‘சுட’ரில் சுடர்ந்த ஓவியர்கள் சிலர்..

சுடர் இதழொன்றின் அட்டைப்படம். ஓவியர் - இந்துஎண்ணிம நூலகமான ‘நூலக’த்தில் எழுபதுகளில் சுதந்திரன் பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட ‘சுடர்’ சஞ்சிகையின் ஆடி 1975 தொடக்கம் ஜூன்/ஆடி 1983 வரைக்குமாக 32 இதழ்களைக் காண முடிந்தது. அவற்றை மேலோட்டமாகப் பார்த்தபோது வரதர், இரசிகமணி கனக செந்திநாதன், கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை , எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் தொடக்கம், அனலை இராசேந்திரம், காவலூர் ஜெகநாதன், தாமரைச்செல்வி, தமிழ்ப்பிரியா, மண்டைதீவு கலைச்செல்வி, கோப்பாய் சிவம், கே.எஸ்.ஆனந்தன், இளவாலை விஜேந்திரன், வாகரைவாணன், கே.ஆர்/டேவிட், தென்மட்டுவில் கண்ணன், மங்கை கங்காதரம் என்று மேலும் பலரின் பல்வகைப் படைப்புகளையும் காண முடிந்தது. கலாமோகனின் இலக்கியக் கட்டுரகளையும் காண முடிந்தது.

கலை, இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்த ‘சுடர்’ சஞ்சிகையும் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு மிகவும் வளம் சேர்த்த சஞ்சிகைகளிலொன்றாகக் கருதலாம். ‘சுடர்’ சஞ்சிகையில் மேலுள்ள எழுத்தாளர்களுடன் மேலும் புதிய எழுத்தாளர்கள் பலர் பங்களித்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது. ‘சுடர்’ சஞ்சிகை மரபுக்கவிதை, புதுக்கவிதைக்கென பக்கங்களை ஒதுக்கியிருந்தது. புதுக்கவிதைப் பக்கத்தில் பல இளையவர்கள் எழுதியிருந்தனர். பக்கங்களில் ஆங்காங்கே நறுக்குக் கவிதைகளையும் கவிஞர்கள் பலர் எழுதியிருந்தனர். குறிப்பாகக் கவிஞர் காசி ஆனந்தனின் ‘கணைக் கவிதை’களைக் குறிப்பிடலாம். இவை தவிர ஆரத்தியின் ‘இலக்கியச் சோலை’ பத்தியில் எழுத்தாளர்கள் பலரைப்பற்றிய அறிமுகக் குறிப்புகள், வாழ்த்துக்குறிப்புகள் நிறைந்திருந்தன. வடகோவை வரதராஜன், தாமரைச்செல்வி, அ.செ.முருகானந்தன், சாரதா சண்முகநாதன், தமிழ்ப்பிரியா என்று பலரைப்பற்றிய குறிப்புகள் காணப்பட்டன. மேலும் இளம் எழுத்தாளர்கள் பலரை அறிமுகப்படுத்தும் பகுதியையும் சுடர் உள்ளடக்கியிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

சுடரில் கலைஞர் கருணாநிதியின் கேள்வி – பதில் பகுதியும் இடம் பெற்றிருந்தது. எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டம் பற்றிய சுவையான கட்டுரையொன்றினையும் (மீள்பிரசுரம்) காண முடிந்தது. மேற்படி ‘சுடர்’ சஞ்சிகையின் இதழ்கள் வெளியான சுடர்கள் இதழ்கள் அனைத்தையும் ஒரு முறை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்தின.

சுடர் சஞ்சிகையின் முக்கிய பங்களிப்பாக நான் கருதுவது இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்ததைத்தான். சுடரில் எழுதிய இளையவர்கள் தொடர்ந்தும் எழுதிப் பிரகாசித்தார்கள்; பிரகாசிக்கின்றார்கள். இவ்விதமாகப் பழைய சஞ்சிகைகள், பத்திரிகைகள் மீதான தேடல்களின்போது நான் அவற்றில் பங்களித்த ஓவியர்களின் படைப்புகளையும் , ஓவியர்கள் பற்றிய விபரங்களையும் அறிய அவாக் கொள்வேன். ஆனால் பெரும்பாலான பத்திரிகை, சஞ்சிகைகளில் பங்களிப்பு செய்யும் ஓவியர்கள் பற்றிய தகவல்களை அவை வெளியிடுவதில்லை. ஓவியங்களில் காணப்படும் கையெழுத்துகளைக் கொண்டே அறிய வேண்டும். மூர்த்தி, ரமணி போன்ற ஓவியர்கள் சிலர் அவர்கள் யார் என்பதை அறியும் வகையில் தம் பெயரை அவர்களது ஓவியங்களில் பதிவு செய்திருப்பார்கள். இன்னும் சிலரோ முதலெழுத்துகளை யாருமே புரிந்துகொள்ளாத வகையில் பதிவு செய்திருப்பார்கள். சிலர் தமது ஓவியஙகளில் சிலவற்றில் தம் பெயர்களைப் பதிவு செய்வதேயில்லை. அவ்விதமாக நூலகத்தில் கிடைத்த சுடர் சஞ்சிகைகளில் காணப்பட்ட ஓவியங்களில் என் கவனத்தை ஈர்த்தவர்களாக வீ.கே, இந்து, குமாரவேல் (இவரே குமா என்றும் ஓவியங்கள் வரைந்திருக்க வேண்டும்), பொன்னேரி, சதீஷ், தாமரைச்செல்வி ஆகியோரைக் குறிப்பிடுவேன். இவர்களின் ஓவியங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்துவதே இப்பதிவின் நோக்கம். ‘சுடர்’ இதழ்களை ‘நூலகம்’ தளத்தில் வாசிக்க:

http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D

1. ‘சுட’ரில் சுடர்ந்த ஓவியர்கள் : ஓவியர் இந்து

ஓவியர் இந்துவைபற்றி அண்மையில்தான் அறிந்திருந்தேன், எழுத்தாளர் தாமரைச்செல்வி அண்மையில் பயனுள்ள பல தகவல்களைப் பகிர்ந்திருந்தார். ஆவணச்சிறப்புள்ள அவற்றை இங்கு பதிவு செய்கின்றேன். அவை மூலமே அவரது தங்கையின் ஓவியங்கள் பற்றி, அவரது ஓவியப்பங்களிப்பு பற்றி அறிந்தேன். அதில் அவர் சுடர் சஞ்சிகையில் ஓவியங்கள் வரைந்த பொன்னரி என்பவர் சுடர் சஞ்சிகையின் ஆசிரியராக எண்பதுகளிலிருந்த அரி என்னும் புனைபெயரில் கேள்வி – பதில் அளித்த இதழாசிரியர் கனகசிங்கம் என்பதையும் தெரியப்படுத்தியிருந்தார். இப்போது அவர் சிட்னியில் இருப்பதாகவும் எழுதியிருந்தார். அக்காலகட்டத்தில் ‘புயல் வேக எழுத்தாளர்’ என்னும் பெயரெடுத்த தமிழ்ப்பிரியா தற்போது பிரான்சில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ‘சுடர்’ சஞ்சிகையில் தமிழ்ப்பிரியா சிறுகதைகள், தொடர்கதை எழுதியுள்ளார். எழுத்தாளர் குறமகளுடன் குறமகளின் இல்லத்தில் நேர்காணலொன்றும் எடுத்திருக்கின்றார்.

தாமரைச்செல்வி அவர்கள் தனது ஓவியப்பங்களிப்பு பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார்: “நான் ஈழநாடு, சுடர் வீரகேசரி, தினகரன் போன்றவற்றில் என் கதைகள் சிலவற்றுக்கு ஓவியம் வரைந்திருக்கிறேன். வீரகேசரி ,தினகரனில் ஒன்றிரண்டு கதைகளுக்குத்தான். தமிழ்நாடு குங்குமம் அக்கரைச்சிறப்பிதழில் முத்துகுணரட்ணத்தின் சிறுகதைக்கு நான்ஓவியம் வரைந்தேன். அதே இதழில் ஒரு சித்திரக்கதையும் எழுதினேன். சித்ரா என்று 80களில் கொழும்பில் இருந்து ஒரு சித்திரக்கதை கொண்ட சஞ்சிகை வந்தது. அதற்கும் சித்திரக்கதைகள் எழுதியிருக்கிறேன்.இப்போ நீண்ட இடைவெளியின் பின் ஜீவநதி க்கு வரைந்தேன்.. என் தங்கை இந்து சுடரில் நிறைய சிறுகதைகளுக்கு ஓவியம் வரைந்திருக்கிறார்.சில அட்டைப்படங்கள் உட்பட.அவ இப்ப கனடாவில் இருக்கிறா. கனடாவில் இருந்து வந்த உதயன் பத்திரிகையில் சில வருடத்துக்கு முன்பு ஒரு தொடர்கதைக்கு ஓவியம் வரைந்தவ. நீங்கள் அறிந்திருக்கக்கூடும். கனடாவில் முதியோருக்காக நடத்தப்படும் ‘சந்தியாராகம்’ நிகழ்வின் இலச்சினையிலுள்ள ஓவியத்தையும் அவர் வரைந்திருக்கின்றார். ஓவியத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவா.”

‘சுடர்’ சஞ்சிகை இதழ்களின் ஓவியர்களின் பங்களிப்பினை ஆராய்ந்து கொண்டிருந்தபோது ஓவியர் இந்துவின் ஓவியங்களையும் அவதானித்தேன். அவரே தாமரைச்செல்வியின் சகோதரி என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது. இம்முறை ஓவியர் இந்து வின் சுடர்ப் பங்களிப்பாக வெளியான ஓவியங்கள் சிலவற்றைப் பார்ப்போம். இவர் ‘சுடரி’ல் நிறையவே சுடர்ந்திருக்கின்றார். புனைகதைகள், அட்டைப்பட ஓவியங்கள் என வரைந்திருக்கின்றார்.

இவரைப்பற்றி நான் என் மாணவப் பருவத்திலேயே கேள்விப்பட்டிருப்பதாக ஒரு நினைவு. யாழ் இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த எனது உறவுக்கார அக்காவொருத்தி (அவரும் ஓவியங்கள் வரைவதில் நாட்டமுள்ளவர்) ஒருமுறை எழுத்தாளர் தாமரைச்செல்வியின் சகோதரியொருவர் தன்னுடன் படிப்பதாகவும் , அவர் நன்கு ஓவியங்கள் வரையுமாற்றலுள்ளவர் என்று கூறினார். தாமரைச்செல்வி அப்பொழுது எழுத்துலகில் அடியெடுத்து வைத்திருந்த காலகட்டம். பத்திரிகைகள், சஞ்சிகைகளிலெல்லாம் அவரது படைப்புகள் வெளிவர ஆரம்பித்திருந்த காலகட்டம். அவர் குறிப்பிட்டவர் ஓவியர் இந்துவாக இருக்கக்கூடும்.


2. ‘சுட’ரில் சுடர்ந்த ஓவியர்கள்: ஓவியர் வீ.கே

ஓவியமாமணி வீ.கே‘ஓவியர் விகேயின் ஓவியங்கள் சுடர் இதழ்களில் வெளியான பல்வகை படைப்புகளையும் அலங்கரித்துள்ளன. ஆனால் அவரைப்பற்றிய மேலதிகத்தகவல்களை அறிய முடியவில்லை. யாருக்காவது தெரிந்தால் அவற்றை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். அழகான அவரது ஓவியங்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்’ என்று முகநூலில் பதிவு செய்திருந்தேன்.  இப்பதிவுக்கு எதிர்வினையாற்றிய நண்பர் சிறீதரன் ஓவியர் வீ.கே வி..கனகலிங்கம் என்றும் , விக்கிபீடியாவில் அவர் பற்றிய விரிவான செய்திகளிருப்பதாகவும், அதன் இணைப்பையும் அறியத்தந்திருந்தார். மனம் நிறைந்த நன்றி அவருக்கு.

ஓவியர் பற்றிய வீக்கிபீடியாக் குறிப்பு அவர் பற்றிய மேலதிகத் தகவல்களைத் தருகின்றது. அது வருமாறு :

வி. கனகலிங்கம் (பிறப்பு: செப்டம்பர் 28, 1920) வீ.கே என்ற பெயரில் இலங்கையில் புகழ் பெற்ற ஓவியர் மற்றும் எழுத்தாளர்.

வாழ்க்கைச் சுருக்கம்
கனகலிங்கம் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், ஆனைக்கோட்டையில் விசுவலிங்கம், பொன்னம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். இவரது பேரன் ஓர் அண்ணாவியார். மாமன் கலைப்புலவர் க. நவரத்தினம். இயல்பாகவே கலை உணர்வு கொண்ட கனகலிங்கம், திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற பின்னர் ஓவியக் கலைக்கே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டார்.

1942 ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழில் அச்சு ஒப்புநோக்குநர் பதவியில் பணியாற்றத் தொடங்கிய கனகலிங்கம் ஆறு மாதங்களில் ஓவியராகப் பணி உயர்வு பெற்றார். பணியாற்றிய காலத்தில் இரண்டு ஆண்டுகள் கொழும்பு கலைக் கல்லூரியில் வாரம் இரண்டு நாட்கள் உயர்தர ஓவியப் படிப்பை முடித்தார். 19 ஆண்டுகள் வீரகேசரியில் பிரதம ஓவியராகப் பணியாற்றினார்.

வீரகேசரி ஆசிரியர் கே. வி. எஸ். வாசின் மகன் மோகன் “கதம்பம்” என்ற மாத இதழை ஆரம்பித்தார். அதனை வீ.கே பொறுப்பேற்று நடத்தினார். 1959 ஆம் ஆண்டில் வீரகேசரி தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் இறங்கியது. அதனை அடுத்து வீ.கே வீரகேசரியை விட்டு விலகினார். அதன் பின்னர் தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்தார். 1970 இல் இப்பத்திரிகைகள் மூடப்படவே சொந்தமாகத் தொழில் ஆரம்பித்து ஓவியங்கள் வரைந்தார்.

1980 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் சென்ற வீ.கே. அங்கு 1986 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட உதயன், சஞ்சீவி ஆகிய பத்திரிகைகளுக்கு ஓவியம் தீட்டினார்.

வீ. கே., கனகு, சித்தார்த்தன், நிலா போன்ற பல புனைபெயர்களில் ஓவியங்கள் வரைந்தார். லிங்கம், திருவாதிரை ஆகிய புனைபெயர்களில் பல சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார். தமிழ் இதழ்கள் மட்டுமல்லாமல் சிங்கள இதழ்களுக்கும் ஓவியங்கள் வரைந்தார்.
பட்டங்கள்

ஓவியமாமணி
வர்ண வாரிதி

1965 திசம்பர் 9 இல் கொழும்பு விவேகானந்த சபையில் புலவர் கருணாலய பாண்டியனார் தலைமையில் நடைபெற்ற அ. பொ. செல்லையா எழுதிய காலத்தின் விதி நூல் வெளியீட்டு விழாவில் ஓவியமன்னர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

நன்றி: விக்கிபீடியா

மேலும்…

ஓவியர் வீகே (வி.கனகலிங்கம்) அவர்களின் பொன்விழாச் சிறப்பு வெளியீடாக ‘ஓவியமாமணி வீகே’ என்னும் சிறு பிரசுரம் வெளியாகியுள்ளது. இதனை நூலகம் தளத்தில் காணலாம். ஓவியர் வீ.கே யார் என்று தேடிக்கொண்டிருந்தபோது நண்பர் சிறீதரன் அவர்களே வீகே வி.கனகலிங்கம் என்பதை அறியத்தந்திருந்தார். அதனால்தான் அவரைப்பற்றிய இப்பிரசுரத்தை இலகுவாகக் கண்டடைய முடிந்தது. அவருக்கு நன்றி.

நூலகத்தில்: http://noolaham.net/project/45/4492/4492.pdf


3. ‘சுட’ரில் சுடர்ந்த ஓவியர்கள் :’ ஓவியர் பொன்னரி (சுடர்’ ஆசிரியர் கனகசிங்கம்)

ஓவியர் பொன்னரியின் ஓவியமொன்று..‘சுடர்’ சஞ்சிகை பற்றி எழுத்தாளர் முருகபூபதியும் தனது ‘இலங்கையில் பாரதி’ கட்டுரைத்தொடரின் பதினைந்தாவது அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தார். அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் ‘தமிழ் முரசு’ பத்திரிகையில் வெளியான தொடர் அது. அக்கட்டுரையை இங்கு ஒரு பதிவுக்காககப் பகிர்ந்துகொள்கின்றேன். சுடர் சஞ்சிகை ஓவியங்கள் மற்றும் படைப்புகள் பற்றிய எனது முகநூல் குறிப்புகள் பற்றி எழுத்தாளர் தாமரைச்செல்வி சுடர் ஆசிரியராக விளங்கிய கனகசிங்கம் (ஓவியர் பொன்னரி) அவர்களுடன் தொடர்பு கொண்டு உரையாடியதாகவும், அவர் மகிழ்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டார். அவருக்கும் நன்றி. அவரே சுடர் ஆசிரியரே ஓவியர் பொன்னரி என்றும் முதலில் அறியத்தந்தவர். அத்துடன் அவரே சுடர் சஞ்சிகையில் வெளியான அரியின் கேள்வி -பதில் பகுதியில் அரியாக வந்தவர் என்பதையும் அறியத்தந்தவர். முருகபூபதி அவர்களின் கட்டுரையுடன் சுடர் ஆசிரியர் கனகசிங்கம் அவர்களின் பொன்னரி என்னும் பெயரில் சுடரில் வரைந்த ஓவியங்கள் சிலவற்றையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்


எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரை (தமிழ்முரசு, அவுஸ்திரேலியா):>இலங்கையில் பாரதி – அங்கம் 15 — முருகபூபதி

இலங்கைவாழ் தமிழ்ப்பேசும் மக்களின் ஏகப்பிரதிநிதித்துவத்தை பெற்றிருப்பதாக சொல்லப்படும் இன்றைய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்படுவதற்கு முன்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியும் அதற்கு முன்னர் தமிழரசுக்கட்சியும் தமிழ்க்காங்கிரசும் இயங்கின. இன்றும் இவ்விரு கட்சிகளும் நடைமுறையில் இயங்கினாலும், இவை தவிர பல தமிழ் விடுதலை இயக்கங்களும் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்த காலப்பகுதியில் தோன்றின. இந்தத் தமிழ் அரசியல் அணிகளுக்கு பாரதியின் கருத்துக்களில் மிகுந்த பற்றுதலும் ஈடுபாடுமிருந்தன. இந்த அணிகளைச்சார்ந்து நிற்போர் தம் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் பாரதியிடம் குடியிருந்த ‘தமிழ் உணர்வையே’ பிரதிபலித்தனர். இடதுசாரி இயக்கங்களிலும் முற்போக்கு இலக்கிய முகாம்களிலும் இருந்த தமிழ் அரசியல்வாதிகளும் இலக்கியவாதிகளும் பாரதியின் தேசிய – சர்வதேசிய குணாம்சங்களை எவ்வாறு மேற்கோள் காட்டியும் பிரயோகித்தும் எழுதினார்களோ, பேசினார்களோ, அதேபோன்று ” தமிழ் அரசியல் அணிகள் ” பாரதியின் தமிழ் உணர்வை, மொழிப்பற்றை தேச விடுதலை குறித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி தத்தம் இயக்கரீதியிலான நடவடிக்கைகளுக்கு சார்பாகவும் சாதகமாகவும் பயன்படுத்திவந்தார்கள்.

அத்தகையதொரு முகாமிலிருந்து சுதந்திரன் ஏட்டை வெளியிட்ட சிலோன் நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டட் நிறுவனத்திலிருந்துதான் கலை, இலக்கிய மாத இதழான ‘ சுடர்’ வெளிவந்தது. இலங்கைத் தலைநகரில் பண்டாரநாயக்கா மாவத்தையில் அமைந்திருந்த சுதந்திரன் அலுவலகத்திலிருந்து சுமார் எட்டுவருடகாலம் வெளியான சுடர், 1982 ஆம் ஆண்டு சித்திரை மாதம் பாரதி நூற்றாண்டு சிறப்பிதழை வெளியிட்டது. சுதந்திரன் ஆசிரியராக பணியாற்றிய கோவை மகேசன்தான் தொடக்கத்தில் சுடர் ஆசிரியராக இருந்தார். 1977 இற்குப்பின்னர் சுதந்திரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவர நேர்ந்தமையால் கோவை மகேசனும் அங்கு இடம்பெயர்ந்தார். சுடரின் ஆசிரியர் பொறுப்பை கவிஞர் காசி ஆனந்தன் ஏற்றார்.

இக்காலப்பகுதியில்தான் தமிழர் விடுதலைக்கூட்டணிக்குள் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் இடையே நிழற்போர் தொடங்கியது. அவர்கள் மத்தியில் நீறுபூத்த நெருப்பாக இருந்த பிரச்சினை கட்டம் கட்டமாக வெளியே துலாம்பரமாகியது. இன்றும் இதுதான் நிலை.

இந்திய சுதந்திரப்போராட்டத்திலும் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் இடையே முரண்பாடுகள் நீடித்திருந்தன. பாரதி கலந்துகொண்ட சூரத் காங்கிரஸ் மாநாட்டில் கருத்தியல் போராட்டமும் வெடித்தது. பாரதி தீவிரவாதிகள் பக்கம்தான் நின்றார். இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கான தீர்விலும் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் இடையிலான முரண்பாடு இன்றும் நீடித்துக்கொண்டிருக்கிறது. அன்று வெளியான சுதந்திரன், ஏடு கூட்டணித்தலைவர்களையும் கூட்டணியின் நடவடிக்கைகளையும் கடுமையாக கண்டித்து விமர்சிக்கும் படலத்தை 1978 இற்குப்பின்னர் ஆரம்பித்தது. சுதந்திரனையும் சுடரையும் வெளியிடும் நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரஹாசன், தமிழர் அரசியலில் மிதவாதிகளின் கருத்துக்களிலிருந்து மாறுபட்டிருந்தார். இதன் விளைவாக மிதவாதிகளின் பக்கம் சார்ந்து நின்ற காசி ஆனந்தன், 1980 ஆம் ஆண்டில் சுடர் பொறுப்பிலிருந்து முற்றாக விலகிக்கொண்டார். தமிழர் விடுதலைக்கூட்டணியை தீவிரமாகக்கண்டிக்கும் பணியை சுதந்திரன் ஆக்ரோஷமுடன் தனது தரப்பு நியாயத்துடன் மேற்கொண்டதன் விளைவாக த.வி. கூட்டணிக்கு தனது தரப்பு நியாயத்தை பிரசாரப்படுத்துவதற்கு ஒரு சாதனம் தேவைப்பட்டது. ( சுதந்திரன் த.வி. கூட்டணியின் அங்கீகாரத்துடன் வெளியான அதன் உத்தியோகபூர்வ ஏடு அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்) அதனால் யாழ்ப்பாணத்தில் உதித்தது உதயசூரியன். இது த.வி. கூட்டணியின் பிரசாரப்பத்திரிகையாகவும் அதே சமயம் சுதந்திரனையும் தமிழீழ விடுதலை அணியையும் சாடும் பத்திரிகையாகவும் வெளியானது. உதயசூரியன் பின்னர் செங்கதிராகி மங்கி மறைந்துவிட்டது.

காசி ஆனந்தன் சுடரிலிருந்து ஒதுங்கியதும் சட்டத்தரணியான கரிகாலன் (நவரத்தினம்) 1981 இல் சுடர் ஆசிரியரானார். இரண்டு ஏடுகளையும் வெளியிட்ட நிறுவனம், சுதந்திரன் வார இதழை தமிழின விடுதலைக்காக குரல்கொடுக்கவும் சுடரை இலக்கியத்திற்காகவும் நடத்தியது. காசி ஆனந்தனும் கரிகாலனும் சுடரில் பணியாற்றிய காலகட்டத்தில் இவர்களுக்குத் துணையாக இயங்கியவர் கனகசிங்கம். இவருடைய புனைபெயர் பொன்னரி. இவர் ஓவியருமாவார். வீரகேசரியில் ஒப்புநோக்காளராக பணியாற்றியவாறு பகுதிநேரமாக சுடர் பொறுப்புகளையும் கவனித்தார்.

காசிஆனந்தனும் கரிகாலனும் அடுத்தடுத்து சுடரிலிருந்து ஒதுங்கிக்கொண்டதும், கனகசிங்கமே அதன் ஆசிரியராக இயங்கினார். ஒரு இலக்கிய இதழை தனிநபர் ஒருவர் நடத்துவதற்கும் கூட்டுறவு அடிப்படையில் வெளியிடுவதற்கும், ஒரு நிறுவனத்தின் வெளியீடாக நடத்துவதற்கும் பற்பல வேறுபாடுகள் இருக்கின்றன.

ஒரு தனிநபர் இலக்கிய இதழின் ஆசிரியர் பொறுப்புடன் நடத்துவது சுலபம். ஆனால், கூட்டுச்சேர்ந்து நடத்தும்போது அல்லது நிறுவனத்தின் கீழ் சிலர் இணைந்து நடத்தும்போது அவரவர் வரித்துக்கொண்ட அரசியல் கொள்கைகள் பிரதிபலிக்க நேர்ந்தால் என்ன நடக்கும் என்பது தெரிந்ததே.

காசி ஆனந்தனும் கரிகாலனும் சுடர் பொறுப்பிலிருந்து ஒதுங்கிக்கொள்வதற்கு கட்சி அரசியலே அடிப்படை. கனகசிங்கம், சுடரின் பொறுப்பை ஏற்றதன் பின்னர் தமிழீழ விடுதலை அணியின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவே இயங்கினார். இதனைப்பிரதிபலிக்கும் வகையில் சுடரின் பாரதி நூற்றாண்டு சிறப்பிதழின் ஆசிரியத்தலையங்கத்தை ” வாய்ச்சொல்லில் வீரரடி” என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் இராமாயணம் என்ற அற்புத காவியத்தை சிருஷ்டித்தான். அவனின் கதாபாத்திரங்களான இராமரையும் சீதையையும் தெய்வங்களாக நாம் வழிபடுகிறோம். இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற தெய்வீக இலக்கியத்தை படைத்தார். சிலம்பின் நாயகி கண்ணகிக்கு நாம் கோயில் அமைத்து கும்பிடுகிறோம். இப்படி தெய்வீகப்பிறவிகளையே நம் கண்முன்கொண்டுவந்து நிறுத்திய கம்பனுக்கும் இளங்கோ அடிகளுக்கும் கொடுக்கும் மதிப்பைவிட மேலான ஒரு மதிப்பை, சிறப்பை பாரதிக்கு அளிக்கின்றோம். இது ஏன்…?

அடிமைத்தளையினின்றும் மக்களை விடுவிக்க கனல் தெறிக்கும் கவிதைகளையும் அவன் பாடினான். விடுதலைப்போரில் மக்களை விறுகொண்டெழவைக்கும் உணர்ச்சிக்கவிகளை அவன் வடித்தான். அதனால் விடுதலைக்கவியாக புரட்சிக்கவியாக நம் மனங்களில் நிரந்தரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

ஒரு இலட்சியத்தை முன்வைத்து தமிழ் மக்களிடம் ஆணை கேட்டவர்கள், அரசாங்கத்தலைவர்களுடன் சமரசம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற உட்கருத்துடன் அவர்களைச்சாடுவதற்காக பாரதியின் கவிதை வரிகளையே சுடர் தனது ஆசிரியத்தலையங்கத்தில் எடுத்தாண்டது.

“யார் அந்த வாய்ச்சொல் வீரர்கள்…?” சுடரின் வாசகர்கள் மட்டுமல்ல அனைத்து தமிழ்ப்பேசும் மக்களும் புரிந்துகொள்ளட்டும் என்ற உள்நோக்கத்துடன் அவ்வாறு எழுதப்பட்டிருந்ததானது, பாரதியின் கருத்துக்களை சந்தர்ப்ப சமயம் அறிந்து பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியத்தையே காட்டுகின்றது. ‘மதி’ யின் ஈழத்தில் பாரதி இன்றிருந்தால், காவலூர் எஸ். ஜெகநாதனின் பாரதியே புதுமைச்சாரதியே, திமிலைக்கண்ணனின் பாரதி கண்ட கனவு பலிக்க, ஏ. எம். எம். பாறுக்கின் வீரமுழக்கம் செய்தவன் நீயே முதலிய கவிதைகளும் செல்வா தம்பிஐயாவின் பாரதி இனங்காட்டிய பச்சோந்திகள், எஸ்.பி. கிருஷ்ணனின் ‘ தீக்குள் விரலை வைத்தால்’ முதலிய சிறு கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன. பாரதியின் கவிதை வரிகள் இரண்டை தலைப்பாகக்கொண்ட இரு சிறுகதைகளும் அதில் வெளியாகியிருந்தன.இச்சிறப்பிதழில் சிறப்பான அம்சம் என்று குறிப்பிடத்தக்கதாக ” மூவர் முன்மொழிந்த கருத்துக்கள்” என்ற பத்தியும் இடம்பெற்றிருந்தது. பாரதியின் பாடல்கள் ஈழத்தமிழர்களுக்கு எந்தளவில் பயன்படுகின்றன…? என்ற வினாவை தலைப்பாகக்கொண்டிருந்தது. நா. சுப்பிரமணியன், நாவேந்தன், செம்பியன் செல்வன் ஆகியோர் அந்த வினாவுக்கு பதில் வழங்கியிருந்தனர். இதனைத்தொகுத்து பதிவுசெய்தவர் தமிழ்ப்பிரியா. இவர் குறமகளுடன் (வள்ளிநாயகி இராமலிங்கம்) நடத்திய இலக்கியச்சந்திப்பு நேர்காணலும் பாரதியின் கருத்துக்களை அடியொற்றிய பெண்விடுதலை தொடர்பான சிந்தனைகளிலிருந்தே எழுதப்பட்டிருந்தது.

சுடர், தான் சார்ந்திருந்த தமிழீழ விடுதலை அணியின் தேவையை ஒட்டியும் அன்றைய காலத்தின் தேவை கருதியும் வெளியிடப்பட்ட சம்பிரதாய சிறப்பிதழாகவே சுடரின் உள்ளடக்கம் அமைந்திருந்தது. இலங்கையில் பாரதியின் சிந்தனைகளை பரப்பிய முன்னோடியாக சுவாமி விபுலானந்தர் விதந்து போற்றப்படுபவர் என்று இந்தத்தொடரின் ஓர் அங்கத்தில் முன்னர் குறிப்பிட்டிருந்தோம்.

இவர்பற்றியும் வசனநடை கைவந்த வள்ளாலர் எனப்போற்றுப்படும் ஆறுமுகநாவலரையும் தமிழ் ஆராய்ச்சிக்கு வித்திட்ட தனிநாயகம் அடிகளாரையும் பற்றிய பிரக்ஞை தமிழகத்தில் எவ்வாறு இருந்தது…? என்பதை ஆராய்ந்தால் சுவாரஸ்யங்களை தெரிந்துகொள்ள முடியும்.

ஒரு கால கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து இலங்கை வந்திருந்த கங்கை இதழின் ஆசிரியர் பகீரதன் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது, இலங்கை பத்தாண்டுகள் பின்னிற்கிறது என்ற குரலை எழுப்பிவிட்டுச்சென்றார். ஒருசமயம் ஆனந்தவிகடன் ஆசிரியராக பணியாற்றிய ( பின்னாளில் ஆனந்தவிகடனிலிருந்து விலகி இதயம் பேசுகிறது இதழை நடத்தியவர்) மணியன் இலங்கை வந்தபொழுது யாழ்ப்பாணத்தில் அவரை வரவேற்றவர்கள், ஆறுமுகநாவலரைப் பற்றிச்சொன்னதும், ” யார் அந்த நாவலர்…. தனக்கு நாவலர் நெடுஞ்செழியனைத்தான் தெரியும்” எனச்சொன்னார். அதுபோன்று தினமணிக்கதிர் இதழின் ஆசிரியராகவும் பின்னர் தனது பெயரிலிலேயே சாவி என்ற இதழை நடத்தியவருமான சாவி ( சா.விஸ்வநாதன்) தனிநாயகம் அடிகளா…? யார் அவர்…? என்ற வினாவைத்தொடுத்தார். இந்த இலட்சணத்தில் யார் யார் எவை எவற்றில் பின்தங்கியிருக்கின்றனர் என்ற முடிவுக்கு வாசகர்கள் வருவார்கள். தமிழ்நாடு கடலூரில் ஆறுமுகநாவலர் வள்ளலார் இராமலிங்கம் சுவாமிகளை எதிர்த்து வழக்காடியவர். தனிநாயகம் அடிகளார் தமிழாராய்ச்சி மாநாடு தமிழ்நாட்டிலும் வேரூன்றுவதற்கு கால்கோள் நாட்டியவர். அதன்தொடர்ச்சியே கலைஞர் ஆட்சியில் நடந்த செம்மொழி மாநாடு.

இலங்கையில் பாரதி நூற்றாண்டு காலம் நினைவுபடுத்தப்படுவதற்கு சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு நடந்தது. அதன்பின்னரே தமிழ் நாவல் நூற்றாண்டு பற்றி தமிழகம் தெரிந்துகொண்டது. இவ்வாறு தமிழும் இலக்கியமும் சார்ந்த பல விடயங்களுக்கு இலங்கை முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறது. பாரதியின் தாக்கம் இங்கு இருந்தமையால்தான் மேற்படி நிகழ்வுகள் இங்கு சாத்தியமாகியிருக்கின்றன. இங்கு வாழ்ந்த முன்னோடிகளான இலக்கிய ஆளுமைகளை இவ்வேளையிலாவது நினைவுகூர்வோம்.

விபுலானந்தரும் சுந்தர ராமசாமியும்

சுவாமி விபுலானந்தர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது பொருத்தம். இலக்கிய உலகில் மிகுந்த கவனத்தைப்பெற்றவரான தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும் காலச்சுவடு இதழின் ஸ்தாபகருமான சுந்தரராமசாமி, இலங்கைப்பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களுக்கு 13-10-1992 ஆம் திகதி எழுதிய கடிதத்தைப் பார்ப்போம். “…….. விபுலானந்த அடிகளைப்பற்றி இரண்டு புத்தகங்கள் படித்தேன். ஒன்று செ. யோகநாதன் எழுதியது. மற்றொன்று பெ.சு. மணி எழுதியது. இரண்டுமே அறிமுகம் என்ற அளவில் எனக்கு உபயோகமாக இருந்தன. அடிகள் மீது மிகுந்த மதிப்பு ஏற்பட்டது. தமிழுக்கு உண்மையான தொண்டாற்றியிருப்பவர்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறார்கள். மேலோட்டமானவர்கள் மிகுந்த புகழ் பெற்றிருக்கிறார்கள். கலாசாரவாதி, அரசியல்வாதிகளின் தயவில் வாழவேண்டிய பரிதாப நிலைதான் இன்றும் இருக்கிறது. அங்கு எப்படி என்று தெரியவில்லை. ( ஆதாரம் கிழக்கிலங்கை ஏடு களம் – மே 1998) சுந்தரராமசாமி குறிப்பிடும் பெ.சு. மணியின் நூலில் சுவாமி விபுலானந்தர் நோக்கில் மகாகவி பாரதியார் என்ற கட்டுரையில் பாரதியை அறியாத ஒரு தமிழ்மகன் பற்றிய தகவல் பதிவாகியிருக்கிறது.

ஒருசமயம் திருக்கோணமலை இந்துக்கல்லூரியில் நடந்த பாரதிவிழாவில் ஒருவர் பாரதியைப்பற்றி அறிந்தார். ஆனால், அவரே சில நாட்களுக்குப்பிறகு அந்தக்கல்லூரிக்கு வந்து, பாரதி படத்தைப்பார்த்துவிட்டு, ” இவர் யார்…? ” என சுவாமி விபுலானந்தரிடம் கேட்டார். பாரதியை நினைவில் நிறுத்தத்தவறிய அவர்மீது துறவியாக இருந்தும் சுவாமி விபுலானந்தர் சற்றே சீற்றமடைந்தார். ” அவர்தாம் கவி அரசர் பாரதி. தமிழகத்தை உய்விக்க வந்த தெய்வம்” என்று சற்று கடுகடுத்த குரலில் கூறினார் விபுலானந்தர். 1947 இல் மறைந்த சுவாமி விபுலானந்தர், தாம் ஸ்தாபித்த கல்லடி சிவானந்தா வித்தியாலய வளாகத்தில் அமையப்பெற்ற கல்லறையிலேயே நிரந்தரத்துயில்கொண்டார்.

நன்றி: http://www.tamilmurasuaustralia.com/2017/04/15.html