சுவையான இலக்கியத் திறனாய்வுகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் என்ற நூல் 180 பக்கங்களில் மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கிறது. இலக்கியவாதிகள் மத்தியில் பெருமதிப்பிற்குரிய இவர் பலரது நூல்களுக்குத் திறனாய்வுகள், அணிந்துரைகள், குறிப்புகள் போன்றவற்றை வழங்கி அவர்களைச் சிறப்பித்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினிமா பற்றியும் பல்வேறான கருத்துக்களை முன்வைத்துள்ளார். பவள விழா கண்ட முதுபெரும் இலக்கியவாதியான இவர் இலங்கையின் டெய்லி நியூஸ், தி ஐலன்ட், வீரகேசரி, நவமணி போன்ற நாழிதழ்களின் ஆசிரிய பீடங்களில் உயர் பதவி வகித்த ஒரு கலைஞர்.திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் என்ற நூல் 180 பக்கங்களில் மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கிறது. இலக்கியவாதிகள் மத்தியில் பெருமதிப்பிற்குரிய இவர் பலரது நூல்களுக்குத் திறனாய்வுகள், அணிந்துரைகள், குறிப்புகள் போன்றவற்றை வழங்கி அவர்களைச் சிறப்பித்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினிமா பற்றியும் பல்வேறான கருத்துக்களை முன்வைத்துள்ளார். பவள விழா கண்ட முதுபெரும் இலக்கியவாதியான இவர் இலங்கையின் டெய்லி நியூஸ், தி ஐலன்ட், வீரகேசரி, நவமணி போன்ற நாழிதழ்களின் ஆசிரிய பீடங்களில் உயர் பதவி வகித்த ஒரு கலைஞர். எழுத்தாளர்கள் தாம் ஏன் எழுதுகிறோம்? எதனை எழுதுகிறோம்? எவ்வாறு எழுதுகிறோம்? என்றெல்லாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். பிற்காலத்தில் தனது இலக்கியப் பங்களிப்புக்களை ஆய்வு செய்யப் போகும் ஆய்வாளர்களுக்கு அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் தனது கட்டுரைகளைப் பரிசீலிக்க உதவும்பொருட்டு இந்நூலை வெளியிட்டிருக்கும் திரு. சிவகுமாரன் அவர்கள் தான் எழுதுவதற்கான காரணத்தைக் கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.

‘எனது சிற்றறிவும், சிற்சில அனுபவங்களும் என்னைத் தழுவியபோது அவற்றை விருத்திசெய்து பேரறிவுடையவர்களுக்காக எனது சிறிய அளவிலான பரிமாண வீச்சில் ஏனையோருடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதற்காக கடந்த அரை நூற்றாண்டாக எழுதி வருகிறேன்’ என்கிறார். 2007ம் ஆண்டின் தலைசிறந்த ஆங்கிலமொழிப் பத்தியாளராக விருது பெற்றிருக்கும் இவர் பல்நாட்டுக் கலைஞர்கள் பற்றியும், எழுத்தாளர் சிலரின் நூலுக்கு தான் எழுதிய முன்னுரைகளையும் இந்த நூலில் இணைத்திருக்கின்றார். ரா. நித்தியானந்தனின் மூன்றாம் பரிணாமம் என்ற  நூலுக்கு கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் எழுதிய முன்னுரை இந்நூலில் ரா. நித்தியானந்தனின் சிறுகதைகள் என தலைப்பிட்டு எழுதப்பட்டிருக்கிறது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற நைஜீரியா தேசத்தவரான வோலே சொயின்கா என்பவரைப் பற்றிய தகவல்களை இந்நூல் சுமந்து வந்திருக்கிறது.  வோலே சொயின்கா மேற்குலக நாடுகளில் நன்கு அறியப்பட்ட நாடகாசிரியர்களில் ஒருவர்.  தனது கருத்துக்களை ஒழிவுமறைவின்றி வெளிப்படுத்தும் சொயின்கா கலை இலக்கியங்கள் மூலம் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்று நம்புகிறவர்.

மு. பஷீர் அவர்களின் சிறுகதைகள் பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவரது கதைகளை திரு கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் ரசித்தமைக்கான காரணத்தை நூலாசிரியர் பின்வருமாறு கூறுகிறார். ‘இந்தக் கதைகளை முதலில் நான் படித்தபொழுது மகிழ்ச்சியுற்றேன். காரணம் மொழிவளம், விபரிக்கும் ஆற்றல், பிறர் அதிகம் தேர்ந்தெடுக்காத பாத்திரங்கள், சமூக விமர்சனம், யதார்த்த சித்தரிப்பு, மனித நேயம் ஆகிய பண்புகள் அடங்கியிருந்தமையே’

இதழியல் என்ற தலைப்பின் கீழ் மிக அருமையான கருத்துக்களை முன்வைத்திருக்கிறார் நூலாசிரியர். இன்று பேனை பிடித்தவர்கள் எல்லோரும் எழுத்தாளர்கள் என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இலக்கியத்தில் ஆர்வமுடையவர்கள் வாசிப்பில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் எனவும் அவர்கள் எழுதும் எழுத்துகள் செம்மைப்படுத்தப்பட வேண்டும் எனவும் உணர்த்தப்படுகின்றது.

இலங்கையின் மூத்த சஞ்சிகை ஆசிரியரான டொமினிக் ஜீவா அவர்களைப் பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தனது வாழ்வை இலக்கியத்துக்காக அர்ப்பணித்தவர் திரு டொமினிக் ஜீவா அவர்கள். இன்றுவரை தொடர்ந்து மல்லிகை சஞ்சிகை வெளிவருவதற்கு முதுகெலும்பாக நின்று செயற்படுகின்றவர். ஜீவா அவர்களின் அயராத உழைப்பே மல்லிகையின் வெற்றி எனலாம்.

சுங்கத் திணைக்களத்தில் உயர் அதிகாரியாக கடமையாற்றுபவரும் கலை இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவருமான திரு. மு. தயாபரன் அவர்களைப் பற்றிய தகவல்களையும் இந்நூல் தாங்கியிருக்கின்றது. நினைவழியா நாட்கள்   என்ற நூலின் ஆசிரியான பரன் அவர்களே இந்த மு. தயாபரன் அவர்களாவார்.

சுவையான இலக்கியத் திறனாய்வுகள் என்ற நூல் பல்வேறுபட்ட தகவல்களை உள்ளடக்கியதாகும். இலக்கியத்தில் ஈடுபடுபவர்கள், திரு கே. எஸ். சிவகுமாரன் அவர்களது இந்த நூலைப் படித்துப் பயன் பெற வேண்டும். ஆசிரியருக்கு எனது வாழ்த்துகள்!

நூலின் பெயர் –  சுவையான இலக்கியத் திறனாய்வுகள்
நூலாசிரியர் – கே.எஸ். சிவகுமாரன்
முகவரி – 21, முருகன் பிளேஸ், கொழும்பு – 06.
வெளியீடு – மணிமேகலைப் பிரசுரம்
தொலைபேசி – 0112587617
விலை – 200 ரூபாய்

poetrimza@gmail.com