சொர்க்கம்! நரகம்! மறுபிறப்பு! கற்பனையா? நிசமா?

- நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -“சமய ஈடுபாடு கொண்ட சொர்க்கம், நரகம், மறுபிறப்பு அல்லது தனிப்பட்ட கடவுள் இருப்பதென்பதை ஆய்வறிவு சார்ந்த சிறு விளக்கத்தைத் தானும் என்றாவது நான் கண்டதில்லை.”  – (தோமஸ் எடிசன்) –  ‘உயிர்’ என்பதின் பொருளை ஓர் ஆற்றல், சக்தி, இயக்கம், துடிப்பு, செயல், சீவன், காற்று என்று   கூறலாம். உயிர் தனித்து வாழாது. உயிர் வாழ்வதற்கு ஓர் உடல் வேண்டும். “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” என்று கூறுகின்றது திருமூலர் மந்திரம். மனிதன் பிறப்பதும், வாழ்வதும், இறப்பதும் உலக நியதி. இவ்வண்ணம் உலகத்திலுள்ள ஓரறிவிலிருந்து ஆறறிவுள்ள எல்லா உயிரினங்களும் பிறப்பதும், வாழ்வதும், இறப்பதுமாகிய ஒரு பெரும் சுற்றோட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில் மனித உயிருக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்றான் மனிதன். அவனே தனக்குச் சட்டம் வகித்து, பிறப்பவர் தொகை, இறப்பவர் தொகை, உலகச் சனத்தொகை கணித்து, வாழ்வியலையும் மேம்படுத்துகின்றான். உலகில் 701 கோடி மக்கள் வாழ்கின்றார்கள். நாளொன்றுக்கு நானூற்றித் தொண்ணூறாயிரம் (490,000) குழந்தைகள் பிறக்கின்றன. அதேநேரம் நாளொன்றுக்கு இருநூற்றி ஐம்பதாயிரத்திலிருந்து (250,000) முன்னூறாயிரம் (300,000) வரையான மக்கள் இறக்கின்றனர். இவ்வண்ணம் உலகச் சனத்தொகை கூடிக்கொண்டே போகின்றது.

சொர்க்கம்
மனிதன் இறந்ததும் அவன் உயிர் உடலைவிட்டுப் பிரிந்து ஆவியாக ஆகாயத்தில் உலாவித் திரிந்து நன்மை செய்த உயிர்கள் சொர்க்கத்துக்கும், தீமை செய்த உயிர்கள் நரகத்துக்கும் போய்ச் சேர்வதாக இலக்கியங்கள், இதிகாசங்கள், புராணங்கள், சமயங்கள் போன்றன கூறுகின்றன. சொர்க்கத்தைச் சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களுக்கும் அப்பால, அறிவியல்கூட அணுக முடியாத தூரத்தில் அமைத்தமையும், நரகத்தையும் அறிவியல் அண்மிக்க முடியாத அதலபாதாளத்தில் அமைத்தமையும் நாம் காணும் அதிசயச் செய்திகளாகும். இன்னும் தனக்குச் சொர்க்கத்தையும் நரகத்தையும் அமைத்துவிட்டு, மற்றைய ஓரறிவிலிருந்து ஐயறிவு வரையான உயிர்களுக்குச் சொர்க்கத்திலும் நரகத்திலும் இடம் கொடுக்காது இருந்துவிட்டான் தமிழன்.

சொர்க்கம் ஒரு கற்பனையில் உதித்த பரந்த விண்வெளிப் பிரதேசமாக இருக்கலாம். இதற்கு ஒரு வடிவமைப்பு இல்லை. இது ஒரு திண்மப் பொருளுமன்று. கோள்கள் ஒரு வடிவமைப்பான திண்மப் பொருள்களாகும். விஞ்ஞானிகள் கோள்களுக்குப் போய், தரையில் இறங்கி நின்று ஆய்வுகளை மேற்கொள்ளலாம். ஆனால் சொர்கத்தில் தரை இல்லாதவிடத்து விஞ்ஞானிகள் அங்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்வது கடினமாகும்.

ஐயறிவு வரையான உயிர்கள்
இனி ஐயறிவு வரையான உயிர்கள் பற்றிக் காண்போம். புல், மரம் முதலியன ஓரறிவுடையன என்றும், நந்து (சங்கு, நத்தை), முரள் (சிப்பி, கிளிஞ்சி) முதலியன ஈரறிவுடையன என்றும், சிதல், எறும்பு முதலியன மூவறிவுடையன என்றும், நண்டு, தும்பி முதலியன நாலறிவுடையன என்றும், விலங்கு, பறவை முதலியன ஐயறிவுடையன என்றும் தொல்காப்பியர் சூத்திரம் அமைத்துள்ளார். உலகில் வாழும் இவ் ஐவகை உயிரினங்களின் முழு எண்ணிக்கைகளை எவராலும் கணக்கிட்டுக் கூற முடியாது. ஆனால் இத்தொகை 100,000,000,000 க்கும் கூடுதலாக இருக்கலாம் என்பது ஒரு கணிப்பாகும். இன்னும், உலகிலுள்ள விலங்கு, தாவரம், கடற்பாசி ஆகியவற்றில் 1.7 மில்லியனுக்கு மேற்பட்ட வகைகள்ஃபிரிவுகள் (ளிநஉநைள) உள்ளன என்று விஞ்ஞானிகள் விரித்துரைத்துள்ளனர். இப்படியான பெருந்தொகை உயிர்களுக்கு எத்தனை சொர்க்கம், நரகம் அமைப்பது? இவற்றிற்குப் பொறுப்பாக எத்தனை யமனை நியமிப்பது? இச் சிரமம் காரணமாக ஐயறிவு வரையான உயிர்கள் விடயத்தில் சொர்க்கம், நரகம் அமைக்காது வாளாமை காத்தனர் போலும்.

உயிரின் பிறப்பு
1. செடி, கொடி, மரம். விதைகளை நிலத்தில் போட்டு மண்ணால் மூடி நீர் ஊற்றினால் அவை முளைத்து, வளர்ந்து, பூத்து, கருக்கொண்டு, காயாகி, பழமாகி மற்றைய உயிரினங்களுக்கு உணவாகி வாழ்கின்றன. ஒவ்வொரு பழத்திலும் விதைகளைக் காண்கின்றோம். இவ்விதைகள் மீண்டும் முளைத்து வளர்ந்து தம் இனப்பெருக்கத்தை நிலை நாட்டுகின்றன. இந்த முளைக்கும் விதைகளில் உயிருண்டு. உயிருள்ள விதைகள்தான் முளைக்கும். உயிரற்ற விதைகள் முளையா. விதை முளைக்கும் பொழுது உருவாகும் உயிர் ஒரு புது உயிராகும். செடி, கொடி, மரம் ஆகியவை பூத்துக் காய்த்து ஓய்ந்தபின் ஆற்றல் குன்றிப் பட்டு விடுகின்றன. இறந்தபின் உடல், உயிர் ஆகியவற்றின் கதை முடிந்துவிடும்.

2. பறவை, ஊர்வன, நீர்வாழ்வன. இவ்வாறான உயிரினம் முட்டையிட்டு, அடைகாத்து, பொரித்து, தம் இனத்தை இனப்பெருக்கம் செய்கின்றன. இன்னும் சில முட்டைகளை மக்கள் தம் உணவாகவும் பாவிக்கின்றனர். பொரிக்கும் முட்டைகளில் இருந்து வரும் குஞ்சுகள் எல்லாம் புது உயிர்களுடன் பறந்து, ஊர்ந்து, நீந்தித் திரியும். உயிரற்ற முட்டைகள் பெரிக்கமாட்டா. இவைகள் முட்டையிடும் ஆற்றல் குன்றி, முதுமை அடைந்தும் சக்தி குறைந்தும் இறந்து விடுகின்றன. அவற்றின் உடலும், உயிரும் சிதைந்து அழிந்து விடுகின்றன.

3. விலங்குகள். ஆண், பெண் விலங்குகள் ஒன்றுகூடிக் கருத்தரித்துச் சிசுவுண்டாகிப் பெண் விலங்கின் கருவறையில் குறிப்பிட்ட காலத்தில் வளர்ந்தபின் பெண் விலங்குகள் சிசுக்களை ஈன்றெடுக்கின்றன. ஈன்ற கன்றுகள், குட்டிகளை வளர்த்தபின் அவைகளைத் தத்தமது போக்கில் விட்டு விடுகின்றன. அவை வளர்ந்து தாமும் கன்று, குட்டிகளை ஈன்றெடுத்துத் தம் இனப்பெருக்கை நிலைநிறுத்துகின்றன. ஈனும் கன்று, குட்டிகள் யாவும் புது உயிர்கள் பெற்று வாழ்கின்றன. இப் புது உயிர்களை, ஆண் விலங்குகள் பெண் விலங்குகளுடன் ஒன்றுசேரும் பொழுது உயிரணுக்களைக் கொடுத்துதவுகின்றன. இவ்வாறே கன்றுகள், குட்டிகளை, பெண் விலங்குகள் ஈன்றெடுக்கின்றன. பிற உயிர் ஒன்றும் பெண் விலங்கின் கருவறையில் புகுவதையும், அதனால் மறுபிறப்பு ஏற்படுமென்று கூறுவதையும் ஒரு பொழுதும் ஏற்க முடியாது.

4. மனிதன். வயது வந்த ஆண், பெண் ஒருவர்மேல் ஒருவர் காதல் கொண்டு உடலுறவின்போது ஆண் பாய்ச்சும் உயிர் விந்தணுக்களில் ஒன்று பெண் சுரக்கும்  முட்டைகளில்  ஒன்றுடன்  சேர்ந்து  கருவுற்றுப்  பெண்கருவறையில்
     சிசுவாகித்  தங்கி  38  வாரங்களாக   வளர்ந்தபின்   பெண்ணானவள்     
     குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள்.  இக் குழந்தைகளும்  வளர்ந்து, திருமணம்   
     புரிந்து,  அவர்களும்  பிள்ளைகளைப்  பெற்றுத்  தம்  இனப்பெருக்கத்தைச் 
     சீர்படுத்துகின்றனர்.

    மனிதன்  கற்பனையில்  உதித்ததுதான்  சொர்க்கமும்,  நரகமும். தம் வாழ்நாள்  
    முடிவுற்று  இறந்தபின்  தம்  உயிர்  சொர்க்கத்துக்குப்  போய் விடுமென்று    
    கற்பனை பண்ணிச் சந்தோசப்படுகின்றான்.                          

உயிரும் உடலும்  
உயிர் என்பதின் பொருளை ஓர் உயிராற்றல், சக்தி, உயிரியக்கம், சீவன், உயிர்த்துடிப்பு, காற்று, செயல் என்று கூறலாம். உயிர் தனித்து வாழாது. உயிர் வாழ்வதற்கு ஓர் உடல் வேண்டும். “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” என்று கூறுகின்றது திருமூலர் மந்திரம். உயிர் தங்கியிருக்கும் உடம்பு அழியின் உயிரும் அழிந்து விடும். எனவே உயிருக்கும் இறப்புண்டு என்பது புலனாகின்றது. மனிதன் இறக்கும் பொழுது உயிரானது ஆவியாய்ச் சொர்க்கம் அடைகின்றது என்பது ஒரு கற்பனையாகும். ஒரு கற்பனை சில காலம் மக்கள் மத்தியில் நிலைத்திருந்தால் அக் கற்பனை பின்னாளில் மூடநம்பிக்கையாய் மக்கள் மனங்களில் பதிந்து விடுகின்றது.

உயிர் தோன்றியதும் அங்கே ஓர் ஆற்றல், சக்தி, இயக்கம், துடிப்பு, செயல் ஆகியவற்றைக் காணக்கூடியதாகவுள்ளது. உயிரற்ற விதை முளைக்கமாட்டாது. ஒரு விதை முளைத்தால் அதில் உயிர் உள்ளது என்பது தெளிவாகும். அந்த முளைக்கு ஓர் ஆற்றல் வந்துவிடும். அந்த ஆற்றலால்தான் அது வளர்ந்து, பூத்து, கருக்கொண்டு, காயாகிப் பழமாகி, மீண்டும் விதைகளைத் தந்து உதவுகின்றது.

விலங்குகள், மனிதன் ஆகிய உயிரினங்களின் ஆண் வர்க்கத்தினர் அந்தந்தப் பெண் வர்க்கத்தினருக்கு உயிர் விந்தணுக்களைக் கொடுக்க, பெண் கருமுட்டைகள் கருத்தரித்துக் கருவறையில் குறித்த காலத்துக்கு மட்டும் சிசுக்களாய் வளர்ந்தபின் கன்றுகளாய், குட்டிகளாய், குழந்தைகளாய்ப் பூமியில் வந்துதிக்கின்றன. கருத்தரித்ததும் உயிருடன் ஆற்றலும் துடிப்பும் வந்து, சிசுக்கள் அசைந்து வளர்ந்து வருகின்றன. சிசுக்கள் வயிற்றில் இருக்கும் பொழுது அவைகள் ‘அசைகின்றன, துடிக்கின்றன, காலால் உதைகின்றன’ என்று தாய்மார் கூறுவதையும் கேட்கின்;றோம். ‘ஆவியாய் இருந்த என் அப்பா வந்து என் மகனாய்ப் பிறந்துள்ளார்’ என்று சிலர் கூறுவதில் எந்த உண்மையும் இருக்க முடியாது. உயிரற்ற ஆவி எவ்வாறு பெண்ணின் கருவறைக்குள் புக முடியும்? இது உண்மையெனின் குழந்தை பெற முடியாது தவிக்கும் எத்தனையோ பெண்கள் ஆவி மூலம் சுலபமாகப் பிள்ளைகள் பெற்றுவிட முடியுமல்லவா? 

ஊர்வன, விலங்குகள் இறந்தால் அவற்றை மக்கள் நிலத்தில் புதைத்து விடுவர். மக்கள் இறந்தவிடத்து அச் சடலங்களை மண்ணில் புதைத்து விடுவது அன்றிலிருந்து வந்த வழக்கமாகும். இதனாற்றான் இறந்தவன் ‘ஆறடி நிலத்துக்கு மட்டும் சொந்தக்காரன்’ என்று கூறுவர். இவ்வாறு இறந்தவர்களை நிலத்தில் புதைப்பதனால் கூடிய நிலப்பரப்பை இதற்கு ஒதுக்க வேண்டி வந்தது.

சிறு குழந்தைகள் இறந்த விடத்துத் தாயானவள் தன் குழந்தையைப் பிரிந்திருக்க முடியாது அழுது, புலம்பி, நீரின்றி, உணவின்றித் தவித்திருப்பது வழக்கம். தவிக்கும் தாயிடம் ‘அம்மணி! குழந்தை சுவாமியிடம்தான் கோயிலுக்குப் போகின்றது. அது திரும்பி உன்னிடம் வந்துவிடும்.’ என்று கூறி ஆறுதல் படுத்துவர் பெரியோர். மற்றவர்கள் இறந்தவிடத்து ‘அவர் சொர்க்கம் போய்விட்டார். அங்கு நல்ல வாழ்வு வாழ்வார் எம்மவருடன்’ என்று கூறியும் நினைத்தும் சாந்தியடைவர்.

இது இவ்வாறிருக்க, பட்ட மரங்களை மனிதன் எடுத்துப் பெருங் குவியலாகக் குவித்து வைத்திருந்த பொழுது, அன்றொருநாள் எதிர்பாராத நிலையில் தீப்பிடித்து மரக்குவியல் எரிந்து சாம்பலாகி விட்டது. பெரும் மரக் குவியல் எரிந்து சிறிதளவான சாம்பல் கிடைத்தது பற்றி மனிதன் தீர ஆலோசித்தான். இதன்பின்தான்; இறந்த சடலங்களை மரக்குத்திகளின் மேல் வைத்து எரியூட்டி ஒரு பிடி சாம்பல் பெற்று, அதனைக் கடலில் கரைத்துக் கிருத்தியங்களும் செய்யத் தொடங்கினான். இன்று சில நகரங்களில் எரிவாயு மூலம் பிணங்களை எரித்து வருகின்றனர். இன்றும் சில சமயத்தினர் இறந்தவர்களைத் தம் சமயக் கூற்றுக்கு அமைவாக மண்ணில் புதைத்தும் வருகின்றனர். 

முடிவுரை
சொர்க்கம், நரகம், மறுபிறப்பு ஆகியவைகள்  பற்றிச்  சமயங்களும் புராணங்களும் கூறும் செய்திகள்தான் எம்முடன் உலாவருகின்றன. எனவே அதில் உள்ள உண்மைத் தன்மைகளை எம்மால் அறிந்துணர முடியவில்லை. இந்து. புத்த, எகிப்திய, சீன, கிறித்தவ, சமண சமயங்கள் ஆகியவற்றில் சொர்க்கம், அதில் ஏழு (07) வகையான விண்ணுலகுகள் புற்றியும், மகாபாரதம், கம்பராமாயணம், சீவக சிந்தாமணி, திருக்குறள், புராணங்கள் ஆகிய இலக்கிய ஏடுகளில் சொர்க்கம், பதின்நான்கு (14) உலகங்கள் பற்றியும் பேசப்பட்ட செய்திகளையும் காணலாம்.

சொர்க்கம் பற்றி அறிவியலாளரின் கண்டுபிடிப்புகள், ஆய்வறிக்கைகள், செய்திகள் ஒன்றும் இதுவரை வெளிவரவில்லை. பிரபஞ்ச வெளியில் நம் பூமித்தாயின் நிலாவில் மாத்திரம் விஞ்ஞானிகள் கால்பதித்து வந்துள்ளனர். பரந்து விரிந்த பிரபஞ்ச வெளியில் ஒரு சூரிய குடும்பம் உள்ளது. இச் சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்களாகிய (1) புதன், (2) சுக்கிரன், (3) பூமி, (4) செவ்வாய், (5) வியாழன், (6) சனி, (7) விண்மம் (யுறெனஸ்), (8) சேண்மம்  (நெப்டியூன்), (9) சேணாகம் (புளுட்டோ) உள்ளன.  இதில் நாம் வசிக்கும் பூமியைத் தவிர மற்றைய எட்டுக் (08) கோள்களிலும் மக்கள் சென்று வாழக் கூடிய நீர், பிராணவாயு, வெப்பம் ஆகிய வசதிகள் உண்டா என்பதுதான் விஞ்ஞானிகளின் தற்போதைய தொடர் ஆய்வாகவுள்ளது. இந்நிலையில் சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களுக்கும் அப்பால் அமைந்துள்ள சொர்கத்துக்கு எவ்வாறு விஞ்ஞானிகள் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்?

அறிவியல் சார்ந்த ஆய்வுகளுடன் நாம் சொர்க்கம், நரகம், மறுபிறப்பு ஆகியவற்றை அணுக வேண்டும். அப்பொழுதுதான் இவற்றின்; உண்மைத் தன்மையை நாம் உணரலாம்.    ஆனால் நம் இளம் சந்ததியினர் புராணங்கள் கூறுவதை நம்பமாட்டார். அறிவியல் சார்ந்த விடைகளையே அவர் விரும்புவர். அல்லது அவர் பல கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருப்பர். பதில் கடைக்காதவிடத்து அவர்கள் அதிலிருந்து விலகி விடுவர். விலகி விடுவதுமல்லாமல் இவைகள் எல்லாவற்றையும் கற்பனை என்றும,; புராணக் கதைகள் என்றும,; மூடநம்பிக்கைகள் என்றும் ஒதுக்கி வைத்து விடுவர்.

எனவே சொர்க்கம், நரகம், மறுபிறப்பு என்பன இன்னும் சில காலம் கற்பனை, புராணக் கதை, மூடநம்பிக்கை என்னும் பட்டியலில் தொங்கித் தவித்து, காலப்போக்கில் மங்கிக் கரைந்து விடும் என்ற எதிர்வு கூறுவதற்கு மனத்தில் ஓர் இடம் பிடித்து விட்டது.
                          
wijey@talktalk.net