தொடர்நாவல்: கணங்களும், குணங்களும் (காயத்ரியின் கதை பகுதி மூன்று (1 -2))

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி ஒன்று - கருணாகரன் கதை ( 1-6)– தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்’ நாவல்தான் ‘தாயகம்’ பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். இந்த நாவல் பிறந்த கதை தற்செயலானது. என்னுடைய பால்ய காலத்து நண்பர்களிலொருவர் கீதானந்தசிவம் சிவனடியான். இவர் யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். பலவருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் நன்மை, தீமை பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் எனக்கு இந்நாவலின் மையக்கருத்து மனதிலுதயமானது. எதற்காக மனிதர்கள் தவறுகள் செய்கின்றார்கள்? என்ற கேள்வியின் விளைவாக எழுந்த தர்க்கமே ‘கணங்களும், குணங்களும்’ நாவலாக உருவெடுத்தது. ஒரு சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக ‘பதிவுகளி’ல் வெளியாகின்றது.


பகுதி மூன்று: காயத்ரியின் கதை

அத்தியாயம் ஒன்று: புயலான உள்ளம்

நான் நிச்சயமாகவே எதிர்பார்க்கவில்லை. அவன் மீண்டும் என் வாழ்வில் குறுக்கிடுவான் என்று. ஏற்கனவே உடைத்து  விட்டிருந்த அப்பா கூட இதை எதிர்பார்த்திருக்கவில்லை தான். எதற்காக இவன் மீண்டும் வந்தான்? ஏற்கனவே செய்தது போதாதென்றா. அமைதியான துள்ளலுடன் ஆடிச்செல்லும் நதியாக ஓடிக்கொண்டிருந்த வாழ்வை சுழல்கள் நிறைந்து பாயும் காட்டாறாக்கி விட்டுப் போனவன் மீண்டும் எதற்காக? மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறானாம். பாவ மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறானாம். பெண்மை எவ்வளவு இளக்காரமாய் போய் விட்டது இவர்களிற்கு. மன்னிப்புக் கேட்டு விடுவதால் மட்டும் இவன் செய்த குற்றம் இல்லையென்று ஆகிவிடுமா என்ன?

இவனைப் பற்றி எண்ணியதுமே என்னிடத்தில் இவன் மேல் ஒருவிதமான அருவருப்புத்தான் எழுகிறது. மிருகமொன்றைப் பார்ப்பது போன்றதொரு உணர்வு. என்மேலேயே எனக்கு ஒருவிதமான அருவருப்பு. நான் மிகவும் மலிந்தவளாக, அசுத்தமானவளாக, அருவருக்கத்தக்கவளாக எனக்கே தெரிகிறேன். வாழ்க்கை வெறுப்பாக, அசிங்கமானதாக மாறி விடுகின்றது. ஒரு பெண்ணின் உணர்வுகளை, உள்ளத்து வேட்கைகளை, வெறும் உடலளவில் உறுதியானவர்களாக இருந்து விட்ட காரணத்தினால் இவர்கள் எவ்வளவு இலகுவாகக் காலடியில் போட்டு நசித்து விடுகின்றார்கள். இவனைப் பற்றிய நினைவுகள் தோன்றும் போதெல்லாம் எனக்கு அந்தக் கணம் தான் தெரிகிறது. எனது கெஞ்சல்கள். வேண்டுதல்கள். எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, வெறிமிருகமாக குலைத்து, சிதைத்து. அருவருப்பாயிருக்கிறது. நாங்களென்ன அப்படிப் பெரிய பாவம் செய்தோம். இத்தகையதொரு தண்டனையை அடைவதற்கு. அதன் பிறகு வாழ்வு தான் எவ்வளவு தலைகீழாக மாறி விட்டது. அன்று இடிந்து போன அப்பா இடிந்து போனவராக மாறி விட்டார்.

என் வாழ்வோ கசந்து போயே விட்டது. இன்பமாக புத்துணர்வுடன், எழிலாக, நம்பிக்கைக்குரியதாக, விளங்கிய உலகு, வாழ்வு, வெறுப்புக்குரியதான ஒன்றாக பயனற்ற நம்பிக்கையற்ற ஒன்றாக மாறியே விட்டது. உயிர்த்துடிப்புடன் கூடிய இயக்கம் வெறும் நடைப்பினமானதாக மாறி விட்டது. அன்று மாறிய வாழ்வு தான். இத்தனை வருடங்களாகியும் அதே மாதிரி. தாமரையிலைத் தண்ணிராக உருண்டோடியிருக்கிறது.

சில வேளைகளில் எனக்கு என்மேலேயே ஆத்திரமும் வெறுப்பும் கொதித்தெழுகின்றன. என் வாழ்வைச் சீரழித்தது அவனா அல்லது நானா என்று என்னையே கேட்டுக் கொள்ளக் கூடத் தோன்றும். அன்று நடந்து விட்ட சம்பவத்திற்கு நிச்சயம் நான் பொறுப்பு இல்லை. அப்படியிருக்க நானேன் வீணாக என் வாழ்வை வருத்திக் கொள்ள வேண்டும்? கேட்டுக் கொள்வேன். ஆனால் இங்குதான் தத்துவம் நடைமுறையிடம் தோற்றோடி ஒளிந்து விடுகின்றது. எவ்வளவு தான் முயன்றாலும் மீண்டும், மீண்டும் நான் பிறந்து தவழ்ந்து வளர்ந்த சூழலின் கனம் இறுக்கமாக, வலிமையுடன் என்னை மூடி அடக்கி அமர்த்தி விடுகின்றது. இதற்கு ஒருவேளை நான் பெண்ணாக இச்சமூகத்தில் வந்து பிறந்து விட்டது ஒரு காரணமாயிருக்கலாம். பரம்பரை பரம்பரையாக அடங்கி ஒடுங்கி, அடக்கப்பட்டு வந்த போக்கு, தன்மை காரணாமாயிருக்கலாம். ஒரு சில நாட்களில் வாழ்வின் வெற்றிக்கு நல்வழி கூறும் நூல்களைப் படித்ததும் ஒருவிதமான புத்துணர்வுடன் வலிமையுடன் நம்பிக்கையுடன் இவ்வுலகை எதிர்த்து நிற்க வேண்டும் போல் தோன்றும். ஆனால் விரைவிலேயே அவ்வுணர்வடங்கி, காற்றுப் போன பலூனாக, மனது சோர்ந்து, தளர்ந்து போய் விடுகின்றது. பழைய குருடி கதைவைத் திறவடி கதையாக, வாழ்வு மறுபடியும் அதே தடங்களில் தொடரத் தொடங்கி விடுகிறது. என்னால் சூழலையும் மீற முடியவில்லை. என்னையும் மீற முடியவில்லை.

சிலவேளைகளில் ஒரு நினைவு எழும். இப்படியே வாழ்க்கை முழுவதும் தனிமையில் உழன்று, வாடிப் போய் விடவேண்டியது தானா. விதவைகள் மறுமணம் செய்வதில்லையா. எத்தனையோ பெண்கள் கணவர்களையே மாற்றுகின்றார்களே. நானேன் ஒருவரை மணம் செய்து கொள்ளக் கூடாது. ஆனால் அக்கேள்விக்கான பதிலை உடனேயே நான் அறிந்து தானிருந்தேன். திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் உணர்ந்து, புரிந்து, சேர்ந்து வாழ்வதற்கான முறையே தவிர, வெறும் பாலியல் உணர்வுகளிற்காக மட்டும் உண்டாகுமொரு தொடர்பு அல்லவே. என்னிடம் எந்த ஒரு ஆணிடமும் அந்தச் சம்பவத்திற்குப் பின்னால் எந்தவிதமான ஆத்மார்த்தமான பிணைப்போ அல்லது அத்தகைய மெல்லிய உணர்வலைகளோ ஏற்படவில்லையே. ஏன். இந்த நிலையில் என்னால் இன்னுமொரு திருமணம் என்பதையே நினைத்துப் பார்க்க முடியாமலிருந்தது. இவ்விடயத்தில் என் மனமோ உறுதியாக இருந்தது. உண்மையைக் கூறப் போனால் இதுவரையிலான என் வாழ்க்கையில் நான் மனம் விட்டுப் பழகியது இன்று நான் எவ்வளவுக்கு எவ்வளவு வெறுக்கிறனோ அவனோடு தான். இளமைக்கேயுரிய உணர்வுகளின் மெல்லிய தாலாட்டில், பழைய திரைப்படங்களில் வரும் சுசீலாவின் காதல் பாடல்களில் மயங்கி, அவனுடன் பழகுவதை ஒருவித ஆவலுடன், இன்பத்துடன் கழித்து வந்த அந்த வாழ்க்கையின் போக்கை மட்டும் அந்தச் சம்பவம் மட்டும் மாற்றியிருக்காவிட்டால் ஒருவேளை அவனையே திருமணம் செய்து கொண்டு குழந்தையும் குட்டியுமாக, சினிமாவும் கோயிலுமாக வாழ்வு ஓடிக் கொண்டிருக்குமோ? எண்ணங்கள். எண்ணங்கள். பலவிதமான எண்ணங்கள். எண்ணங்களில் தானே வாழ்வே ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சலித்துப் போன வாழ்வில் அகிலாவின் நட்பும் இல்லையென்றால். ஓரளவாவது வாழ்வில் இனிமை இருக்குமென்றால். அதற்குக் காரணம். அகிலா தான். ஆனால் இந்த நட்பும் நீடிக்காது. பாதியிலேயே முடிந்து விடுமோ என்று. அண்மைக்காலமாகவே மனதில் ஒரு வித உணர்வு. அடிக்கடி அவளது சம்பாஷணைகளில் அவன் அடிபடுவது காரணமாக இருக்குமோ. அவளும் பாவம். எனக்கு நல்லது செய்யத்தான் அவளும் முயற்சிக்கிறாள். ஆனால் அவையெல்லாம் அர்த்தமற்ற முயற்சிகள் என்பதை அவள் அறிவாளா என்ன? அதே சமயம் அப்பாவை நினைத்தால் தான் கவலையாக உள்ளது. அன்று மீண்டும் அவனைக் கண்டதில் இருந்து அவர் பெரிதும் உடைந்து போய் விட்டார். எவ்வளவு தூரம் அவன் மேல் அன்பைக் கொட்டி அவர் வளர்த்து வந்தார். ஆனால்  அதற்கு அவன் செய்த் கைம்மாறு. எவ்விதம் அவனால் அவ்விதம் நம்பிக்கைத் துரோகம், உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்ய முடிந்தது. எதற்காக மனிதர்கள். இவ்விதம் நடந்து கொள்கிறார்கள். நன்மை எது, தீமை எது என்பதெல்லாம் புரிந்து கொள்வதுதான் எல்லோரிற்குமுள்ளது. நம்பிக்கைத் துரோகம், உண்டவீட்டிற்கு இரண்டகம் கூடாதென்பது தெரிந்து தானிருக்கிறது. பிறகேன் இவ்விதம் ஒருபுறம் உபதேசங்கள் செய்து கொண்டே மறுபுறம் ஒருவரது உணர்வுகளை மதிக்காமல் நடந்து கொள்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று வேலையில்லை. காலைச் சூரியன் இன்னமும் கொதிப்பைக் காட்டத் தொடங்கவில்லை. ஆரம்பத்தில் எல்லோரும் இப்படித்தான் காலைச் சூரியன்களாக, இதமாக தண்ணென்று நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து விடுகின்றார்கள். போகப் போகத் தான் தங்கள் தங்களது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கி விடுகிறார்கள். அப்பா வெளியில் வாக்கிங் போனவர் இன்னும் வந்து சேரவில்லை. அவர் விரும்பிச் செய்யும் ஒரே செயல் இந்த வாக்கிங் தான். இதுபோல் தான் நான் விரும்பிச் செய்யும் ஒரே விசயமும் இந்த வீட்டுத் தோட்டம் தான். வளவின் பின் ஒரு கோடியில் கத்தரி, பூசணி, பயற்றங்காய், தக்காளி, மிளகாய் என்று பயிரிட்டிருந்தேன். காலைகளில் ஒரு வித எதிர்பார்ப்புடன் செழித்துக் கிடக்கும் செடி, கொடிகள். அவற்றிற்கு நீர் பாய்ச்சுவதில் ஒரு கணம் என்னை மறந்து விடுகிறேன். கூடவே பூக்கன்றுகளும் வீட்டின் முன்னால் வளர்த்திருந்தேன். ரோசா, மல்லிகை, செவ்வந்தி, கனகாம்பரம் இவற்றுடன் சிலவகை குரோட்டன்ஸ். காய்ந்து விட்ட என் வாழ்க்கையில் பசுமையுடன் சம்பந்தப்பட்ட விவகாரம் இந்தத் தோட்ட விவகாரம் தான். தேன்சிட்டுக்கள் சில ரோசாவை நாடியபடியிருந்தன. அணிற்பிள்ளையொன்று வாலைச்சுருட்டிப் பந்தாக்கியபடி அருகிலிருந்த மரத்தில் ஓடியது. தொலைவில் வளவிற்கப்பால் வயல் வெளியில் மணிப்புறாக்கள் சில பறந்து சென்றன. குயிலொன்று எங்கோவொரு மரத்தில் மறைந்திருந்தது. அதிகாலைப்பனியில் புற்கள் அடியில் சிலிர்த்து நின்றன.

“காயத்ரி”

யார் வந்தது என்று திரும்பிப் பார்த்தேன். அகிலா தான்.

“என்னடி அகிலா. இன்றைக்கு இந்த நேரத்தில்.” வழக்கமாய் அகிலா ஞாயிற்றுக்கிழமையென்றால் பின்னேரம் தான் வருவாள்.

“சும்மா போரடிச்சது. அதுதான்” இவ்விதம் கூறியவள் தொடர்ந்தாள்.

“எங்கேயடி அப்பா. இன்னும் “வாங்கிங்கால்’ வரவில்லையா?”

“இல்லையடி.”

நீர் வார்த்துக் கொண்டிருந்த பூவாளியை அருகினில் வைத்தேன். கைகளைச் சேலையில் துடைத்தேன். மடியில் தூக்கிச் செருகிக் கட்டியிருந்த சேலையைச் சிறிது இறக்கி விட்டேன். இருவரும் அருகிலிருந்த தென்னையை அண்டியிருந்த புல்லால் மூடப்பட்டிருந்த சிறு மேட்டில் அமர்ந்தோம். மெல்லிய தென்றல் தவழ்ந்தபடியிருந்தது. தொலைவில் லொறியொன்று இரைவது; வளவிற்கப்பால் விரிந்து கொண்டிருந்த வயல் நடுவே கோடிட்டிருந்த சாலையில் செல்வது தெரிந்தது.
காலைக்குரிய பல்வேறு விதமான ஒலிகளுடன் இயற்கை இனிமையாக இருந்தது.

“இயற்கை எவ்வளவு இனிமையாக, அழகாக இருக்கிறது காயத்ரீ”

நிச்சயமாக, இவள் எதற்கோ அடிபோடுகின்றாள் என்று பட்டது. அவளே தொடர்ந்தாள்.

“இரவும் பகலும், காலையும் மாலையும், இறப்பும் பிறப்பும், இன்பமும் துன்பமும், நன்மையும் தீமையுமாக. இயற்கையில் எல்லாமே இயற்கையாக இல்லையாடி..”

அவள் சொன்னதைச் சிந்தித்துப் பார்க்கிறேன். இவள் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக, வாழ்வின் இருபக்கங்களாக, இவை இருப்பது போல்படுகின்றன. ஆனால் என் வாழ்க்கையை மட்டும் எடுத்துப் பார்த்தால். நான் ஒருபக்கத்தை மட்டுமே தூக்கி வைத்துக் கொண்டு. வாழ்வைச் சீரழித்துக் கொண்டிருக்கிறேனா என்று.

“என்னடி காயத்ரீ. என்ன யோசனை”

“இல்லையடி. நீ சொன்னதைத் தான் யோசித்தேன். ஆனால்”

“என்னடி ஆனால். உன் இந்த ஆனால் தானடி எனக்குப் பிடிக்காத விசயம்”

அகிலாவின் குரலில் சிறிது கோபம் கூடத் தெரிந்தது. “தத்துவம் வேறு, நடைமுறை வேறு”

“சரியாப் போச்சுது. பழைய குருடி கதவைத் திறந்த கதைதான். காயத்ரீ உன்னுடைய மனம் இருக்கிறதே. அது உறைந்த பனிப்பாறையடி”

“அகிலா, நீ வேண்டுமானால் தத்துவங்களை அள்ளி வீசலாம். ஆனால் நடைமுறையில் பாதிக்கப்பட்டவள் நான். எனக்குத் தெரியும் இந்தச் சிக்கலின் தன்மை”

“நீ சொல்வது சளிதான் காயத்ரி, ஆனால் திருப்பித் திருப்பி, கெட்டதையே நினைத்துக் குமைவதற்குப் பதில், ஏன் நல்லதை நம்பிக்கையானதை நினைக்கக்கூடாது.”

“இப்ப நீ என்னதான் சொல்லவாறாய் அகிலா”

“காயத்ரீ நான் முன்பு சொன்னதைத் தான் இப்போதும் சொல்லப் போகிறேன். நீ ஏன் உன் வாழ்வை மாற்றியமைக்கக் கூடாது. உனது இந்தப் பிடிவாதமான போக்கால் நீ எத்தனைபேர் வாழ்க்கையை நோகடித்துக் கொண்டு இருக்கிறாய் தெரியுமா?”

“என்னடி சொல்கிறாய். நான் மற்றவர்  வாழ்க்கையை வீணடிக்கிறேனா. என்னடி அகிலா சொல்கிறாய்.”

“பின் என்னடி. பிடிவாதமாக கல்யாணமே செய்து கொள்வதில்லை என்று இருக்கிறாயே. அதைத்தான் சொல்கிறேன். இதனால் தானே உங்கப்பாவும் கவலையாக இருக்கிறார்”

“சொல்லியிருக்கிறேனா இல்லையா. எனக்கு முன் திருமணப் பேச்சே எடுக்காதேயென்று”

இதற்குச் சிறிது நேரம் மெளனம் இருந்த அகிலா தொடர்ந்தாள்.

“காயத்ரீ. நான் ஒன்று சொல்வேன் கோபிப்பாயா?”

“சொல்லேன் அகிலா. பிறகு பார்ப்போம்”

“பிறகு பார்ப்போம் என்ற கதை வேண்டாம்டி. கோபிப்பாயா இல்லையா இரண்டிலை ஒரு பதில் தான் வேண்டும் என்னடி காயத்ரீ”

இவன் எதற்கு அடிபோடுகிறாள் என்னவாக இருக்கும்.

“காயத்ரீ. நீ என் நெருங்கிய சினேகிதி இல்லையா.”

“யார் இல்லையென்று. சும்மா சுத்தி வளைக்காமல் விசயத்திற்கு வாடி”

“காயத்ரீ. நான் உன்னுடைய உண்மையான சினேகிதி என்றால் உண்மையை மறைக்காமல் சொல்ல வேண்டும். சொல்வாயா.”

“மறைக்கிறதற்கு அப்படியென்ன என்னிடம் இருக்கு. கேளேன்.”

“காயத்ரி. எனக்கென்னவோ பிடிவாதமாக திருமணப் பேச்சை மறுப்பதைப் பார்க்கும் போது இதற்கு பின்னால் ஏதோ பெரிய கதையொன்று இருக்க வேண்டும் போல் படுகிறதடி. மறைக்காமல் சொல்லிவிடடி.”

அகிலா நேரே விசயத்திற்கு வருவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதற்கு என்ன பதில் கூறுவது. திடீரென அகிலா இவ்விதம் கேட்டு விடவே சொல்வதற்குப் பதில் உடனே வரமாட்டேன் என்கிறது.

“அகிலா நீ நினைப்பதைப் போல் நான் அப்படியொன்று மில்லையடி.”

திடீரென எனக்கு எரிச்சல் எரிச்சலாக, சலிப்பு சலிப்பாக. ஒரு வித உணர்வு பரவியது. அவன் ஞாபகம் வந்து விட்டதா. அந்தக் கதையல்லவா இவள் கூறும்படி கேட்கிறாள். எதற்கு இவள் வந்து பழைய கதையெல்லாம் கிளறுகிறாள்.

“காயத்ரீ. என்னவோ உன் வார்த்தையில் எனக்கு நம்பிக்கை வரவில்லையடி. நீ ஏன் தான் என்னிடம் உண்மையை மறைக்கிறாயோ. எதையுமே மூடி மூடி அடக்கி உள்ளுக்குள்ளேயே வைப்பதால் பிரச்சனை மேலும் மேலும் அதிகமாகுமே தவிர குறையப் போவதில்லையடி.”

இதற்கு நான் உடனடியாக எதுவும் கூறவில்லை. மெளனமாகவிருந்தேன். செத்த பாம்பை அடிப்பதில் லாபமென்ன. அதற்குள் என் மெளனத்தைப் பயன்படுத்திக் கொண்டு அகிலாவே தொடர்ந்தாள்.

“காயத்ரீ. நான் ஒன்று ஒருவித முடிவோடு தான் இங்கு வந்திருக்கிறேன் என்னை மன்னித்துக் கொள்ளடி. காயத்ரீ நீயாகச் சொல்வாய் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நீயோ இறங்கிவருவதாயில்லை உண்மையைச் சொல்லப் போனால். எந்த உண்மையை நீ இதுவரை மறைந்து வந்திருக்கிறாயோ. அந்த உண்மையை . அந்தக் கதையை. கருணாகரன் எனக்குக் கூறிவிட்டாரடி”

‘என்ன? திடீரென ஏற்பட்ட பெரும் அதிர்ச்சியில் என் இதயம் படபடத்தது. இதுவரை உள்ளே குமுறிக் கொண்டிருந்த உணர்வுகள் வெடித்துப் பெருகின. இதுவரை காலமும் எனக்குள்ளே வைத்துப் பொருமிக் கொண்டிருந்ததால் கனத்து உறைந்து விட்டிருந்த நெஞ்சில், திடீரென ஒரு வடிகால் கிடைத்து விட்டதைப் போன்ற உணர்வுகள் பரவிட அகிலாவின் தோள்களைப் பற்றி முகம் புதைத்தேன். குமுறிப் பெருகிற உணர்வுகள் கண்ணிராக மடை திறக்க, இதுவரை நிலவிய உறுதியெல்லாம் உருகிப் போய் விட பலவீனமானவளாகக் குலுங்கி குலுங்கி அழுதேன்.

அகிலாவோ. ஆதரவாக என்னை அணைத்தபடியிருந்தாள். நான் அழுவதுவரை அழட்டும் என்பது போல் அமைதியாக இருந்தாள். பின் கூறினாள்.

“காயத்ரீ.உன் நிலையை என்னால் உணர முடிகிறது. ஒரு பெண்ணின் மனநிலையை ஒரு பெண்ணால் தானே உணர முடியும். ஆனால் ஒன்றை மட்டும் நினைத்துக்கொள். இந்தமனித வாழ்வு மிகவும் அற்பமானதொரு துளி. இதற்குள் நாம் சிலவேளைகளில் தேவையற்ற கோட்பாடுகளை அள்ளித் திணித்துக் கொண்டு அவதிப்படுகிறோமோ என்று சிலவேளைகளில் படுகிறது. ஏன் உன்னையே எடுத்துக் கொள்ளேன். உன்னால் இன்னமும் அந்தப் பாதிப்பிலிருந்து விடுபட முடியவில்லை. இல்லையா.இது ஏன். நடந்தது நடந்து விட்டது. ஆனால் அதற்காக உன்னால் ஏன் அதை மறந்து விட்டு புது வாழ்வு வாழ முடியவில்லை. சிந்தித்துப் பார்த்தாயா? ஏனென்றால் இந்தச் சமுதாயத்தில் நிலவும் ஒருபட்சமான ‘கற்பு’ பற்றிய கோட்பாடு தான். கற்பு என்பது உடலுடன் சம்பந்தப்பட்டதாக இருக்க கூடாது. மனதுடன் சம்பந்தப்பட்ட தொன்றாக இருக்க வேண்டுமடி. ஆனால் உனக்கு நடந்ததைப் போல் ஒரு ஆணிற்கு நடந்தால் அவன் வாழ்வை வீணாக்குவானா. உன்னைப் போல். ஆனால் பெண்களாகிய நாங்கள் மட்டும் முதுகுநிறைய இத்தகைய கோட்பாடுகளைச் சுமந்து கொண்டு வாழ்வை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.”

அகிலா மேலே மேலே பேசிக் கொண்டேயிருந்தாள். மனதிற்கு எவ்வளவு ஆறுதலாக, இதமாக, அமைதியாக இருக்கிறது.

“ஒருவரிடம் மனதிலுள்ள பாரங்களை இறக்கி வைக்கும் போது எவ்வளவு இலேசாக மனது மாறி விடுகிறது.

“காயத்ரீ. மனதை மேலும் திடப்படுத்திக் கொள்ளடி. நீ இவ்வளவு காலமும் உன் வாழ்வையும் வீணாக்கிக் கொண்டு அதனால் உன் அப்பாவையும் அம்மாவையும் தேவையற்ற கவலைக்கு ஆளாக்கிக் கொண்டு வந்தது போதும். இதற்கு ஒரு முடிவு கட்டுவது உன்னிடம் தான் இருக்கிறது. நீ கருணாகரனை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும்.”

“அகிலா. என்னதான் இருந்தாலும் உனக்கு சரியான நெஞ்சழுத்தம்தான். இல்லாவிட்டால் அவனையே சந்திக்கச் சொல்லி என்னிடமே சொல்வாயா.”

“காயத்ரீ. நீ அவரைச் சந்திப்பது மிக மிக அவசியம். உன் வாழ்வில் மீண்டும் ஒரு மலர்ச்சியை கொண்டு வருவது அதில்தான் தங்கியுள்ளது. நீ இதற்குக் கட்டாயம் சந்திக்க வேண்டும். என்னடி சொல்கிறாய்.”

இதற்கு நான் மெளனமாக இருந்து விட்டுக் கூறினேன்.

“அகிலா செத்தபாம்பை அடிப்பதால் என்ன லாபம். அவனை நான் ஏன் சந்திக்க வேண்டும். என்னை இந்நிலைக்கு ஆளாக்கிய ராஸ்கலை நான் ஏன் பார்க்க வேண்டும்”

இவ்விதம் கூறுகையில் அகிலா இடைமறித்தாள்.

“ஏன் பார்க்க வேண்டுமா. ஏனென்றால் உன்னைத் திருமணம் செய்யப் போகிறவரல்லவா. அதற்காக”

அவள் முடிக்கவில்லை “அகிலா உனக்கென்ன விசரா”

கத்தினேன். தலைசுற்றியது. சிறிது நேரத்திற்குள் தான் எத்தனை எத்தனை திருப்பங்கள். அதிர்ச்சிகள். மனசால் தாங்கவே முடியவில்லை. பல்வேறுபட்ட உணர்வுகளிற்குள் சிக்கித்தத்தளித்த மனதோ. உணர்வுப்புயல் பலமாக வீசியபடி, இருண்டு கொண்டு வருவதைப் போல் இருந்தது. அகிலாவை இறுகப் பற்றிக் கொண்டேன்.

 


பகுதி மூன்று: காயத்ரியின் கதை.

அத்தியாயம் இரண்டு: தனிமையில் சில நினைவுகள்

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி ஒன்று - கருணாகரன் கதை ( 1-6)இரவு முழுக்க அகிலாவுடன் கதைத்தவை பற்றியே மனசு கிடந்து அடித்துக் கொண்டிருந்தது. எவ்வளவு சுலபமாக இலகுவாகக் கூறி விட்டுப் போய் விட்டாள். நான் அவனைச் சந்திக்க வேண்டுமாம். என்னால் ஜீரணிக்கவே கடினமானதாக, ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது. அகிலா ஒரு பெண். ஒரு பெண்ணின் உள்ளத்தை ஒரு பெண்தான் அறிவாள்’ என்று கூறுவார்கள். பெண்ணாகப் பிறந்தும் இவளால் ஏன் என் நிலையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பெண்ணின் இதயத்தை எவ்வளவு கீழ்த்தரமாகக் கருவி விட்டாள். திருமணம் என்பது ஒருவரை ஒருவர் புரிந்து, உணர்ந்து, ஒருவர் உணர்வுகளை ஒருவர் மதித்து நடக்கும் ஒரு பிணைப்பு அல்லவா.  கற்பனைகள், கனவுகளில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த, யெளவனத்துக்கேயுரிய எழிலில் மூழ்கிக் கிடந்த எனது உணர்வுகள், எவ்விதம் மூர்க்கத்தனமாக சிதைந்தன. சிதைக்கப்பட்டன. முரட்டுத்தனமாக, பலவந்தமாக. நினைக்கவே  அருவருப்பாக என்மேல் எனக்கே அருவருப்பாக. இவையெல்லாவற்றையும் எவ்விதம் மறக்க முடியும். எவ்வளவு சுலபமாக, கீழ்த்தரமாக அகிலா என்னை எண்ணிவிட்டாள். கல்யாணம் கட்டுவது தான் பெண்ணின் உலகம். கல்யாணம் எந்த  நிலையில் உள்ள பெண்ணின் கவலைகளையும் தீர்த்து விடும். இவ்விதமான இவளது உணர்வுகள். இவளால் ஏன் விளங்கமுடியவில்லை. என் நிலை அப்பாவைப் பாதித்துத் தான் உள்ளது. அதற்காக, மீண்டும் ஒருமுறை என்னை நானே  பலியாக்க வேண்டுமா. ஒரு பெண்ணென்றால் எப்பொழுதுமே இன்னொருத்தன் உணர்வுகளைத் திருப்திப்படுத்தித் தான் வாழ வேண்டும் என்பது விதியா. இல்லை ஒரு கட்டாயமா. ஏதோ நான் திருமணம் இல்லாமல் இருப்பது தான் என்  பிரச்சனைகள் எல்லாவற்றிற்குமே காரணம் என்பது போலவும். திருமணம் சகல பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்பது போலவும். எவ்வளவு பைத்தியகாரத்தனமான எண்ணங்கள். ஒருத்தருமென். பாதிப்பை. அதனால் ஏற்பட்ட உளவியல்  ரீதியான விளைவுகளை உணர்ந்து கொள்ள மாட்டேன்’ என்கிறார்கள். மிருகமாகி, என்னைக் குதறியவனுடன் எவ்விதம் என்னால் கணவனாக, ஏற்று இயல்பாக ஒரு குடும்பம் நடத்த முடியும். ஆனால் அகிலாவோ இது முடியும்’ என்கிறாள். பெண்கள் இரக்க சுபாவம் மிக்கவராம். அதற்காக நான் அவனிற்கு மன்னிப்பு வழங்க வேண்டுமாம். தவறுகள் இயல்பாம். நன்மை, தீமையுடன் போராட்டமே மனித வாழ்வாம். தவறுகள் எத்தகையானவையாக இருந்தாலும் மன்னிக்கப்படக் கூடியவையாம். தவறு செய்தவன் திருந்துவதற்கு நிச்சயம் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டுமாம். அவன் செய்த தவற்றிற்காக கண்ணி வடிக்கின்றானாம். ஏன் நான் என் வாழ்க்கையையும் அவன் வாழ்க்கையையும் ஏன் எல்லோர் வாழ்க்கையையும் ஒளிமயமானதாக மாற்றி வைக்க முடியாதாம்.
நான் மட்டும் ஒரு திருமணமான, பிள்ளைகளுடன் கூடிய, இளம் தாயாக இருக்கையில் எனக்கு இத்தகைய நிலை ஏற்பட்டிருக்குமென்றால் யாரிடம் போய் இவ்விதமான பாவ மன்னிப்பை இவன் கேட்பானாம். அத்தகையதொரு நிலையில் பாதிப்பை எவ்விதம் நிவர்த்தி செய்வதாம்.

ஆனால் ஒன்றை மட்டும் ஒப்புக்கொள்ளவேண்டும். இதுவரை காலமுமான என் வாழ்வு. நான் பாதிப்பின் விளைபொருளாக என்னை வெளியுலகுக்குக் காட்டித் தான் இழந்து விட்டேனா, ஏதோ ஒன்றை இழந்தவள் போன்ற என் தோற்றத்தால் தான் அப்பா தொடக்கம் எல்லோரையும் நான் தேவையில்லாமல் கவலைப்பட வைத்து விட்டேனா. உண்மையில் நானும் அப்படித்தான் இதுவரை வாழ்ந்து விட்டேன். அதனால் தான் அகிலாவும் இந்த முடிவுக்கு வந்து விட்டாள் போலும்.
ஆம். நான் என் மனநிலையில் மாறுதல்களை ஏற்படுத்தத் தான் வேண்டும். பிரச்சினைகளுக்கு துணிவாக முகம் கொடுக்கப்பழகத்தான் வேண்டும். பிரச்சனைகளைக் கண்டு ஒதுங்குவதோ, தூர ஓடுவதோ கூடாது. பிரச்சனை அல்லது பாதிப்பு ஏற்பட்டு விட்டதே என்பதே என்பதற்காக மனம் குமைந்து விடுவதோ, முடங்கி விடுவதோ சரியானதொன்றல்ல.

முதலில் இவ்வீட்டில் வியாபித்துக் கிடக்கும் “எதையோ இழந்து விட்டது போன்ற சூழலை மாற்றியாக வேண்டும். மூதேவி குடியிருக்கும் சூழலை ஒழித்தாக வேண்டும். அகிலா கூறியது போல் எரிநட்சத்திரங்களைப் போல் வாழவேண்டும். சிறிய கணப்பொழுது தான் வாழ்வு. அழிந்து விடுவதற்குள் ஒளிர்வு. எரிந்து கொண்டிருக்கும் பொழுதே ஒளிர்ந்து கொண்டு தான் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கின்றன. அழிவை நோக்கிய எரிநட்சத்திரங்களின் பயணங்கள். நாங்கள் ஒவ்வொருவருமே ஒரு எரிநட்சத்திரமாக இருக்க வேண்டும். இது தான் வாழ்வின் தத்துவம். அகிலாவின் சொற்கள் நெஞ்சினில் நிழலாடுகின்றன.

இரவு அமைதியாக இருக்கின்றது. நிசப்தம் பரவிபரவி. வெகு அமைதியாக இருக்கின்றது. சிந்திக்க சிந்திக்க சிந்தையிலோ ஒரு வித தெளிவு.

உண்மையில் எனக்கு ஏற்பட்டது ஒரு பாதிப்பு. ஒன்றை நான் என் விருப்பத்துக்கு மாறாக இழந்து விட்டேன். ஆனால் அதற்காக வாழ்வு அத்துடன் முடிந்து விடவில்லையே. புதுவிதமான சிந்தனைகளால் நெஞ்சுபொங்கி வழிகின்றது. ஒருவிதமான உற்சாகம் கலந்த, பூரிப்பின் உணர்வெழுந்து. இது வரை காலமும் அழுது வடிந்து கொண்டிருந்த வாழ்வு இன்பகரமானதாக எழில்மயமானதாக விளங்குகின்றது. புதியதொரு நோக்கில் அவனை ஒருகணம் நினைத்துப் பார்க்கின்றேன். திடீரென அவன் மேல் ஒருவிதமான அனுதாபம்,

அனுதாபத்துடன் கூடிய பரிவு கலந்த உணர்வு, பச்சாத்தாபம் எழுகின்றது. தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாததொரு சூழலில், அவன் அவ்விதம் நடந்து கொண்டானா? சூழலும் என் அழுகும் அவனை தன் நிலை மறக்கச் செய்து விட்டனவா? அவன் மேல் எவ்விதமான கோப உணர்வுகளும் முன்பைப் போல் வரவில்லை என்பதை உணர்ந்தேன். ஆனால் அதற்காக அவனை ஏற்க முடியுமா? அது மட்டும் முடியாது என்று பட்டது. ஆனால்.
அகிலா போகும் போது கூறிய சொற்கள் ஞாபகத்திற்கு வந்தன. “காயத்ரி. எப்படியும் நீ அவரைச் சந்திக்க வேண்டும். நீ அவரை ஏற்பதோ, ஏற்காமல் விடுவதோ உன் இஷ்டம். ஆனால் நீ அவரைக் கட்டாயம் சந்திக்க வேண்டும்.”
சில வேளைகளில் நடைமுறைக்கே சாத்தியம் இல்லாதது போல் பட்ட உணர்வுகள். முடிவுகள். இன்னுமொரு சந்தர்ப்பத்திலோ எவ்விதம் சாத்தியமானவையாக, இயல்பான வையாக மாறி விடுகின்றன.
நேற்று வரை அவனது நினைவுகளே என்னைக் கொன்றன. சுட்டுப் பொசுக்கின. ஆனால் இன்றோ இக்கணத்திலோ நான் மாறிவிட்டேனா. உண்மையில் பெண்களே பொதுவில் இப்படித்தானா. இரக்க சுபாவம் கூடுதலாக உள்ளவர்களா?
ஆனால் நான் முடிவு செய்து விட்டேன். அவனைச் சந்திக்க வேண்டும். அவனைச் சந்திக்கப் போகின்றேன். பிரச்சனைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளத்தான் போகின்றேன். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சரியான வழி, அப்பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்வதுதான். நெஞ்சில் இன்பம் பொங்கி வழிகின்றது. நிம்மதியாக இருக்கிறது. அமைதி நிரம்பிக் கிடைக்கிறது.

அண்மைக்காலமாகவே அப்பாவின் போக்கிலும் ஒரு சிறு மாற்றம். ஒரு வித மலர்ச்சி. உற்சாகம். அகிலா அவரிடம் எல்லாவற்றையும் கூறி விட்டாள். ஒரு நாள் அப்பா கூறினார்.

“காயத்ரி. அகிலா எல்லாவற்றையும் என்னிடம் கூறினாளம்மா. ஏனம்மா அவள் கூறுவது போல் நீயும் அவனையே திருமணம் செய்யக் கூடாது.”

அகிலாவாலேயே இன்னொரு பெண்ணின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்பாவால் எப்படி முடியும். ஆனால் அப்பாவின் மனதையும் மேலே உடைத்து விடவும் எனக்கு மனமில்லை.

“இதுபற்றி யோசிக்க எனக்கு நிறைய அவகாசம் வேண்டுமப்பா, என்பது அப்பாவிற்கு திருப்தியைத் தந்தது. மறுப்புக் கூறவில்லையல்லவா. அப்பாவைப் பொறுத்தவரையில் கருணாகரன் அவரது அன்பிற்கும் அபிமானத்திற்கும் உரியவனாக ஒரு காலத்தில் விளங்கியவன். மகளின் வாழ்வைக் குலைத்தவனே மீண்டும் வாழ்வு கொடுக்க முன்வரும் போது.

அப்பாவின் சந்தோசத்தைக் கலைக்க எனக்கு விருப்பமில்லை. அதே சமயம் நானும் என் உளவியல் நிலைகளைப் பெரிதும் மாற்றிக் கொண்டேன். முன்பு போல மூலைக்குள் முடங்கி விடும் போக்கினைவிட்டு விட்டேன். உறுதி மிக்க, சூழல்களைத் துணிவுடன் எதிர்நோக்குமொரு பெண்ணாக மாறிவிட்டேன். என் மாற்றம் எனக்கே பெரிதும் ஆச்சரியத்தை தந்தது.

அகிலாவின் ஏற்பாட்டின் பேரில் கருணாகரனைச் சந்திக்க முடிவு செய்தேன். அது ஒரு மாலை நேரம். கருணாகரனைச் சந்திப்பதற்காக குளக்கரையை நோக்கி நானும் அகிலாவும் புறப்பட்டோம். சூரியன் நாணிச்சிவந்து கிடந்த அடிவானப் பெண்ணை பெரும் காதலுடன் முத்தமிட்டுக் கொண்டிருந்தான். பல்வேறுவகைப்பட்ட பறவைகளின் சப்தங்களால் அப்பிரதேசம் முழுவதும் நிறைந்து கிடந்தது. குளக்கரையை நெருங்க நெருங்க இதுவரை என் நெஞ்சில் கட்டிக் காத்து வந்த தைரியம் தப்பியோடுவதுபோல் உணர்ந்தேன். படபடத்த நெஞ்சினை மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டு வருவதே பெரும்பாடாகப் பட்டது. குளக்கரையில், பாலைமரத்தின் அடியில் காத்து நின்ற அந்த உருவத்தைப் பார்க்கையில், உடம்பெல்லாம் ஒரு வித ஆவேசத்தில் நடுங்கியது. அந்த நினைவுகளின் படம் விரிப்பில், மயிர்கால்கள் எல்லாம் குத்திட்டு நின்றன.

“காயத்ரி, நான் பிறகு வாறன். நீ கருணாகரனுடன் ஆறுதலாகக் கதை. ஆத்திரப்பட்டு விடாதேயடி”

“அகிலா. நீ எங்கேயடி போகிறாய். நீயும் கூடவே இரேன். பரவாயில்லையடி..” என்றேன்.

“இல்லை, காயத்ரி. நீங்களிருவரும் மனம் விட்டுப் பேசுவதற்கு இடைஞ்சலாக இடையில் நான் இருக்க விரும்பவில்லையடி.”

“நான் அப்புறமாக ஒரு புறத்தில் இருந்துவிட்டு பிறகு வாறன்” என்றவள் போய் விட்டாள்.

என்னைக் கண்டதும் அவன் முகத்தில் பரவிய உணர்வுகளை அளந்தபடி என் உணர்வுகளைக் கட்டுபடுத்தியபடி அவனை நெருங்கினேன். என் முகத்தை இயலுமானவரை இறுக்கமாக வைத்துக் கொண்டேன். திடீரென இவன் மேல் ஒரு விதமான இரக்கம் ஏற்பட்டது. பரிதாபம் கலந்த உணர்வு வெளிப்பட்டது.

இவன் எதற்காக என்னிடம் பாவமன்னிப்பை எதிர்நோக்கி நிற்கிறான்? அதனால் இவனுக்கென்ன பெரிய லாபம்? இவன் செய்தது இல்லையென்றாகி விடுமா. இல்லையே.

ஆனால் அவனோ. பெரிதாகப் பதறியடிக்கவில்லை. அமைதியாக இருந்தான். என்னை வெகு அமைதியாக நோக்கியவன் கூறினான்.

“காயத்ரி உங்களுடன் பேசுவதற்கே எனக்கு எவ்வித அருகதையுமில்லை. இத்தகைய ஒரு நிலையில் என்னைச் சந்திக்க வந்தது உங்கள் நல்ல உள்ளத்தைக் காட்டுகிறது”

நான் அமைதியாக இருந்தேன். அவனே தொடர்ந்தான்.

“காயத்ரி. உங்களிற்கும் என்னையே நம்பியிருந்த மாஸ்டருக்கும் நான் செய்த துரோகத்திற்கு மன்னிப்பே இல்லை. இருந்தாலும் இதற்கு ஏதாவது பிராயச்சித்தம் செய்யாமல் என்னால் என் வாழ்வைக் கொண்டு நடத்தவே முடியாது போல்படுகிறது. நான் ஏன் அவ்விதம் அன்று மிருகமாக நடந்து கொண்டேன் என்று என்னையே அடிக்கடி கேட்டுக் கொண்டேன். இத்தனைக்கும் உங்கள் மேல் உண்மையான அன்பு வைத்திருந்த நான் எப்படி உங்கள் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் நடந்து கொண்டேன். உண்மையில் என்னாலேயே என்னை மன்னிக்க முடியவில்லை.”

நான் இன்னமும் மெளனமாகவே அவன் கூறுவதை அவதானித்தபடியிருந்தேன். அவனே தொடர்ந்தான்.

“காயத்ரி. ஏழு வருடச் சிறைவாசம் கூட உண்மையில் என்னை ஆறுதல் படுத்தவில்லை. உங்கள் வாழ்க்கை, மாஸ்டரின் வாழ்க்கை வீணாகக் கிடக்கையில் என்னால் எப்படி அமைதியாக இருக்க முடியும்”

கருணாகரனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் நெஞ்சில் இதமாக இறங்கின. இவளைச் சந்திப்பதற்கு முன் இவனை ஒரு வெறி மிருகமாக உருவகித்திருந்த நெஞ்சில் இவனது அமைதியான, தீர்க்கமான, ஆழமான சொற்கள் வேறுவிதமான தோற்றத்தை சித்தரித்தன. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவறிழைத்து விட்டு நிஜமாகவே வருந்தும் ஒரு மனிதனாக முதன் முறையாக நான் உணர்ந்தேன். என்னைச் சுற்றிப் படர்ந்திருந்த படபடப்பு மெல்ல அகன்றது. இவன் எனக்கு மிகவும் பழகிய ஒருவனாகத்தென்பட்டான். என் மனம் இயல்பானது. சொற்கள் இயல்பாகவே வெளிவந்தன.

“கருணாகரன், இதுவரை காலமும் உங்கள் மேலிருந்த என் கோப உணர்வுகள் எல்லாம் இந்தக் கணத்திலேயே என்னைவிட்டுப் போய் விட்டன. நடத்தவைகளிற்காக நீங்கள் படும் வருத்தம் உண்மையானது தானென உணர்கிறேன்”

இவ்விதம் நான் கூறுகையில் இடைமறித்த கருணாகரன் கூறினான்.

“காயத்ரி. உண்மையில் நீங்கள் என்னை மன்னித்து விட்டீர்கள். என்றால் நீங்கள் ஒன்று செய்ய வேண்டும்.”

“என்ன” என்பது போல் அவனை நோக்கினேன்.

“நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். உங்களை உணர்ந்து உங்களை மனப்பூர்வமாக ஏற்கும் ஒருவரை மணந்து நீங்கள் சந்தோசமாக வாழ வேண்டும்”

இச்சமயத்தில் இடைமறித்தேன்.

“கருணாகரன். திருமணம் என்பது அவசியமென்று நான் நினைக்கவில்லை. அப்பாவிற்குத் துணையாக இப்படியே இருந்து விடுவேன்”

“காயத்ரி, நீங்கள் மட்டும் சம்மதித்தால் நான் உங்களையே மணம் முடிக்கத் தயாராய் இருக்கிறேன்”

“கருணாகரன் நீங்கள் இலகுவாகக் கூறி விட்டீர்கள். ஆனால் என் மனம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அந்தச் சம்பவத்தின் ஞாபகத்துடன் எப்படி. உண்மையான மனைவியாக உங்களுடன் வாழ முடியும் என நினைக்கிறீர்கள்”
இதற்குச் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு கருணாகரன் கூறினான்.

“காயத்ரி, நினைவு தெரிந்து நான் முதலாகவும் கடைசியாகவும் விரும்பிய, காதலித்த பெண் நீங்கள் தான். சில கணங்களில் மிருகமாகி உங்கள் வாழ்க்கையைச் சிதைத்து விட்ட குற்றத்திற்காக சரியான தீர்வு உங்கள் திருமணம்தான். உங்களை மணக்க நான் எந்நேரமும் சம்மதமாயிருக்கிறேன். அல்லது நீங்கள் வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளலாம். அதுவரையில் நானும் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை. அதே சமயம் பெருந்தன்மையுடன் என்னை மன்னித்ததன் மூலம் என் மனப்பாரத்தை ஓரளவுக்காவது குறைத்து விட்டீர்கள். இதன் மூலம் என்னை இச்சமுதாயத்திற்கு முழுமையாக அர்ப்பணிக்கக் கூடியதாக இருக்கும்.

அன்றிரவு கட்டிலில் படுத்திருந்தவளாக, யன்னலினுTடு நட்சத்திரப்படுதாவாகக் காட்சியளித்த இருண்ட வானத்தையே நோக்கி நின்றேன். கருணாகரனின் உருவகம் நெஞ்சில் தோன்றியது. ஒருவித அமைதி பரவியது. மனசு இலேசாகிப் பறந்தது. தொலைவில் எரிநட்சத்திரம் ஒன்று விண்ணில் கோடிழுத்தது. அகிலா கூறியது ஞாபகத்திற்கு வந்தது. “எரிநட்சத்திரங்களைப் போல் தான் வாழ வேண்டும். சிறிது கணப்பொழுதுதான் வாழ்வு. அழிந்து விடுவதற்குள் ஒளிர்வு.
எரிந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் அழிந்து கொண்டிருக்கும் போதே ஒளிர்ந்தபடி தானே வாழ்வே முடித்துக் கொள்கின்றன”

ஆமாம். இதுவரையிலான என் வாழ்வை மட்டுமல்ல, என்னைச் சுற்றியிருப்போரின் வாழ்வையும் தேவையற்று வீணாக்கித்தான் விட்டேன். சின்னஞ்சிறிய வாழ்வு, தேவையற்ற குழப்பங்கள். தேவையற்ற மோதல்கள். வரட்டு வேதாந்தங்கள். ஒவ்வொருத்தருமே ஒரு எரிநட்சத்திரமாக வாழ்ந்து விட்டால், சிந்திக்கச் சிந்திக்க மனது இலேசாகிக்கொண்டே போனது.

மனிதர்கள் எதற்காக தவறிழைத்து விடுகிறார்கள். சிலர் தொடர்ந்தும் தவறிழைத்தபடியே, கேடு விளைவித்தபடியே தீயவர்களாக வளர்ந்து வாழ்ந்து போகின்றார்கள். இன்னும் சிலரோ ஒரு சில கணங்களில் ஏற்பட்டு விடும் குணமாற்றங்களினால் அக்கணங்களில் அக்குணங்களிற்கு அடிமையாகி தவறிழைத்து விடுகிறார்கள். கருணாகரனைப் போல. இரவும் பகலும் கோடையும் மாரியும் உள்ளும் வெளியும். சிரிப்பும் அழுகையும் இன்பமும் துன்பமும் நன்மையும் தீமையும். இவ்விதமாக நாம் வாழும் உலகில் முரண்பாடுகளிற்கு இடையில் உள்ள இணக்கத்தின் வளர்ச்சியிலேயே வாழ்வு  தொடர்கின்றது. இது போல் தான் மானுடரும் நன்மையும் தீமையும் போன்ற உணர்வுகளின் விளைவாகக் காணப்படுகின்றார். அவரவர் வாழும், அக வெளிச்சூழல்களிற்கேற்ப சிலரிடம் தீய உணர்வுகள் மேலோங்கி காணப்படுகின்றன.  இன்னும் சிலரிலோ நல்ல உணர்வுகள் மேலோங்கிக் காணப்படுகின்றன. இன்னும் சிலரிலோ இருவகையான உணர்வுகளும் சரிக்குச் சரியாக அமைத்து விடுகின்றன. நல்ல உணர்வுகள் மேலோங்கித் தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதின் தன்மைகளைப் பொறுத்து மனிதர்கள் மாமனிதர்களாக, மேதைகளாக, மகான்களாக, சாதாரண மனிதர்களாக உருவாகுகின்றார்கள். தீய உணர்வுகளிற்கு அடிமைப்பட்டு அவற்றைக் கட்டுபடுத்தத் தவறுபவர்கள் கேடிகளாக சமூக விரோதிகளாக உருவாகிப் போகின்றார்கள். நல்ல உணர்வுகள் மேலோங்கி நிற்பவர்கள் கூட சிலசில நேரங்களில் நெஞ்சின் உள்ளே கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு சில தீய உணர்வுகளின் தாக்கங்கள் அதிகமாக அக்கணங்களிற்கு, அக்கணங்களிற்குரிய குணங்களிற்கு அடிமையாகித்  தவறிழைத்து விடுகிறார்கள். கருணாகரன் இத்தகைய ஒருவன். ஆனால் தவறிழைப்பவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். திருத்துவதற்கு. திருந்திய உள்ளங்களிற்கு நிச்சயம் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். என் வாழ்வே எந்தக் கருணாகரன் சீர்குலைத்தானோ, அதே கருணாகரனின் மீள் பிரவேசம் திரும்பவும் என் வாழ்வை நேராக்கி விட்டிருந்தது. அவநம்பிக்கையும் சோகமும் துணிச்சலற்ற போக்கும் விரக்தியும் கொண்ட காயத்ரி செத்து விட்டாள். தனது போக்கால் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் அழ வைத்துக் கொண்டிருந்த காயத்ரி இன்று முதல் ஒரு புது மனிஷி. இந்த காயத்ரி வாழ்வின் போக்குகளை விளங்கிக் கொண்டவள். தன்னம்பிக்கையும் துணிச்சலும் சிரிப்புமாக வாழ்வை எதிர்நோக்குபவள். கருணாகரனைப் பொறுத்தவரை என் மனம் அவரை முற்றாக மன்னித்து விட்டது. எண்ணங்கள். பரவப் பரவ மனதுதான் எவ்வளவு தெளிவானதாக, அமைதியானதாக விளங்குகின்றது.

– முற்றும் –

 


 

நாவல்: கணங்களும், குணங்களும் – பகுதி 1 – கருணாகரன் கதை

நாவல்: கணங்களும், குணங்களும் – பகுதி 2 – அகிலாவின் கதை