தாமரைச்செல்வியின் படைப்புகள்: சமகாலப் புனைவுலகத்தின் யதார்த்தமா? அல்லது யதார்த்த உலகத்தின் புனைவா?

தாமரைச்செல்வி1970களின் பிற்பகுதி. ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகள் அதிகமாக வாசிக்கப்பட்ட காலம் அது. இதற்கான வாய்ப்பை வீரகேசரி உருவாக்கியிருந்தது. அப்போது ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்களை வீரகேசரி, மாதம் ஒரு நாவல் என்ற அடிப்படையில்  வெளியிட்டு வந்தது. அதில் பல புதிய எழுத்தாளர்களும் அறிமுகமானார்கள். அப்பொழுதுதான் தாமரைச்செல்வியின் ‘சுமைகள்” என்ற நாவலையும் வாசித்தேன். அந்த நாவலை வாசிக்கும்போது எனக்கு வயது இருபது அல்லது இருபத்தொன்றாக இருக்கலாம். அந்த நாவல் அதிகம் என்னைக் கவர்ந்ததற்கு இரண்டு காரணங்களிருந்தன. ஒன்று, நாவலில் இடம்பெறும் களத்தின் அறிமுகம். அடுத்தது, எழுதிய தாமரைச்செல்வி எங்கள் ஊருக்கு அண்மையில் இருந்தார் என்பது. இதற்குப் பின்னர் தாமரைச்செல்வியின் எழுத்துகளில் ஒரு கூடுதல் அவதானிப்பு. அவர் அநேகமாக விவசாயிகளின் பிரச்சினைகளை, விவசாயக் கூலிகளின் பிரச்சினைகளையே எழுதினார். நாங்களும் ஒரு விவசாயக் குடும்பம் என்பதால் எங்களின் பிரச்சினைகள், எங்களுடைய கதைகளாகவே இருந்தன அவருடைய கதைகள். இதனால், எங்களின் குடும்பத்தில் தாமரைச் செல்வியின் எழுத்துகளுக்கு உச்ச வரவேற்பு. அவருடைய சிறுகதைகள் பத்திரிகைகளில் வரும்போது இந்த வரவேற்பின் உற்சாகத்தை எங்களின் வீட்டில் காணலாம்.

இந்தக் காரணங்களால் தாமரைச்செல்வியைச் சந்திக்க வேணும் என்று விரும்பியிருந்தேன். எங்கள் சிததப்பா, பெரியக்கா இருவருக்கும்கூட அந்த ஆவலிருந்தது. அந்த நாட்களில் நாங்கள் தாமரைச்செல்வி இருந்த பரந்தனுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். பரந்தனில் இருந்த சந்தைக்கு எங்களின் தோட்டத்துப் பொருட்களைக் கொண்டு வருவோம். அந்தச் சந்தையிலிருந்து ஒரு கிலோ மீற்றருக்குள்தான் – குமரபுரத்தில் – தாமரைச்செல்வியின் வீடிருந்தது. ஆனால், ஏனோ அவரைச் சந்திக்க வாய்த்ததில்லை. சந்திக்க வேணும் சந்திக்க வேணும் என்று காலம் கடந்ததே தவிர, அவரைக் காண்பதற்கு வாய்க்கவில்லை. 1980 களில் நான் வேறு களங்களுக்கு மாறிவிட்டேன். நாட்டு நிலைமைகளும் மாறியிருந்தன. தாமரைச்செல்வியின் எழுத்துகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. அவர் ஏராளமாக எழுதிக் கொண்டிருந்தார். வாழ்க்கையின் பாதிப்புகள், சூழலின் நெருக்கடிகள், சனங்களின் மனதிலிருந்த உணர்வுகள் என எல்லாவற்றையும் அவர் எழுதினார். அவருடைய கதைகள் யதார்த்தச் சித்திரிப்புடையவை என்பதால் அவை பரந்த வாசிப்புக்கும் கூடுதலான கவனத்திற்குமுரியனவாக இருந்தன. அத்துடன் வன்னிப் பகுதியின் – கிளிநொச்சிப் பிரதேசத்தின் அடையாளத்தை அவரு டைய கதைகள் மேற்கொண்டு வரும்போது அது இன்னும் கூடுதலான கவனத்தைப் பெற்றன. அறியப்படாத பிரதேசத்தின் அறியப்;பட வேண்டிய கதைகளாக அவை இருந்ததே இதற்குக் காரணம்.

‘தாமரைச்செல்வியின் கதைகளில் நெல்லின் வாசனையை, வயல் நிலத்தின் மணத்தை, விவசாயக்; குடும்பங்களின் விருப்பங்களை, அவர்களின் தேவைகளை, அவர்களுடைய பிரச்சினைகளை, அந்தக் குடும்பங்களின் சந்தோசங்கள், துக்கங்களை எல்லாம் காணமுடியும்’ என்று செம்பியன் செல்வன் அடிக்கடி சொல்வார். இது மிகச் சரியான கூற்றே. தாமரைச்செல்வியின் குடும்பமும் ஒரு விவசாயக் குடும்பமே. அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் முழுவதும் அந்த விவசாயக் குடும்பச் சூழலில் பெற்றுக் கொண்;டவையே. ஆக, அவருடைய பெரும்பாலான கதைகளும் தன்னனுபவத்தை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்டவையே. என்றபடியால் அந்தக் கதைகள் அதையொத்த அனுபவப் பரப்பைக் கொண்டவர்களிடம் அதிக ஈர்ப்பைப் பெற்றன. தவிர, தாமரைச்செல்வியின் கதை சொல்லும் முறையும் மிகச் சாதாரணமானது. ஆனால், நுட்பங்கள் நிறைந்தது. பேராசிரியர் சிவத்தம்பி அடிக்கடி சொல்வது மாதிரி, ‘மொடேர்ண் ஆர்ட் டைப் பார்ப்போருக்கு அதை மிகச் சுலபமாக வரைந்து விடலாம் போலத் தோன்றும். ஆனால், நாம் நினைப்பதைப்போல அதை அத்தனை இலகுவாக வரைந்து விடமுடியாது. ஏனெனில், அது உச்சமான படைப்பாற்றலின் வெளிப்பாடு என்பதை அதை வரையத் தொடங்கும்போதே நாம் உணர்ந்து கொள்வோம்” என்பதைப் போல தாமரைச்செல்வியின் கதைகளைப் படிக்கும் போது அதைப்போன்று, ஏராளம் கதைகளை நாம் எழுதிவிடலாம் போலத் தோன்றும். ஆனால், நாம் அப்படி எழுதமுனைந்தால் அது அத்தனை எளிய விசய மில்லை என்று புரியும். இதுதான் தாமரைச்செல்வியின் கதைகளின் தரத்தையும் நுட்பத்தையும் உணர்த்துகின்ற விசயம்.
மிக எளிய மொழியில், மிகச் சாதாரணமான முறையில் அவர் தனது கதைகளைச் சொல்லி விடுவார். யதார்த்தவாத எழுத்துமுறையிலேயே நின்றியங்கியவர் தாமரைச்செல்வி. அந்த எழுத்து முறையில் நின்றுதான் அவர் இப்போதும் எழுதுகின்றார். தாமரைச்செல்வி எழுதத் தொடங்கிய பின்னரான 1970 – 2010 வரை யான இந்த நாற்பது ஆண்டுகாலத்தில் தமிழ்ச்சூழலில் பல எழுத்துமுறைமைகள், கோட்பாடுகள் எல்லாம் வந்து விட்டன. பல பரிசோதனை முயற்சிகள் நடந்திருக்கின்றன. பல படைப்பாளிகள் புதிய வடிவங்களில், புதிய கோட்பாடுகளில் எழுதி வெற்றியடைந்திருக்கிறார்கள். இதனால் யதார்த்தவாதம் செத்துவிட்டது என்ற குரல்கள் கூட எழுந்தன. ஆனால், இன்னமும் யதார்த்தவாதம் தன்னுடைய பலத்தை இழக்காமலிருக்கிறது. யதார்த்தவாதத்தில் பல படைப்பாளிகள் மிக உச்சமான படைப்புகளைத் தந்திருக்கிறார்கள். அவர்களைப்போல, எத்தகைய எதிர்க்குரல்கள், மாற்றுப் படைப்பு முறைமை என்றெல்லாம் புதிய அலைகள் வந்தபோதும் அவற்றைப் பற்றிய கவலைகளில்லாமல் தனக்கெனச் சாத்தியப்பட்ட முறைமையில் எழுதிக் கொண்டிருந்தவர் தாமரைச்செல்வி. அதேவேளை அந்தவகைப் படைப்புகளை அவர் புறக்கணிக்கவும் இல்லை.
பொதுவாகவே தாமரைச்செல்வியிடம் இருக்கும் ஒரு இயல்பு, விவாதங்கள், சர்ச்சைகள், குற்றச்சாட்டு கள், அதிதீவிர நிலைப்பாடெடுத்தல் போன்றவற்றில்; இருந்து விலகியிருத்தலாகும். அவர் எழுதத் தொடங்கிய காலம் இலங்கையில் பெண்கள் அமைப்புகள், பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வுகள் மேற்கிளம்பத் தொடங்கிய காலகட்டம். என்றபோதும் இந்த அமைப்புகள் எதிலும் அவர் நேரடியாகத் தொடர்போடிருந்தார் என்பதற்கான ஆதரங்களைக் காண முடியவில்லை. ஆனால், பெண்கள் பற்றி, பெண் அடையாளம் பற்றி, பெண்களின் பிரத்தியேகமான பிரச்சினைகளைப் பற்றி அவர் நிறைய எழுதியிருக்கிறார். நானறிந்தவரையில், இனப்போரில், இடம் பெயர்வுகளில் அதிகமதிகம் பிரச்சினைகள் பெண்களுக்கே என்று இலக்கியத்தின் வழி (சிறுகதைகளில்) வெளிப்படுத்திய முக்கியமான படைப்பாளி தாமரைச்செல்வி. இந்த வகையில் அவருடைய பதிவுகள் முக்கிய மானவை. ஒரு காலகட்டத்தின், ஒரு பிரதேசத்தின் (போர்ப்பிரதேசத்தின்) சமூக வரலாற்று ஆவணங்கள் அவை. பெண்ணுரிமை பற்றிய பிரக்ஞை அவரிடம் அதிகமுண்டென்பதற்கு அவருடைய எழுத்துகள் ஆதாரம். ஆனால், பெண்ணுரிமை பற்றிய விவாதங்கள், சர்ச்சைகள், மற்றும் பெண்கள் அமைப்புகளுடன் அவர் எப்போதும் நேரடியாகத் தொடர்போடிருந்து அவற்றில் ஈடுபடவில்லை. மேற்குறிப்பிட்ட அவருடைய பொது இயல்பு இதற்குக் காரணமாக இருந்திருக்கக் கூடும்.

தாமரைச்செல்வியின் காலகட்டத்தில் எழுதிய ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், பவானி, தமிழ்ப் பிரியா, ஜனகமகள் சிவஞானம், குறமகள் போன்றோரில் மற்றவர்களை விட்டு தாமரைச்செல்வி விலகிய இடம் அவருடைய கதைப்புலமும் தொனியும் நிலையும் நிலைப்பாடுமாகும். தார்மீக அடிப்படைகளை நோக்கிய, மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்ட படைப்புலகத்தை தமது எழுத்துக்கு அவர் ஆதாரமாகக் கொண்டிருந்தபோதும் அவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்த எந்த இலக்கியப் போக்கிலும் தன்னை அடையா ளப்படுத்திக் கொள்ளவில்லை தாமரைச்செல்வி. மட்டுமல்ல, எந்த இலக்கிய அணிகளிலும் அவர் சேர்ந்திருந்ததுமில்லை. அப்பொழுது முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தேசிய கலை, இலக்கியப் பேரவை, எஸ்.பொவின் நற்போக்கு அணி, அலை, பூரணி, சமர் இதழ்கள் சார்ந்த அமைப்புகள் எனப் பல இலக்கிய இயக்கங்கள் இருந்த போதும் எதிலும் தாமரைச்செல்வி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. இது ஈழச்சூழலில் ஒரு அபூர்வமே. அத்துடன் எந்த வரையறைகளையும் தன் எழுத்துக்கும் இயக்கத்துக்கும் அவர் வைத்துக்கொள்ளவில்லை. அவருடைய நோக்கமெல்லாம் சனங்களிடம் அதிகமாகச் சென்று சேரக்கூடிய ஊடகங்களின் வழியில் தன்னையும் தனது எழுத்துக்களையும் கொண்டு செல்வதே. இதில் அவர் அதிக வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், அவர் எந்த அணிகளிலும் சேரந்து கொள்ளாதிருந்ததன் காரணமாக அவரை விமர்சன அரங்கில் கவனப்படுத்துவதற்கு சற்றுக் காலம் பிடித்தது. தாமரைச்செல்வியின் கதைகள் ஈழத்துப் படைப்புச் சூழலில் தவிர்க்க முடியாதவை என்று உணரப்படும்வரை அவர் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், இதுபற்றி அவர் என்றும் கவலைப்பட்டதாக இல்லை. அவருடைய கவனம் எல்லாம் தனது எழுத்துகள், அவற்றை வாசிக்கும் வாசகர்கள் என்பதே. இறுதியில் அவர் பெரும் வெற்றியைப் பெற்றார்.

‘தாமரைச்செல்வி எழுதத் தொடங்கிய பின்னரான நாற்பது ஆண்டுகால சமூக இயக்கங்கள் எதிலும் இணைந்து கொள்ளாமல், அல்லது அவற்றைப் பற்றிய எதிர்வினைகள், அபிப்பிராயங்களில்லாமல் எப்படி ஒரு படைப்பாளியால் இருந்திருக்க முடியும்?” என்று ஒருவர் கேட்டார். ஏனெனில் இந்தக் காலகட்டம் என்பது ஈழத்தின் சமூக, அரசியல் விசயங்களில் பெருந்தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. இவற்றில் சேர்ந்தியங்காமல் அல்லது, இவற்றுடன் மிகக் குறைவு. அதிலும் வடபகுதியில் எந்த முத்திரையும் இல்லாத படைப்பாளிகள் இருந்திருக்கவே முடியாது. ஆனால், விதி விலக்காக இருந்த ஒரு சிலரைப் போல தாமரைச்செல்வி இருந்தார். என்றபோதும் எதிலும் ஒட்டிக் கொள்ளாமல், எரியும் பிரச்சினைகளில்  சம்மந்தப்படாமல், எதிர்வினையாற்றாமல் அவர் இருக்கவில்லை. சமூக ஏற்றத்தாழ்வுகள், இனப்பிரச்சினையின் பாதிப்புகள், இராணுவ அதிகாரம், போர், அகதி வாழ்க்கை, தமிழ்பேசும் மக்களின் அரசியல் எண்ணக்கரு என்று அவர் எல்லாவற்றிலும் தன்னைப் பிணைத்துக் கொண்டு எழுதினார். குறிப்பாக ஆனையிறவு, பரந்தன் பகுதிகள் ஒரு காலத்தில் இராணுவ வலயங்களாக இருந்த 1985 களிலேயே இடப்பெயர்வுகளையும் அழிவுகளையும் சந்திக்கத் தொடங்கினார். இதனால்; அவர் எழுதிய கதைகளின் சேகரிப்புகளையே அவர் இழந்திருந்தார். ஆனால் தாமரைச்செல்வியின் எழுத்து ஊக்கம் தணிந்து விடவில்லை. இது இன்னும் ஊக்கம் பெற்றது. இதற்கு அவருடைய குடும்பச் சூழல் ஒரு பிரதான காரணம் என்று சொல்லலாம். அவர் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் அவருடைய குடும்பத்தினர் அவருடைய இலக்கிய ஈடுபாட்டையும் எழுத்து முயற்சியையும் எப்போதும் ஊக்கப் படுத்தியே வந்திருக்கின்றனர். தாமரைச்செல்வி எழுதத் தொடங்கிய தொடக்க காலத்தில் அவருடைய தந்தை அவரை ஊக்கப்படுத்தியிருக்கிறார். பின்னர் அவருடைய சகோதர, சகோதரிகள் ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். அதன்பின்னர் கணவரின் ஊக்கம், பிள்ளைகளின் ஊக்கம், ஒத்துழைப்பு என்று இந்த உற்சாகமூட்டல் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

தாமரைச்செல்வியின் குடும்பம், கூட்டுக் குடும்ப அமைப்பைக் கொண்டது. பொதுவாக விவசாயக் குடும்பங்களில் இது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக இன்னும் பல இடங்களிலும் இருக்கிறது. அது விவசாய வாழ்க்கையின் தேவை. இந்த அமைப்பு முறையில் கனிவும் பொறுமையும் நிதானமும் முக்கியமானவை. தாமரைச்செல்வி குடும்பத்தில் மூத்தபெண். இயல்பாகவே குடும்பத்தில் மூத்த பெண் – ஏனைய சகோதரர்களுக்கு ‘அக்கா” என்ற வகையில் வகிக்கின்ற பாத்திரம் தமிழ்க் குடும்ப அமைப்பில் கனிவு நிரம்பியது பொறுப்புகள் அதிகமுள்ளது. தாமரைச்செல்வியின் கனிவு அவருடைய குடும்பத்தின் ஒரு சிறப்படையாளம் என்பதைப் பின்னாளில் அவருடைய குடும்பத்தினருடன் நெருங்கிப்பழகும்போது தெரிந்தேன். 1980களின் முற்பகுதியில் தாமரைச்செல்வியைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பியிருந்தபோதும் அவரைச் சந்திக்க முடிந்தது 1990களின் நடுப்பகுதியில்தான். ஒரு மத்தியானப் பொழுதில், நானும் யோகேந்திரநாதனும் அவருடைய வீட்டுக்குப் போயிருந்தோம். அகதிகள் பெருகியிருந்த காலம் அது. அவர்கள் வீட்டில் எப்போதும் பெரும் சமையல்தான் நடக்கும். எல்லோரையும் வரவேற்கிற, விருந்தோம்புகின்ற விவசாயிகளின் வீட்டில் நடக்கின்ற சமையல் அது. எவ்வளவுதான் பெரிய சமையல் என்றாலும், தினமும் அப்படி சமைப்பதென்றாலும் சலிப்போ சோர்வோ ஏற்படுவதில்லை. அதற்குப்பின்னர் பல ஆண்டுகள் அவருடைய வீட்டில் பார்த்திருக்கிறேன், என்னவெல்லாமோ மாறியிருந்தாலும் இந்தப் பெரும் சமையல் மாறவேயில்லை. இடம்பெயர்ந்து அவருடைய குடும்பம் அகதிநிலையிலிருந்த போதும் இந்தச் சமையல்முறை மாறவேயில்லை.
நாங்கள் காலச்சுவடு வாசகர் வட்டத்தை அக்கராயனில் நடத்தியபோது அநேக கூட்டங்கள் தாமரைச் செல்வியின் வீட்டில்தான் நடந்திருக்கின்றன. புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வது, அப்போது வெளியாகிக் கொண்டிருந்த சரிநிகர், மூன்றாவது மனிதன், சொல் புதிது போன்ற இதழ்கள் தொடர்பாக கலந்துரையாடுவது என்று ஒரு சிறிய இலக்கிய இயக்கம் தாமரைச்செல்வியின் வீட்டை மையப்படுத்தி நிகழ்ந்தது. அப்போது எல்லோரையும் ஆச்சரியப்படுத்திய விசயம் அவரிடம் நிரம்பியிருந்த கனிவே. மட்டுமல்ல, அந்தக் கனிவுதான், மற்றவர்களுக்கு உதவும் ஒரு இயல்பூக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது. அதாவது இங்கே கனிவு என்பது கருணையாக பண்பு மாற்றமடைந்திருக்கிறது. அகதி வாழ்க்கையில் சனங்கள் துயரப்பட்ட வேளை யில்,  தம்மால் இயலக்கூடிய உதவிகள் அத்தனையையும் செய்தவர் தாமரைச்செல்வி. அவருடைய குடும்பம் கூட்டுக் குடும்ப அமைப்பைக் கொண்டது என்பதால் இந்த உதவிகளை ஒரு மையப்படுத்திச் செய்வற்கு அவருக்கு வாய்த்தது. அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பல கண்டங்களில் வாழ்ந்தாலும் உள்ளர்த்தத்தில் அவர்கள் இன்னும் கூட்டுக்குடும்பத்தின் பிரதிநிதிகளே.

இதை ஏன் இங்கே குறிப்பிடுகின்றேன் என்றால், அவருடைய கதைகளில் இந்தக் குடும்ப அமைப்பின் தன்மையை நாம் காணமுடியும். இந்தக் கூட்டுக் குடும்பத்தின் மனம், அதன் பங்கேற்பு போன்றவற்றின் வெளிப்பாடாகவும் அவை இருக்கின்றன. குறிப்பாக அவருடைய ‘பச்சை வயல் கனவு” என்ற நாவல் அவருடைய குடும்பத்தின் கதையைச் சொல்வது போன்ற ஒரு படைப்பே. அத்துடன் கிளிநொச்சி என்ற அமைவிடத்தின் உருவாக்கம், அந்த அமைவிட உருவாக்கத்தின் காலகட்டம், சூழல் என்பவற்றையும் அதனோடிணைந்த வரலாற்று விசயங்களையும் அந்த நாவல் பதிவு செய்கிறது. இது ஒரு விவரணப்பாங்கான நாவல் வகை. பொதுவாகவே தாமரைச்செல்வியின் பிற கதைகளிலும் விவரணப் பாங்கை அவதானிக்கலாம். ஆனால், இந்த விவரணப்பாங்கினூடே தன்னுடைய கலையாக்கத்தை அவர் ஏற்படுத்திவிடுகிறார் என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டியது. பிரச்சாரத் தொனியற்ற, இயல்புக்கு முரணான வகையில் தன் எழுத்துகளை தாமரைச்செல்வி முன்வைப்பதில்லை என்பது கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம். உள்ளோட்டங்கள், உள்ளடுக்குகள் அதிகமில்லாத எளிய கதைகளில், எளிமையான கூறுமுறையில் அவர் உணர்த்த முனையும் விசயங்களான அறமே முக்கியம் பெறுகிறது. சரி, ஆனால் இந்த அறம் எதன்பாற்பட்டது என்று யாரும் கேட்கலாம். வாழ்க்கையின் சவால்களை அடைவதற்கு சமனிலையற்ற முறையில் மனிதரை மனிதர் பயன்படுத்தும் அரசியலையும் அந்தச் செயல்முறையையும் எதிர்க்கும் அறம் இது என்பது தாமரைச்செல்வியின் நிலைப்பாடு. இந்த அறத்தை வலியுறுத்தியே அவர் தன்னுடைய படைப்புலகத்தை இயக்குகிறார். அன்பையும் கருணையையும் இரக்கத்தையும் ஆதாரமாகக் கொண்ட ஓருலகத்தைக் காண்பிப்பதன் மூலமாக தான் சுட்டுகின்ற அறத்தை எட்டலாம் என்பது அவருடைய நம்பிக்கை. இதற்காக அவர் கனிவையும் நேசத்தையும் தன் கதைகளில் முடிவுறாமல் எழுதிக் கொண்டிருக்கிறார். அவருடைய பெரும்பாலான கதைகளில் அவருள் ஓடிக் கொண்டிருக்கும் இந்தக் ‘கனிவு” என்ற குருதிதான் ‘அறம்” என்ற அடையாளத்தை முன்னிறுத்தத் துடிக்கிறது.

2
வன்னி விவசாயிகளின் வாழ்க்கை பொதுவாக இரண்டு வகைப்பட்டன. ஒன்று ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, அலம்பில், குமுழமுனை, புதுக்குடியிருப்பு போன்ற பழைய வன்னி விவசாயிகளின் வாழ்க்கையும் அவர்களின் பிரச்சினைகளும். இது காடுசார்ந்த விவசாயம். சேனைப் பயிர்ச் செய்கையும் இங்கே முக்கியமான ஒரு அம்சம். கிளிநொச்சி போன்ற நீர்ப் பாசனக் குடியேற்றங்களின் விவசாயமும் அந்த விவசாயிகளின் வாழ்க்கையும் அவர்களுடைய பிரச்சினைகளும் இன்னொரு வகையானவை. இந்த இரண்டிற்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருந்தாலும் தன்மை வேறுபாடுகள் உண்டு. ஆனால், விவசாய வாழ்க்கை, விவசாயக்கூலிகளின் பிரச்சினைகள் எல்லாம் ஏறக்குறைய ஒரே அடிப்படையைக் கொண்டவை என்பதும் உண்மையே. தாமரைச்செல்வியின் பெரும்பாலான கதைகள் கிளிநொச்சி விவசாயிகளின், விவசாயக் கூலிகளின் பிரச்சினைகளை மையப்படுத்தியவை. இந்தப் பிரதேசத்தில் போர் தீவிரமடைந்தபோது இங் கிருந்த மக்களின் கதி என்னவாகியது, அப்போது இந்தப் பிரதேசம் எப்படியாகியது என்பதை ஒரு காலகட்டம்வரையில் அவரும் ஒரு அகதியாக வாழ்ந்து எழுதினார். இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கும் மக்களின் வறுமை, நிலத்தையே ஆதாரமாகக் கொண்ட விவசாயிகள் அந்த நிலத்தை இழக்கும் போது சந்திக்கின்ற அவலம் எப்படியானது என்பதை இந்தக் கால கட்டத்தில் அவர் எழுதிய கதைகள் வெளிப்படுத்துகின்றன. இதில் முக்கியமான சில கதைகள் உண்டு. அதிலும் முக்கியமானது ‘இடைவெளி” என்ற சிறுகதை. இந்தக் கதையை கவிஞர் சிவசேகரம் மொழி பெயர்த்திருக்கிறார். செல்வா கனகநாயகம் தொகுத்த ஈழ இலக்கியத் தொகுப்பில் இந்தக் கதை இடம் பெற்றுள்ளது.

இந்தக் கதையை ‘உதிரிப்பூக்கள்” மகேந்திரன் ’1996′ என்ற பெயரில் ஒரு குறும்படமாக்கியுள்ளார். முதிய விவசாயி ஒருவர் இடப்பெயர்வினால் சந்திக்கின்ற உள நெருக்கடியே கதையின் மையக்கரு. இதைப் போல தாமரைச்செல்வியின் வேறு சில சிறுகதைகளும் குறும்படங்களாக்கப்பட்டிருக்கின்றன. இதில் ‘வேலி” என்ற குறும்படம் முக்கியமானது. ஈழத்துத் திரைப் படங்களை எப்படி உருவாக்கலாம்;, அவற்றுக்கான கதைகள் என இயக்குநர் மகேந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார், ‘தாமரைச் செல்வியின் கதைகள் திரைப்படங்களுக்குரிய கட்டமைப்பையும் கதை கூறு முறையையும் கொண்டுள்ளன. அவருடைய சித்திரிப்பு முறை முக்கியமானது. பாத்திரங்களையும் சூழலையும் இணைத்து கதையை உரு வாக்குவதில் தாமரைச்செல்வி கையாளும் உத்தி ஒரு திரைக் கதையாசிரியருக்கு நிகரானது. இந்தமாதிரி நிறையக் கதைகளை மலையாளத்திலேயே அதிகமாகக் காணமுடியும்” என்று. தாமரைச்செல்வியின் ‘பாதை”, ‘பாலம்” போன்ற கதைகள் திரைக்கதைக்குரிய கூடுதல் அமைவைக் கொண்டவை என்றும் சொன்னார் மகேந்திரன். தாமரைச்செல்வியின் பெரும்பாலான கதை களை விரும்பிப் படித்தார் மகேந்திரன். மட்டுமல்ல, ஈழத்துச் சிறுகதைகள், நாவல்கள் எனப் பலற்றையும் படித்திருக்கிறார் அவர். தாமரைச்செல்வியின் மேலும் சில கதைகளைப் படமாக்க வேண்டும் என்ற ஆவல் அவருக்குண்டு.

வாழ்க்கையின் அடிப்படைகளை இலக்கியமாக் கும்போது அந்த அடிப்படைகளின் தர்மங்களை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என்று கருதுகின்றவர் தாமரைச்செல்வி. ஆனால், இதை அவர் எங்கும் சொன்னதுமில்லை பிரகடனப்படுத்தியதுமில்லை. அவருடனும் அவருடைய குடும்பத்தினருடனும் அறிமுகமாகத் தொடங்கியபின்னர் இதனை அவதானித்திருக்கிறேன். எதிலும் பிரிந்து நிற்பதுமில்லை. எதிலும் முழுமை யாகத் தோய்ந்து விடுவதுமில்லை என்ற ஒரு இடை நிலை அணுகுமுறை தாமரைச்செல்வியினுடையது. ஒரு படைப்பாளி கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறை இது என்பதைப் பின்னர் அதைப் புரிந்து கொண்டேன். கோட்பாடுகள் நிறம்மாறி, அமைப்புகள் ஒளி மங்கிப்போனாலும் என்றும் பிரகாசம் குறையாத ஒரு நட்சத்திரமாக இருக்கக் கூடிய அணுகுமுறை இது. அதற்காக இதைப் பட்டும் படாதிருத்தல் என்று அர்த்தப் படுத்திவிடமுடியாது. காலத்தில் பின்தங்கி விடாத நிலை இது. இத்தகைய நிலைதான் இலக்கியத்தின் அடிப்படையாகவும் இருக்கமுடியும். உலகின் மாபெரும் இலக்கியங்களின் உள்ளோட்டம் அல்லது அடிப்படை இதுவாகத்தானிருக்கிறது. என்றபடியால்தான் அவை காலத்தால் பின்னகர்த்த முடியாதபடிக்கு இயற் கையைப் போல என்றும் புதுமை குன்றாமலும் நிலை பெயராமலும் இருக்கின்றன.

இதுவரையில் சிறுகதைத் தொகுதிகளும் நாவல்களுமாக ஒன்பது புத்தகங்கள் வரையில் எழுதியுள்ள தாமரைச்செல்வியின் எழுத்துகள் நம் சமகாலப் புனைவுலகத்தின் யதார்த்தமா அல்லது யதார்த்த உலகத்தின் புனைவா என்று நம்மைக் கேட்கவைக்கினறன. ஒன்றை யொன்று இடையீடு செய்யும் வகையில் ஒன்றுடன் ஒன்று கலந்திருப்பதாக இவற்றைப் பின்னும் கலையைச் செய்து கொண்டிருக்கிறார் தாமரைச்செல்வி. இனி வரும் நாட்களிலும் அவர் யதார்த்தவாதத்தில் இன்னும் செழுமையான கதைகளை எழுதக்கூடும் என்றே நம்பகின்றேன். அவருடைய மனது நிரம்ப சொல்ல வேண்டிய கதைகளிருக்கின்றன. இப்போது அந்தக் கதைகளை எழுதுவதற்குப்பதிலாக அவர் தன்னளவில் தனக்கு வசப்பட்ட கனிவின்படி உதவும் பணிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். வழமையைப் போலவே எந்த அமைப்புகளையும் எந்த அணிகளையும் சாராமல், தன்னளவில் உதவிக் கொண்டிருக்கிறார், பாதிக்கப்பட்ட சனங்களுக்கு. இதிலும் அந்தக் கூட்டுக் குடும்பத்தின் அம்சமே உண்டு. ஆக, இனி வரும் அவருடைய கதைகளும் இந்தக் கனிவினதும் அதைக் கோரும் நிலையினதும் வெளிப்பாடுகளாகவே இருக்கக்கூடும். எப்படியோ சில நிறங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுத்தான் விடுகின்றன. சிலருக்கு கடுமையான நிறங்கள். சிலருக்கு மென்நிறங்கள். தாமரைச்செல்வியின் நிறம் மென்நிறமாகவே இருக்கிறது. அது பசிய மென்நிறம்.

நன்றி: எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010 http://eathuvarai.wordpress.com