தலிபான் வசமிருந்து தப்பித்தல்

“தலிபான் எமது காலத்தின் பிற்போக்குத் தனத்திற்கு சாட்சி. சிலவேளைகளில் தலிபான் என்பது நம் சமகாலத்தின் அரசியலைத் தெரிவிக்கும் வரலாறு. தலிபான் என்பது நாம் பெற்ற கல்வியையும் பயிற்சியையும் எமக்கு ஞாபகமூட்டுவது. எமது வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தும் சட்டங்களுக்கு மற்றொரு பெயர் தலிபான். சொர்க்கத்தினை அடையும் ஆசையின் பொருட்டும,; கடவுள் நம்பிக்கையின் பொருட்டும் நாம் சுமந்து திரியும் பயத்தில் விளைந்த எழுதப்படாத சட்டத்தின் பெயர் தலிபான். மதவெறிகொண்ட எந்த அரசும் தலிபானின் தன்மை படைத்ததுதான். அமெரிக்க ஜனநாயக சமூகத்தில் பாசிசவாதியான ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸினைச் சுற்றியிருக்கும் குழவினர் தலிபான்கள்தான். பின்லேடன் ஒரு தலிபான். ஜார்ஜ் புஸ் ஒரு தலிபான். ஸமீரா மக்மல்பாவ் ஒரு தலிபான். தலிபான் எனும் வார்த்தையைப் பிறவற்றுடன் இணைத்துப் பொறுத்திச் சொல்ல என்னை அனுமதியுங்கள். நான் தலிபான். நீங்கள் தலிபான். அவர் தலிபான். நாங்கள் தலிபான்கள். அவர்கள் தலிபான்கள். நாம் எல்லோரும் தலிபான்கள்.”  – ஸமீரா மெக்மல்பாவ், ஈரானிய திரைப்பட இயக்குநர் –

1.

யமுனா ராஜேந்திரன் -திரைப்படம் வழி வரலாற்தை தேடிச் செல்பவன் எனும் அளவில், தலிபான் குறித்துச் சிந்திக்கிறபோது பல்வேறு முன்வரலாற்று அனுபவங்களும், திரைப்படப் பதிவுகளும் உடனடியாகவே ஞாபகம் வருகிறது. இருபதாம் நூற்றாண்டு வரலாற்றை எடுத்துக் கொண்டால் பாசிசத்தைக் கருத்தியலாக நிறுத்திய இனக்கொலை வரலாறு, அதிகாரவர்க்கத்திற்கும் பழமைவாதிகளுக்கும் எதிரானது எனக் கோரப்பட்டு அறிவுஜீவிகளுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் அப்பாவி மக்களுக்கும் எதிராகத் திரும்பிய கலாச்சாரப் புரட்சி, ஸ்டாலின் காலத்துச் சைபீரியப் பாலைவன சித்திரவதை முகாம்கள், அதீத மானுடக் கனவில் விளைந்து பிற்பாடு மனிதக் கபாலங்களின் எண்ணிக்கையைக் குவித்த கொடூரமாக மாறிய போல்பாட் காலத்திய பூஜ்யவரலாற்று மானுட விரோத நடவடிக்கைகள் என கருத்தியல்களுக்கும் வன்முறைக்குமான சாட்சியமாக வரலாறு நம் முன் இருக்கிறது. சின்ட்லர்ஸ் லிஸ்ட், கில்லிங் பீல்ட்ஸ், பாஸ்டர்நாக், டுலிவ், புளு கைட், பேர்வல் மை காங்குபைன் போன்ற திரைப்படங்கள் முறையே பாசிசம், போல்பாட் படுகொலைகள், ஸைபீரிய முகாம் சித்திரவதைகள், கலாச்சாரப் புரட்சி காலத்து அத்துமீறல்கள் போன்றவற்றின் திரைச் சாட்சிகளாக நமக்கு முன் இருக்கின்றன.

முஜாஹிதின்கள் அடுத்ததாக தலிபான்கள் என ஆப்கானிஸ்தானில் பெண்களின் மீதான கடும் ஒடுக்குமுறை முப்பதாண்டு வரலாறு கொண்டதானாலும், நாம் கவனத்தில் கொள்ளும் ஆறு திரைப்படங்களும் இயங்கும் வரலாற்றுக் களம் ஆறு ஆண்டுகால தலிபான் ஆட்சியாகவே இருக்கிறது. ஈரானிய இயக்குனரான மெக்மல்பாவ்பின் கந்தஹார் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 நிகழ்வுக்கு முன்பாகவே வெளியாகியது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி உச்சத்தில் இருந்த காலத்தில் அவரது திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அவரது புதல்வியான ஸமீரா மக்மல்பாவ்பின் மதியம் ஐந்து மணிக்கு எனும் திரைப்படம் தலிபான்கள் வீழந்ததன் பின்னான காலகட்டத்தில், 2003 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகத் திட்டம் என்பது ராணுவ நடவடிக்கையின் மூலம் ஸ்தாபிக்கப்படுவது என நினைக்கிற எவரும் தனது திரைப்படத்துடன் உடன்பட மாட்டார்கள் எனத் தனது திரைப்படம் குறித்து விவரிக்கிறார் ஸமீரா. மக்மல்பாவ்பின் பதினான்கு வயது மகளான ஹனாவின் படமான பைத்தியநிலை தரும் சந்தோசம் எனும் விவரணப்படம் அவருடைய இருபத்திநான்னு வயது அக்காவான ஸமீரா அவரது திரைப்படத்தை உருவாக்கும் வேளையில் அவரது படத்துக்கான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் அவர் அடைந்த அனுபவங்களைப் பதிவு செய்வதாக அமைகிறது.

2003 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆப்கானியப்பட இயக்குனரான சித்திக் பெமார்க்கின் ஒசாமா திரைப்படம் ஆண்பிள்ளையாக வேசம்பட்ட நேர்கிற பதினான்கு வயது ஆப்கான் பெண்குழந்தையொன்றின் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறை குறித்துச் சொல்கிறது. ஒசாமா திரைப்படத்தின் கதாநாயகியான பதினான்கு வயதான மரினா குல்பஹாரயின் ஆப்கானிய சுய அனுபவத்தைப்பதிவு செய்யும் விவரணப்படமாக ஜப்பானிய இயக்குனர் நபூமி நகிமுராவின் விவரணப்படம் அமைகிறது. இதுவன்றி 2002 ஆம் ஆண்டு இந்தியா சினிமாவின் பிரபல கதாநாயகியான மனிஷா கொய்ராலா நடிக்க, தலிபானிடமிருந்து தப்பித்தல் எனும் திரைப்படத்தை வங்காள இயக்குனரான உஜ்ஜல் சட்டோபாத்யாய இயக்கியிருக்கிறார். ஆப்கானியர் ஒருவரைக் காதலித்து மணந்துகொண்டு ஆப்கானிஸ்தானில் சென்று வாழ நேரும் இந்தியப் பிராமணப் பெண்ணொருத்தியின் வாழ்பனுபவமாக விரிகிறது இப்படம். சுஷ்மிதா பந்தோபாத்யாயா எனும் வங்காள பிராமணப்பெண் ஒருவரின் சுயவாழ்க்கைச் சரிதத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவலின் திரைவடிவமாக இத்திரைப்படம் இருக்கிறது. நான்கு திரைப்படங்களுமே வேறு வேறு பரிமாணங்களில் பெண்களின் மீதான தலிபான்களின் ஒடுக்குமுறையை மையப்படுத்தியிருக்கிறது. இரு விவரணப் படங்களும் தலிபான்கள் பெண்களின் மனோவியலில் விட்டுச்சென்றிருக்கும் பயங்கரம் குறித்ததாகவும், ஆப்கான் மக்களின் மீது தலிபான்கள் விட்டுச்சென்றிருக்கும் மீளமுடியாத பாதிப்புகள் குறித்ததாகவும் இருக்கிறது.

திரைப்படத்தை வரலாற்றின் சாட்சியமாக வைத்துப்பார்க்கிற அளவில், கலாச்சாரப் புரட்சி காலத்துச் சீனச் செங்காவலர்களின் நடவடிக்கையையொத்த தன்மை கொண்ட நடவடிக்கையாகவே தலிபான்களின் நடவடிக்கையும் அமைந்திருப்பது தெரிகிறது. அறிவுஜீவிகள், செவ்வியல் இலக்கியவாதிகள், மரபிசைக் கலைஞர்கள், போன்றவர்களின்பால் செங்காவலர்கள் கொண்டிருந்த வன்முறையின் அளவினின்று கொஞ்சமும் குறைiயாத வன்முறையை ஆப்கான் தலிபான்கள், பெண்கள், அறிவுஜீவிகள் போன்றவர்கள் மீது செலுத்தியிருக்கிறார்கள். கலாச்சாரப் புரட்சி காலத்து நடவடிக்கைக்கும், தலிபான்களின் நடவடிக்கைக்கும் இருந்த விசேசமான வெறுப்பின் குவிமையங்களாக மாற்றுக் கருத்துள்ள அறிவுஜீகள் இருந்திருக்கிறார்கள். தலிபான்களின் வன்முறை எதனாலேனும் தனித்த தன்மை பெறுவதனால், அது அவர்கள் பெண்கள் மீது கொண்ட ஆதிக்கமும் வெறுப்பும் துவேஷமும் பயமும் எனறு சொல்லலாம். ஸாங் இமு, சென்கெய்கே போன்ற சீனத் திரைப்பட இயக்குனர்களின் படங்களைப் பார்த்தவர்கள், சித்திக் பெமார்க், ஸமீரா போன்ற இயக்குனர்களின் ஆப்கான் படங்களோடு உடனடியாகவே காட்சியளவிலும், உளவியல் அளவிலும் உடன்பாடு காணமுடியும். தாம் நம்பிய கருத்தியலுக்கு மாணவர்களையே மாற்றத்துக்கான காரணியாகக் கண்டனர் கலாச்சாரப் புரட்சியின் தலைவர்கள். பெண்வெறுப்புக் கருத்தியிலால் வழிநடத்தப்ட்ட தலிபான்கள், மாணவர்களாயிருந்து மாற்றத்தின் காரணமாக ஆகினார்கள். தலிபான்களின் தலைவர்களான முல்லா ஒமரும், பின்லாடனும் சிறுவர்களைக் கட்டாயமாகக் கடத்தி வந்து, அவர்களுக்கு இஸ்லாமிய வாழ்க்கைக் கல்வியைக் கற்பிக்கிறார்கள். கடத்தி வரப்பட்டுப் பயிற்சியளிக்கப்பட்ட சிறுவர்களையே இஸ்லாமிய இலட்சிய உலகின் குடிமக்களாகவும் கனவுகாண்கிறார் பின்லாடன்.

சீன இயக்குனரான ஸாங் இமுவின் டுலிவ் எனும் திரைப்படத்திலும், சித்திக் பெமார்க்கின் ஒசாமா திரைப்படத்திலும் வரும் ஒரே மாதிரியான காட்சி ஒன்றை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். டுலிவ் படத்தில் ஒரு உடல் ஊனமுற்ற செங்காவலரின் இனம் மனைவி பிரசவ வேதனையில் மருத்வமனையில் அனுமதிக்கப்படுகிறார். பிரசவத்தில் பிரச்சினை வந்துவிடுகிறது. இரத்தப் போக்கு ஏற்பட்டு விடுகிறது. கலாச்சாரப் புரட்சியை வழிநடத்தும் செங்காவலர்களான மாணவர்கள் அந்த மருத்துவமனைக்கள் நுழைகிறார்கள். முதலாளித்தவத்துவப் பாதையாளராகவும் பிறபோக்காளராகவும் அந்த மருத்துவமனையின் மகப்பேறு நிபுணர் அவர்களால் பிரகடனப்படுத்தப்படுகிறார். முதலாளித்தவ முறையில் அவர் மகப்பேறு சிகிச்சைமுறைகளைக் கையாள்கிறார் எனச் சொல்லி அவரது கழுத்தில் ஓரு வசவுச்சொல் அட்டையையும் தொங்க விடுகிறார்கள். அவரைப் பட்டிணி போடுகிறார்கள். அரைகுறையாக மருத்துவம் படித்த கற்றுக்குட்டிச் செங்காவலர்கள் புரட்சிகர முறையில் மகப்பேறு பார்ப்பதற்காக அந்தப்பெண் இருக்கும் அறைக்குச் செல்கிறார்கள். இரத்தப் போக்கினால் அந்தப் பெண் கதறுகிறாள். இருபது வயதுக்குள்ளேயே இருக்கக் கூடிய அனுபவமற்ற செங்காவலர்களின் அதிகப் பிரசிங்கத்தினத்தினால், அந்த இளம் பெண் இரத்தவெள்ளத்தில் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கிறாள். பெண்ணின் தாய் பட்டிணியில் வாடியபடி சோர்ந்து கிடக்கும் மகப்பேறு நிபணரிடம் தன் மகளுக்கு மருத்துவம் செய்யுமாறு மன்றாடுகிறாள். பட்டிணியில் வாடியதால் அவருக்கு ஸ்மரணையே இல்லை. அந்தத் தாய் அவருக்கு உண்பதற்கென பாண் வாங்கி வரச் செய்கிறாள். பட்டிணி கிடந்தவர் பசியினால் பரக்கப் பரக்க நான்கைந்து பாண்களை உண்கிறார். பட்டிணி கிடந்த அவர் அதிகமாக பாண்களைச் சாப்பிட்டதால் வயிறு புடைத்துக்கொள்ள வயிற்றுவலியில் துடிக்கத் தொடங்குகிறார். மகப்பேற்றுக்கு வந்த பெண் கதறல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிப் போகிறது. இரத்த வெள்ளத்தில் கால் பரத்தியபடி அவள் மரணமுறுகிறாள். 

சித்திக் பெமார்க்கின் ஒசாமா திரைப்படத்தில் வயதான ஒரு ஆணுக்கு வைத்தியம் பார்க்கும் பெண் மருத்துவர் ஒருவர் தலிபான்கள் மருத்துவமனைக்குள் கூட்டமாக நுழைந்ததும் தன்னை மறைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தலிபான்களின் நம்பிக்கையின்படியும், முஜாஹிதின்களின் நம்பிக்கையின்படியும் பெண்கள் மருத்துவர்கள் ஆண்களின் உடம்பையோ, ஆண் மருத்துவர்கள் பெண்களின் உடம்பையோ பரிசோதிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் மருத்துவர்கள் பாலியல் வேட்கையின் பாற்பட்டு விடுவார்கள் என்பதால், மருத்துவமனையில் வேலைசெய்யும் பெண் மருத்துவர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். ஒரு ஐரோப்பியப் பெண் மருத்துவரைக் கல்லால் அடித்துக் கொல்லவும் செய்கிறார்கள். முழு மருத்துவ மனையும் மூடப்படுகிறது. நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து கூட்டமாக வெளியேற, ஒரு கால் ஊனமுற்றவர் மட்டும் ஊர்ந்து செல்கிறார். அவர் ஊர்ந்து சென்று வராண்டாவின் மூலையில் திரும்பும்போது காட்சி மாறுகிறது. அந்தப் படத்தின் மையமாக வரும் சிறுமியின் தாய் மருத்துவத் தொழிலை மேற்கொள்ள முடியாததால், அவளது 14 வயதுப் பெண்குழந்தை, ஆண்குழந்தை வேஷம்போட்டுச் சம்பாதிக்க வேண்டி நேர்கிறது. இந்த இரண்டு படங்களிலுமே கருத்தியலின் அடிப்படையில் மனிதர்களின் உயிர்கள் இரண்டாம் பட்சமாகும்; காட்டுமிராண்டித்தனம் காட்சியாக ஆகியிருக்கிறது. திரைப்படம் வரலாற்றின் சாட்சியமாக இருக்கிறது என்பது மட்டுமல்ல, அது வரலாற்றின் ஒத்த தன்மையையும் கூட நமக்கு முன் திறப்பதாகத்தான் இருக்கிறது.

2.

வரலாறு மறுமலர்ச்சிக் காலத்து மதிப்பீடுகளிலிருந்தும், இருபதாம் நூற்றாண்டிலிருந்தும் துவங்குவதில்லை. காலனியாதிக்கத்தின் பெயரில், மதங்களின் பெயரில், இனத் தூய்மையின் பெயரில், தேசப் பெருமிதத்தின் பெயரில், சாகசப் பயணங்களின் பெயரில், வரலாறு குருதி தோய்ந்த நினைவுச் சுவடுகளை ஒவ்வொரு தேசத்தின் மீதும், மக்கள் கூட்டத்தின் மீதும் சுமத்திச் சென்றிருக்கிறது. ஆப்கானிஸ்தானது வரலாறும் அவ்வாறானதுதான். அந்நியப் படையெடுப்புகளால், புவியியல் ரீதியில் அந்நாட்டைச் சுற்றிய நாடுகளான ரஸ்யா, ஈரான், பாகிஸ்தான், சீனா, இந்தியா போன்ற நாடுகளின் அரசியல் பொருளியல் கலாச்சார மேலாதிக்க அபிலாஷைகளினால் பாதிப்புற்ற நாடாகவே ஆப்கானிஸ்தான் இருந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய நாடான பாகிஸ்தான் தனது அரசியல் காரணங்களுக்காக தலிபான்களை உருவாக்கிய நாடாக இருக்கிறது எனில், தனது சியா பிரிவு இஸ்லாமிய இனத்தவர்களின் மதஆதிக்கத்தின் பொருட்டு, ஈரான் ஆப்கானிஸ்தானில் தலையிட்டது. ரஸ்யா தனது ஆதிக்கத்தின் கீழிருந்த பழமைவாத நாடுகளான துருக்மேனிஸ்தான் தாஜிக்கிஸ்தான் போன்றவற்றின் எல்லைகளைப் பகிர்ந்து கொண்ட நாடாகவிருந்த  ஆப்கானிஸ்தானைத் தனது செல்வாக்கு மண்டலத்துக்கு உள்பட்ட நாடாக வைத்துக்கொள்ள விரும்பியது. 1977 ஆம் ஆண்டு ஈரானில் அமெரிக்க ஆதரவு ஷா மன்னனின் ஆட்சி வீழ்ந்ததனையடுத்து, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தலையிடும் என நினைத்த சோவியத் அரசு ஆப்கானில் நேரடியாகத் தலையிடத் தீர்;மானித்தது. ஆப்கனிஸ்தானில் உள்நாட்டுப் போர்கள் ஏற்பட்ட வேளையிலெல்லாம் ஆப்கான் அகதிகள் பெருமளவில ஈரானிலும் பாகிஸ்தானிலும் சென்று குவிந்தனர். சிறுஅளவில் ரஸ்யப் பிரதேச நாடுகளான துருக்மெனிஸ்தானுக்கும் தாஜிக்கிஸ்தானுக்கும் அவர்கள் சென்றனர். தென் ஆசியாவில் தமது பொருளியல் அரசியல் ஆதாயங்களுக்காக சவுதி அரேபியாவும், அமெரிக்காவும், தலிபான்களுக்கு ஆயுதமும் டாலர்களையும் கொட்டிக் குவித்தன.

ஆப்கானிஸ்தானது வரலாற்றைச் சுருக்கமாகவேனும் புரிந்து கொள்ளும் பொருட்டு, நாம் வரலாற்றில் பின்னோக்கிப் பயணிக்க வேண்டியது அவசியமாகும். கிறிஸ்துவுக்கு முன்னான ஆறாம் நூற்றாண்டிலிருந்து, ரஸ்யர்களும் பிரித்தானியர்களும் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த பதினெட்டாம் நூற்றாண்டு காலகட்டம் வரையிலான வரலாற்றை முதல் கட்டமாகவும், ரஸ்யர்கள், பிரித்தானியர்கள்; என இரு சாம்ராஜ்யத்தினர் ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் கொண்டிருந்த இருபதாம் நூற்றாண்டின் முன்பகுதி வரையிலுமான காலத்தை இரண்டாம் கட்டமாகவும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலுமான, ரஸ்யப் படைகளின் ஆக்கிரமிப்பு, முஜாஹிதின்களின் எதிர்ப்புப்போர், தலிபான்களின் தோற்றம், அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான பின்லாடனின் தோற்றம், செப்டம்பருக்குப் பிற்பாடான ஆபகானிஸ்தானின் நிலை போன்றவற்றை உள்ளிட்ட சமகாலத்தை மூன்றாவது வரலாற்றுக் கட்டமாகவும் வரலாற்றை நாம் பகுத்துக்கொள்வோம.

முதலாவது காலகட்டத்தில் கிரேக்கர்கள், பெர்ஸியர்கள், மங்கோலியர்கள், மொகலாயர்கள் போன்ற சாம்ராஜ்யவாதிகளின் படையெடுப்பின் களமாக ஆப்கானிஸ்தான் இருந்திருக்கிறது. ஆப்கான் பூர்வகுடிகள் இவர்களோடு ஒப்பந்தம் செய்துகொள்வதும் எதிர்த்துப் போராடுவதுமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானது கைபர் கணவாய் வழியாக ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தது போலவே, அதே கைபர் கணவாய் வழியாகவே புத்தமதமும் சீனாவுக்குள் ஆப்கானிஸ்தான் வழியாகச் சென்றிருக்கிறது.

இரண்டாவது காலகட்டத்தில், பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் பகுதியான இந்தியாவுக்குள் குடியேற்றக்காரர்கள் நுழைவதைத் தடுப்பதற்காகவும், ஆப்கானிஸ்தானத்தை ஒட்டிய மலைப்பகுதிகளிலிருந்து பிரிட்டிஸ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டக்காரர்களை ஒழித்துக் கட்டுவதற்காகவும், ஆப்hகனிஸ்தானது ஆட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் பிரித்தானியக் காலனியவாதிகள் முயன்றனர். பெர்ஸிய வளைகுடாவை அடைவதன் பொருட்டும் தமது பிரதான எதிரிகளான ஒட்டோமன் சாம்ராஜ்யவாதிகளை எதிர்கொள்வதன் பொருட்டும், தமது இஸ்லாமியப் பகுதிகளின் விரிவாக்கமாகவும் ரஸ்யர்கள் ஆப்கானிஸ்தானில் நிலை கொள்ள முயன்றனர். ரஸ்யா நைச்சியமான ராஜதந்திர முறையில் தனது அதிகாரத்தை வைத்துக்கொள்ள முயல, பிரித்தானியா ராணுவ ஆதிகத்தின் மூலம் ஆப்கானிஸ்தானைத் தனது கட்டுப்பாட்டுக்குள்; கொணர முயன்றது. இதனது தொடர்ச்சியாகவே பிரித்தானியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இரண்டு யுத்தங்கள் நடைபெற்றன. ஆப்கானிஸ்தானது ஆட்சியாளர்கள் பிரித்தானியக் காலனியாதிக்கக்காரர்களால் தமது அனுசரனையாளர்களாகச் சுமத்தப்பட்டார்கள். இவ்வகையில் ஒரு நூற்றாண்டு கால ஆப்கான் என்பது புவியியல் ரீதியிலும், அரசியல் ரீதியிலும், பிரித்தானியாவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான பிரதேசமாகவிருந்தது. ஆப்கான் எனும் நாட்டினது எல்லைகள் இவ்வாறாகவே செயற்கையாக உருவாக்கப்பட்டது.

மூன்றாம் காலகட்ட வரலாறுதான் ஆப்கான் எனும் தேசத்தின் நவீன கால வரலாறு. 1919 ஆம் ஆண்டில் ஆப்கான் சுயாதீன நாடாக அமைய வழிவகுத்தவர் அமானுல்லா கான். இவரது ஆட்சிக் காலத்திலிருந்த ஆப்கானிஸ்தான் நாடுதான, ரஸ்யாவில் லெனின் தலைiமையிலமைந்த புரட்சிகர ரஸ்ய அரசை உலகில் முதன்முதலாக அங்கீகரித்த நடக இருந்தது. 1929 ஆம் ஆண்டு அமானுல்லா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை அரண்மனைப் புரட்சிகளும் சதிகளும் கொலைகளும் ஆட்சிமாற்றங்களும் நிறைந்ததாகவே ஆப்கானிஸ்தான் இருந்து வருகிறது. 1953 ஆம் ஆண்டு பதிவியேற்ற மொஹமத் தாவுத்கான்தான் முதன் முதலாக ஆப்கானிஸ்தானை நவீன நாடாக ஆக்க முயன்றவர். தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்தல், பாசனத் திட்டங்களை உருவாக்குதல, உற்பத்தி சாதனங்களை தேசிய மயமாக்குதல் போன்றவற்றை அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் மேற்கொண்ட இவர், ரஸ்யாவின் உதவியுடன் தனது ஆயுதப்படையை மறுகட்டமைப்புச் செய்தார். அவர் காலத்தில் ஆப்கானியப் பெண்கள் முக்காடு அணிய வேண்டியதில்லை எனச் சட்டமியற்றப்பட்டது. 1963 ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்த இவர் தனது சொந்தக் குடும்பத்தவர்களால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். இவர் காலத்தில் உச்சத்திலிருந்த ரஸ்ய அமெரி;க்கக் கெடிபிடிப்போரின் போது தொடர்ந்து நடுநிலை வகித்தவராக அமானுல்லா இருந்தார். விவசாய நாடான ஆப்கானில், இவர் காலத்தில் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் எதனையும் இவர் மேற்கொள்ளவில்லை என்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததொரு தகவலாகும்.

இருபதாம் நூற்றாண்டு மத்தி வரையிலான ஆப்கானிய வரலாறு என்பது மக்களாட்சியின் வரலாறு அல்ல, மாறாக மன்னராட்சியின் வரலாறு. அறுபதுகளில் உலகெங்கும் அலையடித்த தேசிய விடுதலைப் போராட்டக் கருத்தியலும், சோசலிச நம்பிக்கையும், மாணவர் கிளர்ச்சிகளும் ஆப்கானிஸ்தானிலும் தனது அதிர்வுகளைத் தோற்றுவித்தது. ஆப்கானிய வரலாற்றில் முதன் முதலாக மார்க்சிய லெனினிய இயக்கம் தலைமறைவாகத் தோற்றம் பெற்றது. ஆப்கானிதான் மக்கள் ஜனநாயகக்கட்சி 1965 ஆம் ஆண்டு தோன்றியது. விரைவிலேயே கருத்து மாறுபாட்டால் இந்த இயக்கம் இரண்டாக உடைந்தது. பதாகை எனப் பெயர் பெறும் பார்ச்சம் எனும் அமைப்பு அறிவுஜீவிகள் தேசிய முதலாளிகள் நகர்ப்புற மத்திய வர்க்கத்தினர் போன்றோர் இணைந்ததாகப் புரட்சியை நடத்த வேண்டும் என்றது. மற்றொரு பிரிவான மக்கள் எனப் பெயர் கொண்ட கல்க் அமைப்பு தொழிலாளி-விவசாயி கூட்டமைப்பில் புரட்சியை நடத்த வேண்டும் எனக் கூரியது. இதன் பின் ஆட்சிக்கு வந்த மார்க்சியர்களில் இந்த இரு பெரும் பிரிவினரும் ஆட்சிக் கவிழ்ப்பிலும் உட்கொலைகளிலும் ஈடுபட்டார்கள். 1953 ஆம் ஆண்டு மஹமத் தாவுத்கானால் ரஸ்யர்களின் உதவியுடன் மறுகட்டமைப்புச் செய்யப்பட்டிருந்த ஆப்கானிய ராணுவம், 1973 ஆம் ஆண்டு மன்னர் ஜாஹர் சாவைத் தூக்கியெறிந்ததுடன் முடியாட்சிக்கு; விடைகொடுத்தது. ஆப்கான் மக்கள் ஜனநாயக் கட்சியின் ஆதரவுடன் மொஹமத் தாவுத் பதிவியேற்றார். அதிகார வர்க்கத்தவரையும் பழைய மன்னராட்சி நிர்வாகிகளையும் முதலாளித்துவவாதிகளையும் அதிகம் சார்ந்திருந்ததாலும், ஆப்கான் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்களிலொருவரான அக்பர் கைபர் கொலை செய்யபட்டதாலும், தாவுத்துக்கு எதிராக மாபெரும் மக்கள் எழுச்சி தோன்றியதனையடுத்து, 1977 ஆம் ஆண்டு மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான ஆப்கான் ராணுவம் தாவுத்தை அகற்றிவிட்டு நூர் முகமத் தராக்கி என்பவரை ஆட்சியில் அமர்த்தியது. அதனையடுத்து தராக்கியின் கட்சியைச் சேர்ந்த அமிர் தராக்கியை அகற்றிவிட்டு ஆட்சிக்கு வந்தார்.

1978-79 ஆம் ஆண்டுகளில் மட்டும் அமைச்சரவை 25 முறை மாற்றியமைக்கப்பட்டது. அமைச்சர்கள் கட்சி விசவாச அடிப்படையில் தேர்ந்தெடுக்கபட்டார்களே ஒழிய மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை. மககளின் விதியை அரசர்கள் மாற்றிக் கொண்டிருந்ததற்கு மாறாக கருத்தியலினால் வழிநடத்தப்பட்ட ராணுவச் சிந்தையுள்ள புரட்சியாளர்கள் தீர்மானித்தார்கள். மாற்றமும் புரட்சியும் மக்கள் மட்டத்திலிருந்தல்ல மேலிருந்து மக்கள் மீது விதிக்கப்பட்டது. அமிர் ஆப்கானிய சமூகத்தையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட பல்வேறு திட்டங்களைத் துவங்கினார். முதலாவதாக நாடு தழுவிய கட்டாயக் கல்வியை அவர் அறிமுகப்படுத்தினார். இரண்டாவதாக அனைத்து வகையான பழமையான சடங்குகளையம் வரதட்சினை முறையையும் சட்டவிரோதமாக்கினார். மூன்றாவாகதாகவும் முக்கியமாகவும் நிலச்சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார்.

பழமையும் மரபும் இனக்குழுத்தன்மையும் மதத்தின் பிடிப்பும் புரையோடிய ஆப்கானிய சமூகத்தில் இந்த மாற்றங்கள் மிகப் பெரும் கொந்தளிப்பை உருவாக்கின. நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல் என இந்தச் சீர்;திருத்த நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம். இதற்கு எதிராக நிலங்ளைத் தம் வசம் வைத்துக்கொண்டிருந்த உள்ளுர் நிலப்பிரபுக்கள் கலகத்தில் ஈடுபட்டனர். இந்த நிலப்பிரபுக்களே மதவாதிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான இடைத்தரகர்களாகச் செயல்பட்டார்கள் என்பதோடு இவர்களே அதிகாரத்தின் மையமாகவும் இருந்தார்கள். பிறிதொரு திசையில் நிலச்சீர்திருத்தத்தைச் செயல்படுத்துவதற்கான நிர்வாக அமைப்பும், அதனைச் செய்படுத்துவதற்கான உள்ளுர் தொடர்பாடல் அமைப்பும் அமிரின் அரசிடம் இல்லாததால், விவசாயக் கூலிகள் சோர்வடைந்தனர். ஆப்கான் சூழலில் உள்ளுர் விசுவாசம் என்பதை இனக்குழு விசுவாசம் எனவும், இனக்குழு விசுவாசத்துடன் இணைந்த மதவிசுவாசம் எனவும் நாம்; நவீன மொழியில் சொல்லலாம். ஆப்கான் கிராமப்புறங்களில் நிலவிய இந்த மத-இனக்குழு விசவாசத்தன்மையே முஜாஹிதின்களினதும் தலிபான்களினதும் அரசியல் சமூக எழுச்சியின் அடிப்படையாக அமைந்தது. அமிர் தனது இறுதிக்காலத்தில் அமெரிக்க சிஐஏவின் வசம் வீழ்ந்தார். மத அடிப்படைவாதிகளான முஜாஹிதின்களோடு சமரசம் செய்து கொள்ளவும் முயன்றார். 

அமிரைக் கவிழ்த்துவிட்டு கல்க் அமைப்பின் தலைவரான பாப்ரக் கார்மல் சோவியத் உதவியுடன் பதவிக்கு வந்தார். சோவியத்சார்பு மார்க்சியர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தும், நாட்டில் தோன்றிய நிலைகுலைந்த தன்மையைத் தொடர்ந்தும், 1979 பிப்ரவரி மாதம் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தலைநகர் காபூலிலிருந்து கடத்திக் கொலை செய்யப்பட்டார்கள் அமெரிக்கா ஆப்கான் அரசு மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. பாப்ரக் கார்மலின் அரசு சோவியத் ஆதரவு அரசு என அமெரிக்கா பிரகடனம் செய்தது, கெடிபிடிப் போரின் புதிய களம் ஒன்று இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் திறவுபட்டது. சோவியத் படைகள் 1979 ஆம் அண்டு டிசம்பரில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தது. பாப்ரக் கார்மல் சோவியத் படையின் உதவியிடனும் ஆப்கானியப் படையின் உதவியுடனும் ஆட்சியில் அமர்த்தப்பட்டார். அமெரிக்கா 1980 ஆம் ஆண்டு ரஸ்யாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை நிராகரித்தது, ரஸ்யாவின் மீது பொருளதாரத் தடைகளைக் கொண்டு வந்தது. ரஸ்ய ஆதரவு ஆப்கான் அரசுக்கு எதிராக பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு போராடும்; முஜாஹிதின்களுக்கு அமெரிக்கா டாலர்களையும் ஆயுதங்களையும் கொட்டிக் கொடுத்தது. அமெரிக்கா மட்டுமல்ல, உலகிலேயே மிகக் கேவலமான அடிப்படைவாத நாடுகளான சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்டும் முஜாஹதிகன்களை பெட்ரோ டாலர்கள் கொண்டு வளர்த்தன. பாகிஸ்தான் பிரதமர்களான பெனாசிர் பூட்டோவும் ஜியாவுல் ஹக்கும் அதனது ராணுவத் தலைவர்களும் முஜாஹஜின்களை வளர்த்தது மட்டுமல்ல, அதலிருந்து கிளைத்த தலிபான்களையும் வளர்த்தனர்.

3.

ஆப்கான் தொடர்பாக வெளியாகியிருக்கும் நான்கு முழநீளத் திரைப்படங்கள், இரண்டு விவரணப் படங்களில, ஈரானியப் படங்கள் மூன்றுமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிற்பட்டதாகும். இதில் கந்தஹார் திரைப்படம் தலிபான்களின் மீது அமெரிக்க விமானங்கள் குண்டுவிசித் தாக்கத் தொடங்கிய 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதிக்குக் கொஞ்சம் முந்தியதாகும். சித்திக் பெமார்க்கின் ஒசாமா திரைப்படம் தலிபான்களின் காலத்தில் பின்னோக்கிப் பயணிப்பதாகும். ஸமீராவின் திரைப்படம் தலிபான்கள் காபூலிலிருந்து விரட்டப்பட்டபின், மன்னர் காராஸி ஆப்கானின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற காலகட்டத்தில் நிகழ்வதாகும். தலிபான் வசமிருந்து தப்பித்தல் எனும் இந்தியத் திரைப்படம் 1992-1995 காலகட்டத்தில் தலிபான்கள் தமது ஆட்சியைத் ஸ்திரப்படுத்திக் கொள்ளத் துவங்கிய காலகட்டத்தில் நிகழும் சம்பவங்களை அடிப்படை கொண்டதாகும்.

சோவியத் படைகளுக்கும் முஜாஹிதின்ளுக்கும் இடையிலான போரின் போது நாட்டிலிருந்து அகன்று கனடாவில் அடைக்கலம் கோரிய ஒரு ஆப்கான் மாணவியும் பத்திரிக்கையாளரும் ஆன நெபா, தனது தமக்கையின் கடிதமொன்றின் செய்தியின்படி ஆப்கானுக்கு மறுபடி திரும்பி வருகிறார். கண்ணி வெடியொன்றில் தனது கால்களை இழந்த நெபாவின் தமக்கை, வரும் அமாவசையின் போது  தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் எனக் கடிதம் எழுதியதனையடுத்து, அவளைக் காணபதற்காக நெபா ஆப்கான் வருகிறாள். ஈரானுக்குள் வந்து அங்கிருந்து கால்நடையாக கந்தஹார் செல்வது அவளது திட்டம். அமாவாசைக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்க நெபாவின் பயணம் தொடங்குகிறது. கந்தஹார் செல்லும் பாதை முழுதும் அழிந்த கிராமங்கள். பாலைவெளி. பிணக்குழிகள். மேற்கத்தியர்கள் விமானத்திலிருந்து வீசும் பொருள்களுக்கும் உணவுக்குமாக அலையும் முடமான மக்களின் நடமாட்டம். அவளைக் கந்தஹாருக்கு அழைத்துச் செல்லப் பொறுப்பேற்கும் முதியவர், குழந்தைகள் உள்பட பயணவழியில் கத்தி முனையில் கொள்ளையிடப்படுகிறார். பிற்பாடு ஐம்பது அமெரிக்க டாலரகளுக்கு நெபாவைக் கூட்டிச்செல்வதாகப் பொறுப்பேற்கும் சிறுவனொருவன் இடைவெளியில் பிணத்தின் கைகளிலிருந்து திருடிய மோதிரத்தை நெபாவிடம் விற்க முயல்கிறான். இடைவழியில் அவளுக்குச் உடல் சுகமில்லாமல் போக, அச்சிறுவன் நெபாவை உள்ளுர் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான். உள்ளுர் மருத்துவர் தலிபான்களின் கட்டளைக்கேற்ப செயற்கையாகத் தாடி வைத்துக்கொண்ட ஆப்ரோ-அமெரிக்கர். ரஸ்யப் படைகளை எதிர்த்துப் போரிட வந்தவர். செஞ்சிலுவைச் சங்க உதவிக் குழுக்களின் வழி நெபாவை கந்தஹார் கூட்டிச்செல்ல அவர் முயல்கிறார். முடியாதபோது ஒரு அந்நியனுக்கு மனைவி என அறிவித்துக் கொண்டு கந்தஹார் செல்ல நெபா முயல்கிறாள். தலிபான்களிடம் அகப்படுகிறாள். அவள் தடுத்து நிறுத்தப்படுகிறாள். நீ யார்? எங்கிருந்து வருகிறாய் என நெபாவிடம் தலிபான்கள் கேட்டு மறிக்கும் போது கந்தஹார் படம் முடிகிறது.

ஓசாமா திரைப்படம் தலிபான்களின் காலத்தில் நிகழ்ந்த கதையொன்றைச் சொல்கிறது. தலிபான்கள் பெண் மருத்துவர்களை மருத்துவத் தொழல்  செய்வதினின்றும் தடை செய்கிறார்கள். வேலை செய்ய மறுக்கப்பட்ட அனைத்துப் பெண்களும் ஆரப்பாட்டத்தில் ஈடுபடும்போது தலிபான்கள் தண்ணீர் பீய்ச்சியடித்து அவர்களை விரட்டுகிறார்கள். வேலை செய்ய மறுக்கப்பட்ட நிலையில் முதிய பாட்டிக்கும் மருத்துவரான தாய்க்கும் பொறுப்பேற்க வேண்டிய கடமை பதினான்கு வயதுச் சிறுமியின் மீது விழுகிறது. படம் முழுக்கவும் இந்தப் பெண்ணின் பெயர் சொல்லப்படுவதில்லை.  இவளைப் பையன்களின் தொந்தரவிலிருந்து காப்பதற்காக ஒசாமா இவளது பெயர் என்கிறான் இவளது நண்பனான எஸ்பான்டி. சிறுவனாக விரும்பிய சிறுமயின் கதையினைச் சொல்லி, பதினான்கு வயதுச்சிறுமியை சிறவனாக வேசம் தரிக்கச் சொல்கிறாள் பாட்டி. சிறுமியின் முடி வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட முடியை அச்சிறுமி பூந்தொட்டியில் நட்டு வைக்கிறாள். ரஸ்ய எதிர்ப்பு யுத்தத்தின் போது தனது கணவருடன் போரிட்ட தோழரின் ரொட்டிக்கடையில் சிறுமியை வேலைக்குச் சேர்க்கிறாள் தாய். தலிபான்கள் சிறுவர்களைக் கட்டாயமாக தலிபான் படையில் சேர்க்கிறார்கள். சிறுவனெனக் கருதப்பட்டு சிறுமியும் பலவந்தமாக இழுத்துச் செல்லப்படுகிறாள். அவள் சிறுமிதான் எனச் சீக்கிரமே பையன்கள் இனம் காண்கிறார்கள். அவளைச் சுற்றிச் சுற்றிவந்து அவமானப்படுத்தவும் செய்கிறார்கள். அவள் மரத்தின் மீது ஏறித் தான் சிறுவன் என நிருபிக்க முயன்று, மரத்திலிருந்து இறங்க முடியாது அலறுகிறபோது, தலிபான்கள் அவளை மரத்திலிருந்து இறங்கச் செய்து தண்டனை தரும் பொருட்டு ஆழமான கிண்ற்றில் கயிறு கட்டித் தொங்கவிடுகிறார்கள். வலி தாளாது கதறும் அச்சிறுமியின கால்களின் வழி மாதவிடாயக் குருதி வழிகிறது.. தலிபான்களுக்கு இஸ்லாமிய வாழ்முறையைக் கற்பிக்கும் மௌ;வியினால் அவள் பெண் என இனம் காணப்படுகிறாள். அவள் செய்த குற்றத்திற்காக, எண்பது வயது மதிக்கத்தக்க உள்ளுர் முல்லாவை மணக்க வேண்டும் என தலிபான்களின் தலைவரால் தீரப்பிடப்படுகிறாள். ஏற்கனவே மூன்று மனவியரைக்கொண்ட எண்பது வயது மௌல்வியின் படுக்கையறைக்குச் கொண்டு செல்லப்படுகிறாள் அந்த பதினான்கு வயதுச் சிறுமி. 

இதே தலிபான்களின் காலத்தில் நிகழும் இன்னொரு கதைதான் தலிபான்களிடமிருந்து தப்பித்தல் எனும் இந்தியத் திரைப்படம். இந்தியிலும் ஆங்கிலத்திலும் எடுக்கபட்ட படம் இது. மனிஷா கொய்ராலா நடித்த இந்தத்திரைப்படம் கல்கத்;தா நகரத்தைச் சேர்ந்த சுஷ்மிதா எனும் பிராமணப்பெண் ஆப்கானியரைக் காதலித்து, ஆப்கானில் அங்கு சென்று வாழ்வதைச் சித்தரிக்கிறது. தனது கணவனோடு ஆப்கான் செல்லும் அந்த வங்காளிப் பெண் இரு வகையிலான சித்திரவதைகளை எதிர்கொள்கிறாள். அவளுடைய கணவனுக்கு ஆப்கானில் ஏற்கனவே ஒரு மனைவி இருக்கிறாள். சுஷ்மிதா அருகில் படுத்திருக்கிற அவளது முதுகுக்குப்பின் கணவன் தனது மற்ற மனைவியுடன் பாலுறவு கொள்கிறான். கணவன் கலக்கத்தாவிற்கு வியாபாரத்திற்குத் திரும்பிவிட, கணவனது துரோகத்தினால் ஏற்பட்ட விரக்தியுடன் தனித்துவிடப்படும் சுஷ்மிதா, ஆப்கானிலிருந்து தப்பி இந்தியா வந்துவிட நினைக்கிறாள். இருவகையிலான எதிரிகளை அவள் எதிர்கொள்கிறாள். தனது கணவனின் சகோதரரர்களின் சித்திரவதை ஒரு புறம். தலிபான்களின் சித்திரவதை மறு புறம். தலிபான்கள், பெண்கள் கணவனோ அல்லது சகோதரனோ உடன் வராமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனச் சட்டம் போடுகிறார்கள். சிறுமியரைப் பலவந்தமாகப் பாலுறவுக்கு உட்படுத்தி திருமணம் செய்து கொள்கிறார்கள். புனிதப் போராளிகளான தங்களை மணந்து கொள்வது பெண்களது புனித நடவடிக்கை என்கிறார்கள் அவர்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் வீட்டிலிருந்து தனது வளர்ப்பு மகளுடன் தப்பும் சுஷ்மிதா திரும்பத் திரும்பப் பிடிபட்டு வீடு கொண்டுவரப்படுகிறாள். நோயாளிகளுக்கு உதவ மருந்துக் கடையொன்றினை நடத்தியதற்காக சுஷ்மிதா மீது தலிபான்கள் பத்வா விதிக்கிறார்கள் பத்வா விதிக்கும் போது தலிபான்கள் ஆயுதமற்று இருக்கும் வேளையில், ஆயுதத்தை கையகப்படுத்தும் சுஷ்மிதா, ஆயுதங்கள் அற்ற தலிபான்களைச் சுட்டுவிட்டு, அவர்களிடமிருந்து தப்பி, தனது ஆப்கான் கணவனது உறவினர் ஒருவரது உதவியால் கல்கத்தா வந்து சேர்கிறாள். தனது கணவனைச் சந்திக்கிறாள. ஆப்கான் கொடுங்கோலர்களிடமிருந்து விடுதலை பெற்ற தீரமிகு இந்தியப் பெண்ணைப் பற்றிய படம் இது என விளம்பரம் செய்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள். நிஜத்தில் அதே ஆப்கான் கணவனோடு இப்போதும் கல்கத்தாவில் வாழ்ந்து வருகிறார் நிஜ சுஷ்மிதா. கணவன் தவறு செய்தாலும் அவனை விட்டுப் போகாமல் அவனைப் போரடி மாற்றுவதே தனது கலாச்சாரம் என்றும் சுஷ்மிதா சொல்கிறார். இந்தத் திரைபபடம் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். 

மதியம் ஐந்து மணிக்கு எனும் திரைப்படத்தின் கதை அமெரிக்கப் படைகள் ஆப்கானில் நுழைந்த பின், ஆப்கான் ஜனாதிபதி காராஸியின் ஆட்சிக் காலத்தில் நடக்கிறது. ஒப்பீட்டளவில் சுதந்திரத்தை உணரும் ஆப்கானிய மக்களிலிருந்து கிளைத்த ஒரு இருபத்தி நாலு வயதுப் பெண்ணின் அனுபவமே இக்கதை. நோக்ராவுக்கு பள்ளிக் கூடம் போக ஆசை. அவளது தகப்பன் பழமைவாதி. தலிபான் ஆதரவாளர். சிறுமிகளே ஆயினும் பெண்களின் முகம் பார்ப்பது பாவம் எனக் கருதுபவர் அவர். அவரைப் பொறுத்து தலிபான்களுக்கப் பின்னான ஆப்கான் ஆபாசமாகிவிட்டது. பாவங்கள் நிறைந்ததாகிவிட்டது.  ஓருவகையில் அவரது நம்பிக்கைகள் சாத்வீகமானது. முதிய தலிபானின் நம்பிக்கைகள் போன்றது. வீட்டிலிருந்து குரானுடன் மதக் கல்வி பயில்வதற்காகச் செல்கிறேன் எனத் தந்தையிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டு, மதக்கல்விக் கூடத்திலிருந்து நழுவி குதிகால் செறுப்புடன் தெருவுக்கு வந்து காராஸியின் ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்ட பெண்கள் பள்ளிக் கூடத்திற்கு வருகிறாள் நெக்ரா. கறுப்புச் சீருடையில் முகம் தெரியும் முக்காடு மட்டும் அணிந்த அந்தப் பள்ளிக் கூடத்துச் சிறுமிகள் மத்தியில் நெக்ரா மட்டுமே சீருடை அணியாத, உடல் முழுக்கவும் மறைத்த பெண். பணிரெண்டு வயதுச் சிறுமியர்களிடையில் நெக்ரா ஒருத்தி மட்டுமே இருபத்தியிரண்டு வயது இளம் பெண். பள்ளிக் கூட ஆசிரியை, புதிய ஆப்கானில் யார் யார் என்னவாக விரும்புகின்றீர்கள் என மாணவிகளைப் பார்த்துக் கேட்கிறார். பெரும்பாலுமானவர்கள் ஆசிரியைகளாக பொறியியலாளர்களாக மருத்துவர்களாக ஆக விருப்பம் தெரிவிக்கிறார்கள். ஆசிரியை எவரெவர் ஆப்கானிய ஜனாதிபதியாக விரும்புகிறீர்கள் எனக் கேட்கிறார். தயக்கத்துடன் நான்கு சிறுமிகள் எழுகிறார்கள். அவர்களைப் பார்த்து மற்ற சிறுமிகள் சிரிக்கிறார்கள். இறுதியாக இருவர் மட்டுமே எழுந்து உறுதியாக நிற்கிறார்கள். பணிரெண்டு வயதுச் சிறுமியொருத்தியும்; இருபத்திநாலு வயது நெக்ராவும் மட்டுமே நிற்கிறார்கள். இதில் பணிரெண்டு வயதுச் சிறுமியான மினா ஆப்கான் போரில் தலிபான்களின் கொடுமையில் தனது தகப்பனையும் சகோதரனையும் இழந்தவள். தான் ஆட்சிக்கு வந்தால் தலிபான்களை உற்பத்தி செய்யும் சமூகத்தைத் தடுப்பேன் எனச் சொல்லும் மினா, அதே வேளையில் தலிபான்களைப பழிவாங்கும் உணர்வற்றுத் தான் தாய்மையுடன் ஆட்சி செய்வேன் என்கிறார். பிற்பாடு மினா பள்ளியிலிருந்து திரும்பும்போது  கண்ணிவெடி ஒன்றில் சிக்கி மரணமெய்துகிறாள்.

மிஞ்சிய இருபத்தி நான்கு வயது இளம்பெண் நெக்ரா, பெண் அரசியல் தலைவர்களான பெனாசிர் பூட்டோ, இந்திரா காந்தி போன்றவர்கள் எவ்வாறு அரசுத் தலைவர்கள் ஆனார்கள் என அறிந்து கொள்ள விரும்புகிறாள். எதற்காக மக்கள் அவர்களுக்கு ஓட்டுப் போட்டார்கள் என அறிந்து கொள்ள விரும்புகிறாள். அவளது முயற்சிக்கு பாகிஸ்தானிலிருந்து வந்த அகதியும் கவிஞனும் ஆனவன் உதவ முன்வருகிறான். அவன் நெக்ரா மீது மையல் கொள்கிறான். அவன்; தனது ஒரு சகோதரனை ரஸ்ய ஆக்கிரமிப்பின் போதும், பிறிதொரு சகோதரனை முஜாஹிதின்களுக்கிடையிலான சண்டையின்போதும்,  மற்றொரு சகோதரணை தலிபான்களுக்கும் இழந்தவன். அவனது முதிய தாயுடன் முகாமொன்றில் வாழும் அவன் நெக்ராவுக்கு புகைப்படம் எடுக்க உதவுகிறான். ஜனாதிபதி போல் ஆக என்னென்ன செய்ய வேண்டும் எனவும் நெக்ராவுக்கு அறிவுறுத்துகிறான். மக்களை ஆடுமாடுகளைப் போல நினைத்துக்கொண்டு, அரசியல் தலைவர்கள் ஆடு மாடுகளுக்கு முன்பாகப் பேசிப்பழகிக் கொள்கிறார்கள் என்கிறான் அவன். அவளது புகைப்படத்தை போஸ்டராக அச்சிட்டு, இடிந்த மாளிகைச் சுவர்களில் ஒட்டவும் செய்கிறான். நெக்ராவின் தகப்பன் ஆபாசமாக ஆகிவிட்ட காப+ல் நகரத்திலிருந்து வெளிடீயறி தூயதொரு இஸ்லாமிய நகரத்திற்குச் செல்லும் பொருட்டு நெக்ராவையும், அவரது மருமகளையும் அழைத்துக் கொண்டு ஆப்கானில் அலைந்து திரிகிறார். அதன் போக்கில் அவர் தனது பேரக்குழந்தையைப்; பட்டிணிக்குப் பறிகொடுக்கிறார். தனது மகனைக் கண்ணிவெடிக்கு பலிகொடுத்ததை வழிப் போக்கர் மூலம் அறிகிறார். தண்ணீரைத் தேடி வர பெண்களை அனுப்பிவிட்டு தனது பேரக் குழந்தையின் உடலையும் பாலைப் புழதியில் புதைக்கிறார் முதியவர். தாகத்தினால் இறந்த குழந்தைகளும் மிருகங்களும் அருகருகே புதையுண்ட நிலமாக பாலை அவர் முன் விரிந்து கிடக்கிறது.
 ;
நான்கு படங்களுமே தலிபான்களைப் பற்றியும்;, தலிபான்களின் காலத்தில் பெண்களின் மீது நிலவிய ஒடுக்குமுறையையும் முன்வைக்கிறது. தலிபான்களின் தோற்றம், அவர்களது றிலைபாடுகள் போன்றவற்றை அவர்களைப் பாத்திரப் படைப்புகள் ஆக்கியதன் மூலம் முன்வைக்கவில்லை. தலிபான்களின் வழியில் அவர்களது நிலைபாடுகளுக்கான அரசியல் நியாயங்கள், எந்தெந்நத் திரைப்படத்திலுமே முன்வைக்கப்படவில்லை. அரசியல் ரீதியில் தலிபான்கள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி  ஜோர்ஜ் புஸ்சும் அவரது மனைவி பார்பரா புஸ்சும் திருமதி பில்கிளின்டனும் முன்வைத்ததற்கு மாறாக, அல்லது அதனை மீறி எந்தச் செய்தியையும் இந்த நான்கு படங்களுமே வெளிப்படுத்தவில்லை. தலிபான்களை உருவாக்கியவர்கள் அமெரிக்க ஜனாதிபதிகள் என்பதனை எந்தப்படமும் சொல்லவில்லை. தலிபான்களுக்கு ஆயதங்கள் அளித்ததும் நிதியளித்ததும் அமெரிக்காவே என எந்தத் திரைப்படமும் சொல்லவில்லை.  குருரமான இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், பெண்களின் மீது மட்டுமீறிய அடக்குமுறையையும் வன்முறையையும் ஏவியவர்கள் என்பதற்கு அப்பால், இந்தத் திரைப்படங்கள் அரசியல் ரீதியில் ஆப்கானிஸ்தான் பற்றி நமக்கு எதனையும் தெரிவிப்பதில்லை. அமெரிக்கர்களின் மீதான பயமோ அல்லது சுயதணிக்கையோதான் படைப்பாளிகளை இவ்வாறு ஆட்டுவிக்கிறது என இதனை நாம் காண இயலும். படத்தின் விநியோகப் பரப்பினைக் கவனம் கொண்டதாகவும் இந்நிலைபாடு அமையலாம். எவ்வாறாயினும் புதையுண்ட வரலாறு இந்தப் படங்களின் பின் இருக்கிறது என்பது மட்டும் நிஜம். இந்தப் படங்களில் இந்தியப் படத்தினைத் தவிர அனைத்துப் படங்களும் அழிவுண்ட ஆப்கான் நிலப்பரப்பையும், பயம் தோய்ந்த அம்மக்களின் உளவியலையும் மரணமுகாமாகிப் போன அதனது இடிபாடுகளையும், நொறுங்கிப் போன மனித உறவுகள் விட்டுச் சென்றிருக்கும் நிரந்தர ரணங்களையும் நமக்கு முன்வைக்கிறது. கடந்த இருபத்தியைந்து ஆண்டுகளாக ஆப்கான் எனும் நாடு போரின் கொடூரத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இந்தப் போரின் கொடுமைக்கு அதிகமும் விலை கொடுத்தவர்களாகப் பெண்களே இருக்கிறார்கள் என்பதை இந்தப்படங்கள் சித்திரித்திருக்கிறது.

4.

வரலாற்று முரணியக்கத்தின் அடிப்படையில் அல்லாமல் வரலாற்றை நேர்கோட்டுவாக்கில் புரிந்து கொள்கிறவர்களுக்கு வரலாறு மிக நீண்ட சிக்கல்களையும் புதிர்களையும் கொண்டிருக்கிறது. மனித குலத்திற்கு சமவேளையில் அழிவும் ஆக்கமும் கொண்டுதான் வரலாறு நிகழ்கிறது. அதனால்தான் எதிர்மறைகளிலிருந்து கற்றுக்கொள்வது என்பதை நாம் ஆக்கபூர்வமானது எனக் கருதுகிறோம். வரலாறு வெளிவழியான சக்திகளால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை. அது புஜ்யத்திலிருந்தும் தொடங்குவதில்லை. குறிப்பான நிலைமைகளில் குறிப்பான தர்க்கங்களால்தான் வரலாறு நிகழ்கிறது. ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் அந்நியச்சக்திகள் மட்டுமே இயங்கவில்லை, ஆப்கானிஸ்தானின் உள்ளியக்கமாக இயங்குகிற பிற சக்திகள் இருக்கின்றன. அந்த உள் இயக்கத்தை மதத்தின் அடிப்படையில் இயக்கிய அந்நிய சக்திகள்தான், ஆப்கானிஸ்தானை இன்று சுடுகாடாக உருவாக்கியிருக்கிறது எனில், அது அதீதப்படுத்தப்பட்ட கூற்றல்ல. ஆப்கானிஸ்தான் இன்றிருப்பதைப்போல ஒரு போதும் அடிப்படைவாத நாடாக இருக்கவில்லை.

எந்த மதத்தையும் போலவே இஸ்லாமிய மதமும் அடிப்படையில் அடிப்படைவாத மதமில்லை. நிலத்துடனும் அதிகாரத்துடனும் பிணைக்கப்பட்ட மதவாதிகளே மதத்திற்கு அடிப்படைவாதத் தன்மையை அளிக்கிறார்கள். ஆப்கானிஸ்தானது பூர்வகுடி மனிதரான முல்லா உமர் ஒரு வரலாற்றுக் கடடத்தின் உற்பத்தியாக இருந்தவர். அவரை உற்பத்தி செய்தவர் சவூதி அரேபியக் கோடீசுவரரான பின்லாடன். அவர்களுக்கு ஊள்ளுர் தளபதிகளாக இருந்தவர்கள் பஸ்டூன் இனக் குழத் தலைவர்கள். அவர்களது திட்டங்களைச் செயல்படுத்துபவர்களாக இருந்தவர்கள் முப்பது வயதுக்கும் உட்பட்ட தலிபான்கள். தலிபான்களின் முன்னோடிகளான முஜாஹிதின்கள் இரண்டு வகையான சமூகப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள். அறுபதுகளில் காபூல் பல்கலைக் கழகத்தில் பொறியியல் மருத்துவ சட்டக்கல்வி கற்றவர்கள் ஒரு வகையினர். எழுபதுகளிலம் எண்பதுகளிலும் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட மத அடிப்படைவாத இஸ்லாமிய மதரஸாக்களில் இருந்து வந்தவர்கள் பிறிதொரு வகையினர். அவர்களிடம் ஆப்கானிய தேசபக்தியும் இருந்தது. மத அடிப்படைவாதமும் இருந்தது. இனக்குழு விசுவாசமும் இருந்தது. இவர்களுக்கு முன்னதாக இஸ்லாமிய விடுதலை மரபான சூபி நம்பிக்கையின் பிதாமகர்களில் ஒருவரான ரூமி போன்றவர்கள் அவதரித்த பூமியாகவும், புத்த மதமும் இந்து மதமும்; கிறித்தவமும் திளைத்த பூமியாகவும் ஆப்கான் இருந்தது. இஸ்லாமிய மதத்தின் அறவியல் அடிப்படையான சகோரத்துவம் தளைத்த பூமியாகவும் ஆப்கான் இருந்தது. ஆப்கான் பிரச்சினையை வெறுமனே பின்லேடனது நடவடிக்கையிலிருந்து மட்டுமே புரிந்து கொள்ள முடியாது. மத்தியமயப்படுத்தப்பட்ட சமூகத்தை என்றுமே கொண்டிருக்காத சமூகம் ஆப்கான் சமூகம். கிழக்கு மேற்காக ஊடறுத்துச் செல்லும் மலைத்தொடரினால் அடுக்கடுக்காக விரியும் அதனது மலைசார்ந்த நிலப்பரப்புகளின் தன்மையினால், விட்டு விலகிய நிலைமையில் வாழ்ந்த கிராமங்களைக் கொண்டிருந்த சமூகம் அது. மக்களுக்கு அரசு அதிகாரிகளைவிடவும், உள்ளுர் நிலப்பிரபுக்களும் மதத்தலைவர்களும் அவர்களைக் கட்டுப்படுத்தும் மௌல்விகளுமே நெருக்கமாக இருந்தார்கள்.. இரண்டு கோடி மக்களையே ஜனத்தொகையாகக் கொண்ட அந்நாட்டு மக்களில் இருபது சதவீதமானவர்களே நகரங்களில் வாழகிறவர்கள். இதிலும் பத்து சதவீதமானவர்கள் தலைநகர் காபூலில் வாழ்கிறவர்கள். மிகுதி பத்து சதவீதமான மக்கள் கந்தஹார், ஹரத், மசாசரீப் போன்ற நகர்களில் வாழ்கிறார்கள். எண்பது சதவீமான மக்கள் கிராமங்களில் வாழ்கிற விவசாயிகள். ஆப்கானில் கல்வி கற்றவர்கள் பத்து சதவீதத்திற்கும் குறைவானவர்கள்.

சோவியத் எதிர்ப்பு முகாந்தரத்தில் அங்கு அடிப்படைவாதத்தின் ஊற்றுக் கண்களாக இருந்த முஜாஹிதின்களை வளர்த்தவர்கள் அமெரிக்க அரசினர். அடிப்படைவாத இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அமைக்க வேண்டும் என உலகக் கனவு கண்ட சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்டும் இதனால்தான் முஜாஹிதின்களுக்கு நிதி வழங்கினர். ஆப்கானிஸ்தானில் மதரஸாக்களை உருவாக்கி ஆப்கானை தனது வேட்டை நாயாக வைத்திருக்கவே பாகிஸ்தான் விரும்பியது. மேற்போக்காக ஆப்கான் தேசியவாதிகளாகத் தோன்றிய முஜாஹிதின்கள் உளவியல் அடிப்படையிலும், கலாச்சார அடிப்படையிலும் கடுமையான பெண்விரோதிகளாகவே இருந்தார்கள். பெண்கள் மீதான கடுமையான ஒடுக்குமுறைகள் முஜாஹிதின்கள் ரஸ்யாவை எதிரத்துப் போராடிக்கொண்டிருந்த அந்தச் சமகாலத்திலேயே உருவாகியிருந்தன. தலிபான்களுக்கு முஜாஹிதின்களை ஒழிக்க ஆயுதங்கள்; வழங்கிய அமெரிக்க அரசு அதற்குச்சொன்ன பிரதான காரணம் முஜாஹிஜின்கள் கஞ்சா வளர்க்கும் சமூகவிரோதிகள் என்பதுதான். ஆனால் கஞ்ஜாவை ஒழிக்க தலிபானக்ள எதுவும் செய்யவில்லை. வறட்சியினால் கஞ்ஜா பயிர்கள் தானேயே அழிந்தன எனப்துதான் புவியியில் நிஜம். தலிபான்களைப் புரிந்து கொள்வதற்கு முன்பாக இங்கு இரண்டு கருத்தியல் ரீதியிலான பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் மீதான வெறுப்பும் சித்திரவதை முறைகளும் ஒரு மனோவியாதி போன்று ஆப்கான் சமூகத்தில் எவ்வாறாக நுழைந்தது என்று புரிந்து கொள்வது முதலாவதான பிரச்சினை. ஆப்கானிஸ்தானில் மார்க்சியர்கள் ஆட்சிக்கு வந்ததும், சோவியத் படைகளின் அதரவுடன் அவர்கள் ஆட்சி செலுத்தியதும், அந்த மண்ணின் வேர்கள் கொண்ட பிரச்சினையா அல்லது அந்நிய ஊடுறுவலின் பிரச்சினையா எனப்புரிந்து கொள்வது இரண்டாவது பிரச்சினையாகும்.

முதலாவதாக ஆண்மையப்பார்வையில் மதங்களுக்கும் கலாச்சாரக் காவிகளாக பெண்களுக்குமான  நெருக்கமான உறவைப் புரிந்துகொள்வது முக்கியமாகும். சமகால உதாரணத்திலிருந்து தொடங்குவதானால், சோனியா காந்தி எனும் கிறித்தவ அந்நியப் பெண்ணுக்கு எதிராக, இந்திய தேசியத்தின் மானத்தையும் இந்துமதக் கலாச்சாரத்தின் மேன்மையையும் காக்கப் புறப்பட்ட பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவியான சுஷ்மா ஸ்வராஜ்ஜினதும் உத்திரப்பிரதேச முதல்வர் உமா பாரதியினதும் கிளர்ச்சியையம் எடுத்துக் கொள்வோம். சுஷ்மா ஸ்வராஜ், தனது கணவருடன் பாராளுமனற் உறுப்பினர் பதிவியை ராஜினாமாச் செய்வேன் எனச் சொன்னார். சந்தேகமில்லால் இது ஜனநாயகபூர்வமான எதிர்ப்பு நடவடிக்கை. உமா பாரதி முதல்வர் பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு அகில இந்திய அளவில் சோனியா பிரதமர் ஆவதற்கு எதிராக இயக்கம் நடத்துவேன் எனச் சொன்னார். அதுவும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட அவர்களது விருப்பமான நடவடிக்கை இது. இதன் இரண்டாம் கட்டமாக அவர்கள் அறிவித்தவைதான் விவாத்திற்கு உரியது. தாங்கள் மொட்டை போட்டுக் கொள்வோம் எனவும், வெறுந்தரையில் படுத்துறங்குவோம் எனவும், இந்தியக் கலாச்சாரத்தில் பழிதீர்த்துக் கொள்வதற்கும் அமங்கலத்திற்கும் சாட்சியமான அனைத்துச் செய்பாடுகளிலும் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் அறிவித்தார்கள். இவர்களது நடவடிக்கைகள் குறித்து அத்வானியோ, வாஜ்பேயோ, பிரமோத் மகாஜனோ எதுவும் அறிக்கைவிடவில்லை. ஆனால் சுஷ்மா ஸ்வராஜ் இந்தத் தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்றதாகச் சொல்லியிருக்கிறார். நமது சகோதரியரியரின் கோபம் எப்படிhயனது பாருங்கள் என அவர்கள் விசனப்பட்டதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் தெரவித்திருக்கிறார். இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது தேசபக்தினதும் மதத்தினதும் புனிதத்தைக் காப்பதற்காக முன்னணியில் பெண்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான்.

ஆண்கள் ஆசி வழங்குகிறார்கள். பெண்கள் கலாச்சாரத்தைக் காக்கிறார்கள். இந்தப் பெண்கள் ஏற்ற நடவடிக்கைகள் குரூரமானது, மரணத்துடனும் சாபத்துடனும் பயங்கரத்துடனும் சம்பந்தப்பட்டது, மதஅடிப்படைவாதத் தன்மை கொண்டது என்பதில் எந்தவிதச் சந்தேகமுமில்லை.இந்தப் பெண்கள் தீக்குளித்திருந்தாலும் அரசியல் செய்கிற நிலையிலேயே பாரதிய ஜனதாக் கட்சியினர் இருந்தனர். கீதா மேத்தாவின் தண்ணீர் பட செட்டுக்களை உடைப்பதிலும் பயர் படத்தின் தியேட்டர் உடைப்பிலும் பெண்களே முன்னிலைப்படுத்தப்பட்டனர் என்பதும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது. கலாச்சாரத்தின் காவிகளாகவும் புனிதங்களைக் காப்பவர்களாகவும் பெண்களே மதவாதிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டனர். ஆண்களின் பார்வையில் முன்னலைப்படுத்தப்பட்ட பெண்கள் இவர்கள். இதனது அதீதவடிவமாகவே  ஆண்கள் பார்வையில் கலாச்சாரத்தை நிலைநிறுத்ததாத இஸ்லாமியப் பெண்களின் மீதான குரூர நடவடிக்கைளாகத் தோன்றியது தலிபானியம்.

இப்போது இரண்டாவது பிரச்சினைக்கு நகர்வோம். வரலாறு ஏற்படுத்திய மாற்றமும் மத அடிப்படைவாதமும் இணைந்ததாகவே பெண்களின் மீதான முஜாஹிதின்களின் கண்ணோட்டமும் தலிபான்களின் கண்ணோட்டமும் வளர்ச்சி பெறுகிறது. வறுமையும் வேலையின்மையும் கிராமிய மரபுகளும் மதப்பிடிப்பும் நிறைந்த இருபதாம் நூற்றாண்டுச் சமூகத்தில், மன்னராட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, மேலிருந்து ஆப்கானிஸ்தானில் சோசலிசத்தைக் கட்ட முயன்ற மார்க்சியர்கள், பெண்கள் தொடர்பாக மிகப் பெரிய மாற்றங்களை ஆப்கானிஸ்தான் சமூகத்தில் உருவாக்குகிறார்கள். மார்க்சியர்களின் ஆட்சிக் காலத்தில் முக்காடு சட்டவிரோதமாக்கப்படுகிறது. பெண்கள் பல்கலைக் கழகங்களில் கல்வி கற்கிறார்கள். பொறியியலாளர்களாகவும் மருத்துவர்களாகவும் சட்ட வல்லுனர்களாகவும் பெண்கள் உருவாகிறார்கள். பெண்கள் மார்க்சியர்களின் காலத்தில் அரசு நிர்வாகிகளாகவும், வேலையின்மைச் சமூகத்தில் வேலையிடங்களை எடுத்தக் கொள்பவர்களாகவும் வருகிறார்கள். பெண் நகர்ப்புற ஆண்களுக்கு அச்சுறுறுத்தலாகவும், குடும்பப் பொருளாதாரத்தில் சமநிலையைக் கோருபவளாகவும், கிராமிய சமூகத்தில் மௌல்விகளின் மௌடீகத்திற்குச் சவாலாகவும் இச்சமூகத்தில் உருவாகிறார்கள். இதனால்தான் பெண்களின் அதிகமான ஆதரவு பெற்றவர்களாக மார்க்சியர்களின் ஆட்சி இருந்திருக்கிறது. பெண்கள் வீட்டிலிருந்து நகர்ந்து பொதுவாழ்விலும் பொருளாதார உற்பத்தியிலும் ஈடுபடுகிறபோது ஆண்களின் மனதில் ஏற்படும் பாலியல் ஆதிக்கப் பதட்டங்களும் ஆட்;சேபனையும் எந்தச் சமூகமும் போலவே ஆப்கானிய சமூகத்திலும் எழுந்தது. தமிழகத்துச் சங்கராச்சாரி வேலைக்குப் போகிற பெண்கள் பாலியல் ஒழுக்கம் அற்றவர்கள் எனச் சொன்ன கூற்று இந்தியச் சூழலில் இதனை மெயப்பிக்கப் போதுமானதாகும்.

பெண்களின் பாலியல் தொடர்பான எந்த ஆண்மையச் சமூகத்தினதும் பதட்டங்களையே ஆப்கான் சமூகமும் பிரதிபலி;த்தது. நிலத்தின் மீதான ஆதிக்கதிற்கான போர் நடத்தும் தேசியம், பெண் உடலின் மீதான ஆதிக்கத்தையும் தன்னிடம் சேர்த்துக்கொண்டது. அந்நியர்களால் விடுதலை பெற்ற பெண்ணின்; உடல் அடிமைப்படுத்தப்படுதலே விடுதலை எனும் முடிவுக்கு முஜாஹிதின்களும் தலிபான்களும் வந்தனர். பெண்களின் பாலியல் தொடர்பான வரலாற்றுரீதியான குரானது வியாக்யானங்களும் அப்போது புதிய வியாக்யானததுக்கு உட்பட்டன. பெண்ணின் உடலைத் தமது கட்டப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் மூலமே, தமது கலாச்சாரக் காவிகளான பெண்களை தமது ஆளுகைக்குள் கொண்டவருவதன் மூலமே, தாங்கள் சொர்க்கம் போவோம் எனும் நம்பிக்கையை வரித்துக் கொண்டார்கள் தலிபான்கள். பெண்கள் இப்போது சுயாதீனமான உயிரிகள் அல்ல; மாறாக தமது கலாச்சாரத்தினதும்; இனத்தினதும் புனிதத்தைக் காக்கும் காவிகளே பெண்களின் உடல்கள். ஆகவே அதனை மூடிவைக்கவும், உடைக்கவும், எரிக்கவும், புசிக்கவுமாக தலிபான்கள்; தலைப்பட்டார்கள். பெண்களின் மீதான மட்டுமீறிய சித்திரவதை நடவடிக்கைகள் இவ்வாறுதான் தலிபான்களால் மேற்கொள்ளபட்டன. இவ்வாறு பெண்களின் புனிதத்தைக் காககப் போராடிய தலிபான்களும் புனிதப்பட, பணிரெண்டு வயதுப் பெண் குழந்தைகள் கூட தலிபான்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள். பெண் உடம்பு வேட்கையைத் தூண்டுவது, மட்டற்ற வகையில் வேட்கை கொண்டது எனும் மதாதீத அடிப்படையில் பெண்களின் உடல் வல்லூறுகளின் நகங்களில் அகப்பட்டதாக தலிபான்களின் கையில் அகப்பட்டது.

இரண்டாவதாக மார்க்சியக் கருத்தியல் என்பது ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஒன்றல்ல. உலகெங்கும் சுயாதீனமாக மார்க்சியச் சிந்தனை படித்த வர்க்கத்தினரிடம் தோன்றியது போலவே மார்க்சியர்கள் ஆப்கானிஸ்தானிலும் தோன்றினார்கள். உலகில் மார்க்சியவாதிகளிடம் இருந்த அனைத்து விதமான போக்குகளும் ஆப்கானிஸ்தானிலும் இருந்தன. தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், அறிவுஜீவிகள், தேசிய முதலாளிகள் போன்ற சமூக சக்திகள் தொடர்பான விவாதங்கள், சீன ரஸ்ய மாதிரிகள் தொடர்பான விவாதங்கள் அவர்களிடையேயும் நடைபெற்றது. அறுபதுகளில் வீறு கொண்ட ஆப்கானிய மார்க்சியம் என்பது அந்த மண்ணிலும் அந்த மக்களிலும் வேர் கொண்டதாகத்தான் இருந்தது. பல்வேறு சந்தரப்பங்களில் பெண்களின் ஆதரவு பெற்றதாக மார்க்சியர்களின் அரசு இருந்தது. தேசியத்தினால் உந்தப்பட்ட ஆக்கிரமிப்பு எதிர்ப்பு யுத்தம் தோன்றியதன் விளைவாக இலட்சக் கணக்கில் ஆப்கானியர்கள் சோவியத் படைகளால் கொல்லப்பட்ட போது, அதனது உடனடி இழப்புக்களுக்கு முகம் தர வேண்டியவர்கள் பெண்களாகவே இருந்தனர். இந்த இழப்புக்கள் அவர்களை சோவியத் படைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழவைத்தன. அமெரிக்கா இந்த நிகழ்வுப் போக்கில் முஜாஹிதின்களிடம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை, பெண் எதிர்ப்பு அரசியலை ஊட்டிவளர்த்தது.

1978 ஆம் ஆண்டில் காபூல் பல்கலைக் கழகத்தில் விவசாய ஆராயச்சிக்கெனச் சென்றிருந்த வின்னிபெக் பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் ஜான் ரயான், ஆப்கானிஸ்தானில் நேர்ந்த மாற்றம் முற்றிலும் மண்சார்ந்தது எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் நான்கில் மூன்று பகுதி நிலங்கள் கிராமிய, மக்கள் தொகையில் மூன்று சதவீதமாகவே இருந்த நிலப்பிரபுக்களின் கையில் இருந்தது எனவும், முன்னைய ஆட்சியால் வெறுப்பற்ற விவசாயிகள் 1978 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையின் முன்ப ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் எனவும், மக்கள் எழுச்சி கலவரமாக மாறாமலிருக்க ஆப்கானிய ராணுவம் ஒரேயொரு அடையாள குண்டு வெடித்ததாகவும், அதனயைடுத்து ஆள்பவராயிருந்தவரை ராஜினாமாவைச் சமர்ப்பிக்கச் செய்து படையினர் மார்க்சிஸ்ட்டுகளைப் பதவியில் அமர்த்தியதாகவும் ஜான் ராயன் தெரிவிக்கிறார். ஆப்கானிய மக்களின் எழச்சியை தொடர்ந்தே மார்க்சிஸ்ட்டுகள் பதவிக்கு வந்தனர். பதவிக்கு வந்த அரசு, குறைந்த கூலி நிர்ணயம் செய்தது. விவசாயிகளின் அனைத்துக் கடன்களையம் ரத்துச் செய்தது. தொழிசங்கங்களை அங்கீகரித்தது. நிலச்சீர்த்திருத்தததை அமல் செய்தது. கம்யூனிஸ பூச்சாண்டியால்; ஆட்டுவிக்கப்பட்ட அமெரிக்க அரசு அதன்பின்பே ஆப்கானிய அரசை  சோவியத் ஆதரவு அரசு என அறிவித்து, சவுதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு சேர்ந்து மார்க்சிஸ்ட்டுகளை விரட்டியடிக்க முஜாஹிதின்களுக்கு உதவ முடிவு செய்தது. தராக்கியை அமிர் கொலை செய்தார் என்றும்; மாரக்கிஸ்ட்டுகளை அமிர் வேட்டையாடினார் எனவும், அமெரிக்க உளவுத்துறையின் ஆதரவுடன் அமிர் செயல்பட்டதோடு முஜாஹிதின்களோடும் சமரசம் செய்து கொண்டார் எனவும் ரயான் தெரிவிக்கிறார். அதன் பின்பே சோவியத் யூனயிலிருந்து வந்த கல்க் இயக்கத் தலைவரான பாப்ரக் கார்மல,; 1979 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆப்கான் அரசுத் தலைவராகத் தலைமையேற்கிறார்..

சோவியத் யூனியனது ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடியவர்கள் முஜாஹிதின்கள் மட்டுமல்ல, தாராளவாத இஸ்லாமிர்கள் அங்கு போராடியிருக்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகள் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து விவசாயிகளின் புரட்சியொன்றினை ஆப்கானில் நடத்தவும் முயன்றிருக்கிறார்கள். பெண்ணியவாத இயக்கமான ஆப்கான் புரட்சிகரப் பெண்கள் கூட்டமைப்பு அங்கு போராடியிருக்கிறது. ஆப்கான் புரட்சிகரப் பெண்ணிய இயக்கத்தின் போராட்டமென்பது இரண்டு முனைகளிலான போராட்டமாக இருந்தது. ஆப்கான் தேசியத்;தினால் உந்தப்பட்ட ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டமாக அது இருந்த அதே வேளையில், ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடியதாகச் சொல்லப்பட்ட பல்வேறு ஆப்கானிய கிளர்ச்சியாளர்களின் பெண்கள் விரோத நடவடிக்கைளுக்கு எதிராகவும் அவர்கள் போராடி வந்திருக்கிறார்கள். அவ்வியக்கத்தின் தோற்றுனரும் தலைவியும் ஆன மினா தனது இருபதாண்டு போராட்டத்தின் எந்தக் கட்டத்திலும் இந்தக் கிளரச்சியாளர்களோடு உடன்படமுடியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். சோவியத் சார்பு அரசின் அரச வன்முறைக்கு இணையாக இந்தக் குழுக்களின் வன்முறை இருந்திருக்கிறது. ஆட்கடத்தல், பாலியல் வல்லுறவு, மட்டுமீறிய மனித உரிமை மீறல்கள் போன்றவற்றைப் புரிந்தவர்களாகவும்; கிளர்ச்சியாளர்களான முஜாஹிதின்கள் இருந்திருக்கிறார்கள் என மினா பதிவு செய்திருக்கிறார். இத்தகைய குழுக்களில்; பலம் வாய்ந்தவர் எனச் சொல்லப்பட்ட குல்புதின் ஹக்மதியரின் ஆட்களாலேயே மினாவும் அவரது மாவோயிஸ்ட் கணவரும் கொல்லப்பட்டார்கள் என வரலாறு பதியப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்று எழுபதாம் ஆண்டுகளில் ஹக்மதியார் காபூல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு பயின்று கொண்டிருந்த வேளையில் கவிஞனும் மாவோயிஸ்ட்டுமான  சத்யால் சுகந்தனைக் கொன்றுவிட்டு ஓடியதும் ஹக்மதியார்தான். அமெரிக்காவிடமிருந்து அதிகம் நிதியுதவி பெற்றவரும் ஹக்மதியார்தான். இந்தக் குழுக்கள் அனைத்துமே இடதுசாரிகளைக் கொன்றொழித்தது. மாவோயிஸ்ட்டுகளையும் இவர்கள் கொன்றொழித்தார்கள். சோவியத் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடிய சுதந்திரப் போராளிகள் என அமெரிக்காவினால் வர்ணிக்கபபட்ட முஜாஹிதின்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து வகையிலும் பேரழிவையே கொண்டுவந்தார்கள். ஆப்கானை சுடுகாடாக மாற்றியதோடு பெண்களின் மீதான மிகப் பெரும் கொடுமை புரிந்தவர்களாகவும் முஜாஹிதின்கள் இருந்தார்கள்.

1978 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி ஆப்கான் ஆட்சியைக் கைப்பற்றிய மார்க்சியர்கள் பல்வேறு உட்கட்சிப் பிரச்சினைகள்-அமெரிக்க உளவத்துறையான சிஐஏவின் ஊடுறுவல்கள்- முஜாஹிதின்கள் எதிர்ப்பு என இருந்தாலும் 1992 ஆம் அண்டு வரை 15 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தார்கள்.  1989 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோர்பச்சேவின் பெராஸ்ட்ராய்க்கா திட்டங்களையடுத்து சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறின. அதன் பின்பும் நஜிபுல்லாவின் தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசு ஆப்கானிஸ்தானில் பதவியவிலிருந்தது. 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முஜாஹிதின்கள் காபூலைக் கைப்பற்றி நஜிபுல்லாவைத் தூக்கிலிட்டனர். அதிலிருந்து நான்கு ஆண்டுகள் உள்நாட்டுப் போரின்பின்பு, 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தலிபான்கள் காபூலைக் கைப்பற்றினர்.

சோவியத் யூனியனை எதிர்த்த முஜாஹிதின்களை ஆதரித்த அமெரிக்க அரசும், சவுதி அரேபியாவும் தலிபான்களை ஆதரித்தார்கள். முஜாஹிதின் குழுக்களிலேயே மிகக் கொடுரமானவனும் ஆயிரக்காணக்கில் ஹஸாரா இனப் பெண்களைப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்த உத்திரவிட்டவனும் ஆன ஹக்மதியாருக்கே அமெரிக்கா அதிகமும் உதவி செய்தது, ஹக்மதியாரின் இயக்கத்திலேயே பின்லேடனும் இருந்தான் என்பது மட்டுமல்ல, பின்லேடனுக்கும் அமெரிக்காவே நேரடியாக ஆயுத உதவிகள் அளித்தது.  தலிபான் என்பது முஜாஹிதின்களிடம் இருந்து கிளைத்த இயக்கம் என்பதும், முற்றிலும் அடிப்படைவாத இயக்கம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். தலிபான் இயக்கம் முஜாஹிதின்களுக்கு எதிரான தனித்த அரசியல் இயக்கம் என்பது தவறான புரிதலாகும். தலிபான்களுக்கும் முஜாஹிதின்களுக்கும் இருந்த மிகப் பெரும் வித்தியாசம் ஒன்றுண்டு. முஜாஹிதின்கள் ஆப்கானியர்கள். தலிபான்கள், ஆப்கனிஸ்தானை மையமாகக் கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாத சமூகத்தை உருவாக்க விரும்பிய அந்நியநாட்டு அடிப்படைவாதிகள் என்பதுதான் அந்த வித்தியாசமாகும். ஆகவேதான் தலிபான்களின் ஞானத்தந்தையாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த பின்லாடன் இருக்கிறார் என்பதும் நினைவுகூரத்தக்கதாகும்.

முஜாஹிதின் என்பது சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்த பல்வேறு குழக்களிருந்து போராடியவர்களுக்கும் கொடுக்கப்பட்ட பொதுப்பெயராகும். புனிதப் போராளிகள் என இது அர்த்தம் பெறுகிறது. தலிபான்கள் எனில் இஸ்லாமின் மாணவர்கள் என அர்த்தம் பெறும். பாகிஸ்தானில் இஸ்லாமிய மதக்கல்வி பெற்று, பாகிஸ்தான் மதரஸாக்களில் இருந்து வந்தவர்கள் இவர்கள்.  முல்லா ஒமரினாலும் பின்லேடனினாலும் இஸ்லாமிய அடிப்படைவாதம் போதிக்கப்பட்டவர்கள் இவர்கள். பாகிஸ்தான் அகதிமுகாம்களில் பாகிஸ்தான் அடிப்படைவாதியான மௌலானா பஸ்லூர் ரகுமான் நடத்திய மதப்பள்ளிகளில்-மதராஸக்களில்- பயின்றவர்கள் இவர்கள். 1992 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த முஜாஹிதின்கள் தமக்குள்ளான அதிகாரச் சண்டைகளாலேயே நாட்டைச் சீர்;குலைத்தார்கள். கடத்தல், கொள்ளயைடித்தல், பெண்களைப் பலாத்காரப்படுத்துதல் போன்றவற்றோடு கஞ்ஜா பயிரிடுவதும் அதனை ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்வதுமே அவர்களது திட்டமாக இருந்தது. பிற கருத்தியல்களைச் சகித்துக் கொள்ளாமை, பெண்களின் மீதான ஒடுக்குமுறையிலான அணுகுமுறை, போதைக் கடத்தல் போன்றனவே முஜாஹதின்களின் பிரதான நடவடிக்கையாக இருந்தது. நாட்டினது சகல நடவடிக்கைளும் சீர்குலைந்ததோடு அறவியலும் தனிநபர் ஒழுக்கமும் முற்றிலும் சீர்குலைந்த ஒரு நிலைமையிலேயே, 1994 ஆம் ஆண்டு இறுதியில் தலிபான் இயக்கம் தொடங்கப்பட்டது. தலிபான்களின் அடிப்படையான நோக்கங்கள் இரண்டு. முதலாவதாக ஆப்கானிஸ்தானை தூயதாக்கிச் சுத்தப்படுத்த வேண்டும். இரண்டாவதாக அத்தகைய தூய்மை என்பது ஷரியத் சட்டத் தொகுப்பின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். ஆப்கானின் தூய்மையை இஸ்லாமிய அடிப்படையிலான ஒழுக்கங்களின் மூலமே நிலைநாட்ட முடியும் என நினைத்த தலிபான்கள்;, பெண்களின் கற்பைப் புனிதப்படுத்திப் பூட்டிவைப்பதன் மூலமே அதனை நிலைநாட்ட முடியம் என நினைத்தார்கள்.

வெகுமக்களுக்கு முன்பாக தூக்குத் தண்டனைகள் சதுக்கங்களில் நிறைவேற்றபட்டன. திருடியவருக்குக் கைவெட்டுதல், பாலியல்மீறல் புரிந்த பெண்ணை; கல்லால் அடித்துக் கொல்லுதல் போன்றன அன்றாட நிகழ்வாகின. இசை நாடாக்கள் எரிக்கப்பட்டன. திரையரங்குகள் மூடப்பட்டன. கணவனோ சகோதரனோ உடன் வராமல் பெண்கள் வெளியில் வரக்கூடாது எனச் சட்டமிடப்பட்டது. பெண்களுக்கு பள்ளி கல்லூரிக் கல்வி மறுக்கபட்டது. கல்விக் கூடங்கள் மூடப்பட்டன. வெளியிலும் வீட்டிலும் பெண்கள் முக்காட்டுக்குள் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பெண்களின் கால்கள் வெளியே தெரிந்தால் தண்டனை விதிக்கப்பட்டது. முகத்தை வெளியே காட்டும் பெண்கள் தண்டிக்கப்பட்டார்கள். அத்தகைய பெண்களின் கணவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். பைத்திய மனநிலை தந்த சந்தோஷத்தில், மதக்கருத்தியல் தரும் பித்துநிலையில் அவர்களுக்குத் தம் நடவடிக்கைகள் அனைத்தும் பரவசம் தருவதாகியது. கடவுளிடம் சென்று சேர்வதற்கான நிச்சயமான வழியாக அவர்களது நடவடிக்கைகள் கருதப்பட்டன. தலிபான்கள் பெரும்பாலுமானோர் கிராமப்புறத்திலிருந்து வந்தவர்கள். முழுமையாக பஸ்டுன் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆப்கானிஸ்தானின் ஜனத்தொகையில் அறுபது சதவீதமானவர்கள் பஸ்டுன்கள். 30 சதமானவர்கள் தாஜிக் இனத்தவர். 5 சதவீதம் உஸ்பெக் இனத்தவர். பிற ஐந்து சதவீதமானவர்கள் ஹஸாரா இனத்தவர்கள் மற்றும் மங்கோலிய நாடோடி இனத்தவர். பஸ்டுன்கள் பாகிஸ்தானில் பெரும்பானமையாக வாழும் ஸன்னி இனத்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். உள்நாட்டுக்; கலவரங்களில் ஈரானில் தஞ்சம் புகுந்தவர்கள், ஆப்கானில் வாழும் ஸியா நம்பிக்கையாளர்கள் மற்றும் பஸ்டுன் அல்லாத இனத்தவர்கள் ஆவர். மாரக்சியர்களான கல்க்குக்கும் பார்ச்சத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் கூட அதிகமும் கருத்தியல் ரீதியானது என்பதவிடவும் பிரதேச ரீதியானது என்பதும் இங்கு கவனம் கொள்ளத்தக்கதாகும்.

அரசியல் இஸ்லாம் குறித்து அதிகமும் ஆய்வு செய்த லண்டன் ஸ்கூல் ஆப் இகனாமிக்ஸின் பேராசிரியரான பிரெட் ஹாலிடே, ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனை எதிர்த்துப் போராடியவர்கள இனக்குழத்தலைவர்களும் நிலப்பிரபுக்களும்தானெயொழிய பிறறில்லை; அவர்கள் தமது பழைய மரபுகளைத் தாங்கிப் பிடித்துக்கொள்ளவும், நிலைநாட்டவும் போராடினார்களேயொழிய கம்யூனிசத்தை எதிர்த்துப் போராடினார்கள் என்று சொல்ல முடியாது என்கிறார். தலிபான்களையும் அமெரிக்கா ஆரம்பத்தில் ஆதரித்தது. தலிபான்கள் கஞ்ஜா காடுகளை அழித்தாகப் பாராட்டி 48 மிலிலயன் டாலர்கள் நிதி வழங்கிக் கௌரவித்தது. தலிபான்கள் பெண்கள் மீது நடத்திய மனித வேட்டையை பார்பரா புஸ்சும் அப்போது கண்டிக்கவில்லை. திருமதி கிளின்டனும் கண்டிக்கவில்லை. மெடலின் பிரைட்டும் கண்டிக்கவில்லை.  காரட்டரும் ரீகனும் முஹாஜிதின்களுக்கு ஆதரவு வழங்கியது போல, ஜோர்ஜ் புஸ்சும் அவரது நிர்வாகிகளும் உளவுத் துறையும் தலிபானுக்கு ஆதரவு வழங்கின.

ஐம்பதாண்டுகால ஆப்கான் அரசியல் வாழ்வைத் தொகுத்துக் கொள்வோமானால் நாம் சில நிலைபாடுகளுக்கு வந்து சேரமுடியும். முதலாதாக சோவியித் யூனியன் ஆப்கானை ஆக்கிரமித்ததனால்தான் அமெரிக்கா முஜாஹிதின்களுக்கு அதரவு வழங்கியது என்பது பொய். 1978 ஆம் ஆண்டு ஆப்கான் மார்க்சியர்கள் அரசுக்கு வருவதற்கு ஆறுமாதங்களுக்கு முன்பாகவே முஜாஹிதின் இயக்கம் அமெரிக்க உளவுத் துறையால் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. 1979 ஆம் ஆண்டு செப்டம்பரில்தான் சோவியத் படைகள் ஆப்கானுக்குள் நுழைந்தன. இடையில் அமெரிக்காவுக்குச் சென்ற அமிர் சிஐஏ உதவியுடன் தராக்கியைக் கொன்றதுடன் பல்வேறு மார்க்சியர்களையும் கொன்றொழித்தார். முஜாஹிதின்களுடன் சமரசத்துக்கும் வந்தார். சோவியத் யூனியன் படைகள் முற்றிலும் ஆப்கானைவிட்டுச் சென்றபின் மார்க்சியர்களின் அரசு மூன்று ஆண்டுகள் முஜாஹிதின்களோடு போராடியது. அமெரிக்காவின் கட்டற்ற பொருளியல் ராணுவக் குவிப்பின் முன் நின்றுபிடிக்க முடியாமல்தான் மார்க்சிய அரசு வீழ்ந்தது. அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்டும் பாகிஸ்தானும் முஹாஜிஹிதின்களுக்கு ஆதரவளித்தது எவ்வகையிலும் ஆப்கானை முன்னேற்றத்திற்கு இட்டுச்செல்லவில்லை. மாறாகக் காட்டுமிராணடித்தனத்தையே இவர்கள் பிரசவித்தார்கள். பின்லேடனை அமெரிக்க உளவுத்துறையே வளர்த்தது, பல்வேறு நாடுகளிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் இஸ்லாமிய அடிப்படையவாதிகள் வந்து போராடுவதற்குத் திட்டம் வகுத்ததும் அமெரிக்காதான். சோவியத் அரசின் ஆக்கிரமிப்பு சர்வதேசியச் சட்டங்களுக்கு முரணானது என்பதில் சந்தேகமில்லை. மிருகத்தனமாக அது ஆப்கானியர்களை நடத்தியது என்பதிலும் சந்தேகமில்லை. சோவியத் யூனியன் ஆப்கானுக்குப் படைகளை அனுப்பி ஆக்கிரமிக்காமல், அமைந்த மார்க்சிய அரசுக்கு ஆயுதங்கள் வழங்கியிருந்தாலே ஆப்கானிய மார்க்சிய அரசு நின்றுபிடித்திருக்கும் எனச் சொல்கிறார் கனடிய ஆய்வாளரான ஜான் ரயான். வியட்நாம் கியூபா போன்ற நாடுகள் அவ்வாறு நின்று பிடித்தன எனவும் ரயான் சொல்கிறார்.

தலிபான்களின் சகிப்புத் தன்மையின்மை, பெண்வெறுப்பு, பயங்கரவாதம், ஆயுதக் கலாச்சாரம் போன்றவற்றை இப்போது புதிதாக் கண்டுபிடித்த மாதிரி வாயடித்துத் திரியும் ஜோர்ஜ் புஸ்சும், பார்பராவும், டொனால்ட் ரொம்ஸ்பீல்ட்டும் தலிபான்களைத் தாங்கள் தான் உருவாக்கினோம் என்பதனை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தலிபான்கள் முஜாஹிதின்களின் நீட்சியாகவே தோன்றினார்கள் என்பதனையும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இப்போதும் அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட புதிய ஆப்கானிய அரசில் பழைய முஜாஹிதின்கள் தலிபான்கள் பதவியில் இருக்கிறார்கள் எனும் உண்மையயைக் கூட அவர்கள் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஹக்மதியார் அமெரிக்காவில் ஊட்டிவளரக்கப்பட்டவர். பின்லாடனின் முன்னாள் நண்பர் ஹக்மதியார். மார்க்கியர்களை மட்டுமல்ல பெண்ணிலைவாதிகளான மினா போன்றவர்களையும் கொன்று குவித்தவன் ஹக்மதியார். முகத்திரையிடாத காபூல் பல்கலைக்கழக மாணவிகள் மீது திராவகம் வீசச் சொன்னவன் அவன். ஹஸாரா இனப் பெண்களை ஆயிரக்கணக்கில் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொன்றவன். உடலை அங்கியால் மூடாத பெண்களின் மார்புகளை அறுத்தவன் ஹமக்மதியார். புரட்சிகர ஆப்கான் பெண் இயக்கமும்  சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையும் இக்கொடுங்கோலனின் வன்முறை பற்றி பக்கம் பக்கமாகச் சொல்கிறது. முஜாஹிதின்களின் போராட்டமும் சரி தலிபான்களின் போராட்டமும் சரி ஆப்கானிஸ்தானின் விடுதலைக்கானது அல்ல. இனக்குழுத்தலைவர்களின் பாசிசமே முஜாஹிதின்களின் போராட்டம். பித்தக்கனவுலகை ஸ்தாபிக்கப் புறப்பட்ட சில மத அடிப்படைவாதிகளே தலிபான்கள். அவர்கள் ஆப்கானில் சொர்க்கத்தையல்ல நரகத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் சோவியத் யூனியனை எதிரத்துப் போராடியதற்கான காரணங்கள், மார்க்சியர்கள் மதச்சார்பற்றவர்கள், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரானவர்கள், பெண்விடுதலைக்கு ஆதரவானவர்கள் என்பதனால்தான்.

முஜஹிதின்கள் சோவியத்யூனியன் இடையிலான போரினாலும், தலிபான்களின் மனித வேட்டையிலும் ஆப்கானிஸ்தான் எனும் நாடே பிணக்காடாகியது. பத்துலட்சம் மக்கள் கொலையுண்டனர். முப்பது லட்சம் மக்கள் அகதிகளாயினர். இதில் பத்துலட்சம் பேர் ஈரானுக்கும்,; பதினெட்டு லட்சம் பேர் பாகிஸ்தானுக்கும் பெயர்ந்தனர். அறுபதினாயிரம் பேர் அமெரிக்காவில் அகதி அந்தஸ்து பெற்றனர். பிறர் மேற்கில் அகதி அந்தஸ்து பெற்றனர். மேற்கிலும் அமெரிக்காவிலும் அகதி அந்தஸ்து பெற்றவர்கள் ரஸ்ய எதிரப்புக் காரணங்களுக்காகவே அங்கீகரிக்கப்பட்டனர். 50 ஆயிரம் பேர் முஹாஹிதின்களுக்கிடையிலான உள்சண்டையில் மரணமுற்றனர். பதினைந்தாயிரம் ரஸ்யப் படையினர் மரணமுற்றனர். 1979 இல் ரஸ்ய நாத்திகர்களை எதிரத்துப் போராடுவதற்கு ஆப்கானிஸ்தான் வந்த பின்லாடன் ஒரு சிவில் என்ஜினியர் என்பதும், அவருடன ஜிகாத்தில் பங்கேற்க பற்பல இஸ்லாமிய நாட்டு இளைஞர்கள் அன்று ஆப்கானுக்கு வர சிஐஏ உதவியெதென்பது;ம், பின்லாடன் தனிப்பட்ட முறையில் சிஐஏவினால் பயிற்றவிக்கப்பட்டவர் என்பதும் இங்கு றினைவுகூரத்தக்கது. ரஸ்யர்களை எதிரத்துப் போராடியபின் 1991 ஆம் ஆண்டு சவூதி அரேபியா திரும்பிய பின்லேடன் பின்பு சூடான் சென்று உலக இஸ்லாமிய மையத்தைத் தொடங்கினார். ஆப்கான் – பாலஸ்தீனம்- ஈராக் போன்ற அனுபவங்களின் அடிப்படையில் அவர் உலகு தழுவிய ஒரு புனித யுத்தத்தினை அமெரிக்காவின் மீது தொடங்கினார். மெக்கா மதீனா ஜெருசலேம் போன்ற இடங்களிலிருந்து, நாடுகளிலிருந்து புறச்சமயத்தினரை விரட்டுவது அவரது புனிதப் போரின் லட்சியமாக இருந்தது. சூடானிலிருந்து ஆப்கானுக்கு நகர்ந்த அவர், அங்கு ஆயுதப் பயிற்சி முகாம்களை உருவாக்கினார். காபூல் பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்பம் பயின்ற மாணவர்களுடன் சேர்ந்த பொறியியலாளரான பின்லாடன், சவூதி அரேபிய வகை வியாக்யானத்துடன்; இஸ்லாமிய உலகை அமைக்க அல்கதா எனும் பெயர் பெறும் தளம் எனும் இயக்கத்தையும் தொடங்கினார். இப்படித்தான் அமெரிக்கர்கள் வளர்த்த கடா அவர்கள் மீதே பாயத் தொடங்கியது. பின்லாடனின் குடும்பம் சவூதி அரச குடும்பத்தைச் சார்ந்த குடும்பம் என்பது மட்டுமல்ல, பின்லாடன் கட்டுமான நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனமாகவும், பணம் கொழிக்கும் நிறுவனமாகவும் இருந்தது. அமெரிக்கப் பணமும் பின்லாடனின் பணமும் இணைந்து ஆப்கானுக்கு அந்நியமான அடிப்படைவாதப் பண்புகளுடன் தலிபான் எனும் இயக்கம் உருவாகியது.

தலிபான்கள் போரின் குழந்தைகள் எனக் குறிப்பிடுவார் ஆப்கான் புரட்சிகரப் பெண்கள் இயக்கத்தின் பிதாமகரான மினா. அவர்கள் உறவுகளை இழந்தவர்கள. பாகிஸ்தான் மதப் பள்ளியான மதரஸாக்களில் வளர்ந்தவர்கள். தாய் சகோதரி காதலியர் எனப் பெண்களை அவர்கள் அறியாதவர்கள். மூடுண்ட உலகத்தில் வளரந்த அவர்களுக்கு எந்த உலகப் பார்வையும் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஆப்கானின் கடந்த கால வரலாறு என்பதும் தெரியவில்லை. மத அடிப்படைவாதத்தினால் வழிநடத்தப்பட்ட அவர்கள் மாயையான மனப்பான்மை கொண்ட மனிதர்களாகவே ஆனார்கள். முஜாஹிதின்களை பொறியியல் படித்த தொழில்நுட்ப கொமேனிகள் என்றார் பிரெட் ஹாலிடே. தலிபான்களை பைத்தியநிலையின் சந்தோசத்தில் திளைத்தவர்கள் எனக் குறிப்பிடுகிறது ஹனாவின் விவரணப்படம். உலக வரலாற்றில் தலிபான்களின் பெண் வெறுப்பு, பெண் உடல் மீதான அவர்களது சித்திரவதை உணர்வு என்பது இணைகாணமுடியாத ஒன்றாகும். 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாலியில் மீறல் குற்றச்சாட்டுக்காக அவர்கள் ஒரு பெண்ணை காபூல் விளையாட்டு மைதானத்தில் அனைத்துப் பொதுமக்களையும் அழைத்துக் கல்லால் அடித்துக் கொன்றார்கள். இதனையும் இதைப் போன்றே கைகள் வெட்டுதல், தலை கொய்தல் போன்ற சம்பவங்களையும், புரட்சிகர ஆப்கான் பெண்கள் இயக்கம் மூடுதுணியில் ஒளித்துவைத்த காமெராவினால் எடுத்த ஒளிச்சுருள்களின் மூலம் உலகெங்கும் பரவச் செய்தது. இதனைத் தொடர்ந்து ஆப்கான் புரட்சிகரப் பெண்கள் இயக்கம் தலைமறைவாக இயங்க நேர்ந்தது. 1979 ஆம் ஆண்டு சோவியத் ஆக்கிரமிப்பு எதிர்ப்பில்; வேர்கொண்ட புரட்சிகர ஆப்கான் பெண்கள் இயக்கம் பத்தாண்டுகள் சோவியத் ஆக்கிரமிப்பின் கீழ் போராடியது. 1989 ஆம் ஆண்டு அமெரிக்க ஆதரவு முஜாஹிதின் தளபதியான ஹக்மதியார் மினாவையம் அவரது கணவரையும் கடத்திச் சென்று கொலை புரிந்தான். பாகிஸ்தான் அரசு அவனது நடடிக்கைகளுக்கு அன்று ஆதரவாக நின்றது.

சோவியத் ஆக்கிரமிப்பையும் எதிர்த்துக்கொண்டு, பெண்விடுதலைக்குக் குரல்கொடுத்துக் கொண்டு, முஜாஹிதின்களையும் தலிபான்களையும் எதிர்த்துக்கொண்டு, அமெரிக்க ஆக்கிரமிப்பினையும் எதிர்த்துக்கொண்டு, அல்ஜீரியா, இந்தியா, எகிப்து போன்ற நாடுகளின் பெண்விடுதலைப் போராளிகளால் ஆதர்சம் பெற்று வாழ்ந்த மனிதர்களும் மனுசிகளும் ஆப்கானிஸ்தானில் இருந்திருக்கிறார்கள். அளப்பரிய தியாகத்துடனும் நெஞ்சுறுதியுடனும் வளர்ந்து அடையாளமற்ற முறையில் சுட்டுக்கொல்லப்படடு, உடலும் காணாது போய் மறித்த பெண்ணான மினா அத்தகைய ஜீவன்களில் ஒருவர். இவரது பெண்ணியம் அமெரிக்க ஐரோப்பியப் பெண்களால் உந்தப் பெற்றதல்ல. மாறாக மக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலினால், ரஸ்ய நாவலான ஜமீலாவினால், மூன்றாம் உலகின் பெண் புரட்சியாளர்களால் உந்தப்பெற்றது.. ஆப்கானிஸ்தான் குறித்த பெண்மையப் பார்வைக்கான மிகச்சிறந்த உதாரணமாக அவரது வாழ்வு இருக்கிறது. அவரது மரணம் ஆப்கானிஸ்தானில் மறம் வாய்ந்த பெண்ணிலைவாத இயக்கமான புரட்சிகர ஆப்கான் பெண்கள் இயக்கத்தை மக்கள் இயக்கமாகத் தற்போது வளர்த்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. தற்போது ஆப்கான் ஜனாதிபதியாக இருக்கும் காராஸியையும் இவ்வியக்கம் முழுமையாக ஆதரிப்பதில்லை. ஏனெனில் பெண்வெறுப்பு கொண்ட பழைய முஜாஹிதின்கள் தலிபான்களில் பலர் இப்போதைய கராஸியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர் அமைச்சரவை முல்லா ஒருவர்தான் இரு ஆப்கானிய இளம் பெண்கள் ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்;து கொண்டுவிட்டு நாடு திரும்ப முடியாது என்கிறார். கொலையும் கொள்ளைகளும் முரட்டு மத அடிப்படைவாதிகளும் கொண்ட நாடாகவே ஆப்கான் இன்றும் இருக்கிறது. பதிணைந்தாயிரம்; அமெரிக்கப் படைகள் நிரந்தரமாக ஆப்கானில் இருக்கிறது. தலிபான்களும் இன்னும் இருக்கிறார்கள். முல்லா ஒமரும் ஹக்மதியாரும் ஆப்கானிலேயெ இருக்கிறார்கள். தலிபான்களை முதன் முதலாக அங்கீகரித்த பாகீஸ்தான் அரசு தற்போது அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக தலிபான்களை வேட்டையாடி வருவதாகச்சொல்லி தினந்தோறும் ஆப்கானியர்களைக் கொலை செய்து வருகிறது. சமவேளையில் புரட்சிகர ஆப்கான் பெண்விடுதலை இயக்கத்தவரக்ளும் தாராளவாதிகளும்; விமரசனபூர்வமான மார்க்சியர்களும் கலைஞர்களும் ஆப்கானில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது ஆட்சி செய்துவரும் காராஸி ஆப்கான் மன்னர் பரம்பரையிலிருந்து வந்நதவர். ஆப்கானைப் பொறுத்த அளவில் தலிபான்கள் அந்நாட்டைப் பன்னூறு ஆண்டுகள் பின்னோக்கி நகரத்திவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

5.

1996 ஆம் ஆண்டு ஆப்கான் அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான்கள் தலிபான் திரைப்பட ஆவணக் காப்பகத்திலிருந்த 3000 திரைப்படங்களை எரிக்க ஆணையிட்டார்கள். ஆனால் திரைபடத்தின் மீது காதல் கொண்ட கலைஞர்கள் 1000 திரைப்படங்களை வரை ஒளித்துவைத்துக் காப்பற்றினார்கள். சோவியத் காலகட்டத்தில் ஆப்கானில் திரைப்பட ஆவணக் கழகம் ஆரம்பிக்கபட்டது. ஒசாமா திரைப்பட இயக்குனர் சித்திக் பெமார்க் 1980 ஆம் ஆண்டு மாஸ்க்கோ திரைப்படக் கழகத்தில் பயின்றது மட்டுமல்ல நஜிபுலல்லாவின் ஆட்சியின் கீழ் இரண்டு திரைப்படங்களையும் அவர் உருவாக்கினார். சினிமா நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையில், ஆப்கானில் இதுவரை நாற்பது திரைப்படங்களே உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 25 ஆண்டுகளில் பெமார்க்கின் திரைப்படமே ஆப்கானியொரருவரால் உருவாக்கப்பட்ட முதல் ஆப்கான் திரைப்படமாக இருக்கிறது. இதே காலகட்டத்தில் ஹாலிவுட் அமெரிக்க தேசபக்தனும் அசகாயசூரனுமான ரேம்போ வியட்நாமுக்குச் சென்றுவிட்டு, முஜாஹதின்களின் காலத்தில் ஆப்கனிஸ்தானுக்கும் வந்து 1988 ஆம் ஆண்டு சோவியத் படையினரை விரட்ட முஜாஹதின்களுக்கு உதவியும் செய்தான். அதே ரேம்போ மறுபடியும் அப்கானிஸ்தானுக்கு வரப்போகிறான் என்கிறது ஹாலிவுட் செய்திகள். இந்த முறை அவன் தலிபான்களை வென்றுவருகிறான். இவ்வாறு அமெரிக்கர்களினதும் மேற்கத்தியர்களினதும் வெற்றி வரலாறுகளாகவே மூன்றாம் உலக அழிவுகள் கட்டப்படுகின்றன. ஈரான் இயக்குனர் ஸமீரா இதற்கு எதிராகவே, தான் தனது மதியம் ஐந்து மணிக்கு எனும் படத்தை எடுக்க விளைந்ததாக குறிப்பிடுகிறார். ‘அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் அகன்ற பின்னால், ஆப்கானிய மலைகளின்மீது மூடிய கரும்புகை விலகிய பின்னால் ஆப்கானின் மக்களுக்கு என்ன நடந்தது என்பதையே தான் காண்பிக்க விரும்பியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். யுத்தங்கள் வெறுமனே வெற்றிகளின் வரலாறு அல்ல, மாறாக அழிவுகளின் வரலாறு என்பதையே தன் படம் காண்பிப்பதாகவும்’ ஸமீரர் தெரிவிக்கிறார்.

கந்தஹார் திரைப்படத்தில், வரண்ட பாலைவனமும் அழிந்த கிராமங்களும் விமானங்கள் வீசும் பொருட்களுக்கு ஓடிச்செல்லும் முடமான மனிதர்களும், செஞ்சிலுவைச் சங்க முகாம்களும் பற்றைளும் தவிர, வேறொன்றும் திரையில் இல்லை. நீண்ட கறுப்பு அங்கிகளும் பெரிய தலைப்பாகைகளும் அடர்ந்த தாடியும் நிறைத்த அடையாளமற்ற முகங்கள் கொண்ட பிம்பங்காளவும் அசரீரிகளாகவும் தலிபான்கள் திரையில் அசைகிறார்கள். மதியம் ஐந்து மணிக்கு படத்தில் அடரத்தியான மனிதர்களின் நடமாட்டமும் நகரின் மையத்தில் முளைத்த கொட்டகைகளின் அடியில் இயங்கும் காய்கறிக் கடைகளும் துணிக்கடைகளின் நிறங்களும் தெரிகின்றது. முற்றிலும் இடிந்த கட்டிடங்கள், துப்பாக்கி ரவைகள் துளைத்த சுவர்களுடன் பெரிய வீடுகள், புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் செங்கல் மதில் சுவர் தெரிகிறது. வீழ்த்தப்பட்ட விமானத்தில் குடியிருக்கும் மக்களும், விமானத்தின் சுவரில் இந்தி நடிகையான கஜோலின் படத்தை ஓட்ட முற்படும் ஆப்கான் சிறுவர்களும் தெரிகிறார்கள். அழிவுண்ட நகரத்தில் ஜீவனைக் கையில் பிடித்துக் கொண்டு அகதி முகாமிலிருந்து தற்போதுதான் குவிந்த மனிதர்களின் முகங்களை அடைத்துக் கொண்டதாக இப்படம் இருக்கிறது.

ஒசாமா திரைப் படத்தில் காபூல் நகரத்தின் உயர்ந்த மதில்களிலான வீடுகளும், ஊடுறுவிச் செல்லும் தெருவின் இருபுறமும் முரட்டுக்கற்களினால் அமைந்த சுவர்களும் புழுதிச் சாலைகளும் தெரிகிறது. தண்ணீருக்கு அலையும் மக்கள் தெரிகிறார்கள். தண்ணீரைத் தங்கம் போல் பாவிக்கும் மனிதர்கள் தெரிகிறார்கள். அப்போதுதான் பாகிஸ்தானில் இருந்து திரும்பிய அகதிகளை விரட்டும்; காபூல்வாசிகள் தெரிகிறார்கள். கைகால் இழந்தவர்கள். கணவனைத் தேடித்திரிபவர்கள். கைவளையல்களை அடுக்கிக் கொள்பவர்கள். சிறிய கையடக்க வானொலிகளில் பாடல் கேட்கிற முதியவர்கள். அகப்பட்டதைச் சுருட்டும் கொள்ளயர்கள். பாலைவன மணலும் பற்றைகளும் நிறைத்த ஒரு புறமும், புழதிச் சாலைகளும் ரவைகள் துளைத்த இடிந்த கட்டிடங்கள் மற்றொரு புறமும் ஜப்பானிய  இயக்குனரின் படத்தில் சித்திரிக்கபடுகிறது. பெண்கள் அங்கு மறத்துக்கிடக்கும் ஜடங்களாகத் திரிகிறார்கள் பயத்தின் நிழல் அனைவரதும் முகத்திலும் படிந்திருக்கிறது. மதத்தின் அடிப்படையிலான பழைய மனிதர்களும் புதியதாகப் பள்ளிச் செல்லும் சீருடையனிந்த சிறுமிகள் நிறைந்ததாகவும் இந்தப் படங்களில் நமக்குமுன் விரிக்கிறது.

இந்தியத் திரைப்படம் ஆப்கானில் எடுக்கபட்டதல்ல. ஹைதராபாத்திலும் ராஜஸ்தானிலும் எடுக்கப்பட்ட இந்த்த் திரைப்படம் மற்றொரு மணிரத்தினம் வகை அரசியல் திரைபப்டம் என்றுதான் சொல்லலாம். பெண்னின் மீதான சித்திரவதை கொண்ட இந்தத் திரைப்படத்தில் விரகமும் காதலும் சோகமும பாசமும் கொண்டதாக நான்கு பாடல்கள் இருக்கின்றன. தலிபான்கள் இந்திய சினிமா வில்லன்கள் போலச் சித்தரிக்கபட்டிருக்கிறார்கள். வில்லன்களின் தலைவனாக ஒரேயொரு தலிபான் வருகிறான். தலிபான்களுக்கும் வங்காளிப் பெண்ணின் கணவனது சகோதரர்களுக்கும் இடையிலான வித்தியாசம் இந்தத் திரைப்படத்தில் இல்லை. கணவனது சகோதரர்களும் சகட்டுமேனிக்கு வங்காளிப் பெண்ணை அடிக்கிறார்கள். அண்ணியைத் தொடர்ந்;து விரட்டி இழுத்துவந்து வீட்டில் வீசி நையப்புடைக்கிறார்கள். இதே வேளையைத்தான் தலிபான்களும் செய்கிறார்கள். பஸ்டுன் இனத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான வித்தியாசம் இந்தத் திரைப்படத்தில் இல்லை.  பாகிஸ்தான் தேசிய உடை அணிந்தவர்கள் அனவைரும் பயங்கரவாதிகள் என இந்திப்படங்கள் சித்தரிக்கிற மாதிரி, ஆப்கானிய தேசிய உடை அணிந்த அனைத்து ஆண்களும் பின்லாடனின் சீடர்களான தலிபான்கள் என்கிற பொய்யான சித்திரத்தையே தலிபான்களிடமிருந்து தப்பித்தல் எனும் இந்தித் திரைப்படம் தருகிறது. இன்னும் இந்தியப் பாராளுமன்றத்தின் மீது 2001 ஆம் அண்டு டிசம்பர் 3 ஆம் திகதி நடந்த தாககுதலை செப்டம்பர் 11 தாக்குதலோடு ஒப்பிட்டு இந்திய செப்டம்பர் என படம் இயக்கப்போவதாக, இப்படத்தின் இயக்குனர் உஜ்ஜல் சட்டோபாத்யாய அறிவித்திருப்பது அவரது அரசியலைப் புரிந்து கொள்ளப் போதுமானதாகும்.செப்டம்பர் 11 இல் இறந்த தனது கணவனையும் இந்தியப் பாராளுமன்றத் தாக்குதலில் இறந்த தனது மகனையும் கொண்ட ஒரு பெண்ணின் கதையமைப்பு கொண்டதாக தனது படம் இருக்கும் எனவும் சட்டோபாத்யாயா தெரிவித்திருப்பது இவர் எந்த வகையிலான திரைப்பட இயக்குனர் எனப் புரிந்து கொள்ளப் போதுமானதாகும்.

பெமார்க்கின் திரைப்படத்தை அமெரிக்க பகாசுர நிறவனமான யுனைடெட் ஆரட்டிஸ்ட் நிறுவனம்  அமெரிக்காவில் வெளியிட்டிருக்கிறது. மக்மல்பாவ்பின் உதவியுடன் துவங்கப்பட்ட ஒசாமா திரைப்படம் அமெரிக்க ஸ்டுடீயோக்களினால் பிற்பாடு நிதிவழங்கபட்டுத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நிர்வாகத்திற்கு சந்தோசமூட்டுவதற்காகத் தயாரிக்கப்பட்ட திரைப்படம் இது என அப்படத்தின் மீதான விமர்சனங்கள் ஆப்கானிய அறிவுஜீகளால் வைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கப் பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்லபடும் காட்சியும், வெள்ளை பெண் மருத்துவர் ஒருவர உயிருடன் புதைக்கப்படும் காட்சியும் ஒசாமா திரைப்படத்தில் இடம் பெறுகிறது. மேற்கத்தியர்களின் பார்வையில் அவர்களது கெமராவை நோககி ஒரு ஆப்கான் சிறுவன் கதை சொல்வதாகவே ஒசாமா திரைப்படம் துவங்குகிறது. இதே மாதிரியான ஒரு கதை சொல்லல் கந்தஹாரிலும் இருக்கிறது. கனடாவிலிருந்து வரும் ஆப்கான் பெண் அகதியின் கதையாகவும், அமெரிக்காவிலிருந்து ரஸ்ய ஆக்கிரமிப்பின் போது வந்த ஆப்ரோ-அமெரிக்கரின் கதையாகவும், செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிகளின் அனுபவமாகவும் என மேற்கத்திய விழிகளுடன் பாரத்ததாக ஆப்கான் பிரச்சனையைப் பாரத்ததாக இந்தத்திரைப்படத்தின் கதையும் இருக்கிறது. அமெரிக்கர்களைச் சந்தோசப்படுத்தப் படமெடுக்கும் சடடோபாத்யாவின் படம் இஸ்லாமிய மக்களின் மீதான இந்துத்துவவாதிகளின் வெறுப்பின் அடிப்படையில் கதை சொல்வதாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் எந்தவிதமான நம்பகத் தன்மையையும் நாம் காண்பது அரிது. சுஷ்மிதா எனும் வங்கப் பெண்ணொருவரின் வாழ்வு அனுபவங்களின் அடிப்படையில் இந்தப்படம் எடுககப்ட்டிருந்தாலும், தலிபான் காலநிகழ்வையும் அதனது அரசியலையும் பரிநது கொள்ளாத, ஆப்கானியப் பெண்களை வெறும் அடிமைகளைப் போலப் பாரத்த ஒரு பாடமாகவே தலிபான்களிடமிருந்து தப்பித்தல் படம் இருக்கிறது. வங்களாப் பெண் அந்த நாட்டில் வாழந்த அதே சமகாலத்தில், ஆப்கான் புரட்சிகரப் பெண்கள் இயக்கத்தினர் அந்த நாட்டில் போராடி வாழந்தார்கள் என்பதையும் நாம் மறந்துவிடமுடியாது. ஆப்கான் தலிபான்களின் தேம் மட்டுமல்ல, அவர்களை எதிரத்துப் போராடி மடிந்த மனிதர்களதும் தேசம் என்பதையும் நாம் மறந்துவிடமுடியாது.

நான்கு படங்களிலும் அதிகமும் ஆப்கானிய வரலாற்றை அறிந்த படமாகவும், மிக முக்கியமான ஒரு விவாதத்தை ஆப்கானிய வெளியில் தூண்டிய படமாகவும், அதே வேளை பெண் அரசியல் தலைவர்கள் குறித்த பிரமைகளை உடைக்கும் படமாகவும் இருக்கிறது ஸமீராவின் திரைப்படம். தலிபான்களைத் தூண்டிய பெனாசிர் பூட்டோ, ஆப்கானது சமகால ஜனாதிபதியைத் தெரியாத பிரெஞ்சு படையினன், மரணமுற்ற காளைச்சண்டை வீரனைப் போல நினைத்து வருந்தவும் அஞ்சலி செய்யவுமான நிலையில் இருக்கிற ஆப்கான் பெண்களுக்காக இயங்கும் கவிஞன் எனப் பரந்துபட்ட அரசியல் முக்கியத்துவம் கொண்டதாக மதியம் ஐந்து மணிக்கு படம் இருக்கிறது மதியம் ஐந்து மணிக்கு எனும் படத்தில் இடம் பெறும் கவிதை, மரணமுற்ற காளைச்சண்டை வீரனான இக்னாசியா சான்ச்சசுக்கு கார்ஸியா லோர்க்கா எழுதிய அஞ்சலிக் கவிதையாகும். ஆப்கான் பெண்களின் விடுதலை பெறமுடியா நிலைக்கு ஒரு குறியீடாகிறது அக்கவிதை. மற்ற படங்களோடு ஒப்பிட மேற்கத்தியர்களுக்கு அணுசரணையான பார்லையை முற்றிலும் மறுக்கும் படம் ஸமீராவின் இந்தத் திரைப்படம். மேற்கத்தியப் பாத்திரங்களை மட்டுமல்ல, மேற்கத்தியர்களின் பார்வையில் கதை சொல்வதையும் இந்தத் திரைப்படம் நிராகரித்திருக்கிறது. இவ்வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ் ஒரு பாசிசவாதி எனச் சொல்லவும் தயங்கவில்லை இயக்குனர் ஸமீரா.

திரைப்பட அழகியல் எனும் அளவில் ஆப்கான் பற்றிய ஈரானின் மூன்று திரைப்படங்கள், இரு விவரணப்படங்கள்  குறித்து விரிவாகச் சொல்ல இருப்பினும், மிக முக்கியமானதொரு அம்சம்; குறித்து மட்டுமே இஙகு பதிய நினைக்கிறேன். இந்தியத் திரைப்படம் தவிர மற்ற திரைப்படங்கள் அனைத்தும் வாழ்வின் யதார்த்தத்தை நம்மருகில் கொணர நினைப்பவை. குறிப்பாக விவரணப்படத்திற்கும் கதைப்படத்திற்கும் இடையிலான பிளவை இத்திரைப்படங்கள் கடந்து செல்கிறது. நிலமும் மனிதர்களும் யதார்த்தமாக இருக்க, பிரச்சினைகள் வரலாறு சார்ந்து ஆதாரம் கொண்டதாக இருக்க, புனைவுகளாக வரும் பாத்திரங்கள் கூட யதாரத்தத்தின் நீட்சியாகவே பரிமாணம் பெறுகிறார்கள். சான்றாக சிறுவனாக மாறுகிற சிறுமி என்பது ஆப்கானிய மக்களின் தலைமுறைதோறும் சொல்வழி வளர்ந்த நாடோடிக்கதையாக இருக்க, முஜாஹிதின்களின் காலத்தில் தனது தகப்பனோடு காபூல் நகரத்தின் தெருவில் கைவண்டியொன்றில் காய்கறி வியாபாரம் செய்ய, சிறுமியொருத்தி சிறுவனாக வேசம் போட்டாள் எனும் யதாரத்தத்தை ஆப்கான் புரட்சியாளரான மினாவின் வரலாறு சொல்கிறது. ஒசாமா படத்தின் கதை தனது தாயையையும் முதிய பாட்டியையும் காப்பதற்குச் சிறுவனாக மாறிய சிறுமியின் கதையைச் சொல்கிறது. கனடியப் பெண்ணொருத்தி தனது தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சகோதரியைத் தேடிச்செல்லும் கதையை விவரிக்கும் கந்தஹார்  பல்வேறு கிளைக் கதைகளை ஆப்கானிய யதார்த்தத்திலிருந்து எடுத்துக் கொள்கிறது. யதார்த்தங்களின் தொகுப்பாகவும் பிரதான பாத்திரத்தின் புதிய பரிமாணமாகவும் இதன் கதை விரிகிறது. ஸமீராவின் திரைப்படமான மதியம் ஐந்துமணிக்கு திரைப்படத்தில் ஒரு எதிர்கால கறபனா சாத்தியத்தை நிகழ்கால யதார்த்தங்கள், அவலங்களின் வழி கட்ட முனைவது மட்டுமல்ல, முற்றிலும் ஆப்கானிய யதார்த்தத்திலிருந்து மீறிய ஒரு அரசியல் விவாதத்தை லோர்க்காவின் கவிதையின் வழி படைக்க நினைக்கிறது. வரலாறு – மனிதர்கள் – புனைவு – படைப்பு – பிரச்சினைகள் போன்றவற்றுக்கு இடையிலான பிளவை யதார்த்த வாழ்வுக்குள் ஆழச்செல்வது எனும் வகையில் இந்தத் திரைப்படங்கள் உருவாகியிருக்கிறது. மிகமுக்கியமான விசயம். இந்தத் திரைப்படங்கள் செயற்கையாக நகர்களைச் உருவாக்குவது எனும் மாயையைத் துப்புரவாக நிராகரித்திருக்கிறது. திரைப்படமல்ல இது, வாழ்வு குறித்த சித்திரம் என்ற உணர்வை இத்திரைப்படங்கள் நமக்கு விட்டுச் செல்கிறது. வாழ்விலிருந்து முற்றிலும் விலகியதாக திரைப்படங்கள் உருவாக்கப்படும் இந்த நாட்களில், இப்படங்கள் இந்த மாபெரும் செய்தியை இந்தியத் திரைப்பட உலகினருக்குக் கொண்டிருக்கிறது.

வாழ்வுக்கும் வரலாற்றுக்கும் இடையிலான வெளியைக் குழப்பும் வடிவமாக திரைப்படம் உருவாகி வருவதைக் குறித்த பிரம்மைகளைக் கலைக்கும் விதமாக உருவாகியிருக்கும் இரண்டு விவரணப்படங்கள்தான் மரினாவும், பைத்தியமாயிருத்திலின் சந்தோசமும்.. இந்த இரண்டு விவரணப்படங்களுமே திரைப்படங்களுக்கும் புகைப்படங்களுக்கும் விரோதமானதொரு சூழலில் வாழ நேர்ந்த ஆப்கானிய மனிதர்களை இந்தத் திரைப்படங்களில் பங்களிக்கும் பொருட்டு, எவ்வாறாக அடிப்படைவாதத்துக்கும் கலைகளுக்கும் இடையிலான இடைவெளியை இந்தத் திரைப்படங்களில் நடித்த மனிதர்கள் உளவியல் ரீதியில் கடந்து பேனார்கள், அந்தக்கடந்து போதலின் பின்னிருந்த சமூகத்தேவைகள் அல்லது உந்துதல்கள் என்ன என்பது குறித்ததாக இந்த விவரணப்படங்கள் உருவாகியிருக்கின்றன. ஸமீராவின் திரைப்படமான மதியம் ஐந்து மணிக்கு திரைப்படம் குறித்த விவரணபடமாக பைத்தியமாயிருத்தலின் சந்தோசம் உருவாகியிருக்கிறது. இப்படத்தை ஸமீராவின் 14 வயதுச் சகோதாரியான ஹனா உருவாக்கியிருக்கிறார். பிறிதொரு விவரணப்படம் சித்திக் பெமாரக்கின் ஒசாமா திரைப்படத்தின் கதாநாகியான பணிரெண்டு வயதுச் சிறுமியான மரினாவை திரைப்பட இயக்குனர்; எவ்வாறு தேடிக் கண்டுபிடித்தார் என்பதைக் குறித்ததாக இருக்கிறது. ஒசாமா திரைப்படத்தில் நடித்த மரினா கோல்பஹாரி 14 வயதேயான பிச்சைக்காரச் சிறுமியாவார். தனது சகோதரியை ராக்கெட் தாக்குதலுக்குப் பறிகொடுத்த அவர், தெருவில் வாழும் 60,000 சிறுமியரில் ஒருவராக காபூல் நகரின் சேரியொன்றில் கண்டுபிடிக்கப்பபட்டார். அவரை நம்பி அவருடன் ஓரே அறையில் வாழ்ந்த எட்டு பேருக்குகாகப் பிச்சையெடுக்க வேண்டிய நிலைமை அவருக்கு இருந்தது. உறக்கமற்று பட்டிணியில் கடந்த இரவுகள், அவரது சகோதியின் மரணம், அவர்களது மரணமுற்ற சொந்தங்கள் போன்றவர்களால் ஏற்பட்ட மனநிலைகைளை மறுபடி ஞாபகம் கொண்டுவரச்சொல்லியே ஒசாமா படப் பாத்திரத்தை அவரிடமிருந்து வரவழைத்திருக்கிறார் சித்திக் பெமார்க். காபூல் நகரத்தின் இடிபாடு, வறுமை, பெமார்க் படமெடுக்க நேர்ந்த காரணம் பற்றியதாகத் தொடங்கும் இவ்விவரணப்படம் நகரத்தில் அநாதரவாகத் திரிகிற பிச்சைக்காரக் குழந்தையின் இலக்கற்ற வாழ்க்கை குறித்த கேள்வியுடன் நிறைவு பெறுகிறது.

ஹானாவின் விவரணப்படம் ஸமீராவின் படத்தில் நடிக்க நேர்ந்த பெணகளின் இயக்கத்தையும், மௌல்விகள், ஆப்கானிய முதியவர்கள் போன்றவர்களின் பொய்களையும் அடிப்படைவாத நிலைபாடுகளையும் பதிவு செய்திருக்கிறது. குழந்தைக்கான வைத்தியம், பிரதியாகக் காசு கொடுப்பது போன்றவற்றின் அடிப்படையிலேயே குழந்தையை அப்படத்தில் காண்பிக்க ஒப்புக்கொள்கிறாள் ஒரு பெண். திரைப்படத்தில் நடித்தால் குழந்தை இறந்து போகும் எனச்  சொல்கிறார்கள் வழிப்போக்கர்கள். காசு தந்தால் நடிக்கிறேன் எனச் சொல்லிவிட்டு, பிற்பாடு தான் நடித்தால் தனது சமூக அதிகாரம் போகும் என அஞ்சுகிறார் மௌல்வி. மூன்று குழந்தைகளுக்குத் தாயான பள்ளிக்கூட ஆசிரியை தனது வறுமையை இந்த நடிப்புப் போக்கும் என்னும் காரணத்தினால் நீண்ட மன்றாடுதலுக்குப் பின் நடிக்க ஒப்புக் கொள்கிறார். மீண்டும் தலிபான்கள எந்த வேளையிலும் ஆப்கானில் அதிகாரத்திற்கு வரலாம் எனும் பயம் அனைவரது கண்களிலும் ஒட்டிக்கொண்டிருப்பதை ஹனாவின் விவரணப்படம் சித்தரிக்கிறது. இந்ந விவரணப்படங்கள் தொழில் முறை நடிகர்கள் இல்லாத ஒரு சூழலில் ஆப்கான் அகதிகள், தெருக்குழந்தைகள், மௌல்விகள், நிராதரவான பெண்கள் போன்ற நிஜமான மனிதர்களின் சொல்வழக்குகள் பேச்சுமொழி அனுபவங்கள் போன்றவற்றிலிருந்தே தனது திரைப்பட மொழியை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை ஸமீராவும் சித்திக் பெமார்க்கும் தெளிவுபடுத்துகிறார்கள். இவ்வகையில் புனைவுக்கும் நிஜத்துக்கும் இடையிலான பிளவைக் கூட சித்திக்கினதும் ஸமீராவினதும் படம் கடந்து போயிருப்பதை இந்த இரண்டு விவரணப்படங்களும் தெரிவிக்கிறது.

நான்கு முழுநீளத் திரைப்படங்களும் இரண்டு விவரணப்படங்களும் ஆப்கான் தொடர்பாக நமக்குள் எழுப்புகிற அறுதிச் சித்திரம் என்னவாக இருக்கிறது என்பதுதான் நமது இறுதியான தேடலாக இருக்க முடியும். இயக்குனர் ஸமீரா மெக்மால்பவ் அதனைத் தெளிவாக முன்வைக்கிறார்: 

சமகாலத் தலைமுறையைச் சேர்ந்த தந்தையரும் அவரது குழந்தைகளும் ஒரு சிக்கலான பொருளியல் வரலாற்று புவியியல் சூழலில் சிக்குண்டிருக்கிறார்கள். அவர்கள் வாழ நேர்ந்திருக்கும் அவர்தம் வீடு இனக்குழுத்தன்மையினாலும், மதவெறியினாலும, அறியாமையினாலும், வறுமையினாலும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இந்தக் கொடுந்தீயிலிருந்து தம்மைப் பாதுகாக்க விரும்பும் எவரும் தமது அண்டை வீட்டாரை மீட்காமல் அது இயலாது. சிறைப்பட்டவன், சிறைக்காவலன், பழைய தலைமுறையைந் சேர்ந்தவர்கள், புதிய தலைமுறையினர் என இருசாராருமே இதில் உறவு பூண்டவர்களாக இருக்கிறார்கள். நிலைமை ஒரு ஆயுதமோதலின் பின் அல்லது அந்நியத் தலையீட்டின்பின் என்று பார்க்கப்படக்; கூடியதல்ல, இந்த நாட்டில் வேர்கொண்டிருக்கும் பிரச்சினை ஓரிரவில் தீர்த்துவிடக்கூடியதல்ல. தகவல் தொழில்நுட்ப ஊடகங்கள் சொல்கிறமாதிரி ஜனநாயகம் என்பது யுத்தநடவடிக்கையினாலோ அல்லது ஆட்சி மாற்றத்தினாலோ உருவாகிவிடக் கூடியவை அல்ல. பாசிசம் என்பது ஒரு செயல்போக்கு என்தைப் போல, ஜனநாயகம் என்பது ஒரு செயல்போக்கு. உள்ளிருந்து அழுகுவது என்பதுபோல பாசிசம் என்பது ஒரு உள்ளார்ந்த புற்றுநோய். கட்டுப்போட்டு ஆற்றும் வகையிலான வெளிக்காயம் அல்ல இது. மருத்துவச் சிகிச்சையினால் வெட்டி எறியக் கூடிய கட்டியும் அல்ல இது. பாசிச வியாதியைக் குணப்படுத்தவதற்கு காலமும் நிதிவசதியும் தேவைப்படுகிறது. ஆப்கானிஸ்தான் வறுமையான தேசம். அது தேசம் எனும் வகையில் பாசிசத்திலிருந்து ஜனநாயகம் நோக்கி நகர்வதற்கு செலவு செய்வதற்கான பணத்தைத் தன்னளவில் கொண்டிருக்கவில்லை. உலகமும் அந்த விலையைக் கொடுக்கத் தயாராயில்லை. இந்த வகையில் என் படம் எந்த வகையில் ரேம்போ வகை நம்பிக்கையைத் தீர்வைக் கொடுக்கமுடியம் என நம்புகிறீர்கள்?

இன்று ஆப்கானில் நேர்ந்திருக்கும் நிலைமையை வெறுமனே சோவியத் ஆக்கிரமிப்பு, முஜாஹிதின்களுக்கும் ரஸ்யர்களுக்கும் நடந்த ஆப்கான்  யுத்தம், தலிபான்களின் தோற்றம், செப்டம்பர் 11 சம்பவம், அமெரிக்கத் தாக்குதலின் பின்பான 2002 ஆம் வருடத்திய தலிபான்களுக்குப் பின்பான ஆப்கான் என்பதாக மட்டும் விவாதித்து விளக்கிவிடமுடியாது. பன்னூறு ஆண்டுகள் பழமையான, மத்தியத்துவத்தை வெறுத்த அதனது இனக்குழு மைய அதிகார அரசியல், கிராமிய சூழலில் நிலப்பிரபுத்தவத்திற்கும் மதவாதிகளுக்கும் இடையிலான உறவு, பெண்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக வைத்திருக்க நிர்ப்பந்திக்குமாறான கருத்தியல் அடிப்படையை வழங்கிய மதநெறி, பெண் பாலியல்பை பாவமாகப் பார்த்த மரபு, அந்த மிகநீண்ட மரபைப்பேணிய ஆண்பெண்வாழ்வு போன்றவற்றைக் குறித்த ஆழ்ந்த விசாரணையின் மூலமே ஆப்கானிய சமூகத்தில் ஜனநாயகத்தைக் கட்டி எழுப்புதல் என்பது சாத்தியம். அது மட்டுமல்ல, மார்க்சியம் போன்ற விடுதலைக் கருத்தியல்கள் ஆயினும், இஸ்லாம், இந்துமதம், கிறித்தவம், யூதமதம் போன்ற மதத்தின் அடிப்படை கொண்டதாயினும், மீட்சிக்காகத் தோன்றிய அனனத்து இயக்கங்களும் கொண்டிருந்த நிறுவன முறைகளையும் நாம் விசாரிக்க வேண்டியிருக்கிறது. இவ்வகையில் முஜாஹிதின்களும் தலிபான்களும் மார்க்சியர்களை எதிர்த்து நடத்திய யுத்தம் என்பது ஆப்கானிஸ்தானை விடுவிப்பதற்கான போராட்டமாக இருக்கவில்லை. தமது பழைய மரபுகளையும் மதஅடிப்படைகளையும் தற்காத்துக்கொள்ள நடத்திய போரேயென்பது தெளிவாகும். ஆப்கானிய தேசியத்தில் வெற்றி பெற்ற கருத்தியலாக ஆனது மத அடிப்படைவாதமேயல்லாது தாராளவாதக் கருத்தியல் அல்ல. தேசியம் உள்ளீடற்றது என்றான் அல்ஜீரிய விடுதலைப் போராட்டக் கருத்தியலாளன் பிரான்ஸ் பெனான். உள்ளிடற்ற ஆப்கான் தேசியத்தை நிறைத்தது மத அடிப்படைவாதமும் பழமையும். அமெரிக்க மேற்கத்திய அரசுகள் தமது மேலான்மைக்குப் போரிட்டன. ஆப்கான் மார்க்சியர்கள் தமக்குள்ளான கருத்து முரண்பாடுகளில் பிளவுண்டனர். உள்கொலைகளில் ஈடுபட்டனர். 1967 ஆம் ஆண்டு துவங்கிய ஆப்கான் மக்கள் ஜனநாயகக்கட்சி 1969 ஆம் ஆண்டு இரண்டாகப்பிளவு பட்டது. சோவியத் யூனியனின் ஆலோசனையின் பெயரில் 1977 ஆம் ஆண்டு மறுபடி ஒன்றாக இணைந்தது.  ஆட்சி அதிகாரத்தை 1978 ஆம் ஆண்டு ஏற்றது. 1991 ஆம் ஆண்டு வரை மார்க்சியர்கள் ஆண்டனர். ஆனால் உள்கட்சிக் கொலைகள் மலிந்ததாக ஆப்கான் மார்க்சியர்களின் கட்சிகள் சிரழிந்தன.

2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னான ஆப்கானின் நிலைமை வித்தியாசமானது. அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம் பெற்றவர்கள் அந்நாட்டின் எதிர்கால சமூகத்தில் மிகப் பெரும் பாத்திரம் வகிப்பார்கள். மார்க்சியர்கள் தங்கள் படிப்பிணைகளிலிருந்து மீண்டும் இயங்கத் தொடங்கலாம். தாராளவாத அரசியல் முனைப்புப் பெறலாம். தலிபான்களும் தற்போது வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். சோவியத் ஆக்கிரமிப்பையும் முஜாஹிதின்களயும் தலிபான்களையும் எதிர்த்;து நின்ற பெண்கள் அமைப்பினர் வலுப்பெறத் துவங்கியிருக்கிறார்கள். இன்றிருக்கிற ஆப்கான் அமெரிக்க மேற்கத்திய ஊடகங்கள் சொல்கிற மாதிரி விடுதலை பெற்ற ஆப்கானிஸ்தான் அல்ல. மாறாக அழிவுண்ட ஆப்கானிஸ்தான். பிளவுண்ட மனிதர்கள் அலைந்;து திரியும் ஆப்கானிஸ்தான். இதனையே ஸமீரா மெக்மல்பாவ், சித்திக் பெமார்க், மேசன் மெக்மால்பாவ், ஹனா மெக்மால்பாவ், நபூமி நிமுரா போன்றவர்களின் திரைப்படங்கள் காண்பிக்கின்றன.

இந்தியத் திரைப்படம் தவிர பிற திரைப்படங்கள் அனைத்துமே ஆப்கானியப் பெண்களின் மீதான ஒடுக்குமுறை தொடர்பானவைதான்.அந்த ஒடுக்குமுறையை இன்று வரை அனுபவித்து வரும் ஆப்கானியப் பெண்களின் சார்பாக ஆப்கானியப் புரட்சிகரப் பெண்கள் அமைப்பினர் தமது வலி நிறைந்த போராட்ட எதிர்காலம் குறித்து இவ்வாறு தெரிவிக்கிறார்கள்:

உலகம் எமது செய்தியைக் கேட்கும் என நம்புகிறோம். எமது நெறிபடும் குரல்களை உலகம் கேட்கும் என நம்புகிறோம். எம்மோடு உலகம் இணையும் எனவும் நம்புகிறோம். அதன்வழி எமது குரல் ஒடுக்குமுறையாளர்க்கு எதிராக உரத்தும் பலத்துடனும் ஒலிக்கும் என நம்புகிறோம். நாம் எமது நாட்டுக்கு, எமது வீட்டுக்குத்; திரும்ப விரும்புகிறோம். எமது நாட்டை நாம் இழந்தோம். இன்று எம்மையே நாம் இழக்கிறொம். ஆப்கானிஸ்தானில் சமாதானத்திற்கும் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நாம் உழைப்போம். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுக்கட்டும், எவ்வளவு தியாகங்களை வேண்டுமாயினும் நாங்கள் ஏற்கிறோம். நாம் அறிவோம், அறுதியில் நாம் வெல்வோம். இதனைத் தான் எமது மக்கள் அவாவுகின்றனர்.

ஆப்கான் குறித்த ஈரானிய ஆப்கானியத் திரைப்படங்கள், இந்தப் பெண்களின் உறுதியின் பின்னிருக்கிற வலிமிகுந்த வரலாற்றின் சாட்சியமாக நமக்கு முன் இருக்கிறது. இலக்கியம் போலவே திரைப்படமும் வரலாற்றின் வலிமை மிகு சாட்சியமாக இருக்க முடியும் என்பதற்கு ஆப்கான் குறித்த இத்திரைப்படங்களே சான்றாக இருக்கிறது.


ஆதாரங்கள்:

1. Afghanistan: A forgotten chapter : Canadian Dimension. November/December 2001: by John Ryan

2. Extra : January- February 2002 : Forgotten Coverage of Afghan Freedom Fighters : The villains of today’s news were heroes in the ’80s. David N. Gibbs : An  associate professor of political science at the University of Arizona.

3.At five in the afternoon : Interview with  Samira Makhmalbaf by Sally Vincent. Saturday April 3, 2004. The Guardian. United Kingdom

4.Filmmaker Siddiq Barmak talks from the heart by Fariba Nawa. April 2004. Afghan Magazine. USA.

5.Escape From Taliban : Direct from Bollywood: Taliban the musical : Movie tells true story of Indian woman’s flight from Afghanistan . Jeevan Vasagar. Wednesday February 19, 2003.The Guardian. United Kingdom. 

6.Mina: Heroine of Afghanistan: The martyr who founded Rawa: Revoilutionary Association of Afghan women : Melody Ermachild Chavis 2003.St Martin’s Press.USA

7. கந்தஹார் : மோசன் மக்மல்பாவ் : ஈரான்( 2002), தலிபானிடமிருந்து தப்பித்தல் : இந்தியா( 2002), ஒசாமா : சித்திக் பெர்மார்க் : ஆப்கானிஸ்தான்(2003), மரினா : நபூமி நகாமுரா : ஜப்பான்(2003), மதியநேரம் ஐந்து மணிக்கு : ஸமீரா மக்மல்பாவ் : ஈரான்(2004), பைத்தியமாயிருத்தலின் சந்தோஷம் : ஹனா மக்மல்பாவ் : ஈரான்(2004).

rajrosa@gmail.com