தொடர்நாவல்: மனக்கண் 17

17-ம் அத்தியாயம்: ஸ்ரீதரின் தியாகம்

தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -அ.ந.கந்தசாமிமனத்தில் எம்மை எவ்வளவு தான் கவலை பீடித்தாலும் அவ்வப்போது நாம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து கொண்டுதானே போக வேண்டியிருக்கிறது? ஸ்ரீதரை, அவன் “அமராவதி”க்கு வந்த அன்று மாலை கப்பிய சோகம் தாங்கவொண்ணாத சோகம்தான். இருந்த போதிலும் அது அடுத்த நாள் மாலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவிருந்த “ஈடிப்பஸ் மன்னன்” நாடகத்தை எவ்விதத்திலும் பாதிக்க விடுவதிலலை, என்று அவன் தீர்மானித்துக் கொண்டான். நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிவிட்டு, அதன் பின் “அமராவதி” வளவில் எங்காவது ஒரு மூலையில் கவலைப்பட உட்காரலாம் என்பது அவன் எண்ணம். கவலையைக் கூட ஒழுங்காக, வேறு நினைவின்றி அனுபவித்தால்தான் அதனால் நிவாரணமோ இன்பமோ ஏற்படுகிறது. அதறகு இந்த நாடகச் சந்தடி தீர வேண்டும் எனபது அவன் நினைவு.

மேலும் கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே… என்று யாரோ ஒரு சினிமாப் பாடகன் எங்கோ பாடியிருக்கிறான். நாட்டியக் கலை மட்டுமல்ல சகலக் கலைகளுமே இப்பணியைத்தான் செய்கின்றன. உண்மையில் இவ்வித கலைகள் என்பன மட்டும் இல்லாவிட்டால் மானிடன் தன்னை எதிர் நோக்கும் துன்பங்களையெல்லாம் அச்சங்களையும் எவ்வாறு தாக்குப்பிடித்துச் சமாளிப்பான் என்று எண்ணிப் பார்க்கப்பட முடியாமல் இருக்கிறது. துன்பத்தின் பிடியில் அகப்பட்ட இதயம், இசையால், நாடகத்தால், கவிதையால், சித்திரத்தால் எத்தகையை சாந்தியைப் பெறுகிறது. ஸ்ரீதருக்கும், அவனுக்குக் கலைகளில் இருந்த ஈடுபாடுதான் அவனது துயருக்கு மாற்றாக அமைந்தது. உண்மையில் கலைகளில் ஈடுபாடு இருப்பவர்கள், அவ்வித ஈடுபாடுள்ளவர்கள் அதிர்ஷடசாலிகள், அவ்வித ஈடுபாடு வாய்க்கப் பெறாதவர்கள் தான் தம் கவலைகளைப் போக்கச் சாராயத் தவறணைகளையும், கள்ளுக் கொட்டில்களையும் தஞ்சமடைய வேண்டியிருக்கிறது.

ஸ்ரீதர் அன்றிரவும் அடுத்த நாட் பகலும் நாடக வசனங்களைப் பேசிப் பார்ப்பதிலும், “ஈடிப்பஸ்” பாத்திரத்தை நடித்துப் பார்ப்பதிலும், இடையிடையே மோகனாவின் பூர்த்தி பெறாத ஓவியத்திற்கு வர்ணம் தீட்டுவதிலும் காலத்தைச் செலவிட்டான். இவற்றில் மூலம் மனத்தை மனத்தைத் தன்னாலியன்ற அளவு கலகலப்பாக வைத்துக் கொண்டதால் ‘ஈடிப்பஸ்’ நாடகம் அடுத்த நாள் எவ்விதத்திலும் சோடை போகாது சோபித்தது. உண்மையில், அவன் அரங்குள் நுழைந்த போது ஸ்ரீதர் மறைந்து விட்டான். தெபேஸ் நகரத்தின் மாமன்னான ஈடிப்பஸ் கிரேக்க நாடகாசிரியன் சொபோக்கிளியின் கற்பனையில் இருந்து அங்கரங்கில் நேரே வந்து, குதித்து வந்துவிட்டான்!

நாடகத்துக்கு யாழ்ப்பாண நகரத்திலிருந்தும், சுற்று வட்டார கிராமங்களிருந்தும் ஏராளமான கலா ரசிகர்கள் வந்திருந்தனர். சிவநேசர் தம் தலைப்பாகையுடன் ஆடம்பரமாக உடையணிந்து முன் வரிசையில் வீற்றிருந்தார். அவருக்குப் பக்கத்தில் பாக்கியம். அவர்களுக்கு ஒரு புறம் யாழ்ப்பாண அரசாங்க அதிபரும் மறுபுறம் கல்லூரித் தலைமை ஆசிரியரும் வீற்றிருந்தார்கள். அரசாங்க அதிபருக்கு அடுத்த ஆசனத்தில் சுழிபுரம் கந்தப்பசேகரரும் டாக்டர் அமுதாவும் அமர்ந்திருந்தனர்.

அரசாங்க அதிபர் கூறிய ஒரு குறிப்புக்குப் பதிலாக, சிவநேசர் கிரேக்க நாடகத்தில் சொபோக்கிளின், “ஈடிப்ப”சுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை எடுத்து விளக்கினார். பறங்கியரான அரசாங்க அதிபர் சிவநேசரது அறிவின் பரப்பைக் கண்டு வியப்படைந்தார்.

ஸ்ரீதர் நாடகத்தில் தன் முழுத் திறமையையும் காட்டி நடித்தான். திரை நீக்கியதும் சிவநேசரும் பாக்கியமும் மிகுந்த வேஷப் பொருத்தத்தோடு விளங்கிய தமது மகனை முதலில் அடையாளம் காண முடியாது திக்குமுக்காடி விட்டார்கள். பாக்கியம் சிவநேசரை நோக்கிச் சிறிது வளைந்து “உங்களைத்தானே, இராசா வேஷத்தில் இருப்பது ஸ்ரீதர் தானே? பார்த்தீர்களா? நல்ல வேஷப் பொருத்தம்.” என்று கூறினாள். கந்தப்பசேகரர் அமுதாவிடம் “பார்த்தாயா ஸ்ரீதரை? வேஷப் பொருத்தம் மிக நன்றாயிருக்கிறாரல்லவா” என்றார். “இதோ ஈடிப்பஸ் வேஷத்தில் இருக்கிறானே, அவன் தான் நமது சிவநேசரின் மகன். ஸ்ரீதர் என்று பெயர்.” என்று சிவநேசர் காதில் நன்கு கேட்கும்படியாக அரசாங்க அதிபரிடம் சொல்லி வைத்தார். சிவநேசருக்கு அதைக் கேட்டு எல்லையற்ற மகிழ்ச்சி.

கொழும்பில் போலவே ஸ்ரீதர் ஈடிப்பஸ் மன்னன் தன் கண்களைத் தானே பறிக்கும் காட்சியில் மிகவும் அற்புதமாக நடித்தான். மேடை மீது மின்சார ஒளி வட்டத்தில் நின்று கொண்டு, கூரிய ஒரு கருவியைக் கையிலேந்திப் பொருத்தமான வசனங்களைப் பேசிக் கொண்டு ஈடிப்பஸ் மன்னன் கண்களைக் குத்திக் கபோதியாகும் அக்காட்சி சபையோரை உணர்ச்சிக் கடலில் ஆழ்ந்திவிட்டது. ஒரு சிலர் “ஐயோ பாவி” என்று கதறி விட்டார்கள். பாக்கியம் நடுங்கிப் போய்விட்டாள். டாக்டர் அமுதா திக்பிரமை பிடித்து வீற்றிருந்தாள். சிவநேசரோ, “உண்மையில் ஸ்ரீதர் உயர்ந்த நடிகன் தான். சென்ற தடவை இந் நாடகம் கொழும்பில் அரங்கேறிய போது அது பற்றிப் பத்திரிகைகள் எழுதியவை உண்மைதான்.” என்று தனக்குள் தானே மெச்சிக் கொண்டார். கண்களிலிருந்து கொட கொடவென்று செவ்விரத்தம் பீறிப் பாய ஸ்ரீதர் மேடையில் தோன்றிய காட்சியைக் கண்டு பாக்கியம் அவன் உண்மையாகவே கண்களைக் குத்திக் கொண்டு விட்டானோ என்று அஞ்சிவிட்டாள். தாயுள்ளத்தில் தவிப்போடு, சிவநேசரின் கோட்டை இருட்டிலே பற்றிக் கொண்டாள் அவள்.

மனக்கண் - அத்தியாயம் 17.நாடகம் முடிந்ததும் அரசாங்க அதிபர் உட்பட நகரப் பிரமுகர்கள் பலரும் திரைக்குப் பின்னால் சென்று ஸ்ரீதரைப் பாராட்டினார்கள். கந்தப்பசேகரரும் டாக்டர் அமுதாவும் ஸ்ரீதரைப் போய்க் கண்டார்கள். டாக்டர் அமுதாவோ நாணத்தால் அதிக வசனங்கள் பேசவில்லை. அவன் முகத்தின் அழகைத் தன் கண்களால் விழுங்கிய வண்ணம் “உங்கள் நடிப்பு அற்புதம்” என்று மட்டும் கூறி வைத்தாள். கல்லூரித் தலைமை ஆசிரியர், ஸ்ரீதருக்குக் கல்லூரியின் சார்பில் ஒரு மலர் மாலையைச் சூட்டி விட்டு, சிவநேசரிடம் “உங்கள் மகனைப் பற்றி நீங்கள் பெருமைப்படலாம். இப்படிப்பட்ட மகனைப் பெற நீங்கள் என்ன தவம் செய்தீர்களோ” என்று கூறினார். சிவநேசர் இலேசாகப் புன்னகை செய்தார். பாக்கியமோ ஸ்ரீதரைத் தனியே கண்டு “உன் கண்ணுக்கொன்றும் கெடுதியில்லையே? நான் பயந்து போய்விட்டேன். இனிமேல் நீ இப்படிப்பட்ட பயங்கரமான நாடகங்களில் நடிக்கக் கூடாது” என்றாள். ஸ்ரீதர் “உனக்குப் பயங் காட்டத்தான் அப்படி நடித்தேன். பயப்பட மாட்டேன் என்று சொன்னாயே. பார்த்தாயா, தோற்றுவிட்டாய்.” என்று கூறினான். பாக்கியம் அவன் முதுகை வாஞ்சையோடு தடவி இரகசியமாக, “அமுதாவைப் பார்த்தாயா, அழகாயிருக்கிறாளல்லவா? உன் நாடகத்தை அவள் மிகவும் இரசித்தாள்” என்று சொன்னாள். ஸ்ரீதர் “போ அம்மா அதைப் பற்றி இப்பொழுது பேசாதே. என் மனம் குழம்பிப் போய்விடும்.” என்று கூறினான். இவ்வாறு சொல்லும் போதே திடீரெனச் சந்திரனை மறைக்கும் மேகங்கள் போல அவன் முகத்தைக் கவலை மேகங்கள் மறைத்தன. பாக்கியத்துக்கு அதைப் பார்த்ததும் “ஏன் அதைப் பேசினேன்” என்று எண்ணத் தோன்றிவிட்டது. “சரி வருகிறேன் ஸ்ரீதர். நீ உன் வேலைகளை முடித்துக் கொண்டு அப்புறம் தானே வருவாய்? அதிக நேரம் செல்லாது வந்து விடு” என்று கூறிப் புறப்பட்டாள்.

காரின் பின்னாசனத்தில் சுங்கானைப் பிடித்துக் கொண்டு பாக்கியத்துக்குப் பக்கத்தில் சாய்ந்து கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்த சிவநேசரின் மனதில் ஸ்ரீதரின் எதிர்காலம் பற்றிய சித்திரங்கள் ஒன்றன் பின்னொன்றாக வந்து கொண்டிருந்தன. “ஸ்ரீதரைப் போல் ஒரு மகனைப் பெற நீங்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்?” என்று தலைமை ஆசிரியரின் சொற்கள் அவர் மனதிற்கு ஓர் இன்பப் போதையைக் கொடுத்திருந்தது உண்மைதான். “மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொள் என்னும் சொல்” என்ற வள்ளுவர் வாக்கு என் விஷயத்தில் அனுபவ வார்த்தையே. நாடகத்தில் நன்றாய் நடித்தான் என்பதால் மட்டுமல்ல, எல்லா விஷயத்திலும் ஸ்ரீதர் சிறந்தவன்தான். ஆனால் அவன் திருமண விஷயம்? அது எப்படி முடியப் போகிறதோ?” என்று எண்ணிக் கொண்டே பாக்கியத்திடம், “பாக்கியம், ஸ்ரீதரிடம் அமுதாவை பற்றிப் பேசினாயா நீ?” என்று கேட்டார்.

“பேசினேன். அவனுக்கு அது பிடித்தமே இல்லை” என்றாள் அவள்.

“அப்படியானால் மொட்டைக் கடிதத்தில் சொன்ன பத்மாவைத்தான் உள்ளம் நாடுகிறது போலும்?”

“ஆமாம். அவன் இன்பமாக வாழ வேண்டுமென்றால், அதுதான் அவனுக்கேற்ற திருமணம்.”

“என்ன? பைத்தியக்காரி மாதிரிப் பேசுகிறாய்? எங்கள் அந்தஸ்தென்ன? அந்த வாத்தியார் அந்தஸ்தென்ன? அதிகார் அம்பலவாணன் போன்றவர்கள் சிரிப்பார்கள். உலகமே சிரிக்கும். நடக்கிற காரியமாகப் பேசு. மடத்தனமாகப் பேசாதே.”

பாக்கியம் தான் பத்மாவுக்குப் பரிந்து பேசினால் என்ன பதில் கிடைக்குமென்று எதிர்பார்த்தாளோ அதே பதில் தான். எதிர்பார்த்ததை விட இன்னும் சற்றுக் காரசாரமாகவே கிடைத்தைக் கண்டு மேலே பேச அறியாது அடங்கிவிட்டாள்.

“ஸ்ரீதரின் மனதை நாம் மாற்ற வேண்டும். என் தவத்தால் பிறந்த மகனென்று இன்று இந்துக் கல்லூரியின் தலைமை ஆசிரியர் அவனைப் பாராட்டினார். அப்படிப்பட்ட மகனை நான் குப்பைமேட்டில் வீசிவிட முடியுமா? ஒரு போதும் நான் அவனை அந்தஸ்தற்ற இடத்தில் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க மாட்டேன். சிங்கம் சிங்கத்தோடுதான் தொடர்பு கொள்ள வேண்டும். நரியோடு தொடர்பு கொள்ள விட மாட்டேன். அமராவதி வளவு சீரழிய நான் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன்.”

“ஆனால் அவன் அதைக் கேட்காவிட்டால்…”

“கேட்க வைக்க வேண்டும்”

“அவன் தனக்கு டாக்டர் பெண்ணை பிடிக்காது என்றான். அப்படியானால் அமுதா டாக்டர் வேலையிலிருந்து விலகி விட்டால் போகிறதென்றேன். அதற்குத் தனக்கு அமுதாவைப் பிடிக்கவில்லை என்கிறான். பத்மாவைப் பற்றிச் சொல்லி “அவள் மிகவும் நல்லவள். நீ அவளை ஒரு தரம் சந்தித்துப் பேசினல் நிச்சயம் உனக்கு அவளைப் பிடிக்கும்’ என்று கூறுகிறான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாளைக்கு அவனிடம் நீங்களே இது பற்றிப் பேசினால் என்ன?”

“பேசத்தான் போகிறேன்.”

அன்றிரவு ஸ்ரீதர் வீட்டுக்கு வந்தபோது இரவு ஒரு மணிக்கு மேலாகிவிட்டது. தாய் பாக்கியம் கண் விழித்திருந்து அவனுக்கு உணவு பரிமாறினாள். இன்னும் கலங்கிப் போயிருந்த அவனுக்கு உற்சாகமளிப்பதற்காக நாடகத்தை மிகவும் சிலாகித்துப் பேசினாள். தந்தை சிவநேசரும் நாடகத்தை பெரிதும் இரசித்ததாகக் கூறினாள் அவள். என்னதான் கவலை இருந்தாலும் அம்மாவின் பாராட்டுரைகள் அவனுக்கு இன்பத்தை அளிக்கவே செய்தன.

அடுத்த நாள் அவன் நித்திரை விட்டெழுந்த போது காலை ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. தாய் அவனுக்குப் பிரியமான முறையில் தோசை செய்து வைத்திருந்தாள். அதனை உண்டு கொண்டே தாயிடம் “அம்மா, என் கண்களில் அடிக்கடி கண்ணீர் வருகிறது. இன்னும் பார்வை கூட முன்போல் தெளிவாக இல்லை.” என்று கூறினான். பாக்கியம் அவன் முகத்தைக் கைகளால் நிமிர்த்திக் கண்களைப் பார்த்து விட்டு “அப்படியானால் நல்ல டாக்டரிடம் காட்ட வேண்டும். அப்பாவிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன்.” என்றாள்.

சாப்பிட்டு முடித்ததும் மோகனாவின் படத்தைப் பூர்த்தி செய்வதற்காகத் தன் அறைக்குப் போய்விட்டான் ஸ்ரீதர். அங்கே ஜன்னலடியில் ஓவியமெழுதும் ஸ்டான்டுக்கு முன்னால் ஒரு முக்காலியில் உட்கார்ந்துகொண்டு படமெழுத ஆரம்பித்தான். மோகனாவோ கூண்டுக்குள்ளிருந்தபடி “ஸ்ரீதர் ஸ்ரீதர்” என்று சப்தமிட்டுக் கொண்டுருந்தது

சிறிது நேரம் செல்ல அவன் விறாந்தைக்கு வந்தபோது காரியாலய அறைக்குள்ளிருந்து ஒரு பெண் குரல் அவன் காதுகளில் வீழ்ந்தது. என்ன இது? அவனால் நம்பவே முடியவில்லை. பத்மா எப்படி இங்கே வந்தாள்? என்னிடம் ஒன்றும் சொல்லாமல் அவள் இப்படி வந்திருக்கக் கூடாதே. இதனால் என்ன தொல்லைகள் ஏற்படுமோ என்று எண்ணிக் கொண்டே காரியாலய அறையை நோக்கி நடந்தான். அவன் நெஞ்சு திக்திக்கென்றது.

ஆனால் காரியாலய அறைக்குள் அவன் எதிர்பார்த்தது போலப் பத்மாவைக் காணவில்லை. வேறு ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். பத்மாவைப் போல் அவளும் ஓர் அழகிதான். அவளது குரலைத்தான் அவன் கேட்டான். ஆம் பத்மாவின் குரலுக்கும் சிறிது வித்தியாசம். இல்லை. என்ன ஆச்சரியமான குரலொற்றுமை என்று அதிசயித்தான் அவன்.

காரியாலயத்துள் அவன் கண்ட பெண் கிளாக்கர் நன்னித்தம்பியோடு உரையாடிக் கொண்டிருந்தாள். “வேண்டாமப்பா, எனக்கு வாத்தியார் வேலை பிடித்தமே இல்லை. வேறு வேலை ஏதாவது பார்த்தாலென்ன?” என்றாள் அவள்.

“பெண்களுக்கு இதர உத்தியோகங்களிலும் பார்க்க வாத்தியார் வேலைதான் நல்லது. அதுவும் கிடைக்கிறதோ என்னவோ? எதற்கும் ஐயா உன்னைக் கூட்டி வரச் சொன்னார். உனக்கு வேண்டியதை அவரோடு பேசிக் கொள். பயப்படாதே. பார்ப்பதற்குத்தான் கர்வி மாதிரித் தெரியுமே ஒழிய, அவரைப் போல நல்லவர் கிடைக்க மாட்டார்கள் சுசீலா” என்றார் நன்னித்தம்பி.

ஓ! இதுதான் நேற்று முன்தினம் நன்னித்தம்பி கூறிய அவரது மகள் சுசீலாவோ? சரி தான். குரலைக் கேட்டு எவ்வளவு பதறிவிட்டேன்? பத்மாவின் குரல் போலவே இவள் குரலிருக்கிறதே – என்று எண்ணிக் கொண்டே ஸ்ரீதர் “இது தான் உன் மகள் சுசீலாவோ? பீ.எ.பாஸ் பண்ணி விட்டாள் என்றாயே, அவள்தானா இது?” என்றான் நன்னித்தம்பியைப் பார்த்து.

நன்னித்தம்பி “ஆம் தம்பி” என்று கூறியதும் ஸ்ரீதர் அவனைப் பார்த்துப் சுமூகமாகப் புன்னகை பூத்து விட்டு நான் வருகிறேன். உன் மகள் பீ.ஏ. பாஸ் பண்ணி விட்டாள். நான் அடுத்த வருஷம் பாஸ் பண்ணி விடுவேன் பார். என்றாலும் உன் மகள் கெட்டிக்காரி. என்னிலும் பார்க்க வயது குறைந்தவள் போல் தெரிகிறது. இருந்தாலும் எனக்கு முன்னரே பீ. ஏ. பாஸ் பண்ணி விட்டானே” என்றான்.

அதற்கு நன்னித்தம்பி சிரித்துக் கொண்டு, “ஆம் தம்பி, சுசீலா உன்னிலும் பார்க்க இரண்டு வயது குறைந்தவள் தான்” என்று கூறினார். “பரவாயில்லை. என் வயதை ஈடு செய்யத்தான் அடுத்த வருடம் முதலாம் வகுப்பில் பாஸ் செய்கிறேன் பார். சுசீலா சாதாரண பாஸ் தானே பெற்றிருக்கிறாள்?” என்றான் ஸ்ரீதர்.

அதற்குச் சுசீலா “யார் சொன்னது நான் சாதாரண பாஸ் பெற்றேனென்று? நானும் முதலாம் வகுப்பில்தான் பாஸ் பண்ணியிருக்கிறேன்” என்றாள். நன்னித்தம்பி சிரித்தார்.

ஸ்ரீதர் “ஓ அப்படியா? அப்படியானால் நான் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்” என்றான்.

நன்னித்தம்பி ஸ்ரீதரைப் பார்த்து “சுசீலா என்னதான் பாஸ் பண்ணினாலென்ன? உங்களுக்கிருக்கும் அறிவில் பாதி அவளுக்கு இல்லை” என்றார். சுசீலா அதனை இடைமறித்து “நீங்கள் அப்பாவை நம்பாதீர்கள். அவர் பெண்களைப் பற்றி எப்பொழுதும் குறைவாகத்தான் பேசுவார். என்னை பொறுத்தவரையில் என் படிப்புக்கு ஏற்ற அறிவு இருக்கத்தான் இருக்கிறது” என்றாள்.

ஸ்ரீதருக்கு அவளது சாதுரியமான பேச்சு இன்பத்தை அளித்தது. “நன்னித்தம்பி. உன் மகள் நன்றாக வாதிடுகிறாள். அவள் அட்வகேட்டாவகப் படிக்க வை” என்று கூறி அங்கிருந்து கிளம்பி விட்டான். தந்தை சிவநேசர் காரியாலயத்தை நோக்கி வந்து கொண்டிருந்ததே அவள் அவ்வாறு நழுவுவதற்குக் காரணம்.

சிவநேசர் சுசீலாவை மெச்சிப் பாராட்டினார். அவள் பீ.ஏ. பாஸ் பண்ணியதில் தமக்கேற்பட்ட மகிழ்ச்சியைத் தெரிவிக்க ரூபா முந்நூறைக் காரியாலயத்திலிருந்த இரும்புப்  பெட்டியைத்  திறந்து தாமே தம் கையால் எடுத்து அவளுக்குப்  பரிசாக அளித்தார் அவர். “இந்தப் பணம் உனக்கு. அப்பாவுக்குக்கொடுத்து விடாதே. உனக்கு விருப்பமான விதத்தில் செலவழி.” என்று வாஞ்சையோடு கூறினார் அவர்.

அன்று பிற்பகல் ஐந்து மணியளவில் சிவநேசர் ஸ்ரீதரை விறாந்தையில் தம் அருகே உட்கார வைத்துப் பேசினார்.

“நாளை நீ பெண் பார்க்கப் போக வேண்டும். மாலை நாலு மணிக்கு இங்கிருந்து சுழிபுரம் போகத் தயாராயிரு. அம்மாவும் நீயும் நானும் சின்னையா பாரதியும் போகிறோம். பாரதி நேரமெல்லாம் பார்த்துவிட்டார். நாளை மிகவும் உத்தமமான நாளாம்” என்றார் சிவநேசர்.

ஸ்ரீதர் திடுக்கிட்டு விட்டான். என்ன சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. இருந்தாலும் வெள்ளம் தலைக்கு மேலே போய் விடும் என்ற நிலை ஏற்பட்டு விட்டதால் எல்லாவற்றையும் வெளியாகப் பேசித் தீர்த்துவிடுவதென்று தீர்மானித்துவிட்டான் அவன்.

“எனக்கு அமுதாவைக் கல்யாணம் செய்ய இஷ்டமில்லை.”

“ஏன்?”

“நான் கொழும்பில் வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்யத் தீர்மானித்து விட்டேன்.”

“அம்மா சொன்னாள். ஆனால் அந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.”

“ஏன் அப்பா, அவள் மிகவும் நல்லவள். நீங்கள் கொழும்புக்கு வந்தால் அவளை நான் கிஷ்கிந்தாவுக்கு அழைத்துக் கொண்டு வருகிறேன். உங்களுக்கு மிகவும் பிடிக்குமப்பா.”

“கல்யாணப் பெண் நல்லவளா அல்லவா என்பதல்ல முக்கியம் ஸ்ரீதர். உனது நிலைக்கு ஏற்ப பெண்ணை நீ கட்ட வேண்டும். அமுதாவும் நல்லவள்தான். அத்துடன் சகல விதத்திலும் எங்கள் குடும்ப அந்தஸ்துக்கு ஏற்றவள் அவள்.”

“எனக்கு இந்த அந்தஸ்து என்பதில் நம்பிக்கையே இல்லை. ஏன், நீங்கள் கூட “எமது சமுதாயப் பிரச்சினைகள்” என்ற நூலில் கலப்புத் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்று எழுதியிருக்கிறீர்களல்லவா?” பத்மாவின் தகப்பனார் பரமானந்தர் கூட அந்த நூலின் பிரதி ஒன்றை வைத்திருக்கிறார். அந்த நூலைப் படித்ததன் காரணமாக அவர் இந்தத் திருமணத்திற்குக் கட்டாயம் உங்கள் ஆசி கிடைக்குமென்று நம்புகிறார், அப்பா.”

சிவநேசர் ஒரு கணம் மெளனமானார். எதிர்பாராத இவ்வார்த்தைகள் அவரை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டன. இருந்தும் சமாளித்துக் கொண்டு, உண்மைதான். ஒரு காலத்தில் அக்கொள்கைகளை நான் நம்பியதுண்டுதான். ஆனால் அவை கூடச் சாதாரண பொதுமக்கள் தம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் கூறிய ஆலோசனைகளேயல்லாமல் என்னையோ உன்னையோ போன்றவர்களுக்குக் கூறப்பட்ட ஆலோசனைகளேயல்ல. பரம்பரைச் செல்வாக்குடன் உள்ள நாம் உண்மையில் ஆட்சி செய்யப் பிறந்தவர்கள். அப்படிப்பட்ட எங்களுக்கு நீ சொல்லும் வாத்தியார் போன்றவர்களுடன் எந்தவிதமான உறவும் இவ்வுலகில் சாத்தியமில்லை” என்றார்.

“இதை நீங்கள் மனதார நம்பிக் கூறுகிறீர்களா? என்னைப் பொறுத்தவரையில் நான் மனித சமத்துவத்தை நம்புகிறேன். மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள். இதில் அந்தஸ்துக் கூடியவர் குறைத்தவர் என்று யாருமே இல்லை.”

“நீ எனக்குப் பரிசாகக் கொண்டு வந்தாயே நீட்சேயின் நூல்கள்? – அந்த நீட்சே மனிதர்கள் சமமென்ற கொள்கையை அங்கீகரிக்கவில்லை. உலகில் ஒருவர் ஆளவும் மற்றும் சிலர் அவர்களுக்குப் பணி செய்யவும் பிறந்திருக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் இதுவரை நான் கண்டவர்களெல்லாம் ஆளப் பிறந்தவர்கள் தான். நீயும் ஆளப் பிறந்தவன் தான். உன்னைப் பார்த்தவர்கள் உன் தோற்றத்தைக் கொண்டே அதைப் பளிச்சென்று சொல்லிவிடுவார்கள். நீ ஆள வேண்டுமென்ற விருப்பத்தில் நான் தான் உன் ஆசைக்குத் தடையாய் நிற்கிறேன். நீட்சே கருத்துகள் மட்டுமல்ல, இந்துக்களின் மனுதர்மம் கூட அந்த அடிப்படையில் தான் எழுந்தது. ஆளப்பிறந்தவனை அன்று ஷைத்திரியன் என்றார்கள். இன்று அவனுக்கு அவ்விதம் பெயரளிக்கப்படாவிட்டாலும், ஆளப் பிறந்தவன் தன் நடவடிக்கைகள் மூலம் தான் யார் எனபதைக் காட்டி விடுகிறான். என்னைப் பொறுத்தவரையில் உலகில் சமத்துவம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது இயற்கைக்கு விநோதமான கொள்கை.”

“எப்படி?”

“இயற்கையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சமத்துவமாயிருப்பதை நீ எப்போதாவது கண்டிருக்கிறாயா? ஒரு மனிதன் குட்டை, மற்றவன் நெட்டை, ஒரு மனிதன் நூற்றைம்பது இறாத்தல், மற்றவன் நூற்றைம்பத்தைந்து இறாத்தல், ஒருவன் சிவப்பு, மற்றவன் கறுப்பு, ஒருவன் புத்திசாலி, மற்றவன் மடையன். உலகில் ஒருவருக்கொருவர் சமமான மனிதர் இல்லவே இல்லை. சமத்துவம் பேசுவபர்கள் உண்மையில் பொய் பேசுகிறார்கள்.”

சிவநேசர் தமது அந்தஸ்து வெறிக்கு ஒரு தத்துவ உருவமே கொடுத்து விட்டதைக் கண்டு ஸ்ரீதர் திகைத்தான். “நீட்சேயின் புத்தகங்களை நீங்கள் வாசிப்பது இதற்குத் தானா” என்றான் அவன்.

“தத்துவ தரிசர்களில் நீட்சே ஒருவன் தான் உண்மையை அப்படியே எடுத்துக் கூறியவன்.”

ஸ்ரீதருக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. நிறையக் கற்ற தந்தயாருடன், தத்துவ விசாரணை நூல்களை எழுதும் படிப்பாளியான தந்தையாருடன் தன்னால் வாதாடி வெற்றி பெற முடியாது என்றே அவனுக்குப் பட்டது. ஆகவே ஒன்றும் பேசாது மெளனமாகினான்.

பாக்கியம் தந்தையும் மகனும் பேசிக் கொண்டிருபதைத் தூரத்திலிருந்து பார்துவிட்டு இப்பேச்சுகளின் முடிவு என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு நேர்த்திக் கடன் வைத்தாள். ஸ்ரீதர் மகிழும்படி விஷயங்கள் முடிந்தால் அவனைக் கொண்டு கந்தனுக்குக் காவடி எடுப்பேன் என்று கூறிக் கொண்டாள் அவள்.

சிவநேசர் திடீரெனத் தம் ஆசனத்தை விட்டெழுந்தார். பின் தமது அறைக்குள் சென்று சில விநாடி நேரத்தில் வெளியே வந்தார் அவர்.

“ஸ்ரீதர், என்னுடன் வா. யாருக்கும் தெரியாத ஒரு குடும்ப இரகசியத்தை உனக்குக் காண்பிக்கப் போகிறேன். உன் அம்மாவுக்கும் தெரியாத இரகசியம். அந்த இரகசியத்தைப் பெண்களால் தாங்கிக் கொள்ள முடியாது. உன்னாலும் தாங்கா முடியுமோ என்னவோ? அதை நான் இவ்வளவு விரைவில் உனக்குச் சொல்ல வேண்டி வரும் என்று ஒரு போதும் நினைத்ததேயில்லை. இப்பொழுது அதைச் சொல்லியாவது உன்னை மாற்றமுடியுமா என்ற எண்ணத்தில் அதைச் சொல்ல முற்படுகிறேன். வா என்னோடு.”

சிவநேசர் அமராவது வளவின் காடாய்க் கிடந்த பகுதியை நோக்கி நடந்தார்.  அங்கே இலந்தை மரம், விளாமரங்களுக்கு அப்பால ஒரு நாவல் மரமும்,  சூரை மரமும் இருந்தன.  முள்ளும்  செத்தையுமாய்க்  கிடந்த  அப்பிரதேசத்தில்  ஓணான்கள்  சரசரவென்று ஒலி  கிளப்பி ஓடிக்கொண்டிருந்தன. அணில்கள்  சில நாவல் மரத்தில் ஏறுவதும், இறங்குவதுமாயிருந்தன.   ‘அப்பா எங்கே போகிறார்?’ என்று எண்ணிக்கொண்டே ஸ்ரீதர் அவர் பின்னால் மெளனமாகச் சென்றான்.

பாக்கியம் ஒன்றும் விளங்காது  அவர்கள் போன திசையைப்  பார்த்துக்கொண்டு நின்றாள்.

சிவநேசர்  சூரை மரத்துக்குச் சிறிது தொலைவில் வளவைச் சூழ இருந்த மதிலுக்கு அருகாமையில் செத்தைகளுள் மறைந்து கிடந்த ஒரு சிறிய நடுக்கல்லை ஸ்ரீதருக்குச் சுட்டிக் காட்டினார்.

“ஸ்ரீதர், இக்கல் எதற்காக அங்கே நடப்பட்டிருக்கிறது என்று தெரியுமா?” என்று கேட்டார் அவர்.

“அது ஒரு பழைய எல்லைக் கல்லு. அப்படித்தான் அம்மாவும் வேலைக்காரி தெய்வானையும் எனக்குக் கூறியிருக்கிறார்கள்.”

“இல்லை. அது எல்லைக் கல்லல்ல. அவர்களுக்குக் கூட அது ஏன் அங்கு நடப்பட்டதென்று தெரியாது.”

“அப்படியானால்?”

“நீ பிறப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவத்தின் ஞாபகக் கல் அது. ஆம் அது எனது தங்கை விசாலாட்சியின் நடுக்கல். உனது மாமியின் நடுக்கல். அவள் மட்டும் புத்திசாலியாயிருந்திருந்தால் நீ இன்று கந்தப்பசேகரர் மகள் அமுதாவைக் கல்யாணம் செய்யும் பேச்சே ஏற்பட்டிருக்காது. அவள் மகளை, உன் மைத்துனியை நீ கல்யாணம் செய்திருக்கலாம்.”

ஸ்ரீதர் இச் செய்தியை கேட்டு நடு நடுங்கிவிட்டான்.

“இந்நடுக்கல்லுக்குக் கீழே விசாலாட்சியின் சடலம் இப்பொழுது எலும்புக் கூடாகக் கிடக்கிறது. அவளும் உன்னைப் போலத்தான். அழகாயிருப்பாள். குணமானவள். திறமையானவள். எல்லோரும் அவளை மனதார விரும்பினார்கள். ஆனால் பிடிவாதக்காரி. தனது அந்தஸ்தைப்பற்றி எண்ணாதவள். உள்ளூர் வைத்தியர் ஒருவரின் மகனைத் திருமணம் செய்வேனென்று பிடிவாதம் பிடித்தாள் அவள். அப்பா அதைத் தடுக்க எவ்வளவோ முயற்சி எடுத்தார். வேறு கல்யாணம் பேசினார். ஒன்றையும் அவள் ஏற்கவில்லை. கடைசியில் ஒரு நாள் வைத்தியர் மகனோடு ஓடி விட்டாள் அவள். இதனால் ஆத்திரமடைந்த அப்பா அவளை எப்படியோ பிடித்து வந்து விட்டார். கொதிப்படைந்த அவர் அவளை இங்கே தன் கையாலேயே கொன்று புதைத்தார். அவள் நினைவுதான் இந்த நடுக் கல். சாகும் வரைக்கும் எங்கள் அப்பா தினசரி இவ்விடத்துக்கு வரத் தவறியதில்லை. தனது சொல்லைக் கேட்காத அன்பு மகளுக்காக அவர் ஒரு நாளாவது இங்கே கண்ணீர் விடத் தவறியதில்லை.”

கதையைக் கேட்டு வந்த ஸ்ரீதர் “பொலீசார் அவரை ஒன்றும் செய்யவில்லையா?” என்று கேட்டான்.

சிவநேசர் “போலீசார்! சக்தி வாய்ந்த மனிதர்கள் அப்படிப்பட்ட சிறிய பிரச்சினைகளை இலகுவாகச் சமாளித்துக் கொள்வார்கள். ஓடியவள் ஓடியவள் தான். திரும்பி வரவில்லை என்று உலகத்தை நம்ப வைத்துவிட்டார் உன் பாட்டனார்.” என்றார்.

ஸ்ரீதர் “இந்த கதையை இப்பொழுது நீங்கள் எனக்குக் கூறுவதற்கு என்ன காரணம் அப்பா? எனது பிரச்சினைக்கும் அதே முடிவைக் காண்பது உங்கள் நோக்கமா? என்னைப் பொறுத்த வரையில் அவ்வித முடிவை நான் வரவேற்கிறேன். மாமியை அப்பா கொன்றது போல் என்னையும் நீங்கள் உங்கள் கையால் கொன்று பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.” என்றான்.

சிவநேசர், “ ஆம். அது இலகுவான ஒரு முடிவுதான். ஆனால் எனது அப்பாவுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம். விசாலாட்சி இறந்த பின்னரும் நான் அவருக்கு மிஞ்சினேன். ஆனாலெனக்கு இருப்பது ஒரேயோர் அன்பு மகன். அவன் போனால் “அமராவதி” வளவே அழிந்து விடும். அதற்கு நான் இடமளிக்க மாட்டேன். இன்னும் அப்பா விசாலாட்சி மீது செலுத்திய அன்பை விட நான் உன் மீது செலுத்தும் அன்பு மிக மிக அதிகம். ஸ்ரீதர்! நீ இறந்த பின் நான் இவ்வுலகில் இருக்க மாட்டேன். உன்னைப் பிரிந்து, என்னால் வாழ முடியாது. நானும் தற்கொலை செய்து கொள்ளுவேன். அவ்விதம் நேரிட்டால் பாக்கியமும் என்ன செய்வாளோ? அதனால்தான் நீ சொல்லும் அந்த இலகுவான முடிவை என்னால் அமுல் நடத்த முடியாதிருக்கிறது ஸ்ரீதர்.” என்றார்.

ஸ்ரீதர் சிவநேசர் கூறியதைத் திக்பிரமை பிடித்தவள் போல் கேட்டுக் கொண்டிருந்தான். இரு விநாடிகளின் மெளனத்துக்குப் பிறகு, சிவநேசர் மீண்டும் பேசினார். பேசிக்கொண்டே தம் சட்டைப் பையிலிருந்த கைத் துப்பாக்கி ஒன்றை வெளியே எடுத்தார் அவர்.

“ஸ்ரீதர், ஆனால் இப்பிரச்சினையை வேறு விதமாகவும் தீர்த்துக் கொள்ளலாம். நீ விரும்பிய அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு நீ வாழ வேண்டுமானால் இதோ இந்தத் துப்பாக்கியை உன் கையில் எடுத்துக் கொள். என்னைச் சுடு. அதன் பின் உன் இஷ்டப் படி நீ நடந்து கொள்ளலாம். எங்கள் பிரச்சினைக்கு அதுதான் நல்ல முடிவு. இதோ துப்பாக்கியைப் பிடி.”

ஸ்ரீதர் கலங்கிப் போய்விட்டான். “அப்பா என்ன சொல்கிறீர்கள்?” என்று கூறும் போதே அவன் கண்கள் கலங்கிக் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தன. நிலத்தை நோக்கிய வண்ணம் தன் உதடுகளைத் தன் பற்களால் கடித்துக் கொண்டான் அவன்.

“ஆம். என்னால் உன்னைச் சுட முடியாது. ஆனால் உன்னால் என்னைச் சுட முடியுமென்றே நினைக்கிறேன். இதோ தைரியமாக முயன்று பார். துப்பாக்கியைப் பிடி.”

சிவநேசர் அவனை வற்புறுத்தினார்.

“அப்பா இதென்ன பயங்கரமான பேச்சு? வாருங்கள் நாங்கள் வீட்டுக்குப் போவோம்”

“போவோம். ஆனால் போவதற்கு முன்னர் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இது வரை நீ வாழ்வில் விரும்பியதெல்லாவற்றையும் நான் மறுக்காது கொடுத்திருக்கிறேன். இனியும் அவ்வாறு நடக்க வேண்டுமென்பதே என் எண்ணம். ஆனால் இந்த விஷயத்தில் மட்டும், குடும்ப அந்தஸ்து என்ற ஒரு விஷயத்தில் மட்டும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாமல் இருக்கிறது. அது என் உயிரோடு சேர்ந்த கொள்கையாகி விடுகிறது. நான் என்ன செய்வேன்? குடும்ப அந்தஸ்துக்குக் கெடுதி ஏற்படும் வகையில் நடப்பதில்லை என்று உறுதி கூறு. நாங்கள் போய் விடலாம்.”

“அப்பா நான் உறுதி கூறுகிறேன். குடும்ப அந்தஸ்துக்குக் கேடு தரும் வகையில் நான் நடக்கவே மாட்டேன்.”

“அப்போது நீ அந்த வாத்தியார் மகளைக் கட்டப் போவதில்லையா?”

“நீங்களே சம்மதித்தாலொழிய நான் பத்மாவைக் கல்யாணம் செய்ய மாட்டேன்.”

“ஸ்ரீதர் நீ நல்லவன்! உன்னைப் போல் பிள்ளை எல்லோருக்கும் கிடைக்க மாட்டார்கள். நீ என் உயிருக்குச் சமானம். ஆனால் பத்மாவை நீ கட்ட நான் சம்மதிப்பதா? அவ்வாறு மட்டும் என் மனதிற்கிருந்தால் நான் நிச்சயம் அதற்கு உடனே சம்மதிப்பேன். ஆனால் அதை நினைத்தாலே எனக்கு அருவருப்பேற்படும்போது, நான் எப்படி அதற்குச் சம்மதிப்பது? இந்த “அமராவதி” வளவு என்னை அப்படி வளர்த்துவிட்டதே”

“ஆனால் ஒன்று….” ஸ்ரீதர் தாழ்ந்த குரலில் ஏதோ சொல்வதற்கு முயன்றான்.

“சொல்லு, என்ன வேண்டுமோ சொல்லு ஸ்ரீதர்.” என்றார் சிவநேசர்.

“நான் உங்கள் எண்னத்துக்குச் சம்மதித்து விட்டேன். ஆனால் ஒரு நிபந்தனை…”

“என்ன நிபந்தனை?” எதை வேண்டுமானாலும் கேள்”

“பத்மாவை நான் உண்மையிலேயே நான் நேசிக்கிறேன். சாவித்திரியைச் சத்தியவான் நேசித்தது போல, அமராவதியை அம்பிகாபதி நேசித்தது போல நான் அவளை நேசிக்கிறேன். அவளைத் தவிர வேறொருத்திக்கு என் மனதில் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். அது மட்டும் நிச்சயம். ஆகவே என்னால் ஒருபோதும் அமுதாவைத் திருமனம் செய்ய முடியாது. என்னை என் போக்கில் விட்டுவிட வேண்டும். நான் கலியாணம் செய்யாமலே வாழ்வேன், அப்பா.”

“ஸ்ரீதர் நீ போடுவது பயங்கரமான நிபந்தனை. எங்கள் வம்சத்துக்கே முற்றுப்புள்ளி போடும் நிபந்தனை…”

“உங்கள் மனதை மகிழவிக்க நான் அதையும் விட்டுக் கொடுப்பேன் அப்பா. ஆனால் என் செய்வேன், அது என்னால் முடியாத விஷயமாயிருக்கிறதே…”

சிவநேசரின் உள்ளம் துணுக்குற்றது. ஸ்ரீதர் எதற்காகத் தன் உயிரினும் உயிராகப் பேணும் பத்மாவைத் தியாகம் செய்கிறான்? எனக்கு மகிழ்ச்சி தருவதற்காக என்றல்லவா அவன் கூறுகிறான்? ஆனால் நான் அதனால் இப்பொழுது அடைந்து கொண்டிருக்கும் உணர்ச்சி மகிழ்ச்சிதானா? தன்னை அதி மனிதனாகக் கணித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனும் தன் எண்ணத்தை நிலை நாட்டி விட எதையும் செய்யத் தயாராயிருக்கிறான். அவன் அதனால் அடையும் திருப்தி அவனது அகம்பாவத்தினால் பிறக்கிறது. எனது செயல்களும் அகம்பாவத்தில் பிறந்தவைதான். ஆனால் இலட்சிய மனிதனின் அடிப்படைப் பண்பே கர்வம் அல்லது அகம்பாவம் என்னும் அப்பண்புதானே!

சிவநேசருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு “காலம் செல்ல இதிலும் உன் மனம் மாறுதல் அடையலாம். இப்பொழுது நீ போ. இங்கு நடந்ததை அம்மாவிடம் கூடச் சொல்லாதே. முக்கியமாக விசாலாட்சியைப் பற்றிய விஷயத்தைச் சொல்லிவிடாதே. இன்று விசாலாட்சியுமில்லை. அவளைக் கொன்ற என் அப்பாவுமில்லை. அதனால் விஷயம் பொலீசாருக்குத் தெரிந்து எவருக்காவது கஷ்டங்கள் விளையுமென்ற நிலை இல்லாவிட்டாலும், பாக்கியம் இதை அறிந்தால் பயந்துவிடுவாள் என்ற அச்சம் எனக்குண்டு. நீயோ ஆண் பிள்ளை எதையும் தாங்கிக் கொள்ள நீ பயின்று கொள்ள வேண்டும்.”

அன்றிரவு சிவநேசர் தூங்கவே இல்லை. தம் அறையுள் நீண்ட நேரம் குறுக்கும் மறுக்குமாக நடந்துக் கொண்டிருந்த அவர், ஸ்ரீதர் தூங்கி விட்டானா என்று பார்க்க விரும்பினார். மெல்ல அவன் படுக்கை அறையை நோக்கி நடந்தார்.

வளர்பிறையின் வண்ண நிலா அறையின் ஜன்னலூடாக, படுக்கைக்குச் சமீபமாகப் பிரவகித்துக் கொண்டிருக்க, ஸ்ரீதர் ஆழ்ந்த தூக்கத்தில் அமிழ்ந்திருந்தான். ஆம், தூக்கம் என்பது விசித்திரமானது. துக்க நினைவுகளில் ஈடுபட்ட ஒருவரின் கண்களை அது சில சமயங்களில் முற்றாகத் தழுவ மறைந்து விடுகிறது. ஆனால் வேறு சமயங்களில் கவலைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்குத் தூக்கமே சிலருக்கு உறு துனையாகவும் ஆகிவிடுகிறது.

சிவநேசர் சிறிது நேரம் ஸ்ரீதரையே பார்த்துக் கொண்டு நின்றார். தனக்காக அவன் செய்த தியாகத்தை நினைத்ததும் அவரது உளளம் வெதும்பியது. எந்த ஆண் பிள்ளையும் எந்தக் கஷ்டத்திலும் அழவே கூடாது, அழுகை பலவீனத்தின் அறிகுறி என்பதே அவரது சித்தாந்தமாயினும் இருளில் தனியே நின்று தன் மகனைப் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு தன் கண்களில் பீறிட்டு வந்த கண்ணீரைத் தடுக்க முடியவில்லை. “அவனை எவ்வளவு கஷ்டப்படுத்துகிறேன் நான்” என்று எண்ணிய அவர், கன்னத்தின் வழியே கோடிட்டுச் சென்ற கண்ணீர்த் தாரையைத் துடைப்பதற்குக் கூடக் கையை உயர்த்தவில்லை. அக்கண்ணீர் தான் அன்று மாலை ஸ்ரீதரின் ஆசைக் கோட்டைகள். எல்லாவற்றையும் அடியோடு தரை மட்டமாக்கிவிட்ட கொடிய பாவத்துக்குத் தான் செய்ய்யும் பிராயச் சித்தம் போலிருந்தது அவருக்கு.

[தொடரும்]