சிறுகதை: மேலதிகாரி – ஒரு கணித விற்பன்னர்

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்அமலனை மேலும் கீழும் பார்த்த மனேஜர், அவன் அந்த வேலைக்குப் பொருத்தமற்றவன் என்பதை உறுதி செய்துகொண்டார். நேர்முகப் பரீட்சைக்காக அந்தத் தொழிற்சாலைக்குப் புறப்படும்போதே அமலனுக்கும் அது தெரிந்திருந்தது. அமலன் ஒரு கணித விரிவுரையாளன். இலங்கையில் இருக்கும்போது பாடவிதானக்குழுவிலும் அங்கம் வகித்திருந்தான்.

பூர்வாங்க உரையாடல்கள் முடிவடைந்ததும் மனேஜர் அமலனை ஒரு அறைக்குக் கூட்டிச் சென்றார். அந்த அறைக்குள் ஒரு வாட்டசாட்டமான இளைஞன் ஒரு இயந்திரத்துடன் போராடிக் கொண்டிருந்தான். அவனுக்கு உதவியாக இரண்டு முதியவர்கள் நின்றிருந்தார்கள். அங்கு நுழையும்போதே அமலனின் கண்கள் அடுத்த அறையில் உள்ளவர்களைத்தான் நோட்டமிட்டன. அந்த அறைக்குள் இளம்பெண்கள் நிறைந்திருந்தார்கள். ‘கொன்வேயர்’ ஒன்றில் வரிசையாக போத்தல்கள் வந்து கொண்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும், அவை மந்திரத்தால் கண்டுண்டவை போல நின்றன. அந்தப் போத்தல்களுக்குள் இரசாயனக்கலவை நிரம்பின. நிரம்பியவுடன் அந்தப்பெண்கள், அந்தப் போத்தல்களை எடுத்து பெட்டியொன்றில் அடிக்கி வைத்தார்கள். அவனது கண்கள் அங்கே சென்றதை மனேஜர் கண்டுகொண்டார். உடனே அவன் தன் கவனமெல்லாவற்றையும் அவர்மீது திருப்பினான்.

பிய்ந்துபோன ஒரு சுழல்நாற்காலியில் இருந்துகொண்டு அந்த இயந்திரத்தை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவனிடம் அமலனை ஒப்படைத்தார். அவன் தனது வலதுபுற சுண்டுவிரலை தன் மூக்கின்மீது வைத்து அழுத்தி, மூக்கை ‘ம்…ம்…’ என்று இழுத்தபடி தன் பெயர் ‘ரிம்’ என்றான்.

அமலனை தன் பின்னாலே வரும்படி சைகை காட்டிவிட்டு, அருகேயிருந்த படிகளின்மீது தாவி ஏறி மேலே ஓடினான் ரிம். இவன் ஏன் இப்படி துடிச்சுப் பதைச்சு ஓடுகின்றான்? அங்கே அமலன் போனபோது ஒரு ‘பரல்’ ஒன்றை உருட்டிப் பிரட்டி அதற்குள் இருந்த ‘கெமிக்கலை’ ஒரு ‘சூற்’ (chute)  ஒன்றிற்குள் கொட்டிக் கொண்டிருந்தான். அதற்குகீழேதான் அந்த மெஷின் இருந்தது. அந்த மெஷின் மூலம் அவன் கொட்டிய கெமிக்கலை சிறுசிறு பக்கற்றுகளில் அடைப்பதுதான் அங்குள்ளவர்களின் வேலை. மாடுமாதிரி அதைப் பிரட்டிக் கொட்டிவிட்டு அமலனைப் பார்த்தான்.. ‘எம்ரி பரலை’ அசைத்து வைப்பதில் அவனுக்கு உதவப் போய் அமலன் சற்று ஆட்டம் கண்டுவிட்டான். அவன் உதட்டுக்குள் சிரித்தபடியே கடகவென்று கீழிறங்கி, மெஷுனிற்குப் பக்கத்தில் போய் நின்றான். கர்வத்துடன் தனது வலது கரத்தின் சுண்டு விரலை மூக்கின்மீது வைத்து மெதுவாக இழுத்தான்.

மதியம் நெருங்கும்வரை அவர்கள் நாலுபேரும் கெமிக்கலை அடைத்தார்கள் உணவருந்த முன்னர் கணக்கெடுப்பு செய்யவேண்டும். அதுவரை எட்டுப்பெட்டிகள் முடித்திருந்தார்கள். ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் இருபத்தைந்து பக்கற்றுகள் இருந்தன.  ரிம் அருகே இருந்த கார்ட்போர்ட் பெட்டியிலிருந்து ஒரு மட்டையைக் கிழித்தான். காதிற்குள் செருகியிருந்த பேனாவை எடுத்தான். இருபத்தைந்து … இருபத்தைந்து … என்று எட்டுத்தடவைகள் மேலிருந்து கீழாக எழுதினான். ஃபைவ்…. ரென்…. என்று எண்ணத் தொடங்க, அமலன் ’ரூ கன்றெட்’  என்றான். தனது எண்ணுதலைக் குழப்பிவிட்டான் எனச் சினந்தபடி மீண்டும் எண்ணத் தொடங்கினான். எண்ணி முடித்தபின், எண்களிற்குக் கீழே சைபரைப் போட்டுவிட்டு மட்டையின் ஒரு ஓரத்தில் நான்கு என்று குறித்துக் கொண்டான். பின்பு ரூ… ஃபோர்…. சிக்ஸ்… என்று எண்ணி அதனுடன் நாலைக் கூட்டி ‘ரூ கன்றெட்….’ என்றான். அவனது அட்சரம் பிசகாத ஆங்கிலம் அமலனைக் கவர்ந்தது. “எதற்கும் ஒருதடவை டபுளச் செக் செய்வோம்” என்று சொல்லிவிட்டு மட்டையைத் திருப்பி மீண்டும் அந்தக் கணக்கைப் போட்டான் ரிம். கூட்டி முடிக்கும்வரை காத்திருந்த அமலன் திரும்பவும் ‘ரூ கன்றெட்’ என்றான். யெஸ்.. ரூ கன்றெட்….. யு ஆர் கரெக்ட்’ என்றான் ரிம்.

மாடுமாதிரி பரலைக் கவிட்டுப் புரட்டி வேலை செய்யும்போது வியர்த்துக் கொட்டாத அவனுக்கு, ஒரு சிறு கணக்குப் போடும்போது ஆறாக வியர்த்துக் கொட்டியது. நெற்றியில் வழியும் வியர்வையை கையால் வழித்து எத்தினான். திரும்பவும் ‘ரூ கன்றெட்’ என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டான். அவனை நினைத்து அமலனுக்கு இப்போது அழுகை வந்தது..

வேலை முடிவதற்குள் இன்னுமொரு கணக்கெடுப்புச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தான் ரிம். மாலை மூன்றுமணியளவில் மனேஜர் வந்தார். அவர் அன்று அனுப்புவதற்குத் தேவையான ஸ்ரொக் வந்துவிட்டதா எனப் பார்த்துப்போக வந்திருந்தார். தான் கணக்கெடுத்துவிட்டு சொல்வதாக ரிம் சொன்னான்.

மனேஜர் வந்து போனதும் ரிம் பரபரப்படைந்தான்.

“ஏய் அமல்… நீ இன்று முழுவதும் ஒன்றும் சாப்பிடவில்லையே! கன்ரீனிலை போய் ஏதாவது சாப்பிட்டு வா…” என்றான் ரிம்.
“எனக்குப் பசிக்கவில்லை!” என்றான் பதிலுக்கு அமலன்.

“நாள் முழுக்க தண்ணியைக் குடிச்சபடியே ஒட்டகம் மாதிரி இருக்கிறாய்…. யூரினை அடக்கி வைச்சா வருத்தம்தான் வரும். ரொயிலற்றுக்குப் போட்டு வா.”

தன்மீதும் கரிசனை கொள்ள ஒரு ஜீவன் இருக்கின்றதே என அமலனுக்கு ஆச்சரியமாக இருந்த்து. அமலன் எல்லாவற்றையும் மறுத்துவிடவே அவனுக்கு ஒரு வேலை கொடுத்தான் ரிம். மனேஜரிடம் போய் ஓடர்   ஃபோம் எடுத்துவரும்படி சொன்னான். முதியவர்கள் இருவரும் ரிம்மையும் அமலனையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, தமக்குள் சிரித்துக் கொண்டார்கள். அமலன் அறையைச் சுற்றிப் பார்த்தான். மொத்தம் 14 பெட்டிகள் முடிக்கப்பட்டிருந்தன. பத்துப்பெட்டிகளிற்குள்ளும் 250, நான்கு பெட்டிகளிலும் 100, ஆக மொத்தம் 350 அங்கே இருந்தன.

மனேஜரிடம் சென்றபோது, அவர் ஏற்கனவே ஓடர் ஃபோமை ரிம்மிடம் கொடுத்துவிட்டதாகச் சொன்னார். அமலனுக்கு ரிம்மின் நடவடிக்கைகள் விசித்திரமாகத் தெரிந்தன. திரும்பி வந்தபோது ரிம்மை அங்கு காணவில்லை. ’ரிம் எங்கே?’ என்று அங்கு நின்ற முதியவர்களிடம் கேட்டான். அவர்கள் சுட்டிக்காட்டிய திசையில் இரண்டு பெரிய அலுமாரிகள் தெரிந்தன. ஒரு அலுமாரியில் இருந்து இரண்டு கால்கள் நீண்டிருந்தன.  வெறும் நிலத்தில் குந்தியிருந்து கணக்குப்போட்டபடி இருந்தான் ரிம். அவனுக்குப் பக்கத்தில் ஒரு ரிஸ்யூ பொக்ஸும் தண்ணீர்ப் போத்தலும் இருந்தன. முன்னூற்றி ஐம்பது என்று அவனிடம் அமலன் சொல்லி இருக்கலாம். ஆனால் எப்படிச் சொல்வது? அவன் அமலனின் மேலதிகாரி அல்லவா? அவனைக் காணாதவன் போல திரும்பி நடந்தான் அமலன். வெள்ளைக்காரனுக்கு கணக்கு வராது. ஆனால் கதைக்க வரும்.

kssutha@hotmail.com