சௌந்தர மகாதேவன் கவிதைகள் சில!

1. மரப்பாச்சி

பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்தங்கக்கடைகளிலும் குழந்தைகள்
விரும்புவது வண்ணமயமான பலூன்களைத்தான்.
பொருட்காட்சி மைதானத்தில் சின்னவனுக்கு
சோட்டாபீம் பொம்மை பிடித்துப்போனது.
பெரியவனுக்கு அத்தனை
வெளிநாட்டுக்கார்ப்பெயர்களும் அத்துப்படி
நிசான் வாங்கவேண்டுமென்றான்
நிசமாக ஓர் நாளேன்றான்.
குழந்தைகள் விளையாடவென்று
முன்பே அம்மா சேர்த்துவைத்த
மரப்பாச்சியும் செப்புச்சாமான்களும்
சாக்குக்குள் விளையாடிக்கொண்டிருக்கின்றன
ஒன்றோடொன்று.

 

 2. சம்பந்தன் அழுதகுரல்

பிறந்த குழந்தையின் அழுகைக்குரல்
பின்வீட்டில் கேட்டுக் கொண்டிருக்கிறது
இசையால் வரைந்த செவிப்பறை ஓவியம்
அக்குட்டியின் அழுகை.
உள்ளதையும் உள்தையும் காட்டிக்கொண்டிருக்கிறது
அழுகையால் மட்டும்.
குழந்தைக்குப் பெயர்வைத்த அன்றுதான்
அக் குட்டியின் தாயைப் பார்க்கிறேன்
அவளும் இன்னொரு குழந்தையாய்
அதன் சாயலில் அன்று தெரிந்தாள்.
அநேகமாய் பிறந்தகுழந்தையின்
அழுகுரல் அச்சுஅசலாய் அப்படியே இருக்கிறது
சின்னவன் பிறந்த அன்று முதலில் கேட்ட குரலாய்
பெரியவன் பிறந்த அன்று பசிக்கு அலறிய முதல்குரலாய்
எனகென்னவோ பெரியவனும் சின்னவனும் சேர்ந்து
அழுத அதே அழுகுரலோடு அந்தக் குழந்தை அழுதுகொண்டிருந்தது
சம்பந்தன் அழுதகுரல் சக்திக்குக் கேட்டதும் அப்படித்தானிருக்கும்
சம்பந்தனுக்கும் சக்திக்கும் சம்பந்தம் உண்டாக்கியதே அழுகைதானே

3. குத்தூசி வினாக்கள்

யாருமற்றவனா நீ? என்றான்
இப்படிக் கேட்பதற்கும்
ஒருவன் உள்ளானே என்றேன்
முகத்திலறைந்தார்போல் சட்டென்று.
உன்னை இதற்குமுன் பார்த்ததில்லையே
என்றான் அடுத்தகணத்தில்.
யாரைத்தான் பார்த்திருக்கிறோம்
எதற்கு முன்பும்? என்றேன்.
ஏன் வந்தாய்? என்றான் சுடுசினத்தோடு
வரவேண்டும் எனத்தோன்றியது
வந்தேனென்றேன்.
இங்கு யாரைத்தெரியும்? என்றான்
நக்கலாய் நகங்கடித்து.
என் முன்னிருக்கும் யாவருக்கும்
நான் தெளிவாகத் தெரிவேனென்றேன்.
எப்போது போவாய்? என்றான்
நடக்கத்தொடங்கியபின் போவேனென்றேன்.
இப்படி விசாரணையின் உருக்காட்டி
வீதியில் திரிகின்றன
நம் இதயம் கிழித்துக்
குருதிபருகும் வில்லங்கவினாக்கள்
 ஓடித்தெறிந்துகொண்டிருக்கிறேன்
ஒவ்வொன்றையும் சாவகாசமாய்.

4.யாரெனத்தெரியாமல்……

பயமாக இருக்கிறது சாமியாடப்போகிற
அந்த உச்சவினாடி.
ஆடிவெள்ளிக்கிழமை அர்த்தஜாமப்பூஜை
தட்டடுக்குத்தீபராதனைக்குத் தயாராகிறாள்
எங்கள்தெரு கிழக்கு உச்சினிமாகாளி
கொட்டுச்சத்தம் காதைப்பிளக்க
அவள் காவல் தெய்வம் சுடலை
மனகாவலம்பிள்ளை ஆஸ்பத்திரிச் சாலைக்கு
ஆவேசத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறார்.
அடுத்து ..மாகாளிதான்
முன்பெல்லாம் நீலகண்டன்பிள்ளை மீது வருவாள்
அவர் போனபின்பு முப்புடாதிஅக்கா மீது வரத்தொடங்கினாள்
அவளும் போய் மாமாங்கமாயிற்று.
இன்று யாரென்று தெரியாமல்
எல்லோருக்கும் பொதுவாய் கொட்டு  அடித்துக்கொண்டிருக்கிறார்
வீரவநல்லூர் இசக்கிக்கம்பர்
இறுக்கத்தை இன்னும் பெரிதாக்கி.
*

mahabarathi1974@gmail.com