தமிழர் மத்தியில்: நந்தா!

கனடாத் தமிழர்களுக்கு  'தமிழர் மத்தியில் நந்தா' என்னும் பெயரில் பரிச்சயமானவர் நந்தகுமார் ராஜேந்திரன்கனடாத் தமிழர்களுக்கு  ‘தமிழர் மத்தியில் நந்தா’ என்னும் பெயரில் பரிச்சயமானவர் நந்தகுமார் ராஜேந்திரம். இவரை எனக்கு எனது மொறட்டுவைப் பல்கலைக்கழக நாட்களிலிருந்தே பழக்கம். அந்தப் பழக்கம் அண்மையில் இவரது மறைவு வரையில் தொடர்ந்தது. மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் நான் எனது கட்டடக்கலைத்துறைப் படிப்பினை ஆரம்பித்த சமயம் நந்தகுமார் கட்டடக்கலைத்துறையின் இறுதி ஆண்டு மாணவராகவிருந்தார். நான் எனது முதல் வருடத்தை பல்கலைக்கழக விடுதியிலிருந்துதான் கற்றேன். முதல் நாள் விடுதிக்குச் சென்றதிலிருந்து புதிய மாணவர்கள் அனைவரும் அங்கிருந்த  ‘சீனியர்களான’ சிங்கள மாணவர்கள் அனைவராலும் இனவேறுபாடின்றிக் கடுமையான ‘ராகிங்’ எனப்படுகின்ற பகிடிவதைக்கு ஆளாக்கப்பட்டோம். அந்த வருடம் பல்கலைக்கழகங்களில் பகிடிவதை தடை செய்யப்பட்டிருந்த போதும் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களால் அதனிடமிருந்து தப்ப முடியவில்லை. ஆனால் எமது ‘சீனியர்களான’ தமிழ் மாணவர்கள் மட்டும் மிகவும் கடுமை குறைந்த பகிடி வதைக்குப் புதிய மாணவர்களை உள்ளாக்கினார்கள். நான் முதன் முறையாக நந்தாவைச் சந்தித்ததே அவ்வகையான பகிடிவதை ஓன்றின் மூலம்தான். எனது விரிவுரைகள் தொடங்குவதற்கு முதல் நாள் வெளியில் எங்கோ  சென்று விட்டு விடுதிக்குத் திரும்பியபோது அங்கு எங்களை எதிர்பார்த்து நந்தா காத்திருந்தார். விடுதியில் அப்போது தங்கியிருந்த புதிய மாணவர்களை குறிப்பாகக் கட்டடக்கலைத்துறை பயில வந்திருந்த மாணவர்களை அழைத்து இலேசாக வெருட்டலுடன் கூடிய கேள்விகளைக் கேட்டார். அன்றிலிருந்து தொடங்கிய எங்களது பழக்கம் அண்மையில் அவரது மறைவுவரை தொடர்ந்தது. நான் நகர அமைப்பு அதிகார சபையில் பணி புரிந்து கொண்டிருந்த சமயம் நந்தா மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சென்று திரும்பி கொழும்பில் சுயமாகத் தொழில் செய்துகொண்டிருந்ததாகவும் ஞாபகம். அப்பொழுதிருந்தே சுயமாகத் தொழில் செய்வதில் முனைப்புள்ள ஒருவராகத்தான் நந்தா விளங்கினார்.

அன்றைய காலகட்டத்தில் அவர் குடும்பத்தவர்களுக்குச் சொந்தமான பம்பலப்பிட்டி ‘ஃபிளாட்’ ஒன்றில் வசித்து வந்தார். அவரது தந்தையாரின் மறைவின்போது மாணவர்கள் பலராக அங்கு சென்றது இப்பொழுதும் ஞாபகமிருக்கிறது. நந்தாவின் மனைவியான வசந்தகெளரி நந்தகுமாரும் ஒரு கட்டடக்கலைஞரே. அவர் எங்களுக்கு ஒரு வருடம் ‘சீனியர்’. அவர்களிருவரினதும் திருமணம் காதல் திருமணம். அவர்களுக்கு ஒரு மகள் துளசி. ‘வாட்டர்லூ’ பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கல்வி பயில்கின்றார்.

1983இல் நாடிருந்த நிலையில் பலர் புலம் பெயர்ந்தோம். நான் அமெரிக்கா வழியாக வர முனைந்து அங்கு தடுப்பு முகாம் வாழ்க்கை, நியூயார்க் நகர வாழ்க்கை என்று ஒருவருடத்தைக் கடந்து கனடாவுக்கு மான்ரியால் வழியாக வந்தபோதுதான் நந்தாவுடன் மேலும்பலர் ஏற்கனவே 1983 கலவரத்தைத் தொடர்ந்து கனடா வந்துவிட்ட விடயம் தெரிந்தது. அதன் பின்னர் நான் டொராண்டொ வந்து விட்டேன். நந்தாவும் டொராண்டோ வந்து விட்டார். ஆரம்பத்தில் நந்தா ஒசிங்டன் வீதியும், கொலிஜ் (Ossington /College)  வீதியும் சந்திக்குமிடத்திலிருந்த Duplex ‘அபார்ட்மென்டில்’  நண்பரொருவருடன் தற்காலிகமாக வசித்து வந்தார். அப்பொழுது அடிக்கடி அங்கு நான் விஜயநாதன் போன்ற எனது ஏனைய நண்பர்களுடன் செல்வதுண்டு. அருலிருந்த மைதானமொன்றில் குழுக்களாகப் பிரிந்து கிரிக்கட் விளையாடுவதுண்டு. மேலும் அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற பலவேறு தமிழ் மக்கள் விடுதலை நாடி நடைபெற்ற நிகழ்வுகள் பலவற்றில் நந்தாவும் பங்களித்திருக்கின்றார். யோர்க் பல்கலைககழகத்தில் சிங்கள மக்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் விநியோகிப்பதற்காக ‘Peace Loving Oppressed Tamils’ (PLOT)என்னும் தலைப்பில் அவர் தயாரித்த பிரசுரமொன்றின் ஞாபகம் இன்னும் பசுமையாகவிருக்கின்றது. அந்தப் பிரசுரமும் இன்னும் என்னிடமுள்ள ஆவணங்களில் இருக்கக் கூடும்.  அதன் பிறகு காலம் செல்லச் செல்ல ஒவ்வொருவரும் குடும்பம், பொறுப்புகளென்று பிரிந்தபோதும் ஒருவருக்கொருவரிடையேயான் தொடர்புகளை இழந்துவிடவில்லை. ஆரம்பத்தில் மொறட்டுவைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க நிகழ்வுகளில் சந்திப்பதுண்டு. அவ்வப்போது நேரிலும் சந்திப்பதுண்டு. தொலைபேசி, மின்னஞ்சலென்று தொடர்பு அறுபடாமல் தொடர்ந்து கொண்டே வந்தது.

இந்தத் 'தமிழர் மத்தியில் ' வழிகாட்டி கனடிய தமிழர் வர்த்தக சபையினால் 2006ஆம் ஆண்டில் விருது கொடுத்துக் கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இச்சமயத்தில் நந்தா இங்குள்ள பிரபல கட்டடக்கலை நிறுவனமொன்றில் , Page  & Steele,  பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பல தொடர்மாடிக் கட்டடங்களுக்கான வடிவமைப்பு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார். இவ்விதமாக அவர் பணியாற்றிக்கொண்டிருந்த போதும் அவரது சுயதொழில் முனைப்பும் அவரைத் தூண்டிக்கொண்டேயிருந்தது. அதன் விளைவாக உருவானதே அவரது ‘தமிழர் மத்தியில்’ விளம்பரக் கைநூலாக்கும்.  உலகத் தமிழ் மக்களின் முதலாவது வர்த்தகக் கைநூல் இதுவேயாகும். இது மிகவும் தரமாக, கண்ணைக் கவரும் வகையில் வெளிவருவதற்கு அவரும் அவரது மனைவியான வசந்தகெளரி இருவரின் கடும் உழைப்புமே முக்கியமான காரணம். தமிழர் மத்தியில் வர்த்தகக் கைநூலுக்குக் கிடைத்த அமோக வரவேற்பினைக் கண்டு நிறைய இதுபோன்ற கைநூல்கள் பின்னர் தோன்றின. அவற்றில் சில நின்று பிடித்தன. இன்னும் சிலவோ காணாமலே போயின. தமிழர் மத்தியில் இன்றும் புதிய நிருவாகத்தின் கீழ் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது. இந்தத் ‘தமிழர் மத்தியில் ‘  வர்த்தகக் கைநூல் கனடியத்  தமிழர் வர்த்தக சபையினால் 2006ஆம் ஆண்டில் விருது கொடுத்துக் கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நந்தாவுக்கு என் எழுத்தில் மிகவும் மதிப்பும், விருப்பமுமுண்டு. ஒவ்வொரு வருடமும் தமிழர் மத்தியில் வர்த்தக வழிகாட்டியின் தயாரிப்பு வேலைகள் ஆரம்பிக்கும் சமயம் அதற்கு ஆக்கங்கள் வேண்டி அழைக்கத் தொடங்கி விடுவார். தமிழர் மத்தியில் வர்த்தக வழிகாட்டியாக இருந்தபோதும் , கடந்த சில வருடங்களாக, எனது கதை, கட்டுரை, கவிதைகளையும் இடையிடையே இணைத்தே வெளியிட்டு வந்தார். அதற்காக அவருக்குப் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளிவந்த எனது படைப்புகளை பாவித்துக்கொள்ள அனுமதியளித்திருந்தேன். இது தவிர ‘பதிவுகள்’ இணைய இதழின்மீதும் அவருக்கு மிகுந்த மதிப்பிருந்தது.

இந்தச் சமயத்தில் இன்னுமொரு விடயத்திற்காகவும் அவரைப் பதிவுகள் நன்றியுடன் நினைவு கூர்ந்துகொள்கிறது. பதிவுகள் 2004ம் ஆண்டில் சிறுகதைப் போட்டியொன்றினை சர்வதேசரீதியில் நடாத்தியது. அச்சிறுகதைப் போட்டிக்குரிய பரிசுத் தொகையினை (முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுத் தொகையினை) அவரது தமிழர் மத்தியில் நிறுவனமே வழங்கியதைத்தான் நானிங்கு குறிப்பிடுகின்றேன்.

இவ்விதமாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கைப் பயணத்தில் திடீரென நந்தா நோய்வாய்ப்பட்டு மருத்துவ நிலையமொன்றில் அனுமதிக்கப்பட்ட செய்தியினை அறிந்தபொழுது அதிர்ச்சியாகவிருந்தது. அவரை நேரில் சென்று பார்த்தபொழுது இன்னும் அதிர்ச்சியாகவிருந்தது. அந்த அளவுக்குக் கடும் சுகவீனமுற்றிருந்தார். ஆனால் அந்த நிலையிலும் நந்தாவின் மனம் துவண்டுபோய்விடவில்லை. வழக்கம்போலவே பலவேறு விடயங்களைப் பற்றி அதே பழைய பாணியில் உரையாடிக்கொண்டிருந்தார். ஒரு விடயத்தைக் கூறும்பொழுது கண்களைச் சிமிட்டி, வாயைக் குவித்து , ஒருவித சிரிப்புடன் சில விமர்சனத்துக்குள்ளாகும் விடயங்களைக் குறிப்பிடும் அந்தப் பாங்கினை  நோயின் உபாதை வருத்திக் கொண்டிருந்தபோதும் அவர் கைவிடாதது கண்டு , அந்த மனோதிடம் கண்டு வியப்பாகவிருந்தது. வேறு யாராவதென்றால் நோயின் உபாதையினால் எல்லாவற்றிலும் வெறுப்பு, சலிப்புற்றுச் சோர்ந்து கிடப்பார்கள். ஆனால் நந்தா அந்த வகையினரல்லர். அதன் பின்னர் அவர் வீடு திரும்பியதும் அவரைச் சென்று சந்தித்தேன். அப்பொழுதும் அதே மாதிரியான உள ஆரோக்கியத்துடன் அவர் விளங்கினார். தளர்வு கண்டு தளராத அந்த ஆளுமைதான் நந்தா. தொடர்ந்தும் அண்மையில் அவர் மறைவு வரையில் அவ்வப்போது மாலை நேரங்களில் தொலைபேசியினூடாக உரையாடிக்கொள்வோம்.  பதிவுகள் எப்பொழுதும் நந்தாவை நன்றியுடன் நினைவு கூரும். பதிவுகளின் ஆவணப்படுத்தலினூடு நந்தாவின் பங்களிப்பும் தமிழ் இலக்கிய வரலாற்றில், குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்படும். அதுவே பதிவுகள் அவருக்குச் செய்யும் நன்றிக்கடன். நந்தாவின் அதே தளராத மனோதிடத்துடன் நிச்சயம் அவரது குடும்பத்தவர்களும் நிச்சயம் வாழ்க்கையினைத் தொடருவார்கள். அதுவே நந்தாவின் விருப்பமுமாகும்.

நந்தாவின் விருப்பத்தின்படி அவரது இறுதிக்கிரியைகள் குடும்பத்தவர்கள் மட்டும் கலந்துகொண்ட பிரத்தியேக நிகழ்வாக  மே 30 , 2012  அன்று நடைபெற்றது. அதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். குடும்பத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதே சமயம் கனடியத் தமிழர் வரலாற்றில்,  ‘தமிழர் மத்தியில்’ வர்த்தக வழிகாட்டி மூலம் நந்தா எப்பொழுதும் நினைவு கூரப்படுவாரென்று நிச்சயமாக நம்பலாம். மீண்டுமொருமுறை பதிவுகள் நந்தாவை தனிப்பட்டரீதியிலும், பதிவுகள் சார்பிலும் நினைவு கூர்கிறது.

[குறிப்பு: நந்தகுமாரின் குடும்பத்தவர்களுக்குத் தமது அநுதாபங்களைத் தெரிவிக்க விரும்புபவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் – திருமதி வசந்தகெளரி நந்தகுமார்: 647-344-2183]

ngiri2704@rogers.com