சிற்றிதழ்கள் பற்றிய புரிதலும் கனடியத் தமிழ்ச் சிற்றிதழ்கள் பற்றிய அறிதலும்!

சிற்றிதழ்கள் பற்றிய புரிதலும் கனடியத் தமிழ்ச் சிற்றிதழ்கள் பற்றிய அறிதலும்! கனடியத் தமிழ்ச் சிற்றிதழ்கள் பற்றிய எனது பார்வையைப்பகிர்ந்துகொள்வதற்கு முன் சிற்றிதழ்கள் என்றால் எவை? என்பது பற்றிச் சிறிது பார்ப்போம். சிற்றிதழ் என்பதற்கு இரு அர்த்தங்களைக் கூறலாம். சிறிய இதழ் என்னுமொரு கருத்தும் உண்டு. இவ்வடிப்படையில்தான் பலர் சிற்றிதழ்களை, சிறுசஞ்சிகைகள் என்று அழைக்கின்றார்கள். சிற்றிதழ் என்றால் சிறந்த இதழ் என்றும் அர்த்தம்கொண்டு அதனை நோக்குவோர் சிலருமுண்டு. உதாரணத்துக்கு “சிற்றிதழ் என்றாலே சிறந்த இதழ் என்றுதான் அர்த்தம். இதைத்தான் தற்போது சீரிதழ் என்றும் சொல்லி வருகிறார்கள். ” என்று விக்கிபீடியா சிற்றிதழ்கள் பற்றிக் கூறும். ஆனால் என்னைப்பொறுத்தவரையில் சிற்றிலக்கியம், சிற்றிதழ், சிற்றன்னை என்பவற்றில் சிறிய எனும் அர்த்தத்திலேயே இச்சொற்கள் பாவிக்கப்படுகின்றன. சிறந்த இதழ் என்றால் சிறப்பிதழ் . சிற்றிதழ் அல்ல. சிறு சஞ்சிகை என்று கூறும்போது அது சஞ்சிகையின் உள்ளடக்கத்தின் தரத்தைக் கொச்சைப்படுத்தி விடுவதாக எதற்காகக் கருத வேண்டும்? சிறு சஞ்சிகை சிறந்த சஞ்சிகையாக இருப்பதில் என்ன தடை இருக்க முடியும்? சிறு சஞ்சிகை என்றாலும் அதன் உள்ளடக்கத்தைப்பொறுத்தவரையில் அது ஒரு பேரிதழ்.

சிற்றிதழ் அல்லது சிறு சஞ்சிகை என்றால் என்ன? அது ஏன் உருவாகின்றது? என்பது பற்றிச் சிறிது பார்ப்போம்./

வெகுசன இதழ்கள் , வணிக இதழ்கள் வருமானத்தைக் குறி வைத்து வெளியாகும் இதழ்கள். மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு (குறிப்பாக இனம் , மதம், மொழி மற்றும் பால்) , மக்கள் மத்தியில் புகழடைவதுடன , அதிக வருமானத்தையும் பெறும் நோக்குடன் அவை செயற்படுகின்றன; வெளிவருகின்றன. இந்நிலையில் வணிக இதழ்களில் தீவிர , காத்திரமான இலக்கியப்படைப்புகளுக்கு இடமில்லை. இவ்விதமான சூழலில்தான் சிற்றிதழொன்று உருவாகின்றது. காத்திரமான , தீவிரமான கலை, இலக்கிய, அரசியற் கோட்பாடுகளை உள்ளடக்கிய, சார்ந்த படைப்புகளைத்தாங்கிப் பல்வகைச் சிற்றிதழ்கள் வெளியாகின்றன. சிற்றிதழ்கள் பொருளீட்டி, இலாபம் சம்பாதிப்பதை மையமாக வைத்து உருவாவதில்லை. ஆர்வமுள்ளவர்களில் சிலர் ஒன்றிணைந்து வெளியிடும் இதழாக, அல்லது தனிப்பட்ட  ஒருவர் வெளியிடும் இதழாக இருப்பதால் ஒரு சிற்றிதழானது அது வெளியாகும் காலத்திலிருந்து அதன் முடிவு வரை பொருளியல்ரீதியில் போராடவே வேண்டியிருக்கின்றது. வாசகர்களை, புரவலர்களை நம்பியே, நாடியே அது இயங்க வேண்டிய சூழலும், தேவையுமுள்ளதால்தான் பெரும்பாலானவை ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்பு மூச்சடங்கிப்போகின்றன. அவ்விதம் அவை இயங்காது போயினும் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் வரலாற்றில் நிலைத்து நின்று விடுகின்றன. அவற்றின் ஆரோக்கியமான பங்களிப்புகள் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரப்படுகின்றன. கலை, இலக்கிய வளர்ச்சியில் அவை படிக்கட்டுகளாக அமைந்து விடுகின்றன. உதாரணத்துக்கு மணிக்கொடி, சி.சு.செல்லப்பாவின் எழுத்து, இலங்கையில் வெளியான மறுமலர்ச்சி, அலைகள், தீர்த்தக்கரை,  ஜோர்ஜ் இ.குருஷேவின் தாயகம் (கனடா) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இத்தருணத்தில் சிற்றிதழ்களின் தோற்றம் பற்றி எழுத்தாளர் தேவகாந்தன் ‘கனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து’  தமிழர் தகவல், 27வது ஆண்டு மலர்க் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது”

“ஒரு பொதுநீரோட்டத்தோடு இணையமுடியாத தருணத்திலேயே ஒரு சிற்றிதழ் தோன்றுகிறது. அது ஒரு கலகத்தின் குரலாகக் கருதப்படுகிறது. அது கருத்துநிலை சார்ந்ததாகவே பெரும்பாலும் உருக்கொள்கிறது. ஆரம்பிப்பவரது அல்லது ஆரம்பிக்கும் குழுவினது கருத்துநிலைகளதும், புதிய வகையினங்களினதும், இலக்கியப் பரீட்சார்த்தத்திற்குமான வெளியில் அதன் தோற்ற நியாயம் இருப்பதாக தமிழகத்து விமர்சகரும், படைப்பாளியுமான க.நா.சுப்பிரமணியன் கூறுவது மிகச் சரியானதேயானாலும், தமிழக நிலைமைகளோடு புலம்பெயர் சமூக நிலைமைகளை சமமாக ஒப்பிட்டுவிடக் கூடாதென்ற அவதானமும் எங்களுக்கு வேண்டும். “

இக்கட்டுரையின் தலைப்பு ‘கனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து’. ஆனால் கட்டுரையில் கனடாவில் வெளியான பத்திரிகைகளையும் உள்ளடக்கியுள்ளார். கனடாவில் வெளியான சஞ்சிகைகளை மட்டும் கவனத்திலெடுத்து, அவை பற்றிய அதிக விபரங்களையும் உள்ளடக்கியிருந்தால் சிறந்ததொரு ஆய்வு அல்லது திறனாய்வுக் கட்டுரையாக வந்திருக்கும்.

அடுத்து சிற்றிதழ்களென்றால் அவை பற்றி எழுதும் பலரும் விடும் முக்கியமான தவறு என்னவென்றால் அச்சுருவில் வெளியாகும் சஞ்சிகைகளை மட்டுமே அவர்கள் அனைவரும் கருத்தில் கொள்கின்றார்கள். ஆனால் என்னைப்பொறுத்தவரையில் சிற்றிதழ்கள் பற்றி ஆய்வுகள் அல்லது திறனாய்வுகளைச் செய்பவர்கள் பின்வரும் நோக்கில் அவற்றைச் செய்ய வேண்டும்.

1. கையெழுத்துச்சஞ்சிகைகள்
2. இணையச்சிற்றிதழ்கள்.
3. அச்சுருவில் வெளியாகும் சஞ்சிகைகள்

கையெழுத்துச் சஞ்சிகைகள்:
புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலிருந்து ஆரம்பத்தில் கையெழுத்துச் சஞ்சிகைகள் பல வெளியாகியுள்ளன. அவை பற்றிப்போதிய ஆய்வுகள் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில் அவற்றைச் சிற்றிதழ்கள் பிரிவினுள் உள்ளடக்கியும் யாரும் விரிவாக ஆய்வுகள் செய்ததாகத் தெரியவில்லை. இது பற்றி எழுத்தாளர் தேவகாந்தனுடன் உரையாடுகையில் அவருக்கு அவற்றைச் சிற்றிதழ்கள் பிரிவினுள் உள்ளடக்கலாம் என்பதில் உடன்பாடில்லை என்பதை உணர முடிந்தது. அவை ஆர்வகோளாறுகள் என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் அதை என்னால் ஏற்க முடியாது. அப்படியென்றால் அச்சுருவில் வெளியாகும் சிற்றிதழ்கள் கூட சிலரின் ஆர்வக்கோளறுதான் என்று கொள்ள வேண்டிவரும். இங்கு தமிழ் விக்கிபீடியாவிலுள்ள ‘இணையச்சிற்றிதழ்கள்’ கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைக் குறிப்பிடுவது பொருத்தமானதென்பதால் குறிப்பிடுகின்றேன்:

“குறுகிய வட்டத்துக்குள் குறைவான வாசகர்களைக் கொண்டு கையெழுத்துப் பிரதியாகவோ, குறைந்த அளவிலான அச்சுப்பிரதியாகவோ அந்த சிற்றிதழ் வெளிக்கொண்டு வருபவரது கருத்துக்களையும், அவருடைய கருத்துக்களைச் சார்ந்துள்ள கருத்துக்களையும் அதிகமாகக் கொண்டு வெளியாகி வருவது என்கிற ஒரு வரையறைக்குள்தான் இந்த சிற்றிதழ்கள் இருக்கின்றன. இதனால் இந்த சிற்றிதழ்கள் அச்சிலும், படைப்பிலும் தரம் சற்று குறைவாகத்தான் இருக்கின்றன என்கிற கருத்து பரவலாக இருக்கிறது”

இங்கு கையெழுத்துச் சஞ்சிகைகளையும் சிற்றிதற் பிரிவினுள் உள்ளடக்கியுள்ளார்கள். அதுவே சரியான நிலைப்பாடாக எனக்கும் தோன்றுகின்றது.

இணையச் சிற்றிதழ்கள்:
அடுத்த இணைய இதழ்களைப்பலரும் சிற்றிதழ்கள் பற்றிக் குறிப்பிடுகையில் கவனத்திலெடுக்காமல் வேகமாகச் சென்று விடுவார்கள். அதுவும் தவறு. இற்றைய சூழலில் இணையச்சிற்றிதழ்கள் மிகவும் முக்கியமானவை. அவற்றையும் சிற்றிதற் பிரிவினுள் உள்ளடக்க வேண்டும். மேற்படி தமிழ் விக்கிபீடியாவின் ‘இணையச் சிற்றிதழ்கள்’ கட்டுரையில் இணையச்சிற்றிதழ்கள் பற்றிய குறிப்புகளை இங்கு தருகின்றேன்:

“அச்சில் வெளிவரும் தமிழ் சிற்றிதழ்களைப் போலவே இணையத்தில் வெளிவரும் பல தமிழ் இணைய இதழ்களும் உள்ளது. குறிப்பிட்ட எல்லைக்குள் குறைவான வாசகர்களைச் சென்றடையும் சிற்றிதழ்களைப்போல் இணைய இதழ்களுக்கான இணைய எல்லை விரிவாக இருந்தாலும் இணைய இதழ்களைப் படிக்க இணையம் பயன்படுத்தக்கூடிய திறன் இன்றியமையா தேவையாக உள்ளன. மேலும் இணையத்தைப் பயன்படுத்தும் பலருக்கும் தமிழில் இலக்கிய ஆர்வம் குறைவாக இருக்கிறது. இதனால் தமிழ் இணைய இதழ்களுக்கான வாசகர்கள் எல்லை அகலமானதாக இருக்கிற நிலையிலும் வாசகர்களது எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது..”

“அதிக வாசகர்களைக் கொண்டு அச்சுப் பிரதியாக வெளியாகும் பல நாளிதழ்கள், வார மற்றும் மாத இதழ்களில் பல இணைய இதழ்களாகவும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவை அச்சுப் பிரதியில் உள்ள படைப்புகளை அப்படியே இணையத்தில் வெளியிட்டு வருவதால் இவற்றை இணையச் சிற்றிதழ்களின் கீழ் கொண்டு வர இயலாது”

“இது போல் வணிக நோக்கத்தில் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் செயல்பட்டு வரும் சில இணைய இதழ்கள் தமிழ் பதிவையும் கொண்டு இருக்கின்றன. இந்த இணைய இதழ்களின் தமிழ் வழியிலான வாசகர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும் மொத்தத்தில் அனைத்து மொழிகளின் பயன்பாட்டில் அதிக வாசகர்களைக் கொண்டிருக்கும் என்பதால் அவற்றையும் இணையச் சிற்றிதழ்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியாது.”

“இணையத்தில் மட்டுமே என வெளியாகும் அனைத்துத் தமிழ் இணைய இதழ்களையும், தமிழில் வெளியாகும் வலைப்பூக்களையும் கூட தமிழ் இணையச் சிற்றிதழ்கள் என்கிற ஒரு வரையரைக்குள் கொண்டு வரலாம்.”

ஆனால் இங்கு குறிப்பிட்டுள்ளவாறு வலைப்பூக்களை என்னால் இணையச்சிற்றிதற் பிரிவுக்குள் கொண்டுவரமுடியாது. அப்படிக் கொண்டுவருவதானால் அவ்வலைப்பூக்கள் ஏனைய எழுத்தாளர்களின் படைப்புகளையும் , விவாதங்களையும், பல்வகைப்பட்ட தீவிர இலக்கியக் கட்டுரைகளையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். அவ்விதம் வெளியாகும் வலைப்பூக்களை மட்டும் அவ்விதம் குறிப்பிடலாம்.

‘தமிழ் இணைய இதழ்கள்’ என்னும் தலைப்பிலான தமிழ் விக்கிபீடியாக் கட்டுரையில் தமிழில் வெளியாகும் முக்கிய இணைய இதழ்களைப்பற்றி இவ்விதம் கூறப்பட்டுள்ளது:

“தமிழிலே பிரபலமான இணைய இதழ்களாகவும் அதிக வாசகர்களைக் கொண்டவையாகவும் திண்ணை, பதிவுகள், வார்ப்பு, நிலாச்சாரல், தமிழோவியம், வரலாறு.கொம், முத்துக்கமலம், அம்பலம், திசைகள், ஊடறு, ஆறாம்திணை, மரத்தடி, வெப். உலகம், தமிழ் சிபி, தோழி.கொம் ஆகியன உள்ளன. புகலிடத் தமிழர்களால் கொண்டு வரப்படும் இணைய இதழ்களாக பதிவுகள், அப்பால் தமிழ், ஊடறு, லும்பினி, நிலாச்சாரல், தமிழோவியம், தமிழமுதம், நெய்தல், வார்ப்பு, புகலி, ஈழம்.நெட், தூ, இனி ஆகியவை முக்கியமானவை. “

இவற்றில் சில தற்போது வெளிவராமலுமிருக்கக் கூடும்.

இனிக் கனடாச்சிறு சஞ்சிகைகளைப்பற்றி மேற்படி சிற்றிதழ்கள் பற்றிய புரிதலுடன் சுருக்கமாக நோக்குவோம்.

கையெழுத்துச் சஞ்சிகைகள்:
இவ்வகையில் மொன்ரியலில் 1983-1985 காலகட்டத்தில் கையெழுத்துச் சஞ்சிகைகள் வெளிவந்ததாக அறிகின்றேன். அவற்றையும் கனடாவில் வெளியான சிற்றிதழ்கள் பிரிவினுள் அடக்க வேண்டும்.  காலம் செல்வம் அவர்களும் மொன்றியாலில் எண்பதுகளில் ‘பார்வை’ என்னும் கையெழுத்துச் சஞ்சிகையினை நடாத்தியதாகத் தெரிய வருகின்றது. மேலதிகத்தகவல்கள் தெரியவில்லை. இன்னுமொரு கையெழுத்துச் சஞ்சிகையும் மொன்றியாலில் அக்காலகட்டத்தில் (தமிழ் எழில் என்ற பெயரிலென்று கருதுகின்றேன்) வெளவந்தததாக ஞாபகம். மேலதிகத்தகவல்கள் அறிந்தவர்கள் அறியத்தரவும்.இது தவிர தமிழீழ மக்கள்  விடுதலைக்கழகத்தின் கனடாக்கிளை வெளியிட்ட ‘புரட்சிப்பாதை’ சஞ்சிகையும் கையெழுத்துச் சஞ்சிகையே.  அதில் எழுத்தாளர்கள் பலரின் கட்டுரைகள், கவிதைகள் வெளியாகின. எனது ‘மண்ணின் குரல்’ நாவலும் அதிலேயே தொடராக (இறுதி அத்தியாயம் தவிர)  வெளியானது. மண்ணின் குரல் நாவலே முதன் முதலில் நூலுருப்பெற்ற கனடாவின் முதற் தமிழ் நாவல். அடுத்து ‘குரல்’ கையெழுத்துச் சஞ்சிகை. வ.ந.கிரிதரனைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளியான கையெழுத்துச் சஞ்சிகை.

‘குரல்’ கையெழுத்துச் சஞ்சிகை பற்றிய வ.ந.கிரிதரனின்  ‘கனடாத் தமிழ் இலக்கியமும் ‘குரல்’ கையெழுத்துச் சஞ்சிகையின் பங்களிப்பும்’ என்னும் கட்டுரை வ.ந.கிரிதரன் பக்கம் என்னும் அவரது வலைப்பதிவிலுள்ளது. பதிவுகள் இணைய இதழிலும் அவரது வ.ந.கிரிதரன் பக்கம் என்னும் பத்தியிலுள்ளது. அதில் குரல் ‘சஞ்சிகை’ பற்றிய விரிவான தகவல்களுள்ளன. அதற்கான இணைய இணைப்பு: https://vngiritharan230.blogspot.com/2018/02/blog-post_53.html

அதில் குரல் பற்றிப்பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: “ஆனால் இதுவரையில் எங்கும் பதிவு செய்யப்படாத ஒரு சஞ்சிகை பற்றிய பதிவு இது. அது ஒரு கையெழுத்துச் சஞ்சிகை. செப்டெம்பர் 1987 தொடக்கம் ஜனவரி 1989 வரையில் 11 இதழ்கள் வெளியான சஞ்சிகை. (செப்டெம்பர் 1987 தொடக்கம்  ஆகஸ்ட் 1988 வரை 10 இதழ்களும், பின்னர் ஜனவரி 1989 இல் இன்னுமொரு இதழும் மொத்தம் 11) வெளியான ‘குரல்’ கையெழுத்துச் சஞ்சிகையினை நான் ஆசிரியராக இருந்து வெளியிட்டேன். ‘குரல்’ கையெழுத்துச் சஞ்சிகையின் ஒவ்வொரு இதழும் 100 பிரதிகள் எடுக்கப்பட்டு, ‘டொராண்டோ’விலுள்ள தமிழ் வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் விநியோகிக்கப்பட்டன. வெளியான 11 இதழ்களில் இதழ் 9, இதழ் 10 ஆகியன கூட்டு முயற்சியாக வெளிவந்தன. ‘குரல்’ கையெழுத்துச் சஞ்சிகையினை வாசித்த, எழுத்து மற்றும் வாசிப்பு ஆர்வம் கொண்ட இளைஞர்கள் சிலர் (சுகுமார், குலம், ஜெயராஜ், கீதானந்த சிவம்) தாங்களும் சேர்ந்து ‘குரல்’ சஞ்சிகையினை வெளியிட ஒத்துழைப்பதாகக் கூறி அவ்விரு இதழ்களையும் வெளிக்கொணர ஒத்துழைப்பு நல்கினர். அந்த இரு இதழ்களும் வடிவமைப்பில் ஏனைய இதழ்களை விடச் சிறிது சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவர்களின் ஒத்துழைப்பே. ‘குரல்’ கையெழுத்துச்சஞ்சிகையின்  இறுதி இதழ் ஜனவரி 1989 வெளியான இதழ் 11. ‘குரல்’ கையெழுத்துச் சஞ்சிகை , கையெழுத்துச் சஞ்சிகை என்பதால், இலக்கிய ஆர்வம் காரணமாக வெளியிடப்பட்ட சஞ்சிகை.”

கனடாவில் வெளியான இணையச்சிற்றிதழ்கள்:
முக்கியமான இணையச்சிற்றிதழ்களாக எழுத்தாளர் பொன். குலேந்திரனை ஆசிரியராகக்கொண்டு வெளியான ‘குவியம்’ மற்றும் எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் ‘பதிவுகள்’ இணைய இதழ். ‘பதிவுகள்’ மார்ச் 2000இலிருந்து இன்று வரை தொடர்ந்து வெளியாகின்றது. பதிவுகள் ஆய்வு, நாவல். சிறுகதை, இலக்கியம், கவிதை, சினிமா, விளையாட்டு, சமூகம் எனப்பல்வேறு பிரிவுகளுடனும், எழுத்தாளர்கள் முருகபூபதி, கே.,எஸ்.சிவகுமாரனுட்படப் பலரின் பத்திகளுடனும் வெளியாகும் இணைய இதழ். பதிவுகள் இணைய இதழின் ஆலோசர்களாக பதிவுகள்’ பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா), பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு), பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்) மற்றும் எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா) ஆகியோர் உள்ளனர். ஆலோசகராக விளங்கிய எழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்) தற்போது அமரராகி விட்டார். பதிவுகள் இணைய இதழை http://www.pathivukal.com / http://www.pathivugal.com / http://www.geotamil.com ஆகிய இணைய இணைப்புகளில் வாசிக்கலாம்.

குவியம் இணைய இதழ் தற்போது வெளிவருவதில்லை. குவியம் இணைய இதழின் அச்சுப்பதிப்பாகக் குவியம் சஞ்சிகையும் வெளியாகியுள்ளது.

அண்மைக்காலமாக எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளைத்தாங்கி வெளிவரும் இன்னுமோர் இணையச்சிற்றிதழாக எழுத்தாளர் அகிலை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் தமிழ் ஆதர்ஸ்.காம் (http://www.tamilauthors.com/) என்னுமிதழைக் குறிப்பிடலாம்.

இவை தவிர மேலும் பல இணையச்சிற்றிதழ்கள் கனடாவிலிருந்து வெளியாகலாம். ஆனால் அவை பற்றிய போதிய தகவல்கள்  திரட்டப்பட வேண்டும். முறையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

கனடாவில் வெளியான / வெளியாகும்  அச்சுருவிலான சிற்றிதழ்கள்.

இதுவரை காலம் வெளியான மிகவும் முக்கியமான , கனடாவில் வெளியான தமிழ்ச்சிற்றிதழ்களாகப் பின்வரும் சிற்றிதழ்களைக் குறிப்பிடுவேன்.

தாயகம் (கனடா) – ஆசிரியர் ஜோர்ஜ் இ.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான சிற்றிதழ் தாயகம். ஆரம்பத்தில் பத்திரிகையாக வெளிவந்து பின்னர் சஞ்சிகையாக உருமாறி வெளியானது. தாயகம் சஞ்சிகை பற்றிய கூர் 2018 கட்டுரையில் எழுத்தாளர் வ.ந.கிரிதரன் பின்வருமாறு கூறுவார்: :’தாயகம்’ பத்திரிகையின் ஆரம்பம் பற்றிக் கேட்டபோது அதன் ஆசிரியர் மிக இலகுவாக, என்றுமே மனத்தில் நிற்கும் வகையில் பதிலொன்றினைத் தந்தார். ‘தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவர் அமிர்தலிங்கம் படுகொலைச் செய்யப்பட்டதற்கு அடுத்து வந்த வெள்ளிக்கிழமையே ‘தாயகம்’ முதலில் பத்திரிகையாக வெளிவந்தது’ என்றார் அவர். ‘தாயகம்’ வெளிவந்த காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளிவந்தது. அந்த வகையில் தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் கொலைசெய்யப்பட்ட நாள் ஜூலை 13, 1989. வியாழக்கிழமை. ஆக, ‘தாயகம்’ பத்திரிகையின் முதல் இதழ் ஜூலை 14, 1989 வெள்ளிக்கிழமை வெளியானதாகத் தீர்மானிக்கலாம். இவ்விதம பத்திரிகை வடிவில் ஆரம்பிக்கப்பட்ட தாயகம் தன் வடிவமைப்பைச் சஞ்சிகை வடிவுக்கு மாற்றிய நாள் ஜுலை 30, 1993. இதன் பின்னர் மேலும் இரு வருடங்கள் தாயகம் சஞ்சிகை வடிவில் வெளியானதுடன் தன் இருப்பை நிறுத்திக்கொண்டதாக அறியப்படுகின்றது. இது பற்றிக் கருத்துக்கூறுகையில் ஆசிரியர் ஜோர்ஜ் இ.குருச்ஷேவ் தன்னிடமுள்ள தாயகம் சஞ்சிகையில் இறுதி இதழ் வெளியான திகதி  மே 12, 1995 என்பதன் அடிப்படையில்  தாயகம் பத்திரிகையாக ஜுலை 14, 1989 தனது பயணத்தை ஆரம்பித்து, ஜூலை 30, 1993 தனது வடிவமைப்பைச் சஞ்சிகை வடிவுக்கு மாற்றி, மேலுமிரண்டு வருடங்கள் இயங்கி மே 12, 1995 தனது பயணத்தை நிறுத்திக்கொண்டது  என்னும் முடிவுக்கு வரலாம். தாயகம் சஞ்சிகையின் முடிவு திகதியில் மாற்றம் ஏற்படினும், அது தன் பயணத்தை 1995இல் முடித்துக்கொண்டது என்பதிலெந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. சுமார் ஆறு வருடங்கள் வரையில் இவ்விதமொரு பத்திரிகை, சஞ்சிகை வெளிவந்திருப்பதே கனடியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய சாதனைதான்.” தாயகம் பற்றிய விரிவான தகவல்களைக் கூர் 2018 இதழில் வாசியுங்கள்.

தேடல் (கனடா) – தமிழர் வகைதுறை வள நிலையத்தாரால் வெளியிடப்பட்ட தேடல் சஞ்சிகை கனடாவில் வெளியான முக்கியமான இன்னுமொரு சிற்றிதழ்.  ‘கனடாத் தமிழ் இலக்கியம் – ‘தேடக’த்தின் ‘தேடல்’ சஞ்சிகை!’ என்னும் கட்டுரையில் வ.ந.கிரிதரன் பின்வருமாறு குறிப்பிடுவார்: ‘தேடல் (கனடா) சஞ்சிகை ‘தேடகம்’ என்று அறியப்பட்ட கனடாத் தமிழர் வகைதுறை வள நிலையத்தாரால் வெளியிடப்பட்ட சஞ்சிகை. கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் ‘தேடல்’ மிகவும் முக்கியமான சஞ்சிகைகளிலொன்று. பதினாறு இதழ்கள் வெளியாகியுள்ளன. இதழ் 14 என்று இரு இதழ்கள் (1994 மற்றும் 1996) வெளியாகியுள்ளன. வடிவமைப்புச் செய்தவரின் தவறாக இருக்க வேண்டும். வெளிவந்த இதழ்களில் முதலிரண்டையும் தவிர ஏனையவற்றை ‘படிப்பகம்’ இணையத்தளத்தில் ஆவணப்படுத்தி வைத்துள்ளார்கள். ‘தேடல்’ சஞ்சிகையில் கவிதைகள், மனித உரிமை சார்ந்த கட்டுரைகள் , அறிவியற் கட்டுரைகள், சினிமா பற்றிய கட்டுரைகள், நேர்காணல்கள், சிறுகதைகள், விமர்சனங்கள் எனப் பல்வகையான காத்திரமான ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. “

ழகரம் – கனடாத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் ‘ழகரம்’ சஞ்சிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு.  ஆனி 1997, ஆடி 1997, ஆவணி/புரட்டாதி 1997 , ஐப்பசி 1997 & ழகரம் 5 (அ.யேசுராசா சிறப்பு மலர், 2016) ஐந்து இதழ்களே வெளிவந்துள்ள போதிலும், தவிர்க்க முடியாத சஞ்சிகை. ‘ழகரம்’ சஞ்சிகையினை எழுத்தாளர் அ.கந்தசாமி அவர்களே வெளியிட்டு வந்ததாக நான் கருதுகின்றேன். எழுத்தாளர் அ.கந்தசாமி எழுபதுகளில் யாழ் நகரில் புகழ்பெற்ற பெளதிக ஆசிரியராக விளங்கியவர். கனடா வந்த பிறகுதான் இவரது இலக்கியப் பங்களிப்பு பற்றி அறிந்து கொண்டேன். ‘ழகரம்’ சஞ்சிகை 5 இதழ்களே வெளிவந்தாலும், கனடாத்தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளிலொன்று.

காலம் –  எழுத்தாளர் செல்வத்தை  ஆசிரியராகக் கொண்டு , 1990இலிருந்து வெளிவரும் இதழ் ‘காலம்’. இது பற்றிய முனைவர் செங்கொடியின் கருத்து வருமாறு: ‘காலம் 1990  இல் கனடாவில் இருந்து இன்றுவரை வெளியாகும் ஒரே இதழாகும்.  இவ்விதழின் ஆசிரியர் செல்வம். இச்சிற்றிதழில் தமிழகப்படைப்பாளிகளின் ஆக்கங்களே அதிகமாக வருவதால் தமிழ்நாட்டின் காலச்சுவட்டை தழுவிய் இதழாக வருவதாக விமர்சனம் உண்டு.  இக்குறையை நீக்கிப் புகலிடப் படைப்புகளையும் , ஈழத்துப்படைப்புகளையும் தாங்கி வருவதே காலம் இதழ் வளர்ச்சிக்கு உதவும்.’ ‘காலம்’ சஞ்சிகைக்குப் பல்வகை விமர்சனங்கள் இருப்பினும், கனடாத் தமிழ்  இலக்கியத்துக்கு வளம் சேர்த்த, சேர்க்கும் சஞ்சிகைகளில் ‘காலம்’ சஞ்சிகையுமொன்று என்பதில் மாற்றுக் கருத்துகளில்லை. அச்சிதழொன்றினை நடத்துவதிலுள்ள் சிரமங்கள் யாரும் அறியாததல்ல. 1990இலிருந்து இன்றுவரை காலம் என்னும் சஞ்சிகையைத் தொடர்ந்து நடத்திவருவதென்பது இலகுவான விடயமல்ல. அதற்காக விமர்சனங்களுக்கப்பால் காலம் செல்வத்தையும் , அவருடன் இணைந்தியங்குபவர்களையும் பாராட்டத்தான் வேண்டும். ‘காலம்’ இதழினை ஆரம்பத்தில் வெளியிட்டவர் எழுத்தாளர் அமரர் குமார் மூர்த்தி. காலம் சஞ்சிகையின் ஆலோசகர்களாக விளங்கியவர்கள் எழுத்தாளர்கள் என்.கே.மகாலிங்கம், கவிஞர் செழியன். செழியன் அண்மையில் அமரரானார்.

கூர் – எழுத்தாளர் தேவகாந்தனைத் ஆசிரியராகக் கொண்டு கெளசல்யா, த.அகிலன், கெளசல்யா ஆகியோரை உதவி ஆசிரியர்களாகக் கொண்டு வெளியாகும் ஆண்டிதழ். இதன் ஆசிரியர்களாக எழுத்தாளர் ரதன் ,, எஸ்.கே.விக்னேஸ்வரன் ஆகியோருள்ளனர். இதுவரை காலமும் இவ்வாண்டுக்குரிய இதழுட்பட ஐந்த இதழ்களே வெளிவந்துள்ளபோதும்  காத்திரமானதோரிதழ் ‘கூர்’. கனடியத்தமிழ்ப்படைப்பாளிகளின் ஆக்கங்களை மட்டுமே தாங்கி வெளிவரும் இதழ் என்பது கூர் இதழின் இன்னுமொரு முக்கியமான குறிப்பிடத்தக்க அம்சம். மேலும் வேறு ஊடகங்களில் எவற்றிலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே தாங்கி வெளிவரும் இதழ் என்பதும் இன்னுமோர் குறிப்பிடத்தக்க அம்சம்.

நான்காவது பரிமாணம் – எழுத்தாளர்  க.நவம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியான சிற்றிதழ். செப்டம்பர் 1991 தொடக்கம் ஏப்ரல் 1994 வரை 13 இதழ்கள் வெளியாகியுள்ளன. கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த இதழ்களிலொன்று ‘நான்காவது பரிமாணம்’.  சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்முனைகளில் தடம் பதித்த, பதிக்கும் எழுத்தாளர் க.நவத்தின் இலக்கியப்பங்களிப்புகளில் இன்னுமொன்று ‘நான்காவது பரிமாணம்’. பெருமைப்படக் கூடிய பங்களிப்பு.

பொதிகை – இளவாலை ஜெகதீசனை ஆசிரியராகக் கொண்டு வெளியான இச்சஞ்சிகை பின்னர் நிரூபா தங்கவேற்பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு வெளியாகியது.

கனடாவில் வெளிவந்த/ வெளியாகும் சிற்றிதழ்களின் பட்டியலை தமிழ் விக்கிபீடியாக் கட்டுரையொன்றில் வாசிக்கலாம். அப்பட்டியலில் காணப்படும் கனடாவில் வெளியான ஏனைய முக்கிய சிற்றிதழ்கள் பற்றிய விபரங்கள் வருமாறு:

அறிதுயில் – விக்கிபீடியாக் குறிப்பு: அறிதுயில் (சஞ்சிகை) – ‘அறிதுயில் கனடா, ரொறன்ரோவில் இருந்து நவீன தமிழ் இலக்கிய, விமர்சன முனைவுடன் வெளிவந்த ஓர் இதழ் (சஞ்சிகை) ஆகும். மொழிபெயர்ப்புக்கள், “இலக்கிய உள்வட்ட” சலசல்கள், கவிதைகள், நவீன சமூகவியல் தத்துவ அறிமுகங்களோடு இவ் இதழ் வெளிவந்தது ‘ இவ்விதழின் ஆசிரியர்களாக விளங்கியவர்கள் எழுத்தாளர் கற்சுறா மற்றும் மாமூலன்  (ரஃபேல்) ஆகியோரே. தீவிர இலக்கிய நாட்டமுள்ள இருவரின் பங்களிப்புடன் வெளியாகிய இவ்விதழ் குறுகிய காலத்தில் மூச்சடங்கியது துரதிருஷ்டமானது.

அற்றம் –  விக்கிபீடியாக் குறிப்பு: ‘அற்றம் (சஞ்சிகை) அற்றம் கனடாவிலிருந்து வெளிவரும், பெண்களை ஆசிரியர்களாகக் கொண்ட இதழாகும். இதன் முதலாவது வெளியீடு 2005ஆம் ஆண்டு மே மாதம் வெளிவந்தது’

கைநாட்டு – விக்கிபீடியாக் குறிப்பு – ‘கைநாட்டு (சஞ்சிகை) “மாற்றுக்கான களம் என்பதே எமது குறிக்கோள்” என்று கூறி ரொறன்ரோவில் இருந்து வெளிவரும் சமூக, அரசியல், இலக்கிய சஞ்சிகை கைநாட்டு ஆகும். இச்சஞ்சிகை கட்டுரை, கவிதை, சிறுகதை, நிகழ்வு குறிப்புகள் போன்ற அம்சங்களை கொண்டிருக்கின்றது.’

தமிழர் தகவல் – விக்கிபீடியாக் குறிப்பு – ‘தமிழர் தகவல் (சஞ்சிகை) – கனடாவில் ‘ஒட்டகப் பயணம்’ என்று கூறி நிலைத்து நின்று பலதரப்பட்ட நிகழ் கால தகவல்களை எளிமையாக தமிழர் தகவல் பகிர்கின்றது. குடிவரவு, கல்வி, கனடிய அரசியல், மொழிபெயர்ப்பு, அறிவுப்புக்கள், பயணக் கட்டுரைகள், நினைவு மீட்டல்கள், “கனடிய காட்சிகள்” என்று பல முக்கிய பயனுள்ள தகவல்களை பகிர்கின்றது.’

நிர்மாணம் – விக்கிபீடியாக் குறிப்பு – ‘நிர்மாணம் (சஞ்சிகை) – “எந்த விடயமுமே எதோ ஒரு பரிசோதிப்புக்கு உள்ளாகிக்கொண்டே (Check and Balance) இருக்க வேண்டும்” என்று கூறி பல்வேறு தரப்பட்ட அரசியல் அலசல் கட்டுரைகளை கொன்டு நிர்மாணம் சஞ்சிகை வெளிவந்தது. இச்சஞ்சிகை ஈழ அரசியலையே மையமாக வைத்து வெளிவருகின்றது.’

நுட்பம் – விக்கிபீடியாக் குறிப்பு – ‘நுட்பம் (சஞ்சிகை) ஆரம்ப நிலை, சிக்கலான நுட்ப அறிவியல் தகவல்களை பகிரவென கனடாவில் இருந்து 1999 இல் வெளிவந்த சஞ்சிகை நுட்பம் ஆகும். பல்வேறு துறைசார் ஆக்கங்களோடும், திறமான வடிமைப்போடும் நுட்பம் வெளிவந்தது.’

பறை – விக்கிபீடியாக் குறிப்பு – ‘பறை (சஞ்சிகை) – “எமது-நமது தமிழ் சமூகத்தின் மீது அக்கறையுடைய தமிழ் விருப்பும் பகுத்தறிவு முனைப்புமுடையவர்கள் இணைந்து பணியாற்றுவதற்கே இந்தத் தளம்” என்று முதல் இதழில் சொல்லி கனடாவில் வெளிவரும் சஞ்சிகையே பறை ஆகும். தீவிர தமிழ்த் தேசியம், பெரியாரியம், பிராமணிய எதிர்ப்பு, இறை மறுப்பு போன்ற அக்கறைகளைக் கொண்ட சஞ்சிகை.’

மண்வாசம் – விக்கிபீடியாக் குறிப்பு – ‘மண்வாசம் (சஞ்சிகை) – மண்வாசம், கனடாவில் இருந்து வெளிவரும் பல்சுவை இலக்கிய மாத இதழ் ஆகும். இவ்விதழ் சிறுகதை, சமூகத்தொடர், கவிதைகள், கட்டுரைகள் என பல படைப்புகளை தாங்கி வெளிவருகின்றது.’

ரிஒ தமிழ் (சஞ்சிகை)  – விக்கிபீடியாக் குறிப்பு – ‘ரிஒ தமிழ் (சஞ்சிகை) -ரொறன்ரோ (டொரான்ட்டோ) இளையோரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தமிழ் – ஆங்கில சஞ்சிகை ரிஒ தமிழ் (டிஓ தமிழ்) ஆகும். அழகிய வடிவமைப்போடு வெளிவருகின்றது.’

வானமே எல்லை – விக்கிபீடியாக் குறிப்பு – ‘வானமே எல்லை (இதழ்) – வனாமே எல்லை கனடாவில் வெளிவரும் தமிழ் மாத இதழ். இது சுயமுன்னேற்றத்துக்கு உதவும் வகையில் பல கட்டுரைகளை தாங்கி வருகிறது.’

பார்வை – விக்கிபீடியாக் குறிப்பு – ‘சமூகம் – மொன்றியாலில் இருந்து 1980 களில் வெளிவந்த இதழ் ‘ காலம் சஞ்சிகையின் ஆசிரியரான எழுத்தாளர் செல்வம் அருளானந்தம் மொன்றியாலில் இருந்த காலத்தில் நடாத்திய சஞ்சிகை. கையெழுத்துச் சஞ்சிகையாக இருக்க வேண்டும்.

வீணைக்கொடி – இதழ்

தமிழ் சோர்ஸ்- விக்கிபீடியாக் குறிப்பு – ‘தமிழ் சோர்ஸ் – தமிழ் சோர்ஸ் என்பது கனடாவில் வெளிவரும் தமிழ் மாத இதழ். சோர்ஸ் என்பது Source என்ற ஆங்கில சொல்லின் தமிழ் ஒலிபெயர்ப்பு ஆகும்.’

அப்பட்டியலிலுள்ள, விரிவான குறிப்புகளற்ற  ஏனைய இதழ்களின் பெயர்கள்: தமிழ் டைம் (கனடா இதழ்)     , தமிழ் பூங்கா (இதழ்) – பல்சுவை , தமிழீழ அரசு (இதழ்) – அரசியல் , தினத்தமிழ் (இதழ்) , திரை (கனடா இதழ்)- திரைப்படம் , தூறல் (கனடா இதழ்) , தென்றல் , தமிழன் (கனடா இதழ்) , ரோஜா – பல்சுவை இதழ்.

உசாத்துணை:
http://www.muthukamalam.com/essay/literature/p95.html
1. சிற்றிலக்கியம் வரையறையும் வரலாறும் – முனைவர் நா.கவிதா –
2. கனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து… – தேவகாந்தன் -http://devakanthan.blogspot.com/2018/05/blog-post.html
3. தமிழ்ச்சிற்றிதழ்கள் – விக்கிபீடியா
4. தமிழ் இணையச்சிற்றிதழ்கள் – விக்கிபீடியா https://ta.wikipedia.org/s/rgn
5. தமிழ் இணைய இதழ்கள்  https://ta.wikipedia.org/s/15w1
6. கனடியத்தமிழ் இதழ்களின் பட்டியல் (தமிழ் விக்கிபீடியா): http://www.wikiwand.com/ta/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
7. கனடாத் தமிழ் இலக்கியமும் ‘குரல்’ கையெழுத்துச் சஞ்சிகையின் பங்களிப்பும். – வ.ந.கிரிதரன் – https://vngiritharan230.blogspot.com/2018/02/blog-post_53.html
8. கனடாவில் சிற்றிதழ்களின் தேக்கநிலை  – அகில் – http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2133:2014-06-08-00-42-34&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19
9. புகலிடத்தமிழ்ச் சிற்றிதழ்கள் ஓர் அறிமுகம் – முனைவர் செங்கொடி – http://www.shanlaxjournals.in/pdf/TS/V1N3/TS_V1_N3_023.pdf
10. கனடாத் தமிழ் இலக்கியத்தில் தாயகம் – சுருக்கமான அறிமுகம் – வ.ந.கிரிதரன் –  கூர் 2018
11. வாசிப்பும், யோசிப்பும் 255: கனடாத் தமிழ் இலக்கியம் – ‘தேடக’த்தின் ‘தேடல்’ சஞ்சிகை! – வ.ந.கிரிதரன் – பதிவுகள்.காம்
12. கனடாத் தமிழ் இலக்கியம்: ‘ழகரம்’ சஞ்சிகை.  – வ.ந.கிரிதரன் – பதிவுகள்.காம்

ngiri2704@rogers.com