திரும்பிப்பார்க்கின்றேன்: கிழக்கிலங்கை மூதூரில் இழப்புகளே வாழ்வாகிப்போன மூத்த படைப்பாளி வ.அ.இராசரத்தினம் அன்பு மனைவிக்கு அவர் கட்டியது மாளிகையல்ல – இதயத்தால் படைத்தார் ஒரு காவியம்!

வ.அ.இராசரத்தினம்முருகபூபதிவீரகேசரியில்   பணியாற்றிய  காலத்தில்  அடிக்கடி  நான்  செய்திகளில்   எழுதும்  ஊரின்  பெயர்  மூதூர்.   ஒரு  காலத்தில் இரட்டை  அங்கத்தவர் தொகுதி.   தமிழர்களும்  முஸ்லிம்களும் புட்டும்   தேங்காய்  துருவலும்  போன்று  ஒற்றுமையாக  வாழ்ந்த பிரதேசம்.  அரசியல்  இந்தத்தொகுதியை சின்னாபின்னப்படுத்தியிருக்கிறது. தமிழ் – முஸ்லிம்  அரசியல்  தலைவர்களும்  அப்பாவி  பொது மக்களும்   அதிக  அளவில்  கொல்லப்பட்டிருக்கின்றனர்.  பல   தமிழ்க்கிராமங்கள்  இந்த  ஊரை   அண்மித்திருக்கின்றன. மூதூருக்கு   படகில்  செல்லவேண்டும்  என்றெல்லாம்  சிலர் சொல்லக்கேட்டுள்ளேன்.   ஆனால்,  நான்  இலங்கையிலிருந்த காலப்பகுதியில்   திருகோணமலைக்கோ   அதன்  அயல்  ஊர்களுக்கோ சென்றதில்லை.  அதற்கான  சந்தர்ப்பங்களும்  கிடைக்கவில்லை.  1965  இல்   பாடசாலை சுற்றுலாவிலும்    1978   இல் சூறாவளியின் பொழுதும்தான் மட்டக்களப்பை     தரிசித்தேன்.   இலங்கையில்  பார்க்கத்தவறிய  தமிழ் ஊர்களும்  தமிழ்க்கிராமங்களும்  ஏராளம்.  மன்னார்,  திருக்கேதீஸ்வரம்,  திருகோணமலை,  மூதூர்  என்பனவும்  முன்னர் எனது    தரிசனத்துக்கு கிட்டவில்லை. 1984   இல்  தமிழ்நாட்டுக்கு  இராமேஸ்வரம்  வழியாக சென்றவேளையிலும்    மன்னார்,  தலைமன்னார்  ரயில் நிலையங்களைத்தான்    கடந்திருக்கின்றேனே   தவிர  அந்தப் பிரதேசங்களுக்குள்   சென்று  உலாத்திவிட்டு  வருவதற்கு சந்தர்ப்பமே    கிடைக்கவில்லை. எனினும்  –  குறிப்பிட்ட  தமிழ்ப்பிரதேசங்களை   பார்க்கத்தவறிய   ஏக்கம் மனதில்   நீண்டகாலம்  இருந்தது.    அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்து  2009   இல்  போர்  முடிவுக்கு  வந்தபின்னரே 2010  இற்குப்பின்னர்    மேற்சொன்ன  தமிழ்  ஊர்களுக்கும் கிராமங்களுக்கும்    பயணித்துவருவதற்கான  வாய்ப்பு  கிட்டியது.

மூதூரில்   சம்பூர் , கிளிவெட்டி,  கட்டைப்பறிச்சான்,  பச்சநூர்  முதலான பிரதேசங்களில்   அடிக்கடி  தாக்குதல்  சம்பவங்களும் குண்டுவெடிப்புகளும்   நிலக்கண்ணி   வெடித்தாக்குதல்களும் தேடுதல் வேட்டைகளும்   நடக்கும்.   குறிப்பிட்ட  செய்திகளை   திருகோணமலை மாவட்ட   நிருபர்  இரத்தினலிங்கம்  தினமும்  தொலைபேசி ஊடாகச்சொல்வார். மட்டக்களப்பில்   நித்தியானந்தன்,    திருகோணமலையில் இரத்தினலிங்கம்,    வவுனியாவில்  மாணிக்கவாசகர்,   யாழ்ப்பாணத்தில் காசி. நவரத்தினம்   மற்றும்  அரசரத்தினம்  ஆகியோர்  தினமும் என்னுடன்   தொலைபேசி  தொடர்பில்  இருந்து  அடிக்கடி  பேசுவார்கள்.

1983   இற்குப்பின்னர்   வடக்கு –  கிழக்கு    மாகாணங்கள் உள்நாட்டுப்போரினால்    மிகவும்    மோசமாகப்பாதிக்கப்பட்ட  பிரதேசங்கள். மூதூரில்    கொட்டியாபுரப்பற்று  பற்றி  நான்   படைப்பு இலக்கியத்தில்தான்    படித்தேன்.  அதுவும்  வ.அ.இராசரத்தினம்   என்ற   ஆசிரியரின்  சிறுகதைகள்  ஊடகவே   அந்த  மண்ணின் வாசனையை   நுகர்ந்தேன். அக்கால  கட்டத்தில்  இராசரத்தினம்  பாலை   என்ற   சிறுகதையை ஒரு    சிற்றிதழில்  எழுதியிருந்தார்.  என்னை   மிகவும்  கவர்ந்த  கதை. அந்தக்கிராமத்தின்   ஆத்மாவே    சித்திரிக்கப்பட்டிருந்தது. அதற்கு    முன்னர்  வ.அ.  இராசரத்தினத்தின்  தோணி   என்ற சிறுகதைத்தொகுதியை    ( அரசு  வெளியீடு)    படித்திருக்கின்றேன். அதில்    குறிப்பிட்ட  தோணி   என்ற  தலைப்புக்கதையை    மாக்ஸிம் கோர்க்கியின்   சந்திப்பு  என்ற    சிறுகதையுடன்  ஒப்பிட்டுப்பேசினார்கள்   சில  எழுத்தாளர்கள்.  அதனால்  சந்திப்பு சிறுகதையையும்  தேடி  எடுத்து  வாசித்தேன். யார்… யார்… எங்கேயிருந்து  கதைகளை   தழுவினார்கள்  என்று பூதக்கண்ணாடி   வைத்துப்பார்த்து  கருத்துக்களை   சொல்லும்  பலரும் அதே  வேலையாக  இருந்தனர்.  அவர்களில்  சிலர்  எழுத்தாளர்கள். புதுமைப்பித்தனின்   சில கதைகள்,   டொமினிக்ஜீவாவின்  பாதுகை சிறுகதை   மாத்திரம்  அல்ல  எனது  அந்தப்பிறவிகள்  கதை (பூரணியில்  1972   இல்   வெளியானது)   பற்றியும்  இவ்வாறு கருத்துக்கள்   வந்தன.   எழுதப்பட்டன.

இன்று   இந்நிலை  இல்லை.  காரணம்  இன்றைய  வாசகர்கள் அன்றுபோல்   வாசிப்பது  குறைவு.  எழுத்தாளர்கள்  கூட  சக எழுத்தாளர்களின்   படைப்புகளை   வாசித்து  கருத்துச்சொல்லும் மனப்பான்மை    குறைந்துவிட்டது. இராசரத்தினம்  1925   ஆம்   ஆண்டு  மூதூரில்  பிறந்தார்.  இன்று  அவர் இருந்திருப்பின்   90    வயதை கொண்டாடியிருப்பார்.   ஆனால்,  அதெல்லாம்   சாத்தியமில்லாமல்  போனதற்கு  போரும்  முக்கிய காரணம்  என்றுதான்  கருதுகின்றேன்.   மூதூர்,  கட்டைப்பறிச்சான், சம்பூர்,   கிளிவெட்டி  முதலான  ஊர்களும்  நீடித்த  போரில்  பெரிதும் பாதிக்கப்பட்டன.   இராசரத்தினம்  அவர்களின்  சேகரிப்பிலிருந்த பெறுமதியான    நூல்களும்  தீக்கிரையாகின.  வீடிழந்து  இடம்பெயர்ந்து…. இடம்பெயர்ந்து…  வாழ்ந்தார்.  அதனால்    அவரது வீட்டிலிருந்த    அச்சுக்கூடமும்  அழிந்தது.  முதலில்    மனைவியையும் இழந்தார்.       ஒரு    தாக்குதல்  சம்பவத்தில்    தனது  அருமை மகளையும்    மருமகனையும்  பறிகொடுத்தார்.

ஆயுதப்படையினர்  தாக்கி  அழித்தது  மனித  உயிர்களை   மட்டுமல்ல,    வீடுகளை,    உடைமைகளை,    பெறுமதியான சொத்துக்களை மட்டுமல்ல  நூலகங்களையும்    பாடசாலைகளையும் தேவாலயங்களையும்    மாத்திரமல்ல,  நோயளிகளை எடுத்துச்செல்லும்  அம்புலன்ஸ்  வண்டிகளையும்  தாக்கின. இராசரத்தினத்தின்   மகள்  நோயுற்று  எடுத்துச்செல்லப்பட்ட அம்புலன்ஸும்   தாக்கப்பட்டு   அவர்  கொல்லப்பட்டார்.   அச்சமயம் அவரது  கணவரும்  ( இராசரத்தினத்தின்  மருமகனும் ) கொல்லப்பட்டார்.   ஒரே   நாளில்  ஒரே  குடும்பத்தில்  இரண்டு பேரிழப்பு. இத்தனை   அவலங்களையும்  சுமந்துகொண்டு  வாழ்ந்தவர்  தமது  90 வயதுக்கு    முன்பே  மறைந்தது  வியப்பானது  அல்ல. அவர்   வாழ்நாள்  பூராவும்  ஒரு கனவில்  வாழ்ந்தவர்.    தனது மனைவிக்கு   முன்னர்  தான்போய்ச்சேர்ந்திடவேண்டும்  என்ற எண்ணத்தில்    இருந்தவர்.    தனக்கு  ஊணும்  உபசரிப்பும்  தந்து பாசமும்   பொழிந்த  அவரது  மனைவி   அத்துடன்  நிற்கவில்லை. இராசரத்தினத்தின்    இலக்கியப்பணிகளை   தொடர்ச்சியாக  நினைவில் வைத்திருந்தவர்.    அவரது  படைப்புகள்  பத்திரிகைகள் –  இதழ்களில் வெளியானதும்   அவற்றின்  நறுக்குகளையெல்லாம்  சேகரித்து பாதுகாத்தவர்.

ஒரு   அந்தரங்க  செயலாளராகவே   திருமதி  மேரி  லில்லி  திரேசா இராசரத்தினம்    விளங்கினார்.  அவரையும்   –  தனக்காக  அவர் சேகரித்து    பாதுகாத்த  இலக்கிய   உடைமைகளையும்    பறிகொடுத்து நிர்க்கதியானவர்   இராசரத்தினம்.  அந்தச்சோகத்தை    பின்னாளில் பின்வருமாறு   எழுதுகின்றார்  இராசரத்தினம்.

” கற்பவைகளையெல்லாம்  கற்றபின்னர்    நினைவில்    மீந்திருப்பதே கல்வி ”  என்றானாம்   ஒரு  கல்வியியல்  விற்பன்னன்.   என் இலக்கியப்பயணத்திலும்   மீதியாக  நினைவில்  நிற்பவையே நிலைக்கட்டும்”    என்ற  எண்ணம்  மீதூர  நினைவில்  நின்றவற்றையே    எழுதினேன். சில  இதழ்களின்  பெயர்கள் நினைவுக்கு   வரவில்லை.    சிலரது  பெயர்களும்  நினைவுக்கு வரவில்லை.    யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கலாம். ஆனால்,  அதைச்செய்ய  விரும்பவில்லை.  என்  நினைவுகளை நினைத்து    நினைத்து  எழுதினேன்.   அதனால்  இந்நினைவுகளில் வரும்   ஆண்டுகள்  சற்று  முன்பின்னராக  இருக்கலாம்.   ஆனால், நினைவுகளில்   சத்தியம்  இருக்கிறது. இத்தருணத்தில்    காலஞ்சென்ற   என்  மனைவியை   நினைக்கின்றேன். செம்மீனை  எழுதிய  தகழி  சிவசங்கரன்  பிள்ளையிடம்,  ”  இத்தனை பேரும்  புகழும்  பெற்றுவிட்டீர்களே…  இன்னமும்  உங்களது  ஆசை என்ன…?”  என்று   கேட்டாராம்  ஒரு  இலக்கிய  அன்பர். வலது  கையிற்  கள்ளுக்கோப்பையை   பிடித்தபடி  இடது கைவிரல்களினாற்   தன்  தலைச்சிகையைப்பின்னுக்கு  கோதியபடியே  தகழி  அமைதியாகச்சொன்னாராம்   ” என்ர கறுத்தம்மை   மரிக்கு   முதல்  ஞான்   மரிக்கணும்” ( தகழியின்  செம்மீன்  நாவலின்  கதாநாயகியின்  பெயரும் கருத்தம்மை)  பாட்டுக்கலந்திடப்பத்தினிப் பெண் கேட்டான்  பாரதி.   ஒரு எழுத்தாளனுக்கு   மனைவியின்  தேவையைச்  சரியாக அளந்தறிந்துதான்   தகழியும்  சொல்லியிருக்கிறார்.  என்  மனைவி மட்டும்    இருந்திருந்தால்  என்   கட்டுரைகளில்  ஆண்டுகள்  சரியாக அமைந்திருக்கும்,    ஏன்   மாதம்  தேதி  கூட  சொல்லியிருப்பாள். அதனால் என்ன…?  சத்தியம்  இருக்கிறது.   அதுபோதும்.

தமது   இலக்கிய  நினைவுகளை   1994  ஆம்  ஆண்டு   எழுதியிருக்கும் இராசரத்தினம்   குறிப்பிட்ட  இந்த  நூலில்தான்  மேற்சொன்ன சத்தியவாக்குகளை  பதிவுசெய்துள்ளார்.    ஏற்கனவே   மறைந்துவிட்ட தமது   மனைவியை   இந்த  நூலில்  நினைவுபடுத்துகிறார்.   அவரது சத்தியவரிகள்   எம்மை   நெகிழ்ச்சியூட்டுபவை.

மனைவியின்    மறைவுக்குப்பின்னர்  அவர்   வீரகேசரியில்  எழுதிய தொடர்கதைதான்   ஒரு  காவியம்  நிறைவேறுகிறது.    அதில் அவருக்கும்   அவரது  மனைவிக்கும்  இடையே   நீடித்த  இறுக்கமான பாசம்   இழையோடுகிறது.    அவர்  மனைவிக்கு  மாளிகை கட்டவில்லை.    மனதிலும்  நினைவுக்  கோட்டை    எழுப்பவில்லை. ஆனால்  இதயத்தால்   படைத்தார்  ஒரு  காவியம்.  இராசரத்தினம்   அவர்களை   எதிர்பாராதவிதமாக  கொழும்பு விவேகானந்த   சபை   மண்டபத்தில்  நடந்த  ஒரு இலக்கியக் கூட்டத்தில்தான்   முதல்  முதலில்   சந்தித்தேன்.    அவர் எமது    முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்திலிருந்து அந்நியப்பட்டிருந்தார்.   ஏற்கனவே  கொழும்பு  சாகிராக்கல்லூரியில் நடந்த    சங்கத்தின்  மாநாட்டில்  எஸ்.பொ.வுடன்  இணைந்து வெளியேறியவர்    இராசரத்தினம்.  ஆனால் –  அக்கால   கட்டம்    எனது மாணவப்பருவம்.    எனினும்  1970  இற்குப்பின்னர்  பல இலக்கியப்புதினங்களை   அறிந்தபொழுதுதான்   அவரது  கதைகளையும்   படித்து  அவர்  பற்றிய  தகவல்களும் தெரிந்துகொண்டேன்.   அவரது  பாலை   சிறுகதையை   படித்தது முதல் அவரைத்    தேடிக்கொண்டிருந்தேன். அவருடனான   முதல்  சந்திப்பிலும்  அதிகம்  உரையாடுவதற்கு சந்தர்ப்பம்   கிடைக்கவில்லை.

மீண்டும்  1986    இல்    எதிர்பாராதவிதமாக  அவரை    நீர்கொழும்பில் கடற்கரை    வீதியில்    சந்தித்தேன்.    அச்சமயம்  மகாகவி உருத்திரமூர்த்தியின் மூத்த  புதல்வர்    பாண்டியன்    தமது  உக்ரேய்ன் மனைவியுடனும்   குழந்தை  எல்லாளனுடனும்  மாஸ்கோவிலிருந்து இலங்கை வந்து  எமது  வீட்டுக்கும்  வந்திருந்தார். ஒருநாள்    அவருடன்  சைக்கிளில்  கடற்கரைக்குச்சென்று  மீன் வாங்கிக்கொண்டு    வரும்  வழியில்  இராசரத்தினத்தை   சந்தித்தேன். அவர்    தமது  நண்பர்  ஒருவரை  சந்திப்பதற்காக  அவசரப்பயணம் வந்து   பஸ்  நிலையத்திற்கு  திரும்பிக்கொண்டிருந்தார். முதலில்   அவரால்  என்னை    அடையாளம்  கண்டுகொள்ள முடியவில்லை.    உடனிருந்த  மகாகவியின்  புதல்வரையும் அறிமுகப்படுத்தியதும்   அவரது  முகம்  பிரகாசமடைந்தது.

வீட்டிற்கு   அழைத்து வந்து  உபசரித்தபொழுது  சாகவாசமாக பேசக்கிடைத்தது.   நான்  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்துடன் இணைந்திருப்பதும்  மல்லிகையில்  அடிக்கடி  எழுதுவதும்  அவருக்கு நன்குதெரியும்.  எனது  நீர்கொழும்பு  பிரதேச  மீனவ  மக்களின் கதைகளை   படித்துவிட்டு  தானும் என்னைத்தேடிக்கொண்டிருந்ததாகவும்   அம்மக்களின்    பேச்சுவழக்கு   தம்மை   கவர்ந்திருப்பதாகவும்  சொன்ன  அவர்,  நான் குறிப்பிட்ட   மீனவ  சமூகத்தை   சேர்ந்தவனாக  இருக்கவேண்டும் என்றும்    நம்பிக்கொண்டிருந்திருக்கிறார்.    எனினும் –  எனது   பெயர் அவருக்கு    புதுமையாக  இருந்ததாகவும்  சொன்னார். எனது    குடும்பப்பின்னணியை   அறிந்ததும்,  கடலின்  கரையில் நின்று கொண்டு    கடலுக்குள்  நடப்பதை    இலக்கியத்திற்குள் கொண்டுவருவதில்   இருக்கும்     கஷ்டங்களையும்    சொன்னார். படைப்பாளி    தான்  வாழும்  சூழலை    சித்திரிக்கவேண்டும்.  சித்திரிக்கும்   பாத்திரங்கள்  வாழும்  மண்ணின்   வாசனையை படைப்புகளில்   நுகரச்செய்யவேண்டும்.  அதுவே  யதார்த்த இலக்கியம்  என்றும்  சோஷலிஸ    யதார்த்தப்பார்வை   அது… இது… என்று    விமர்சகர்கள்  உமது  சிந்தனையையும்  கற்பனை வளத்தையும்    சிதறடித்துவிடுவார்கள்.  கவனம்…. என்றும்  ஒரு தந்தையைப்போன்று    ஆலோசனைகள்    கூறினார்.

மல்லிகை    ஜீவாவுடன்  கருத்தியலில்  தனக்கும்  முரண்பாடுகள் இருந்தாலும்   அவர்  மல்லிகை    ஊடாக  நீர்கொழும்பு,    திக்குவல்லை,    அநுராதபுரம்,   மன்னார்  பிரதேச படைப்பாளிகளுக்கு களம்   தந்து  இந்தப்பிரதேச  மண்வாசனையை    வாசகர் தெரிந்துகொள்வதற்கு    வழிவகை  செய்துள்ளார் –  என்று  ஜீவாவுக்கு சான்றிதழ்    வழங்கவும்  அவர்  தவறவில்லை.

இராசரத்தினம்    மல்லிகையின்  1979  ஜூன்   இதழ்    முகப்பினை அலங்கரித்தவர்.    வழக்கமாக  மல்லிகைஜீவா  அவ்வாறு  ஒருவரை பாராட்டி   முகப்பு  அட்டையில்  கௌரவிக்கும்பொழுது  எவரையும் தூண்டி  குறித்த  கௌரவத்துக்குரியவர்  பற்றி  அதே  மல்லிகை இதழில்  எழுதவைப்பார்.ஜீவா   பலரிடம்  படம்  கேட்டு  அலைவதும்   குறிப்புகள்  எழுதுவதற்கு ஆட்களைத்தேடுவதும்   நான்   நேரில் கண்ட  காட்சிகள்.   ஆனால் , படங்கள்  கிடைத்தாலும்  குறிப்புகள்  எழுதுவதற்கு  பொருத்தமான ஆட்கள்   கிடைக்கமாட்டார்கள்.   இதனால்  ஜீவா சலிப்படைந்துமிருக்கிறார். இறுதியில்   அவரே  எழுதிவிடுவார்.  அதனால்  அவசரக் குறிப்புகளைத்தான்   காணமுடிந்திருக்கிறது.    இராசரத்தினம் விடயத்திலும்  அதுதான்  நடந்தது.  இராசரத்தினத்தின்  படைப்புகளை மதிப்பீடு   செய்யும்  குறிப்புகளை    அந்தப்பதிவுகொண்டிருக்கவில்லை. இராசரத்தினத்தை   நன்கு  தெரிந்தவர்கள்  எழுதியிருக்கவேண்டும்.

ஜீவாவின்  குறிப்பு  மேம்போக்காக  சிறு  அறிமுகமாகவே வெளியானது   வருத்தமளித்தாலும்,  அதனையிட்டு  நாம்  ஜீவாவை குறைசொல்ல    முடியாது.  எனினும்  ஜீவா   அந்தக்குறிப்பின் இறுதியில்   தமது  ஆதங்கத்தையும்  இவ்வாறு  தெரிவித்துள்ளார்:- ” புதிய  தலைமுறையினருக்கு  இராசரத்தினத்தின்  படைப்பகளில் கணிசமான  பகுதி  இன்னமும்  தெரிந்திருக்கவில்லை.    நமது விமர்சகர்கள்  இதுவரையில்  செய்திருக்காதது  இதற்கொரு காரணமாகும்.  இவரது  ஆற்றல்  மதிக்கப்படவேண்டியதொன்றாகும். “

இராசரத்தினமும்   இலக்கியத்தில்  பல்துறைகளிலும்  ஈடுபட்டவர். ஆசிரியப்பணியில்   இருந்தவாறே  வீட்டில்  ஒரு  அச்சுக்கூடம்  வைத்து   தமது நூல்களை   பதிப்புச்செய்தார்.  இன்றுபோல அக்காலத்தில்   கணினி   இல்லை.  வெள்ளீய  அச்செழுத்துக்களை கோர்த்து    அச்சிடும்  காலத்தில்  அவர்  தமது  நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

அவரது   கிரௌஞ்சப்பறவைகள்  –   ஒரு  காவியம்  நிறைவேறுகிறது  முதலான  நாவல்கள்  வீரகேசரி  பிரசுரமாக   வெளியானவை.  அவரது நூல்கள்  சில  பின்வருமாறு:    துறைக்காரன்     -கொழுகொம்பு    – கிரௌஞ்சப் பறவைகள்   –  ஒரு  வெண்மணற்  கிராமம்  காத்துக் கொண்டிருக்கின்றது   –  ஒரு   காவியம்  நிறைவு பெறுகிறது  –   (நாவல்)     தோணி   (சிறுகதைத் தொகுதி)   பூவரசம்  பூ  (மொழிபெயர்ப்புக் கவிதை)   மூதூர்   புனித  அந்தோனியார்  கோயிலின்  பூர்வீக  வரலாறு   (சரித்திரம்)    இலக்கிய  நினைவுகள்    ( கட்டுரைகள்) இராசரத்தினம்   மறைந்த பொழுது  நான்  அவுஸ்திரேலியாவில் இருந்தேன்.    அவரது  மறைவுச்செய்தி  அறிந்ததும்  அவரது  வீட்டு தொலைபேசி  இலக்கம்  தேடி   எடுத்து  தொடர்புகொண்டு  அவரது உறவினர்களிடம்  எனது  ஆழ்ந்த  அனுதாபங்களைத்தெரிவித்தேன்.

சுநாமி  கடற்கோள்  அநர்த்தத்தின்பொழுது  கிழக்கு  மாகாணத்திற்கு உதவி   நிவாரணப்பொருட்களுடன்  சென்றவேளையில்  ஒருநாள் இரவு    திருகோணமலையை    வந்தடைந்தேன்.  அங்கே  அதே   இரவு திருகோணமலை  மாவட்ட  இந்து  இளைஞர்   பேரவைச்செயலாளரும்    எனது  நீண்ட கால  நண்பருமான  செல்லப்பா  சிவபாத சுந்தரம்  அவர்களை   சந்தித்து உரையாடியபொழுது  பேச்சுவாக்கில்  வ. அ. இராசரத்தினம்   பற்றியும் குறிப்பிட்டேன்.   உடனே   அவர்  உங்களுக்கு  அவரைத்தெரியுமா…? எனக்கேட்டார். எனக்கு    தெரிந்தவற்றைச்சொன்னேன். உடனே  வீட்டினுள்ளே   சென்று  இராசரத்தினம்  எழுதி   இறுதியாக பதிப்புச்செய்யப்பட்ட    இலக்கிய  நினைவுகள்  நூலை   எடுத்துவந்து தந்தார்.  சிவபாத சுந்தரம்  ஒரு   நூலகர்.  பன்குளம்  பிரதேச நூலகத்திலும்   பணியாற்றியவர்.   சிறந்த  சமூகப்பணியாளர்.   1988 -1992காலப்பகுதியில்  அவுஸ்திரேலியாவில்  இயங்கும்  எமது இலங்கை    மாணவர்  கல்வி  நிதியத்தின்  மாணவர் கண்காணிப்பாளராகவும்   செயற்பட்டவர். அவர்   அங்கம்  வகிக்கும்  அன்பர் நிதியம்   என்ற   அமைப்பே குறிப்பிட்ட   நூலை   வெளியிட்டது.   போர்க்காலத்தில்  அடிக்கடி இடம்பெயர்ந்துகொண்டிருந்த   இராசரத்தினம்  நிம்மதியாகவும் அமைதியாகவும்    இருந்து  அந்த  நூலை   எழுதுவதற்கு  கிடைத்த இடம்    திருகோணமலை   நகரசபை   நூல் நிலையத்தின் ஒதுக்குப்புறமான    மேல்மாடிதான்.

இந்நூலுக்கு   முன்னுரை   எழுதியிருப்பவர்  தகைமைசார்  பேராசிரியர்   கிழக்கு  பல்கலைக்கழகத்தின்  முன்னாள் கலைப்பீடாதிபதி    மௌனகுரு.”  அறுபது  ஆண்டுகளே  மனிதர் வாழ்வின்  சராசரி வயதெனக்கொண்டால்   அவர்களது  அறுபதாவது  ஆண்டில்  எஞ்சி நிற்பவை  அவர்கள்  ஆற்றிய  செயல்களும்  அதற்கும்  மேலாக அச்செயல்களால்   அவர்கள்  பெற்ற  அனுபவங்களுமே.   இந்த அனுபவங்களே   வாழ்க்கை   பற்றி  கருத்துரு  ஒன்றை   அவர்களுக்குள் தோற்றுவிக்கின்றன ”    என்னும்   பேராசிரியர் மௌனகுருவின்   கூற்று  அர்த்தமும்  ஆழமும்  மிக்கது. 1925   இல்   பிறந்து  1946  இல்  தமது  21   வயதில்  இலக்கியப்பிரதிகளை   எழுதத்தொடங்கிய  வ.அ. இராசரத்தினம்  தமது   மறைவு வரையில்  எழுதிக்கொண்டே   இருந்தார்.   தினக்குரல் ஞாயிறு   இதழில்  பொச்சங்கள்  என்ற  தலைப்பிலும்  அவர் இறுதியாக  நீண்ட  தொடரை    எழுதி  ஓய்ந்தார்.   சென்னை  மித்ர  வெளியீடு  இராசரத்தினத்தின்  துறைக்காரன் நாவலை  அழகாக  வெளியிட்டிருக்கிறது.

அவருடைய    படைப்பு  இலக்கியங்கள்  குறித்த  முழுமையான மதிப்பீடுகள்   எதிர்காலத்தில்  வெளியாகவேண்டும். பல்கலைக்கழகங்களில்   தற்காலத்தில்  பணியாற்றும்  தமிழ்த்துறை பேராசிரியர்கள்    இராசரத்தினத்தை   இன்றைய  மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி  ஆய்வுகளில்  ஈடுபடுவதற்குத்   தூண்டலாம். வாழ்க்கையில்   போராடி  போராடி   –  இழப்புகளை   எதிர்கொண்டவாறே நினைவுகளை  தந்து   மறைந்த  வ.அ. இராசரத்தினத்தின் படைப்புகளும்   அவர்தம்  நினைவுகளும்தான்   எம்மிடம் எஞ்சியிருக்கின்றன.

letchumananm@gmail.com