தமிழகம்: இனத்தையும் பண்பாட்டையும் காப்பது தாய்மொழியே. உலகத் தாய்மொழி தின விழாவில் பேச்சு!

தமிழகம்: இனத்தையும் பண்பாட்டையும் காப்பது தாய்மொழியே. உலகத் தாய்மொழி தின விழாவில் பேச்சு!வந்தவாசி.பிப்.18.  வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற உலகத் தாய்மொழி தின விழாவில், ஒரு இனத்தையும் அதன் பண்பாட்டையும் அழிந்து விடாமல் காப்பதில் அந்த இனத்தின் தாய்மொழியே முக்கிய பங்காற்றுகிறது என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பேசினார். இவ்விழாவில் பங்கேற்ற அனைவரையும் நூலக வாசகர் வட்டச் செயலாளரும், நல்நூலகருமான கு.இரா.பழனி வரவேற்றார். வாசகர் வட்டத் துணைத் தலைவர் க.சண்முகம், பெ.பார்த்திபன், பா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ‘தாய்மொழியாம் தமிழ்மொழியில் கையெழுத்திடுவோம்’ இயக்கத்தை தமிழில் கையெழுத்திட்டு, வந்தவாசி ஒன்றியக்குழு உறுப்பினர் ம.சு.தரணிவேந்தன் துவக்கி வைத்தார். அவர் பேசும்போது, தாயைப் போற்றி பாதுகாக்காத சமூகமும், தாய் மொழியைக் கொண்டாடாத இனமும் முன்னேற முடியாது என்று பேசினார். மூத்தத் தமிழறிஞருக்கான பாராட்டு மேனாள் தமிழாசிரியர் க.கோவிந்தனுக்கு செய்யப்பட்டது.

விழாவிற்கு தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் ‘ மொழியே நம் விழி’ எனும் தலைப்பில்  சிறப்புரையாற்றும்போது, இன்றைக்கு உலகிலுள்ள மொழிகளில் சில அழிந்துவரும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான  யுனெஸ்கோ அமைப்பு கூறியுள்ளது. எந்த ஒரு மொழியும் மக்களின் பேச்சுமொழியாக இல்லாத சூழலில் நிச்சயம் அது பயன்பாட்டிலிருந்து அழிந்துவிடும்.

எந்த ஒரு நாட்டிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வியானது அதனது தாய்மொழியிலேயே இருக்க வேண்டும். தாய்மொழியைப் பிழையின்றி கற்று விட்டால்,ஏனைய மொழிகளைக் கற்றுக் கொள்வது மிக எளிதானது. பேச்சிலும் எழுத்திலும் பிற மொழிச் சொற்களை நாம் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், நம் தாய்மொழி மெல்ல மெல்ல அழிந்துவிடும். காலத்திற்குத் தேவையான மாற்றங்களையும் நாம் உள்வாங்கிக் கொண்டு, மொழியை புதுப்பிக்க வேண்டிய பணியும் தமிழ் கற்ற அறிஞர் பெருமக்களுக்கு உண்டு.

நம் மொழிதான் நமக்கான அடையாளமாகும். இந்த சமுதாயத்தை மொழியின் வழியேதான் பார்க்கின்றோம். நமக்கான விழியாக இருப்பதும் மொழியே. ஒரு இனத்தின் பண்பாட்டை அழித்துவிட்டால், அந்த இனத்தின் மொழியை அழித்துவிடலாம். மொழியை அழித்துவிட்டால், அந்த இனத்தையே அழித்துவிடலாமென்று மொழியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டால், நிச்சயம் நம் தாய்மொழியாம் தமிழ் ஒருபோதும் அழிந்துவிடாது என்று பேசினார்.  

நிறைவாக, நூலக உதவியாளர் மு.இராஜேந்திரன் நன்றி கூறினார். 

படக்குறிப்பு:

வந்தவாசி அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற உலகத் தாய்மொழி தின விழாவில், தமிழில் கையெழுத்திடுவோம் இயக்கத்தை வந்தவாசி ஒன்றியக்குழு உறுப்பினர் ம.சு.தரணிவேந்தன் துவக்கி வைத்தபோது எடுத்த படம்.அருகில், நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ், நல்நூலகர் கு.இரா.பழனி, மேனாள் தமிழாசிரியர் க.கோவிந்தன் ஆகியோர்  உள்ளனர்.

haiku.mumu@gmail.com