சிறுகதை: மாரியாத்தா

-  வே.ம.அருச்சுணன் – மலேசியா முறையாகச்  சங்கீதம் கற்று, தாளம் தப்பாமல் பாடாவிட்டாலும் கேள்வி ஞானத்தால் ஏதோ தனக்குத் தெரிந்த தாலாட்டுப் பாடல்களைப் பாடுகிறார் பார்வதி.அரைமணிநேரம் இதமாகத் தொட்டிலை ஆட்டியபின்னரே ஒன்றரை வயதே நிரம்பிய பேரன் இன்பன் அமைதியாகத் தூங்கத் தொடங்குகிறான். தன்னை மறந்து உறங்கும் பேரனின் அழகை இரசித்தவாறு சோபாவில் அமர்கிறார். ஐம்பத்தெட்டு வயதை அவர் கடந்திருந்தாலும் வீட்டுவேலைகளைச் சளைக்காமல் தான் ஒருவரே செய்துவிடும் சுறுசுறுப்பு அவர் வயதையும் மறைத்திருந்தது.ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தமிழ் நூல்கள் மற்றும் உள்ளுர் மாத,வார இதழ்களை வாசிக்கும்  வழக்கத்திற்கும் மாறாகத் தொலைக்காட்சியில் ஒலியேறிக் கொண்டிருந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கும் மனைவியைக் கண்டு வியப்புறுகிறார் கணவர் ரெங்கன்.  வெளியே சென்று வீடு திரும்பிய அவர் குளித்து உடைமாற்றம் செய்து கொண்டு மீண்டும் வரவேற்பு அறையில் நுழைந்த அவர், மனைவியின் அருகிலுள்ள இருக்கையில் அமர்கிறார்.

தொலைக்காட்சியில் ஒலியேறிய நிகழ்ச்சி முடிந்து அரைமணி நேரம் கடந்திருந்தது. ஆனால், மனைவி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து போனவராக, தாம் அருகில் வந்து அமர்ந்ததுக்கூடத் தெரியாமல், கண்களில் நீர்வடிய சோகமுடன் அமர்ந்திருக்கிறார்!     

மனைவியின் அப்படியொரு வாடியமுகத்தைக் இதுநாள் வரையில் அவர் கண்டதில்லை; திகைத்துப் போகிறார்.மனைவியின் கைகளைப் பற்றியபடி, “பார்வதி……என்னம்மா ஆச்சு….? ஏன் இப்படி கவலையா இருக்கே….? உன் முகத்தில இப்படியொருச் சோகத்தை நான் இதுவரையில் பார்த்ததே இல்லையே…..? உன் மனம் வருந்தும் படியா வீட்டில் யாரும் நடந்து கொண்டாங்களா…. உண்மையச் சொல்லு பார்வதி…….?”

பதில் ஏதும் கூறாமல் பார்வதி அருகிலிருந்த ரிமூட்கண்ரோல் மூலம் தொலைக்காட்சியை இயக்குகிறார்.சற்று முன் அவர்     பதிவு செய்திருந்த படக்காட்சிகள் ஒலியேறுகின்றன. ரெங்கன் ஆச்சரியமுடன் பார்க்கிறார். புதியதாகக் கட்டப்பட்டு, இன்னும் சில தினங்களில் மகாகும்பாபிஷேகம் காணவிருக்கும் ஆலயத்தின் நிகழ்வுகள் குறித்து ஆலயத்தலைவர் மோகனதாஸ் மற்றும் ஆலயக் கட்டக்குழுத்தலைவர் டத்தோ சண்முகம் அவர்களும் தந்த விளக்கத்தைக் கேட்டு ரெங்கனும் ஒருகணம் வியந்து போகிறார்! மனைவியின் திடீர் கவலைக்குக் காரணத்தை அவர் புரிந்து கொள்கிறார். பார்வதியும் தானும் பிறந்து வளர்ந்த இடத்திலுள்ள ஆலயத்தின் விவரங்கள் அல்லவாஅது? சில வினாடிகள் அவரும் கடந்தகால நிகழ்வுகளில் மூழ்கி எழுகிறார்.அவரது கண்களும் கலங்குகின்றன!

“அடுத்தவாரம் நாம, குடும்பத்தோட கோவில் மகாகும்பாபிஷேகத்துக்குப் போவோம் பார்வதி சரிதானே……..!”

“கண்டிப்பா போயிட்டுவருவோங்க…….!” மனைவியின் உற்சாகத்தைக் கண்டு ரெங்கனின் முகமும்  பிரகாசிக்கிறது.

தான் பிறந்து வளர்ந்த இடத்தையும்,எண்பது வயதை நெருங்கிவிட்ட பெற்ற தாயையும் கடந்த நாற்பது ஆண்டுகளாகச் சென்று காணாமல் போனது பார்வதிக்குப் பெருங்குறையாகவே இருந்தது என்ற உண்மை ஒரு புறமிருக்க,குடும்ப கௌரவத்தைக்கூடப்பார்க்காமல் இரவோடு இரவாக யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு தான் விரும்பியவரோடு சென்று விட்டதால்,   அவமானத்தால் தலைகுனிந்த குடும்பத்தார் தன்னை மன்னித்து மீண்டும் ஏற்றுக் கொள்வார்களா? என்ற அச்சமே,தாயாரைச் சென்று காணாமல் போவாததற்கான காரணமாகும். கணவருக்குத் தெரியாமல் பார்வதி தன் தாயாரை நினைத்து வருந்திய நேரங்கள் பலவுண்டு.

தனது இருபிள்ளைகளான மகன் டாக்டர் இனியன், மகள் டாக்டர் பூமலர் மற்றும் பேரன் இன்பனையும் அழைத்துக் கொண்டு ஐவராக,கெடா, சுங்கைப்பட்டாணியிலிருந்து சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் பட்டணம் அருகிலுள்ள மிட்லண்ட்ஸ் தோட்டத்தில் மலேசியாவிலேயே முதன்முதலாக மதுரை மீனாட்சியம்மன் ஆலயவடிவில்,ஐந்து கோபுரங்களைக் கொண்டுக் கட்டப்பட்ட, மகாமாரியம்மன் ஆலயத்தின் மகாகும்பாபிஷேகத்துக்குக் காரில் முதல் நாள் இரவே புறப்படுகிறார் ரெங்கன்.

சிறிய ஆலயமாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்ததாகத் தோட்ட மக்கள் நம்பினர்.கோவில் திருவிழா ஆண்டு தோறும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.தோட்டத்திலுள்ள பெரியக்கானு பெரும் மழையில் நிறையும் போது கோவில் உள்ளேயும்  வெள்ளம் புகுந்துவிடும். அப்போது,தோட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தண்ணீரை இரைப்பார்கள்.அப்போதைய கோவில் தலைவர் இராஜலிங்கம் மேடான இடத்தில் கோவிலைக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.சிறியதாக இருந்த அந்த ஆலயத்தைத்தான்  அவரது மகன் மோகனதாஸ் இன்று பெரிய ஆலயமாகக் கட்டி உருமாற்றம் செய்துள்ளார்.அதைக் காணபதற்கு ரெங்கனுக்கும்  ஆவலாக இருந்தது.

மகன் டாக்டர் இனியன் கப்பல் போன்ற வெள்ளை நிறத்திலான கேம்ரி காரை நிதானமாக இயக்குகிறான்.டாக்டர் விமலா இனியனின் மனைவி. விடுமுறைக் கிடைக்காததால் இந்தப்பயணத்தில் குடும்பத்துடன் செல்ல முடியாமல் போனது அவருக்கு வருத்தம்தான்.

நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்தது. மக்கள் பயணிப்பதற்கு யாதொரு சிரமமும் இல்லாமல்  நாடு முழுவதும் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்த சாலைகள் நீண்ட பயணங்களுக்கு வசதியாக இருந்தன.சில இடங்களில் விதிக்கப்படும் ‘டோல்’ கட்டணம் சற்று அதிகமாக இருக்கின்றன என்று சாலைகளைப் பயன் படுத்தும் சிலர் குறைப்பட்டுக் கொண்டாலும் அதிக வளைவுகள் இல்லாத  சாலைகளின் நேர்த்தியைக் குறை சொல்வதில்லை.சாலைகளில் பொறுத்தப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளின் உதவியுடன் நாட்டின் எந்த இடத்திற்கும் சுலபமாகச் சென்று வரலாம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் வாகனவோட்டிகளின் பட்டியல் மிக நீளமானதுதான்.

இரண்டு மணிநேரப் பயணத்திற்குப் பிறகு சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வுமையத்தில் காரை நிறுத்துகிறான் இனியன். அனைவரும் காரிலிருந்து இறங்கியவர்கள் ஓய்வு மையத்தை நோக்கி விரைகின்றனர்.ஆனால், பார்வதி மட்டும் அயர்ந்து உறங்கும் பேரனுடன் காரிலேயே அமர்ந்து கொள்கிறார்.

பேரன் சிறிய குறட்டை ஒலியுடன் அமைதியாக உறங்குகிறான்.காரின் குளிர்சாதனம் பேரனின் உறக்கத்திற்கு ஏதுவா இருக்க வேண்டும்.பார்வதியின் உள்ளத்தில் தன் தாயாரைப்பற்றிய எண்ணம் வட்டமிடுகிறது.நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் தாயார் தன்னை ஏற்றுக்கொள்வாரா அல்லது நிராகரித்துவிடுவாரா? அவரைச் சந்திக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைக்குமா? பார்வதியின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்கிறது!

அந்த நள்ளிரவு நேரத்திலும் ஓய்வு மையத்தில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.குடும்பத்தோடு சிலர் உணவைச் சுவைத்துக் கொண்டிருந்தனர்.இளைஞர்கள் சிலர் நண்பர்களோடு சிரித்துப் பேசியபடி பல்வேறு உணவு வகையறாக்களை ருசித்துக் கொண்டிருந்தனர். 

சிரமப்பரிகாரத்திற்குப் பின்னர், சில நிமிடங்களில் விரைவாக  ரெங்கன் காருக்குத் திரும்புகிறார். பிள்ளைகள் இருவரும் பயணத்தின்போது உண்பதற்காகப் பிஸ்கட்டுகளும் குளிர்பானங்களும் வாங்கிவரச் செல்கின்றனர். இருக்கையில் பேரனுடன் அமைதியுடன் அமர்ந்திருக்கிறார் மனைவி.

“என்னங்க……பிள்ளைகள் ரெண்டு பேரும் எங்கே……?”

“சாப்பிட ஏதோ வாங்கனும்னு  கடைக்குப் போயிருக்காங்க……!”

“தெரியாத…..இடத்தில பிள்ளைங்களத் தனியா விட்டுட்டு வந்திட்டிங்களே…..வழி தெரியாம எங்கையோ போயிடப்போராங்க……!”

“பார்வதி……….நீ நினைக்கிறமாதிரி அவுங்க ஒன்னும் சின்னப்பிள்ளைங்க இல்ல தொலைஞ்சிப்போறதுக்கு!”

அப்போது,சிறிய முனுகலோடு நெளியும் பேரனை நெஞ்சோடு அணைத்தபடி மெதுவாகத் தட்டித் தூங்கவைக்கிறார்  பார்வதி. ரெங்கன் வாஞ்சையோடுப் பேரனைப் பார்க்கிறார்.அடுத்தச் சுற்று  உறக்கத்திற்குத் தயாராகிவிட்டது போல் பெருமூச்சொன்றை உதிர்த்தப்பிறகு உறங்கும் பேரனின் அழகினை ரசித்தவர் தனக்குள் ஏதோ நினைத்துக் கொண்டு  மௌனமாகச் சிரித்துக்கொள்கிறார்.

நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாகணவன் மனைவி இருவரும் தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணில் கால் பதிக்கச் செல்கின்றனர். காலம், என்னமாய்ப் பறந்துவிட்டது! கடந்தகால நினைவுகளில் சிறிது மூழ்கி எழுவது ரெங்கனைப் பொருத்தமட்டில் அந்தக் காலை நேரத்திலும் பரவசம் தரும் நிகழ்வுதான்!

இருபத்தொரு வயதே நிரம்பியிருந்த ரெங்கன், பதினெட்டு வயது நிரம்பிய பார்வதியை அழைத்துச் சென்ற பிறகு, இப்போதுதான்  இருவரும் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மீண்டும் செல்கின்றனர்.தோட்டத்தில் இருவரும் பக்கத்து நிரைகளில் பால் மரம் சீவும் வேலையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் அவர்களிடையே காதல் மலர்கிறது!

இந்த விசியம் வெளியில் தெரிந்த போது பெண்வீட்டார் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர்.அதிலும் பார்வதி உயர்ந்த சாதியைச் சேர்ந்தவள். சரிபட்டுவராது என்ற முடிவுக்கு இருவரும் வந்தபோது தங்களின் எதிர்காலம் கருதி இரவோடு இரவாக ஒரு நாள் தோட்டத்தைவிட்டே புறப்படுகின்றனர்!

தோட்ட நுழைவாயில்,மிகவும் கம்பீரமுடன் வீற்றிருந்த ஆலயத்தில் சக்தி நிறைந்த மாரியாத்தாவிடம் மட்டும் இருவரும் மறக்காமல் அவசரகதியில் வணங்கிவிட்டுச் செல்கின்றனர். ஆத்தா எல்லாத்தையும் பார்த்துக்குவா என்ற அசைக்க முடியாத  நம்பிக்கை அவர்களுக்கு. 

ரெங்கன் தம் உள்ளம் கவர்ந்த பார்வதியோடு சுங்கைப்பட்டாணிக்குச் சென்ற வேளை உறவுக்காரர் அவரது உணவகங்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பைத் தந்து இருவருக்கும் உதவுகிறார்.கணவன் மனைவி இருவருக்கும் கணிசமான வருமானம். இறையருளால் ஓரளவு வசதிகளுடனும்  மகிழ்ச்சியுடனும் அவர்களின் வாழ்க்கைத் தொடங்குகிறது.

பதிவுத் திருமணம் முடிந்த நான்கு ஆண்டுகளில், மகன் இனியன் மகள் பூமலர்   ஆஸ்திக்கொன்றும்,ஆசைக்கொன்றுமாகப் பிறந்து அவர்களின் அளவற்ற மகிழ்ச்சிக்குக் காரணமாக அமைகின்றனர். தாங்கள் ஆசையுடன் ஈன்ற குழந்தைகளே அவர்களுக்கு உலகமாகிப்போகிறது.தங்களின் வாரிசுகள் உயர்ந்தகல்வியைப் பெற்று சிறந்தவர்களாக வரவேண்டும், தங்களுக்கு மட்டுமின்றி இந்தியச் சமுதாயமே பெருமையடைய வேண்டும் எனும் வேட்கையோடு பெற்ற இருசெல்வங்களையும் மிகுந்த பொறுப்புடன் வளர்க்கின்றனர்.

இரண்டு குழந்தைகளும் பெற்றோர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் கண்ணும் கருத்துமாகப் பயின்று டாக்டர்களாகிப் பெற்றோர்களை மகிழ்வித்தனர்.வேலையில் சேர்ந்த சில ஆண்டுகளில் மகனுக்குத் திருமணத்தைச் சிறப்புடன் நடத்தி வைக்கின்றனர். மகளுக்கும் விரைவில் திருமணத்தை நடத்த எண்ணம் கொண்டிருக்கின்றனர்.

எண்பது வயது நிரம்பிய பார்வதியின் அம்மா மட்டும் உயிருடன் இருக்கின்றார்.அப்பா சில ஆண்டுகளுக்கு முன் காலமானத் தகவல்கூட யாரும் தெரிவிக்கவில்லை.அதிர்ஸ்ட வசமாக ரெங்கனின் பெற்றோர் இருவரும் உயிருடன் இருக்கின்றனர்.

பிஸ்கட்டுகள்,பேக்கட் பானங்கள்,கொரிக்க கச்சான் வகைகளில் சிலவற்றோடு இரண்டு பிளாஸ்டிக் பைகளுடன் பிள்ளைகள் காரில் வந்த அமர்கின்றனர்.சிறிது நேரத்தில் கார் புறப்படுகிறது.

 “அம்மா….இன்பன இப்படிக் கொடுங்க கொஞ்ச நேரம் நான் தூக்கி வைச்சிக்கிறேன். நீங்க தண்ணீர் குடிங்கம்மா….”ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் பேரன் கை மாறியதும் மெதுவாய்ச் சிணுங்குகிறான். குழந்தையைப் பதுசாய்த் தூக்கிக் கொள்கிறாள் பூமலர்.

நேரம்கெட்ட நேரங்களில் உண்ணும் வழக்கம் இல்லாத ரெங்கன் நீரை மட்டுமே சிறிது அருந்திவிட்டுக் காரை இயக்கிக் கொண்டிருக்கும் மகனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.நள்ளிரவு நேரம் காரை ஓட்டும் மகன் தன்னையறியாமல்  தூங்கி விடக்கூடாதல்லவா? அதிகமான சாலை விபத்துகள் நள்ளிரவு நேரத்தில் நடைபெறுவதை தமிழ் தினசரிகளில் அவ்வப்போது படித்த நினைவு அவரைத் தூங்கவிடாமல் செய்தது.

பயணத்தைத் தொடங்கும் போதே,வானம் கருக்கத் தொடங்கியது.சிலாங்கூர் மாநிலத்தின் எல்லையைத் தொட்டவுடனேயே மழை தூரல் போடத்தொடங்குகிறது.இயற்கை தங்களுக்குத் தரும் வரவேற்பா….? ஒரு கணம் வியந்து போகிறார் ரெங்கன்.சிறிது நேரத்தில் மழை கடுமையாகப் பெய்கிறது.தான் சொல்லாமலேயே மகன் கூடுதல் கவனமுடன் காரைச் செலுத்துவதைக் கண்டு மனதுக்குள் மகிழ்வு கொள்கிறார்.

மணி மூன்றை நெருங்கிய வேளை, மழை பெய்வது குறைந்திருந்தது.பின் இருக்கையில் மூவரும் கண்ணயர்ந்திருந்தனர்.தூக்கக் கலக்கம் உடல் சோர்வைத்தந்தாலும் பயணம் யாதொரு சிக்கலும் இல்லாமல் செல்வதை ரெங்கன் விரும்புகிறார்.மகனைப் போல் அவரும் கண்ணுறங்காமல் சாலையைப் பார்த்து கொண்டு வருகிறார்.

சிறிய சாலை வளைவு ஒன்றைக் கடக்க முற்பட்ட போது,சற்று தொலைவில் காவல் துறையினர் வாகனங்களை நிறுத்துவதை அறிந்து காரின் வேகத்தைக் குறைக்கிறான் இனியன்.கார் சிறிது குழுங்கியதால் பின் இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த பார்வதியும் பூமலரும் திடுக்கிட்டு எழுகின்றனர். குழந்தை மட்டும் தூங்கிக்கொண்டிருந்தது.

சாலை நடுவில் கார் ஒன்று தலைக்கீழாகக் கவிழ்ந்திருந்தது! கடுமையாகக் கார் நசுங்கிய நிலையில் தீயணைக்கும் பணியாளர்கள் பலர்  அவசரப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.அருகில் அம்புலன்ஸ் வண்டி ஒன்று நின்றுக்கொண்டிருந்தது.

நீண்ட நேரம் காரை செலுத்தியக் களைப்பு ஒரு புறமிருக்க,சாலையில் கண்ட விபத்தின் கோரத்தைக் கண்டு  மறுபுறம் மனம் சோர்ந்து நிலையிலும் இனியன் பயணத்தைத் தொடர்கிறான்.

அதிகாலை நான்கு மணியளவில்,சாஆலாம் பட்டணம் விடுதியொன்றின் வாசலில் கார் நிற்கிறது.கும்பாபிஷேகத்திற்கு இன்னும் இரண்டரை மணி நேரம் இருந்தது.ஓய்வெடுத்துக் கொள்வதற்ககாக அனைவரும் விடுதியின் அறைக்குச் செல்கின்றனர்.

அதிகாலை ஆறரை மணிக்கெல்லாம்  ரெங்கன் குடும்பத்துடன் ஆலயத்திற்குச் செல்கின்றனர்.ஐந்து கோபுரங்களோடு  கண்கொள்ளாக் காட்சியுடன் காட்சி தந்து கொண்டிருக்கும் மாரியம்மனைப் பக்திப்பரவசத்துடன் கணவனும் மனைவியும் இருகரம் கூப்பி வணங்குகின்றனர்.பார்வதியின் கண்களில் கண்ணீர் வெள்ளம்.

உணர்ச்சிப் பெருக்கால்  மயங்கி  விழப்போனப் பார்வதியைத் தாங்கிப்பிடிக்கிறார் ரெங்கன்.அவரது கண்களும் குளமாகிப் போகின்றன! தங்களுக்கு ஆசி வழங்கிய மாரியாத்தாவை நீண்ட இடைவெளிக்குப் பின் வணங்கியபோது பக்தியின் உச்சத்திற்குச் செல்கின்றனர்.பிள்ளைகள்  பெற்றோரை ஆறுதல் படுத்துகின்றனர்.

நாட்டின் பல மாநிலங்களிருந்தும் வருகை புரிந்த பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது. வானிலிருந்த ஹலிகாப்டர் மூலம் புனித நீரும் மலர்களும் உடலில் படுகிறது.பார்வதி பரவசமடைகிறார்.

“பார்வதி…….!” கட்டிப் பிடித்துக் கொள்கிறார் இருசம்மாள். அவர்கள் இருவரும் தோட்டத்தில் அண்டை வீடுகளில் வசித்த உயிர்த்தோழிகள். இருவர் கண்களிலும் கண்ணீர் மழை தரையை நனைக்கிறது!      

“மாரியாத்தா……! என் மகளச் சீக்கிரமா கண்ணுலக் காட்டும்மா…….! கண் பார்வைக் கூட சரியா தெரியலையே…….! பார்வதி நீ எங்கேமா இருக்கே.?” அலை மோதும் கூட்டத்தில் திக்குத் தெரியாமல் தன்னைக் கடந்து செல்லும்  அம்மாவைத்  திகைப்புடன்  பார்க்கிறார் பார்வதி!

arunveloo @yahoo.com