தமிழர் வாழ்வில் சினிமா திரையரங்குகளின் மகாத்மியம்! சிவாஜியின் கனவு தொலைந்தது!. வாரிசுகளின் கனவு விதையாகிறது!

சாந்தி தியேட்டர்முருகபூபதி“பழையன  கழிதலும்  புதியன  புகுதலும்  வழுவல  கால வகையினானே ”   என்பது  நன்னூல்  வாக்கு.  இதனை பனையோலையில்   எழுத்தாணியால்  பதிவுசெய்தவர்  பவனந்தி முனிவர்   என்று   சொல்லப்படுகிறது. வள்ளுவரும்   கம்பரும்  இளங்கோவும்  அவ்வையாரும் ஏட்டுச்சுவடிகளையும்   எழுத்தாணியையும்  ஏந்திக்கொண்டுதான் அமரத்துவமான   எழுத்துக்களைப்படைத்தனர்  என்பதற்காக  இந்த நூற்றாண்டின்  பிள்ளைகள்  பனைமரம்  தேடி அலையவேண்டியதில்லை. அவர்கள்   கணினியிலும்  கைத்தொலைபேசியலும் தட்டிக்கொண்டிருக்கின்றனர். கைத்தொலைபேசியிலேயே  சினிமாப்படங்களையும்  சின்னத்திரை மெகா தொடர்களையும்  விளையாட்டுக்களையும்,  தாம்  விரும்பும் இசை, நடன  நிகழ்ச்சிகள்  உட்பட  அனைத்தை  பொல்லாப்புகளையும் முகநூல்   வம்பு  தும்புகளையும்  பார்த்துக்கொள்ளமுடியும். இனி  கையில்  எடுத்து  வாசிக்க  புத்தகம்  எதற்கு ?  படம்பார்க்க தியேட்டர்தான்   தேவையா? சில  படங்களை  அகலத்திரையில்  பார்த்தால்தான்  திருப்தி எனச்செல்பவர்கள்  விதிவிலக்கு. தொலைக்காட்சியின்   வருகை,  திருட்டு விசிடியின்  தீவிர  ஆக்கிரமிப்பு   முதலான  காரணிகளினால்,  திரையரங்குகள் படிப்படியாக   மூடப்பட்டுவருகின்றன.

இலங்கை,   இந்தியா  உட்பட  வெளிநாடுகளில் வணிகவளாகங்களுக்குள்  சிறிய  திரையரங்குகள்  தோன்றிவிட்டன. ஒரு  வணிக வளாகத்திற்குள்  பிரவேசித்தால்  சின்னச்சின்ன திரையரங்குகளையும்   தரிசிக்கமுடியும். மனைவியுடன்   ஷொப்பிங்  செல்லும்  கணவன்,  மனைவியால் பொறுமை  இழக்கும்  தருணங்களில்  அந்த  அரங்கினுள்  நுழைந்து ஏதாவது  ஒரு  படத்தை  கண்டுகளித்துவிட்டு,  மனைவி  ஷொப்பிங் முடிந்ததும்,  பொருட்களை  காவி வருவதற்கு  செல்லமுடியும். இதுதான்  இன்று  பல  குடும்பங்களில்  நடக்கிறது. வெளிப்புற   படப்பிடிப்புகளினாலும்  காதல்  காட்சிகளுக்காக தயாரிப்பாளர்கள்   வெளிநாடுகளில்  லொகேஷன்  தேடுவதனாலும் இந்தியாவில்  பல  சினிமா  ஸ்ரூடியோக்கள்  மூடுவிழாக்களை சந்தித்தன. தமிழ்நாட்டில்  பிரபல்யமான  எஸ். எஸ். வாசனின்   ஜெமினி,  சேலம் மொடர்ன்   தியேட்டர்ஸ்  சுந்தரத்தின்  பல  ஏக்கர்  நிலப்பரப்புள்ள  ஸ்ரூடியோ,   சென்னை  நெப்டியூன்,  ஏ.எல். ஸ்ரீநிவாசனின்  சாரதா, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின்  கற்பகம்,  பானுமதியின் பரணி, நாகிரெட்டியின்   விஜயா, வாஹினி,  எம்.ஜி.ஆரின்  சத்தியா   உட்பட சில  சிறிய   ஸ்ரூடியோக்களும்   மூடப்பட்டுவிட்டன. சென்னைக்குச்சென்றால்,  பஸ்பயணிகள்  நடத்துனரிடம்  ஜெமினிக்கு ஒரு  டிக்கட்  என்று  கேட்டு  ஏறி  இறங்கும்  காட்சியை  காணலாம். ஜெமினிக்கு  இன்று  அதுதான்  வாழும்  அடையாளம்.   அந்த புகழ்பெற்ற  ஸ்ரூடியோவிலிருந்துதான்  மகத்தான  வெற்றிப்படங்கள்  ஒளவையார்,  சந்திரலோகா,   வஞ்சிக்கோட்டை  வாலிபன், ஒளிவிளக்கு  என்பன   வெளியாகின.

சென்னை  புறநகரில்  அமைந்திருந்த  எம்.ஜி.ஆர்.  திரைப்படநகரமும் மறக்கப்பட்ட   நகராகிவிட்டது. ஸ்ரூடியோவுக்குள்   செட்  அமைத்து  சினிமா தயாரிக்கும்  காலமும் படச்சுருள்களில்   திரைப்படத்தை  பதியும்  காலமும் மலையேறிவிட்டது. எல்லாம்  டிஜிட்டல்  மயமாகிவிட்ட  அவசரயுகத்தில்  நாம் வாழ்ந்தாலும்,   ஒரு  காலத்தில்  பல்வேறு  மொழிப்படங்களை  பார்த்து ரசித்த  பிரபல்யமான  திரையரங்குகள்  நிரந்தரமாக  மூடப்படும் காட்சிகளைப்பார்க்கும்போது    கவலையாகத்தான்    இருக்கிறது. இலங்கைத்   தலைநகரில்  சினிமாஸ்  குணரத்தினமும் –  சிலோன் தியேட்டர்ஸ்   செல்லமுத்துவும்,   எஸ்.பி. எம். சவுண்ட் ஸ்ரூடியோவை    வத்தளையில்  நீண்டகாலம்  இயங்கவைத்த  எஸ்.பி. முத்தையாவும்   இன்று  எப்படி  இல்லையோ   அவ்வாறே அவர்களினால்    நடத்தப்பட்ட  பல  திரையரங்குகளும் ஸ்ரூடியோக்களும்    இருந்த  இடம்தெரியாமல் மறைந்துவிட்டன.

நாம்  சிறுவயதில்  பாடசாலையில்  படிக்கும்  காலத்தில்,  இலங்கை வானொலி    வர்த்தகசேவையில்  ஒலிபரப்பாகும்,  வெள்ளவத்தை பிளாசா,  சபையர்,  மருதானை  காமினி,  சென்றல்,  ஜிந்துப்பிட்டி மைலன்,   முருகன்,  கொட்டாஞ்சேனை  கெயிட்டி,  செல்லமஹால், கிருலப்பனை  கல்பனா,    கொம்பனித்தெரு  நவா,  மற்றும்  ஜெசீமா, செயின்ஸ்தான்,  மட்டக்களப்பு     இராஜேஸ்வரா,   யாழ்ப்பாணம்  வெலிங்டன்   என்பனவும் நினைவில்தான்  வாழ்கின்றன.

பருத்தித்துறை   சென்றல்,  கிளிநொச்சி  ஈஸ்வரன்,  இணுவில் ஸ்ரீகாலிங்கன்,   நீர்கொழும்பு   மீபுர,   கிங்ஸ்,  ராஜ் சினிமா,  ஹட்டன் லிபேர்டி   முதலான  பல  திரையரங்குகள்  இன்று  பூமித்தரையில் மரணித்து  மறைந்துவிட்டன. யாழ்ப்பாணம்   ஸ்ரீதர்  திரையரங்கு  டக்ளஸ்  தேவானந்தாவின் அலுவலகமாகியது. அகலத்திரை   அமைந்திருந்த  மேடையில்  அவர்  மேசைபோட்டு அமர்ந்து   மக்களின்  குறைகளைக்கேட்டார்.   பக்கத்து  அறையில் தனது   அலுவலகத்தை  இணைத்து,  சில  நாட்கள்  பாதுகாப்புக்காக அந்த   பெரியமேசையிலேயே   இரவில்  உறங்கியதாகவும்  தகவல். மேற்குறித்த   திரையரங்குகளில்  படங்களைப்  பார்த்த ரசிகப்பெருமக்களின்  நினைவுகளில்  அவை   அழியாத கோலங்களாகிவிட்டன.இன்றைய   பல  மூத்தவர்கள்  தமது  இளமைக்காலத்தில் சோடிசோடியாக   காதல் மொழிபேசிய  அந்தத்திரையரங்குகளில் இணைந்தவர்களில்   எத்தனைபேரின்  கனவுகள்  நனவாகின  என்பதும்  எத்தனைபேர்  சில  மணிநேர  இன்பத்துடன் நழுவிப்பறந்தனர்   என்பது  அவரவர்க்கே  வெளிச்சம்.

பல திரையரங்குகளில்  பகல்பொழுது  காட்சிகள்  ( மெட்னி ஷோ) காதலர்களுக்காகவே  காண்பிக்கப்பட்டன. சென்னையில்  முதல்  காட்சியிலேயே தமது  அபிமான  நடிகர் நடிகையரை   பார்த்துவிடுவதே  வாழ்க்கையின்  இலட்சியம் –   மிகப்பெரிய   சாதனையென்று  ரசிகப்பெருமக்கள்  வாழ்கிறார்கள். முன்பொரு  சமயம்  தேவர்  பிலிம்ஸ்  வெளியிட்ட  ஸ்ரீபிரியா  நடித்த ஆட்டுக்கார  அலமேலு  படத்தின்  முதல் காட்சியை பார்த்துவிடத்துடித்த  ஒரு  இளம்தாய்,   தனது  கைக்குழந்தையை ரசிகர்களின்  நெரிசலில்  மூச்சுத்திணறச்செய்து  சாகடித்துவிட்டு, திரையரங்குள்  நுழைந்து  இறந்த  குழந்தையை  கையிலேயே வைத்திருந்து   முழுப்படத்தையும்  பார்த்துவிட்டு,  வீடு திரும்பியபின்னர்,   இறந்த குழந்தையை  தரையில்  கிடத்திவிட்டு தூக்குப்போட்டு  தற்கொலை  செய்துகொண்ட   அதிர்ச்சிகரமான செய்தியை   இன்று  எத்தனைபேர்  நினைவில்  வைத்திருக்கிறார்கள். அந்த  இரண்டு  உயிர்களினதும்  மரணச்சடங்கிற்கு  சின்னப்பாதேவரோ    அல்லது  ஸ்ரீபிரியாவோ   சென்றதாக செய்தியில்லை. பாலூட்டும்   குழந்தையை  அவ்வாறு  தமிழ்  சினிமா  மோகத்தால் அன்று   அந்தப்பெண்  சாகடித்தாள்.   இன்று  தமது  அபிமான நாயகனின்  புதிய  படம்  வெளியானால்,  அவரின்  கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம்  செய்து  தத்தமது  ஆன்மாவை கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்   இன்றைய  தமிழ்  சினிமா ரசிகர்கள். ஹட்டன்   லிபேர்டி  தியேட்டர்  உரிமையாளர் வி.கே.ரி பொன்னுசாமி 1983  வன்செயல் காலத்தில்  கொல்லப்பட்டார்.    இவர்தான்  கலைஞர் ஏ.ரகுநாதனின்  தெய்வம்  தந்த  வீடு  படத்தை  தயாரித்தவர்.  இன்று அந்த   அரங்கும்  இல்லை. சினமாஸ்  குணரத்தினமும்  1989  இல்  கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.    வத்தளை  ஹெந்தளையில்  அமைந்திருந்த அவருடைய  விஜயா  ஸ்ரூடியோவும்  1983  வன்செயலில்  தாக்கி அழிக்கப்பட்டது.    நீர்கொழும்பில்  1961  இல்  அவர்  கட்டி  எழுப்பிய அழகான

எனப்பெயர்பெற்ற  ராஜ் சினிமா  திரையரங்கும் 1983  இல்  தீக்கிரையாக்கப்பட்டது. இத்தனைக்கும்  சினிமாஸ்  குணரத்தினம்  தமிழ்ப்படங்கள் தயாரிக்கவில்லை.   அவர்  வெளியிட்ட  அனைத்து சிங்களப்படங்களும்   சிங்கள  ரசிகர்களினால்  நல்ல  வசூலை அள்ளிக்குவித்தன. விஜயா   ஸ்ரூடியோ  தீயில்  வெந்துகொண்டிருக்கிறது  என அறிந்ததும்,  வீட்டில்  அணிந்திருந்த  சாரத்துடன்  காரில்  ஓடிச்சென்று   சாரத்தை  மடித்துக்கட்டிக்கொண்டு திரைப்படச்சுருள்களை   காப்பாற்ற  போராடியவர்தான்  நடிகரும் மக்கள்  கட்சியின்  தலைவருமான  விஜயகுமாரணதுங்க. பல   சிங்களப்படங்களுடன்  இந்திய – இலங்கை  கூட்டுத்தயாரிப்பான மாமியார்  வீடு  படத்தை  இயக்கிய  பிரபல தமிழ் இயக்குநர் வெங்கட் 1983 இல்  வத்தளையில்  நடுவீதியில் எரித்துக்கொல்லப்பட்டார்.

கொழும்பு   ஆமர்வீதியில்  அமைந்த  கெப்பிட்டல்  தியேட்டரின் முகாமையாளர்  ஒருவர்   என் அண்ணன்  என்ற   படத்தின்  முதல் காட்சியின்போது  ஏற்பட்ட  சனநெரிசலில்  வெறிபிடித்த  ஒரு  ரசிகரின்    கத்திக்குத்துக்கு  இரையானார். 1983   வன்செயலில்  தமிழர்களின்  சொந்தத்திரையரங்குகளும்   அவர்கள் வாடகைக்கும்   குத்தகைக்கும்  எடுத்து  நடத்திய  திரையரங்குகளும்  கயவர்களினால்  தீயிட்டு கொளுத்தப்பட்டன. அவ்வாறு  எரிந்த  அரங்குகள்  கல்பனா,  சபையர்,  காமினி, நீர்கொழும்பு  ராஜ்  சினிமா.  இன்னும்  பல  இருக்கலாம்.  நினைவில் இருப்பதை  சொல்கின்றேன். கல்பனா   திரையரங்கு  உரிமையாளர்  நாராயணசாமி  இலங்கையில் தயாரிக்கப்பட்ட  மஞ்சள் குங்குமம்  படத்தை  எடுத்தவர்.  கொழும்பில் அம்பாள் கபே   என்ற  சைவஹோட்டலை  பல  இடங்களிலும் நடத்தியவர். கொழும்பின்   மேயராகவும்  எம்.பி.ஆகவும்  இருந்த  ஜாபிர் ஏ. காதரின்   திரையரங்குதான்  மருதனை  சென்றலும்  –  கொள்ளுப்பிட்டி லிபேர்ட்டியும். இவ்வாறு  இலங்கையிலும்  தமிழ்நாட்டிலும் திரையரங்குகளுக்குப்பின்னாலும் – பல  வெற்றிப்படங்களை  தயாரித்த ஸ்ரூடியோக்களின்  பகைப்புலத்திலும்   துன்பியல்  செய்திகளும் சுவாரஸ்யங்களும்   நிரம்பிக்கிடக்கின்றன. இந்தப்பின்னணி   தகவல்களுடன்  அண்மையில்  சென்னையிலிருந்து ஒரு   செய்தி  வெளியாகியிருக்கிறது.

நடிகர்  திலகம்  சிவாஜிகணேசனின்  தொடக்ககால   கனவாக  விளங்கி,  1961   ஆம்  ஆண்டில்  நனவாகிய  சென்னை   மவுண்ட் ரோடில்     அமைந்த  சாந்தி  திரையரங்கும்  தனது  ஆயுளை நிறைவுசெய்துகொண்;டது. தமது  உழைப்பில்  ஒரு  திரையரங்கு  வாங்கவேண்டும்  என்ற கனவுடன்    வாழ்ந்தவருக்கு  உதவ  முன்வந்தவர்  திரையுலக  பிரமுகர் ஜி. உமாபதி.    இவர்  பின்னாளில்  தயாரித்த  படம்தான் ராஜராஜசோழன்.   ஒரு  காலத்தில்  உமா  என்ற  பெயரில்  ஒரு இலக்கிய  இதழும்  நடத்தியவர்.  இதில்  எங்கள்  தெளிவத்தை ஜோசப்பின்   சிறுகதையும்  வெளியாகியிருக்கிறது. மணிரத்தினத்தின்   அக்னி நட்சத்திரம்  படத்தில்  வில்லனாக  வந்து இயல்பாகவே   நடித்தவர். சிவாஜிகணேசனின்  மூத்த  மகள்  சாந்தநாயகியின்  பெயரில் அமையப்பெற்ற   சென்னை  சாந்தி  திரையரங்கும்  சிவாஜியின் மனைவி   பெயரில் தஞ்சாவூரில்  அமைந்த  கமலா  திரையரங்கும் தமிழகத்தில்   பெயர்பெற்றவை.

திரைப்படங்கள்   பார்ப்பதில்   ஆர்வமில்லாத    கர்மவீரர்  பெருந்தலைவர்  காமராஜர்  தனது  வாழ்நாளில்  பார்த்த   இரண்டு தமிழ்ப்படங்கள்  குறிப்பிடத்தகுந்தன. ஜெயகாந்தன்   இயக்கிய  உன்னைப்போல்  ஒருவன்,  பிம்சிங்  இயக்கிய  பாவமன்னிப்பு  ஆகிய  படங்களை  மாத்திரமே  அவற்றில் சம்பந்தப்பட்டவர்களின்  விருப்பத்தின்  பேரில்  பார்த்திருக்கிறார். உன்னைப்போல்  ஒருவன்  பிராந்தியப்படங்கள்  வரிசையில் தேசியவிருது  பெற்றது. பாவமன்னிப்பு  மத நல்லிணக்கத்தை  வலியுறுத்திய சிவாஜிகணேசனின்   வெள்ளிவிழாப்படங்களின்  வரிசையில் இணைந்த  படம். உன்னைப்போல்  ஒருவன் படக்காட்சியை  சென்னை  கலைவாணர் அரங்கில்  பார்த்த  காமராஜர்,  சாந்தி  திரையரங்கு  அன்றைய மவுண்ட்ரோடில் தொடங்கியபொழுது    தமிழக   முதலமைச்சராக இருந்தவேளையில்    திறந்துவைத்து    முதல்காட்சியில்   பாவமன்னிப்பு  படத்தை பார்த்தார்.

சாந்தி  திரையரங்கு  சிவாஜி  நடித்த  நீலவானம்,    பட்டிக்காடா பட்டணமா   ஆகிய   படங்களிலும்   வருகிறது.   நீலவானம்  படத்தில் சிவாஜி,  சாந்தி  திரையரங்கின்  வாயிலில்  டிக்கட்  கிழிப்பவராக நடிப்பார்.     பட்டிக்காடா  பட்டணமா  படத்தில்  வில்லன்கள்  சிவாஜியை  காரில் கடத்தும்பொழுது  சென்னையை  சுற்றிக்காண்பிக்கும்  சமயத்தில் ” இந்தா  பார் சாந்தி  தியேட்டர்  ”  என்பார்கள். அக்காட்சியின் முடிவில்,  ” அடேய்  எனக்காடா  சாந்தி  தியேட்டர் காட்டுறீங்க ? ”  என்று  இரட்டை  அர்த்தத்தில்  பேசுவார். சாந்தி  திரையரங்கு  சிவாஜிகணேசனின  அபிமான  ரசிகர்களுக்கு  தனி  அடையாளமாகத்திகழ்ந்தது.  சிவாஜியின்  அனைத்து  படங்களும் இங்கு திரையிடப்பட்டன.

பல   முன்னணி  நடிகர்  நடிகையரின்  உருவப்படங்களையும்  சாந்தி அரங்கில்   அவர்  காட்சிப்படுத்தியதனால்,   தமது  படங்களும்  அந்த வரிசையில்  இடம்பெறவேண்டும்  என  விரும்பிய  பல  நடிகர்கள் தமது  விருப்பத்தை   மேடைகளிலும்  தெரிவித்தனர். சிவாஜி   ரசிகர்கள்,  சாந்தி  திரையரங்கின்  பக்கச்சுவரில்  சிவாஜி நடித்த  பராசக்தி  முதல்   இருநூறுக்கும்  மேற்பட்ட  படங்களின் பெயர்களை கால  அட்டவணைப்பிரகாரம்  தெளிவாக பதிவுசெய்து வைத்திருந்தனர்.

அங்கு   நடந்த  நிகழ்வொன்றில்  கலந்துகொண்ட  எம்.ஜி.ஆர்.,  தமக்கு மிகவும்  பிடித்தமான  திரையரங்கு  சாந்தி   எனத்தெரிவித்ததுடன், தம்பி  சிவாஜி  தாம்  பிறந்த  தஞ்சாவூர்   திருவையாறு சங்கிலியாண்டபுரத்திலும்  ஒரு  திரையரங்கு  அமைக்கவேண்டும் என்று   வாழ்த்தினார். ஆனால்,  கமலா  திரையரங்கு  தஞ்சாவூரில்  அமைந்தது. சிவாஜியும்   எம்.ஜி.ஆரின்  மறைவின்  பின்னர்   எம்.ஜி.ஆரின்  மனைவி  ஜானகி  தலைமையிலான  அண்ணா  தி.மு.க.வுடன்  தனது கட்சியையும்  கூட்டுச்சேர்த்துக்கொண்டு   திருவையாறு   தொகுதியில் நின்று   தேர்தலில்  தோற்றார்.   1961   இல்  சிவாஜியின்  கனவு அண்ணாசாலையில்    நனவாகினாலும்,   அவர்   குடும்பத்தின்   வாரிசுகள்  கடந்த   சில  நாட்களுக்கு   முன்னர்  தமது  புதிய   கனவை அங்கு விதைத்துவிட்டனர்.

சாந்தி திரையரங்கு இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பின்னர் அங்கு புதிதாக உருவாகும் வணிக வளாகத்தில் சாந்தி என்னும் பெயரில் சிறிய திரையரங்கு அமையும் என்று சிவாஜியின் வாரிசுகள் தெரிவித்துள்ளனர். பழைய தலைமுறையின் கனவுகள் அன்று அப்படி இருந்தன. இன்றைய தலைமுறையின் கனவுகள் உலகமயமாதலுக்குள் பிரவேசித்துவிட்டன.

” பழையன  கழிதலும்  புதியன  புகுதலும்  வழுவல  கால வகையினானே ”

letchumananm@gmail.com