தாய் மண்ணை நேசிக்கும் எழுத்துப் போராளி குரு அரவிந்தன்.

– கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் எழுத்தாளர் குரு அரவிந்தனின் 25 வருடகால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாக நூல் வெளியீட்டுடன் கூடிய  பாராட்டு விழா ஒன்று எழுத்தாளர் இணையத் தலைவர் திரு. எஸ். சிவநாயகமூர்த்தி தலைமையில் ‘டொராண்டோ’வில் (BABA Banquet Hall,  3300 McNicoll Avenue,  Toronto. On. M1V 5J6.  (Middlefield Rd / McNicoll) அக்டோபர் 16  அன்று மாலை 6.45 மணிக்கு நடைபெற இருப்பதையொட்டி , இலங்கையின் மூத்த எழுத்தாளர்களிலொருவரான குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்) அவர்கள் குரு அரவிந்தனின் இலக்கியப்பங்களிப்பு பற்றி எழுதிய இக்கட்டுரை இங்கு பிரசுரமாகின்றது. எழுத்தாளர் குரு அரவிந்தன் ‘பதிவுகள்’ வாசர்களுக்குப் புதியவரல்லர். ‘பதிவுகள்’ இணைய இதழில் அவ்வப்போது அவரது சிறுகதைகள் மற்றும் ‘டொரண்டோ’வில் நடைபெறும் கலை, இலக்கிய நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளும் வெளிவருவது யாவரும் அறிந்ததே. குரு அரவிந்தனின் இலக்கியச்சேவையைப் பாராட்டி அவருக்கு விழா எடுக்கப்படும் இச்சமயத்தில் மேலும் மேலும் அவரது கலை, இலக்கியப்பணி தொடர்ந்திட  ‘பதிவுகள்’ இணைய இதழும் அவரை வாழ்த்துகிறது. – பதிவுகள் –

குரு அரவிந்தன்குறமகள்‘யுத்தம் என்பது மனித உடல்களை மாத்திரமல்ல, மனித மனங்களையும் சிதைத்து விடுகின்றது. இது போன்ற பயங்கர அனுபவங்கள் இனி யாருக்கும் வரவேண்டாம். அதை அனுபவிப்பவனுக்குத்தான் அதன் வலியும், வேதனையும் தெரியும். எனவே யுத்தத்தைக் கொன்று விடுங்கள். இந்த உலகத்தை சுதந்திரமான அமைதிப் பூங்காவாக்குங்கள்’ என்று குரு அரவிந்தன் ஆசிரியர் உரையில் குறிப்பிட்டிருப்பதில் இருந்து அவர் ஒரு அமைதி விரும்பி என்பது புலனாகின்றது. குரு அரவிந்தன் இயல்பாகவே தனது உணர்ச்சிகளை அவ்வளவாக வெளிக்காட்டுவதில்லை. புன்சிரிப்பு தவழும் அழகான வதனம், கண்கள்கூட அமைதியைக்காட்டும் ஆனால் சுற்றியிருக்கும் அத்தனையும் அங்கே பதிவாகியிருக்கும்.  தேவையான பொழுது மட்டும் அவை எழுத்து மூலம் வெளியே கொண்டு வரப்படும். தமிழ் மீதும், தாய் மண் மீதும் அதிக பற்றுக் கொண்டவர். எல்லோருக்கும் உதவவேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். அதனால்தான் தன்னார்வத் தொண்டராகவும் புலம் பெயர்ந்த மண்ணில் தன்னை அர்ப்பணித்திருக்கின்றார்.

ஈழத்தமிழர்களின் விடுதலை உணர்வை தன் பேனா முனையால் வன்முறையின்றி அகிம்சை வழியில் சர்வதேசம் எங்கும் எடுத்துச் சென்ற முன்னோடிகளில் குரு அரவிந்தனும் ஒருவர். இவரது எழுத்துக்களில் ‘உயிருக்குயிராக உன்னையும் இந்த மண்ணையும் நேசிக்கின்றேன்’ என்ற வார்த்தைகள் அடிக்கடி இடம் பெறுவதை அவதானிக்கலாம். இவரது ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ என்ற புதினத்தின் மூலம் இந்த வார்த்தைகள் வெளிவருகின்றன. உறங்குமோ காதல் நெஞ்சம் என்றால் எல்லோரும் காதற் கதை என்றுதான் எண்ணினார்கள். ஆமாம், காதற்கதைதான் ஆனால் பெண் மீது கொண்ட காதலல்ல, அது மண்மீது கொண்ட காதல் கதை.

ஈழப் போராட்ட வரலாற்றை முதன் முதலாக தமிழகத்தில் எடுத்துச் சொன்ன புதினம் என்ற வகையில் ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ என்ற குரு அரவிந்தனின் இந்த நாவலுக்கு தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான ஒரு இடம் கிடைத்திருப்பதில் இருந்தே எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. அதனால்தான் தமிழகத்தின் முதல் தரமான படைப்பாக்கங்களுடன் புலம்பெயர் இலக்கியமான இந்த ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ என்ற புதினமும் ஒன்றாக, அதிக வாசகர்களைச் சென்றடைந்த போர்க்கால இலக்கியமாக இன்று முக்கிய இடம் பெற்றிருக்கின்றது. ‘தாய் மண் மீது கொண்ட அவனுக்கிருந்த அளவில்லாத பற்றும் தன்னினம் அழிக்கப்படுகின்றது என்ற ஆதங்கமும் தான் அவனை ஆயதம் ஏந்த வைத்தது’ என்று இந்த நாவலுக்கு அணிந்துரை எழுதிய அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார்.

பலத்த விமர்சனத்திற்கு மத்தியில் போர்க்கால சூழலை, அதனால் ஏற்பட்ட பாதிப்பை தமிழகத்திற்குத் தொடர்ந்தும் எடுத்துச் சொன்ற போதிமரம் (கல்கி) மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா (குமுதம்) 1983 ஆம் ஆண்டுக் கலவரத்தை எடுத்துச் சொன்ன நங்கூரி (விகடன் தீபாவளி மலர்) போன்றவை மறக்க முடியாத புனைவுகள். குரு அரவிந்தன் பயணித்த அதே நங்கூரி கப்பலில்தான் நானும் கொழும்பில் இருந்து அகதியாகக் காங்கேசந்துறைக்குச் சென்றேன். அகிம்சை வாதியான தந்தைக்கும் போராளியான மகளுக்குமான முரண்பாட்டைக் கதையாகச் சொல்லும் பரிசு பெற்ற தாயுமானவர் (ராமரத்தினம் குறுநாவல் போட்டி, கலைமகள்) மற்றும் தமிழகத்தில் பரிசு பெற்ற அம்மாவின் பிள்ளைகள் ( நகுலன் நினைவு குறுநாவல் போட்டி, யுகமாயினி) போன்ற குரு அரவிந்தனின் குறுநாவல்கள், நின்னையே நிழல் என்று என்ற சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்த போராட்ட வரலாற்றைச் சொல்லும் சிறுகதைகள், பல்லாயிரக் கணக்கான தமிழக வாசகர்களைச் சென்றடைந்ததும் இந்த நாவல் பிரபலமானதற்கு ஒரு காரணமாகும். தமிழகத்தின் பிரபலமான, அதிக விற்பனையாகும் பத்திரிகைகள் குரு அரவிந்தனின் படைப்புக்களை விருப்போடு தொடர்ந்தும் வெளியிடுவதால் பல்லாயிரக் கணக்கான என்று சொல்வதைவிட லட்சக்கணக்கான வாசகர்களைக் குரு அரவிந்தனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. எந்த ஒரு ஈழத்து எழுத்தாளரும் இதுவரை ஏற்படுத்தாத வாசக வியாபகத்தை குரு அரவிந்தன் தனது எழுத்துக்களால் ஏற்படுத்தி இருப்பது ஈழத்தமிழர்களாகிய எமக்குப் பெருமை சேர்ப்பதாகும். ஈழத் தமிழிலக்கிய உலகின் அடுத்த கட்டமான புலம்பெயர் இலக்கிய உலகிலும், ஈழத்து வரலாற்றைச் சுமந்து நிற்கும் இவரது ஆக்கங்கள் நிலையான இடம் பெற்றிருப்பதும் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

1983 ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் வெளிவந்த குரு அரவிந்தனின் கதைதான் நங்கூரி. தமிழகத்தில் குரு அரவிந்தனின் ஆக்கங்களுக்கு வி.ஐ.பி. தராதரத்தை ஏற்படுத்திக் கொடுத்த மலர்களில் விகடன் தீபாவளி மலரும் ஒன்றாகும். கல்கியில் வெளிவந்த அதிக வாசகர்களைக் கவர்ந்த, ஆனையிறவு சம்பவம்தான் பலரைக் கவர்ந்த கதையான போதிமரம். ‘இது எங்கள் மண், எங்கள் இனம், எங்கள் மொழி. இதை அழிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்’ என்று ஒரு பெண் போராளியின் மனக் குமுறலை எடுத்துச் சொல்லும் கதைதான் மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா! குமுதம் இதழில் வெளிவந்த இந்தக் கதையில் கதாபாத்திரத்தின் மூலம் தமிழர்களின் மனக் குமுறலை வெளிப் படுத்துகின்றார் குரு அரவிந்தன். மாவீரர் துளசியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பல இவரது எழுத்துக்களில் ஆங்காங்கே தெறித்து விழுந்துள்ளன.

தமிழகத்தில் இருந்து வெளிவரும் யுகமாயினி இதழ் நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற கதை அம்மாவின் பிள்ளைகள். மண் மீது கொண்ட பாசத்தால், இடம் பெயர்து செல்ல மறுக்கும் ஒரு தாயின் மனக் குமுறலை எடுத்துச் சொல்லும் உள்ளத்தை உருக்கும் ஒரு சோக காவியமாகும். தமிழகத்தில் இருந்து வெளிவரும் மூத்த இதழான கலைமகள் நடத்திய ராமரத்தினம் குறநாவல் போட்டியில் பரிசு பெற்ற கதைதான் தாயுமானவர். யுத்தத்தின் அழிவையும், முக்கியமாகத் தாய் மண்ணில் மெல்லமெல்ல அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தில் உள்ள சிவாலயங்களையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் குரு அரவிந்தன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

பல்லின சமுதாயமாக, பல்மொழிச் சமுகமாக, பன்மதக் கோட்பாடுகளாக மக்கள் வாழும் கனடாவில் எவ்வித சச்சரவுமின்றி ஜனநாயக முனைப்புடன் மக்கள் வாழ்வதை அவதானித்ததாலோ என்னவே, கதைகளை வெறும் கதைகள் என்று எழுதாமல் எங்கள் உயிர்த்துடிப்புகளை அடுத்த தலைமுறைக்குத் தன் எழுத்துக்கள் மூலம் ஆவணப்படுத்திக் கொடுத்திருப்பதைக் கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும். அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.