சிறுகதை: பூப்பும் பறிப்பும்

நவஜோதி ஜோகரட்னம்துரும்பு ஒன்று காற்றிலே பறக்கும்போது அது ஏன் பறக்குது என்பது  ஞானிக்குத் தெரியுமாம். அவர்கள் சகுனங்களை அறிவார்களாம். பிறர் வார்த்தைகளிலிருந்து அவர்கள் உள்ளத்தை அறிவார்களாம். முகச்சாடைகளிலிருந்து அவர்கள் சுபாவத்தை அறிவார்களாம் என்றுதான் அறிந்திருக்கிறேன். ஆனால் சாதாரண மனிதர்களாகிய எமக்கு இவை முடியாமற் போகின்றது. திருமணமாகி ஐந்து வருடங்களாகக்; காத்திருந்து கிடைத்த அழகான அருமை மகள். அக்குழந்தை மார்பில் வாய் புதைந்து கொடுத்த வலிகள் இன்னும்  மாறாது எடையற்ற மலர்களாக அந்தத் தாயுள் விரிவதுண்டு. இப்போது வயது ஒன்பது ஆரம்பித்திருக்கிறது அக்குழந்தைக்கு. பாடசாலைக்கு  கூட்டிச்செல்வது மட்டுமல்ல, சனிக்கிழமைகளில் இங்குள்ள தமிழ் பாடசாலைகளில் பரதநாட்டியம், வீணை போன்ற கலைகளையும் தன் குழந்தைக்கு  கற்றுக் கொடுப்பதற்காக ஓய்வின்றி அலைந்துகொண்டிருப்பவள் அந்தத்தாய்.

 ‘மம், வெயர் இஸ் மை ஸ்கூள் ரை?’ ‘என்ர வைற் சொக்ஸை காணவில்லை’ என்று ஒரு பிரச்சனை எழுப்பித்தான் காலையில்  பாடசாலைக்கே புறப்படுவாள். எல்லாவற்றையும் உற்சாகத்தோடும்,  ஆர்வத்தோடும் தேடி எடுத்துத் தயார் செய்து பாடசாலைக்கு அழைத்துச் செல்வதில் பெருமிதம் அடைவாள் அந்தத்தாய்.

“செல்வக் குஞ்சு பள்ளிக்கூடத்தால்; வந்தால் எல்லாவற்றையும் அவற்றிற்குரிய அந்தந்த இடத்தில் ஒழுங்காக வைத்துப் பழக வேண்டுமடா செல்லம். அப்படி வைத்துப் பழகினால் ஒன்றும் தொலைய மாட்டாது. சின்ன குட்டிப் பெண்பிள்ளைப் பெண்ணெல்லோ! பிள்ளைக்கென்று தனியான சின்ன அறை இருக்குத்தானே! உடுப்புகளை கூட அடுக்கி எல்லாம் ஒழுங்காக வைத்துப் பழக வேண்டும் கண்ணா!” என்று, தான் கன்னியர் மடத்தில் படிக்கும்போது சிஸ்டமார் சொல்லிக்கொடுத்தவற்றை அப்படியே சொல்லுவாள் அம்மா.
        
தன் அருமை மகள் பிறந்த நாள் தொடக்கம் குளிப்பாட்டும் தொட்டியில்; அவளை குளிப்பாட்டி,  குளிர்படாமல் அணைத்து வைத்திருப்பதும், வீட்டில் மின்சாரத்தில் இயங்கும் கீற்றரைப் போட்டு சூடாக வைத்திருந்து, வாசம் நிறைந்த ஓடிக்கொலோனை பஞ்சுகளால் ஒத்தி எடுத்து காது, மூக்கு ஈரங்களை தடவி எடுத்து குளியலை ஒரு பரவசமூட்டும் பகிர்தலாக்கிவிடுவாள் அந்தத் தாய். அவள் வளர்ந்து வரும் ஒவ்வொரு வயதும், அவள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விடயமும் இனிய நாட்களாகி ஒரே பரபரப்புத்தான் அம்மாவுக்கு. 

லண்டனில் பார்த்தால் பிள்ளைகள் கிடு கிடுவென்று விரைவாக வளர்ச்சி அடைந்து விடுகின்றார்கள். உணவுவகைகளின் வித்தியாசங்கள்;; முக்கியகாரணம் என்றுதான் எங்கட கண்டுபிடிப்பு. தனது மகளுக்கு வயது ஒன்பதாக இருந்தாலும் அவளின் உடலில் மாற்றங்கள் அப்பட்டமாகத் தென்பட்டுக்கொண்டிருந்தது. அறிவிலும், உடலிலும் அவளில் பெருமளவில் மாற்றங்களை அவதானிக்க முடிந்தது. உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய அழகிய சிலையாக தாயுள்ளத்தில் அச்சிறுமி மலர்ந்தாள்.

ஷாம்போ நுரை தலையில் பூக்க மெதுவாகக் கோதியபடி ‘கண்ணை மூடிக்கொள் செல்லம்’ என்று அவளுக்கு மூச்சு முட்டிவிடுமோ என்ற ஒருவித பயத்தில் ஒரு கையை சிறு குடையாகக் குவிய வைத்து ஷவரைத் தலையில் பிடித்துத்தான் தலையில் குளிப்பாட்டுவாள். ‘இங்கேயெல்லாம் சோப் போட்டு நல்லாக ஊத்தைகள் போக குளிக்கவேண்டும்’ என்று அம்மாவின் கை விரல்கள் பிள்ளையின் உடல் பூராகவும் பரவும். தனது செல்ல மகளின் இளமார்பையும், குட்டிவயிற்றையும், அவதானித்த அம்மாவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தபோதும்,  இன்னும் விபரம் புரியாத சிறுபிள்ளைதானே என்ற ஒருவித பயமும் அவளுள் சிதறிச் சித்திரமாகியது.
ஷவர்லிருந்து தொடர்ந்துவரும் வெள்ளிவயரைப் பிடித்து சோப்பை கழுவியபடி “ இங்கேயெல்லாம் இனி சதைகள் வைக்கும்;. வீக்கம் என்று பயந்திடாதேயம்மா. ஒருநாள் திடீரென்று வயிற்றுக்குக்கீழே வலிக்கும். ரத்தம் கசியும். குஞ்சு நீ பயப்படக்கூடாதடா. அம்மாவிடம் வந்து உடனேயே சொல்ல வேண்டும சரியா” என்று கூற நினைத்தவள் எதுவுமே கூறாது தனக்குள் சிரித்துக்கொண்டாள்.  அம்மா… எங்கட செல்லம் இப்ப பெரிய ஆளாக வளர்ந்துகொண்டிருக்கிறாள். ஓ.. விரைவில் கொண்டாட்டம் ஒன்று வரஇருக்கிறது என்று மட்டும் சொல்லிச்சிரிக்க… அவள் கொஞ்சம் வெட்கப்பட்டு அம்மாவின் கையைத்தட்டிவிடுவாள்.

– அங்கால போங்க மம்மி

-இது பெண்கள் எல்லாருக்கும் இருக்கிறதுதான். மம்மிக்கு, அன்ராவுக்கு, அம்மம்மாவுக்கு, உன்ர நண்பியின்ர மம்மிக்கு …

– அப்போ எப்ப  மம்மி எனக்கு அப்படி வரும்?

– என்றைக்கோ ஒருநாள் வரும். நீங்க இப்ப குட்டிப் பெண்பிள்ளை தானே!

– வந்தால் எனக்கு ராதா அக்கா  மாதிரி வடிவான சாறி உடுத்தி கனக்க நகைகள் எல்லாம் போட்டு ஆட்களைக் கூப்பிட்டு செலிபிறேற் பண்ணுவீங்களோ?
     
– குஞ்சு இப்படிக் கேட்கிறீங்க… பிள்ளைக்கு செலிபிறேற் பண்ணாமல்… ஊரில இருக்கிற அம்மப்பா ஒரே பிள்ளையின்ர கொண்டாட்டத்தை பார்க்கவேண்டுமென்று ஆவலோடு போனில் பேசுவார். உங்களுடைய அன்ரிமார், மாமாமார் அதாவது அவருடைய எல்லாப் பிள்ளைகளும்  வெளிநாட்டுக்குப் போட்டார்கள் என்று தனிய கவலையோடுதான் இருக்கிறார்.

– அப்போ அம்மம்மா எங்கே மம்மி?

– அம்மம்மாவை சுனாமி வந்து இழுத்துக்கொண்டுபோட்டுதடா குஞ்சு.

– அப்போ அம்மப்பா தனியவோ சிலோனில இருக்கிறார்? பாவம் அம்மப்பா.
     
மிருகங்கள்எந்தத் தடயத்தையும் விட்டுவைக்காமல் தன் தாயைக் விழுங்கிய மரணத்தை நினைத்து திடீரென மௌனமானாள் அம்மா…  நான் வீட்டில் கடைக்குட்டி என்பதால் என்தாயின் குரல் ‘ரோகினி’ என்று என்பெயரைச் சொல்வதில்தான் அதிக ஆனந்தம் அடைவதுண்டு. இளம் மஞ்சள்நிறச் சேலைதான் எனதுதாய் விரும்பி  உடுப்பாள். என் அம்மாவின்…அந்த முகத்தின் இதமான அழகு, கண்களின் உண்மை, விரல்களின் குளுமை, குரலின் இனிமை எல்லாமே அவள் நினைவில் வந்து மாய உலகிற்குள் நுழைத்தது அவளை. லண்டனில் போட்டி போட்டுக் கொண்டு வாராவாரம் கலைநிகழ்ச்சிகள் நடாத்தி கலைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அது நல்ல ஆரோக்கியமான விடயம் தான். கலை அரங்கேற்றங்களும் போட்டி போட்டு அளவுக்கு மீறிய ஆடம்பரங்களோடும், பணச்செலவுகளோடும் செய்கின்றார்கள். பிறந்தநாள் திருமணக் கொண்டாட்டங்களுக்குக்கூட குறைவில்லை. பருவமெய்துவது கூட இப்போது கட்டாய ஆடம்பரக் கொண்டாட்டமாகிவிட்டது. சிவப்புக் கம்பளம் விரித்துஇ வயதுவந்த பெண்பிள்ளையை ‘பல்லக்கில்’தூக்கிச் சென்று வசதி படைத்த அயல்நாட்டில் கொண்டாடியதைப் பார்த்த நண்பி இவளுக்கு வியப்புடன் கூறியது வினோதமாகத் தெரிந்தது. ஆனால் தனது ஒரே மகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பது மட்டும் இப்போது அவளுள் சித்திரமாகி மிதந்து வந்தது.      
    
தைப் பொங்கலன்று அவள் வீட்டிலும் பெரிய பொங்கல்விழா நடந்துகொண்டிருந்தது. சிறுமியாக இருந்த பெண் இப்போ வயதிற்கு வந்துவிட்டாள். அவள் எதிர்பார்த்திருந்த புதுமலர்ச்சிப் பருவம் அடைந்துவிட்டாள். மிதந்து மேலேறும் நினைவுகள் வந்து திக்கற்றுப் பரவிக்கொண்டிருந்தது அந்தத்தாயின் உள்ளத்தை…  உடலில் ஏற்படும் அத்தனை வலிகளையும் அச்சிறுமி தன் தாயிடம்தான் மனம்விட்டுக் குழந்தைபோல் கூறுவாள். நட்பு என்பது இரு உடல்களில் உறைந்துள்ள ஓர் இதயம் என்று சோக்கிரட்டீஸ் சொன்னது மாதிரித்தான் அவர்கள் இருவரும் திகழ்ந்தார்கள்.

– மம்மி நான் பாடசாலைக்குப் போக வேணும் எத்தனை நாட்களுக்கு இப்படி வீட்டில் இருக்க வேணும்? ஸ்கூல் வேலைகள் எல்லாம் கனக்க மிஸ்பண்ணப் போறன் மம்மி…

– இல்லையடா கண்ணா முதற்தரம் வரும்போது நாம் மிகவும் கவனமாக உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டும். உடம்பு வலி குறையத் தொடங்கும்போது ஸ்கூலுக்குப் போகலாம். என்னடா செல்லம் இரண்டு கிழமையால ஸ்கூலுக்குப் போகலாம். எதற்கும் ஸ்கூல் பாக்கில் நாப்கின் எப்பவும் பாதுகாப்பாக வைத்து விடுவேன்.  அப்படி ஏதும் உபயோகிக்கவேண்டி வந்தால்… நான் சொல்லித்;தந்தபடி..ம்.. ம்; என்னடா?

சில மாதங்களின் பின் குளிர் கொஞ்சம் குறைந்து வெய்யிலும் வரும்போது பெரிய கொண்டாட்டமாகச் செய்வோம.; இப்படியான கொண்டாட்டங்கள் இங்கு அவரவர் வசதிகளைப் பொறுத்து வீடுகளிலும், பெரிய மண்டபங்களிலும் அமைதியாகவும், ஆடம்பரமாகவும் கொண்டாடுகின்றார்கள். அதற்கிடையில் எல்லா ஆயத்தங்களையும் செய்ய வேண்டும்? முக்கியமாக  அம்மப்பாவை இந்தச் சாட்டைக் காரணங்காட்டி இலங்கையிலிருந்து இங்கு கூப்பிடவேண்டும். தான் பிறந்து வளர்ந்து இதுவரை நேரில் பார்த்திருக்காத அம்மப்பாவின் வரவை சிறுமி பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. இருந்தும் அம்மாவின் அதீத பரபரப்பைப் பார்த்த  சிறுமியின் முகம் பூத்துக் குலுங்கும் ரோஜாப்பூவைப்போல் சிரிப்பில் மலர்ந்துகொண்டிருந்தது.


தாம்பாளங்களில் வெள்ளைக் கண்ணறைத் துணிகளால் மூடப்பட்டிருந்த பல வகையான பலகாரங்கள் மஞ்சள், குங்குமம், பழங்கள், நெய்யும் சீனியும் சேர்த்துச் செய்த அரிசிமா உருண்டைகள்இ உழுத்தம்மாக் களி,  பூத்தட்டுக்கள், குத்துவிளக்குகள் போன்ற அலங்கரித்த தட்டுக்களையெல்லாம்  பூப்புநீராட்டுவிழாவிற்கு வர்ணப் பட்டாடைகளோடு வந்திருந்தபெண்கள் பலர் கையில் ஏந்திய வண்ணம் நின்றுகொண்டிருந்தார்கள். மேளக்கச்சேரியும், நாதஸ்வர இசையும் ஒலிப்பெட்டியில்; கோர்வையாக முழங்க… மங்கலத்தில் தோய்ந்து களை கட்டிக் கொண்டிருந்தது மண்டபம். அழகிய மஞ்சள் நிற பட்டு மினுங்கல் சாறியோடும், நகைகளின் ஜொலிப்போடும் , பூவாசனையோடும் பருவமடைந்தபெண் அந்தச் சமயத்தின் தனி அழகோடிருந்தாள்…
       
ஒளியில்  ஜொலிக்கும் தனது பேத்தியின் அழகை  ஏதோ ஒரு     வகையான உறைந்த மௌனத்தில், சிலமாதங்கள்தான் இலங்கையிலிருந்து வந்த அம்மப்பா ரசித்துச் சிரித்துக்கொண்டிருந்தார். சிறுமியின் பெற்றோர்களின் மனமோ உறவினர்கள், நண்பர்கள், அறிமுகமானவர்கள் என்று பலபேரின் அன்பின் பக்கங்கள் திறந்து அவர்களுள் புரண்டுகொண்டிருந்தது.


– பிள்ளை, இங்கு வந்ததின் பின் இந்தக் குளிருக்காக்கும் உடம்பெல்லாம் சரியான வருத்தமாக இருக்கிறது. என்ன இருந்தாலும் எங்கட ஊரில இருக்குமாப்போல சுகம்… அந்த சந்தோஷம்… நான் ஊருக்குத் திரும்பப்போறன். நான் தனிக்கட்டையெண்டாலும் என்ர மாமி, மச்சாள்மார் இருக்கிறாளவை. நீ யோசிக்காமல் என்னை அனுப்பிவிடு – என்ற தந்தையின் வேண்டுகோள் ரோகினிக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

– என்ன அப்பா ‘பிள்ளையின் கொண்டாட்டம் முடிந்த களை இன்னும் ஆறவில்லை. எவ்வளவு சிரமப்பட்டு உங்களை இங்கு அழைத்தோம். இப்படி அவசரப்பட்டு ஊருக்குப்போக வேண்டும் என்கிறீர்கள்? இப்படித்தானே இங்கு இருக்கும் எத்தனையோ பிள்ளைகள் தங்களுடைய அம்மா, அப்பாமார்களை ஏதோ ஒரு சாட்டை வைத்து விசாவை எடுத்துகூப்பிட்டுவிட்டு  பிள்ளைகளோடு சேர்ந்து சந்தோஷமாக இருக்கினம். இப்போ உங்களுக்கு என்ன குறையெண்டு கண்டு ஊருக்கு வெளிக்கிட யோசிக்கிறியள்? லண்டனில் இல்லாத மருந்து வசதிகளே ஊரில இருக்கு…- 

என்று மகள் கூறிக்கொண்டேயிருந்தாள். மறைக்க முடியாத குற்ற உணர்வு அசிங்கமாக அவர் முகத்தில் படலமிட்டிருப்பதை எவருமே அறியமாட்டார்கள்.
   
தனது மகளின் எந்தப் பேச்சையும் அப்பா பொருட்படுத்தவேயில்லை. கலகலத்த சிரிப்புக்கள் அவருள் கலங்கிக்கொண்டிருந்ததுபோல் இருந்தது… மிகவும் அவசரமாக தனது காரியத்தில் கண்ணாயிருந்து சில நாட்களில் இலங்கைக்குப் புறப்பட்டுவிட்டார் அப்பா…


மிருகங்கள்சிறுமி பெரியவளாகி பெரிய கொண்டாட்டங்கள் இடம்பெற்றாலும் அந்த உணர்வே அவளுக்குக் கிடையாது. பாடசாலைத் தோழிகளை காணவேண்டும்… அவர்களோடு சேர்ந்து விளையாடவேண்டும்… பேசவேண்டும்… பாடசாலையில் இடம்பெறும் மேல்நாட்டு நாட்டியத்தின் தாள அடிகளைப் பழகவேண்டும்… பாடசாலையில் நடைபெறும் விழாவில் அதனை ஆடிக்காட்ட வேண்டும்… அம்மாவும் அப்பாவும் வந்து அதனைப் பார்க்க வேண்டும்… மகளின் அழகை ரசித்த அம்மா, மகiளை வருடிவிட்டு அழைத்துச் செல்கிறாள் பாடசாலைக்கு. அம்மாவின் கண்களின் மிருதுவான பார்வை அவளை ஆனந்தத்தில் அடைகாப்பதுபோல் இருந்தது. சின்னக் குட்டிப் பெண்ணாக இருந்த தன் ஆசை மகள் இருந்தாப்போல இவ்வளவு வளர்ந்துவிட்;டாளே! அவளில் மிளிரும் விழிகள்… ஒருபோதும் கண்டிராத அவளின் கவர்ச்சி…தொலைக்காட்சியில் தான்; பார்த்து மகிழும் முத்தமிடுகின்ற அழகிய பூவிதழ்கள் போன்று விரியும் உதடுகள் … தனது கணவரின் கவர்ச்சியோடு அமைந்த அவளின் அசைவுகள்… தன்னைப்போன்ற இதமான சாயல்…தன் மகளில் பூத்துக் குலுங்குவதை பாடசாலை வாசலில் நின்று அவளைப் பின்புறம் பார்த்தவாறே பரபரப்பாகி தன்னுள் சுழன்றுகொண்டிருந்தாள் அம்மா. தினமும் தனது புத்திரி குறித்து புதுப்புது விதமான கனவின் மிதப்புக்களில் நாட்கள் நகர்ந்தன அம்மாவுக்கு. 
      
வாரஇறுதிநாளன்று மதியம்போல் பாடசாலையில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

– மிஸிஸ். ரோகினி மதிவண்ணன்..?
     
– யேஸ் ஐ ஆம் மிஸிஸ்  ரோகினி மதிவண்ணன்.

– ஐ ஆம் கோலிங் ஃறொம் யுவர் டோட்டேர்ஸ் ஸகூல். யுவர் டோட்டர் இஸ் நொட் வெல். சி ஹாஸ் எ ரெம்பரேச்சர். கான் யு கம் ரு ஸ்கூல் அஸ் சூன் அஸ் பொசிபிள்? ( உங்களுடைய மகளுக்கு உடம்பு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. வழமைக்கு மாறாக அவள் காணப்படுகின்றாள். உடல் ரெம்பரேச்சரும் காணப்படுகின்றது. உடனடியாக நீங்கள் பாடசாலைக்கு வர முடியுமா? )
    
உடம்பு பூவாகி மலர்ந்து இன்னும் சரியான வலுவடையாத தேகம்… சிறிது நாட்கள் ஓய்வாக வீட்டில் இருந்துவிட்டு, இன்று பாடசாலைக்குப் போனதும் துள்ளி ஓடியாடி விளையாடியிருப்பாள். உடல் நல்லா நொந்துவிட்டதுபோல்… பயமும், பதற்றமும்  தாயுள்ளத்தின்; மனதை வேகமாக்கி அழுத்துகிறது… மிகவும் அவசரமாக தன்னை தயார் செய்துகொண்டு பாடசாலைக்குப் புறப்படுகின்றாள் அம்மா.
    
பாடசாலையின் மெடிக்கல் அறையில் பெண் ஒருவர் அவள்; அருகில் நின்றுகொண்டிருந்தார்.

–  மிஸிஸ் ரோகினி மதிவண்ணன், சிறிது மயக்கமாகவும் இவள் காணப்படுகின்றாள். எதற்கும் இவளை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பரிசோதிப்பது நல்லது – என்று பாடசாலையின் முதலுதவி வழங்குவதற்குப் பொறுப்பாக இருக்கும் அந்தப்பெண் கூறினாள்.
   
காலையில் பரவசத்தோடு பாடசாலைக்குச் சென்ற தனது மகளின் கோலத்தைக் கண்டதும்… அந்தப் பெண் அப்படிக் கூறுவதும்… அம்மாவுக்கு என்றுமில்லாதவாறு மூச்சிழைத்து களைப்பு ஏற்படுகின்றது. கண்களில் நீல ஒளி படருவதுபோலிருந்தது… தனது மகள் ஒன்றும் பேசாது மௌனமாகவே இருந்தாள். அம்மாவின் விழிகளில் எழும் வினாக்களுக்கு அவளால் பதில் கூறத் தெரியவில்லை. இன்னும் விபரம் தெரியாத சின்னவள் தானே! அம்மாவின் தவிப்பு… அவளின் உள்ளத்தில் ஊடுருவும் நெருடல்… வைத்தியசாலையின் அவசரப்பிரிவிற்கு அம்மா மகளை கொண்டு செல்கின்றார். லண்டனில் அவசரப்பிரிவில்தான் அதிக நேரம் காத்துக்கொண்டிருக்க வேண்டும். நீண்டு மினுமினுக்கிற கைகளால் தன்தாயை அணைத்தபடி தன்தாயின் தோளில் சாய்ந்து உறங்கிவிட்டாள்.   
      
வைத்தியரின் திடீர் அழைப்பு… விபரங்கள் எல்லாவற்றையும் பதிவு செய்துகொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன…நாடித் துடிப்பை    பரிசோதித்த வைத்தியர். இவளுக்கு ரத்தப் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறார். பரிசோதனைகளை யாவும் மேற்கொண்ட பின் ‘இப்போது நீங்கள் வீடு செல்லலாம். ரத்தப் பரிசோதனையின் முடிவு தெரிந்ததும் உங்களது குடும்ப வைத்தியருக்கு அறிவிப்போம்’ என்றுவிட்டு விடைபெற்றார் வைத்தியர்.

அம்மாவின் முகத்தில் திகிற் புள்ளிகள் சுழன்றுகொண்டிருந்தன… எதனையும் வெளியிற் காட்டிக்கொள்ளாது ‘வாம்மா’ என்று தனது அழகுச் செல்வத்தை இறுகப் பற்றிக்கொண்டு அழைத்துச் செல்கிறார் வீட்டுக்கு.
எல்லோரும் தூங்கும் இரவுகளில் தன் மகளின் படுக்கையோரம் உட்கார்ந்திருந்தாள் அம்மா. தன் மகளின் உடலில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்; அம்மா… அவளின் உறக்கத்தில் ஊருவும் நெருடலால் விழித்துக்கொண்டேயிருந்தாள் அம்மா.

அம்மாவும் அப்பாவும் ஒரே வேலைப்பராக்குளில் ஓடித்திரிவதுண்டு. அம்மப்பா வீட்டில் துணைக்கு இருக்கிறார் தானே என்ற துணிவில் அம்பப்பாவுடன் தன் மகளை பாதுகாப்பாக விட்டுச் சென்று வெளிவேலைகளைக் கவனித்துவிட்டு  வருவதுண்டு சிறுமியின்; அம்மாவும் அப்பாவும்.

“நீ பிறந்த பின்னர் உங்கட அம்மா பிள்ளையின்ர அழகான புகைப்படங்கள்தான் அனுப்புவாள். எவ்வளவு அழகாக இருந்தாய் குஞ்சு. நான் ஆசையில உன் புகைப்படத்துக்குத்தான் எப்பவும் முத்தம் கொடுப்பதுண்டு. நான் இப்படி என்னுடைய பேத்தியை நேராக வந்து பார்த்துக் கொஞ்சுவேன் என்று எதிர்பார்க்கவில்லை … எங்கே அம்மப்பாவுக்கு ஒரு முத்தம் தாங்கோ” என்று அவள் இடுப்பைத் திமிற திமிற இழுத்து மடியில் வைத்துக் கொஞ்சுவதுண்டு அம்மப்பா… சிலவேளைகளில் மூச்சு அனலாய்ப் பறப்பதுண்டு அம்மப்பாவுக்கு…
ஒருநாள் நண்பர் ஒருவரின் மகளின்; அரங்கேற்றத்திற்கு அம்மாவும் அப்பாவும் செல்லவேண்டியிருந்தது. அம்பப்பாவோடு பத்திரமாக இருக்க வேண்டும்! அம்மாவின் அன்புக்கட்டளை!  தொலைக்காட்சியில் வரும் சிறுவர் நிகழ்ச்சிகளை பார்ப்பதில் மூழ்கிப்போயிருக்கிறாள் சிறுமி. தனது உடலில் விழிகள் பல மொய்த்து உறுத்துவதுபோல உணர்ந்தாள்…நரை முடிகள் நிறைந்த உடலில் அவள் முகம் நெருக்கப்படுகின்றது. தளிர் விட்ட உடம்பை கரடுமுரடான கறுத்த கைகள் தடவுகின்றன…இள மார்பகங்கள்… அவள் கன்னங்கள் … உதட்டில் என்று முத்தங்கள்… வலுவான இறுக்கத்தில் அசிங்கமான கிழட்டுக்காமத்தின் புகைச்சல்… கோபமாகக் கத்திய பிள்ளை உறங்கிவிட்டாள்….  அந்நிகழ்வை சிறுமிக்கு எவருக்கும் சொல்லத் தெரியவில்லைப்போல்… 

காலையின் வாகன ஒலிகள். விழித்தபடியே படுத்திருந்த அம்மா. பெற்சீற்றை விலத்திவிட்டுப் தன் மகளைப் பார்க்கிறாள். ஐயையோ! இந்த மாதிரி மேல் கொதிக்கிறதே. மருந்துப்பெட்டியிலிருந்து காய்ச்சல் மருந்து எடுக்கப் போகின்றாள் அம்மா. தொலைபேசி மணி அடித்துக் கொண்டது.
   
மெடிக்கல் சென்ரரிலிருந்து பெண்  அழைக்கின்றாள்.

– உங்கள் மகள் விடயமாக உங்களுடன் டொக்டர் அவசரமாக கதைக்க விரும்புகிறார்.  காலை பத்து மணிக்கு உங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. மகளுடன் உடன் வாருங்கள் மிஸிஸ் ரோகினி மதிவண்ணன் –

– மிஸிஸ் ரோகினி மதிவண்ணன். அப்செற் ஆகவேண்டாம். மனதைத் திடமாக்கிக் கொள்ளுங்கள். உங்களது மகளின் ரத்தப் பரிசோதனையில்… உங்கள் மகள்… ஐ ஆம் வெறி சொறி ரு சே… ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
   
– என்ன டொக்டர்…  –

– உங்களின் சிறு பிள்ளை கர்ப்பமுற்று இருக்கின்றாள்… 
   
மிருகங்கள்எப்படி டொக்டர்..? இருதயம் பலமாகக் குலுங்கி இடித்தது… ஆ… இது என்ன தெய்வமே! எனது ஒரே ஒரு செல்வக் குழந்தை. ஜன்னலில் ஆடும் மரக்கிளைகள் பலமாக சுழன்று அடித்துக்கொண்டிருந்தது அவளுக்கு. அப்படி இருக்கவே முடியாது… இப்போதானே அவள் வயதுக்கு வந்தவள்… ஒன்றுமே புரியாத குழந்தை டாக்டர்;… ஐயோ இது என்ன கொடுமையான செய்தியைக் கூறுகின்றீர்கள் டொக்டர்…  மீட்க முடியாத சோகத்தில் அம்மாவின்; மனம் கேவி கண்களில் நீர் கோர்த்துக்;கொண்டே இருந்தது… எதுவுமே பேச முடியாத இயலாமையில் அம்மாவின் தலை விறைத்தது. அவளின் உடல் கழன்று உருண்டு போனதுபோலிருந்தது. இருதயம் உலர்ந்து சருகாகி நொருங்கியது. இலங்கையில் ஏற்பட்ட சுனாமி… இலங்கையில் இடம்பெற்ற போர்;… போன்ற மிகக் கொடுமையான அழிவுகளை விடவும் இதனை அவளால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை… அவளின் உடல் எடையற்று வெறுமையாக மாறிக்கொண்டிருந்தது…

5.4.2011. (உண்மைச் சம்பவத்தைத் தழுவியது)

Navajothy Baylon <navajothybaylon@hotmail.co.uk>

[ உங்களது சிறுகதை மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. கூறவந்த பொருள் படிப்பவர் நெஞ்சில் நன்கு உறைக்கும் வண்ணம் கூறியிருக்கிறீர்கள். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது மிகவும் கொடியது. மேற்கு நாடுகளிலெல்லாம் மிகவும் கொடிய குற்றமாகக் கருதப்படுமொன்று. ஆனால், நம்மவர்களில் பலர் மானம், மரியாதை, பண்பாடென்று இது போன்ற சமுதாயத்தில் நடைபெறும் கொடிய குற்றங்களுக்கெதிராக குரல் கொடுப்பதற்கு அஞ்சி மெளனமாக இருந்து விடுகின்றார்கள். இந்நிலை மாறவேண்டும். குற்றம் இழைப்பவர் யாராகவிருந்தாலும் அவர்களுக்கெதிராகக் குரலெழுப்பி, அவர்களை நீதியின் முன் நிறுத்தும் வகையில் பாதிக்கப்பட்டவர்கள் செயற்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் செயற்பட்டால்தான் மற்றவர்களும் இணைந்து போராட முடியும். இவ்விதம் செய்யாவிடின் , குற்றமிழைத்தவர்கள் மேன்மேலும் குற்றமிழைத்திட வழிவகுத்துவிடும் அபாயத்தைப் புறக்கணிக்க முடியாது. – பதிவுகள் – ]