சுவர்ணவேல் நெறியாள்கையில் ‘கட்டுமரம்’

சுவர்ணவேல் ஈஸ்வரன்இலண்டன்  இந்திய திரைப்பட விழாவில் மெக்சிக்கன் பல்கலைக்கழகத் திரைப்படத்துறைப் பேராசிரியரும், குறுந்திரைப்படம், ஆவணப்படம், திரைப்படம் என்பவற்றின் இயக்குனருமாகிய  சுவர்ணவேல் ஈஸ்வரன் அவர்களின் நெறியாள்கையில் மிஸ்கின், அனுஷா பிரபு, பிரீதி கரன் ஆகியோர் நடித்த கட்டுமரம்” திரைப்படத்தை BFI Southbank எனும் இடத்தில் 21.06.2019 அன்று பார்க்கக் கிடைத்தமை நல்லதொரு பொழுதாக அமைந்தது.

வாழ்வு எவ்வளவு சவால்களைக் கொண்டதென்பதை முன்னிறுத்தியதான கதைப்பிரதியைக் காட்சிப்படுத்தியமைக்காகச் சுவர்ணவேல் அவர்களைப் பாராட்டியேயாக வேண்டும். கதைக்கரு, உரையாடல், நடிப்பு, கிராமிய வாழ்வுப்பதிவு என்று அனைத்தும் கச்சிதமாக அமைந்துள்ளன. இவற்றோடு படத்தைத் தாங்கி நிற்கும் இசையையும் கமராவின் நகர்வையும் பார்க்கின்ற போது, இது சாதாரண தமிழ்ப் படமின்றி நுணுக்கமான உத்திகளையும் உணர்வுகளையும் தரவல்லதென எண்ண வைக்கின்றது. இங்கு கரையேறப் போராடும் மக்களைக் கட்டுமரமாக்கி இயக்குனர் பயணிக்கின்றார். படம் முழுதும் நீரினால் சூழப்பட்ட கிராமமும்,  அங்கு கடலை நம்பி வாழும் மக்களும் ஓயாது ஆர்ப்பரித்து அலையும் கடலும் மூசி மூசி வீசும் காற்றும்,  கவித்துவமாகப் பதிவாகியுள்ளன.  

கதைக்களமாகச் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசம் அமைகின்றதென்பதும், அங்கு மீனவ வாழ்வு பதியப்படுகின்றதென்பதும், அதற்குக் கட்டுமரம் என்கின்ற குறியீடு வைக்கப்பட்டுள்ளதென்பதும் எமது எதிர்பார்ப்பாக அமைய, அவற்றையும் மீறி, அழகிய காதல்கதையை அதுவும் லெஸ்பியனின் காதல் வெளிப்பாட்டைச் சமூகம் ஏற்கும் வகையில் காட்டியமை திரைப்படத்துறையில் இயக்குனருக்கு இருக்கும் ஆளுமையைத் தெளிவுபடுத்துகின்றது.

தமிழ்ச் சமுகத்தில் திருமணம், குடும்ப வாழ்வு என்பன எவ்வளவு முக்கியத்துவமானவை என்பது ஒவ்வொரு பாத்திரத்திற்குள்ளாலும் வெளிப்படுத்தப்படுகின்றது. சிங்காரம் தாய்தந்தையற்ற மருமகளான ஆனந்திக்குத் திருமணம் செய்து வைப்பதில் காட்டும் தீவிரம், மாமாவுக்கு விதவையான மலரே மனைவியாக அமைந்தால் நல்லதென நினைக்கும் மருமகள், மகள் லெஸ்பியனாக இருந்தாலும் அவளுக்கு வாழ்வு அமைத்துக் கொடுக்க விரும்பும் தந்தையான விக்ஷ்ணுஜித்தன், திருமணம் செய்து வை அல்லது செய் எனத் தூண்டும் நண்பர்களென யாவருமே சமூக அழுத்தமொன்றைப் பேணுபவர்களாகவுள்ளனர்.

கட்டுமரம் பெண்களுக்கான இருப்பையும் மதிப்பையும் தக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. கடலில் அலையும் நாங்கள் பெண்கள் பற்றித் தப்பாகப் பேசக்கூடாதெனச் சிங்காரம் சொல்வதும், விதவையான மலர் தனியே தானே இருக்கிறாள் கொண்டு வந்து கலியாணம் செய் என ஆனந்தி கூறுவதும், பெண்பிள்ளையை அவமானப்படுத்திய காவல்துறையை அடிப்பதும் சேலையோடு அலையும் அரவாணியின் மனச்சுமையும், இருபெண்களும் மனமொத்த போது அவர்களின் விருப்பைப் பூர்த்தி செய்ய முனைவதுமாகப் பெண்கள் சார்பாக நின்று படம் பேசுகின்றது.

சுவர்ணவேல் நெறியாள்கையில் 'கட்டுமரம்'

சமுக மக்களின் மனோபாவம் நிலையின்றி அலைக்கழியும் போது கடலலை குமுறுகின்றது; காற்று அந்தரிக்கின்றது; மணல் காற்றோடு வேகம் கொள்கின்றது. அனைத்துச் சோகங்களையும் குமுறல்களையும் கடல் உள்வாங்கிக் கிடக்கின்றது. இப்படத்திலே இரு கதாபாத்திரங்கள் கரையேறத் தனித்த மனநிலையில் அலைகின்றன. ஒன்று, தனது ஆதங்கங்களை விளங்கிக் கொள்ளாச் சமுகத்தோடும் அவர்தம் புறக்கணிப்புக்குள்ளும் பேசுவதைக் குறைத்து விரக்தியுடன் வாழும் சேலை கட்டிய அரவாணி. இரண்டாவது, சுனாமி அனர்த்தத்தின் பின்னர் பெற்றோரையிழந்து நிலவோடும் கடலோடும் பேசித் திரியும் குழந்தைகளின் பிரதிநிதியாகத் திரியும் அந்தச் சிறுவன்.

கவித்தா ஆண்மைத் தன்மையுள்ள பெண் என்கின்ற பிம்பம் இயல்பாக அவளது தோற்றம், செய்கை என்பவற்றினூடாக எங்கள் மனங்களில் புகுந்து விடுகின்றது. தனது துணை லக்ஷ்மி இறந்து விட்டாளென கவித்தா சொன்ன அன்றிரவு ஆனந்தி படுத்தவாறு சிந்துகின்ற ஒரு துளி கண்ணீர், அந்த இடத்தை நிரப்பப் போகின்றவள் இவள்தானென எண்ண வைக்கின்றது. அரவாணியுடனான உறவைக் கடற்கரை மண்ணிலும் தேனீர் கொடுக்கும் போதும் மெல்ல மெல்ல ஆனந்தி ஏற்படுத்திக் கொள்வது, அவள் தனக்கான ஆதரவிற்கு ஏங்குவதை உணர்த்துகின்றது. ஊருக்கு விடயம் தெரிந்த போது அரவாணி துடைப்பத்தால் அடி வாங்குவதும், ஆனந்தியும் கவித்தாவும் அரவாணியிடம் அடைக்கலமாவதும் இறுதியில் இருவரையும் வழியனுப்ப அந்த அரவாணியே உதவுவதும் யதார்த்தமாக அவர்களுக்கிடையிலான உறவு வலுப்பெற்றதைச் சொல்கின்றது.

சுவர்ணவேல் நெறியாள்கையில் 'கட்டுமரம்'
மருமகளுக்கு மணமகன் தேடியலைந்த ஒருவன், இறுதியில் அவள் தேடிய வாழ்வைச் சேர்த்து வைப்பது, இத்தகைய பெண்களுக்கான சமுக அங்கீகாரத்தை மக்கள் மனங்களில் பதியச் செய்யப்பட்ட முயற்சியென்று கொள்ளலாம். எனினும் அவர்களை வழியனுப்பிய பின்னர் அந்த ஊரில் வாழாது அச்சிறுவனுடன் சிங்காரம் பயணப்படுவது, சமுகத்தின் ஏளனப் பேச்சுக்கு முகங்கொடுக்க முடியாத சூழலே இப்போதும் உண்டென்பதைப் பதிவாக்குகின்றது. இங்கு எந்தக் கதாபாத்திரத்தையும் முதன்மைப் பாத்திரமெனக் கொள்ள முடியவில்லையெனினும் பார்ப்போரிடத்தே பாத்திரங்கள் சலனத்தை உண்டாக்கியுள்ளனவென்றே கூறலாம். அத்துடன், இத்தகைய மக்களுக்கான சமூக அங்கீகாரம் ஒரு தலைமுறையில் இல்லாதிருந்ததென்ற உண்மையையும் அடுத்த தலைமுறை அந்த அங்கீகாரத்தைப் பெற்றுப் பயணிக்கத் தொடங்கி விட்டதென்பதையும் இப்படம் பேசுபொருளாகக் கொண்டுள்ளதெனக் கொள்ளலாம்.

shivaslee@yahoo.co.uk