தீபாவளிக் கவிதை: நல் தீபாவளி !

பட்டாடை உடுத்திடுவோம்
பட்சணமும் உண்டிடுவோம்
மத்தாப்புக் கொழுத்திடுவோம்
மனமகிழ இருந்திடுவோம்
தப்புக்கள் தனைமறப்போம்
தாழ்பணிவோம் மூத்தோரை
எப்பவுமே இறைநினைப்பை
இதயமதில் இருத்திடுவோம் ! ஆடம்பரம் அனைத்தையுமே
அனைவருமே ஒதுக்கிடுவோம்
ஆதரவு இல்லார்க்கு
அருந்துணையாய் அமைந்திடுவோம்
தீதுடைய செயல்களைநாம்
தீண்டாமல் இருந்திடுவோம்
தீபாவளி எமக்கு
சிறப்பாக அமையுமன்றோ !

பட்டாசும் மத்தாப்பும்
பலபேரின் உழைப்பாகும்
பட்டாசும் மத்தாப்பும்
பலவிழப்பை தந்துவிடும்
இட்டமுடன் வெடிக்காமல்
எச்சரிக்கை மனங்கொண்டால்
எல்லோர்க்கும் தீபாவளி
இங்கிதமாய் இருக்குமன்றோ !

வியாபாரம் தனையெண்ணி
விதம்விதமாய் பட்சணங்கள்
வண்ணவண்ண நிறமூட்டி
வாவெனவே அழைத்துநிற்கும்
அவையுள்ளே பொதிந்திருக்கும்
ஆரோக்கியம் தனைக்கெடுக்கும்
அத்தனையும் தீபாவளி
அகமகிழ்வைக் குலைக்குமன்றோ !

வேகமாய் வாகனங்கள்
ஓட்டுவதைத் தவிர்த்திடுவோம்
வேகமது கூடிவிடின்
விபரீதம் ஆகிவிடும்
தீபாவளித் தினத்தில்
தேடிவரும் ஆபத்தாய்
திசைதெறிக்க ஓடிவரும்
வாகனத்தைத் தவிர்திடுவோம் !

மதுவரக்கன் தனையெவரும்
மனமதிலே  நினையாமல்
புதுவசந்தம் வீசுதற்கு
புத்துணர்வு பெற்றிடுவோம்
தீபாவளி நாளில்
திருப்பங்கள் பலவந்தால்
தித்திப்பு யாவருக்கும்
சொத்தாக இருக்குமன்றோ !

நல்லவற்றைச் சிந்திந்தால்
நாளுமே தீபாவளி
நல்லவழி நாம்நடப்பின்
நாட்டுக்கே தீபாவளி
அல்லவைகள் அகற்றிவிடின்
அனைவருக்கும் தீபாவளி
அமைதியுடன்  இறைபணிந்தால்
அமைந்திடும் நல்தீபாவளி !

jeyaramiyer@yahoo.com.au