தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ( இலங்கை ) கவிதைகள்!

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா0

1. மரணத்தின் தேதி!

இத்தனை நாள் பார்த்த நிலா
ஒளி மங்கி வீசும்..
இதயத்தின் பாகமெல்லாம்
தீ கருகிய வாசம்!

உன் மாற்றம் என்னுள்ளே
தீயள்ளி போடும்..
உன் நினைப்பு என் உயிரின்
அந்தம் வரை ஓடும்!

சுட்டெரிக்கும் சூரியன்
என் தோழனாய் மாறும்!
என் நிலை கண்டுதான்
கலங்கி நீளும் ஆறும்!

வீணை தடவிய விரல்களெல்லாம்
கண்ணைக்குத்தி நிற்கும்..
வானைத்தொடும் கவலைகள்
முட்டும் எட்டுத்திக்கும்!

பட்ட பகல் வெட்ட வெயில்
துன்பமில்லை எனக்கு – கை
தொட்ட அவள் வெப்பம்நெஞ்சில்
பத்திரமாய் இருக்கு!

ஏமாற்றம் வலியெல்லாம்
எனக்குள்ளே மோதி..
சீக்கிரமாய் நிர்ணயிக்கும்
என் மரணத்தின் தேதி!!!  
 

02. ஒட்டடை நினைவுகள்!

இன்னதென்ற
காரணம் தெரியாமலேயே
வலியெடுக்கிறது
எனது இடது புறத்தில்!

உலகத்திலுள்ள
அனைத்து கவலைகளும்
என்னில் தேங்கியிருக்கிற
மெய் நிலை!

என்னென்வோ
நினைத்துப் பார்த்த
பொழுதிலும்
எதிலும் சிக்காமல்
கைநழுவிச் செல்லும்
அந்த
ஒட்டடை நினைவுகள்!

குளவி கொட்டிப்போன
வேதனையின் சாயலிலும்
பாலைவன மணலின் கொதிப்பிலும்
துயர்களை தருவிக்கிறது
இருதயம்!  

 
03.  நீ வாழ்வது மேல்!
 
கற்றவரை இவ்வுலகம்
போற்றும்- இது
கல்விப்பெருமையை
பறைசாற்றும்..
வையகத்து வாழ்வாங்கு வாழ்வோரை
வாழவைக்கும் வழிநிலையை
நித்தியமாய் காட்டும்…
அதை அறிந்து தான் வாழ்த்துது
இளம் காற்றும்!

நேர்மையாய் உன்வாழ்வை
வாழு – பிறர் கவலையை
காது கொடுத்து கேளு..
திக்கற்று வாழ்வோரை
தீமைகள் சூழ்கையிலே
அயராது அவருக்காய் மாளு..
தரணியிலே நீ வாழ்வது மேலு!

கவலையின்றி வாழ்பவன் தான்
யாரு – சிலரின் கண்ணிரண்டும்
குருடு நீ பாரு…
நம்பிக்கை இழக்காமல்
நாணயம் தவறாமல்
இலட்சியத்தை நோக்கி
நீ ஏறு..
அதை விட இன்பம் என்ன வேறு?

நடுவீதியில் பெண்ணை
மறியாதே – அவளுன் மனைவியாகலாம்
அது தெரியாதே..
தீயஎண்ணங்கள் பலகொண்டு
தவறுகள் பல செய்து
வாழ்க்கையில் நீயும் சரியாதே – பின்
பைத்தியமாய் வீதியில் திரியாதே!

அரிதாரம் பூசாமல்
பழகு – தீயவர் உன்னருகே
வந்தாலே விலகு..
சமூகத்தில் பலபேரு
ஏமாற்றக்காத்திருப்பர்
இது தானே இன்றைய உலகு…
இதையறிந்தாலே உன் வாழ்வு அழகு!!!
 
riznahalal@gmail.com
 
www.storyrizna.blogspot.com
www.poemrizna.blogspot.com
www.vimarsanamrizna.blogspot.com
http://udaru.blogdrive.com/archive/837.html
http://www.vaarppu.com/view/1920/
http://www.muthukamalam.com/muthukamalam_padaipalarkal%20rishna.htm
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE
http://www.youtube.com/watch?v=8VI2jkJ62uQ
http://www.youtube.com/watch?v=PI9RgYc026Q