‘டாக்டர்’ சிவ தியாகராஜாவுக்கு கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது!

இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்து இலண்டனை வதிவிடமாக்கிக் கொண்ட டாக்டர் சிவ தியாகராஜா அவர்களின் 2008ஆம் ஆண்டின் 248-பக்க 'தமிழ் மக்களும் தழுவிய மதங்களும்' என்னும் 'ஒரு பேப்பர்' கட்டுரைத் தொடர் நூலுக்கு 2007க்கும் 2011க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த சிறந்த இலக்கிய ஆய்வு நூல் என தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கு. சின்னப்ப பாரதி அறக் கட்டளையினர் பரிசளிக்கத் தெரிவு செய்துள்ளனர். இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்து இலண்டனை வதிவிடமாக்கிக் கொண்ட டாக்டர் சிவ தியாகராஜா அவர்களின் 2008ஆம் ஆண்டின் 248-பக்க ‘தமிழ் மக்களும் தழுவிய மதங்களும்’ என்னும் ‘ஒரு பேப்பர்’ கட்டுரைத் தொடர் நூலுக்கு 2007க்கும் 2011க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த சிறந்த இலக்கிய ஆய்வு நூல் என தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கு. சின்னப்ப பாரதி அறக் கட்டளையினர் பரிசளிக்கத் தெரிவு செய்துள்ளனர். இதற்குரிய விருதைச் சென்ற 02-10-2012ஆம் திகதியன்று  நாமக்கல்லில் நடை பெற்ற பரிசளிப்பு விழாவில் டாக்டர் சிவ தியாகராஜா அவர்களுக்கு வழங்கிப் பாராட்டப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.  இந் நூல் பேராசிரியர் கோபன் மகாதேவாவின் அணிந்துரையுடன் தமிழக மணிமேகலைப் பிரசுரத்தினால் வெளியிடப்பட்டது.  சிவ தியாகராஜா கொழும்பு மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கலாநிதிப் பட்டம் பெற்றவர். இலண்டனில் தமிழ் மக்களின் நோயியல் தொடர்பான மரபியல் ஆய்வுகளுக்கு தத்துவக் கலாநிதிப் பட்டம் பெற்றவர். மருத்துவத்துறையில் 40 ஆண்டுகளாக இலங்கையிலும் பிரித்தானியாவிலும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை இந்திய பிரித்தானியப் பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் கதைகளையும் தொடர் நாவல்களையும் எழுதியவர். இதுவரை 10 தமிழ் நூல்களும் நான்கு ஆங்கில நூல்களும் வெளியிட்டவர். லைலா-மஜ்னு, தேன் சிந்தும் மலர், கில்கமேஷ் காவியம், ஈழத் தமிழரின் ஆதிச் சுவடுகள், தமிழ் மக்களும் தழுவிய மதங்களும், மருத்துவக் களஞ்சியம், A Review of Ectopic Pregnancy, The King of Hearts, Peoples and Cultures of Early Sri Lanka, Siva Temples of Early Sri Lanka ஆகியன இவரது முக்கிய படைப்புக்கள். இவர் எமது பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். ஈழவர் இலக்கியச் சங்கமும் அவரைப் பாராட்டுகின்றது.

நுணாவிலூர் கா. விசயரத்தினம், இணைப்பாளர்,
Eelavar Literature Academy of Britain (ELAB)
wijey@talktalk.net

கலாநிதி சிவ தியாகராஜா: ஒரு மருத்துவரின் இலக்கிய வரலாற்று ஆய்வுத் தேடல்!

 – என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்

இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்து இலண்டனை வதிவிடமாக்கிக் கொண்ட டாக்டர் சிவ தியாகராஜா அவர்களின் 2008ஆம் ஆண்டின் 248-பக்க 'தமிழ் மக்களும் தழுவிய மதங்களும்' என்னும் 'ஒரு பேப்பர்' கட்டுரைத் தொடர் நூலுக்கு 2007க்கும் 2011க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த சிறந்த இலக்கிய ஆய்வு நூல் என தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கு. சின்னப்ப பாரதி அறக் கட்டளையினர் பரிசளிக்கத் தெரிவு செய்துள்ளனர். டாக்டர் சிவ தியாகராஜா அவர்கள் உயிரியல், மருத்துவம், மனோவியல், தொல்லியல் ஆகிய பல்வேறுபட்ட துறைகளில் பல்கலைக்கழகப் பட்டங்கள் பெற்றவர். 40 ஆண்டுகாலமாக மருத்துவசேவையில் ஈடுபட்டு வந்தவர். பிரித்தானியாவில் மனநோய் மருத்துவ ஆலோசகராகப் பணியாற்றி கடந்த 2008இல் ஓய்வுபெற்றுள்ளார். இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று இராணுவ ஆக்கிரமிப்பால் அழிந்துபோய்விட்ட கட்டுவன் என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது ஆரம்பக் கல்வியை தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியிலும், உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் சென்ற் ஜோன்ஸ் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் 1963இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் உயிரியல்துறையில் B.Sc பட்டத்தையும், 1969இல் கொழும்பு மருத்துவக் கல்லூரியின் MBBS வைத்திய கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

1971இல் இவர் எழுதிய “A Hundred years of Darwinism” என்ற தலைப்பில் டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் நூறு ஆண்டுகள் என்ற கட்டுரை புகழ்பெற்ற Science Today என்ற சர்வதேச விஞ்ஞான சஞ்சிகையில் April 1971 இல் வெளியானது.

மருத்துவப் படிப்பை முடித்தபின் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இவர் பணியாற்றியுள்ளார். 1975-1979 ஆம் ஆண்டுக் காலங்களில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் Ectopic Pregnancy at the Jaffna General Hospital- a four year study என்ற தலைப்பில், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் கண்ட சினைப்பைக்கு வெளியிலேற்பட்ட கர்ப்பத்தரிப்பு – ஒரு நான்கு ஆண்டுகால மேலாய்வு என்ற வைத்திய ஆய்வை மேற்கொண்டார். இலங்கையில் முதல்தடவையாக மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மருத்துவ ஆய்வுக்காக Dr.Green Memorial Prize என வழங்கப்படும் பிரசித்திபெற்ற டாக்டர் கிரீன் நினைவுப் பரிசை இவர் பெற்றுக்கொண்டார். மருத்துவத்துறையின் மேம்பாட்டிற்கான தரவுக்காக வழங்கப்படும் இப்பரிசு பல ஆண்டுகளுக்கொரு தடவையே வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு ஜனவரி 1980இல் வெளியான யாழ்ப்பாண மருத்துவ சஞ்சிகையான Jaffna Medical Journal இல் 1980இல் பிரசுரமாகியுள்ளது. (Vol. xv,1980, No.1)

1983ஆம் ஆண்டில் இலங்கையில் பூதாகாரமாக வெடித்த இனக்கலவரங்களைத் தொடர்ந்து, பிரித்தானியாவுக்குத் தனது குடும்பத்துடன் புலம்பெயர்ந்த டாக்டர் சிவ தியாகராஜா, இங்கிலாந்திலும் தனது மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து மேற்கொண்டு 1992 இல் இலண்டன் பல்கலைக்கழகத்தின் மனநோய் மருத்துவப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார். ஒருவர் தமது வளமான வாழ்வுக்காக, உயர் கல்விக்காக, அறிவுத்தேடலை வலிந்து மேற்கொள்வதென்பது காலத்தின் கட்டாயமானதொன்றாகும். ஆனால் தேடலே தனது வாழ்க்கையாகக் கொண்டு தனது தொழில்சார் துறைக்கு முற்றிலும் புறம்பான, தான் வரிந்துகொண்ட மருத்துவத்துறைக்கு முற்றிலும் தொடர்பற்ற தொல்லியல், வரலாறு, திரைப்படம் ஆகிய துறைகளிலும் தீவிர ஆய்வாளராக இவர் விளங்குகின்றார். 1999 முதல் சஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்திலும் இலண்டன் ஓரியண்டல்-ஆபிரிக்க கலைக் கல்லூரியிலும் (SOAS) பயின்று வந்த இவர் 2003இல் தொல்லியல் துறையிலும் தனது கலாநிதிப்பட்டத்தைத் தேடிக்கொண்டவர் என்பது உங்களில் சிலருக்கு புதிய செய்தியாக இருக்கலாம். தான் சமர்ப்பித்த The Origins and Evolution of Dravidian Speaking People and some genetically inherited disorders என்ற தலைப்பிலான திராவிட மக்களின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும் பற்றிய ஆய்வுக்காக Ph.D தத்துவக் கலாநிதிப் பட்டத்தை அங்கு இவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த 35 ஆண்டுகளாக இலக்கியம், மருத்துவம், தொல்லியல், மனோவியல், சினிமா, ஆகிய பலதரப்பட்ட துறைகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் இவர் எழுதிய கட்டுரைகள் எவையுமே மேம்போக்கானவையல்ல. ஒரு சிறிய கட்டுரையென்றால்கூட நண்பர் சிவ தியாகராஜாவின் ஆழமான தேடலின் வியர்வை அதில் சிந்தியிருப்பதைக் காணமுடிகின்றது.

எனக்கும் நண்பர் சிவ தியாகராஜாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் நட்புக்கூட இவரது தேடலின் பாற்பட்டதுதான். ஒரு தடவை சுவிட்சர்லாந்திலிருந்து குருத்து என்ற சஞ்சிகையொன்றினை எனது விமர்சனத்திற்காக அனுப்பியிருந்தார்கள். அதில் ஒரு கட்டுரை எனது கவனத்தை ஈர்த்திருந்தது. தாஜ்மஹால் ஒரு சிவன்கோவிலா என்றதொரு கேள்வியை எழுப்பி ஆம் என்ற தன் கருத்தினை அந்தக் கட்டுரையாசிரியர் பல ஆய்வுக் குறிப்புகளுடன் வெளியிட்டிருந்தார். மேலெழுந்தவாரியாக வாசிக்கும் எவரும் அக்கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். எனக்கு நெருடலாகத் தோன்றிய இந்தக் கட்டுரையை ஒரு பிரதியெடுத்து நண்பர் தியாகராஜாவின் கருத்தை அறிந்துகொள்ளும் வகையில் அவருக்கு அனுப்பியிருந்தேன்.

ஒரு சில வாரங்களில் முத்துமுத்தான தெளிவான கையெழுத்தில் ஒரு பெரிய கட்டுரையையே அவர் எனக்கு அனுப்பியிருந்தார். நான் பேச்சற்று அதிர்ந்துவிட்டேன் என்றே சொல்லலாம். நான் அனுப்பிவைத்திருந்த குருத்து சஞ்சிகையின் கட்டுரையின் ஒவ்வொரு கருத்தையும் மிக விரிவான சான்றாதாரங்களோடு மறுதலித்து மிகுந்த தேடலின் இனிய வலிகளைத் தாங்கி அவர் அந்த எதிர்வினைக் கட்டுரையை எழுதி எனது பார்வைக்கு அனுப்பியிருந்தார். தாஜ்மஹால் கட்டப்பட்ட காலக்கணிப்பினை துல்லியமாக எடுத்தாண்டு எழுதப்பட்ட அக்கட்டுரையை சுவிட்சர்லாந்து குருத்து குழுவினரின் பார்வைக்கு பிரசுரத்திற்காக அனுப்பியிருந்தேன். அத்துடன் அக்கட்டுரை பல இணையத்தளங்களிலும் வெளிவந்து ஒருகாலகட்டத்தின் பேசுபொருளாகவிருந்தது.

கலாநிதி சிவ தியாகராஜா அவர்களின் 35 வருடகால அறுவடைகளான அவரது படைப்புக்களை ஜனரஞ்சக ஆக்க இலக்கியம், சினிமா, வரலாற்று ஆய்வு, மருத்துவம் என்று நான்கு வகையாகப் பிரிக்கலாம். இன்று வெளியீடு காணப்படவிருக்கும் மருத்துவக் களஞ்சியம் என்ற நூல் அச்சில் வெளிவந்த இவரது பத்தாவது நூலாகவுள்ளது. Peoples and Cultures of Early Sri Lanka என்ற நூலும், Buddhist Remains in Jaffna என்ற நூலும் பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் என்ற நூலும் இன்னமும் நூலுருவாக்கப்படவில்லை. லண்டனில் தமிழர் தகவல் நடுவத்தின் பிரசுரமாக வெளிவரும் மீட்சி இதழ்களில் The Tamils – Origins and Evolution of Dravidian Civilization என்ற தொடர் கட்டுரை தற்போது வெளிவந்தவண்ணமுள்ளது. இதுவும் விரைவில் நூலுருவாகும் வாய்ப்பு உள்ளது. ஆக மொத்தம் 14 படைப்புகளை தனது 35 ஆண்டு எழுத்துலக வாழ்வில் எமக்கு வழங்கியிருக்கிறார். இவரது நூல்கள் முதலில் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்து பின்னர் புத்தக வடிவம் பெறுவது வழக்கம். இவர் எழுதிய முதல் நூல்கள் இரண்டும் நாவல்களாகும். வசந்த காலக் கோலங்கள் என்ற நாவல் 1977 இலும், லைலா-மஜ்னு என்ற நாவல் 1980 இலும் வெளிவந்தன. அடுத்த பதினெட்டு ஆண்டுக்காலம் தனது தொழிலிலும் குடும்பத்திலும் ஆய்வுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலம். இக்காலங்களில் இவரது நூல்கள் ஏதும் வெளிவரவில்லை. இவரது படைப்பிலக்கிய வாழ்வின் உறங்குநிலைக்காலம் அது. வீரியத்துடன் பின்னாளில் வெளிக்கிளம்பத் தேவையான சக்தியை இவருக்கு வரமாக வாய்த்த தேடலின் வாயிலாக இக்காலகட்டத்தில் சேமித்து வந்திருக்கிறார் என்றே நான் கருதுகின்றேன்.

1998ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் முதல் தடவையாக 50 ஆண்டுக்காலம் சேவையாற்றிய நடிகர் ஜெமினி கணேசனைப் பற்றி The King of Hearts என்ற ஆங்கில நூலை எழுதி வெளியிட்டார். 2000ம் ஆண்டில் லைலா-மஜ்னு நாவல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்து அதன் அனைத்துப் பிரதிகளும் விற்பனையாயின. உலக இலக்கிய வரலாற்றில் அழியாப் புகழ்பெற்ற 12ம் நூற்றாண்டின் பாரசீகக்கவிஞன் நிசாமியின் காவியக் கவிதையான லைலா மஜ்னுவின் தமிழ்வடிவம் இதுவாகும். ஆசிரியரின் முன்னுரையில் இக்காவியம் பற்றிய வரலாற்றுப் பின்னணி பற்றிய ஆய்வுத்தகவல் தெளிவாகத் தரப்பட்டுள்ளது. லைலா-மஜ்னு நாவலுக்கு நான் எழுதிய அறிமுக உரையில் லைலாமஜ்னு நாவலைவிட அந்நாவலின் பின்னணியாக இவர் எழுதிய மிக நீண்ட முன்னுரையே அந்தநூலின் சிறப்பாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தேன்.

2001இல் நீ சாகமாட்டாய் ராதா என்ற தலைப்பில் சிவ தியாகராஜாவின் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. இருபது வருடகால இடைவெளியில் ஈழத்துத் தமிழ்மக்களின் வாழ்நிலையைப் பகைப்புலமாகக் கொண்ட ஐந்து சிறுகதைகளின் தொகுப்பாக இது வெளிவந்தது.

தேன் சிந்தும் மலர் சிறப்பான கதையமைப்புடன் கடுகதிவேகத்தில் விரைந்தோடிய நாவல். கொழும்பிலிருந்து வீரகேசரி நிறுவனம் நடத்திய மித்திரன் வாரமலரிலும், பின்னாளில் இலண்டன் புதினம் பத்திரிகையிலும் தொடராக வெளிவந்து பல்லாயிரக் கணக்கான வசகாகளைக் கவர்ந்த நாவல் இது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்த ஓர் இளம் பெண்ணிற்கும், இலண்டனில் பிறந்து வளர்ந்த ஒரு வாலிபனுக்கும் இங்கிலாந்தில் திருமணம் நடைபெறுகின்றது. திருமணம் நடந்த முதல் இரவிலேயே தனது புதிய கணவனோடு எந்தவிதமான உறவும் வைத்துக்கொள்ள இயலாது எனத் தெரிவிக்கிறாள் அந்தப் பெண். இவ்வாறு ஆரம்பமாகும் இந்த நாவல், கடுகதி வேகத்தில் நகர்த்தப்பட்டு இலங்கையின் மலையகத்தில் உள்ளத்தைத் தொடும் ஓர் திருப்பத்துடன் முடிவுறுகின்றது.

2002இல் வெளிவந்த கில்கமேஷ் காவியம், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சுமேரிய மொழியில் எழுதப்பட்ட உலகின் முதல் நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு நூல் என்ற வரலாற்றுப் பெருமையைக்கொண்டது. உலகில் முதன்முதலாக மனித கரங்களால் எழுதப்பட்ட இலக்கியம் என்று கருதப்படும் இந்த சுமேரிய இலக்கியம் ஆங்கில மொழிமூலமாகத் தமிழுக்கு மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது. 4700 ஆண்டுகளுக்கு முன்னர் சுமேரிய நாட்டில் உருக் என்ற நகரை தாபித்து ஆண்ட மன்னன் கில்கமேஷ். அவனது வரலாறு அவனது ஆட்சிக் காலத்திலேயே இதிகாசக் கதைகளாக சுமேரிய மொழியில் களிமண் வில்லைகளில் எழுதி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் எழுந்த அக்காடியர்களால் கி.மு.2200-1800 காலப்பகுதியில் இது அக்காடிய மொழியில் பெயர்க்கப்பட்டு களிமண் சாசனங்களில் எழுதிப் பேணப்பட்டது. 19ம் நூற்றாண்டில் அகழ்வாராய்ச்சியாளர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் புதையுண்டு கிடந்த நகரங்களை அகழ்ந்து வெளிக்கொண்டுவரும் வேளையில், இந்தக் களிமண் சாசனங்கள் மீண்டும் உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டன. இது ஒரு வீரசாகசக் கதையாக, அறநிலை உணர்த்தும் கதையாக, துன்பியல் நாடகமாக பல்வேறு மட்டங்களில் மதிப்பிடப்படலாம். சாதாரணமான அன்றாட வாழ்வுக்கு அப்பால் வித்தியாசமான அனுபவங்களைச் சந்திக்க விரையும் மனிதசுபாவம், அறிவை விரிவாக்கிக் கொள்ள விழையும் உந்துதல், இறவாமல் என்றுமே நிரந்தரமாக வாழக்கூடிய வழியைத் தேடும் ஆர்வம், இறுதியில் மனிதவாழ்வின் நிலையாமையை உணரும்போது ஏற்படும் ஏமாற்றம் இவற்றின் அடிப்படையில் அமைந்தது கில்கமேஷ் காவியம்.

2002 இல் வெளியான எம். ஜி. ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் – சில இனிய நினைவுகள் விற்பனையில் சாதனை படைத்த நூல். இந்நூலில் புகழ்பூத்த தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்களான எம். ஜி. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோர் பற்றி வெவ்வேறு காலகட்டங்களில் கலாநிதி தியாகராஜா எழுதிய கட்டுரைகள் இடம்பெறுகின்றன. மேலும் கல்யாணப்பரிசு என்ற பழம்பெரும் திரைப்படத்தின் விமர்சனமும், பின்னணிப்பாடகர் T.M.சௌந்தரராஜன் அவர்களின் திரை இசைப் பாடல்கள் பற்றிய கட்டுரையும் இடம்பெற்றுள்ள இந்நூலில் வெளியான கட்டுரைகள் வீரகேசரி, பொம்மை, மேகம், ஆகிய இதழ்களில் முன்னர் வெளியானவை.

2004இல் வெளிவந்த ஈழத் தமிழரின் ஆதிச்சுவடுகள். 2008 இல் வெளியான தமிழ் மக்களும் தழுவிய மதங்களும் என்பன வரலாற்று ஆய்வு நூல்கள். ஈழத் தமிழரின் ஆதிச்சுவடுகள் இலங்கை வீரகேசரியிலும் லண்டன் தேசம் சஞ்சிகையிலும் வெளியான ஆசிரியரின் எழுமொழியும் ஈழமும், மணிபல்லவம், மணிபல்லவத் தொண்டைமான், யாழ்ப்பாணம்: பெயரின் தோற்றம், வல்லிபுரப் பொற்சாசனம்: ஒரு மீளாய்வு, பண்டைய ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்கள், பௌத்தமும் தமிழரும், தாஜ்மஹால் ஒரு கண்ணோட்டம் ஆகிய 8 கட்டுரைகள் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் முன்னுரையுடன் இடம்பெற்றுள்ளன.

தமிழ் மக்களும் தழுவிய மதங்களும் என்ற நூலின்படி, இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிந்து சமவெளி நாகரிகத்தில் (ஹரப்பா) சிவன், தாய்க்கடவுள், சிவலிங்கம் ஆகிய உருவ வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. இன்றைய சைவசமயம் அங்கேதான் உருவாகியது என்பதற்கான ஆதாரங்கள் இவை என்கின்ற சைவமத ஆய்வாளர்கள் கூற்றும், ஆரியர்கள் சிந்து சமவெளியில் தான் முதலில் வாழ்ந்து இந்து மதத்தை ஆரம்பித்தார்கள் என்ற முடிவும் தவறானவை என்று கலாநிதி தியாகராஜா இந்நூலில் விளக்குவதுடன், கி.மு.3000 முதல் கி.பி.2000 வரையிலான சமய வரலாற்றை சுருக்கமாகவும், சுவையாகவும், தெளிவாகவும் இந்நூலில் பதிவுசெய்கிறார். தமிழ் மொழி பேசும் மக்களின் மூதாதையர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் கடந்த 30,000 ஆண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்றுவரை அவர்கள் கடைப்பிடித்த பல்வேறு வழிபாட்டு முறைகளையும், தெய்வங்களையும், சமய சிந்தனைகளின் தோற்றங்களையும் இந்நூலில் நடுநிலை நின்று ஆய்வு செய்திருக்கிறார்.

இவ்விரு நூல்களும் முன்னர் கட்டுரைத் தொடராக கொழும்பு வீரகேசரி. இலண்டன் ஒரு பேப்பர் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்து பின்னர் நூலுருவம் பெற்றவை.

அண்மையில் மருத்துவக் களஞ்சியம் என்ற தலைப்பிலான மருத்துவ உசாத்துணைக் கைந்நூலொன்றினை இவர் வெளியிட்டுள்ளார். இந்நூல் 18.6.2011 சனிக்கிழமை மாலை லண்டன் சிவயோகம் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. இதுவும் இலண்டன் புதினம் பத்திரிகையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடராக வெளிவந்து பலநூறு வாசகர்களின் பாராட்டுதல்களைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பாகும்.

18.6.2011
நன்றி: http://thesamnet.co.uk/?p=25207