திரு விக்னேஸ்வரனது தெரிவு தமிழீழ மக்களின் தெரிவு அல்ல என்பது அவருக்கு வாக்களித்த மக்களை அவமானப்படுத்துவது போன்றது!

திரு. விக்னேஸ்வரன் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -திரு. விக்னேஸ்வரன் தமிழீழ மக்களின் தெரிவல்ல என்பதை  தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும்! என்ற தலைப்பில் இசைப்பிரியா  ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அந்தக் கட்டுரை அரசியல் யதார்த்தைப் புரியாது வெறு உணர்ச்சி அடிப்படையில் எழுதப் பட்டுள்ளது. அந்தக் கட்டுரைக்கான பதில் இது.

(1) பாரிய அச்சுறுத்தல்கள், கெடுபிடிகளையும் தாண்டி வட மாகாண சபைக்கான தேர்தல் முடிவடைந்து, எதிர்பார்க்கப்பட்டபடியே திரு. சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுவிட்டார்.  ஆனாலும், உலகத் தமிழர்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி குறித்த மகிழ்ச்சிக்கு அப்பால் விக்னேஸ்வரன் குறித்த ஐயப்பாடுகளே விஞ்சி நிற்கின்றது. வட மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னரும், தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் வெளியாகிய பின்னரும் திரு விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் அவர்மீதான சந்தேகத்தையே வலுப்படுத்துவதாக உள்ளது.

பதில்:  திரு. விக்னேஸ்வரன் தமிழீழ மக்களின் தெரிவல்ல என்பது ஒரு  இமாலயக் கண்டுபிடிப்பு.  எந்த அடிப்படையில் இந்த கண்டு பிடிப்பைச் செய்துள்ளார்  என்பது புரியவல்லை. தேர்தலில் ததேகூ இன் முதன்மை வேட்பாளராக நிறுத்தப்பட்ட முன்னாள் உச்சமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் ஆவர்களுக்கு 132,255 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன. இது அடுத்து வந்த அனந்தி எழிலனுக்கு விழுந்த விருப்பு  வாக்குகள்  87,870  ஆகும். எனவே அனந்திக்கு விழுந்த வாக்குகளைவிட  திரு விக்னேஸ்வரனுக்கு 44,385 வாக்குகள் அதிகமாக விழுந்துள’து.  யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ததேகூ விழுந்த மொத்த வாக்குகள் 213,907. அதில் 62 விழுக்காடு விருப்பு வாக்குகள் விக்னேஸ்வரன் அவர்களுக்கு விழுந்துள்ளது.  இதன் பின்னரும் விக்னேஸ்வரனது தெரிவு தமிழீழ மக்களின் தெரிவு இல்லை என்று வாதிடுவது வாக்களித்த  அந்த மக்களை  மடையர்கள் என்று சொல்வதுபோல இல்லையா?  அவர்களை அவமானப்படுத்துவது போன்று இல்லையா?

(2) தேர்தல் நடைபெறுவதற்குச் சில தினங்களுக்கு முன்னர் திரு. விக்னேஸ்வரன் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் ஈழத் தமிழர்களது பிரச்சினையைத் தமது அரசியல் நலனுக்காகப் பாவிப்பதைக் கைவிட வேண்டும் என்ற தனது கருத்தோடு நின்றுவிடாமல், கணவன் மனைவி சண்டைக்குள் உள் நுழைந்து விவாகரத்துச் செய்யும்படி கோருவதை நிறுத்தும்படியும் கேட்டுள்ளார். அதன் பின்னரான ஒரு ஊடக நேர்காணலில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

அதாவது, தமிழக மக்களது ஈழத் தமிழர்களது அவலங்கள் குறித்த கருத்தியலைப் புரட்டிப்போடும் முயற்சியில் வெகு நேர்த்தியாகக் காய்களை நகர்த்தியுள்ளார். ஈழத் தமிழர்களது பிரச்சினையிலிருந்து தமிழகத்தை அந்நியப்படுத்தும் முயற்சியில் குறி பார்த்துக் கல் எறிந்துள்ளார். இது, இந்திய மத்திய ஆட்சியாளர்களுக்கும், சிங்கள இன வாதிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

ஈழத் தமிழினத்தின் மீதான இனப் படுகொலையை நிகழ்த்திய சிங்கள ஆட்சியாளர்களுக்கும், அதற்குத் துணை நின்றதுடன், அந்த இன அழிப்பினைநிகழ்த்தி முடிப்பதற்கான கால அவகாசத்தினையும் வழங்கிய இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் மிகப் பாரிய சவாலாக இருந்த தமிழகத்தின் தமிழுணர்வுப் போர்க்களத்தின்மீதே திரு. விக்னேஸ்வரன் தனது முதல் தாக்குதலை ஆரம்பித்திருந்தார்.

பதில்: திரு. விக்னேஸ்வரன் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் ஈழத் தமிழர்களது  சிக்கலைத்  தமது அரசியல் நலனுக்காகப் பாவிப்பதைக் கைவிட வேண்டும் என்ற  கருத்து அவருடைய சொந்தக் கருத்து. ஆனால் அவர் சொன்னதில் உண்மையிருக்கிறது.  தமிழ்நாட்டின் முக்கிய இரண்டு கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தமிழீழச் சிக்கலில் ஒன்றாக நிற்பதில்லை. ஒத்த குரலில் பேசுவதில்லை. வி.புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என இந்த இரண்டு கட்சிகளும்  சொல்லுகின்றன. இந்த இரண்டு கட்சிகளும்  வி.புலிகளைப்  பயங்கரவாத இயக்கம் என்று சொல்கின்ற மத்திய அரசின் முன்மொழிவை ஆதரித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுகின்றன. இருந்தும் திரு விக்னேஸ்வரன் இந்து ஏட்டுக்குக் கொடுத்த அதே செவ்வியில் “அவர் விரைந்து மேலதிகமாக ஒன்றைச் சொன்னார். “தமிழ்நாட்டில் இருப்பவர்கள் ததேகூ  நல்கும் ஆதரவு மற்றும் அனுதாபம்  எம்மைக் கவர்ந்துள்ளது. ஆனால் “தீர்வு எமது கைகளிலேயே இருக்கிறது” (He was quick to add that the TNA was very impressed with the support and sympathy of those in Tamil Nadu, but added “the solution is really in our hands”) என்றார்.

இதனை ஏன் இசைப்பிரியா கவனத்தில் எடுக்கவில்லை. திரு விக்னேஸ்வரன் நீதிபதியாக இருந்தவர். எனவே அவரது கருத்துக்கள் வித்தியாசமாக இருப்பதில் வியப்பில்லை. கணவன் – மனைவி எடுத்துக் காட்டும் அப்படித்தான்.

இலங்கைத் தீவில் சிங்களவர்கள் 74.88 விழுக்காடு இருக்கிறார்கள்.  இலங்கைத் தமிழர்கள் 11.20 விழுக்காடு மற்றும்  மலையகத்தமிழர் 4.15 விழுக்காடு. மொத்த தமிழர் விழுக்காடு 15.35 விழுக்காடு மட்டுமே. எனவே இப்போதுள்ள ஒற்றையாட்சியின் கீழ் சரி, இல்லை ஒரு இணைப்பாட்சியில் சரி,  அல்லது தனித் தமிழீழத்தில் சரி  15.35 விழுக்காடு தமிழர்கள் 74.88 விழுக்காடு சிங்களவர்களோடு வாழ்ந்துதான் ஆக வேண்டும். எனவே சிங்களவர்களை தமிழர்களது நிரந்தர எதிரிகள் என்று பார்ப்பது தவறானது. பேசுவதும் தவறானது. 

இந்த கண்ணோட்டத்தில்தான் திரு விக்னேஸ்வரன் இனச் சிக்கலைப் பார்க்கிறார். அவருக்கு அந்த உரிமை இருப்பது மட்டுமல்ல அதுதான் சரியான பார்வையும் கூட.

(3) தேர்தல் நடைபெறுவதற்குச் சில தினங்களுக்கு முன்னர் திரு. விக்னேஸ்வரன் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் ஈழத் தமிழர்களது பிரச்சினையைத் தமது அரசியல் நலனுக்காகப் பாவிப்பதைக் கைவிட வேண்டும் என்ற தனது கருத்தோடு நின்றுவிடாமல், கணவன் மனைவி சண்டைக்குள் உள் நுழைந்து விவாகரத்துச் செய்யும்படி கோருவதை நிறுத்தும்படியும் கேட்டுள்ளார். அதன் பின்னரான ஒரு ஊடக நேர்காணலில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

பதில்: தமிழ்நாட்டில்  பிரதமர் மன் மோகன் சிங் பொதுநல வாய மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என முக்கிய கட்சிகள் சொல்லவில்லை. கலந்து கொண்டும் சில செய்திகளை மகிந்த இராசபக்சேக்கு பிரதமர் மன்மோகன் சிங் சொல்லலாம். கலந்து கொள்ளாது விடுவதாலும் சில செய்திகளைச் சொல்லலாம். இதில் முடிவு எடுக்க வேண்டியவர் பிரதமர் மன்மோகன் சிங்தான். கலந்து கொள்வதால் நன்மை என்று திரு விக்னேஸ்வரன் நினைக்கிறார். இது அவரது சொந்தக் கருத்து.

(4) அதாவது, தமிழக மக்களது ஈழத் தமிழர்களது அவலங்கள் குறித்த கருத்தியலைப் புரட்டிப்போடும் முயற்சியில் வெகு நேர்த்தியாகக் காய்களை நகர்த்தியுள்ளார். ஈழத் தமிழர்களது பிரச்சினையிலிருந்து தமிழகத்தை அந்நியப்படுத்தும் முயற்சியில் குறி பார்த்துக் கல் எறிந்துள்ளார். இது, இந்திய மத்திய ஆட்சியாளர்களுக்கும், சிங்கள இன வாதிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

ஈழத் தமிழினத்தின் மீதான இனப் படுகொலையை நிகழ்த்திய சிங்கள ஆட்சியாளர்களுக்கும், அதற்குத் துணை நின்றதுடன், அந்த இன அழிப்பினைநிகழ்த்தி முடிப்பதற்கான கால அவகாசத்தினையும் வழங்கிய இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் மிகப் பாரிய சவாலாக இருந்த தமிழகத்தின் தமிழுணர்வுப் போர்க் களத்தின்மீதே திரு. விக்னேஸ்வரன் தனது முதல் தாக்குதலை ஆரம்பித்திருந்தார்.

பதில்:  சும்மா போர்க்களம் அது இது என்று புலம்ப வேண்டாம்.  திரு விக்னேஸ்வரன் தமிழ்நாட்டுத் தலைவர்கள், மக்களது ஆதரவு தேவையென்றும் பேசியிருக்கிறார்.

(5) தேர்தல் முடிந்து, திரு விக்னேஸ்வரன் அவர்களே முதலமைச்சர் என்று முடிவாகிய நிலையில், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு அதிக உரிமை மட்டுமே கோருகின்றோம். தனி நாடோ, தமிழீழமோ அல்ல என்று இன்னுமொரு ஏவுகணையை வீசியுள்ளார். இது, ஒட்டு மொத்த தமிழினத்தின் தேசிய சிந்தனை எழுச்சி மீதான தாக்குதலாக அமைந்துள்ளது.

பதில்:  இப்படி இசைப்பிரியா அழுது புலம்புகிறார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு அதிக உரிமை மட்டுமே  ததேகூ கோருகிறது.  தனி நாடோ, தமிழீழமோ அல்ல என்பதுதான் ததேகூ இன் கொள்கை. அதுதான் ததேகூ இன் தேர்தல் அறிக்கையிலும்  உள்ளது. அதற்குத்தான் தமிழ்மக்கள் வாக்களித்துள்ளார்கள்.  இசைப்பிரியா போன்றவர்களுக்கு இது ஏன் புரியமாட்டேன் என்கிறது? 

(6) முன்னாள் நீதியரசரான திரு. சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கு தமிழ் மக்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அப்பாவித்தனமாக நாம் கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை. எங்கோ, தொலை தேசத்திலிருந்துகொண்டு, தான் கேட்டமையும், அறிந்தகையும், நேரில் சென்று பார்த்துவிட்டு, நேர்மை தவறாத கருத்தைத் தெரிவித்துச் சென்ற ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை அம்மையாரது ஆற்றலுக்குச் சற்றும் குறைந்தவரல்ல வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன். அவரது கருத்துக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தவறான நோக்கத்தில் வெளி வந்திருக்க முடியாது. அவை, தவறான புரிதல்களுக்குள்ளாகியிருக்கக் கூடும். எனவே, இனி வரும் நாட்களில் அவற்றைச் சீர் செய்வார் என்று எதிர் பார்க்கலாம்.

திரு. விக்னேஸ்வரன் அவர்களது அறிவிப்புக்கள் குறித்து சிங்கள ஆட்சியாளர்கள் கள்ள மௌனம் சாதித்தாலும், இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சியின் தமிழக பிரதிநிதிகள் பட்டாசு வெடிக்காத குறையுடன் கொண்டாடி வருகின்றார்கள். ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கையால் கொந்தளித்துள்ள தமிழக மக்களால் தூக்கி வீசப்பட்ட தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தற்போது விக்னேஸ்வரன் அவர்களே கரையேற்றும் துடுப்பாகக் கிடைத்துள்ளார். முன்னாள் வட கிழக்கின் முதல்வராகச் சில காலம் பதவியில் அமர்த்தப்பட்ட வரதராஜப்பெருமாளுக்குப் பின்னர், இந்திய ஆளும் கட்சியின் பாராட்டுக்குரிய தலைவராக திரு. விக்னேஸ்வரன் உருவாக்கப்பட்டுள்ளார்.

தமிழீழம் பல தலைவர்களையும், போராட்டங்களையும், போர்களையும், தவறுகளையும், துரோகங்களையும், அழிவுகளையும் பார்த்து, அதிலிருந்து கற்றுத் தெளிந்துள்ளது. தமிழீழ மக்களை இனியும் யாரும் ஏமாற்ற முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றியினைப் பெற்றிருந்தாலும், திரு. விக்னேஸ்வரன் தமிழீழ மக்களின் தெரிவல்ல. அவர் தமிழீழ மக்களது அரசியலில் திணிக்கப்பட்டுள்ளார் என்பது மட்டுமே உண்மை. திரு. விக்னேஸ்வரன் அவர்கள் தன்னை நிரூபிக்கும் வரை, அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் தமிழீழ மக்களின் கருத்துக்கள் அல்ல என்பதை தமிழகம் மட்டுமல்ல, உலகத் தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

பதில்: வின்னேஸ்வரன் தமிழ் மக்களின் தெரிவல்ல என்று இசைப்பிரியா  மீண்டும் மீண்டும் எழுதுவது வாக்களித்த மக்களை அவமதிக்கும் எத்தனம்.  பொன்சேகாவுக்கு வாக்களித்தது ஒரு இராசதந்திரம். இரண்டு எதிரிகளில் குறைந்தளவு தீமை விளைவிக்கும் எதிரியைத் தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம்.  அதற்கு இன்னாரு பெயர் அரசியல் சாணக்கியம். அதைத்தான் ததேகூ செய்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது வட – கிழக்கு மாகாணங்கள் சுத்தமாக பச்சை நிறத்தில் காட்டப்பட்டது.

இசைப்பிரியா போன்றவர்களுக்கு  தமிழீழத்தில் வாழும் மக்கள் பற்றிப் பேச அருகதை கிடையாது.  அங்கு வாழும் மக்களைப்  பற்றிப் பேச அவர்கள் வாக்களித்து நாடாளுமன்றம் மற்றும் மாகாணசபைக்கு அனுப்பியவர்களுக்கே அந்த உரிமை  உண்டு.

இசைப்பிரியா தமிழீழத்துக்குச் சென்று தமிழ்மக்களுக்கு தனிநாடு அல்லது தமிழீழம் வேண்டும் என்று பேசத் தயாரா? முடியுமென்றால் துணைக்கு காசி ஆனந்தனையும் கூட்டிப் போகலாம். அவரும் தமிழ்நாட்டில் சொந்த வீடு, வண்டி வாகனம் என  சொகுசாக இருந்து கொண்டு வாயில் வந்தபடி திரு விக்னேஸ்வரனை  ‘அவன்’ ‘இவன்’  என்று வாய்க்கு வந்தபடித் திட்டிப் பேசிவருகிறார். தமிழீழம் தவிர வேறு எதையும் கண்ணெடுத்துப் பார்க்க மாட்டேன் என்றால் அங்கு போவதுதானே? அங்குபோய் அதற்காகப் போராடுவதுதானே? அதுதானே நியாயம்? யார் அவரை மறிக்கிறார்கள்? மாங்குயிலும் மரக் கொத்தியும் வீடு திரும்பத் தடையில்லை நாங்கள் மட்டும் வீடு திரும்ப வழியில்லை என்று பாடியது சரி. இன்று வீடு திரும்பலாமே?  திரும்பி தமிழீழம் கேட்கலாமே?

(7) தேர்தலில் வழங்கப்படும் வாக்குக்களே அனைத்தையும் தீர்மானிக்கும் என்றால், இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழீழ மக்கள் போர்க் குற்றவாளி சரத் பொன்சேகாவுக்கு தமது வாக்குக்களை அள்ளி வழங்கியதையும் கருத்தில் கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத ஒரு தருணத்தில் கோபத்தை வாக்குக்களாக மாற்றி, சரத் பொன்சேகாவுக்கு வழங்கிய தமிழீழ மக்கள், இன்னொரு தருணத்தில் தங்களது ஆற்றாமையை வாக்குக்களாக்கி, திரு. விக்னேஸ்வரன் அவர்களை வடக்கின் முதலமைச்சராக்கியுள்ளார்கள். அது மட்டுமே நடந்து முடிந்துள்ளது. இன்னமும் நடக்க வேண்டியது, இன்னமும் அந்த மக்களின் கைகளிலேயே உள்ளது.

பதில்: இசைப்பிரியா தன்னை ஒரு அரசியல் சாணக்கியன் என நினைக்கிறார்.  மீண்டும் மீண்டும் ததேகூக்கும் திரு விக்னேஸ்வரனுக்கும் வாக்களித்த மக்கள் மடையர்கள் என நினைத்து அவர்களைக் கொச்சைப்படுத்துகிறார். அவமானப் படுத்துகிறார். இந்த மேலாண்மைப் போக்கை அவர் கைவிட வேண்டும். மக்களை மதிக்கப் பழகவேண்டும். மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர்களையும் மதிக்கத் தெரிய வேண்டும். கன்னா, பின்னா என்று பாமரத்தன்மையோடு எழுதுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

athangav@sympatico.ca