தேசங்கள் கடந்த கலை, இலக்கிய நேசர்! சிவாஜியை தமிழர் பண்பாட்டியல் குறிப்பிலும், ஜெயகாந்தனை உலகப்பொதுமனிதனாகவும் காண்பித்த ஆவணப்பட தயாரிப்பாளர் கனடா மூர்த்தி!

தேசங்கள் கடந்த கலை, இலக்கிய நேசர்! சிவாஜியை தமிழர் பண்பாட்டியல் குறிப்பிலும், ஜெயகாந்தனை உலகப்பொதுமனிதனாகவும் காண்பித்த ஆவணப்பட தயாரிப்பாளர் கனடா மூர்த்தி!முகநூல் கலாசாரம் தீவிரமாகியிருக்கும் சமகாலத்தில், முகநூல் எழுத்தாளர்களும் பெருகியிருக்கிறார்கள். இக்கலாசாரத்தின் கோலத்தினால் முகவரிகளை இழந்தவர்களும் அநேகம். அதே சமயம் முகநூல்களில் பதிவாகும் அரட்டை அரங்கங்களை முகநூல் பாவனையற்றவர்களிடத்தில் எடுத்துச்சென்று சேர்க்கும் எழுத்தாளர்களும், அவற்றை மீள் பதிவுசெய்து பொதுவெளிக்கு சமர்ப்பிக்கின்ற இதழ்கள், பத்திரிகைகளும் அநேகம். அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், மற்றும் பிரபலமானவர்களினால் உதிர்க்கப்படும் வார்த்தைகளுக்கு கிண்டலடித்து அவற்றுக்குப்பொருத்தமான கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் முதலானோர் திரைப்படங்களில் அவிழ்த்துவிடும் ஜோக்குகளையும் பதிவேற்றி வாசகர்களை கலகலப்பூட்டும் முகநூல் எழுத்தாளர்களும் தோன்றியிருக்கிறார்கள். அத்தகைய வழக்கமான பதிவேற்றலிலிருந்து முற்றாக வேறுபட்டு, இலங்கையினதும் சர்வதேசத்தினதும் சமகால அரசியல் அதிர்வேட்டுக்கள் தொடர்பாக முகநூல்களில் எழுதுபவர்களின் கருத்துக்களையும் அதற்குவரும் எதிர்வினைகளையும் சுவாரஸ்யம் குன்றாமல் தொகுத்து தனது பார்வையுடன் எழுதிவருகிறார் எமது கலை, இலக்கிய நண்பர் கனடா மூர்த்தி. அதற்கு அவர் சூட்டியிருக்கும் தலைப்பு: “கண்டதைச்சொல்லுகிறேன்” கனடாவிலிருந்து வெளியாகும் தமிழர் தகவல் மாத இதழில், தான் முகநூலில் கண்டவற்றை குறிப்பாக அரசியல் அதிர்வேட்டுகளை அரங்கேற்றிவருகிறார். சமகால அரசியல் என்பதனால் இதனைப்படிக்கும் தமிழ்அரசியல் வாதிகளும் அரசியல் ஆய்வாளர்களும் அரசியல் ஈடுபாடுள்ள இலக்கிய பிரதியாளர்களும் கண்டதைச்சொல்லுகிறேன் பத்தியை ஆர்முடன் படித்துவருகிறார்கள். எனது நீண்ட கால கலை, இலக்கிய நண்பர் கனடா மூர்த்தி அவர்களைப்பற்றிய கட்டுரையையே இந்த ஆண்டிற்கான எனது நூறாவது பதிவாக இங்கு சமர்ப்பிக்கின்றேன். 2017 ஆம் ஆண்டு விடைபெறும் தருணத்தில் நான் எழுதும் நூறாவது ஆக்கம்தான் இந்தப்பதிவு.

நான் சந்தித்த பல கலை, இலக்கியவாதிகளில் கனடா மூர்த்தி சற்று வித்தியாசமானவர். இவரது வாழ்வும் பணிகளும் பல்தேசங்களிலும் நீடித்துத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வளர்முகநாடான இலங்கையில் பிறந்தவர். ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் நாடாக விளங்கிய சோவியத் ஒன்றியத்தில் லுமும்பா பல்கலைக்கழகத்தில் படித்தவர், பின்னர் சிங்கப்பூரில் பணியாற்றியவர். தற்போது கனடாவை தமது வாழ்விடமாகக்கொண்டிருப்பவர். இலங்கையில் வடபுலத்தில் மூளாயில் பிறந்திருக்கும் மூர்த்தி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர். இளம் வயதில் தனக்குக் கிடைத்த சில சாதனங்கள் மூலம் ஒரு கணினியை வடிவமைத்தவர். அதனால் ” கம்பியூட்டர் மூர்த்தி” என்று ஈழநாடு இவரை வர்ணித்து செய்தியும் வெளியிட்டுள்ளதாக அறிகின்றோம். 1973 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு கம்பியூட்டரில் ஆர்வம்கொண்டிருந்தவர், அங்கிருந்து 1977 ஆம் ஆண்டில் ரஷ்யாவுக்கு மேற்கல்விக்காகச்சென்று இயந்திரவியல் பொறியியல் பட்டதாரியானவர். பின்னர் கனடா மொன்றீயலில் முதுகலைமாணி பட்டமும்பெற்றவர். சிங்கப்பூர்தொலைக்காட்சியின் செய்திப்பிரிவில், எதிரொலி என்ற நடப்பு விவகார (Current Affairs) நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியவர். சிங்கப்பூர் பொதுநூலகத்தில் பணியாற்றியவாறே, தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில், சிங்கப்பூர் தமிழர்களுக்காக மரபுடமை ஆவணக்கண்காட்சி தயாரிப்பிலும் ஈடுபட்டவர். அத்துடன், காலச்சக்கரம் என்ற மகுடத்தில், தென்கிழக்காசியாவில், கிறிஸ்துவுக்கு முன்னர் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தற்காலம் வரையில் தமிழ் பரவல் தொடர்பான ஆவணப்படத்தையும் தயாரிக்கும் குழுவிலும் பணியாற்றியவர். இவருடன் இணைந்து இயங்கியவர்தான் திரைப்படநடிகர், கலைஞர் நாசர்.

சிங்கப்பூர் தொலைக்காட்சிக்காக தென்னிந்திய நட்சத்திரம் மனோரமா நடித்த “புதிதாய் பற” என்னும் தொலைக்காட்சி நாடகத்தையும் “கூலி” என்னும் குறும்படத்தையும் இயக்கியிருப்பவர். ஒரு இயந்திரவியல் பொறியியலாளரிடம் கலையும் இலக்கியமும் ஊற்றெடுத்திருந்தமையால் எமது நட்புவட்டத்திலும் நீண்டகாலமாக இணைந்திருப்பவர். அந்த இணைப்பு வலுப்பெற்றதற்கு ஜெயகாந்தனும், பேராசிரியர் கா. சிவத்தம்பியும்தான் காரணம் என்பேன். இவர்கள் இருவரதும் பெறாமகன்தான் இந்த மூர்த்தி என்று சொன்னால் அது மிகையான கூற்றுஅல்ல. எம்மத்தியிலிருந்து விடைபெற்றுவிட்ட இந்த பேராளுமைகள் பற்றி மூர்த்தியுடன் உரையாடும்போது பரவச உணர்ச்சி மேலீட்டால் இவரது கண்கள் பனித்துவிடுவதையும் அவதானித்திருக்கின்றேன்.

மூர்த்தி லுமும்பாவில் படிக்கின்ற காலத்தில்தான் ஜே.கே. என்ற அடைமொழியில் பிரபல்யமாகியிருந்த ஜெயகாந்தனும் சோவியத்தின் அழைப்பில் அங்கு சென்றிருக்கிறார். மூர்த்தியும் அவரது மாணவ நண்பர்களும் ஜெயகாந்தனுடன் இலங்கை அரசியலும் பேசநேர்ந்திருக்கிறது. இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கொதிநிலையிலிருந்த காலம் என்பதால் பிரிவினைக்கோரிக்கை – சுயநிர்ணய உரிமை தொடர்பாக இரண்டுதரப்பாருக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் சூடுபிடித்திருக்கிறது. ஜெயகாந்தன், உணர்ச்சிப்பிழம்பாக தர்மாவேசத்துடன் பேசும் காலம் அது. மூத்ததலைமுறையைச்சேர்ந்த அவருக்கும் இளம் தலைமுறையைச்சேர்ந்த மூர்த்திக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்களின்போது வார்த்தைகளில் சூடுபறந்திருக்கிறது. . சகிக்கமுடியாத வார்த்தைகளினாலும் ஜெயகாந்தன் இவரை அக்காலப்பகுதியில் திட்டியிருக்கிறார். உணர்ச்சிமயமான அந்த ஜே.கே.யை ஏற்கவும் முடியாமல் இழக்கவும் முடியாமல் தவித்தவர்தான் மூர்த்தி. அதற்கு ஜே.கே.யின் படைப்பாளுமையும் மேதாவிலாசமும்தான் அடிப்படை. மோதலில் ஆரம்பித்து நட்பில் பூத்தமலர்கள்தான் ஜே.கே.யும் கனடாமூர்த்தியும். கலை, இலக்கிய நேசத்திற்கு அப்பால் தந்தை – மகன் பாசப்பிணைப்பில் வாழ்ந்திருப்பவர்கள்.

கலைஞருடன்...

ஜெயகாந்தனின் சிலநேரங்கள் சில மனிதர்கள் நாவலைப்படித்திருப்பீர்கள், அது திரைப்படமானதும் பார்த்திருப்பீர்கள். ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் சிறுகதையின் தொடர்ச்சிதான் சிலநேரங்கள் சில மனிதர்கள். அதில் ஆர்.கே.வி. என்ற எழுத்தாளராக வருவார் நாகேஷ். அவருக்காக ஒரு பாடலை மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் பாடுகிறார். “கண்டதைச்சொல்லுகிறேன். உங்கள் கதையை சொல்லுகிறேன்.” திரைப்படத்தின் சுவடியை எழுதியிருக்கும் ஜெயகாந்தனே அந்தப்பாடலையும் இயற்றியவர். ஜே.கே.யிடம் அபிமானம் கொண்டிருக்கும் கனடா மூர்த்தியும் கண்டதைச்சொல்லுகிறேன் என்னும் தலைப்பில் தற்பொழுது எழுதிவருகிறார். ரஷ்யாவில் படிக்கும் காலத்திலேயே தமிழ் இலக்கியம், ஊடகம் முதலான துறைகளில் இவருக்கு ஆர்வம் இருந்தமையால், தொடர்ந்து வாசிக்கும் பழக்கமும் கொண்டிருந்தவர். வாசிப்பு அனுபவம் இவருக்கு கிடைத்த புத்திக்கொள்முதல். கனடாவில் கியூபெக் மாநிலத்தில் நாயகன் என்னும் இதழில் எழுதத்தொடங்கினார். பின்னர் அரசியல் விமர்சன ஏடான தாயகம் இதழிலும் தனது கருத்துக்களை பதிவேற்றினார். இவ்வாறு தன்னை வளர்த்துக்கொண்டு, ஆவணப்படங்கள் தொடர்பாகவும் தீவிரமாக ஈடுபாடு காண்பித்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்தவுடன் பேராசிரியர் கா. சிவத்தம்பி, இலங்கை இதழ்களில் ஒரு நல்ல கட்டுரை எழுதியிருந்தார். சிவாஜியின் உணர்ச்சிகரமான மிகை நடிப்புகுறித்தும் அதன் தோற்றப்பாடு, தமிழர் பண்பாட்டில் அதன்வீச்சு பற்றியெல்லாம் அலசி ஆராய்ந்திருந்தார். அக்கட்டுரை கலை உலகில் முக்கியத்துமானது. அந்தக்கட்டுரையை அடியொற்றியே ஒரு ஆவணப்படத்தை இயக்குவதற்கு தீர்மானித்த கனடா மூர்த்தி துரிதமாக இயங்கினார். இலங்கைவந்து சிவத்தம்பியை சந்தித்து அவருடைய கருத்துக்களுக்கேற்ப காட்சிகளை தொகுத்து அருமையான ஆவணப்படத்தை வெளியிட்டார். சிவாஜிகணேசன் ஒரு பண்பாட்டியல் குறிப்பு என்ற தலைப்பில் அந்த ஆவணப்படம் கலையுலகத்தினரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஜெயகாந்தன் பற்றியும் ஒரு ஆவணப்படத்தை இயக்கவிரும்பிய கனடா மூர்த்தி, அதற்கும் சிவத்தம்பி அவர்களின் கருத்துரைகளையே நாடினார். உலகப்பொது மனிதன் ஜெயகாந்தன் என்ற தலைப்பில் அது உருவானது. அதற்காகவும் மூர்த்தி சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்தார். ஜெயகாந்தனின் கதைகள் தொடர்பாக ஏற்கனவே, சிவத்தம்பி தமிழ்ச்சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தமது நூலில் விரிவாக ஆராய்ந்திருப்பவர். மூர்த்தியிடத்தில் ஆழ்ந்த நேசிப்புகொண்டிருந்த அவர், அதற்கும் ஆழமான கருத்துச்செறிவான உரையை வழங்கியிருந்தார். கொழும்பில் 2011 இல் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் இந்த ஆவணப்படம் முதன் முதலில் காண்பிக்கப்பட்டது. மூர்த்தியே இலங்கை வந்து அதனைத்தயாரித்ததன் நோக்கம் பற்றி மாநாட்டில் உரையாற்றினார். அதன் பின்னர் சென்னையிலும் அவுஸ்திரேலியா, கனடா உட்பட பல நாடுகளிலும் காண்பிக்கப்பட்டது. சென்னையில் வெளியான நிழல் திரைப்பட, குறும்பட, ஆவணப்பட இதழின் ஏற்பாட்டில் குறும்பட போட்டியை மெல்பன் தமிழ்ச்சங்கம் ஒழுங்குசெய்தபோது சிவாஜிகணேசன் ஒரு பண்பாட்டியல் குறிப்பு காண்பிக்கப்பட்டது. பின்னர் குவின்ஸ்லாந்தில் நடந்த கலை – இலக்கியம் நிகழ்விலும் காண்பிக்கப்பட்டது.

ஜெயகாந்தனின் நாவல்கள், சிறுகதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. தொலைக்காட்சி நாடகமாகவும் ஒளிபரப்பாகியிருக்கின்றன. எனினும் அவரது தமிழ்சினிமாவுக்கான சிறந்த பங்களிப்பு குறித்து தமிழ்சினிமா உலகம் சரியான அவதானிப்பையோ அங்கீகாரத்தையோ வழங்கவில்லை என்ற மனக்குறை கனடா மூர்த்தியிடத்திலும் நீடிக்கிறது. ஜெயகாந்தனுக்கு எழுபத்தியைந்து வயது பிறந்தவேளையில் சென்னையில் நடந்த விழாவில் கலந்துகொண்டிருக்கும் கனடா மூர்த்தி, அந்த மேடையில் கமல்ஹாசன், வைரமுத்து ஆகியோர் முன்னிலையிலேயே தமது மனக்குறையை பகிரங்கமாகச்சொன்னார். “தமிழ்சினிமா உலகம் அப்படித்தான் இருக்கும். எனினும் உரிய நேரத்தில் அந்த கௌரவமும் அங்கீகாரமும் ஜெயகாந்தனுக்கு வழங்கப்படும்” என்றார் கமல்ஹாசன். அந்தக்காட்சியும் உலகப்பொது மனிதன் ஜெயகாந்தன் ஆவணப்படத்தில் இடம்பெறுகிறது. ஆனால், நூற்றாண்டு கண்டுவிட்ட இந்தியத் திரையுலகம் அந்த விழாவை அரச மட்டத்தில் நடத்தியபோதும் ஜெயகாந்தனுக்கு தரப்படவில்லை. அவரது கதைகளில் தயாரிக்கப்பட்ட எந்த ஒரு படமும் காண்பிக்கப்படவுமில்லை. குறிப்பிட்ட ஆவணப்படத்தை பார்த்திருக்கும் பாலுமகேந்திரா ஜே.கே.அவர்களுக்கு இந்தப்படமே பெரிய கௌரவம்தான் என்று புகழ்ந்திருக்கிறார். குறிப்பிட்ட ஆவணப்படம் பலரதும் அவதானிப்புக்கும் இலக்கானதற்கு பேராசிரியர் சிவத்தம்பியின் கருத்தாழமும் விரிவும்கொண்ட உரைகளே பிரதான காரணம் எனச்சொல்கிறார் கனடா மூர்த்தி.

ஜெயகாந்தனுடன்....

இந்தியாவின் நடிகர்திலகத்திற்காகவும், இந்தியாவின் இலக்கியவாதிக்காகவும் ஆவணப்படம் தயாரித்த மூர்த்தி, இலங்கை பேராசிரியரையே பக்கத்துணையாகக்கொண்டு இந்த அரியசெயல்களைச் சாதித்திருக்கிறார். இலங்கையிலும் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் ஏராளமான கலை, இலக்கிய வாதிகளை நண்பர்களாகச்சம்பாதித்திருக்கும் கனடா மூர்த்தி, தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் பற்றியும் ஒரு ஆவணப்படம் தயாரிக்கும் எண்ணக்கருவை சுமந்துகொண்டிருக்கிறார். தற்சமயம் முதல் தடவையாக மெல்பன் வந்திருக்கும் அவர், இங்கு கண்டதையும் தமது எழுத்தில் சொல்லத் தொடங்குவார் எனக்கருதுகின்றோம்.

letchumananm@gmail.com