சிறுகதை : வானத்தை தேடும் வானம்பாடிகள்

ஶ்ரீராம் விக்னேஷ்தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்திலேறி அதிலே தொங்கிக்கொண்டிருந்த உடலைக் கீழே தள்ளிய கதைபோல, ராதாவுடன் மூன்று தடவைகள் பேசியும் மனதுக்கு ஒவ்வாமல், நான்காவது தடவையாக மீண்டும் என் மொபைல்போனை எடுத்தேன்.

எனது நம்பரைப் பார்த்ததும், மிகவும் கடுப்பானாள் அவள்.

“சரியாப் போச்சு…. உருப்பட்ட மாதிரித்தான்…. யேப்பா…. நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன்…. ஏதோ சின்ன வயசிலயிருந்து நாம ரண்டு பேரும் ஒண்ணாவே படிச்சோம், வளந்தோமேங்கிறதுக்காக, என் கேசைக் கொண்டுவந்து ஒங்கிட்ட குடுத்தேன்…. உன்னயவிட பெரிய லாயர்மார் இருந்துங்கூட, ஒன்னோட ஆர்கியூமெண்டில நம்பிக்கை வெச்சுத்தான் இந்தக் கேசைத் தந்தேன்…. ஆனா, நீ அப்பப்ப புத்திமாறிப் போயி, செட்டில்மெண்டாய் ஆகிடுன்னு அட்வைஸ் பண்ணிக்கிட்டு வர்ரே…. நீ வக்கீல் வேலைக்கு வர்ரதை விட்டு, பேசாம கல்யாண தரகர் வேலைக்கு போயிருக்கலாமில்ல…. சீ….”

வெறுத்துப்போய் பேசினாள் ராதா.

நான் கோபப்படவில்லை. எனக்கு அவள்மீது அனுதாபமே நிறைந்து நின்றது.

காரணம் : எனது பால்யகால பள்ளித் தோழி அவள். பள்ளிக்குச் செல்லும்போதும், திரும்பி வரும்போதும் நான் அவளுக்கு வழித்துணையாய் சென்று வருவேன். அன்று அரும்பிய பாசம்….. இன்றும் தொடர்கிறது

நான் விடவில்லை. தொடர்ந்தேன்.

“ராதா…. இனிமேலைக்கு நான் இதைப்பத்தி பேசப்போறதில்லை.. ஏன்னா, உனக்கே தெரியும்…. இன்னிக்கு உன் கேஸ் பைனல் ஆகப் போறது…. உனக்கும் பொன்னரசுவுக்கும் டைவர்ஸ் கிளியராகப் போவுது…. நான் ஒரு வக்கீலா இருந்து, இந்தக் கேசை உனக்காக ஆஜராகி நடத்தினது வாஸ்தவம்தான்…. ஆனா, உள்ளூர என் மனசாட்சியோ ஒரு குடும்பத்தைப் பிரிக்க உதவுறமாதிரி உறுத்திக்கிட்டிருக்கு…. இப்பகூட ஒண்ணும் கெட்டுப் போகல்லை…. உன்கூட சேந்து வாழுறதாயும், இனி எந்தத் தப்புமே பண்ணமாட்டேன்னும் பொன்னரசு கோர்ட்டில அழுதது எனக்கே சங்கடமாயிருந்திச்சு…. அதனாலதான் சொல்றேன்…. நீ செட்டில்மெண்ட் ஆகிப் போறதாயிருந்தா இதை ஒரு கடைசி சந்தர்ப்பமா எடுத்துக்க…. இதை நான் உன்னோட லாயராக சொல்ல வரல்லை…. உன்னோட பால்ய சிநேகிதனா சொல்றேன்…. மூணு வயசில உனக்கும் ஒரு குழந்தை இருக்கு…. ஆம்பிளை துணை இல்லாம அதை வளக்கவோ, இல்ல ஒரு பாதுகாப்பா வாழவோ முடியும்னு எப்பிடி நெனைக்கிறே….”

மறுமுனையில் அவளின் இலேசான சிரிப்பொலி கேட்டது.

“உன்னய நெனைக்கிறப்போ எனக்கு சிரிக்கவா, அழவான்னு தெரியலையா…. புருசன் செத்துப்போயிட்டா, பொண்டாட்டிமாருங்க புள்ளைங்களை வளத்தெடுக்கிறதே இல்லியா…. இதுவும் அதுதான்யா…. என்னிக்கு அவனை தனிப்பட்ட எடத்தில வெச்சு வேற ஒருத்திகூட, தப்பான மொறயில இருந்ததை நேருக்கு நேரா பாத்தேனோ, அன்னிக்கே அவன் செத்துப்போய்ட்டான்னு முடிவு பண்ணிட்டேன்….நீயாயிருந்தா கொலையே பண்ணிடுவே….”

சத்தமாகப் பேசினாள். மூச்சிரைக்கும் ஒலி தெளிவாகக் கேட்டது.

நான் விடவில்லை.

“உன் புருசன் இப்பதான் புதிசா தப்பு பண்ணினானா…..உன்னய கலியாணம் பண்ணிக்க முந்தியே ஏகப்பட்ட படுக்காளித்தனங்கள் பண்ணிட்டுத் திரிஞ்சது உனக்கும் தெரியுந்தானே…. தெரிஞ்சுகிட்டுத்தானே கட்டிக்கிட்டே…..”

“நெசந்தான்….. ஆன சொந்தம் விட்டுப் போயிடக்கூடாதுண்ணு எங்கப்பாவும், அத்தையும் சேந்து கலியாணத்தை பண்ணி வெச்சாங்க…. பெரியவங்க பேச்சைத் தட்டிப் போகக் கூடாதிண்ணு நானும் கழுத்தை நீட்டினேன்….. சரி, ஒருகாலத்தில வயசுக் கோளாறு, சூழ்நிலைக் கோளாறில தப்புகள் பண்ணினாலும், பின்னாடி அதையெல்லாம் உணர்ந்து திருந்தி, நடந்துக்குவான்னு நெனைச்சு, அதுக்காக ரொம்பவும் அல்லாடி ரண்டு வருசமா என் முந்தானையில முடிஞ்சு வெச்சுக்கிட்டிருந்தேன்….. இவனும் ஒழுங்காத்தான் இருந்தான்….ஆனா நடுச் சமுத்திரத்தில வுட்டாலும், நாயி நக்கித்தான் குடிக்கும்னு சொல்றமாதிரி நடக்கவும், அங்கிட்டும் இங்கிட்டும் அலையவும்…. சீ….இந்த ஜென்மங்ககூட சேந்து வாழவும், காலம் பூராவும் இவனுங்க காலைப் புடிச்சிட்டுக் கெடக்கவும்…. இதெல்லாம் ரொம்ப அவசியம்……”

கேலியாகப் பேசினாள் அவள்.

“ராதா…. நான் கேக்கிறேனேண்னு தப்பா நெனைச்சுக்காத…. இனி உன்னோட வாழ்க்கைய எப்பிடி கொண்டுபோகப் போறே…..”

பரிதாபமாகக் கேட்டேன் நான்.

பலமாகச் சிரித்துவிட்டாள் அவள்.

“நான் என்ன ஆம்பிளையா, அடுத்த கலியாணம் கட்டிக்க….ஏற்கனவே ஒரு பிள்ளையோட டைவர்சில நிக்கிற என்னய எவன் கட்டிக்க வரப்போறான்…. எம் புருசன், எங்குடும்பம்னு நெனைச்சேன்…. கஷ்டப்பட்டேன்…. வஞ்சிக்கப்பட்டதால குடும்ப வாழ்க்கையை விட்டு வெலகி நிக்கிறேன்…. இதையெல்லாம் எந்தப்பயல் யோசிக்கப் போறான்…. ஒருவேளை உனக்கு கலியாணம் ஆகாம இருந்திருந்தா துணிஞ்சு நானே உன்னய புரப்போஸ் பண்ணியிருப்பேன்….. உன்னய மாதிரி ஒருத்தன் கிடைக்கிறதிண்ணா நான் திரும்பவும் பொறந்து, சின்ன வயசிலயிருந்து பிரெண்டு பிடிக்கணும் இல்லியா…… உண்மையான அன்பையும், உள் மனசையும் புரிஞ்சு, காலம் பூராவும் விசுவாசமாய் வாழக்கூடியவன் எவனாச்சும் இனி வருவான்னு நெனைக்கிற அளவுக்கு நான் ஒண்ணும் முட்டாள் இல்லை………………..”

சற்றே நிறுத்தி மீண்டும் தொடர்ந்தாள்.

“உனக்கு ஞாபகம் இருக்கும்னு நெனைக்கிறேன், சின்ன வயசில நாம எல்லாம் வெளையாடிக்கிட்டிருக்கிறப்போ, வானத்தில ஜோடி ஜோடியா வானம்பாடிக பறந்து போறதப் பாத்து, நாமளும் இதுங்க மாதிரி, எப்பவுமே சொதந்திரமா இருக்கணும்னு சொல்லிக்குவோமே….. அதோட உண்மையான அர்த்தம் இப்பத்தான்யா புரியுது….. கலியாண வாழ்க்கையில, நம்பிக்கைங்கிற வானத்த வெச்சுத்தான் எம்புட்டுத் தூரத்துக்கும் பறக்கணும்….. பறக்க முடியும்…… ஆனா, வானமே இல்லாதப்போ…. அப்புறம் எங்கே…. எப்பிடிப் பறக்க…..”

பேச்சிலே வேகம் அதிகரிக்க, போனை சடாரென்று வைத்தாள்.

காலை கோர்ட் தொடங்கியதும் முதலிலே எடுக்கப்பட்ட வழக்கு, ராதா – பொன்னரசு விவாகரத்து வழக்குத்தான்.

முடிவும் நினைத்தபடி ஆகிவிட்டது.

மணியோ பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. எனக்கு எதுவுமே ஓடவில்லை.

இனியும், அங்கே உட்கார்ந்திருக்க எனக்கு முடியவில்லை. மதிய உணவுக்காக வீட்டுக்கு அழைத்துச்செல்ல, வண்டியை எடுத்துக்கொண்டு டிரைவர் வந்துசேர, பன்னிரண்டு முப்பது ஆகிவிடும்.

“பேசாமல் ஒரு ஆட்டோ பிடித்தே போய்விடலாம்….”

முடிவோடு எழுந்தேன்.

ஆட்டோ முன்னே நோக்கிச் சென்றபோதிலும், என் மனமோ பின்நோக்கிச் சுழன்று, என் மனைவி வத்சலாவை மையப்படுத்தி நின்றது.

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து அனாதையாக நின்ற எனக்கு கைகொடுத்து, தக்கபடி வளர்த்துப் படிக்கவைத்து இன்று என்னை ஒரு வக்கீலாக உருவாக்கி வைத்தவர் எனது தாய்மாமன் தம்பித்துரைதான். அதாவது வத்சலாவின் அப்பா.

அவர் எனக்குச் செய்த உதவிக்குக் கைம்மாறாக தன் மகளை எனக்குக் கட்டிவைத்துத் திருப்தி கண்டார்.

“எந்தச் சந்தர்ப்பத்திலையும் என் பொண்ணை நடுத்தெருவில விட்டிடாதைப்பா….”

இப்படியொரு வேண்டுதலை, என்னிடம் சத்தியம் பண்ணும்படி கேட்டுக்கொண்ட பின்புதான் கண்ணை மூடினார் அவர்.

கல்லூரி நாட்களில் வத்சலாவுக்கும், ஆனந்தன் என்ற மாணவனுக்குமிடையே காதல் தொடர்பு இருந்ததாகவும் : பார்க்கு, பீச்சு, சினிமா என்றெல்லாம் சுற்றியதாகவும்…..

இதற்கு மேலும்கூட என்னென்னவோ நடந்ததாகவும்….. ஊரெல்லாம் வதந்தி.

“ஒழுக்கமாக வாழ்வேன்….” என்னும் உறுதிமொழியோடு ஒட்டினாள் வத்சலா.

ஓராண்டில், குழந்தை ஒன்றிற்கு என்னைத் தந்தையாக்கியபோது, ஒரு “உத்தம ஜோதி” யாகவே என் நெஞ்சில் ஒளிவீசினாள்.

வீட்டுக்குச் சென்றதும், முதல் வேலையாக வத்சலாவை அருகே வைத்து, இன்றைய விவாகரத்து விபரத்தையும், என்மனத்து வலியையும் சொல்லிக் கதறவேண்டும்போல் இருந்தது.

வீட்டுக்குள்ளே நுளைந்தபோது ஒரே நிசப்தம். வாசலில் பூட்சைக் கழற்றி வைத்துவிட்டு யோசித்தபடி உள்ளே நடந்தேன்.

பெட்ரூம் பக்கம் வத்சலாவின் மெல்லிய சிரிப்பொலி கேட்டது. அத்துடன் ஒரு ஆணின் குரலும் கூட,

வத்சலா கெஞ்சுவதுபோல பேசினாள்.

“சீக்கிரம் கிளம்புங்க…. கோர்ட்டு முடிஞ்சு அவுங்க வர்ர நேரமாகுது…..”

என் உடம்பெல்லாம் முள்ளாகக் குத்தி நின்றது. இலேசாகச் சாத்தப்பட்டிருந்த கதவின் இடுக்கு வழியே நோக்கினேன். மூச்சுவிடும் ஒலிகூட கேட்காதபடி என்னைச் சுதாகரித்தேன்.

“ஆ…. ஆனந்தன்……..”

வத்சலாவின் கல்லூரிக் காதலன். நான் இருக்கவேண்டிய இடத்திலே அவன். வத்சலா எனக்குத் துரோகம் செய்கின்றாள்.

என் உடலிலுள்ள நரம்பெல்லாம் கூசிகூசி வலித்தது. உடம்பு இலேசாகப் பதறத் தொடங்கியது. காதுக்குள்ளிருந்து உஸ்ணமான காற்று வெளியேறுவது போன்ற உணர்வு. என் நெஞ்சு பதறுவதை என்னாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை.

“நீயாயிருந்தா கொலையே பண்ணிடுவே……”

ராதா காலையில் போனிலே சொன்ன வார்த்தை எவ்வளவு உண்மை. அப்படிக்கூட உணர்வு.

வேதனையையும், வேகத்தையும் அடக்கியபடி மெதுவாக நடந்து, எனது ஆபீஸ்ரூமை அடைந்தேன்.

எனது பிரத்தியோக பீரோவைத் திறந்து, அதற்குள்ளிருந்த எனது லைசென்ஸ் துப்பாக்கியை “லோட்” பண்ணினேன்.

“வேகம் வேண்டாம்…. விவேகத்தைப் பயன்படுத்து….. பலபேரைக் கூட்டிலே ஏற்றிவைத்துக் கேள்வி கேட்கும் உன்னை, நாளை வேறொரு வக்கீல், கேள்வி கேட்கும்படி வைத்துவிடாதே…..”|

நெஞ்சுக்குள்ளே ஒரு வக்கீலின் குரல் கேட்டது.

மறுகணம் துப்பாக்கியை வைத்துவிட்டு, எனது கேமராவை எடுத்தேன். பிளாசை சொருகிக்கொண்டு பெட்ரூமை நெருங்கினேன்.

எத்தனை கைபேசிகள் கேமராவோடு இருந்தாலும், புகைப்படம் பிடிப்பதற்கான தனிக் கேமராவின் பயன்கள் வலுவானவை என்பது எனது அனுபவம்.

இலேசாகச் சாத்தப்பட்டிருக்கும் கதவைக் காலாலே உதைத்தேன். அது திறந்த மறுவிநாடியே எனது கேமராவக் கிளிக் பண்ணினேன்.

துள்ளியெழுந்த ஆனந்தன் பின்புற வழியே பாய்ந்தோடினான்.

அவனை விரட்டுகின்ற எண்ணமோ, வத்சலாவை அடித்து உதைத்து வதைக்கின்ற எண்ணமோ இல்லாமல், எனது அறிவு தெளிவாக இருந்தது.

இவர்கள் விசயத்திலே மினைக்கெடுவதே வீண். இவர்களின் தப்பான நடவடிக்கையை ஆதாரப்படுத்த வேண்டும் என்கின்ற ஒரே நோக்கம் மட்டுமே உள்ளத்தில் தோன்ற, மீண்டும் கேமராவை பத்திரமாக எடுத்துச் சென்று, எனது ஆபீஸ்ரூம் பீரோ லாக்கரிலே கவனமாக வைத்துப் பூட்டினேன்.

ரூமைவிட்டு வெளியே வந்தபோது, ஓடிவந்து எனது காலிலே விழுந்தாள், எனக்கு மனைவியாக இருந்த வத்சலா. கண்ணிலே கண்ணீர் மழை.

அவளது கைகள் இரண்டும் எனது காலடியைத் தொட்டபோது, என் காலிலே சாக்கடைப் புழுக்கள் ஊர்வதுபோன்ற பிரமை.

துள்ளிக் குதித்து, தூர விலகினேன். மிகவும் நிதானமாகப் பேசினேன்.

“எதிரியை மன்னிக்கணும்னு நிறைய பெரியவங்க சொல்லியிருக்காங்க….. ஆனா, துரோகிய மன்னிக்கணும்னு யாருமே சொன்னதா ஞாபகத்தில இல்ல…..

இந்தப்பாரு வத்சலா…..ஓங்கூட அடிச்சுக்கிட்டு சண்டைபோட்டு, வெட்டிக்குத்திக் கொலைபண்ணி, ஜெயிலு…. அது இதுண்ணு கேவலப்பட்டு வாழ்க்கையை வேஷ்டுபண்ணி, என் குழந்தையோட பியூச்சரையும் வீணாக்க நான் விரும்பல்ல….. வந்தவன் யாரு, நீ ஏன் எனக்குத் துரோகம் பண்ணினேன்னு கேட்டு, சினிமா டயலக் போடவும் நான் தயாரில்லை….. இது ரெண்டுமே இல்லாமெ, அய்யய்யோ குடும்ப கவுரவம் போயிடுமேன்னு பயந்து, எதையுமே கண்டுக்காம அட்ஜெஸ் பண்ணிக்கிட்டுப் போறவனும் நானில்லை…. ஓங்கூட சேந்து வாழப் புடிக்கல்லைங்கிறத்துக்காக உன்னய இந்த வீட்டைவிட்டு விரட்டவும் என்னால முடியாது….. ஏன்னா உங்கப்பாகிட்ட நான் குடுத்த சத்தியம் அப்பிடி….. அதே நேரத்தில இந்த வீட்டைவிட்டு வெளியபோயி, வேற வீட்டில வாழவும் என்னால முடியாது……………”

“அப்பிடீன்னா………” பார்வையாலே கேட்டாள் அவள்.

“ஒரே வீட்டுக்குள்ள இருந்துகிட்டு, ஒண்ணா வாழாம வெளியுலகத்துக்கு மட்டும் புருசன் – பொண்டாட்டியா வாழுவோம்ணு சொல்லப்போறதா எதிர்பாக்கிறியா…..”

“கோபத்தின் மத்தியிலும் எனக்குச் சிரிப்பு வந்தது.

“ அப்பிடியும் இல்லை…. இப்பிடியும் இல்லை….. பின்ன எப்பிடி…..”

அவள் குழம்புவது எனக்குப் புரிந்தது. நானே பேசினேன்.

இப்ப ஓங்கூட இருந்திட்டுப் போனவனையும்…. அதாவது ஓங் கள்ளப் புருசனையும் ஒன்னையும் சேத்துநான் எடுத்த போட்டோவை பிரிண்டுபண்ணி, மெமரிக் கார்ட்டோட கோர்ட்டில குடுத்து, ஒங்க ரெண்டு பேரையும் எங்கே அனுப்பணுமோ, அங்க அனுப்பவும் முடியும்….. ஆனா, அதனால எனக்கு ஆகப்போறது ஒண்ணுமில்லை…..

உண்மையான காரணத்தை காட்டிக்காம, உன்மேல டைவர்ஸ்கேஸ் போட்டு, உன்னய ஒரு உத்தமியாக்கி, சட்டப்படி மாசாமாசம் உனக்கு கவுரவப்படிக்காசு கட்டவும் நான் தயாரில்ல….

உண்மையான காரணத்தை காட்டி, நம்ம ரெண்டு பேருக்கு மட்டுமில்லாம மூணாவதா நம்ம குழந்தைக்கும் கேவலத்த உண்டாக்காம, நீயாவே முன்வந்து, நமக்குள்ள காம்ப்ரமைஸாக சட்டப்படி பிரிஞ்சுக்குவோம்….. அப்பிடிப் பண்றப்போ நம்ம ரெண்டுபேருக்கும் ஊடையில யாரும் நுளைஞ்சு பஞ்சாயத்துப் பண்ண முடியாது…..

உங்கப்பாவுக்கு நான் செஞ்சுகுடுத்த சத்தியப்படி நான் உன்னய தெருவில விடமாட்டேன்…… நீ அவுட்டவுசில தங்கிக்கலாம்….. உங்கப்பாவ மனசில நெனைச்சுக்கிட்டு, மாசாமாசம் ஓம்புட்டு செலவுக்கு, போடுற பிச்சைய போடுறேன்….. அத வெச்சு உன் வாழ்க்கைய ஓட்டிக்க…..

ஆனா, சட்டப்படி எனக்கு பொண்டாட்டியா இல்லாம, தெருவில போற பரதேசிங்களில ஒண்ணுபோல இருக்கணும்…..”

சற்று அமைதியானேன்.

மனதிலே துணிச்சலை வருவித்துக்கொண்டு கேட்டாள் அவள்.

“நீங்களும் குழந்தையும் ஒத்தையில எப்பிடி சமாளிக்கப்போறீங்க….. நான் பண்ணின பாவத்துக்காக, நீங்களும் தண்டணையை அனுபவிக்க வேணுமா…..”

பேச்சிலே விசும்பல் கலந்திருந்தது.

“இந்த விசும்பல் பேச்சிலே, அடிக்கடி கிடந்து அழுந்திக் குழம்பியது போதுமே…. இனியாவது தெளிந்துகொள்…..”

உள்ளத்தின் வருடல் இது.

“இந்தப்பாரு வத்சலா….. ஒருத்தனையே கலியாணம் பண்ணி, அவனுக்காகவே வாழ்ந்து, அவன் தனக்கு துரோகம் பண்ணிட்டாங்கிற காரணத்துக்காக, இனி அவன் மூச்சுக் காத்தே வேண்டாம்ணு ஒதுக்கித் தள்ளின ராதா எங்கே…. ஒருத்தன் தாலிக்கு கழுத்தயும், வேற ஒருத்தன் ஆசைக்கு முந்தானையையும் குடுக்கிற நீ எங்கே…….

நான் சுத்திவளைச்சுப் பேச விரும்பல்ல….. நான் ராதாவை கட்டிக்கப்போறேன்…. அந்த விசுவாசமுள்ள மனசுக்கு வாழ்க்கை குடுத்து வாழுறதை பெருமையா நெனைக்கிறேன்…..

என் குழந்தைக்கு அவ அம்மாவா வரக்கூடிய சூழ்நெலயில, அவ குழந்தைக்கு அப்பாவா நான் இருக்கிறதில தப்பில்ல…..

நீ என்ன பண்றேன்னா, நாங்க வாழப்போற வாழ்க்கையை பாத்துக்கிட்டே இரு…..இதுதான் நான் உனக்கு தரப்போற பணிஸ்மெண்ட்…..

இதில ஏதாச்சும் எசகு பிசகு வந்திச்சுண்ணு வை…. போட்டோ பிரிண்டையும், மெமரிகார்டையும் நான், கோர்ட்டில குடுக்கப்போறது கன்போம்….. அதுக்கப்புறம் உனக்காகப் பேச ஒரு நாயும் வராது…..

இது பிளாக்மெயில் இல்லை….. எனக்கு நானே போட்டுக்கிட்ட ஒரு பாதுகாப்பு வளையம்…… ஏம்முடிவை நிச்சயமா ராதா ஏத்துக்குவா……

இன்னொரு பொண்ணோட வாழ்க்கையக் கெடுக்கணுமாண்ணு அவ நெனைக்கிறதுக்கு சான்ஸ்சே இல்ல….. ஏன்னா, அவளோட மாஜி புருசன் பொன்னரசுவை நீ வின்பண்ணிட்டே …… அவனாச்சும், எங்கயோ தனிப்பட்ட இடத்திலவெச்சு படுக்காளித்தனம் பண்ணி மாட்டிக்கிட்டான்….. ஆனா, நீ ரொம்பத் தைரியமா என் வீட்டுக்குள்ள வச்சே……..

சரிசரி….. போய் அவுட்டவுசை கிளீன்பண்ணி வெச்சுக்க….. கோர்ட்டு, புராப்ளெம், காம்ப்ரமைஸ்ன்னு எல்லா சம்பிரதாயங்களும் முடிச்சுத்தான் நான் சட்டப்படி ராதாவை கலியாணம் பண்ணிக்கணும்…..

ஆனா, அவ சரீன்னா இன்னிக்கே கூட்டிட்டு வந்துடலாம்னு நெனைக்கிறேன்…… .. எனக்கு நெறய வேலை இருக்கு……”

என் நெஞ்சுக்குள்ளே பிரகாசமாக தோன்றினாள் ராதா.

“ராதா….. உன்னோட உண்மையான அன்பையும், உள் மனசையும் புரிஞ்சுகிட்டவன் நான்தான்…. நிச்சயமா உனக்கு விசுவாசமா நானும், எனக்கு விசுவாசமா நீயும் இருப்போம்கிறதில எனக்கு எந்த சந்தேகமும் இல்லை….. என் நெலமயை புரிஞ்சுகிட்டு, நேசக்கரம் குடுப்பேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு…..

பள்ளி நாட்களில், உனக்கு வழித்துணையாக வந்த நான், இனி எமது அந்திமகாலம் வரை வாழ்க்கைத் துணையாக வருவேன்……

நம்பிக்கைங்கிற வானத்த துலைச்சிட்டு, பறக்க முடியாமெ தேடிக்கிட்டுருக்கிற வானம்பாடி நீமட்டுமில்லை…… நானுந்தான்…….”

bairaabaarath@gmail.com