தி.மு.க.,வுக்கு மீண்டும் அடி: சிறையில் கனிமொழி: பெரும் துயரில் கருணாநிதி

மீள்பிரசுரம்: தினமலர்.காம்
கனிமொழி கைது.கனிமொழி கைது; கவலையில் கலைஞர்“ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத்தன்மை, குற்றச்சதியில் உள்ள பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கனிமொழிக்கு ஜாமின் வழங்க இயலாது’ என்று, சி.பி.ஐ., கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப் பளித்துள்ளது. உடனடியாக, டில்லி திகார் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டார். ஒரு வாரத்திற்கு முன், மக்கள் அளித்த தீர்ப்பில், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தி.மு.க., பெறாமல் பெருத்த அடி பெற்ற நிலையில், மீண்டும் இத்தீர்ப்பு அடுத்த அடியாக வெளிவந்துள்ளது. இதனால், தந்தை என்ற முறையில், கருணாநிதி பெரும் வேதனை அடைந்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், “கூட்டுச்சதி செய்தவர்’ என்ற குற்றத்தை, ராஜ்யசபா எம்.பி.,யும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மீது, சி.பி.ஐ., சுமத்தி, அவர் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற சூழ்நிலை எழுந்தது. கனிமொழி சார்பில், சி.பி.ஐ., கோர்ட்டில் நீதிபதி சைனி முன், பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி ஜாமின் கோரினார். “ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு மொத்த காரணமும் ராஜாதானே தவிர, கனிமொழி அல்ல’ என்று ராம்ஜெத்மலானி வாதிட்டார். இறுதியாக, தினந்தோறும் கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் கடந்த, 14ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 20ம் தேதிக்கு தன் உத்தரவை நீதிபதி தள்ளிவைத்தார். இந்நிலையில், நேற்று காலை பாட்டியாலா கோர்ட்டிற்கு மஞ்சள் நிற சல்வார் கமீசில் கனிமொழி, அவரது கணவர் அரவிந்தனுடன் வந்து அமர்ந்தார். கோர்ட் அறைக்கு வந்த நீதிபதி, ஓ.பி.சைனி, கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கு ஜாமின் வழங்குவது குறித்த தன் தீர்ப்பை மதியம் 1 மணிக்கு வழங்குவதாக அறிவித்தார். மீண்டும், 2.30 மணியளவில் தீர்ப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 நீதிபதியின் உத்தரவு, 2.35க்கு வெளியிடப்பட்டது. கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோர், தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டுமென்று கேட்டிருந்த கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிபதி சைனி தெரிவித்தார்.

அவர் தன் தீர்ப்பில், “”ஸ்பெக்ட்ரம் வழக்கின் ஆழம், இந்த வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, குற்றச்சதியில் உள்ள பங்கையும் கவனத்தில் கொண்டு, ஜாமினில் வெளியில் விட்டால், இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளை கலைக்கவும், அழிக்கவுமான முயற்சிகளில் ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளன. தவிர, குற்றச்சதியில் தீவிர பங்கு இருப்பதாகவும் தெரிவதால், ஜாமின் மனு மீதான கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது,” என்று கூறினார்.

ஜாமின் மனு மீதான கோரிக்கை நிராகரிக்கப்படவும், அங்கிருந்த கனிமொழி, சரத்குமார் ரெட்டி உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், நிலைமையை உணர்ந்து சமாளித்தபடி இருந்தனர். ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதும், கனிமொழியின் கண்கள் கலங்கின. இந்தத் தீர்ப்பை கேட்டவுடன் கண்ணீர் மல்க, தன் கணவர் மற்றும் ராஜாவின் மனைவியை கனிமொழி கட்டிப்பிடிக்க, உடனிருந்த சில, தி.மு.க.,வினரும் கண்கலங்கினர். கணவர் அரவிந்தன் மற்றும் ராஜாவின் மனைவி ஆகியோர் கனிமொழிக்கு ஆறுதல் கூறினர். டி.ஆர்.பாலு, விஜயன், கே.பி.ராமலிங்கம், ஜெயதுரை, தாமரை செல்வன், டி.கே.எஸ்.இளங்கோவன், செல்வகணபதி, ஆதிசங்கர், பூங்கோதை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கோர்ட்டுக்குள் இருந்தனர். தீர்ப்பை கேட்டதும் இவர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தனர். தீர்ப்பை உடனடியாக சென்னையில் உள்ள கருணாநிதி மற்றும் ஸ்டாலினுக்கு, டி.ஆர்.பாலுவும், செல்வகணபதியும் தெரிவித்தனர்.

கனிமொழிசிறையில் அடைப்பு: சில நிமிடங்கள் கழித்து, கனிமொழியிடம் தீர்ப்பு குறித்து கேட்டபோது, “”இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை; ஆனா லும், இந்த முடிவு எனக்கு ஆச்சரியமானதல்ல. நான் இதை முன்பே எதிர்பார்க்கவே செய்தேன்,” என்று மட்டும் கூறினார். பின்னர் கோர்ட் பணியாளரிடம் கனிமொழி, தான் வைத்திருந்த வெள்ளை நிற கைப்பையை சிறைக்கு எடுத்துச் செல்லலாமா என்று கேட்டார். கைப்பையை எடுத்துச் செல்லாம் என, அனுமதி வழங்கவே, கனிமொழி தான் வைத்திருந்த கைப்பையுடன், அருகில் இருந்த சி.பி.ஐ., லாக்அப் அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். லாக்அப் அறைக்கு கொண்டு செல்வதற்கு முன், கனிமொழி, சரத்குமார் ரெட்டியிடம் கையொப்பம் வாங்கப்பட்டது. பாட்டியாலா கோர்ட்டில், சைனி கோர்ட் அறைக்கு பக்கத்திலேயே இந்த அறை உள்ளது. அங்கு, கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் அமர வைக்கப்பட்டனர். அங்கு ஏற்கனவே ராஜா, பல்வா ஆகியோர் அமர்ந்திருக்க, அவர்களுடன் கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் அமர்ந்தனர். 4.30 மணியளவில், பாட்டியாலா கோர்ட்டில் இருந்து நேரடியாக திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள 6ம் எண் பெண்கள் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டார்.

வாக்குவாதம்: கோர்ட் அறைக்குள் நேற்று நிற்பதற்குக் கூட இடம் இல்லாமல், கடும் நெருக்கடி இருந்தது. மீடியாக்களுக்கும், வக்கீல்களுக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெற்றது; இதனால், கோர்ட் அறையில் பரபரப்பு காணப்பட்டது. வழக்கமான விசாரணைகளுக்காக நேற்று வழக்கம்போல ராஜா, பல்வா உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர். அவர்களும் கனிமொழிக்கு ஜாமின் நிராகரிக்கப்பட்டது குறித்து, வருத்தம் அடைந்தனர். மீடியாக்கள் மீது, சில தி.மு.க.,வினர் கோபப்பட் டதையும் காண முடிந்தது.

காங்கிரஸ் கைவிரிப்பு: கனிமொழியின் கைது சம்பவம் நடந்த சில நிமிடங்களில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, டில்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, கனிமொழி கைது குறித்து அவர் கூறுகையில், “”தனிப்பட்ட நபர்களது வழக்கு குறித்து காங்கிரஸ் எதுவும் கூற இயலாது. குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கும், சி.பி.ஐ.,க்கும் இடையிலான சமாச்சாரம் அது. நாங்கள் கருத்து தெரிவிப்பதற்கு ஒன்றும் இல்லை. சிறந்த வக்கீல்கள் உள்ளனர். மேல் கோர்ட்டுகளில் முறையீடு செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கும், கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்றார்.

சாட்சிகளை கலைக்கும் அபாயம் உள்ளது: 144 பக்கங்களில் சைனி அதிரடி உத்தரவு

“ஸ்பெக்ட்ரம் குற்றச்சதியில் கனிமொழிக்கு பங்கு அதிகம் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. தவிர, முக்கிய குற்றவாளியான ராஜாவுக்கும், கனிமொழிக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளதென்பதும் உறுதியாக தெரிகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் எல்லாருமே, கலைஞர் “டிவி’யில் பணியாற்று பவர்கள். எனவே, அவர்களுக்கு தலைமை தாங்கும் நிலையில் உள்ள இவர்களை ஜாமின் அளித்து வெளியில் விட்டால், சாட்சிகளை கலைக்கும் அபாயம் உள்ளது’ என்று, நீதிபதி சைனி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோரின் ஜாமின் மனுக்களையும் நிராகரிப்பதாகக் கூறி, நீதிபதி ஓ.பி.சைனி நேற்று, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் அறிவித்தபோது, தி.மு.க., வட்டாரமே கடும் அதிர்ச்சிக்குள்ளானது. 144 பக்கங்களைக் கொண்ட அந்த உத்தரவில், நீதிபதி சைனி, கனிமொழிக்கும், சரத்குமார் ரெட்டிக்கும் ஜாமின் மறுத்தது குறித்து விளக்கியுள்ளார். ஆரம்பத்தில், கலைஞர் “டிவி’யில் இயக்குனர் பொறுப்பில் கனிமொழி இருந்துள்ளார். கலைஞர் “டிவி’ ஆரம்பிப்பதில் தேவையற்ற காலதாமதம் ஆகக் கூடாது என்பதற்காக, உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டியே அவர், தற்காலிகமாக தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கலைஞர் “டிவி’யை துவங்குவதற்கு வேண்டிய ஆரம்ப கட்ட செய்தி ஒலிபரப்புத்துறை சார்ந்த பணிகள் உட்பட அந்த, “டிவி’யை டாடா ஸ்கை டி.டி.எச்., பேக்கேஜ்க்குள் கொண்டு வருவதற்கும், ராஜா மிகுந்த முயற்சிகளையும், அது சார்ந்த அத்தனை பணிகளையும் செய்து முடித்துள்ளார்.

கலைஞர் “டிவி’யில் 20 சதவீதம் வைத்திருக்கும் முக்கிய பங்குதாரர் கனிமொழி. அந்த, “டிவி’ இயக்கத்தின் பின்னணியில் உள்ள மிக முக்கிய மூளையாகவும் கனிமொழி செயல்பட்டுள்ளார் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல, முதல் குற்றவாளியான ராஜாவுடன், கனிமொழிக்கு உள்ள நெருங்கிய தொடர்பு உண்மைதான் என்பதை, ராஜாவிடம் உதவியாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரியின் வாக்குமூலத்தை மேற்கோள்காட்டி, அதை நம்புவதாகவும் சைனி கூறியுள்ளார். அதன்படி, அமைச்சராக இருந்த ராஜாவின் வீட்டிற்கும், அவரது அலுவலகத்திற்கும் கனிமொழி அடிக்கடி வந்துபோய் உள்ளார். இடைவிடாத இந்த சந்திப்புகளின் போதெல்லாம், கலைஞர் “டிவி’ உருவாக்கம் குறித்த பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, டில்லி சவுத் அவின்யூவில் உள்ள கனிமொழியின் இல்லத்திற்கும் ராஜா அடிக்கடி சென்று வந்துள்ளார். இருவரும், கட்சியில் முக்கியமாகச் செயல்பட்டு, “டிவி’ குறித்த முடிவுகளில் ஓரணியில் செயல்பட்டுள்ளனர் என்றும், சைனி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

தவிர, பிப்., 13, 2009ல், நடைபெற்ற கலைஞர் “டிவி’ போர்டு மீட்டிங்கில் தான், “சினியுக்’ நிறுவனத்திடம் இருந்து 200 கோடி ரூபாய் பெறுவதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில், கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் பங்கேற்றுள்ளனர் என்பது உறுதியாகத் தெரிகிறது. இதை, கலைஞர் “டிவி’யைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அமிர்தம் ஆகியோர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் நம்புவதாகவும் சைனி குறிப்பிட்டுள்ளார். கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோரது பங்கு இந்த ஊழலில் மிகப்பெரிய அளவில் இருப்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. குற்றத்தின் தீவிரமும், ஆழமும் மிக பிரமாண்டமாக உள்ளன. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் சீரியசானவை. இதை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்களும் வலுவாக உள்ளன. எனவே, மனுதாரர் தனக்கு ஜாமின் வழங்கும்படி கேட்கும் கோரிக்கையில் நியாயம் இல்லை. இந்த குற்றச் சதியின் பின்னணியை ஆராயும் போது, சாட்சிகளாக இருப்பவர்கள் அனைவருமே ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கும் கலைஞர் “டிவி’யில் பணி புரிபவர்களாக உள்ளனர். எனவே, இப்போது ஜாமின் கேட்கும் இருவரையும் வெளியில் விட்டால், சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துவர். சாட்சிகளை கலைக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் முயற்சிகள் செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.

செய்திருக்கும் குற்றத்தின் ஆழம், அதன் முக்கியத்துவம், சுமத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தீவிர குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்திற்குமே ஏராளமான வலுவான ஆதாரங்களும் உள்ளன. இந்த அடிப்படையில் பார்க்கையில், கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டுமென்று கேட்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. இவர்களது கோரிக்கை நியாயமற்றது. ஆகவே, இவர்களது ஜாமின் கோரிக்கையை நிராகரிக்கிறேன். இவ்வாறு நீதிபதி சைனி குறிப்பிட்டுள்ளார். இனி, கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் ஜாமின் பெற, டில்லி ஐகோர்ட்டை நாட வேண்டும்.

கட்சி மூத்த நிர்வாகிகளுடன் கருணாநிதி ஆலோசனை: கனிமொழி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடனும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தினர்.

கருணாநிதியின் சி.ஐ.டி., காலனி வீட்டிற்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் அன்பழகன், ஸ்டாலின், தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீசெல்வம், பொன்முடி உள்ளிட்டோர் வந்தனர். கனிமொழி ஜாமின் மனு பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டதும், இவர்கள் வெளியே சென்றுவிட்டு, பகல் 2 மணிக்கு மீண்டும் வந்தனர். டில்லி கோர்ட்டில் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, கனிமொழி கைது செய்யப்பட்ட தகவல் வந்ததும், இவர்களுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். தி.க., தலைவர் வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். கனிமொழியின் தாய் ராஜாத்தி, நேற்று மாலை டில்லிக்கு சென்றார். கருணாநிதியின் மருத்துவர் கோபால், நேற்று மாலை சி.ஐ.டி., காலனி வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில், உடல்நிலை பாதிக்கப்பட்டு காரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி கைது வரை

2011 பிப்., 2: “2ஜி’ வழக்கு தொடர்பாக ராஜா, அவரது முன்னாள் தனி செயலர் சந்தோலியா மற்றும் முன்னாள் தகவல் தொடர்பு துறை செயலர் சித்தார்த்த பெகுரா ஆகியோர் சி.பி.ஐ.,யால் கைது. அனைவரும் சி.பி.ஐ., காவலில் அடைப்பு.
2011 பிப்., 8: ராஜாவுக்கு மேலும் 2 நாள் சி.பி.ஐ., காவல் நீட்டிப்பு. பெகுரா, சந்தோலியா, கோர்ட் காவலில் சிறையில் அடைப்பு.
பிப்., 8: ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர் சாகித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ.,யால் கைது.
பிப்., 10: ராஜாவின் சி.பி.ஐ., காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு.
பிப்., 14: ராஜா சி.பி.ஐ., காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு, உஸ்மான் பல்வாவுக்கு சி.பி.ஐ., காவல் 4 நாட்கள் நீட்டிப்பு.
பிப்., 17: ராஜா, திகார் சிறையில் அடைப்பு.
பிப்., 18: பல்வா, சிறையில் அடைப்பு.
பிப்., 24: பல்வா, “கலைஞர் டிவி’க்கு சலுகை காட்டினார் என, டில்லி கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்.
பிப்., 28: வீடியோ கான்பரன்சிங் விசாரணைக்கு அனுமதிக்குமாறு ராஜா கோரிக்கை.
மார்ச் 1: 63 பேர் விசாரணை வளையத்தில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல். ராஜா வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜராவதற்கு சி.பி.ஐ., கோர்ட் அனுமதி.
மார்ச் 14: டில்லி ஐகோர்ட், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிப்பதற்கு ஸ்பெஷல் கோர்ட் ஒன்றை அமைத்தது. பல்வாவும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராவதற்கு டில்லி கோர்ட் அனுமதி.
மார்ச் 29: முதல் குற்றப்பத்திரிகையை மார்ச் 31க்கு பதிலாக, ஏப்., 2ல் தாக்கல் செய்கிறோம் என்ற சி.பி.ஐ.,யின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்றது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகிய மேலும் இருவர் கைது.
ஏப்., 2: சி.பி.ஐ., சார்பில் ஸ்பெக்ட்ரம் வழக்கு சம்பந்தமாக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்.
ஏப்., 25: இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த கனிமொழி “கூட்டுச்சதியாளர்’ என சேர்ப்பு.
மே 6: கனிமொழி, கோர்ட்டில் ஆஜர்.
மே 20: கனிமொழி ஜாமின் மனுவை கோர்ட் நிராகரித்தது. அவர் கைது செய்யப்பட்டார்.

பணம் வந்த பாதை: கடந்த 2008ல் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சராக ராஜா இருந்தபோது, ஷாகித் உஸ்மான் பல்வா பங்குதாரராக இருக்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு 1,537 கோடி ரூபாய்க்கு “2ஜி’ லைசென்ஸ் வழங்கினார். ஒரு மாதத்துக்குள் 40 சதவீத பங்கை பல்வா, 4,500 கோடி ரூபாய்க்கு துபாய் நிறுவனத்துக்கு விற்று லாபம் அடைந்துள்ளார். “டிபி ரியாலிட்டி’ என்ற நிறுவனத்தின் நிர்வாக மேலாளராகவும் பல்வா இருக்கிறார். இந்நிறுவனத்திலிருந்து கலைஞர் “டிவி’க்கு 200 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்துள்ளது என சி.பி.ஐ., தெரிவித்தது. லைசென்ஸ் வழங்குவதில் ராஜா சலுகை காட்டியதற்காக பல்வா, இந்த தொகையை கலைஞர் “டிவி’க்கு அளித்தாக கூறப்படுகிறது. 214 கோடி ரூபாய் கடனாக தான் பெறப்பட்டது. அதையும் வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டோம் என்று கலைஞர் “டிவி’ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நன்றி: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=243843