செய்தி.காம்: சிறிலங்காப்படைப் பெண் சிப்பாய் பிரித்தானிய நாளேட்டிற்கு அனுப்பிய புதிய போர்க்குற்ற ஆதாரங்கள்!

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளால் தமிழர்கள் மோசமாக நடத்தப்பட்டதற்கான மேலதிகமான காணொலி மற்றும் ஒளிப்பட ஆதாரங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் "தி இன்டிபென்டன்ட்" நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளால் தமிழர்கள் மோசமாக நடத்தப்பட்டதற்கான மேலதிகமான காணொலி மற்றும் ஒளிப்பட ஆதாரங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் “தி இன்டிபென்டன்ட்” நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

“தி இன்டிபென்டன்ட்” நாளேட்டுக்கு கிடைத்துள்ள காணொளி ஒன்று, வேண்டுமென்றே மார்பகங்கள் மற்றும் பாலுறுப்புகள் வெளித்தெரியத்தக்கதாக ஆடைகள் களைப்பட்ட நிலையில் டசின் கணக்கான பெண்கள் உள்ளிட்ட 100 இற்கும் அதிகமான தமிழர்களின் பிணக்குவியலின் முன்பாக சிறிலங்காப் படையினர் களிப்புடன் நின்பதைக் காட்டுகின்றது. இது தமிழர்கள் எந்தளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டு- நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டனர் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்தக் காணொளி சிறிலங்கா படையினர் வழக்கமாகப் பயன்படுத்தும் இணைய நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஒருவரால் “தி இன்டிபென்டன்ட்” நாளேட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 இந்தக் காணொளி தமிழர்கள் இறந்த பின்னரும் எவ்வாறு சிறிலங்காப் படையினரால் நடத்தப்பட்டனர் என்பதை வெளிப்படுத்துகிறது. கறுப்பு வெள்ளையிலான கைத்தொலைபேசிப் படங்கள் தார்பாய்களின் மீது 100இற்கும் அதிகமான சடலங்கள் போடப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.

இவற்றில் சில ஆண்களின் சடலங்கள் விடுதலைப் புலிகளின் சீருடையில் காணப்படுகின்றன. பெரும்பாலான சடலங்கள் சாதாரண உடையுடன் இருக்கின்றன. இவை போராளிகளா அல்லது பொதுமக்களா அல்லது இருதரப்பினருடையதுமா என்று சொல்வது சாத்தியமில்லை.

விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதகேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேவேளை சிறிலங்கா படையினர் பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். தமிழ்ப் பெண்களின் சடலங்கள் தனியாக கையாளப்பட்டுள்ளன என்பது மட்டும் தெளிவாகிறது.

பெரும்பாலான ஆண்களின் சடலங்கள் முழுமையான ஆடைகளில் அல்லது மேலாடை இல்லாமல் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான பெண்களின் சடலங்கள் ஆடைகள் வேண்டுமென்றே முற்றிலும் களையப்பட்டு- அவர்களின் மார்பகங்களும், பாலுறுப்புகளும் வெளியே தெரியத்தக்கதாக காணப்படுகின்றன.

பெண்களின் தோல் வெளியே தெரிவதை வெட்கக்கேடாக கருதுவது சிறிலங்காவின் மரபாகும். முன்னர் வெளியான காணொளிப் பதிவுகளில் தமிழ்ப்பெண்கள் கொல்லப்படுவதற்கு முன்னரோ பின்னரோ ஆடைகள் களைப்பட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதை வெளிப்படுத்தியிருந்தன. இதன் அடிப்படையில் சிறிலங்காப் படையினர் பாலியல் வன்புணர்வு அல்லது பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதான
குற்றச்சாட்டுகளை மனித உரிமை அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன. இசைப்பிரியா என்ற தமிழ்ப் பெண் ஊடகவியலாளர் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுக் கிடந்த காட்சியை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த புதிய காணொலி குறித்து சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் பந்துல ஜெயசேகரவிடம் “தி இன்டிபென்டன்ட்” நாளேடு கூறியபோது – ” இது சிறிலங்கா அரசுக்கும் படைகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்துவதற்கான மேற்கொள்ளப்படும் முயற்சி” என்று கூறியுள்ளார் அவர். அதேவேளை லண்டனைச் சேர்ந்த சட்டவாளர் வாசுகி முருகதாஸ், இந்தக் காணொளி உண்மை என்றே தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார். இந்தக் காணொலி சிறிலங்கா படையினர் வழக்கமாகப் பயன்படுத்தும் இணைய நிலையம் ஒன்றில் பணியாற்றும்- பெயர் வெளிப்படுத்தப்படாத – தமது தரப்பாளர் ஒருவர் மூலமே சிறிலங்காவில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். சிறிலங்காப் படையினர் தமது கைபேசிகளில் இருந்து படங்களையும் காணொளிகளையும் மின்னஞ்சல் செய்வதற்காக தரவிறக்கம் செய்து தருமாறு அவரிடம் கேட்பது வழக்கம். ஒரே கைபேசியில் எடுக்கப்பட்டுள்ள 32 காணொலிகளையும் 26 ஒளிப்படங்களையும் “தி இன்டிபென்டன்ட்” பார்வையிட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலான படங்கள் அடையாளம் தெரியாத இடமொன்றில் கிடக்கும் பிணக்குவியல்களை காட்சிப்படுத்துகின்றன. கைது செய்யப்பட்ட புலிகள் கைவிலங்கிடப்பட்ட நிலையில் பேருந்து ஒன்றில் ஏற்றப்பட்டிருப்பதை ஏழு படங்கள் காட்டுகின்றன. அவர்களில் பலர் சிறுவர்கள்.

இந்தப் படங்கள் சிறிலங்காப் படையின் பெண் சிப்பாய் ஒருவராலேயே எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவரது குரலும், அவர் பிற படையினருடன் சிங்களத்தில் உரையாடுவதும் இதில் பதிவாகியுள்ளது. மேலும் இரண்டு படங்கள் அவர், இராணுவ வாகனம் ஒன்றைச் செலுத்துவதையும், இறுதிக் காணொளி அந்தச் சிப்பாய் வீட்டில் தனது குடும்பத்தினருடன் இருப்பதையும் காட்டுகின்றன.
“இவையெல்லாம் போலி என்று கூறுவது மிகவும் கடினமானது. இது சிறிலங்கா பெண் சிப்பாயின் கதையை தெளிவாக கூறுகிறது” என்று கூறியுள்ளார் வாசுகி முருகதாஸ். “சிறிலங்காப் படையினர் பெண்களின் சடலங்கள் நிர்வாணப்படுத்தியிருப்பதற்கு இரண்டு சாத்தியங்கள் இருக்கலாம்.  அவர்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் பாலியல் வன்புணர்வுக்கு அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது இறந்த பின்னர் நிர்வாணப்படுத்தியிருக்க வேண்டும். மிருகங்கள் மட்டும் தான் இவற்றை விரும்பும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=61372&category=TamilNews&language=tamil