நாவலாக எழுதியிருக்கவேண்டிய ஒரு படைப்பு சுயவரலாறாகியுள்ளது. தெணியான் ஒரு கதைசொல்லி. சிறுகதைகள், நாவல்கள் உட்பட சில தொடர்களும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். அவரது எந்தவொரு படைப்பை உன்னிப்பாகப்பார்த்தாலும் அவர் ஒரு சிறந்த கதைசொல்லி என்ற முடிவுக்கே வாசகர்கள் வந்துவிடுவார்கள். ‘இன்னும் சொல்லாதவை’ நுலைப்படித்தபோது எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தவர் தமிழ்நாட்டின் கரிசல்கட்டுமைந்தன் கி.ராஜநாராயணன். அவரும் சிறந்த கதைசொல்லி. அத்துடன் பிரதேச மொழிவழக்குகளை அநாயசமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லவல்லவர். தெணியான் எங்கள் தேசத்தின் வடமராட்சிக்கதைசொல்லி. இந்நூலின் பதிப்புரையில் பின்வரும் பந்தி எனக்கு முக்கியத்துவமாகப்பட்டது. ஒரு எழுத்தாளனது புனைவுலகை தரிசித்து அதில் லயித்துக்கிடக்கும் வாசகனுக்கு அந்த எழுத்தாளனது சொந்த வாழ்வைப்பற்றிய இரகசியங்களை அறிந்துகொள்ளும்போது அந்த எழுத்தாளனைப்பற்றி உருவாக்கிவைத்திருக்கும் மனக்கோட்டை உடைந்து சிதறுவதே இயல்பு. இதனால்தானோ என்னவோ பல பிரபலங்கள் தங்களது சொந்த வாழ்வை வெளிப்படுத்துவதில்லை. தங்களது சுற்றம், நட்பு இவற்றின்மீது வெளிச்சம்படாமல் கவனமாகப்பார்த்துக்கொள்கின்றனர். இந்நிலைக்கு மாறாக தெணியானின் வாழ்வனுபவங்களை படிக்கும்போது அவர் மீதான நமது மதிப்பு பல மடங்கு கூடுகிறது. அவருடன் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.
கவியரசு கண்ணதாசன் ஒரு தடவை இப்படிச்சொன்னார்: மரத்தைப்பார். அதில் பூக்கும் மலர்களை, காய் கனிகளைப்பார். ரசிப்பாய்.. ஆனால் அந்த மரத்தின் வேரைப்பார்க்க முயலாதே. பிறகு, மரமும் இருக்காது உனது ரசனையும் பொய்த்துவிடும். ஒரு படைப்பாளியின் உள் அந்தரங்கம் ரசனைக்குரியதாக இருக்காது என்பதுதான் கவியரசுவின் கருத்து. வெளிப்படையான மனிதராகவும் தனக்கு சரியெனப்பட்டதை துணிந்து சொல்லும் தன்னம்பிக்கையுடையவராகவும் பல தசாப்தகாலமாக எழுத்துலகில் இயங்கிவரும் தெணியான் தனது வாசகர்களுக்கு சொல்லவேண்டிய கதைகள் நிறையவுள்ளன. அவர் இந்த நூலிலும் மல்லிகைதொடரிலும் சொல்லியிருப்பவவை சொற்பம்தான். அரைநூற்றாண்டுக்கு முன்னர் அவர் வாழ்ந்த வடமராட்சியும் மாந்தர்களும் குறிப்பாக பெற்றோர் சுற்றத்தவர் எப்படி வாழ்ந்தனர் என்பதை வாழ்வனுபங்களாக சித்திரிக்கின்றார்.
முகமூடியோடு பிறந்த தெணியான், வளர்ந்து பெரியவனாகியதும், ஐயா (தந்தை) இறந்தபின்னர் நடக்கும் சவண்டி கிரியையின்போது அதனைச்செய்யவந்த ஐயரின் காலில் விழுந்து வணங்கமறுக்கும் ‘முகமூடி’ அணியாத முழுமனிதனாக காட்சி தருகிறார். ஒரு படைப்பாளியின் ஆற்றல் வாசகனின் சிந்தனையில் ஊடுறுவுவதில்தான் பெரிதும் தங்கியிருக்கிறது. தெணியான் வாசகனிடத்தில் ஊடுறுவுவதுடன் மட்டும் நின்றுவிடாமல் வாசகனையும் தன்னோடு அழைத்துச்செல்கிறார். தான் பிறந்து, தவழ்ந்து வளர்ந்து நடமாடிய வடமராட்சியை சுற்றிக்காண்பிக்கின்றார். நாமும் அவர் இன்னும் சொல்லதவற்றை கேட்டறிவதற்காக அவரைப்பின்தொடருகின்றோம். அம்மாக்களின் உழைப்பு பெரிதாகப் பேசப்படுவதில்லை. வேலை…வேலையே வாழ்க்கை என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் கி.ராஜநாராயணன். இங்கே இந்தத்தொடரில் தனது தாயாரின் உழைப்புபற்றி சிலாகித்து எழுதுகிறார் தெணியான். அம்மாமாருக்கு வீட்டில் கூட்டிப்பெருக்கி சமைப்பது மட்டும் அல்ல வேலை. அதற்கும் அப்பால் அவர்கள் சகிக்கும், சுமக்கும் வேலைகளும் அதிகம்தான்.
ஒரு சண்டியருக்கு பீடி வாங்கிக்கொடுக்கும் வேலையை தெணியான் வெறுப்போடு ஏற்றுக்கொள்கிறார். பீடியை தெணியான் வீடி என்றுதான் குறிப்பிடுகிறார். தனது வெறுப்பை அவர் காண்பிக்கும் விதம் வேடிக்கையானது. வெறுப்புக்கு கழிவுதான் அவருக்குதவுகிறது. பிடியில் சிறுநீர் கழித்துவிட்டு கொடுக்கிறார். எனக்கு கண்ணதாசனுடன் கமல்ஹாசன் நடித்த மகாநதியும் நினைவுக்கு வருகிறது.
“நீ உருப்படமாட்டாய்” என்று சொன்ன பாடசலை ஆசிரியரிடமிருந்த வெறுப்பை பிறிதொரு காலத்தில் அந்த பாடசாலைக்கட்டிடத்தில் சிறுநீர் பெய்து காட்டிக்கொண்டார் கண்ணதாசன். மகாநதி படத்தில் சிறையிலிருக்கும் கமலுக்கு காதலியிடமிருந்து வரும் கடிதத்தின்மீது சிறுநீர்கழித்து தனது வெறுப்பை ஒரு சிறைக்காவலன் காண்பிக்கின்றான். வெறுப்புக்கு சிறுநீர்தான் பதிலடியோ? என்று எண்ணத்தோன்றியது. இந்த நூல் தமிழ்நாட்டில் வெளியாகியிருக்கிறது. பிரதேச மொழிவழக்குகள் நிரம்பிய இந்த நூலை தமிழக வாசகர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எமது மொழிவழக்குகள் தங்களுக்கு புரியவில்லை என்று இப்பொழுதும் சொல்லிக்கொண்டிருக்கும் தமிழக படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் இந்நூல் மற்றுமொரு வரவு.