சிறுகதை: மெலிஸாவின் தேர்வுகள்

ஜெயந்தி சங்கர்
ஜெயந்தி சங்கர்ஜெயந்தி சங்கர் 20 ஆண்டுகளாக எழுதுகிறார்.  7 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள் உள்ளிட்ட 27 நூல்கள் எழுதியுள்ளார்.  ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது, கரிகாலன் விருது, கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு, ncbh தனுஷ்கோடி ராமசாமி நினைவுப் பரிசு, திருப்பூர் வெற்றிப்பேரவைப் பரிசு,திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் பரிசு கு. சின்னப்ப பாரதி இலக்கிய விருது, நல்லி – திசையெட்டும் (மொழியாக்க) இலக்கிய விருது,  அரிமா சக்தி விருது  உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.  ‘பின் சீட்’, ‘திரைகடலோடி’, ‘முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும்’, ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகள் முறையே 2008, 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் சிங்கப்பூர் (short list) இலக்கிய விருதுக்குத் தேர்வாகின. ஆங்கிலத்தில் இவர் எழுதிய   ‘Read Singapore’ என்ற சிறுகதை ‘Best New Singaporean Short Stories – volume 1 தொகுப்பில் இடம் பெற்றதுடன், ரஷ்யமொழியாக்கமும் செய்யப் பெற்று  To Go To S’pore. Contemporary Writing from Singapore. தொகுப்பு நூலில் இடம் பெற்றது .  தற்போது தமிழ் முரசில் உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறார்.  சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாகச் சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விட நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றைச்  சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஸ்ரீலங்கா, மலேசியா போன்ற நாடுகளில் எண்ணற்ற சிறுகதைகள் கட்டுரைகள் பிரசுரமாகி பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன


தட்டியவுடன் எனக்குக் கதவைத் திறந்து விட்ட மெலிஸா ஒன்றுமே  சொல்லாமல் விட்ட இடத்தைப் பிடித்துக் கொள்ளும் முனைப்புடன் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டதைப் பார்த்த போது தான் கொஞ்ச நேரமாகவே  அவள் அவ்விடத்தில்  உட்கார்ந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வீடு எளிய கலைநேர்த்தியுடனான அலங்காரத்துடன் இருந்தது. கூடத்தின் ஒரு மூலையில் மெலிஸாவும் இன்னொரு மூலையில் பென்னும் ஆளுக்கொரு முக்காலியின் மீது உட்கார்ந்திருந்தார்கள். அவளது கன்னத்தில் பளபளத்த உலர்ந்த கண்ணீர் எனக்குள்  எந்தப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. பென் அழுது கொண்டிருந்தது தான் எனக்கு ஆச்சரியமாவும் கொஞ்சம்  வேடிக்கையாகவும் இருந்தது. இருபத்திரண்டு வயது ஆண் ஒருவனால் இப்படி நெகிழ்ந்து அழக்கூட முடியுமா என்று என் வாழ்வில் முதன்முறையாக அதிசயித்தேன். அவனது கண்கள் சிவந்து வீங்கியிருந்தன. என் எண்ணைத்தைப் படித்தவனைப்போலத் தன் முகத்தை என் பார்வையிலிருந்து லேசாக மறைத்துக் கொள்ளும் நோக்க்கில் நகர்ந்து உட்கார்ந்து கொண்டான். அப்படி என்ன தான் பிரச்சனை இவர்களுக்குள்?

நான் மெலிஸாவை  சந்திப்பது இதுவே மூன்றாவது முறை. முதல் முறை வெளியிடத்தில் பென்னுடன் சந்தித்த போது அவனுடைய தோழி என்ற அறிமுகம் ஏற்பட்டது.  இரண்டாவது தடவை ஓரிரு சொற்களைத் தாண்டி பேசவில்லை. அவளைப் பற்றி பென் சொல்லி நான் அறிந்திருந்தது மிகக் குறைவு தான்.              

என்னுடைய  உற்ற நண்பன்  டோங் ஹுவாவின் நெருங்கிய நண்பன் என்ற முறையில் தான் இரண்டாண்டுகளாக பென்னை எனக்குப் பழக்கம். சிறுவயது முதலே  பத்தாண்டுக்கும் மேலாக பழக்கமாகியிருந்த டோங் ஹுவாவிற்கு நேர்மாறான பதட்டமும் கொஞ்சமும் சுயநலமும் கொண்டவனாகவே  இருந்தான் என்பதை  பழக ஆரம்பித்த கொஞ்ச நாளைக்குள்ளாக நான்   புரிந்து கொண்டு விட்டேன். ஒளிப்பதிவு,  இசை  போன்ற சிலவற்றில் அவனுக்கிருந்த திறமை தான் எங்களை  அவன்பால் ஈர்த்தது.

உடனே  வாவென்று கூப்பிட்டுவிட்டு ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்திருந்த அவனைக் காண எனக்குள் ஏற்பட்ட எரிச்சலை விலக்கியவாறு,  “ஹேய், எனி ப்ராப்ளம் ட்யூட்?”,  என்று நானே  உரையாடலை ஆரம்பித்தேன்.  பென் நிமிர்ந்து என்னை  லேசாகப் பார்த்து விட்டு தலையைத் திருப்பிக் கொண்டான். மெலிஸாவைப் பார்த்தேன். அவளோ, ‘அவனையே  கேள்’, என்பது போல தன் முகவாயை  உயர்த்தி அவன் திக்கில் காட்டிவிட்டுப் பேசாமலிருந்தாள்.

“ஏன்லா,  தூங்கிட்டிருந்தவன எழுப்பி கூப்டுட்டு இப்ப இப்டி பேசாமா  இருந்தா  என்னலா அர்த்தம்?”, என்று நான் கேட்டதும் பென் என் முகத்தையே  சில நொடிகள் கூர்ந்து  காலை  மறுபுறம்  மடக்கியவாறு பார்த்துவிட்டு  மீண்டும் தூரப்பார்வை  பார்த்துக் கொண்டு பழையபடி சமைந்தான். மழைக்கு முன்பு அடிப்பது போன்றதொரு குளிர்க்காற்று சன்னலூடாக முகத்தில் மோதியதை  ரசித்தவாறு சற்று நேரம் அமர்ந்திருந்தேன்.

ஏன் இருவரும் ஒன்றுமே  பேசாமலிருந்தார்கள் என்றே  எனக்குப் புரியவில்லை.  ஏதோ  சண்டை என்பதைக் கடந்து ஒன்றையும் என்னால் யூகிக்க முடியவில்லை. வீட்டிற்குள் பார்வையைச் சுழற்றினேன். கூடம் வைத்த பொருள்  வைத்த இடத்தில் இருக்க நேர்த்தியும் ஒழுங்குமாக இருந்தது. தம் ஒரே  செல்ல மகள் மெலிஸாவுடன் அவள் பெற்றோர் சமீபத்தில் எடுத்துக் கொண்டது போன்ற ஒரு நிழற்படம் கூடத்தின் நீள்சுவரில் பளிச்சென்று தொங்கியது. மெலிஸாவுக்கு ஒரு விஷயம் விருப்பமென்றால் மறுபேச்சில்லாமல் செய்யக்கூடிய அளவற்ற அன்பு தன்னில் உண்டென்று அவள் அப்பா  தன் முகபாவத்தில் காட்டியபடி மகளை  லேசாக அணைத்து நின்று கொண்டிருந்தார். வலப்புறத்தில் தெரிந்த அறைகள் இரண்டில் ஓர் அறை அவளுடைய பெற்றோருடையதாகவும் மற்றது மெலிஸாவுடையதாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  மகள் பென்னைக் காதலிப்பதை ஏற்பதுடன் வீட்டோடு அவன் வசிப்பதை வாழ்க்கைகான ஒத்திகையாகப் பார்க்கவும் அனுமதிக்கும் செய்த மெலிஸாவின் பெற்றோரைக் குறித்து அறிய நேர்ந்த அன்று அவர்களைப் போன்றவர்கள் சீனர்களிடையே  கூட அரிதாகத் தான் இருக்க முடியும் என்று எண்ணி வியந்தேன். பென் வாடகைக்கு எடுத்த வீட்டில் இருவரும் வசிக்கிறார்கள் என்றே  அதற்கு முன்பெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தேன்.

“பென்! பேசறதுனா  பேசு.  இல்லைன்னா,  நாம்போறேன். இன்னிக்கி வீட்ல எல்லாரும் டாங் ரோட் முருகன் கோவிலுக்குப் போறோம். நான் போகல்லைன்னா  எங்கப்பா  ருத்ர தாண்டவமே ஆடிருவாரு”,  என்று சொல்லிக் கொண்டே இருக்கையை  விட்டு எழுந்தேன்.

சட்டென்று பென் கைகாட்டி என்னை  நிறுத்தினான். “கொஞ்ச நாளா எங்க ரெண்டு பேத்துக்கும் பிரச்சனையில்லாம இருந்துச்சு.  இப்ப மறுபடியும்,..”, என்று பேச ஆரம்பித்தான்.

“என்ன பிரச்சனை? அவங்க பேரண்ட்ஸ் கிட்ட சொல்ல  முடியாம?,…. “

“இல்ல,  பிரச்சனை என்னன்னா,..”

“சரி,  டோங்  ஹுவா கிட்ட கூட பேசலாமே, அதவிட்டுட்டு என்னையக் கூப்டிருக்க,.. அதான் கேட்டேன்,..”

“இப்ப பிரச்சனையே  அவந்தான,..”

“ஆங்,  டோங் ஹுவாவா?”

“ம், …”, என்று தொடங்கி கிடுகிடுவென்று பென் சொன்ன விஷயங்கள் எல்லாமே நான் கொஞ்சங் கூட எதிர்பார்க்காதவை.

டோங் ஹுவா பென்னுக்குத் தெரியாமல் மெலிஸாவுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்தானாம். ஓராண்டுக்கு முன்பு அதைத் தெரிந்து கொண்ட போது சில மாதங்களாகிவிட்டிருந்தன. அவன் தெரிந்து கொண்டதை  அறிந்ததும் இருவரும் சேர்ந்து பென்னை  விலகிக் கொள்ளச் சொன்னார்கள்.  மெலிஸாவை விட்டு விலக விரும்பாத பென் முடியாதென்று முரண்டு பிடித்து தற்கொலை  வரை  சென்று உயிர் பிழைத்திருந்தான்.

“உடம்பு சரியில்லைன்னு நான் கூட ஒரு வாரம்  வீட்ல இருந்தனே. நீ கூட வந்து பார்த்தியே ரகு,..”,  என்று பென் சொன்ன போது தான் டோங் ஹூவா, ‘நீ  போய்ட்டு வா,..’, என்று சொல்லிக் கொண்டே கடைசி வரை என்னுடன் வராதிருந்ததற்கான காரணம் எனக்குப் பிடிபட்டது.

“அப்பயும் இவன விட்டுட்டு டோங் ஹுவாவோட தான் இருக்க  விரும்பினேன். இந்த முட்டாள் தான் அவன் கூட  சண்ட போட்டு முட்டித் தள்ளி அவனத் தொரத்தியடிச்சான். என்னய இமோஷனல் ப்ளாக் மெயில் வேற பண்ணான்”, என்ற மெலிஸாவின் முகத்தில் எரிச்சலும் சிடுசிடுப்பும் வெடித்தன.

“சரி,  இப்ப என்ன பிரச்சன?”, என்று நான் பென்னை  நோக்கிக் கேட்டதும், “டோங்ஹுவாவோட இவளுக்கு அஃபேர்,.. மறுபடியும் இவளப் பார்க்க இவளோட இன்ஸ்டிடியூட்டுக்கு போறான்லா. அடிக்கடி போன் பண்றான்.  நான் இல்லாதப்ப வீட்டுக்கே  ஒரு நாள் வந்திருக்கான்”, என்று அடுக்கினான்.

“…”

“இவனோட வெட்டிக்கிறேன்னு சொன்னா,.. மறுபடியும் பழைய பல்லவியவே  சொல்றான் இந்த முட்டாள்”, என்று மெலிஸா  சொன்ன போது அவள் குரலில் தெரிந்த உறுதியும் தீர்மானமும் ஏன் பென்னுக்கு விளங்கவில்லை  என்று நினைத்துக் கொண்டேன்.

“எனக்கு இவ இல்லாம முடியாது,.. பைத்தியமாயிருவேன் ஆரம்பத்துலயிருந்து நீ  தான் என்னோட ஸ்டெடின்னு சொல்லிகிட்டிருந்தா. இப்ப அந்த இடியட் வந்த பிறகு  தான் இப்டி சொல்றா,.. “, என்றான்.

“அவளுக்கு விருப்பமில்லையே,.. அத ஏன் யோசிக்க மாட்ற?”, என்று கேட்டதும், “இல்ல, எங்க வீட்ல இவளுக்காக சண்டை  போட்டுட்டு தான் வெளிய வந்தேன். இனி அங்கயும் போக முடியாது”, என்றான். 

“வேற எங்கயாச்சும் தற்சமயத்துக்கு இருந்துக்கயேன்,..”, என்று நான் ஆரம்பித்து முடிக்கு முன்னரே இடைமறித்து, “இல்ல,.  நான் படிச்சி முடிக்க என்னோட பார்ட்டைம் வேலையில கெடைக்கிற சம்பளமே பத்தல்ல.  இதுல  வாடகைன்னா,..”, என்று இழுத்தான்.

“உனக்கு இது தேவையா?  எவ்ளோ  பணக்கார வீட்டுப் பையன் நீ,.. ம்? சரி, வீட்டுக்குப் போயி மன்னிப்பு கேட்டுட்டு இரேன். பெத்தவங்களுக்கு உன்னைய எத்துக்கறதுல பிரன்னை  என்ன இருக்கும்?”, என்று பென் காதருகில் போய் கேட்டுவிட்டு, “இப்ப என்ன செய்யப் போறீங்க?”, என்று பொதுவாகக் கேட்டேன்.

“ஐ  வாண்ட் எ ப்ரேக் அப்,..”, என்றாள் மெலிஸா.

“இல்ல,.. நான் விலக மாட்டேன்,..”, என்றான்.

“வேணாம்னு சொல்றவள ஏன் இறுக்கிப் பிடிச்சு வச்சிக்கப் பாக்கற பென்?”

“அதே தான் நானும் இந்த முட்டாள் கிட்ட கேட்டேன்.  மனசு விட்டுடிச்சின்னா  சேர்ந்து இருக்க முடியுமான்னு கேட்டதுக்கு என்னைய அடிக்க வந்தான்.”

“அதுக்கொண்ணும் நான் அடிக்க கையோங்கல. நா கீழ போயிட்டு பேப்பர் வாங்கிட்டு வரதுக்குள்ள என்னோட சாமான் துணிமணிய எல்லாம் என்னோட பெரிய பெட்டியில போட்டு மூடிட்டா. கிளம்புன்றாலா. அப்ப தான் பயங்கர கோபம் வந்திச்சு,..”, என்று சொல்லிவிட்டு பெட்டியைச் சுட்டினான். “சரி,  ஏதும் பிரச்சனயாயிருமோன்னு பயந்து தான் உன்னக் கூப்பிட்டேன்.”

“இந்த ஒண்ர வருஷமும் நான் இவன சகிச்சுகிட்டு தான் இருந்தேன். தெரியுமா?”, என்று               லேசாக விசும்பிக் கொண்டே, “ரொம்ப சுயநலம் பிடிச்சவன் இவன். நா  சாயங்காலம் எல்லாருக்கும் சேர்த்து சமைக்கிம் போது ஒரு நாள் கூட ஹெல்ப் பண்ணினதில்ல,..  டோங் ஹுவா  ஒரேயொரு நாள் தான் இங்க ஈவ்னிங் வந்திருந்தான்.  சமயக்கட்டுல என் கூடவே  நின்னு எனக்கு எவ்ளோ  ஹெல்ப் பண்ணான் தெரியுமா?”

“தினமும் உன்னய ஈவ்னிங் காலேஜ்ல நாந்தானே  டிராப் பண்ணேன்.  அவனா பண்ணான்?”

“எங்கப்பாவோட காரும் அவரு போடுற பெட்ரோலும் இருந்தா டோங் ஹுவாவும் டிராப் பண்ணுவான்,..”, என்றாள் அவனை  முறைத்துக் கொண்டே. வீட்டில் பென் அவளுக்கு ஒரு உதவியும் செய்வதில்லை,  சமீப காலமாக தன் அம்மா  அப்பாவைக் கண்டதும் மரியாதைக்குக் கூட ஓரிரு வார்த்தை  பேசாமல் அறைக்குப் போய் கதவைச் சாத்திக் கொள்வது, மாதக்கணக்கில் சாப்பாட்டுக்கென்று காசொன்றும் கொடுப்பதில்லை என்று அவள் போட்ட பட்டியல் நீண்டதாக இருந்தது. அவளுடைய அப்பா  செலவைக் கணக்கிட்டு தன்மகளுக்குக் கொடுக்கும் மாதப்பணத்தில் குறைத்து விடுகிறார், அவன் அவளுக்குக் கொடுத்து விடுவான் என்று கருதி. இவள் இவனிடம் கேட்டுக் காத்திருந்து ஏமார்ந்து செலவுகளைச் சரிக்கட்ட முடியாமல் திணறுகிறாள். சொல்லி முடிப்பதற்குள் மெலிஸா  அழுகையும் கோபமுமாகக் கொப்பளித்தாள்.

“என்னால முடியறப்பயெல்லாம்  பணங்குடுக்கறேன்,.. இப்ப தான் கொஞ்ச நாளா பிரச்சன. என்னோட லாப்டாப் படுத்திருச்சு. புதுசா  ஒண்ணு வாங்க வேண்டியிருந்துச்சி,..”, என்று தன் பக்க வாதத்தை  முன்வைக்க முயன்றான்.

“அது முடிஞ்சி நாலு மாசமாயாச்சி. என்னவோ  போன வாரம் நடந்த மாதிரி சொல்ற?”, என்று கேட்ட மெலிஸாவின் மூச்சு கோபத்தில் வேகவேகமாக ஏறியிறங்கியது.

“டோங் ஹுவாவோட உன்னால இருக்க முடியாது.  வீணா  கற்பன பண்ணிக்காத மெலிஸா,..”, என்றான் அச்சுருத்தும் குரலில்.

“சரி.  அவனும் வேணாம்.  நீயும்  வேணாம். இப்ப நீ கிளம்பு”, என்றவளின் குரலில் தீர்மானமும் தெளிவும் தெரிந்தது.

“மெலிஸா,  ப்ளீஸ் புரிஞ்சிக்கயேன்.  இனிமே,.  நான் நீ  எதிர்பார்க்கற மாதிரியே,..”, என்று ஆரம்பித்தான்.

“போதும், போதும்.  ஒவ்வொரு தடவையும் இப்டி ப்ராமிஸ் பண்ணிப் பண்ணி காத்துல பறக்க விட்டுகிட்டு,..  எனக்கு ரொம்ப அலுத்துடுச்சி  பென்.  நாம பிரிஞ்சருவோம்.  எங்க அப்பா கிட்டயும் சொல்லிட்டேன்.”

நான் அங்கிருப்பதையே மறந்தவனைப் போல அவள் அருகில் நெருங்கிச் சென்று சிறுகுழந்தைக்குச் சொல்வதைப் போல, “மெலிஸா டியர், அவன் ஏற்கனவே  மூணே  வருஷத்துல அடுத்தடுத்து நாலஞ்சி பேர் கூட இருந்துட்டான்.  ஒருத்தியாச்சும் ஒத்து வந்தாளா? யோசி. இப்ப கூட இருக்க இடமில்லாம, சம்பளம் இல்லாததால வாடகையவும் சமாளிக்க முடியாம தான் அவன் இங்க வந்து உன்னோட இருக்கப் பாக்கறான்”, என்றான்.

சடாரென்று நிமிர்ந்து, “அத நீ  சொல்லாத. ஓகே?”, என்று மெலிஸா  பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னதுமே பென் அவளை முறைத்தான். தொடர்ந்து,  “ரொம்ப மொறைக்காத,.. அவனப் பத்தி உனக்கென்ன இப்ப? ம்? ப்ளீஸ்,.. நீ  என்ன விட்டுட்டுப் போயிடு பென்”, என்றபடி அவனுடைய பெட்டியைக் காட்டினாள். 

“மெலிஸா,..”, என்றவனை  இடைமறித்து, “பென், இதுல எங்கப்பாவ இழுக்க வேணாம்னு பாக்கறேன். இப்பவே  நீ  கெளம்பலைன்னா நா  எங்கப்பாவ விட்டு தான் சொல்ல வேண்டியதிருக்கும்.”

“நீங்க ரெண்டு பேரும் ஒரே வாரத்துல பிரியலைன்னா  என் பேரயே  மாத்தி வச்சிக்கறேன்”, என்று மெலிஸாவைப் பார்த்து உரக்க கத்திவிட்ட என்னிடம், “டோங் ஹுவா உன் பிரெண்ட்,  நீ அவனுக்கு சாதகமாத்  தானே  பேசுவ? அதயவே யோசிக்காம உன்னைய நான் கூப்டேன் பாரு”, என்று சொல்லிவிட்டு சடாரென்று வாயிற்கதவைத் திறந்து கொண்டு வேகமாய் வெளியேறிப் போய்விட்டான். ஒரே  நொடியில் அவன் பின்னால் நான் போய்ப் பிடிப்பதற்குள் எப்படியோ  மாயமாய் மறைந்து விட்டான். சுற்றிச் சுற்றித் தேடிவிட்டு மீண்டும் மாடிக்குப் போகத் தோன்றாமல் சைக்கிளில் ஏறி வீட்டை  நோக்கிச் செலுத்தினேன். வானம் கருத்திருந்தது.  ஓரிரு தூறல் விழுந்தது.

கீழ்த்தளத்தில் என் வருகைக்காகவே  காத்திருந்தவனாக நின்றிருந்தான் டோங் ஹுவா. முகத்தில் விரவியிருந்த லேசான பதற்றம்  என்னைக் கண்டதும் மறைந்தற்போலப் பட்டது.  அருகில் வந்து தோளில் கைபோட்டவன், “எங்கலா  போயிருந்த?  ஹேண்ட் ஃபோனை வேற ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு,.. ம்?”, என்றவாறு என் முகத்தை  ஆராய்ந்தான்.

“ம், ம், சொல்றேன்”, என்றபடியே  சைக்கிளை கீழ்த்தளத்தில் ஏற்றிய போது என் பின்னால் அவனும் வந்தான்.  தூறல் வலுத்து மழை  பெய்ய ஆரம்பித்திருந்தது.

“பென் என் மேல ரொம்ப கோபமா  இருக்கான்,..”, என்றபடி மீண்டும் என் முகத்தை  எதையோ  தேடினான். ஏதோ  வித்தியாசமாக என் முகத்தில் அவனுக்குப் பட்ட மாதிரிதான் அவன் முகம் எனக்கும் புதிதாகப் பட்டது.

“எனக்கு தான் தெரியுமே,..”

“தெரியுமா?”

நான், “ம், மெலிஸா  வீட்லயிருந்து தான் இப்ப நான் வரேன்”, என்றதும் அவன் முகத்தில் ஒரே வியப்பு.

“நீ எங்க அங்க?”

“பென் கூப்டான்,.. “

“பென்னா?  உன்னையா?”

“ஆமா,  ஏன்? எல்லா வெவரமும் சொன்னான். ஆமா,.. சிங்கப்பூர்ல வேற பொண்ணே இல்லையா?”

“நானே உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லலாம்னிருந்தேன்,..” 

“ஓஹோ,..”

“ஆமா,.. உன்னைய ஏன் கூப்டான்? அதான் அவனோட க்ளோஸ்ஸஸ்ட் ஃப்ரெண்ட் பேய் ருவேய்  இருக்கானே,..”

நான், “அதென்னவோ தெரியாது,..”, என்றதும் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசித்தான்.

“எனக்குப் புரியுது. அவனக் கூப்பிடாம உன்னக் கூப்டதுலயே  தெரியல்லையா  பென்னோட புத்தி,..”

“என்ன  சொல்ற?”

“ம்,. அதாவது நீ ஒரு தமிழன். மெலிஸாவுக்கு புதுசா வேற ஒரு சீனன அறிமுகப் படுத்தினா,..  அவன அவளுக்குப் பிடிச்சிருமோன்னு ஒரு பயம் தான்,..”

“ரபிஷ்.  ஏன் படிக்கற எடத்துல வேற யாரை  பார்க்காமயும் பழகாமயுமா  இருப்பா  அவ?”

“இல்ல உனக்கு பென்னைப்பத்தி தெரியாது ரகு,.. “

“அது போகட்டும்.  நீங்க ரெண்டு பேரும் போட்டி போடற அளவுக்கொண்ணும் அவ அழகா கூட இல்லையே,.. ஆமா,  நீ ஏன் இப்டி தெரிஞ்சே பிரச்சனைல புகுந்துக்கணும்?”

“பென்னுக்காக தான் நானும் வேணாம்னு அவகிட்ட எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அவ தான் விடாம என்னையத் தொரத்தினா.  மெலிஸா  நல்லவ. எனக்கு அவ தான் ஒத்து வருவான்னு தோணிச்சி. அதான்,,.” என்று இழுத்தான்.

“எப்டியோ  போங்க. பென் ரொம்பவே அப்செட் தான்.  யாரையாச்சும் அனுப்பி அவனைச் சமாதானப் படுத்த முடியுமான்னு பாரு மொதல்ல,..”

“அவன நெனச்சி தான் எனக்குக் கொஞ்சம் பயம். பணக்கார வீட்டுப்பய. இதையெல்லாம் தாங்குவானான்னு தெர்ல,.. முக்கியமா நான் தயங்குனதே  அதுக்காக தான்,..”

“சரி,  கொஞ்ச நாளைக்கி பொறுத்திரு. பென்னோட நிலைமைய தெரிஞ்சிக்க. அப்புறமா  அவ வீட்டுக்கு குடிபோகறதப் பத்தியெல்லாம் யோசிச்சிக்கலாம்,..”

“நானும் அப்டி தான் நெனச்சிருக்கேன்”, என்றவன் என்னை  விடமாட்டான் போலிருந்தது.  நிறைய பேசும் மனநிலையில் இருந்தான் போலும். அவன் தொடர்ந்து ஏதோ  பேச ஆரமிக்கும் முன், “நா  மேல போறேன். கோவிலுக்குக் கிளம்பணும்,.. லேட்டாச்சி,..”, என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று படிகளில் மூன்றாவது மாடிக்கு ஏறியபோது படியெங்கும் மழையடித்து ஈரமாகியிருந்ததைக் கவனித்தேன்.

சடசடவென்று அடித்துப் பெய்த மழை  பதினைந்து நிமிடங்களில் நின்றிருக்காவிட்டால் குளித்துக் கொண்டிருக்கும் போது அறையில் படுக்கை மீது இடந்த என் கைபேசி  பலமுறை  சிணுங்கியதே எனக்கு குளியலறைக்குள் கேட்டிருக்காது.  யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே தலையைத் துவட்டியவாறு இடுப்பில் இன்னொரு துண்டைக் கட்டிக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறி எடுத்துப் பார்த்தேன். இரண்டே நிமிட இடைவெளியில் மூன்று முறை  குறுந்தகவல் அனுப்பியிருந்தாள்  மெலிஸா.

From: மெலிஸா
sent: 25th oct 2008 / 05.43 pm
recd: 25th oct 2008 / 05.44 pm
‘தேங்ஸ் ரகு. ஏன் மறுபடியும் மாடிக்கி வரம அப்டியே  திரும்பிப் போயிட்ட? இப்ப தான் டோங் ஹுவா கிட்ட பேசினேன். உன்னோட நம்பர் கேட்டு வாங்கினேன். அடுத்த வாரம் எங்க வீட்டுக்கு பெட்டி படுக்கையோட வரப் போறான். அப்பா கிட்டயும் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்பி விஷயத்தச் சொல்லிவிட்டேன். ‘               

From: மெலிஸா
sent: 25th oct 2008 / 05.44 pm
recd: 25th oct 2008 / 05.45 pm
‘உன்னைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள எனக்கு மிக ஆர்வமாக இருக்கிறது. அப்பப்ப எனக்கு ஃபோன் பண்ணு.  முடியிறப்ப  என் வீட்டுக்கும் வா.’                   

From: மெலிஸா
sent: 25th oct 2008 / 05.45pm
recd: 25th oct 2008 / 05.46 pm
‘உன்னோட நிதானமும் பேசும் விதமும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. ரகு, வர வார இறுதியில ஸன் ப்ளாஸாவுல நாம சந்திப்போமா? நீ  என்னிக்கு எப்ப ஃப்ரீன்னு சொல்லு.’
***

jeyanthisankar@gmail.com