திரும்பிப்பார்க்கின்றேன்: கருத்தியல் போராட்டம் நடத்தி களைத்துப்போனவர் ஓய்வு பெறட்டும்! சிவாசுப்பிரமணியம் நினைவுப்பகிர்வு!

” இந்தக்கடிதத்தில்  குறிப்பிட்டுள்ள  பெயருக்குரியவனை உமக்குத்தெரியுமா ? “

” தெரியாது. “

” உமக்கு எத்தனை மொழிகள் தெரியும் ?”

” தமிழ், ஆங்கிலம், சிங்களம் தெரியும்.”

” எப்படி  உம்மால்  இந்த  மூன்று  மொழிகளிலும் சரளமாகப்பேசமுடிகிறது”

” நான்  இலங்கையன்.  இம்மூன்று  மொழிகளும்  இங்கே பேசப்படுபவை.   அதனால்  கற்றேன்.  பேசுகின்றேன்”

” எவ்வாறு  இந்த  மொழிகளில்  உமக்கு  பேசும்  ஆற்றல்  வந்தது.”

”  நான்  தமிழன்.   அதனால்  தமிழ்  பேசுகின்றேன். சிங்கள இலக்கியவாதிகளைத்தெரியும்.  சிங்கள  இலக்கியமும் தெரியும். சிங்கள  நண்பர்களும்  எனக்கு  இருக்கிறார்கள்.  ஆங்கிலத்திலும் படித்திருக்கின்றேன். அத்துடன்   நான்  ஒரு  அரசாங்க  ஊழியன்”

” உமக்கு  மொழிபெயர்க்கத் தெரியுமா?”

” ஆம்.  தெரியும்.   எழுத்தில், மேடைகளில் மொழிபெயர்த்திருக்கின்றேன்”

” அப்படியா..? ஏன் உம்மை இங்கே தடுத்துவைத்திருக்கின்றோம் என்பது தெரியுமா?”

” தெரியாது.”

” இந்தக்கடிதம்  முக்கியமானதா?  இதில் சிவப்பு கோட்டினால் அடையாளம்  இடப்பட்டுள்ளவனின்  பெயர் உமக்குத்தெரியாதா?”

 

” முக்கியமான   கடிதமாகத் தெரியவில்லை. யாரோ யாருக்கோ எழுதிய சுகநலன் விசாரிக்கும் கடிதம்தான். அதில் நீங்கள் சுட்டிக்காட்டும்  பெயருக்குரியவனை  எனக்குத்தெரியாது”” தோழர் என்றால் என்ன அர்த்தம்”

” தமிழிலா அல்லது எந்த மொழியில் ?”

” உமக்குத்தெரிந்த மொழிகளில் தோழர் என்பதற்கு அர்த்தம் சொல்லும்”

”  தோழர் – தமிழ் சொல். சிங்களத்தில்   சகோதரயா,  ஆங்கிலத்தில் Comrade. ‘ஓ—  Comrade !!!   இடதுசாரிகள்  பாவிக்கும்  சொல்தானே இது ? “

”  எவரும்  பாவிக்கலாம்.  நீங்களும் பாவிக்கலாம்”

இந்த விசாரணை சுமார்  33 ஆண்டுகளுக்கு  முன்னர் கொழும்பின் புறநகர்  பொலிஸ்நிலையம்  ஒன்றில்  சில  நாட்கள்  தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டவரிடம்  கேட்கப்பட்ட  கேள்விகளும்  அதற்கு  அவர் சொன்ன  பதில்களும்தான். இவ்வாறு  விசாரிக்கப்பட்டவர்  கடந்த  மே  மாதம்  29  ஆம்  திகதி யாழ்ப்பாணத்தில்  கோண்டாவிலில்  மறைந்துவிட்டார். அவர்தான்   எனது  அன்பிற்கும்  அபிமானத்திற்குமுரிய  தோழர் சிவா சுப்பிரமணியம்.

1959  ஆம்  ஆண்டு  தான்  கல்வி  கற்ற  கல்லூரியின்  பல்கலைக்கழக புகுமுக  வகுப்பு  மாணவர்  சங்கத்தின்  அழைப்பை  ஏற்று  “அகிலத்தில்  வல்லரசுக்  குமுறலும்  அமைதி  காண  வழிகளும்” என்ற  தலைப்பில்  உரையாற்றவந்திருந்த  இடதுசாரித் தோழர் வி. பொன்னம்பலம்   அவர்களின்  நீண்ட  உரையைக்கேட்டு கம்யூனிஸக்கருத்துக்களில்  ஈர்க்கப்பட்டு,  அன்று  முதல் இடதுசாரியாகிய   தோழர்  சிவா சுப்பிரமணியம்  அவர்கள் இலக்கியவாதி,   மொழிபெயர்ப்பாளர்,  பத்திரிகையாளர்  ஒரு காலகட்டத்தில்   இலங்கை  கம்யூனிஸ்ட்  கட்சியின்  அர்ப்பணிப்பு  மிக்க தொண்டன்.

இவற்றுக்கு  அப்பால்  எனது  குடும்ப நண்பர்.  அவருடைய  மறைவை சொந்தச் சகோதரனின்  இழப்பாகவே  கருதுகின்றேன்.  அன்று  அவர் பொலிஸ்நிலையத்தில்  தடுத்துவைக்கப்பட்டு  மாற்றுடையும் தரப்படாமல்   சில  நாட்கள்  விசாரிக்கப்பட்ட வேளையில்  அவர் தெரிந்தும் –  தெரியாது  என்று  சொன்ன  அந்தப்பெயருக்குரிய  தோழன்தான்   தற்பொழுது  இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கின்றேன். என்னைக் காப்பாற்றிய  தோழருடன்  எனக்கு  அறிமுகம்  ஏற்பட்டது 1975 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம்  திகதி  என்பது  நினைவில்  நன்கு பதிந்துள்ள  திகதியாகும்.

தோழர் சிவாசுப்பிரமணியத்தை  1959  இல்  ஆகர்சித்த  தோழர் வி.பொன்னம்பலம்   அடிக்கடி  சொல்லும்  ஒரு   வசனம்: ‘My memory never fails me.”

என்னை  1975  இல்  ஆகர்சித்த  தோழர்  சிவாசுப்பிரமணியம்  பற்றி நினைத்துப்பார்க்கும்  இத்தருணத்தில்  அந்த  வசனம்தான்  நினைவுக்கு வருகிறது. அந்த 1975 மே மாதம் 31 ஆம் திகதிதான் தோழர்கள் சிவாசுப்பிரமணியத்தையும்  வி.பொன்னம்பலத்தையும் பண்டாரநாயக்கா   ஞாபகார்த்த சர்வதேச  மாநாட்டு  மண்டபத்தில் முதல்  முறை  சந்தித்தேன். எமது  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தினால்  நடத்தப்பட்ட  தேசிய இனப்பிரச்சினைக்கு   தீர்வாக  முன்வைக்கப்பட்ட  12  அம்சத்திட்டத்தை   வலியுறுத்திய  இரண்டுநாள்  மாநாட்டில்  சிவா சுப்பிரமணியம்   சலிப்பேயின்றி  பல  சிங்களத்தலைவர்கள்,   சிங்கள எழுத்தாளர்களின்    உரைகளை  தமிழில்  மொழிபெயர்த்தார்.

அன்றைய  பிரதமர்  ஸ்ரீமாவோ  பண்டாரநாயக்கா,   அமைச்சர்கள்  டி. பி. இலங்கரத்தினா,    பீட்டர்கெனமன்,  வாசுதேவ  நாணயக்கார, எஸ்.கே. சூரியராச்சி,    டி.பி. தென்னக்கோன்,  செல்லையா  குமாரசூரியர்,   சிங்கள  எழுத்தாளர்கள்  குணசேனவிதான,   கே. ஜயத்திலக்க,    ஆரியரத்ன  விதான  உட்பட  நாடெங்குமிருந்து  வருகை  தந்திருந்த  மூவினத்து  எழுத்தாளர்களும்  பேராசிரியர்களும் கலைஞர்களும்   கலந்துகொண்ட  அந்த இரண்டு  நாள்  மாநாட்டில் சிவா சுப்பிரமணியம்   எனக்கு  அறிமுகமானாலும்,   ஏற்கனவே அவருடைய    எழுத்துக்களை  1972  முதல்  மல்லிகையிலும் கம்யூனிஸ்ட்  கட்சியின்  இதழ்கள்  தேசாபிமானி,  புதுயுகம் முதலானவற்றிலும்    படித்திருக்கின்றேன்.

கட்சி   இதழ்களில்  தமது  மகன்  மதுசூதனன்  பெயரில்  உலைக்களம் என்ற   தலைப்பில்  தொடர்ந்து  அரசியல்  பத்தி  எழுத்துக்களை வரவாக்கிக்கொண்டிருந்தார். மல்லிகையில்   கட்டுரைகளுடன்  சிறந்த  சிங்களச்சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பையும்   எழுதினார். அவ்வாறு   இவரால்  மொழிபெயர்க்கப்பட்ட  சிறந்த  சிறுகதைதான் குணசேனவிதான   எழுதிய ‘ பாலம.’ இன நல்லுறவை   வலியுறுத்திய  இச்சிறுகதையை  சிவா சுப்பிரமணியம்   அழகாக  மொழிபெயர்த்திருந்தார்.  பின்னாளில் அச்சிறுகதை  ஆங்கிலத்திலும்  மொழிபெயர்க்கப்பட்டது. அதனை   ஆங்கிலத்தில்  படித்திருந்த  ஜெயகாந்தன்  தாம் ஆசிரியராக  பணியாற்றிய  மாதம்  ஒரு  நாவல்  திட்டத்தில் வெளியான   கல்பனா  மாத  இதழில்  மீண்டும் தமிழ்ப்படுத்தியிருந்தார்.   கல்பனா  இதழை  தமிழ் நாடு  என்.சி.பி.எச் பதிப்பகம்   வெளியிட்டது.

சிவாசுப்பிரமணியம்   வடபிரதேச  கம்யூனிஸ்ட்  கட்சியில் அங்கம்வகித்த   காலப்பகுதியில்  பலதடவைகள்  கட்சி அலுவலகத்திலும்  சந்தித்திருக்கின்றேன்.  இலங்கை  இந்திய  சர்வதேச   அரசியல்  விவகாரங்கள்  பற்றிய  நுண்ணிய அறிவு அவரிடமிருந்ததை  பல  சந்தர்ப்பங்களில்  அவதானித்திருக்கின்றேன். அவர்   தமது  வாசிப்பு  அனுபவங்களை  பகிர்ந்துகொள்வார்.  தேடல் மனப்பான்மை  அவருக்கிருந்தமையால்  மும்மொழிகளிலும்  சிறப்பாக பேசும்  ஆற்றலும்  பெற்றிருந்தார். இந்த  ஆற்றல்தான்  அவரை  விசாரித்த  புலனாய்வுப்பிரிவினரின் கண்களை  உறுத்தியிருக்கிறது.

கம்யூனிஸ்ட்  கட்சி  சர்வதேச  அரசியல்  மாற்றங்களினால் இலங்கையிலும்   இந்தியாவிலும்  இரண்டாகப் பிளவடைந்தது. அந்தப்பிளவு  பின்னரும்  தொடர்ந்தது.

“மாஸ்கோவிலும்  பீக்கிங்கிலும்  மழை  பெய்தால்  இவர்கள் இலங்கையில்   குடைபிடிப்பார்கள் ” என்று  தமிழ்த்தேசியவாதிகளும் சிங்கள  முதலாளித்துவ  வலதுசாரி  அரசியல்வாதிகளும்  அன்று  மேடைகள்தோறும்  இடதுசாரிகளை  எள்ளிநகையாடிக்கொண்டிருந்த காலத்தில்  தோழர்  பொன். கந்தையா,  பருத்தித்துறை  தொகுதியில் கம்யூனிஸ்ட்  கட்சியின்  சார்பில்  இலங்கை  பாராளுமன்றத்தில் தெரிவாகியிருந்தார். ஆயினும்   எமது  இலங்கை  கம்யூனிஸ்ட்டுகளினால்  தொடர்ந்து அத்தகைய  பிரதிநிதித்துவங்களை தக்கவைத்துக்கொள்ளமுடியவில்லை. இலங்கை  கம்யூனிஸ்ட்  கட்சி  ஒரு  தடவையல்ல  பல  தடவைகள் அணி அணியாக  பிளவடைந்திருக்கிறது. பீக்கிங்   சார்பு  கம்யூனிஸ்ட்  கட்சியும்  சண்முகதாசன்  அணி கார்த்திகேசன்   அணி  என்று  பிளவுபட்டது. மாஸ்கோ  சார்பு  கம்யூனிஸ்ட்  கட்சியும்  ஒரு  சந்தர்ப்பத்தில்  பீட்டர் கெனமன்   அணி,  விக்கிரமசிங்கா  அணி  என்று  பிளவுபட்டது.

இத்தகைய பிளவுகளின்போது  பல  முற்போக்கு  எழுத்தாளர்களும் பிரிந்து  நின்று  இயங்கினார்கள்.  இலக்கிய  முகாம்களில் முற்போக்கு  எழுத்தாளர்  சங்கமும்  பிளவுபட்டது. டானியல்,   ரகுநாதன்,  சில்லையூர்  செல்வராசன்,  சுபத்திரன், நந்தினிசேவியர்,   நல்லை  அமிழ்தன்,  புதுவை ரத்தினதுரை,  டானியல் அன்ரனி,   தேவி  பரமலிங்கம்,  வி.ரி. இளங்கோவன்  சண்முகதாசன் சார்பு  நிலைஎடுத்தார்கள்.  ஆனால் , இளங்கீரனும்  எச்.எம்.பி. மொஹிதீனும்  கைலாசபதியும் நீர்வைபொன்னையனும்  மல்லிகை  ஜீவாவும்  முற்போக்கு எழுத்தாளர்  சங்கத்தில்  தொடர்ந்து  இணைந்திருந்தனர்.

கொழும்பில்  நடந்த  கம்யூனிஸ்ட்  கட்சியின்  (மாஸ்கோ)  மாநாட்டில் மிதவாதிகள் –  தீவிரவாதிகள்  என்று  இரண்டு  அணிகள் உருவானபொழுதும்  சில  எழுத்தாளர்களும்  பிளவுபட்டார்கள். பி.இராமநாதன்,   பிரேம்ஜி  ஞானசுந்தரன்,  அகஸ்தியர் முதலானோருக்கும்   டொமினிக்ஜீவா,  சிவா சுப்பிரமணியம், ஆகியோருக்கும்   மத்தியில்  கருத்து  ரீதியான  முரண்பாடுகள் தோன்றின. இவ்வாறு   ஒவ்வொரு  எழுத்தாளர்களும்  தொடர்ச்சியாக முரண்பட்டுக்கொண்டிருந்ததை   வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஊடலும்  கூடலுமாக  நீடித்த  இந்த  இடதுசாரி  எழுத்தாளர்களின் எழுத்தும்   வாழ்க்கையும்  எனக்கு  வேடிக்கையாகவே காட்சியளித்தது. 1970  இல்  பெரும்பான்மை  பலத்துடன்  அரசு  அமைத்த  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,   சமசமாஜக்கட்சி,  கம்யூனிஸ்ட்  கட்சி  ஆகியவற்றின் கூட்டரசாங்கத்தை  1971  இல்  ரோகண  விஜேவீரா  தலைமையிலான மக்கள்  விடுதலை  முன்னணி  எதிர்த்து  கிளர்ச்சி  செய்ததையடுத்து  தடைசெய்யப்பட்டது.   அதன்  பின்னர்  நடந்த காங்கேசன்துறை இடைத்தேர்தலில்   செல்வநாயகத்தை  எதிர்த்து  தோழர் வி. பொன்னம்பலம்   போட்டியிட்ட சமயத்தில்  செல்லையா குமாரசூரியருக்கும்   வடபிரதேச  கம்யூனிஸ்ட்  கட்சியினருக்கும் இடையே   முறுகல்  தோன்றியது. எனினும்   பீட்டர்கெனமன்  தமது  தோழர்களை சமாதானப்படுத்துவதில்  அதிம்  நேரத்தை  செலவிட்டார்.

அந்தக்கூட்டரசின்   தோல்விக்கு  இரண்டு   சாத்தான்கள்தான்  காரணம் என்பது   எனது  கணிப்பு. ஒருவர்  ஸ்ரீமாவின்  உறவினர்  தொம்பே  தொகுதி  எம்.பி. பீலிக்ஸ் டயஸ்   பண்டாரநாயக்கா.  இவர்தான்  சமசமாஜிகளையும்  கம்யூனிஸ்ட்களையும்  அரசில்  இருந்து  பிரித்து  ஒதுக்கியவர். மற்றவர்   செல்லையா  குமாரசூரியர்.   இவர்  வடபிரதேச கம்யூனிஸ்டுகளுக்கும்   ஸ்ரீலங்கா  சுதந்திரக்கட்சிக்கும்  இடையே பிளவை ஏற்படுத்தினார்.   அதற்கு  காங்கேசன்துறை  தொகுதி இடைத்தேர்தலில்   அவர்  செயல்பட்ட  விதமே  சாட்சி.

அந்தத்தேர்தலில்  வி.பொன்னம்பலம்  கட்டுப்பணமும் இழந்துவிடுவார்   என்றுதான்  தமிழரசுக்கட்சி  எதிர்பார்த்தது.  ஆனால், சிவா சுப்பிரமணியம்  உட்பட  பல  தோழர்களின்  தீவிரமான பிரசாரமும்  வி. பொன்னம்பலத்தின்  தனிப்பட்ட  செல்வாக்கும் அவருடைய   எளிமையான  வாழ்க்கையும்  அந்த  எதிர்ப்பார்ப்பை தோல்வியடையச்செய்தன. அந்தத்  தேர்தல்  முடிவு  அறிவிக்கப்பட்டபோது,  செல்வநாயகத்தை கைத்தாங்கலாக  மேடைக்கு  அழைத்துச்சென்றவர்  தோழர் வி. பொன்னம்பலம். இத்தகைய  நற்பண்புகளை  பலவீனமாக  நினைப்பவர்கள் மத்தியில்தான்  நாம்  வாழ்கின்றோம். எளிமை   வலிமை  மாத்திரமல்ல,  சுயநலமிகளின்  பார்வையில்  அது பலவீனம். கொழும்பில்  மாஸ்கோ  சார்பு  கம்யூனிஸ்ட்  கட்சிக்குள்  தீவிரவாத சிந்தனைகள்   மாற்றுக்கருத்தாக  பரவியதனால்   தோழர் ஜெயதிலக்க டீ சில்வா,  சிவா  சுப்பிரமணியம்  ஆகியோர்  மீது  கட்சி  நடவடிக்கை எடுக்கவிருந்தது.

வடபிரதேச கம்யூனிஸ்டுகள்   மத்தியிலும்  பிளவு தோன்றியது. கம்யூனிஸ்ட்   கட்சியின்  போக்குப்பிடிக்காமல்  தோழர் வி. பொன்னம்பலம்,  செந்தமிழர் இயக்கம்  தொடங்கினார்.   பிரதேச சுயாட்சியை  வலியுறுத்தி  பிரசாரம்  மேற்கொண்டார்.   அவருக்கு பக்கபலமாக    இணைந்து  பயணித்தவர்  தோழர்  சிவா சுப்பிரமணியம்.

“நான்   அறிந்த  வ.பொ”   என்ற   தலைப்பில்  சிவா  சுப்பிரமணியம்  1994   ஆம்  ஆண்டு  வெளியான  பொன்னம்பலம்  நினைவு  மலரில் ” 1958 ஜூலை  மாதம்  2  ஆம்  திகதி  இலங்கை  நாடாளுமன்றத்தில் பருத்தித்துறை  பிரதிநிதி   தோழர்  பொன். கந்தையா  நிகழ்த்திய உரையை  நினவுபடுத்தியிருக்கிறார்.

“ஒன்றுக்கு   மேற்பட்ட  சமூகங்களோ  மொழிவாரிப்பிரிவினரோ தேசிய   இனங்களோ  வாழும்  ஒரு  நாட்டில்   வேறு  வேறு  மக்கட் பிரிவினர்  இறைமைசார்  ஜனநாயகத்தை  நோக்கிச்செல்வதற்கு இரண்டு   வழிகள்  உள்ளன.  ஒன்று:  இம்மக்கட்  பிரிவினர்  பிரிந்து தனியரசுகளை  அமைப்பது.  மற்றது  ஒவ்வாரு  பிரிவினரும்  தத்தமது   வாழ்வைச்  சுதந்திரம் – சமத்துவம்  ஆகியவற்றின் அடிப்படையில்   அமைத்துக்கொள்வதற்கேற்ற  முழுமையான வாய்ப்புகள்  அளிக்கப்படுவதன்  மூலம்  ஓரே  நாடாக  வாழ்வது”

1960  இல்  நடைபெற்ற  தேர்தலின்போது  இலங்கை  வானொலி ஊடாக   நடத்தப்பட்ட  கம்யூனிஸ்ட்  கட்சி  நடத்திய  பிரசாரத்திலும் ”  தமிழ்  இனம்  பரம்பரை  பரம்பரையாக  வாழ்ந்துவரும்   பிரதேசத்தைத்  தானே  ஆண்டுகொள்ளும்  உரிமை தரப்படல்  வேண்டும் ”  என்றும்  தெரிவித்திருந்தது.

இதே  கருத்தைக்கொண்ட  ஒரு  தீர்மானத்தை  பல  வருடங்களின் பின்னர்,  1974  ஆம்  ஆண்டு  கொழும்பு  நகர  மண்டபத்தில்  நடந்த கம்யூனிஸ்ட்   கட்சியின்  மாநாட்டில்  பின்வருமாறு  நிறைவேற்றியது.

” விரும்பினால்  பிரிந்துசென்று  தனியான  அரசு  அமைக்கும்  உரிமை உட்பட  இனங்களின்  சுயநிர்ணய  உரிமை  அங்கீகரிக்கப்பட வேண்டும் “
சுயநிர்ணய  உரிமைக்கோட்பாட்டை  செயல்படுத்துவதற்காக கம்யூனிஸ்ட்   கட்சி  முன்மொழிந்த  பிரதேச  சுயாட்சி  அமைப்பு முறை  அரசினால்  கிடப்பில்  போடப்பட்டதையிட்டு  சிவா சுப்பிரமணியம்  அதிருப்தியுற்றிருந்தார்.

” நம்பிக்கையூட்டும்  நிலைப்பாடுகளின்  அடிப்படையில்  வெகுஜன இயக்கங்களைக்கட்சி  முன்னெடுத்துச்செல்லும்  எனக்கொண்டிருந்த நம்பிக்கை    ஈடேறவில்லை.  கட்சி  தனது  கொள்கை நிலைப்பாடுகளை  ஆவணங்களுடன்  மட்டுப்படுத்திக்கொண்டது. மக்களிடம்    எடுத்துச்செல்லவில்லை.”   என்று  அவர்  தமது ஆதங்கத்தை   வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த   ஆதங்கம்தான்  அவர்  வி. பொன்னம்பலம்  செந்தமிழர் இயக்கத்தை   தோற்றுவித்தபோது  அதற்கு  சார்பான  நிலைப்பாட்டை எடுப்பதற்கும் காரணமாக  இருந்தது. ஆனால்,  இறுதியில்  வி. பி. யும்  வலதுசாரி  சிந்தனைகொண்ட அமிர்தலிங்கத்துடன்   அய்க்கியமாகி,  தமிழர் விடுதலைக்கூட்டணியில்   கரைந்துபோனதாலும்  ஏமாற்றமடைந்தார். கம்யூனிஸ்ட் கட்சியும்  செந்தமிழர்  இயக்கமும்  சிவா சுப்பிரமணியத்தை   ஏமாற்றிவிட்டன. அவருடைய   கருத்தாடல்கள்  கட்சிக்குள்  வெறுப்பை ஏற்படுத்தியதனாலோ   என்னவோ  யாராலோ  அவர் கண்காணிக்கப்பட்டார். அன்றைய   ஜே.ஆரின்  ஆட்சியை  கவிழ்ப்பதற்கு  வடக்கின்  தமிழ் தீவிரவாதிகளும்  தெற்கின்  தீவிர  இடதுசாரிகளும் கைகோர்த்துள்ளனர்   என்று  ஒரு  முட்டாள்தனமான  இரகசிய தகவலை  அரசின்  மேலிடத்திற்கு  வழங்கியிருக்கிறார்கள். அத்தகைய   தவறான  கணிப்பினால்  தமிழ் ஆங்கிலம்  சிங்களம் நன்கு   தெரிந்த  முற்போக்காளர்கள்  நாடெங்கும்  குறிப்பாக தென்னிலங்கையில்   புலனாய்வுப்பிரிவினரால் தீவிரமாகத்தேடப்பட்டார்கள். வடக்கின்   தமிழ்  தீவிரவாத  இளைஞர்களுக்கு  சிங்களம்  தெரியாது. தெற்கின்   மக்கள்  விடுதலை  முன்னணி  தீவிரவாதிகளுக்கு  தமிழ் தெரியாது.   இவர்களை  இணைக்கும்  பாலம்  யார்?  தேடுங்கள் என்பதுதான்  ஜே.ஆரின் உத்தரவு.

சிவா சுப்பிரமணியம்  வெல்லம்பிட்டிய  பொலிஸ்  நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு   விசாரிக்கப்பட்டபொழுது,  கொழும்பு கம்யூனிஸ்ட்   கட்சி  ஏனென்றும்  கண்டுகொள்ளவில்லை.  அவருடைய   பல  முற்போக்கு  எழுத்தாள  நண்பர்கள் இதனைக்கவனத்தில்  கொள்ளவில்லை. சிவாவின்   உறவினர்  ஒருவர்  என்னைத்தேடி  வீரகேசரி  அலுவலகம் வந்தார். அவர்   சிவா   தடுத்துவைக்கப்பட்டிருக்கும்  தகவலும்  சொல்லி என்னை   அவதானமாக  இருக்குமாறு  அவர் சொல்லியனுப்பியிருப்பதாகவும்  சொன்னார்.   அச்சமயம்  பேராசிரியர் சிவத்தம்பி   போர்  நிறுத்தக்கண்காணிப்புக்குழுவில்  அங்கம் வகித்திருந்தார். கொழும்பில்  பாதுகாப்பு  கேந்திர  முக்கியத்துவம்  வாய்ந்த பிரதேசத்தில்   இருக்கும்  இடதுசாரிச்சிந்தனைகொண்ட பெண்ணியவாதி   குமாரி  ஜயவர்தனா  அவர்களின்  இல்லத்தில்தான் சிவத்தம்பி  தங்குவது  வழக்கம். யுத்த  நிறுத்தக்கண்காணிப்புக் குழுவின்  சந்திப்புகள்  தினமும் பண்டாரநாயக்கா  மண்டபத்தில்  ஒரு  அறையில் நடந்துகொண்டிருப்பதை  அறிந்திருந்தேன். சிவா சுப்பிரமணியத்தை   விடுவிப்பதற்காக  ஒரு  சட்டத்தரணியால் தயார்செய்யப்பட்ட   கடிதம்  ஒன்றை  அந்த  உறவினர்  தந்தார். மறுநாள்   அதிகாலையே  புறப்பட்டு,  கொழும்பில்  நண்பர்  பிரேம்ஜி ஞானசுந்தரனையும்  அழைத்துக்கொண்டு  சிவத்தம்பியை சந்திக்கச்சென்றேன். அச்சமயம்  சிவத்தம்பிக்கும்  பிரேம்ஜிக்கும்  இடையில் கருத்தொற்றுமை  இருக்கவில்லை. ”  உங்கள்  ஊடல் கூடல்களையெல்லாம்   ஒரு  புறம்வைத்துவிட்டு  எங்கள்  சிவாவை விடுவிக்க   வாருங்கள்  ” என்று  இருவரையும்  அழைத்தேன். சிவத்தம்பி   அக்கடிதத்தை  பெற்றுக்கொண்டு,  தமது  குழுவிடம் சமர்ப்பிப்பதாக  வாக்குறுதி  அளித்தார்.  சில  நாட்களின்  பின்னர்  அந்த விடுவிப்பு   சீனிலிருந்து  என்னை  சற்று  ஒதுங்கியிருக்குமாறு  சிவா தமது  உறவினர்  மூலம்  தகவல்  அனுப்பியிருந்தார்.
அந்த   உறவினர்  மாத்திரமே  அவரை  சென்று பார்த்துக்கொண்டிருந்தார்.

மாற்று   உடைகளும்  எடுத்துச்சென்று  கொடுத்தார்.  சிவா சுப்பிரமணியம்   அச்சமயத்தில்  காமினி  திஸாநாயக்காவின்  காணி நீர்ப்பாசன   மகாவலி  அபிவிருத்தி  அமைச்சு  அலுவலகத்தில் பணியிலிருந்தார்.   சிவாவை  பல  நாள்  விசாரணையின்  பின்னர் விடுவித்தனர். அவர்   எந்தவொரு  குற்றமும்  செய்திருக்கவில்லை.  அவர்  செய்த பெரிய  குற்றம்  மும்மொழியும்  தெரிந்துவைத்திருந்ததுதான். சிவா  யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த  வர்த்தகர்  ஒருவரின்   கொழும்பு புறக்கோட்டையில்   அமைந்த  மொத்த  சில்லறை  விற்பனை நிலையத்தின்   மேல்  மாடியில்  அறையெடுத்து  தங்கியிருந்தவர். அவர்   விடுவிக்கப்பட்ட  தகவல்  அறிந்ததும்  சென்று  சந்தித்தேன்.

நடந்தவற்றை  அவர்  விபரித்தபோது  தம்மிடம்  காண்பிக்கப்பட்ட  ஒரு  தமிழ்  கடிதத்தில்  இருந்த  எனது  பெயரை  துருவித்துருவி விசாரித்ததாகவும்   அப்படியொரு கடிதம் இவர்களுக்கு எப்படிக்கிடைத்தது  என்பதுதான் புதிரானது என்றும் அவர் சொன்னார்.
ஆம் ,  இன்றும்தான்  அந்தப்புதிர்  அவிழ்க்கப்படவில்லை.

எங்களுக்குள்   நீடித்திருந்த  இந்த  விவகாரத்தை  2005  ஆம்  ஆண்டு கொழும்பு    தமிழ்ச்சங்கத்தில்  நடந்த,  நான்  எழுதிய  ராஜஸ்ரீகாந்தன் நினைவுகள்   நூல்  வெளியீட்டு  விழாவில்  சிவா உரையாற்றும்பொழுது   பகிரங்கப்படுத்தினார். அப்பொழுது  அவர்  தினகரன்  பத்திரிகையின்  பிரதம  ஆசிரியராக பணியிலிருந்தார்.  சந்திரிக்காவின்  அரசு  அமைந்த வேளையில் நண்பர்   ராஜ ஸ்ரீகாந்தன்  தினகரன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.   சிவா சுப்பிரமணியமும்    அரசசேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தமையால்  தினகரனில்   பத்திரிகையாளராக இணைந்திருந்தார். மற்றும்    இலக்கிய  நண்பர்கள்  எம். எச். எம். சம்ஷ்,  மு. கனகராஜன் ஆகியோரும்  அங்கு  பணியாற்றினார்கள். பிரேம்ஜி ஞானசுந்தரன்   லேக்ஹவுஸ்  தமிழ்ப்பிரிவின்  ஆலோசகராக இருந்தார்.

சிவா சுப்பிரமணியம்   தினகரனை  விட்டு  வெளியேறிய வேளையில் தெகிவளையில்   அவர்  தமது  துணைவியாருடன்  ஒரு  வீட்டில் வசித்துக்கொண்டிருந்தார்.    இவர்களின்  பிள்ளைகள் வெளிநாட்டிலிருக்கின்றனர். பால மனோகரன்  அவுஸ்திரேலியாவில்   எனது  இனிய  நண்பர். அவர்   சிவாவின்  மகள்  மஞ்சுளாவைத்தான்  திருமணம்  செய்து அழைத்துவருகிறார்   என  அறிந்ததும்  நான்  எனது  குடும்பத்துடன் சென்று  சம்பிரதாயப்படி  மணமக்களுக்கு   ஆராத்தி  ஆசிர்வாதம் வழங்கி வரவேற்றேன். அவுஸ்திரேலியாவில்    நண்பர்  நடேசன்  நடத்திய  உதயம் பத்திரிகைக்கு   சிவா சுப்பிரமணியம்  கொழும்பிலிருந்து  அரசியல் கட்டுரைகள்   எழுதியிருக்கிறார். அவருடன்     உரையாடச்சென்றால்   அவர்  ஒரு  நிறைகுடம்  என்ற தீர்மானத்துடன்தான்  விடைபெறுவார்கள்.  அவர்  மறைந்த  பின்னர் வெளியான   சில  ஆக்கங்களில்  அவரின்  சிறப்பு  இயல்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.  அவர்  ஒரு  இடதுசாரி.   முற்போக்காளர்.   அவர்  மகன்  தனஞ்செயன் இனவிடுதலைப்போரில்   தனது  15  வயதில்  பலியானவர். சிவா   நிறைய  எழுதியிருக்கிறார்.  ஆனால்,  அவற்றை  தொகுத்து நூலுருவாக்குவதில்  ஆர்வம்  காண்பிக்கவில்iலை.  நண்பர் பூபாலசிங்கம்  ஸ்ரீதரசிங்  வலியுறுத்தியதனால்  சிவா  எழுதிய  இலங்கை  அரசியல்  வரலாறு  ஒரு   நோக்கு  என்னும்  நூல் வெளிவந்திருக்கிறது.

சிவாசுப்பிரமணியத்திற்கு    இலக்கியம்  தெரியும்.  அரசியல்   தெரியும் ஊடகத்துறை  தெரியும்.  உலக  விவகாரங்கள்  தெரியும். மொழிபெயர்க்கத்தெரியும். இவை   மாத்திரமா???? இந்த  முற்போக்காளருக்கு   சோதிடமும்  கணிக்கத்தெரியும்   என்பது பலருக்குத்தெரியாது. இறுதியாக  கடந்த  2015  ஆம்  ஆண்டு  யாழ்ப்பாணம் சென்றவேளையில்   எழுத்தாளர்  மறுபாதி ( கவிதைக்கான இதழ்) ஆசிரியர்  சித்தாந்தனுடன் சென்று  கோண்டாவிலில்  சிவா சுப்பிரமணியத்தை  சந்தித்து  நீண்டநேரம்  உரையாடினேன். அப்பொழுதே  அவர்  சில  நோய்  உபாதைகளின் தாக்கத்திலிருந்துகொண்டே  எழுதினார்.    தினக்குரலில்  மனக்காட்சி என்ற   தலைப்பில்  பத்திகள்  எழுதினார். கடும் சுகவீனமுற்று  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என   அறிந்ததும்  அவருடைய  கைத்தொலைபேசியில் தொடர்புகொண்டு   உரையாடினேன்.  சில  நிமிடங்கள்  பேசியவர் சற்று   களைப்பாக  இருப்பதாகவும்  விரைவில்  வீடு திரும்பவிருப்பதாகவும்  வீட்டுக்கு  வந்ததும் ஆறுதலாகப்பேசுவதாகவும் சொன்னார்.

கடந்த   29-05-2016   ஆம்  திகதி  நடு  இரவில்  எனது கைத்தொலைபேசிக்கு   அவருடைய  மருமகன்  பால மனோகரன் அனுப்பியிருந்த    குறுஞ்செய்தியில்  சிவா சுப்பிரமணியம் விடைபெற்றுவிட்ட  தகவல்  இருந்தது. ” களைப்பாக   இருக்கிறது  ” என்பதே   அவரிடமிருந்து  நான்  கேட்ட இறுதி வார்த்தை.   ஆம்,  அவர்  இந்தச்சமூகத்திற்காக கருத்துப்போராட்டம்   நடத்தி  களைத்துத்தான்  போனார். இனியாவது அவர் ஓய்வுபெறட்டும்.

letchumananm@gmail.com