திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!

திருமாவளவன்– எழுத்தாளர் கோமகனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் இணைய இதழ் ‘நடு’. இம்மாத ‘நடு’ இதழில் கவிஞர் திருமாவளவனைப்பற்றிய எனது நனவிடை தோய்தற் கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரை கீழே. –


எழுத்தாளர் திருமாவளவனை நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது அவரது உள்ளத்தைக் கவரும் புன்னகையுடன் கூடிய முகம். கனடாவில் அவ்வப்போது  கலை, இலக்கிய நிகழ்வுகளில் சந்திக்கும்போது என்னுடன் கலை, இலக்கியம் பற்றி உரையாடும் மிகச்சிலரில் எழுத்தாளர் திருமாவளவனும் ஒருவர். சில சமயங்களில் நான் அவரது கவிதைகள் சிலவற்றை விமர்சிக்கையில், அவற்றை ஒருவித புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு தன் பதிற் கருத்தினை முன் வைக்கும் அவரது பாங்கு என்னைக் கவர்ந்ததொன்று. அவரைப்பற்றி எண்ணியதுமே அவருடன் சந்தித்த, உரையாடிய காட்சிகள் விரிகின்றன. அவரது எழுத்துகள் குறிப்பாகக் கவிதைகள் பற்றிய எண்ணங்கள் சிறகடிக்கின்றன.

புகலிடத் தமிழ்க்கவிஞர்களில் திருமாவளவன் முக்கியமானவர் மட்டுமல்லர் தனித்துவமானவரும் கூட. பொதுவாக நாடறிந்த கவிஞர்களெல்லாரும் அரச அடக்குமுறைகளைப்பற்றி, அரச மனித உரிமை மீறல்களைப்பற்றியே தம் கவனத்தைத்திருப்பியிருந்த சமயம், சிலர் மதில் மேற் பூனைகளாக உருமாறியிருந்த சமயம், அக்காலகட்டத்தில் அரச மனித உரிமை மீறல்களுக்கெதிராகத் தன் குரலை உயர்த்தி முன் வைத்த அதே சமயம் , விடுதலைப்புலிகளையும் துணிந்து விமர்சனத்துக்குள்ளாக்கியவர் அவர். விடுதலைப்போராட்டத்தில் அரச அடக்குமுறைகளுக்கெதிராக மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமென்று ஏனையவர்களெல்லாரும் அடக்கி வாசித்துக்கொண்டிருக்கையில் , திருமாவளவனின் குரல் தனித்தொலிக்கின்றது. அதுவே அவரது கவிதைகள் ஏனையவர்களின் கவிதைகளிலிருந்து வேறுபடுவதற்கு முக்கிய காரணம்.

திருமாவளவனின் கவிதைகள் இழந்த மண்ணைப்பற்றிய கழிவிரக்கத்தை வெளிப்படுத்துவன. இலங்கை அரசின் கொடிய அடக்குமுறைகளுக்கெதிரான எதிர்க்குரலாக ஒலித்தன. புகலிடத் தமிழர்களின் சமூக, பொருளியல் நெருக்கடிகளைப்பேசின. அதே சமயம் அக்காலகட்டத்தில் தேசிய விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தின. ஏனைய கவிஞர்கள் பலரிடமிருந்து கவிஞர் திருமாவளவன் வேறுபடும் இரண்டு முக்கிய விடயங்களாக அவரது விடுதலைப்புலிகளின் குழந்தைப்போராளிகள் பற்றிய கடும் விமர்சனத்தையும், புகலிடத்தமிழர்களின் நெருக்கடி மிகுந்த வாழ்வினை வெளிப்படுத்தும் போக்கினையும் குறிப்பிடலாம். உதாரணத்துக்குத் திருமாவளவனின் ‘நச்சுக்கொடி’ மற்றும் ‘ஷத்திரியம்’ ஆகிய இரு கவிதைகளையும்  சிறிது நோக்குவோம்.

‘நச்சுக்கொடி’

“அழு பெண்ணே அழு.
உன் ஒப்பாரியில்
ஏழு கடல்தாண்டி

எழுகிறது
என் செவியில்.”

“கண்மூடி விழிக்கு முன்னெழுந்த
கணப்பொழுதுள்
களத்தில் பாய்ந்து
வெடித்துச் சிதறி
காற்றில் கலந்து விட்டான்
உன் பாலன்.
கட்டிப்புரண்டு
கதறி அழுகின்றாய்
நீ

 

என்ன செய்வாய்.
வெடிவால் முளைக்கு முன்னர்
அழைத்து
மூளை நீக்கி
கபாலத்தைக் கோதாக்கி
சலவையிட்டு
துடைத்து
வெடிமருந்தை நிரப்பி
ஏவி விடும் கலையும்
மாவீரம் செய்கின்ற
வல்லமையும்
வாய்த்திருக்கு
அவர்க்கு.
அழு பெண்ணே!
அழு
மாவீரமென்று
சோகத்தை புதைத்து
வெதும்பத்  தெரியாத
பேதை நீ
அழு
உன் ஒப்பாரிப்பாடல்
எட்டுத்திக்கும்
ஒலிக்கட்டும்”

என்று முடியும்.

அக்காலகட்டத்தில் இதுபோல் குழந்தைகளைப் போராட்டத்துக்குப் பாவிப்பதைக் கடுமையாக எதிர்த்துத் தன் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருக்கின்றார் கவிஞர் திருமாவளவன். கவிஞனொருவனுக்கு இருக்க வேண்டிய நேர்மையும், தனக்குச் சரியென்று பட்டதை எடுத்தியம்பும் துணிவும் கவிஞரிடம் நிறையவேயுள்ளன. நமக்கேன் வம்பு என்று பெரும்பாலானவர்கள் மதிற் மேற் பூனைகளாக மாறியிருந்த காலகட்டத்தில், அவ்விதம் உரு மாறாமல் துணிச்சலுடன் அக்காலத்துக்கான தன் வரலாற்றுப்பங்களிப்பினைச் சரியாகவே செய்திருக்கின்றார் கவிஞர். வரலாறு அவரை இவ்விடயத்தில் நன்றியுடன் நினைவு கூரும்.

இன்னுமொரு கவிதை ‘ஷத்திரியம்’.  சாதி, மதம், மொழி,  இனம்  போன்ற முரண்பாடுகளைக் காரணமாக வைத்து உருவாகும்  போராட்டங்களில் அப்பாவி மக்கள் மேல் குண்டுகளை வெடித்துக் கொல்லும் செயற்பாடுகளைக் கடுமையாகக் கண்டிக்கும் கவிதை. உலகின் பல பாகங்களிலும், நம் நாட்டிலும் நடைபெற்ற ,நடைபெறுகின்ற இவ்வகையான செயற்பாடுகளுக்கெதிராகக் குரல் கொடுப்பவை கவிஞர் திருமாவளவனின் கவிதைகள்.

“எதுவாயிருந்தாலும் நேரம்
முக்கியம்
மனிதர் கூடும் நேரம்
இயக்கு
குண்டுப்பிண்டம் வெடிக்கட்டும்
பாலர் பெண்டிர் கர்ப்பிணியர்
வயோதிபர் பாவியர் வழிப்போக்கர்
குழந்தைகள்
குருதியில் குளி
குடித்து மகிழ்
நிணம் புசி”

இவ்விதம் கூறும் கவிதை

“எக்கணமும்
தூக்கம் மறந்திரு
மீளக் கிளம்ப வேண்டும்.
வேட்டையாடல்
சத்திரியர்க்கு அறம்”

என்று முடியும்.

ஒரு படைப்பாளியின் அநீதிக்கெதிரான ஆவேசமானது பக்கச்சார்பானதாக இருக்கக்கூடாது. குற்றம் குற்றமே என்று எடுத்துரைக்கும் நக்கீரத்தனம் அவரிடம் இருக்க வேண்டும். அந்நக்கீரக் குணம் கவிஞர் திருமாவளவனிடம் நிறையவேயுண்டு.

அடுத்து புகலிடத்தமிழர்களின் இருப்பின் வலியினை, இழந்த மண் மீதான கழிவிரக்கத்தினை, இழந்த மண்ணில் அரசினால் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த கொடிய அடக்குமுறைகளையெல்லாம் பாடுபொருளாக்கிச் சிறப்பான கவிதைகள் பலவற்றைக் கவிஞர் திருமாவளவன் படைத்திருக்கின்றார். அத்துடன் தனது கவிதைகள் பலவற்றில் இவர் பாவித்திருக்கும் சிறப்பான் படிமங்களும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை. உதாரணத்துக்கு நூலின் தலைப்புக் கவிதையான ‘பனிவயல் உழவு’ கவிதையைக் குறிப்பிடலாம். அதில் வரும் பின்வரும் வரிகளை ஒரு கணம் நோக்குங்கள்:

“காமக்கிழத்தியென
இருளாடை களைந்து வெண்பனி
உள்ளாடையுள்
எடுப்பாய் உடல் வனப்பு காட்டும்
ரொறன்ரோ நகரி”
” உடல் தழுவிக்
காமக்கிறக்கத்தில்
சலனமற்றுக் கிடக்கும்
ஒன்ராரியோ நீர்வாவி
கட்டில் விளிம்பில்
விடிவிளக்கென
நாணிக்கிடப்பார் சூரியனார்”

இருளாடை கலைந்து, வெண்பனி உள்ளாடையுள் எடுப்பாய் தன் உடல் வனப்பினைக்காட்டும் பெண் ரொறன்ரோ நகரி. நகரைப்பெண்ணாக உருவகிப்பதால் நகரி என்கின்றார் கவிஞர். ரொறன்ரோ நகரைப்பெண்ணாக்கியிருப்பது நல்லதொரு படிமம். அடுத்து ‘ஒன்ராரியோ நீர்வாவி கட்டில் விளிம்பில்’ என்று ஒன்ராரியோ வாவியைக் கட்டிலாக்கியிருப்பார் கவிஞர். இதுவும் நல்லதோர் உருவகம்.; படிமம். அக்கட்டிலில் விடிவிளக்காகக் கிடப்பவர் சூரியனார். சூரியனை விடிவிளக்காக்கியிருப்பது சிறப்பான உருவகம்.. ஆனால் அவ்விதம் சூரியனைக் கட்டிலாக்கியிருப்பவர் சூரியனார் என்று சூரியனை ஆண் பாலாக்கியிருக்கின்றார் என்பது புரியவில்லை.

இக்கவிதையில் வரும் கீழ்வரும் வரிகளும்  எனக்குப் பிடித்த வரிகள்:

“துருவக் கொடுக்குளிரில்
அலைகின்ற சூரியன் நீ
ஆயுதந் துரத்த
நெடுந்துயர்  கடந்த
பரதேசி நான்
உனை யார் துரத்த
இங்கு வந்து அகதியானாய்?”

இங்கு கவிஞர் சூரியனை அகதியாக்கியுள்ளார். ஆயுதந்துரத்த நெடுந்துயர் கடந்து, துருவக்கொடுங்குளிரில் அலைகின்ற  பரதேசியான தன்னைப்போன்ற அகதியாகத் துருவக்கொடுங்குளிரில் அலையும் சூரியனையும் உருவகிக்கின்றார் கவிஞர். இங்குள்ள நெடுந்துயர் என்பது நெடுந்தூரம் என்பதன் தட்டச்சுப்பிழையாகவே எனக்குத் தென்படுகின்றது. இவ்விதமாக ரொறன்றொ நகரத்து அகதி வாழ்க்கை விபரிக்கும் கவிதை, இருப்பிற்காய் ஆலைகளில் கடுமுழைப்புக்குள் மூழ்கிய வாழ்க்கையையும் ‘மாலை எந்திரம் ,  பிழிந்து துப்பி விட,  உடல் மீளும்’ என்னும் வரிகள் மூலம் வெளிப்படுத்துகின்றது.

இழந்த மண் மீதான கழிவிரக்கம் இவரது கவிதைகள் பலவற்றில்  காணப்படுகின்றது. உதாரணங்களாகப்பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:

“என் குடில் இழந்து
பனி வயற் காட்டில்
குடி பெயர்ந்தேன்” ( ‘வாடாமல்லி -1’)

“காலக்கடல் அலையில்
கரைந்து போகிறது
கட்டிய வீடு
இன்று
நினைவுகள் மட்டும்
நெருஞ்சியாய்” (வாடாமல்லி –1)

“புலரிப் பொழுதில்
புறப்பட்ட பயணம்
கூடு
திரும்பவில்லை”
(‘தேடுகை’)

“எப்போது
நான் வீடு சேர்வேன்?”
(‘தேடுகை’)

“எல்லாம் இழந்தோம்
எல்லாமும் இழந்தோம்”
(‘தீ’)

“வயல் வரப்பில்
வடலி வெளிகளில்
பூநாறிப் புதர்களில்
காணாமல் போனவர்கள்
நினைவு உறுத்தும்”
(‘நுகத்தடி மனிதர்கள்’)

இவ்விதம் இவரது கவிதைகளில் இழந்த மண் மீதான கழிவிரக்கத்தை வெளிப்படுத்தும் வரிகளை எடுத்துக்காட்டலாம்.  அதே நேரம் அக்கவிதைகள் பல இழ்ந்த மண் மீதான் கழிவிரக்கத்தோடு , புகலிட வாழ்வின் வலிகளையும், இயல்பையும் விபரிக்கின்றன. உதாரணத்துக்கு மேலே குறிப்பிட்டுள்ள ‘நுகத்தடி மனிதர்கள்’ கவிதையினைக் குறிப்பிடலாம்.

இவை தவிர முதற் காதல் போன்ற தனிமனித உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளையும் கவிஞர் படைத்துள்ளார். உதாரணத்துக்கு வாடாமல்லி -1, வாடாமல்லி – 2 மற்றும் வாடாமல்லி – 3 என்னும் தலைப்பிலான கவிதைகள் முதற்காதலின் வலியினை, நினைவுகளைச் சுமந்து வருகின்றன. முதற் காதலியைப்பற்றிய கவிஞரின் தேடலை விபரிக்கும் கவிதைக் காதலி எப்படியிருப்பாள் என்பது பற்றிய கற்பனையினையும் ஓட விடுகின்றது:

“புணரும் இரு கரு அரவென
புட்டம் தாண்டி நெளிந்த கூந்தல்
உதிர்ந்து நரைமேய்ந்து
விழி சூழ கருவளையம் படர்ந்து
ஊளைச்சதை தொங்க
தோல் செத்து
நிமிர்ந்த முலை தளர்ந்து
அவள்
அழகும் அடையாளங்களும்
வீழ்ந்து
அழிந்திருத்தல் கூடும்”
(‘வாடாமல்லி -3’)

கவிஞர் திருமாவளவனை எண்ணும்போதெல்லாமென் நினைவில் தோன்றுமோர் இலக்கிய ஆளுமை கலை, இலக்கியத்திறனாய்வாளரான திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள். கவிஞர் திருமாவளவன் கவிதைகள் மேல் மதிப்பும், அவர் மேல் அன்பும் வைத்திருந்தவர் வெங்கட் சாமிநாதன் அவர்கள். அவர் மறைந்தது கவிஞர் திருமாவளவனின் மறைவையடுத்த காலகட்டத்தில். திருமாவளவன் மறைந்தது அக்டோபர் 5, 2015. வெ.சா அவர்கள் மறைந்தது அக்டோபர் 20, 2015. கவிஞர் திருமாவளவன் மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவலைப் ‘பதிவுகள்’ இதழில் பிரசுரித்தபோது, அதனைக்கண்டு மனம் வருந்து அவர் எனக்கு எழுதிய மின்னஞ்சல்களை இங்கு பதிவிடுவது முக்கியமென்று கருதுகின்றேன். வெ.சா அவர்களின் மறைவுக்குக் கவிஞர் திருமாவளவனின் மறைவும் ஒரு காரணமோ என்று நான் அடிக்கடி எண்ணுவதுண்டு. அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்களில் பின்வருமாறு எழுதியுள்ளார்:

Swaminathan Venkat <vswaminathan.venkat@gmail.com>
To: ngiri2704@rogers.com

Oct. 2, 2015 at 2:08 a.m.

இப்பொழுது தான் பதிவுகள் இணையத்தில் திருமாவளவனின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக, அவரால் யாரையும் அடையாளம் கூட காணமுடியாது இருப்பதாக ஒரு அன்பர் அவரை மருத்துவ நிலையத்தில் கண்டுவந்த செய்தியை எழுதியிருந்தார்.  இது பற்றி யாரோ முகநூலில் எழுதியிருப்பதாகவும் சொல்கிறார். மனதுக்கு மிக வேதனையாக இருக்கிறது. கனடா வந்ததிலிருந்து அவருடன் பழகி மிக நெருங்கிய நண்பருமானார். சில மாதங்களுக்குமுன் அவர் நோய்வாய்ப்பட்டதாகவும் பிறகு தேறிவிட்டதாகவும் எழுதியிருந்தார். பின் என்ன ஆயிற்று.  இப்போது பதிவில் வந்துள்ள செய்தியைப் பார்த்தால், அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிட்டது போல் அல்லவா இருகிறது.

எப்படி யாரைத்தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. கனடா அன்பர்களைத் தான் கேட்க முடியும். தேவகாந்தன் email  இப்போது சட்டென கிடைக்க மாட்டேன் என்கிறது. இப்போது ஜி ,மெயிலின் சிஸ்டம் மாறியிருப்பது தெரிகிறது. தேடுவது அவ்வளவு சுலபமாக இல்லை. உங்களில் யாருக்கும் அவரது  இப்போதைய உடல் நிலை தெரியுமா? யாரும் மருத்துவ நிலையத்தில் பார்த்தீர்களா?  சில மாதங்களாகிற்று அவரிடமிருந்து செய்தி வந்து. திடீரெனெ இப்படி ஒரு செய்தியா?

அவர் சீக்கிரம் உடல் குணம் அடைந்து, முன்னர் செய்தி தந்தது போல, “நான் தேறிவிட்டேன் என்று சொல்லவேண்டும். அவர்  சீக்கிரம் உடல் நலம் பெற என் பிரார்த்தனைகள்.

அன்புடன்,
வெ.சா.
( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com

Swaminathan Venkat <vswaminathan.venkat@gmail.com>
To:ngiri2704@rogers.com

Oct. 4, 2015 at 3:23 a.m.

நன்றி, கிரிதரன். என்ன செய்வதென்று தெரியவில்லை. இம்மாதிரி செய்தி வரும் என்று யார் கண்டார்? பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? தெய்வத்திடம் நம்பிக்கை வைப்போம். மனம் செய்வதறியாது அலையாடுகிறது. அவர் மடிப்பாக்கம் வந்து சந்தித்த கணங்கள். அதிர்ச்சியும் வேதனையும் தான்…

( Venkat  Swaminathan )
www.vesaamusings.blogspot.com

அமரர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் கவிஞர் திருமாவளவன்  மேல் எவ்வளவு அன்பு வைத்திருந்தாரென்பதை எடுத்துக்காட்டவே இவற்றை இங்கு பதிவு செய்தேன். இவ்விதம் பதிவு செய்வதும் அவசியமென்றும் உணர்ந்தேன்.

“தமிழ் இலக்கியத்துக்கு, இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு , புகலிடத்தமிழ் இலக்கியத்துக்கு மற்றும் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ந்த முக்கிய படைப்பாளிகளில், கவிஞர்களிலொருவர் கவிஞர் திருமாவளவன். கூறு பொருளுக்காக, படிமச் சிறப்புக்காக, , பாவிக்கப்பட்டுள்ள மொழிக்காக அவரது கவிதைகள் எப்பொழுதும் நினைவு கூரப்படும். “

நன்றி: நடு இணைய இதழ் – http://www.naduweb.net/?p=9211&fbclid=IwAR1AYoMHPR8B5KB7OZYdHmxOImJthtkBCXNNUnaveyyURzE9mWwZik_RxZY