சிறுகதை: விடை பெறுதல்

நெருங்கியவர்களுக்கு 'சா' நிகழ்கிற போதே ஒவ்வொருவருக்கும் தம் வாழ்வை ஒரு தடவை அலசிப் பார்க்கிறது நடக்கிறது போலும்‌ .. என்று தயாளனுக்குப் பட்டது. சாவிலே போய்… நல்ல சா,கெட்ட சாவு  இல்லைதான். எவராலுமே வாழ்க்கை வட்டத்தில் அனைத்து நிலைகளிலுமே நிறைவாய் வாழ்ந்திட முடிவதில்லை. ஒரு தடவை அதிருஸ்டம் அடித்தால், அடுத்து வருவது எதிர் மாறாக துயருறுவதாக இருந்து விடுகிறது. நெருங்கியவர்களுக்கு ‘சா’ நிகழ்கிற போதே ஒவ்வொருவருக்கும் தம் வாழ்வை ஒரு தடவை அலசிப் பார்க்கிறது நடக்கிறது போலும்‌ .. என்று தயாளனுக்குப் பட்டது. சாவிலே போய்… நல்ல சா,கெட்ட சாவு  இல்லைதான். எவராலுமே வாழ்க்கை வட்டத்தில் அனைத்து நிலைகளிலுமே நிறைவாய் வாழ்ந்திட முடிவதில்லை. ஒரு தடவை அதிருஸ்டம் அடித்தால், அடுத்து வருவது எதிர் மாறாக துயருறுவதாக இருந்து விடுகிறது. அதில் பிள்ளைச் செல்வம் பெற்றவர்களாக இருந்தாலும் சரி, அற்றவர்களாக இருந்தாலும் சரி ‘சா’ எல்லாரையும் ஒரு கணம் அசைத்தே விடுகிறது. பல‌ கேள்விகளையும் எழுப்புகிறது. பதிலை தேடி அலைவது அவரவர் விருப்பம்.பதில்கள் கிடைக்கிறதா.. இல்லையா? இரை மீட்டலால் அந்த‌ நாட்களுக்கே போய் விடுகிறோம். அவன் உள்ளக் கட லும் அசைவுற்று அலைகளை பிரவாகிக்கத் தொடங்கின‌.  ‘சா’ இல்லத்தில் பார்வைக்கு வைத்திருந்த  கதிரண்ணையின் உடலை தரிசிக்க வந்திருந்தான்.கறுப்பு நிறம்.சாந்தம் தவழ வெள்ளைப் படுக்கைப் பெட்டியில் படுத்திருந்தார்.இனி அவருக்கு எந்த கவலையும் இல்லை.இப்பவும் சினிமா நடிகர் முத்துராமனைப் போலவே இருந்தார். அப்படி ஒரு சாயல்.தயாளனின் அம்மாவிற்கு அடுத்ததாக பிறந்த சகோதர‌ர்.இவரை விட அம்மாவிற்கு ஒரு அண்ணை,இரண்டு தங்கச்சிமார்,இன்னொரு தம்பி‍.. இருந்தார்கள் .

 ஆச்சி,அவரைப் பற்றி அடிக்கடி சொல்லுவார்

      எல்லாரைப் போல அவரும் குழந்தையாய் இருகிற போது ‌ குழப்படியே கீழே இறக்கி விட்டால் சதா வீறீட்டு அழுகை.எனவே ஆச்சி அவரை எந்த நேரமும் தூக்கி வைச்சபடி திரிவாராம்.என்னவோ ஒரு தடவை..கோப்பிப் போட்ட போது, இவன்ர அழுகையிலே குழம்பி பாத்திரத்தை இடறி விட்டார்.தூக்கிறதுக்கு முதலே பையன்  அதிலே தவழ்ந்து கொப்புளித்து விட்டான். ஆச்சி,பாய்ந்து தூக்கிய போது அவரடைய பாதங்களும் கூட கொப்பளித்து விட்ட ன‌. பக்கத்து வீட்டிலிருந்த ஆச்சிட சினேகிதி சின்னம்மாவே ஓடி வந்து,பெடியளை ,பெட்டைகளை எல்லாம் ஏவி,கதிரை பச்சை வாழை மட்டையில் சுத்தி எடுத்துக் கொண்டு,மூலைக்கடைக்காரனின் எ.40 காரிலே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். கோப்பியிலே குளிச்சதாலேயே ‘கறுப்பானவர்’என தயாளன்ர அக்கா விபரிப்பாள். அவன் வாயை திறந்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பான்.”வாய்யை மூடு!’ஈ’ பூந்திறப் போகிறது”என அண்ணை கேலி செய்வான். எதையும் நம்புற வயசு.பேய்,பூதம் என நம்பினவன்,இதை நம்பினது பெரிய விசயமே இல்லை.

          மீதிக் கதையைத் தான் ஆச்சி சொல்லி இருக்கிறாரே.”புண் மாறும் வரையில் அவனை தூக்கவும் முடியாமல்,அவன் அழுகையை தாழவும் முடியாமல்..அப்பப்பா செத்துப் போனேனடா!”என்பார். ‘சின்னம்மாவே கதைகள் பல‌ கூறி அவன்ர கவனத்தை திருப்பி சமாளித்தவர்’..என்பார்.

         ஆச்சி வீடே பேரப்பிள்ளைகள் எல்லாருக்கும் கடலாக இருந்தது. அங்கே தங்கி இருக்கிற போதே பேரப்பிள்ளைக‌ள் ஒருத்தரை ஒருத்தர் சந்தித்தார்கள். அவர்களுக்கிடையில் ஒட்டுதலற்ற‌ சகோதரத்துவம் வளர்ந்தது. தயாளன்ர அம்மாட அண்ணை, அம்மா,கதிர்.. இவர்களுக்கே பிள்ளைக் குட்டிகள். மற்றவர்கள் அப்ப‌ கல்யாணமாகாமல் இருந்தார்கள். இவர்களை மேய்ப்பவர்கள் அவர்கள் தான். தயாளன் ஆட்கள் வட்டுக்கோட்டை, கதிரண்ணை வடமராட்சி, பெரியண்ணை பல ஊர்களில்.. என ஒவ்வொரும் தூரமாகவே இருந்ததால்.. ஒருத்தரை ஒருத்தர் போய் சந்தித்ததில்லை.. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பொருளாதார வளமில்லையும் அதிலே ஒன்று.ஆச்சி வீடு கேந்திரமாக இருந்ததில் என்ன தொல்லை என்றால்.. அங்கே,  எப்படி அழைத்தார்களோ அப்படியே பேரப்பட்டாளமும் அழைக்கத் தொடங்கியது தான். இதோ, இவன் ‘கதிரண்ணை’என்று சொல்கிறானே. இவரின் மனைவியை ‘ரதியக்கா’என்று கூப்பிடுறான். இவர்களின் மகன் செல்வன்,தயாளன்ர அம்மாவை “ஜானகியக்கா”என்றே கூப்புடுவான். அவரின் பெரியண்ணையை மட்டும் ‘மாமா’என்று முறையாக‌ கூப்பிட்டார்கள். ஆனால்,அவரின் மனைவியை..மறுபடியும்,சிறிய வித்தியாசத்தோடு ‘அண்ணி’என்றார்கள். உறவு முறையில் ஒரே குழப்பம் .

   ஆனால் அப்படித் தான் அழைத்தார்கள்.அம்மாட கடைசி தம்பியை அப்படியும் கூட‌  இல்லை…வெறும் ‘ராமன்’என சகோதரத்தைக் கூப்பிடுறது போல கூப்பிட்டார்கள். அவருக்கும் அவனுடைய அக்காவிற்கும் ஒரு பத்து வயசு தான் வித்தியாசம் இருக்கும்.அதை யாருமே வித்தியாசமாக எடுத்ததில்லை.அப்படி அழைப்பதற்குக் காரணமே அவர்கள் தானே.

    நீங்கள் நினைப்பது சரி தான்.சொந்தச் சகோதரங்களை எல்லாம் பேர் சொல்லியே அழைத்தார்கள்.

      ஆச்சி கதிரண்ணையைப் பற்றி கவலையாக சொல்லுவார். “அவருக்கு இவன் படிக்கேலை என்று பிடிக்காது.மூத்தவனிலே நம்பிக்கை வைச்சிருந்தார். அவனும் நேரடியாக படித்து வைத்தியனாகாது, அப்போதிகரி படித்து  சேவையாலே வைத்தியனான்.அதே அவர்க்கு மனக்குறையாய் இருந்தது. இவன் சுமாராக படித்தனால் ‘தெய்வமகனாகவே’ஒதுக்கி விட்டார். இவன் மனசு ரொம்ப கஸ்டப்பட்டு விட்டது”என்பார். பிள்ளையின் முகத்தை ஒரு தாய்க்கு படிக்கத் தெரியாதா?

       ஆச்சியைப் பார்த்து தான் அக்காவும் கதை சொல்ல வெளிக்கிட்டிருக்க வேண்டும். அம்மாவை விட மூன்று வயசு தள்ளி பிறந்ததாலோ… அம்மாவோட ஒட்டிக் கொண்டு விட்டார். அம்மாவிற்கு அப்ப தயாளனின் அப்பாவிலே ‘காதல்’ இருந்தது. “டேய் அவரை போய் சந்திக்க போறேன்”என்பார். கதிரண்ணை உடனே ஒரு சைக்கிளையோ, நண்பன்ர காரையோ, மோட்டார் சைக்கிளையோ… எப்படியோ கொண்டு வந்து விடுவார். அதிலே ஏற்றிக் கொண்டு போவார். தயாளனின் வீட்டிலே எந்த நல்ல காரியத்திற்கும் நிற்க தவறியதில்லை. தனியேயாவது வந்து விடுவார்.

      புலம் பெயர்ந்த நாட்டில் தயாளனின் அக்காட கல்யாணத்தை நடத்தியவரே அவர் தான். பிறகே தயாளன், அம்மா . எல்லாரும் இந்த நாட்டுக்கு வந்தார்கள். அம்மாட வலது கரமாகவே கடைசி வரையும் இருந்தவ‌ர். அம்மா செத்த போது குமுறி குமுறி அழுதவர், இப்ப இவரும் இறந்து விட்டார். அவனுடைய மனம் கனத்தது.   அவருடைய சிறு வயசுபோட்டோக்கள் தொடங்கி ..ஒரு அல்பத்தில் நிரப்பக் கூடிய படங்களை பெரிய விளம்பர பலகையில் அழகாக செருகி வைத்திருந்தார்கள். கல்யாணப்படம்.3 குழந்தைகளுடன், பிறகான பல படங்கள், அதிலே அவனுடைய அம்மா உட்பட சகோதரங்களுடன் இருந்த 4,5 படங்கள். ரதியக்கா கூட இளம் வயதில் சினிமா நடிகை புஸ்பலதா போல அழகாக‌ இருந்தார்.

     ‘எம்பாம்’ பண்ணிய உடலில் முகத்தில் சாந்தம் தவழ கிடந்த கதிரண்ணை முதுப்புண்ணால் நிறைய துன்புற்றவர். ரதியக்கா, இப்ப பல்லு விழுந்து ஒடுங்கி வருத்ததுடன் சவப் பெட்டிக்கு கிட்டவிருந்த நாற்காலியில் பிள்ளைகளுடன் இருக்கிறார். அவனைப் பார்த்து  கிட்ட வரச் சொல்லி அழைத்தவர் “எப்படி இருக்கிறே?”என்று அன்புடன் விசாரித்தார்.அவனும் பதிலளித்தான்.

     அம்மா தொட்டு அம்மாட சகோதரங்கள் ஒவ்வொருவராக உதிர்ந்து கொண்டு வருகிறார்கள். ஒரு சந்ததி விடை பெறுகிறது.2 மாசத்திற்கு முதல் தயாளனின் வயசு நண்பன் ஒருவனும் கூட‌ வருத்தத்தால்  இறந்து போய் இருக்கிறான். சாவு எந்த சந்ததியிலும் காவு எடுக்கலாம். புலம்பெயர் நாட்டில் வாகன விபத்தாக இருக்க… கூடிய சந்தர்ப்பம்  இருக்கிறது.

  வாழ்க்கை எவர் கையிலும் இல்லை!

     கதிரண்ணையின் பிள்ளைகள் ஒவ்வொருவராக வந்து அவனிடம் வாஞ்சையுடன் கதைக்கிறார்கள். கதிரண்ணையின் பிள்ளைகள் அவன் மேல் ‘சகோதரபாசம்’ காட்டுகிறார்கள்.அது ‘துப்பறியும் சாம்பு’போன்ற ஒரு நிலையால் ஏற்பட்டது.

    ஆச்சி வீட்ட தயாளன் போல அவர்கள் வந்தாலும், அவர்கள் வீட்ட அப்பாட சகோதரர்களின் பிள்ளைகள் யாருமே வருவதில்லை என்ற மனத்தாக்கம் அந்த வயதில் அவர்களுக்கு நிறையவே இருந்தது. வடமராட்சி உறவு முறை பார்க்கிற ஊர். அவர்களையும் சிறிது தொற்றியிருந்தது ஆச்சரியமில்லை.            

      புலம்பெயர் நாட்டிலே இருப்பது போல அங்கே வீட்டுக்கு வீடு கார் இருக்கவில்லை. சைக்கிளே பெரும்பாலானவர்களிடம் இல்லை.

        போய் வராததை அவர்கள் பெரும் குறையாகவே கண்டார்கள். தயாளனுக்கு போய் வர விருப்பம் தான்.ஆனால் எப்படி முடியும்.அவனுக்கும் வழி தெரிந்திருக்கவில்லை.

       தயாளனின் அப்பா இறந்த பிறகு கிடைத்த சுதந்திரத்தில் அவன் சுற்றயல் வைக்கிற மரதன் ஓட்டங்களில் எல்லாம் பங்கு பற்றத் தொடங்கினான். முதல் மூன்றுக்குள் வராட்டிலும் , எத்தனை தூரம் என்றாலும் ஓடி முடிப்பவன். ஈழநாடு பத்திரிகையில் ‘மரதன்’வைப்பதற்கான செய்தியைப் பார்த்தும் அவன் புன்னாலைக்கட்டுவான், குருநகர் எல்லாம் போய் மரதன் ஓடியிருக்கிறான். ஒரு தடவையாவது சைக்கிள் ஓட்டத்தில் பங்கு பற்ற வேண்டும் என்பது அவனுடைய ஆசை.ஆனால் அவனிடம் இருந்ததோ ஓட்டைச் சைக்கிள். அதிலே ஓட முடியாது.அவனை நம்பி யார் நல்ல சைக்கிள் கொடுப்பார்கள்?அந்த ஆசை நிறை வேறவே இல்லை.

      அதே போல ஈழநாடு பத்திரிகையில்,வடமராட்சியில் நெப்போலியன் விளையாட்டுக் கழகம் ஆண்டு விழாவில் ‘மரதன்’வைப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது. இது தூரமாக இருக்கிற வடமராட்சி.அவனுடைய வாகனம் அவ்வளவு தூரம் இழுக்குமா? சந்தேகமாய் இருந்தது. அம்மாட பட்ச  சகோதரர்.ஆனால், இப்ப அம்மா எதற்கும் மறுப்பு சொல்பவரில்லை. அம்மாவிடம் கதிரண்ணையின் விலாசத்தை வாங்கிக் கொண்டு ,அவர் வீட்டை நோக்கி சைக்கிளை உழக்கினான்.

        கடற்கரை ஓரமாக இருந்த நீள பாதையில் போகலாம் என்று தெரிந்திருந்தது. கீரிமலைக் கடற்கரைக்கு போற போதெல்லாம் அதற்கு அருகிலிருந்த கள்ளுக் கடையில் கூவில் என்று இதைத் தான் சொல்கிறார்களோ? அரைப் போத்தல் கள்ளை பிலாவில் வாங்கி, அங்கே விற்கிற குடல்கறியிலேயும் கொஞ்சம் வாங்கி காரமாக‌.. குடித்து விட்டு நீந்தச் சென்றிருக்கிறான். காலுளைவு தெரியாமல் இருப்பதற்காக அதே கள்ளுக் கடையில் புகுந்து.. அடித்து விட்டு உழக்கினான். இருட்டுற நேரத்தில் விலாசத்தை விசாரித்து .. அவர்கள் வீட்டை அடைந்தான்.

         அவர்களுக்கு ஆச்சரியம் என்ற ஆச்சரியம்.”நாளைக்கு நடக்க இருக்கிற மரதனிலே ஓடப் போறேன்”என்றான். “நெப்போலியன் கழகத்தை எனக்குத் தெரியும் கூட்டி போறேன்”என்றான் அவன் வயசு செல்வன். பக்கத்து வீட்டு ரஞ்சண்ணா ‘மரதன் ஓடுறதை’ பராட்டி உற்சாகமாக கதைத்தார். அன்றிரவு அயலிருந்த கடற்கரையிற்கு அவர்களோடு போய் ‘சடுகுடு’ விளையாட்டை முதல் தடவையாக பார்த்தான். ஆட்ட விதிகள் சரிவர தெரியாது. கிளித்தட்டு, கில்லி, அமெரிக்க சுப்பர்போல்.. எல்லாம் ஒரே தன்மை கொண்டவையே. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தை ரசித்தான்.இந்தியாவில் பட்டி தொட்டியெல்லாம் ஆடப்படுற ஆட்டம். அங்கேயிருந்து கடற்றொழில் செய்பவர்களால் இங்கே இறக்குமதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

          அடுத்த நாள், ஓடப் பெயர் கொடுத்த போதே அது பத்து மைல் ஓட்டம் என தெரிந்தது.இதுவரையில் அவன் ஐந்து கிலோ மீற்றர் ஓட்டங்களே ஓடியிருக்கிறான். பத்து மைல்?மலைப்பாக இருந்தது. ரஞ்சண்ணை முதுகிலே தட்டி “நீ ஓடியிருக்கிறாய் தானே, இதையும் ஓடுவாய்.ஓடு”என்று சொன்னார்.

       அவன் அதிலே எட்டாவதாக ஓடி முடித்தான். “முதல் பத்து பேர்களுக்கும் சேர்ட்டுபிக்கற் கொடுக்கப்படும்.  பின்னேரம் பரிசளிப்பு விழாவிலே வந்து பெற்றுக் கொள்”என்றார்கள். நீச்சல் போட்டியும் நடை பெறவிருந்தது. “பெயர் கொடாதவர்கள் ..இருந்தால் கொடுக்கலாம்”என சனத் திரளில் கழகக்காரர்கள் சுற்றி சுற்றி வந்தார்கள். ஓட்டக் களை ஆறி இருந்தவன் ரஞ்சண்ணையிடம் “என்ர தவளை நீச்சலில் இதிலே பங்கு பற்ற முடியாது”என்றான்.அது கேட்டுக் கொண்டு வந்த ஒருத்தன் காதிலே விழுந்து விட்டது. “தவளையோ எதுவோ?நீ நீந்துவே தானே”கேட்டான்.”ஓம்..” என்று விளக்க முதல் பேரை எழுதிக் கொண்டு”பயப்படாதே,போர்ட் காரர்கள் கூட வருவார்கள்.நீந்தாட்டி போர்ட்டிலே ஏற்றி வருவார்கள்” என்றான் அவனையும் நீச்சல்காரர்கள் ஏறின போர்ட்டிலே ஏற்றி விட்டான். ரஞ்சண்ணை உற்சாகமாக கையை காட்டினார்.

      அவ்வளவாக தூரமில்லாது கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட தூரத்திலிருந்து நீச்சல் போட்டி ஆரம்பமாகியது. துறைமுகம் என்பதால் ஆழமான நீர்ப் போக்கு இருந்தாலும் அவ்வளவாக சுழிகள் இருக்கவில்லை.துறையை அடைவதுடன் முடியும். முறையான நீச்சல்காரர்களுடன் அவனும் பாய்ந்து விட்டான்.

    ‘தவளை நீச்சல்’என்று முதலே சொன்னான் இல்லையா?தம்பியன் அதிலேயே மிதக்க,மற்றவர்கள் விரைவாக விரைந்து நீந்திக் கொண்டிருந்தார்கள்.கவனிக்கிறதுக்கு நாலு,ஐந்து போர்ட்டுகள் வந்தன.

      தயாளனைப் பார்த்து போர்ட்டை செலுத்தியவன் கத்தினான்.”போர்ட்டுக்கு கிட்ட வா”கைலாகு கொடுத்து ஏற்றினான்.பிறகு போர்ட்டை செலுத்தி “நல்லாய் கையை காலை அடிச்சு நீந்துறதைப் பார்”காட்டினான்.”இப்படி நீந்த வேண்டும்”என்றவன் “டேய் பரிசு எடுப்பது முக்கியமில்லை.பங்கு பற்றுறது தான் முக்கியம்.குதித்து நீந்து”என்றான்.

       வாழ்க்கையில் இப்படியும் உற்சாகமூட்டுறவர்கள் இருக்கிறார்களா?அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.நெப்போலியன் பேரை வைத்திருக்கிற கழகமும் ‘முடியாது…கிடையாது’என்று நினைப்பதில்லை போலும்.    அவன் நீந்துறதைப் பார்த்து”அப்படித் தான் விடாதே,விரைவாய் ஒரு பிடி பிடி”என்று உற்சாகமாக கத்தினான்.அரை மைல் நீளப் போட்டி அது.”இனி நீ நீந்துவாய்!இப்படியே நீந்திப் போ”என்று சொல்லி அவன் போர்ட்டை விரைவாக செலுத்திக் கொண்டு போனான்.எல்லோர்க்கும் பின்னாடியும் ஒரு போர்ட் வந்தது.

      நீந்திக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் அவனை இறக்கி விட்டதால் அவனும் குற்றமில்லாது நீந்தினான்.உண்மையாக நீச்சலைக் கற்றுக் கொண்டது அங்கே தான்.அப்படி கரையை தொட்டிருந்தாலும் முறையான நீச்சலில் நீந்தியிருக்கிறான்.

      ரஞ்சண்ணை அவனை சாதனைக்காரனாக பார்த்து பாராட்டியது,கதிரண்ணையின் பிள்ளைகள் பேசியது எல்லாம் அவனால் மறக்க முடியாதவை.அவர்கள் சகோதரனாக ஏற்றுக் கொள்ளுறது நடந்ததும் அப்ப தான்.இன்று வரையிலும் அதே சகோதர பாசத்துடனே பிழங்கிறார்கள்.அவர்கள் மனதில் சகோதரனாக வீற்றிருக்கிறான்.

      அது நடந்து சில காலங்களுக்குப் பிறகு  ஆயுதம் தாங்கிய சிங்களவர்கள் மரதன் ஓடுற இடங்களில் எல்லாம் முகாம்களை அமைத்து தடைப்படுத்தி விட்டார்கள்.எல்லாமுமே அறவே நின்று போயின.சமூக அக்கறையுள்ள பெடியள் ஜனநாயகமுறைகள் நிலவி இருக்குமானால் சிறிலங்காவை உலகில் ஒரு படி உயர வைத்திருப்பார்கள்.அவர்கள் இரண்டு தடவைகள் சிங்கள இளைஞர்களையே பெருமளவில் கொன்று கடலில் எறிந்த முட்டாள்கள். தமிழ் இளைஞர்களையும் பெருமளவில் அழித்திருக்கிறார்கள். இனத்துவேசத்தால் தமிழ் மக்களையும் யூத மக்களை கொன்றொழித்தது போல கொன்றிருக்கிறார்கள். அந்த பாவச் செயலுக்கு வலிகளை சுமந்த சிங்கள இயக்கமும் ஆதரவு காட்டியது தான் மனதை வலிக்கச் செய்கிறது.

       சிங்கள இனவாதிகளின் கலவரங்களில் அவர்கள் பங்கு பற்றவில்லை என்ற மரியாதையை அந்த பிரளழல் அழித்து விட்டிருக்கிறது. சிங்கள தேசியம் தொடர்ந்தும் முட்டாள் தனமாகவே இயங்க வல்லது. அதிலே சந்தேகம் இல்லை.

      இந்தியாவைப் போல வடக்கு,கிழக்கு மாவட்டங்களை இணைத்து,அதற்கு ‘தமிழீழ மாவட்டம்’ என‌ அழைத்து சமஸ்டி ஆட்சிமுறையை கையளிக்கிற புத்திசாலித் தனம் இவர்களிடம் இல்லை. இந்தியா ‘தமிழ்நாடு’பெயருக்கு அனுமதி அளித்து புத்திசாலித் தனத்தை  சிறிது காட்டி இருக்கிறது.

       இங்கே தமிழர்களின் கோபம் ஆறப் போவதில்லை. பீற்றர் கெனமன் கூறியது போல தான், இப்பவும் வக்கிரமம் பிடித்த இனவாதம் இரண்டு நாடுகள் என்ற நிலைக்கே கொண்டு போய் விடப் போகிறது.

      அந்த சகோதரங்களின் குட்டிகளாகப் பார்த்த பிள்ளைகள் எல்லாரும் கிடுகிடுவென வளர்ந்து ஆளைத் தெரியாதவர்களாக இருந்தார்கள்.இந்த நாட்டுச் சத்து அப்படி! ஒவ்வொருத்தராக  அவனிடம் வலிய வந்து கதைத்த போது ‘அட இவர்களா?’என ஆச்சரியமாக இருந்தது. ஒரு மணி நேரம் இருந்து விட்டு கடைசியாய் ஒரு தடவை கதிரண்ணையும் பார்த்து விட்டு அவர்களிடமிருந்து விடை பெற்றான்.

       அவருடைய சாவோட கலந்த நினைவுகள் ஞாபகம் வருகிற போது அவனுக்கு மற்றவைகளும்  ஞாபகம் வரத் தவறாது.

balamuraly@sympatico.ca