, நினைக்க ‌மனசு. கனக்கிறது.

வந்த புதிதில் தேவன் வேலை செய்து கொண்டிருந்த உணவகத்திலேயே இவனும் வலது காலையை எடுத்து வைத்து “வேலைக்கு ஆட்கள் எடுக்கிறீர்களா?”என்று கேட்டுச் சேர்ந்திருந்தான் .உணவகத்தின் இயக்குனர் ‘பில்’ நல்லவர் ,கறுப்பினத்தவர் ! , கறுப்பர்களும் ஈழத் தமிழர்கள் போல‌. அடக்குமுறை களில் சதா சீரழிந்தவர்கள்.அவருக்கு ஈழத்தமிழர் மீது அனுதாபம்அந்த மாதிரி இருந்தது.  .அவனின் சமூக எண்,மற்றும் வதியும் விலாசம்,தொலைபேசி எண் முதலானவற்றைக் குறித்து வைத்து ஒரு -ஃபைலைத் திறந்து அவனை வேலையில் சேர்த்து விட்டிருந்தார்,

“நாளையிலிருந்து நீ வேலைக்கு வரலாம், என்ன‌ சொல்கிறாய் “என்று சிரித்தார்.அன்றைக்கே சேர்த்திருக்கலாம்.அவன் உச்சியைப் பிளக்கிற வெய்யில் சென்றது. தோல் எரிய‌, .களைச்சுப் போன முகத்துடன் இருந்தான். சுத்தம் முக்கியம்.அன்றன்றைக்கு வெளுத்த வெள்ளை சேட்,வெள்ளைக் நீள் கால்சாராய்க்கு மாறிக் கொண்டு, தலை மயிருக்கு நெட் தொப்பி போட்டுக் கொண்டு தான் வேலையை தொடங்குவார்கள். நண்பகல் வேளை வேர்வையில் குளித்திருந்தான் .ஃபிரஸ்ஸாக தொடங்க வேண்டும்  என்று நினைத்தாரோ?

அடுத்த நாள் தான் அவனுக்குத் தெரிந்தது நுழைந்திருப்பது குட்டி யாழ்ப்பாணம் என்பது.எல்லாருமே கிட்டாரடியில்  சேர்ந்தே, பிறகு பல்வேறு சமையல் பிரிவுகளிற்கு தரம் உயர்த்தப்பட்டு வேலை செய்துகொண்டிருப்பவர்கள்.தேவனுக்கு கோழிகளை நீளக் கம்பிகளில் கொளுவி ‘அவனி’ல் செருகி ,வெந்ததும், மெசின் மணி அடிக்க,எடுத்து பிளாஸ்டிக் கூடையில் கொட்டுற ‘குக்’ வேலை. வெக்கையிலே அவனும் கூட‌ கிடந்து வெந்து கொண்டிருந்தான்.

தேவ‌னுக்கு சிரிச்ச முகம்.தோழமையுடன் கதைக்கிறதால்.அவனை பார்த்தவுடனேயே பிடித்து விட்டிருந்தது.

‘கிட்டார’டியில் இருந்த சூரி அவனுக்கு வேலையை கற்றுக் கொடுத்தான். சிறிய வண்டிலில். மேல்,கீழ் தட்டுகளில் வைத்துள்ள பிளாஸ்டிக் கூடைகளில் ,வந்தவர்கள் சாப்பிட்டு விட்டுப் போகிற …தட்டுக்க ளை,கிளாஸ்களை வெவ்வேறாக எடுத்து  மெசினடிக்கு ஓட்டி வர வேண்டும்.

தள்ளி வார போது வண்டி தாறுமாறாக ஓடியது.” எல்லாருக்குமே இப்படித் தான்!, பயப்படாதே.ஓட , ஓட பழக்கத்திலே சரியாய் வரும்.” என்று அவன் சிரித்தான் மெசினோடு சேர்ந்தபடி கிடக்கிற‌ நீள அலுமினிய மேசையிலேஅவற்றை குவிக்க‌ ,அவன் மெசினூக்கூடாகச் செல்கிற பிளாஸ்டிக் தட்டுகளில் என்ன வேகமாய் அடுக்கிறான் . அதே விரைவில் உள்ளே தள்ளி விட்டு  மெசின் சுவிச்சை  தட்டி, தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருப்பான் . உள்ளே செல்கிறவை, கார் கழுவுறது போலத் தான்.முதலில் வளைய வடிவில் இருக்கிற சிறிய குழாய்களிலிருந்து வார வெறும் தண்ணீரால் பிசிறடித்து கழுவுகிறது.அடுத்த பகுதியில் சோப் தண்ணீரால் பிசிறடிக்கும்.பிறகு நல்லத் தண்ணீரால் நேரம் எடுத்து கழுவும்.அடுத்து வெப்பக் காற்று வீசும்.வெளியில் வார போது காய்ந்த நிலையில் தட்டுக்களும் மற்ற‌யவையும் கிடக்கும்.அலுமினியப் பானை,சட்டி…என கிடக்கிற‌ எல்லாவற்றையும் குப்புறக் கவிழ்த்து அனுப்பிக் கழுவப்பபடுகின்றன. சூரிக்குப் பக்கத்திலே மெசினோடு ஒட்டிக் கிடக்கிற ,கழுவுற நீர் வெளியேறுகிற அலுமினியப் , பெட்டியில் கிடக்கிற வாளி போன்ற வடிகட்டியில் சேர்கிற உணவுப் பருக்கைகளை இடைக்கிடை கழிவுக் கூடையில் எடுத்துக் கொட்ட வேண்டும்.

கண்ணாடிக் கிளாசில் …அடையாளம் இல்லாத மாதிரி எல்லாமுமே கழுவப் பட வேண்டும் அதில் கவனம்எடுக்கிறார்கள்.எங்கடயாட்களின் வர்த்தகத்தில்  இந்தக் கவனமும் எடுத்து , வர்த்தகத்தில்… கூட்டு முயற்சியிலும் இறங்குவார்கள் என்றால் முதலாளிகளாவார்களாக மலர்வார்கள், எங்கடயாட்கள் மாற வேண்டும் . எல்லாத்திலும் சிமார்ட்டாக வேண்டும் என்று ரதன் நினைப்பான்.

சிலநேரம், கிட்டாரில் வேலை செய்கிறவர்கள் வரவில்லை என்றால்…உப இயக்குனராக சார்ள்ஸ் வெட் க்கப்படாது  உள்ளே இறங்கிக் கழுவித் தள்ளுவார். சமயத்தில் முஸ்பாத்தியாகவும் கூடக் கதைப்பார். திறமை,கிறமை ஏதாவதிருந்தால்… மதிப்பவர். அவருக்கும் ஈழவர் மீது சிறிது அனுதாபம் இருந்தது.? 

சனப்புழக்கம் கூடிய நேரங்களில் ,கின்னஸ் புத்தகத்தில் பேர் எடுப்பது போல கோப்பையடி நடக்கும். .மற்ற பகுதியில் கழுவி வாரதை பரணி எடுத்து அடுக்கிக் கொண்டேயிருப்பான். அவன் ஏறத்தாழ மெசினாகி விடுவான்.

உப இயக்குனர்களில் ஒருத்தனாக இருக்கிற, உடுவிலில் படித்த கரன் அடிக்கடி வளைய வருவான்.

ஊரிலே,தாமரை இயக்கத்தில் பிரதேசப் பொறுப்பாளராக இருந்த மணியை,கழுகு இயக்கம் துரத்தி வேட்டையாடிய போது,அகப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தான். மணி இன்றும் ரதனின் மனதில் குருஜியாக…உயிர் வாழ்பவன். சாகும் வரையில் இருந்து தொந்ததரவு கொடுத்துக்கொண்டே இருக்கப் போறவன், கரனுக்கு ‘ஒன்றை விட்ட அண்ணன்காரன் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவனுடைய பெரியப்பாவின் மத்திய‌ மகன்.அங்கே இருக்கிற வரையில், ரதனுக்கு மணி யின் தனிப்பட்ட விசயங்கள் துப்பரவாகவே தெரிந்திருக்கவில்லை.எனவே, இவனின் வாய்யை சதாக் கிளறிக் கொண்டே இருப்பான்.கரனுக்கும் லெவல் இல்லாததால் ..பதில் சொல்லிக் கொண்டே இருந்தான்.

சிறுகதை: புண்ணியவாத்மா.மணி, முதல் தரம் எ.லெவல் எடுத்தவுடனேயே ,கொழும்பிற்குப் போய் மகாராஜாவில் …வேலையில் சேர்ந்து விட்டிருக்கிறான்..83 கலவரத்திலே…அந்த வர்த்தக நிறுவனமும் அடிக்கப்பட்டிருந்தது. எங்கே அகப்பட்டிருந்தானோ?, இவனுடைய மனநிலை மோசமாக பாதிக்கப் பட்டிருந்திருக்கிறது.திரும்ப கொழும்பிற்கு போக விருப்பமில்லாது…,இவனோடு வந்திருந்த ஓரிரு நண்பர்களுடன் , கொழும்பிலேயே பிறந்து , வளர்ந்து ‌வேலை செய்தவர்கள், சேர…. இயக்கத்தில் பயிற்சி எடுக்க இந்தியாவிற்கு போயிருக்கிறார்கள் . திரும்பி வந்தவனை பிரதேசப் பொறுப்பாளராக நியமித்திருந்தார்கள். ரதன், உப பிரதேசப் பொறுப்பாளருடன் சேர்ந்து அவனுடைய கூட்டங்களிற்குப் போய் இருக்கிறான்.அதிலே அவன் விசயங்களை நட்பு ரீதியாக சொல்லி விளங்கப் படுத்துறதில் சூரன். ரதனின் அண்ணன் சிலவேளை அவனை கேலி பண்ணுவான்.”என்ன வாய்யை ‘ஆ’என திறந்து கொண்டிருக்கிறே,’ஈ’ புகுந்திடப் போகிறது”,அப்படி கேட்டுக் கொண்டிருப்பான். அந்த மாதிரி பேசி விளங்கப் படுத்துவான்’

. ரதனால் மறக்க முடியாதவன். பேசாமல் கரனையே,அவனைப் பற்றி தெரிந்த எல்லாவற்றையுமே வைத்து ஒரு சிறுகதையாய் எழுதக் கேட்டிருக்கலாம் , விட்டு விட்டான். 

உணவகத்தில், பசிச்சால் எதையும் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். குக்,தட்டிலே எடுத்து போட்டுக் கொடுப்பான். சாப்பிடுற போது யாருமே எந்த வேலையையும் சொல்லி இடையூறு விளைவிக்க மாட்டார்கள்..அந்த நல்ல பழக்கம் எல்லாரிடமும் குடி கொண்டு இருந்தன‌. ஆகக் களைத்து விட்டால்… இயக்குனர்கள்  பியர் கூட எடுத்து தருவார்கள்.

இவனுக்கு அழுக்கான கோப்பைகளை எடுத்து வார ‘பஸ்போய்’வேலை.

பொதுவாக மாணவர்களிற்கு அரைவாசி சம்பளம் கொடுக்கலாம்.ஆனால்,அந்த உணவகத்தில்,இயக்குனரே மாணவராக இருந்து தான் வேலை செய்தவர் என்பதால்…முழுச் சம்பளமே… கொடுத்தார். சம்பளப் பணத்தில்.உணவை .எடுக்காட்டியும் கூட‌ 5% எல்லாருக்குமே கழிப்பார்கள் ஒவ்வொரு நாளும் கணக்கு வழக்குகளைக் கூட்டிக் கழிக்கிற போது துண்டு விழாமலா இருக்கும்?.அதைச் சமாளிக்க …. இந்த வழி கையாளப்படுகிறது என்று கரன் சொன்னான்.

பெரும்பாலும் முடிப்பு நிகழ்கிற போது இரவு ஒரு மணி,இரண்டு மணியாகி விடுகின்றது. .ஈழத்தமிழர் தான்…எதற்கும் தயாரானவர்களாச்சே! இரவுக்குருவிகள். பிந்திய இரவுகளில் ‘சப்வேய்’கள் ஓடுவதில்லை.. ‘புளூ லைன்’ என பஸ்கள் ஓடுகின்றன‌. பிறகென்ன கவலை.

இவர்கள் செல்ல‌,உணவகத்தை துப்பரவு செய்கிற பணியாட்கள் வந்து விடுவார்கள்.

தொடக்கத்தில் சொந்தமாக யார் கார் வைத்திருந்தார்கள்?.குறைவு தான் .எல்லாருமே பஸ்ஸில் ,சப்வேய்யில் தான் பயணம். ஓரிருவரே கார் வைத்திருந்தார்கள்.போகிற வழியில் என்றால் ….ஏற்றிப் போவார்கள் ஒரே இடத்தில் வேலை செய்கிறவர்களிடத்தில் அடிக்கடி கெளரவக் குணங்கள் எட்டிப் பார்க்கவில்லை. கல்யாணம் முடித்த பிறகு தான் வேறு மனிதர்கள். எல்லாராலேலும் சுயமாக இருக்க முடிவதில்லை.

ரதனுக்கு ,சாமத்திற்குப் பிறகு வார பஸ்சிலே வீட்ட வருகிற போது உடம்பிலே ரத்தம் எல்லாம் செத்துப் போய் இருக்கும். கிட க்கிற செட்டியிலே தொப்பென ‌வீழ்ந்து கிடந்து தொலைக்காட்சியைப் ….பார்ப்பான். ஓரு பியர் உள்ளே இறங்கும். இது ஓரு சுதந்திர நாடு.பின்னிரவில் …கவர்ச்சிப் படங்களிற்குக் குறைவில்லை. அப்படியே நித்திரையும் ஆகி விடுவான்.

. உணவகம், அடுத்த நாள் காலை 10 மணிக்கு உயிர்ப் பெற்று,.. 11 மணிக்குத் திறக்கப்படும். பகல் வேலையாட்கள் வேலை முடிந்து போக,இவர்கள் பின்னேர வேலையாட்களாக5 மணி போல‌ அவசரமாக நுழைவார்கள். 

கீர்த்தி, இவனை கிட்டாரிலிருந்து மாற்ற‌ ‘சிக்கினை’ லாவகமாக வெட்ட எத்தனையோ முறை பழக்கினான்.அவனுக்குத் தான்  கடைசி வரையில் லாவகமாக வெட்டுறது சரி வரவே இல்லை.

கீர்த்தி அயலில் இருக்கிற பள்ளிக்கூடத்தில் உயர் வகுப்பில் படிக்கிற மாணவன். பகுதி நேரமாக வேலை பார்க்கிறவன்.

அச்சமயம், தேவனைத் தவிர எவருமே கல்யாணம் கட்டியும்  இருக்கவில்லை. அங்கிருந்த பலர் அவனை “அண்ணா” என்றே கூப்பிட்டார்கள். அவனுக்கு ரதனை விட ஒரு வயசு தான் கூடுதலாக இருந்திருக்கிறது.

அப்பத் தெரிந்திருக்கவில்லை, இப்ப வெள்ளைப் படுக்கையில் வந்து படுத்திருக்கிற போதே தெரிய வருகிறது.

தேவன், முல்லை இயக்கத்தின் இருந்த மாஜித் தோழன் என ஏற்கனவே அறிந்தேயிருந்தான். தேவனை நேரிலே தெரியாதே,தவிர இந்த ,நாட்டுக்கு வரும்போதே, இவனுடைய நண்பன், விமலின் தம்பி சக்தி , தேவன் இருந்த முல்லை இயக்கத்தில் இருந்தவன்,எல்லோரும் தானே கொழும்பிற்கு ஒதுங்கி விட்டிருந்தார்களே,கொழும்பையே தெரியாது வந்த‌  ரதனுக்கு அங்கே தங்க பல உதவிகளைச் செய்தவன்,விமானத்தில் ஏற்ற வந்த போது “உரும்பிராய்த் தோழர், தேவனை கட்டாயம் சந்திக்கப் பார்” என இந்த தேவனைத் தான்  கூறியிருந்தான் 

அவன் , தப்பிய அனுபவத்தை தொடர்ந்து… “விடியல்” பத்திரிகையில் சுவாரசியமாக எழுதிக் கொண்டிருந்தான் ரதன், வாசிக்கிற பிறவி,.தவறாது பத்திரிகையை வாங்கி படிப்பவன். வேற இடத்தில் வேலை செய்திருந்தாலும் கூட‌ தொடர் மூலம் அறிந்தேயிருப்பான் தான்.

‘பொன் விலங்கு’ நாவலை எழுதுற போது நா.பார்த்தசாரதி பக்கத்து வீட்டில் இருந்து, ஒவ்வொரு நாளும் நேரே நேரே கதைப்பதாக இருந்தால் எப்படி இருக்கும்? அத்தகைய‌ வாய்த்திருந்தது. 

தேவனுடைய இயக்கத்திலிருந்த தோழி சரோஜாவின் குடும்பத்தினரே, கழுகு இயக்கம், முல்லை இயக்கத் தோழர்களை துரத்தி நரவேட்டையாடிய போது, இவன் உயிர் தப்பி வெளியேற … உதவி செய்து இருக்கிறார்கள். , அதன் காரணமாக‌ அவன், அவளையே கட்டிக் கொண்டு , இந்த நாட்டுக்குள் காலை எடுத்து வைத்திருக்கிறான்.

தேவன் எழுதுவதோடு மட்டும் நிற்கவில்லை.நாடகங்களை எழுதி ,மேடையேற்றுவது,கவியரங்கம் நடத்துவது,தென்னிந்திய எழுத்தாளர்கள் வந்தால் விடியல் குழுவினருடன் சேர்ந்து நள்ளிரவு கடந்த பிறகும் கூட‌….கலந்துரையாடல்களை நடத்துவது… என சதா அலைந்து கொண்டும் இருந்தான். அவனைக் கட்டி வந்த‌வளை அதிருஸ்டப்பிறவி என சொல்லவும் முடியாது., முற்பிறவியில் பாவம் ஏதும் செய்திருப்பாளோ?

இண்டர்நெற் எல்லாம் கண்டு பிடிக்காத 90ற்குப் பிறகான‌ …காலம். அப்ப ஒரு டொலருக்கு வாங்கிற ‘ஜோர்ஜி’ன் ‘விடியல்’ பத்திரிக்கை தான்  அவர்களிற்கு…. கணினி வலை, இணையப்புத்தகம், முகநூல் எல்லாமே. ரதனும் ‘விடிய’லில் பார்த்தே, தேவன் கலந்து கொள்கிற இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் போய்க் கொண்டிருந்தான். 

அவன் உடலை பார்ப்பதற்காக வைத்திருந்த ‘சா’இல்லத்தில், ரதன், பார்த்து ரசித்த தேவனின் குறிப்பிடக் கூடிய இரண்டு நாடகங்களைப் பற்றி பேசத் தொடங்கினான். அதில் ஒன்று “தூர் வாரப்பட‌ வேண்டிய விடுதலை”. தலைப்பைப் பார்த்தாலே விளங்கும் தானே, அதற்காக மாற்ற முடியுமா? அவனும் மாற்றுறவன் இல்லையே! .ஏற்கனவே இவனுடைய நாடகங்களைப் பார்த்தவர்கள், இலக்கிய நண்பர்களின் குடும்பத்தினர்களே பெரும்பாலும் வ ந்தார்கள். இடதுசாரி நாடு என்றாலே ,வெறுக்கிற பார்வையுடையவர்களாக…இந்நாட்டவர் இருக்கிறது போலவே நம்மவர்களும் இந்த மாதிரி நிகழ்வுகளை வெறுக்கிறார்கள். மனித உரிமைகளை பேசுவதால் …வாய் அவிந்து விட மாட்டாது. அதிகளவு மனித உரிமைகள் பேசுவதால் நாமும் ஒன்றும் குறைந்து ம் போய் விட மாட்டோம்.சுதந்திரமற்ற பார்வைகள் தான் எம்மை…மேலும் மேலும் பாதிக்கச் செய்து கொண்டு போகும். இதையெல்லாம் புரிய நாளாகுமோ,இல்லை,புரியாமலேயே. மேலே போய் விடுவார்களோ?

நம்மவர்கள் எல்லாத் துறைகளிலுமே ஒரளவிற்கு மேலேயும் செல்ல முடியாத‌ தடுமாற்றமுள்ளவர்களாகவே.. .இருக்கிறார்கள். அடுத்தடுத்த காலடிகளையும் எடுத்து வைக்க பழக‌ வேண்டும்.

அங்கே தான், கழுகு, ராட்சதனாக கழுகு, ராட்சதனாக நின்று விடுதலைப் போராட்டத் தை நின்று தடுத்தது என்றால் இங்கேயும் யாரும் நிற்கிறார்களோ? அற்பனுக்கு பவிசு வந்தால் என்பது போல ,ஆயுதங்களைக் காணாதவர்களின் கைகளில் ஆயுதங்கள் வந்ததால்..??? பெரிய நாடுகள் இந்த பலவீனத்தை வைத்தே அரசியல் செய்து விடுகின்றன‌. ஒவ்வொரு நாடுகளும் “பெரிய ஆயுதங்களைத் தாரேன்,அதைச் செய்வாய்யா, இதைச் செய்வாயா? என விடுதலைப் போராட்ட இயக்கங்களிலும் நுழைந்து தமது இலக்குகளை இலகுவாக சாதித்தும் விடுகின்றன‌  இத்தகைய போக்கு களால் கிட்டத்தில் கிடைக்கக்  கூடிய விடுதலை, வெகு,தூரத்திற்கு அடித்துக் கொண்டு போய் விடுகிற அவலத்தைத் தான் நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும்  காண்கிறோம்.

உள்ளுக்குள்ளே , நம்மவர்கள் அடித்துக் கொள்ளும் போக்குகளால் மேலும் , மேலும் தனிமையாகிக் கொண்டிருக்கிற பலவீனத்தாலும் விடுதலைப் போராட்டம் பழி வாங்கும் போராட்டமாகமும் சிறுத்து போய் விட்டது .

அவனுக்கு ஏற்பட்ட அனுபவத்தையே திரும்பவும் கோபத்துடன் ஒரு குடும்பத்தில் வைத்து நாடகமாக மறு வாசிப்பு செய்திருக்கிறான் .நாம் எல்லோருமே, எங்களிற்கு உண்மையில் நடந்தது என்ன ? என்பதை கட்டாயம் தெளிவாக அறிந்திருக்க‌ வேண்டும். ‘நம்மவர்களிற்கும் அவசியம் அரசியல் அறிவு இருக்க‌ வேண்டும்’என வலியுறுத்தி முடிவதாக இருக்கிறது.

மற்ற நாடகம் “ஒய்வெடுத்துக் கொள்ளும் போராட்டம்”.அது தற்போதைய நிலையை அலசு ,அலசு என‌ அலசுகிறது . தேவன் உயிருடன் இல்லை தானே.எனவே ரதன், ,தன்னுடையக் கருத்துக்களையும் துணிவாகச் சொல்லி…களைத்துப் போய் இருந்தான்.இலக்கிய வட்டத்தைச் சேர்ந்தவர்களை விட , மற்ற‌வர்கள் காது கொடுத்துக் கேட்டிருப்பார்களா? என்பது இதிலேயும் சந்தேகம் தான்.

அவனும் பேசி ஓய கலா அவனுக்கு கிட்ட வந்து காதிலே மெதுவாக.

,”தேவனுக்குப் படிப்பிச்ச பார்வதிரீச்சர் பேச விரும்புகிறார்.அறிவி மச்சான்”என்றான் .

“எழுத்தறிவிச்சவர் கடவுள்.தேவனுக்கு படிப்பிச்ச ரீச்சர் சொர்பொழிவு ஆற்ற வருகிறார் “என்றான்.திரும்பி எங்கடா?என்று கண்ணால் கேட்டான். ஒரு அக்கா சக்கர நாற்காலியில் வைத்து தள்ளி வார முதியவரைக் காட்டினான்.கிட்ட வர “இவ, என்ர அக்கா மாலதி, அம்மாடா”என அறிமுகப் படுத்தினான்.

அடப்பாவி!

ரதனுக்கு இலக்கியக் கூட்டங்கள்களிற்கு வர ஆரம்பித்த கொஞ்ச நாளில் தேவன் அறிமுகப்படுத்தி கலாவைத் தெரியும்.ஆனால், .அவன் தனிப்பட்ட விசயங்களைப் பற்றி இன்று வரையில் எதுவுமே தெரிந்திருக்கவில்லை. மண்டபத்திலும் இலக்கியக் கூட்டத்திற்கு வருகின்ற மற்ற முகங்களே தெரிகின்றன. பலரின் பெயரைக் கேட்டால் அவனுக்கு சொல்ல வராது. விடியல்க் குழுவினர் எனத் தெரியும். பழக்கம் கூட என்றபடியால்… கலாவை தெரிகிறது.  .

இவனுக்கும் கூட தன்னைப் பற்றி  தெரிந்திருக்காது என்றே அவனுக்குப் படுகிறது .சிலவேளை அவனும் தேவனைப் போல சாகிற போது கொஞ்சம் தெரிய வரலாம், அவன் தான் பிரபலமான புள்ளி இல்லையே. பேரானவனும் இல்லையே. தாமரை இலையும் நீரும் போல வாழ்க்கை மட்டுமில்லை நட்பும் ஒட்டிக் கொண்டு கிடக்கிறது .

வந்த புதிதில், ஊரிலே இருந்த போது தாமரை இயக்கத்திலே இருந்திருந்தால், அதன் தொடர்ச்சியாக தாமரைப் பெடியள்களுடன் பழக்கம் இருந்தது. கல்யாணம் கட்டிய பிறகு அந்த‌ தொடர்புகள் அறுபட்டு ‌அப்பப்ப செய்தியாகக் கேள்விப்பட்டு ” அட இவன் செத்துப் போய் விட்டானா?”என்று வருந்துவதாக‌… முடிகிறது.

இவனுக்கும் வேற வயசாகிறது. கிழடு தட்ட ,தட்ட இலக்கியக் கூட்டங்களிற்குப் போவதும் கூட குறையப் போகிறது ..

கலாவின் அம்மா ,வெள்ளைத் தலை மயிர் , ‌ பறக்க‌, …அனேகமாக கொட்டுண்டு போய் இருக்க‌, கண்கள் சிறிது உள்ளே போய்  தளர்ந்து போயிருந்தார். ,”பேசுங்கள் அம்மா “என வயர் இணைப்பு இல்லாத மைக்கை  அவரிடம் கொடுத்தான் 

பின்னுக்கு துயரத்துடன் நின்ற ‘விடியல் கூட்ட நண்பர்களுடன் போய் நின்று கொண்டான். அவர்களுடைய தூண்கள் ஒவ்வொன்றாக சரிந்து கொண்டு போகிறது. கலாவும் அவனுக்குப் பின்னால் வந்து நின்றான். 

எல்லாருமே தனிப் புள்ளிகளாகிக் கொண்டிருக்கிறோம். அது பிரச்சனை தான் . யாரும், இறந்து போனால் இப்படி தனிமையிலிருந்து வேற அழ வேண்டி வருகிறது. கூட எழுகிற‌ நினைப்புகளிற்கும் குறைவில்லை .துக்கத்துடன் மறுபடியும் பெட்டியில் கிடக்கிற தேவனை நினைத்தான்” இவனும், எவ்வளவு கனவுகள் கண்டிருப்பான் ! காணாமலே போகிறானே?

பாரதத்தில் ,கண்ணன் (பெருமாள்),” ஆத்மா, மனித உடல்கள்,சட்டையை மாற்றிக் கொள்கிற மாதிரி…அடுத்தடுத்து சட்டைகளைப் போட்டுக் கொண்டே இருக்கிறது, அது அழிவதில்லை”என்கிறார். ‌ எல்லாருடைய‌ ஆத்மாவும் கனவை தரிசிக்காமல் சமாதானம் அடையப் போவதில்லையா? மறுபடியும்,மறுபடியும் வந்து பிறக்கப் போகிறோமோ?

வீரர்களாக இருப்பது, அநீதிகளை எதிர்த்துப் போராடுவது, சுதந்திர பிறவிகளாக இருப்பதற்கு குறுக்கே நிற்கிற அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிய முயற்சிப்பது எல்லாமே உண்மையில் வெட்டித் தனமானவை தானா? சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறோமா?

கடைசியில் என்னத்தைத் தான் கண்டோம் என்ற விரக்தியும் கூட எட்டிப் பார்க்கிறதே ?

அவனின் தலைமாட்டுப் பக்கம் பெட்டிக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த கணனித் திரையில் சிலைய்டாக தேவனின் ஒவ்வொரு புகைப்படங்களும் மாறிக் கொண்டிருந்தன. பாரதிராஜாவின் திரைப்படங்களில் வார கதாநாயகன் சுதாகர் போல கறுத்த மீசையுடன், 80களில் போட்ட பெல்பொட்டமுடனான நீள்கால்ச்சாராய்யுடன்…அவனும் ஒரு நாயகன் போல இருக்கிறான்.

இவன் நேரே,இந்த நாட்டுக்கு வந்து இறங்கி இருக்கவில்லை. பல ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் இருந்த…சந்தோசம் பூக்கும் குடும்பப் படங்கள்,அவனுடைய மூத்த மகளும்,அடுத்தவளும் அங்கே தான் பிறந்திருக்க வேண்டும்.குழந்தையை ஏந்திய உறவுகள்,நண்பர்ள்க சூழ்ந்த…என மாறிக் கொண்டிருந்தன. பக்கத்தில் நின்ற கலா, ஒரு படத்தைச் சுட்டிக்காட்டி “அது, அவனுடைய இயக்கக் கூட்டம்” என்றான். தனிய பெடியள்களுடன் மட்டும் நின்றிருந்தான். ஊரிலே, எடுத்திருக்க மாட்டான். வெளிய வந்த பிறகு தான் எடுத்திருக்கலாம் 

அம்மாவின்  பேச்சும் காதில் வீழ்ந்து கொண்டிருந்தது. “இவன் என்னுடைய மாணவன். குட்டிப் பையனாக இருக்கிற போதே,மழை,பூ,நதி,வானம்…என அழகாக இயற்கையை ரசித்து,குட்டிக் கவிதைகள் எழுதுவான். தீபாவளி, சிவராத்திரி, சரஸ்வதிப் பூசை, பொங்கல்… என வார விசேட நாட்களையும் கவிதையாக்கி விடுவான். இடதுசாரிக் கட்சியில் இருந்த இவனுடைய தந்தையார்.. தான் ‌.இவனின் அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். சுட்டிப் பையனாக பள்ளிக்கூடத்தில் கவனிக்கப் பட்டவன். 7ம் வகுப்பிலே, ஈழநாடுப் பத்திரிகையின் ஞாயிறுகளில் வார வாரமஞ்சரியில், மாணவர் உலகுப் பகுதியில், இவன் எழுதிய எழுத்துக்கள் அச்சில் வரத் தொடங்கின. ஒருநாள் , ஈழநாடு ,ஆசிரியரான பெருமாளின் முன்னால் போய் நின்று, “நிருபராக எப்படி எழுதுகிறது? எனக் கேட்டிருக்கிறான்.”நீ இப்ப எழுதுறது போலவே எழுதி வா.செய்தி எழுதுவது பள்ளிப் பாடம் போன்றது. அது,உன்னுடைய எழுதுற திறமையை அழித்து விடும் .இதிலே முதலில் தேர்ச்சியைப் பெறு, பிறகு,… பார்க்கலாம்”என தெரிவித்து அனுப்பி இருக்கிறார். ஈழநாட்டில் வேலை செய்கிற ஊழியர் ஒருவர் தெரிவித்து எங்களுக்கெல்லாம் தெரிய வந்தது. இவன் எதிலும் பெரிதாக செய்ய ஆசைப்படுறவன்.

இவன் படிச்சுப் பெரிய ஆளாவான்’என அதிபர் உட்பட நாமெல்லாம் நினைத்தோம். 83ம் ஆண்டுக் கலவரம் எல்லாத்தையும் தலைகீழாக்கி விட்டது. பிஞ்சு இதயங்களை நொருக்கி விட்டன நிறையக் கோவங்கள்… எல்லாருமே  திசைமாறிப் போய் விட்டார்கள்.”கரைகிறார்.

“ஆம்பிள்ளைப் பிள்ளையைப் பெற்றவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்,பெண்களைப் பெற்றவனோ புண்ணியவான்.இவனோ  மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்றிருக்கிறான்.பெரும் புண்ணியவான்”என்கிறார்.

ரதன்”கலா,உன்ர அம்மா, நல்லாய் மயக்குற மாதிரி பேசுகிறார்”என்றான்.

“அம்மா சொல்றது,சரியா,பிழையா?என உனக்கு கேட்கத் தோன்றவில்லையா?” என குதர்க்கமாகக்  கேட்டான் கலா.

“என்ன பிழை இருக்கிறது?சரியாத் தானே,சொல்கிறார்,விளங்கவில்லையே “என்றான் ரதன்.

“புண்ணியம் பெரிசில்லையா?”கேட்டான் கலா.

“தாய்வழிச் சமுதாயம் தானே முதலில் தோன்றியது! என்கிறார்கள்,உண்மை யும் அது தானே?” “ரதன்.

கலா “ஒரு ரீச்சருக்கு இருசாராருமே சரிசமன்.அம்மா,தேவன் ,பேச்சைக் கேட்டு மனம் குளிரணும்’என்று தான் அப்படி பேசுகிறார்”என்றான்.

“செத்தவன் எப்படி கேட்பான்?”வியப்புடன் கேட்டான் ரதன்

.”நீ என்ன நினைக்கிறாய்? செத்து விட்டால் உடனே, ஆவியாய் பறந்து விடுவோம், என்றா?…ஒரு கிழமைக்கு மேலே குடும்பத்தையே சுற்றி, சுற்றி வருவோம் தெரியுமா?,. படையல்,கழிச்சல்..என்று எல்லாம் செய்கிறார்களே(செலவு..என சொல்லப்படுகிறது),ஆவியை சாந்தப்படுத்த தானே?”என்றான் கலா. அவன் , நாடகத்தில் என்னவோ எல்லாம் பேசினான்.இந்த வலத்தில் சிந்திக்கவே இல்லை. அம்மாவிற்கிருக்கிற‌ நுண்னறிவு அவனிற்கு இல்லை தான்.ஒப்புக் கொள்ள வே  வேண்டும். இவன் , என்ரப் பேச்சையும் கூட கேட்டிருப்பானே!,சே!,கொஞ்சம் எடிட் பண்ணி இருக்கலாமோ?.

“அவனுடைய விடுதலைப்பற்றிய புதிய பேச்சுக்களை விளங்கிக் கொள்ள முடியவில்லை தான்.ஆனால்,அவன் உயிர் தப்பியதை …டயறிக் குறிப்புப் போல எழுதி இருக்கிற தொடர் ‘ஒரு ஆவணம்’ போலவே இருக்கிறது.புத்தகமாக அச்சில் அடித்த போது முதல் பிரதியை என்னைத் தேடியே வந்து என் கையிலே தந்தான்,நல்லப் பெடியன்”அழுதே விட்டார்.

“எனக்குப் பிடிச்ச ரீச்சர் உன்ர அம்மா தான்.அவரிடமே கொடுக்க விரும்புறேன், என்றான் .நான் தான் கூட்டிப் போனேன்”என்றான் கலா.

மேலும் தொடர்ந்த அம்மாவின் பேச்சை..ரதன் கேட்டுக் கொண்டிருக்க,கலாவின் நினைப்பு , சிற‌கடித்து பின்னோக்கிப் பறந்து விட்டிருந்தது. தேவனைச்,சேர்ந்த ஈழவர் ஆய்வு மன்ற அமைப்புப் பெடியள்கள் கிராமத்துப் பெடியள் மத்தியில் கூட்டங்கள் வைப்பார்கள்.பள்ளிக்கூடங்களிலும் வைப்பார்கள்.பலதைப் பற்றிப் புதுவிதமாக‌ பேசுவார்கள்,அலசுவார்கள். இவனிடமும் என்னவோ… இருக்கிறது,.எல்லாரையும் தன் பக்கம் இழுத்து விடுகிறானே என்று நினைத்தான்.

புதிதாய் வந்த ஒரு கூட்டம் ஒன்று பெட்டியை மொய்த்துக் கொண்டிருந்தது.

அந்த சா வீடு, வந்த கூட்டத்தை பதிவு செய்து கொண்டிருக்கிறது.

“இதைப் போல கூட்டம் எப்பவும் வரவில்லை”பணியாள் ஒருவர் தெரிந்தவரிடம் கூறுவது கேட்டது. கலாவின் அம்மாவும் பேசி ஓய்ந்தார்.

ரதனின் சிந்தனையும் சிறகடித்தது. அப்ப அவனுக்குத் தேவனைத் தெரியாது தவிர‌, அந்தப் பிரச்சனையை நல்லாய்த் தெரியும். தேவனும், அப்பத் தான் இந்தியாவிலிருந்து திரும்பி வந்திருக்கிறான் . அந்தப் பிரச்சனையும் கோழித் திருடர்களை எல்லாம் லைட் போஸ்டில் கட்டிப் போட்டு சுட்டுக் கொன்றது போன்ற சில்லறை விசயம் தான்..அரசியல் அனுபவமில்லாததால் பெரிசாக்கப் பட்டிருக்கிறது.பல்கலைக்கழக புகு வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.பழைய மாணவர்கள்,புதியவர்களை ராகிங் செய்யிறது வழமை போல… களை கட்டி இருந்தது.பிரச்சனை என்னவென்றால் புதிய மாணவி யாக வந்த‌ சுபா கழுகின் பொறுப்பாளர் ஒருவரின் உறவினராக இருந்தது தான்.கபிலனின் செட் எல்லாரையும் ஓரே மாதிரியே இருத்தி எழுப்பிக் கொண்டிருந்தது.சுபாவை இனம் கண்டு கொண்ட விமல்,”டேய்,டேய்..இவள் சந்திரனின் மச்சாளடா, மச்சான் அவன் சும்மாவே கோபக்காரன்,இவளை ராகிங் செய்தது தெரிந்தால்…தொலைந்தோம்.சுபா,நீங்க போகலாம்”என்றான்.

“இயக்கம் எல்லாம் வெளியிலே, நாம் முதலில் மாணவர் தான்.”, ஏ பொண்ணு சைக்கிள் விடு,நீச்சல் அடி..”… என்று.அவளையும் அலைக்கழித்து விட்டே கபிலன் விட்டான். 

.விசயம் தான் காற்றை விட கடுதியாய் பறந்து போனது.அன்றிரவே கொஸ்டலிற்குள் புகுந்து கபிலனை கைது செய்து கொண்டு போய் விட்டார்கள்.படையினர் வளாகத்திற்குள் நுழைந்தாலே கொந்தளிக்கிறவர்கள் மாணவர்கள்,விடுவார்களா?கழுகு என சொல்லவில்லை,”பிடித்துக் கொண்டு போன இயக்கம், கபிலனை உடனடியாய் விடுதலை செய்ய வேண்டும்”என மாணவர் அமைப்பு பகிரங்கமாக‌ அறிக்கை விட்டது.

.மாணவர் அமைப்பு, பல்வேறு இயக்கச் சார்புடையதாக பிளவு பட்டிருந்ததாலும்., இச் சந்தர்ப்பத்தில் எதிராக ஒன்றும் சொல்லவில்லை. திடீரென உண்ணாவிரதக் கொட்டில் உள் வளவில் முளைத்தது.மாணவிகள் பலரும் …இருக்க முன் வந்தார்கள்.தொழினுட்பக்கல்லூரி மாணவர் உட்பட,பாடசாலை மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலமும் நடத்தப் போகிறோம் என எச்சரித்தார்கள்..பெரியவர்கள் சிலர் “எங்கட பெடியளுக்கு எதிராக எங்கட ஆட்களே ..இப்படி செய்வது நல்லதில்லை”என இயக்கத் தலைவர்களுடன் கதைத்துப் பார்த்தார்கள். விழலுக்கு இறைத்த முயற்சியாகப்… போனது.

கழுகு , அவசரப்பட்டு அவனைப் போட்டு மோசமாக‌ அடித்திருக்கிறது. கபிலன் இறந்து விட்டிருக்கிறான். அதை வெளியிலே சொல்லவும் முடியவில்லை, நாம் தாம் ..செய்தோம் என உரிமை கோர‌வும் முடியவில்லை.

இப்படியான தர்மசங்கடமான நிலைமைகள் எல்லா இயக்கங்களிலுமே இடம் பட்டிருக்கின்றன‌.

உண்ணாவிரதம் தொடர, ஆர்ப்பாட்ட ஊர்வலமும் விமர்சிகையாக‌நடைப்பெற்றது ஊர்வல முடிவில் இயக்க உப தலைவர்கள்,கழுகு உட்பட…மேடை ஏறி,”கபிலனைப் பற்றிய செய்திகள் ஏதும் கிடைத்தால் கட்டாடயம் அறியத் தருகிறோம்”என வாக்குறுதி அளித் திருந்தார்கள் . கழுகு தான் பிடித்தது என பல்கலைப் பெடியளுக்கு தெளிவாக தெரிந்திருந்தன. ஆனால் ,கழுகைச் சுட்டிக்காட்டிப் ….பேசப் எல்லாருக்குமே பயம்! முடியவில்லை.

.”அடக்குமுறைகளிற்கெதிரான போராட்டத்திலும் அடக்குமுறையா?” தேவனின் செட் கோபப்பட்டது. சும்மாவும் இருக்கவில்லை நகரத்து மதில்களில் எல்லாம் அழகான பெயின்ற் எழுத்தில் நறுக்கென வார்த்தைகளில் சுருக்கென தைக்கக் கூடியதாக‌ குத்தலான கவிதை வரிகள்.. ஒவ்வொரு நாளும் காணப்படத் தொடங்கின. பிள்ளையார் சுழி போட்டது போல பிரபல உணர்ச்சிக் கவிஞர் பசுபதியின் கவிதை வரிகளை எழுதியவன், பிறகு, தன் சொந்தக்கற்பனையில் உதித்தவற்றை எழுதிக் கொண்டிருந்திருக்கிறான்.

இவர்கள் தான் முதல் முதலில் மதில்களில் நேரடியாக நல்ல, பெரிய எழுத்துகளில் எழுதத் தொடங்கியவர்கள்.அதற்கு முதல் எல்லாரும் அச்சிட்ட போஸ்டர்களையே ஒட்டிக் கொண்டிருந்தவர்கள்.

இவை செய்திப் பலகைகள் என அழைக்கப் படலாயின.கடைசியில் கபிலனை விடுதலை செய் “என முடியும்.

ரதனுக்கு கவிதை வரிகள் சுவாரசியமாய் இருந்தன. சைக்கிளில் திரிந்து திரிந்து போய் வாசிப்பான்.இவனுக்கு தேவனையும் தெரியாது.அவனுடைய தோழர்களையும் தெரியாது. ஆனால் முல்லை இயக்கம் தான் எழுதுகிறது எனத் தெரியும்.

கபிலன் இறந்தது கசிந்து வெளியில் தெரிய வர, கட்டம் கட்டமாக நடந்து வந்த‌ உண்ணா விரதத்தை நிறுத்தி விட்டார்கள். ஆனால், எழுதிய தேவனில் கழுகினர் வலு கோபத்தில் இருந்தார்கள். முல்லை தடைசெய்யப்பட்ட போது,தேவன் இலக்கு வைக்கப் பட்டு விட்டான்.

பிறகு, அவன் தப்பி வந்தது தானே தெரியும்!

ரதன் திரும்பவும் சென்று, ரீச்சரின் குடும்பத்துடன் நின்று தேவனைப் பார்த்த‌ போது,பெட்டியோட நின்று கொண்டிருந்த தேவனின் மனைவி,மெலிந்து, காய்ந்து போயிருந்தவள் ,மெல்ல அவனருகே வந்து துயரம் பகிர, அவன் கைகளையும் பற்றி… விடுகிறாள். செத்த வீடுகளில் சொந்தக்காரர்களின் கைகளைப் பற்றி விடுகிறதை அவன் பார்த்திருக்கிறான்.

அவ‌னும் வேற இயக்கத்தில் இருந்தாலும் …தோழன் தானே, அவளும் தோழி தானே. ‌ நாமும் புதிய சொந்தக்காரர் தானே. அவள் கையைப் பற்றிய போதே , எங்கையோ அவளைப் பார்த்திருப்பது போல.. அவனுக்குத் தோன்றியது. “பார்த்தீங்களா அண் ணா, எங்கட நிலமையை?”என அவள் சொல்லி அழுவது மாதிரி. துக்கமாகமும் இருந்தது.

அட, அவனுடைய கிராமத்துக்கு உள்ள இயக்கங்களின் மகளிர் அமைப்பெல்லாம் சிறு சிறு கூட்டமாக சைக்கிளில் வருவார்கள்; போவார்கள் அப்படி வந்தவர்களில் அவளும் இருந்திருக்கிறாள் எனத் தோன்றுகிறது. 

அப்படி இருந்தால்,அவளுக்கு இந்தத் திருவை க் கட்டாயம் தெரிந்திருக்கும் . அப்ப, அவனுடைய இயக்கப் பேர் திரு.

அவன்…. தாமரையின்…. கிராமப் பொறுப்பாளராக இருந்தவன் ! 

balamuraly@sympatico.ca