தொடர்நாவல்: மனக்கண் (25)

25-ம் அத்தியாயம்: சுரேஷின் திகைப்பு!

தொடர்நாவல்: மனக்கண் (25)தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -ஸ்ரீதர் தன் மகன் பிறந்து ஆறு மாதங்களின் பின் ஒரு நாள் காலை 10 மணியளவில் ‘அமராவதி’ மாளிகைக்கு முன்னாலிருந்த பெரிய வேப்பமரத்தின் குளிர்ந்த நிழலில் ஒரு வசதியான நாற்காலியில் உட்கார்ந்து தன் குண்டு மகனோடு விளையாடிக் கொண்டிருந்தான். செக்கச் செவேலென்று உருண்டு திரண்டு சீனத்துப் பொம்மை போல் விளங்கிய முரளிதரன் – அது தான் சின்னச் ஸ்ரீதரின் பெயர்- ஸ்ரீதரின் மடியில் ஒரு நிலையில் நில்லாது புரள்வதும், பல விதமான ஒலிகளைச் செய்து சிரித்துக் கூத்தடிப்பதுமாக இருந்தான். நல்ல தேகாரோக்கியத்துடனும் உயிர்த் துடிப்போடும் விளங்கிய முரளி என்னதான் சின்னவனாக இருந்தாலும், அவனை அங்குமிங்கும் விழுந்து விடாமல் பிடித்து வைத்து வேடிக்கை காண்பிப்பது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. ஆகவே “முரளி, புரளி பண்ணாதே” என்ற இன்பப் பல்லவியை அடிக்கடி பாடிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர். அவனுக்கு அந்தப் பல்லவியைத் திருப்பித் திருப்பிச் சொல்வதில் தனி ஆனந்தம்.

ஸ்ரீதருக்கு முன்பு இசை என்றால், உயிரல்லவா? அப்போதெல்லாம் பிரபல இசைக் கவிஞர்களின் இசைத்தட்டுகளை ரேடியோகிராமில் போட்டு, அவற்றைக் கேட்டு மகிழ்வது அவனது வழக்கம். ‘பத்மா’வையும் “பாடு, பாடு” என்று அடிக்கடி தொல்லைப்படுத்துவான். ஆனால் இப்பொழுதோ அவை முற்றாக நின்றுவிட்டன. முரளியின் “கீயா மாயா” மழலையும் அவன் கைதட்டிச் சிரிக்கும் ஒலியுமே அவனுக்குப் பேரிசையாக அமைந்துவிட்டன. ஏன்? முரளியின் அழுகை கூட, “ஐயோ, அவன் ஏன் அழுகிறான்?” என்ற வேதனையை மனதில் ஏற்படுத்திய போதிலும் ஓர் இன்னிசையாகவே அவன் காதுகளுக்குப் பட்டது.

“பார் இராசாத்தி! திருவள்ளுவர் சொன்னது எவ்வளவு உண்மை! “யாழினிது குழலினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதார்?” என்பதை முரளி பிறந்த பிறகு தான் நான் நன்கு உணர்கிறேன். ஆனால் திருவள்ளுவரைப் பொறுத்த வரையில் அவர் அறிஞரானதால், அவர் மனைவி வாசுகி அவருக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுக்காமலே, மழலையின் இனிமை அவருக்குத் தெரிந்துவிட்டது, பார்த்தாயா? ‘பத்மா’ என்னைப் பொறுத்தவரையில் நான் வள்ளுவரை விட அதிர்ஷ்டசாலி. நீ வாசுகியைப் போலில்லாமல் எனக்குப் புரளிக்கார முரளியைப் பெற்றுத் தந்துவிட்டாயல்லவா? இந்த வகையில் பார்த்தால் வள்ளுவருக்கு வாய்த்த வாசுகியை விட எனக்கு வாய்ந்த நீ மேலானவள்” என்று அடிக்கடி சொல்லுவான்.

மடியில் குழந்தையை வைத்திருப்பதில் ஸ்ரீதருக்கு ஒரு பிரச்சினை இருந்தது. தவறுதலாகத் தனது கைவிரல்கள் முரளியின் கண்களைக் குத்திவிட்டால் என்ன செய்வது என்பதுதான் அது. இப்படிப்பட்ட விபத்து ஏற்படாது தடுப்பதில் அவன் கண்ணும் கருத்துமாயிருந்தாலும், தவறுதலாக அவ்வித நிகழ்ச்சி எதுவும் ஏற்பட்டுவிட்டால், அதனால் முரளிக்கு அதிக துன்பம் விளைந்து விடக் கூடது என்பதற்காகத் தன் கையின் நகங்களைச் சுசீலாவைக் கொண்டு மிக மிக மொட்டையாக வெட்டி வைத்திருந்தான ஸ்ரீதர். அதன் பயனாக முரளியின் மொட்டைக் கோலப் பிஞ்சு விரல்களும் ஒன்று போலவே காட்சியளித்தன. சுசீலா ஒரு நாள் அவர்கள் இருவரது மொட்டை விரல்களையும் ஒட்ட வைத்துக் கொண்டு,

தந்தை விரலும் மொட்டை
தம்பி விரலும் மொட்டை
அப்பா விரலும் மொட்டை
அம்பி விரலும் மொட்டை
இரண்டு பேராலும்
அம்மாவைக் கிள்ள முடியாது

என்று பாட்டுப் பாடிக் கும்மாளமிட்டாள். ஸ்ரீதருக்கு ஒரே ஆனந்தம். “டார்லிங், இந்தப் பாட்டை நீ எங்கே கற்றாய்?” என்று கேட்டான் ஸ்ரீதர். “நானாகப் பாடினேன். நான் தான் தான்தோன்றிக் கவிராயி” என்று கூறிச் சுசீலா மேலும் கும்மாளமடித்தாள். முரளிக்குக் கிச்சுக் கிச்சுக் காட்டினாள்.

“நீ நல்லாய்ப் பாட்டுக் கட்டுகிறாயே. இன்னொரு பாட்டுப் பாடு” என்றான் ஸ்ரீதர்.

சுசீலா பாடினாள். ஆனால் அதற்கு முகவுரையாக “இது அப்பாவைப் பற்றியல்ல, அம்பியைப் பற்றி.” என்று கூற அவள் மறக்கவில்லை.

“பாலைக் கொடுத்தபோது
பாலைக் குடிக்க மறுத்து
புரளிக் கார முரளி
புல்லுத் தின்னப் போனான்
புல்லும் கைய்த்த தென்று
காறித் துப்பி வந்தான்
அம்மா முன்னே வந்து
அண்ணாந்து நின்றான்.
அம்மா அவனைத் தூக்கி
அருந்து பாலை என்றாள்.
அதற்குப் பிறகு முரளி
அச்சாப் பிள்ளை இப்போ.
புரளி செய்வதில்லை.
புல்லுத் தின்பதில்லை.”

சுசீலாவின் பாட்டைக் கேட்டு ஸ்ரீதர் கலகலவென்று சிரித்துவிட்டான். அவன் கண்கள் குருடாயிருந்த போதிலும் இக்கவிதை அவனது மனத்திரையில் தன் மகன் குண்டு முரளி, வெறும் மேலுடன் தன் பூக்கரங்களைப் பின்னால் கட்டிக் கொண்டு அம்மாவை அண்ணாந்து பார்ப்பது போன்ற சித்திரமொன்றைத் தோற்றுவித்து விட்டது. சிறிது நேரம் அதில் சொக்கியிருந்த அவன், “இதுவும் ‘தான்தோன்றிக் கவிராயி’யின் பாட்டுத்தானா?” என்று கேட்டான்.

“ஆம்” என்றாள் சுசீலா, சிரித்துக் கொண்டு.

வாழ்க்கை இவ்வாறு இன்பச் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த போது அதில் ஒரு சலனத்தை ஏற்படுத்துவது போல லண்டன் சென்றிருந்த டாக்டர் சுரேஷ் தனது மேற்படிப்பை முடித்துக் கொண்டு இலங்கை மீண்டான். இலங்கை வந்ததும் அவன் செய்ய நினைத்திருந்த முதலாவது வேலைகளில் ஒன்று ‘அமராவதி’க்கு வந்து தனது நண்பன் ஸ்ரீதரைச் சந்தித்து அவன் கண் நோய்ப் பற்றி அவனுடன் பேசி, அவனது கண்களுக்கு மீண்டும் ஒளி கொடுக்கத் தன்னாலான முயற்சியைச் செய்வதாகும்.

தொடர்நாவல்: மனக்கண் (25)சுரேஷைப் பொறுத்தவரையில் அவன் கண் டாக்டரல்லாவிட்டாலும் சிறந்த கண் டாக்டர்களுடன் கண் வைத்தியத்தின் இன்றைய நிலைமை பற்றி அவன் பல தடவை பேசியிருக்கிறான். அதன்படி முன்னர் தீர்க்கப்படாத பல கண்ணோய்கள் இப்பொழுது தீர்க்கப்படக் கூடிய நிலையை அடைந்துவிட்டதையும் ஒரு சில மிகச் சிறந்த அறிவும், துணிவும் கொண்ட கண் டாக்டர்கள் சாதித்ததற்கரிய சில சாதனைகளை இத்துறையில் செய்திருப்பதைப் பற்றியும் அவன் கேள்விப் பட்டிருக்கிறான். இப்படிப்பட்ட கண் டாக்டர்களில் ஒருவர் தான் பிரிட்டிஷ் பேராசிரியர் டாக்டர் நிக்கலஸ் நோர்த்லி. அகில உலகிலும் மிகச் சிறந்த கண் டாக்டர்கள் ஒரு சிலரே இருக்கின்றனர் என்றும் அவர்களில் டாக்டர் நிக்கலஸ் நோர்த்லி ஒருவர் என்றும் பத்திரிகைகள் அவரைப் போற்றிப் புகழ்ந்தெழுதியமையை அவன் பல தடவை வாசித்திருக்கிறான். உண்மையில் அவர் பெயர் இரண்டு தடவை சர்வதேச வைத்தியப் பரிசுக்குச் சிபாரிசு செய்யப்பட்டதையும் ஒரு சில அரசியல் காரணங்களினால் அது சாத்தியமாகாது போனதையும் கூட அவன் அறிவான். சூடான செய்திகளைப் பிரசுரிப்பதில் புகழ் பெற்ற ஒரு பிரிட்டிஷ் பத்திரிகை இச் செய்தியை வெளியிட்டு, பிரிட்டன் பூராவும் பெரிய பரபரப்பை ஊட்டியதும் அவனுக்குத் தெரியும். பிரிட்டிஷ் பொதுமக்களைப் பொறுத்த வரையில் என்ன தான் எதிர்ப்பிருந்தாலும், என்றைக்கோ ஒரு நாள் டாக்டர் நோர்த்லி சர்வதேச வைத்தியப் பரிசைப் பெற்றே தீர்வார் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கவே செய்தது. சுரேஷ் தன்னுடன் படித்த ஆங்கில மாணவர்களுடன் பேசுவதன் மூலம் இதை அறிந்து கொண்டான்.

மேலும் இது பற்றி ஒரு பத்திரிகையின் நேயர் கடிதப் பகுதியில் எழுதப்பட்ட கடிதங்கள் ஒன்றும் சுரேஷிற்கு இன்னும் நன்கு நினைவிருந்தது. “சர்வதேசப் பரிசு. பேராசிரியர் நோர்த்லியின் சாதனைகளுக்கு அப் பரிசு மிகச் சிறிய பரிசே. அது கிடைக்காததால் ஒன்றும் குடி முழுகிப் போய் விடவில்லை. முழு உலகாலும் கபோதி எனக் கை விடப்பட்ட நான் இருபது வருடங்களின் பின் என் கண்ணை அவரால் மீண்டும் பெற்றேன். என் போன்றவர்களின் நன்றியே அவருக்கு உலகின் மிகப் பெரிய பரிசாம். எந்த நோயாளியும் அரசியல் காரணங்களுக்காக இந்தப் பரிசை இம்மேதைக்களிக்க மறுக்கமாட்டானல்லவா? சர்வதேசப் பரிசு மிகச் சிறியதென்பதற்காகவே அது அவருக்கு அளிக்கப்பட வில்லை என்று நான் நினைக்கிறேன். இந்த அற்பப் பரிசு இனி மேல் அவருக்கு அளிக்கப்பட்டால் நிச்சயம் அவர் அதை வாங்கிக் கொள்ளக் கூடாது” என்ற ரீதியில் அது எழுதப்பட்டிருந்தது.

அதிர்ஷ்டவசமாக சுரேஷ் படித்த வைத்தியக் கல்லூரியிலே பேராசிரியர் நோர்த்லியும் கல்வி கற்பித்தார். இது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்றென்றால், அதுவும் நழுவி வாயில் விழுந்தது போன்ற நிலைமையும் இவ்விஷயத்தில் சீக்கிரமே உண்டாயிற்று. பேராசிரியர் நோர்த்லி தமது ஓய்வு நேரத்தில் ஒரு பகுதியை உலக சமாதான இயக்கத்துக்காகவும் காலனிகளின் விடுதலைக்காகவும் எப்பொழுதும் செலவிட்டு வந்தார். இது சம்பந்தமாக நடைபெற்ற ஊர்வலங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் சுரேஷ் படித்த வைத்தியக் கல்லூரி மாணவர் மாணவிகள் அடிக்கடி கலந்து கொள்வது வழக்கம். “காலனி முறை ஒழிக! பேராசிரியர் நோர்த்லி வாழ்க!” என்று அவர்கள் பேராசிரியரின் பின்னல் அட்டைகளைத் தாங்கிச் சுலோகங்களை முழங்கிக் கொண்டு செல்வார்கள். இந்த ஊர்வலங்களில் கலந்து கொண்டதால் பேராசிரியருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு சுரேஷிற்கும் ஓரளவு ஏற்பட்டது. வகுப்பில் மிகக் கண்டிப்பாக இருக்கும் பேராசிரியர் இந்த ஊர்வலங்களின் போது ஒரு புது மனிதராகிவிடுவார். சுலோகங்களைத் தானும் சேர்ந்தும் முழங்குவார். மாணவர்களுடன் சேர்ந்து பாட்டுக்கள் கூடப் பாடுவார்.

இவற்றாலேற்பட்ட பழக்கத்தை வைத்து ஒரு நாள் சுரேஷ் அவரிடம் ஸ்ரீதரின் கண் பிரச்சினையைப் பற்றி விவரித்தான். “இதை உங்களால் சுகமாக்க முடியுமா?” என்று கேட்டான்.

அதற்குப் பேராசிரியர் நிக்கலஸ் “உனது கேள்விக்கு நான் எப்படிப் பதிலளிக்க முடியும். கண் நோய்களில் எத்தனையோ வகையுண்டு. இதில் உனது நண்பனின் கண் நோய் எந்தவிதமானதென்பது யாருக்குத் தெரியும்? நன்கு பரீசிலித்துப் பார்த்த பிறகுதான் பதில் சொல்ல முடியும்.” என்ரு கூறிவிட்டுத் திடீரென “ நீ எந்தத் தேசத்தைச் சேர்ந்தவன்? இந்தியாவா?” என்று கேட்டார்.

“இல்லை. இந்தியாவுக்கு அடியில் ஒரு தாமரை பொட்டுப் போல் இருக்கிறதே இலங்கை – அதுவே என் நாடு.” என்றான் சுரேஷ்.

“ஓ! அப்படியா? நான் இலங்கையைப் பற்றி மிகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அழகான நாடென்று சொல்லுகிறார்கள். நான் அங்கே வந்து உன் நண்பனைப் பார்ப்பதில் ஆட்சேபணை இல்லை” என்றார் டாக்டர் நிக்கலஸ்.

சுரேஷ் திகைத்துவிட்டான். ஸ்ரீதர் அதிர்ஷ்டசாலிதான் என்றெண்ணிய அவன், “நிச்சயம் நீங்கள் வர வேண்டும். அங்கே நீங்கள் வேண்டிய காலம் தங்கியிருந்து சுற்றுப்பிரயாணம் செய்வதோடு ஸ்ரீதரையும் குணமாக்க வேண்டும்.” என்று வேண்டிக் கொண்டான்.

“ஆம்.” என்று தலையை ஆட்டிய பேராசிரியர் பின் அதனைத் தொடர்ந்து “ஆனால் என்னைத் தான் உனக்குத் தெரியுமே? கல்லூரி வேலையைத் தவிர்த்து, நூல்கள் எழுதும் வேலை, சிகிச்சை வேலை, சமாதான இயக்க வேலைகள் என்று ஓய்வேயில்லை. ஆகவே திகதி சொல்ல முடியாது. திடுதிப்பென்று அறிவிப்பேன். உடனே பிரயாண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தெரிகிறதா?”

“மெத்தச் சரி” என்றான் சுரேஷ் மகிழ்ச்சியுடன்.

இந்த ஏற்பாட்டைப் பற்றி ஸ்ரீதருக்குச் சொல்ல வேண்டுமென்ற எண்ணத்தில் தான் யாழ்ப்பாணத்துக்கு வந்ததும் ‘அமராவதி’க்குத் தனது மாமனார் வாங்கிக் கொடுத்த புதிய காரில் ஸ்ரீதரைப் பார்க்க வந்தான் சுரேஷ்.

சுரேஷ் ‘கிஷ்கிந்தா’வில் இரண்டு வருட காலம் ஸ்ரீதருடன் ஒன்றாக வாழ்ந்திருந்த போதிலும், ‘அமராவதி’க்கு வந்தது, இதுவே முதல் தடவை. ஆகவே அவனுக்கு ‘அமராவதி’ மாளிகையின் வாசற்காவல் முறை மிகவும் விசித்திரம் நிறைந்ததாகவும் கர்வம் நிறைந்ததாகவும் தோன்றியது. லண்டனிலுள்ள பங்கிங்ஹாம் மாளிகையிலும் கொழும்பிலுள்ள கவர்னர் இல்லத்திலும் தான் அவன் இத்தகைய ஏற்பாடுகளைக் கண்டிருக்கிறான். ஆனால் அவ்விடங்களோ உத்தியோக வாசஸ்தலங்களாயிருப்பதால் அத்தகைய ஏற்பாடுகள் அவற்றுக்கு வேண்டியதுதான். ஆனால் சிவநேசரோ தாம் பணக்காரரென்பதாலும், தமது பிரபுத்துவ அந்தஸ்தைக் காப்பாற்றுவதற்குமாகவே இவ்வித கெடுபிடி ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். சிவநேசரின் இந்தப் போக்கு அவனுக்குப் பிடிக்கவே இல்லை.

“அமராவதி” வாசலுக்குச் சுரேஷ் வந்தபோது பிரதான வாயிலின் இரும்பு ‘கேட்’டுகள் இரண்டும் இறுகச் சாத்திக் கிடந்தன. பக்கத்திலிருந்த சிறிய ‘கேட்’டுக்குச் சமீபமாக காக்கிக் கோட்டு அணிந்த காவற்காரன் நின்று கொண்டிருந்தான். சுரேஷிடம் “யாரைப் பார்க்க வேணும்” என்று கேட்டான் அவன்.

“ஸ்ரீதரைப் பார்க்க வேண்டும். டாக்டர் சுரேஷ் வந்திருப்பதாகச் சொல்லு” என்றான் சுரேஷ். அதைக் கேட்டதும் காவற்காரன் வேப்பமர நிழலில் முரளியோடு விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரீதரிடம் விரைந்தான்.

“ஐயா, டாக்டர் சுரேஷ் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்” என்றான்.

“டாக்டர் சுரேஷா! உடனே வரச் சொல்லு” என்றான் ஸ்ரீதர்.

சிறிது நேரத்தில் “அமராவதி’யின் பெரிய ‘கேட்’டுகள் திறக்க, சுரேஷின் கார். வேப்பமரத்துக்குச் சற்றுத் தொலைவிலுள்ள புல் தரையில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய சுரேஷ் ஸ்ரீதரைப் பார்த்து “ஸ்ரீதர் செளக்கியமா? நேற்றுத்தான் யாழ்ப்பாணம் வந்தேன். உடனே உன்னைப் பார்க்க வந்துவிட்டேன். அதிருக்க, உனக்கொரு நல்ல செய்தி. உலகத்திலேயே மிகப் பெரிய கண் டாக்டர் உனக்கு வைத்தியம் செய்ய நான் ஏற்பாடு செய்திருக்கிறேன்.” என்றான் உற்சாகமாக.

ஸ்ரீதருக்கு ஒரே மகிழ்ச்சி. மலர்ந்த முகத்தோடு “உண்மையாகவா? யாரது? டாக்டரின் பெயரென்ன?” என்றான்.

தொடர்நாவல்: மனக்கண் (25)சுரேஷ் விவரங்களைக் கூறினான். அதன்பின் “ஸ்ரீதர்! நீ உன் கண் பார்வையை இழந்து விட்டாய் என்றறிந்ததும் நான் எவ்வளவு மனம் வருந்தினேன் தெரியுமா? கண் பார்வை இழந்த உனது நிலை எப்படியிருக்கும் என்பதை அறிந்துகொள்வதற்காக நான் லண்டனில் என் அறையிலே கண்களை மூடிக் கொண்டு பல தடவைகள் அங்குமிங்கும் நடந்து பார்த்தேன். உண்மையில் கண் பார்வையை இழப்பது என்பது மிகவும் பயங்கரமான ஒரு விஷயமே. ஆனால் நீயே அதை மிகவும் தைரியமாக எதிர்கொண்டு சமாளித்துவிட்டாய். உன் நிலையில் வேறு எவரும் உன்னைப் போல் இவ்வளவு சந்தோசமாயிருக்க மாட்டார்கள். அதற்காக உன்னை எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்று சொல்லிக் கொண்டே ஸ்ரீதரின் மடியிலிருந்த முரளியின் கன்னத்தைக் கிள்ளி வேடிக்கை காட்டினான். அதன்பின் அவனைத் தன் கரங்களால் தூக்கி “உன் மகன் சரியாக உன்னைப் போலவே இருக்கிறான். இவன் போன்ற அழகான குழந்தையைப் பெற நீ எவ்வளவு அதிர்ஷ்டசாலியாய் இருக்க வேண்டும். அவனோடு உன்னைப் பார்க்கும் போது உனக்குக் கண் பார்வை குறைந்ததையிட்டு எனக்கு அனுதாபம் ஏற்படவில்லை. பொறாமைதான் ஏற்படுகிறது. ஆனால் இவ்வளவு அழகான பிள்ளையைப் பார்க்க முடியவில்லையே என்று உனக்குக் கவலை இருக்கலாமல்லவா? பேராசிரியர் நிக்கலஸ் நோர்த்லி நிச்சயம் அதைப் போக்கி வைப்பார்” என்றான்.

ஸ்ரீதர் சிரித்துக் கொண்டு “உண்மையாகவே முரளி அவ்வளவு அழகாயிருக்கிறானா? அவன் முகத்தையும் உடலையும் என் விரல்களால் ‘பிரெயில்’ புத்தகங்களைத் தடவிப் பார்ப்பது போல் நான் அடிக்கடி தடவிப் பார்ப்பதுண்டு. தளுக்கு மொளுக்கென்று இருக்கிறான். நிறத்தில் என் அம்மாவைப் போல் இருக்கிறானாமே? அப்படி என்றால் அவன் அழகாய்த்தானிருப்பான். ஆனால் அவன் கண்கள் எப்படியிருக்கின்றன சுரேஷ்?” எனான்.

“கண்களா? சரியாக உன் கொட்டைப்பாக்கு விழிகள் போல் மிகப் பெரிய விழிகள். மிகவும் கவர்ச்சியாயிருக்கின்றன” என்று சொல்லிக் கொண்டே சுரேஷ் முரளியை மீண்டும் ஸ்ரீதர் மடியில் வைத்தான். அவன் தன் பிஞ்சு விரல்களால் ஸ்ரீதர் அணிந்திருந்த கறுப்புக் கன்ணாடியைப் பிடுங்கப் பிடிவாதமாக முயன்றான். அவனைச் சமாளிப்பது ஸ்ரீதர்க்கு மிகவும் கஷ்டமாய்ப் போய்விட்டது. கடைசியில் பக்கத்திலிருந்த ஒரு ‘கிலு கிலுப்பையை’ அவன் கையில் திணித்து தனது கண்ணாடியைக் குழந்தையிடமிருந்து காப்பாற்றிக் கொண்டான்.

இதற்கிடையில் சுசீலா அங்கு வந்து விட்டாள். “என்ன தகப்பனும் மகனும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கொண்டே முரளியைத் தன் கரங்களால் தூக்கிய சுசீலா டாக்டர் சுரேஷை ஏற இறங்கப் பார்த்துப் புன்னகை செய்தாள். நல்ல வேளை. “இது யார்?” என்ற கேள்வி அவன் வாயில் வந்ததாயினும் ஏனோ அவன் அக் கேள்வியைக் கேட்டு விடவில்லை.

சுசீலாவின் குரலைக் கேட்டதும் ஸ்ரீதர் “ஆ! பத்மா வந்து விட்டாயா? சுரேஷ்! பத்மாவைப் பார்த்தாயல்லவா? முன்னை விட அவள் இப்போது மிகவும் கொழுத்துப் போயிருக்கிறாள் இல்லையா?” என்றான்.

இதைக் கேட்டதும் சுரேஷ் திகைத்தான். சுசீலாவும் திகைத்துவிட்டாள்.

“என்ன இது? இவள் பத்மாவா? இதென்ன ஆள் மாறாட்டம்?” என்ற சிந்தனையில் ஸ்தம்பித்துக் கல்லாகி நின்றான் சுரேஷ்.

சுசீலாவைப் பொறுத்த வரையில் ஸ்ரீதரைப் பார்க்க ‘அமராவதி’ வளவுள்ளே வர எவரும் அனுமதிக்கப் படாமலிருக்கும் போது “யார் இவன், எப்படி வந்தான்?” என்ற நினைவில் குறுகுறுத்துக் கொண்டிருந்த அவள் நெஞ்சம் சுரேஷ் என்ற பெயரைக் கேட்டதும் திடுக்கிட்டு விட்டது. “சுரேஷா? அவரின் பிரிய நண்பரல்லவா சுரேஷ்? பத்மாவைக் கூட நன்கு அறிந்தவர். ஐயோ அவருக்கு ஆள் மாறாட்டம் தெரிந்துவிடுமே. இதனால் என்ன விபரீதம் நேரிடுமோ?” என்று கவலையடைந்தாள் அவள்.

சுரேஷ் திகைத்துப் போய் நின்ற நிலையிலிருந்து அவனுக்குத் தனது ஆள் மாறாட்டம் நன்கு புரிந்துவிட்டது என்பதை அவள் நன்கு அறிந்துகொண்டாள். தனது திருமண நாளிலிருந்து ஒன்றரை வருட கலத்துக்கு அதிகமாக அவள் நடத்தி அந்த ஆள் மாறாட்ட நாடகம் இன்று தான் முதன் முதலாக வெளியார் ஒருவருக்குத் தெரிய வந்திருக்கிறது. “ஆனால் இதற்குக் காரணம் யார்? நான் தானே?” என்று தன்னைத் தானே குறை கூறிக் கொண்டாள் அவள். “நான் எப்பொழுதும் அவர் பக்கத்திலிருக்க வேண்டுமென்ற நியதியை மீறியதால் அல்லவா இது நடந்திருக்கிறது. நான் பக்கத்திலிருந்தால் காவற்காரன் சுரேஷ் வரவை எனக்குக் கூறியிருப்பானல்லவா? ஆனால் நான் அக்கடமையிலிருந்து தவறி விட்டேன். இதனால் என்ன நிகழப் போகிறதோ?” என்று பயந்தாள் அவள்.

சுரேஷ் “நான் பத்மா அல்ல” என்ற விஷயத்தை ஸ்ரீதருக்குக் கூறிவிட்டால் என்ன செய்வது?” – இந்தப் பிரச்சினை பயங்கரமான ஒரு கேள்விக்குறியாக அவள் உள்ளத்தில் எழுந்தது. இருந்தாலும் அவள் கலங்கி விடவில்லை. என்றுமே சுறுசுறுப்பாகச் சிந்தித்துத் துடுக்காக வேலை செய்யும் பண்புள்ள சுசீலா, நிலைமையைச் சமாளிக்க ஒரு திடீர் முடிவுக்கு வந்துவிட்டாள்.

சுரேஷின் முகத்தை அவள் நிமிர்ந்து நோக்கினாள். அவள் கண்கள் சுரேஷின் கண்களுடன் பேசின. “ஒன்றும் பேச வேண்டாம்.” என்று கண்களால் அவனை எச்சரித்து தலையையும் அதற்குத் தக்கபடி அசைத்து, வாயில் மோதிர விரலை வைத்து மெளனக் குறிப்புக் காட்டினாள். சுரேஷிற்கும் விஷயம் புரிந்துவிட்டது. சிந்தனையின் இரேகைகள் படர்ந்த முகத்தோடு “சரி” என்று தலையை அசைத்தான் அவன்.

இவ்வளவும் அங்கே ஒரு கணத்தில் நடந்து முடிந்து விட்டது. சுரேஷும் சுசீலாவும் தம் பார்வையாலேயே ஓர் ஒப்பந்தத்துக்கு வந்துவிட்டார்கள்.

“நான் பத்மாவல்ல. ஆனால் ஸ்ரீதர் அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறார். நீர் அவருக்கு உண்மையைச் சொல்லி விட வேண்டாம்” என்றது அவளது பார்வை.

“ஆகட்டும்” என்றது சுரேஷின் கண்கள் பதிலுக்கு.

ஆனால் இந்த விஷயம் நடந்து கொண்டிருப்பதைச் சற்றுமறியாத ஸ்ரீதர் சுரேஷிடம், “என்ன சுரேஷ். பேசாமலிருக்கிறாய். எனக்குக் கண் தெரியாவிட்டாலும் கையால் பிடித்துப் பார்க்கும் போது அளவுகள் தெரியத் தானே தெரிகின்றன? நான் சொன்னது சரிதானே? பத்மா முன்னை விட இப்பொழுது பருத்துத்தானே இருக்கிறாள்?” விஷயத்தைத் தொடர்ந்து பேசினான்.

சுரேஷ் “ஆம் பத்மா முன்னை விட பருமன் தான். ஆனால் நான் அதைச் சொல்வது சரியா என்று யோசித்தேன். சிலருக்கு தாம் பருத்திருப்பதை மற்றவர்கள் சுட்டிக் காட்டுவது பிடிப்பதில்லையல்லவா?” என்றான்.

“ஓ! அதுதான் பதில் சொல்ல இவ்வளவு தயங்கினாய் போலும். ஆனால் நீ இவ்வாறு பேசுவதற்குக் காரணம் உனக்குப் பத்மாவைப் பற்றித் தெரியாததுதான். பத்மா அதிசயமான பெண். இல்லாவிட்டால் என் போன்ற குருடனை அவள் கட்டுவாளா? நிச்சயம் நீ எது சொன்னாலும் கோபிக்க மாட்டாள்.” என்றான்.

பின்னர் ஸ்ரீதர் பத்மாவிடம் சுரேஷ் தனக்கு கண் பார்வை தர ஏற்பாடு செய்திருப்பதைப் பற்றியும், உலகப்புகழ் பேராசிரியர் நிக்கலஸ் நோர்த்லி இலங்கை வர இருப்பதையும் பற்றியும் கூறினான். “பார்த்தாயா பத்மா. சுரேஷிற்கு என் மீது எவ்வளவு அன்பு” என்று அவன் கூறி முடிப்பதற்கும் வெளியே அலுவலாகச் சென்றிருந்த சிவநேசரும் பாக்கியம் தமது காரில் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது. பாக்கியம் வந்ததை அறிந்ததும் “அம்மா!” எனக் கூவி சீக்கிரமே எனக்குக் கண் பார்வை தரப் போகிறான். அதற்காக உலகிலேயே மிகச் சிறந்த கண் டாக்டரை இலங்கைக்கு அழைத்து வர இருக்கிறான்.” என்றான்.

பாக்கியம் சுசீலாவின் கையிலிருந்த முரளியைத் தன் கரத்தில் வாங்கிக் கொண்டு ஸ்ரீதர் பக்கத்திலுட்கார்ந்து பேச ஆரம்பித்தாள். முரளியோ தன் பாட்டியின் நெஞ்சில் ஊசலாடிய பதக்கத்தோடு விளையாடத் தொடங்கினாள்.

சிவநேசர் சுரேஷையும் சுசீலாவையும் தன்னுடன் வரும்படி சைகை காட்டித் தோட்டத்தின் பிற்பகுதிக்கு அழைத்துச் சென்றார். வேலைகாரன் ஒருவனைக் கூப்பிட்டு, சுரேஷிற்கும் தனக்கும் குளிர்பானங்கள் கொண்டு வரும்படியும் உத்தரவிட்டார் அவர்.

குளிர்பானம் வந்ததும் அதை அருந்திக் கொண்டே சிவநேசர் ஆழ்ந்த சிந்தனையோடு “சுரேஷ், ஸ்ரீதருக்கு மீளவும் கண் பார்வை கிடைப்பதை நான் விரும்பவில்லை. அதனால் எவருக்கும் நன்மை ஏற்படாது.” என்றார்.

சுரேஷ் திடுக்கிட்டான். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்றான்.

“ஏனா? அவனுக்கு இப்பொழுது ஒரு குறையுமில்லை. பணம், செல்வாக்கு, அழகான குழந்தை, அன்பு மனைவி… இவை எல்லாம் அவனுக்கு இன்று இருக்கின்றன. உண்மையில் அவன் இணையற்ற ஓர் இன்ப உலகிலே சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அவன் தன் கண் பார்வையை மீண்டும் பெற்றால், அவனது இவ்வின்ப வாழ்வு சுக்கு நூறாகிவிடும். அவன் தன் காதலை பத்மா என்று எண்ணியிருக்கும் பெண் உண்மையில் வேறு யாரோ என்றறிந்ததும் அவன் அவளை நிச்சயம் நிராகரிப்பான். நாங்கள் செய்த ஆள் மாறாட்டத்துக்காக அவன் எங்கள் எல்லோர் மீதும் கொதிப்படைவான். பத்மா இல்லாத வாழ்வும் ஒரு வாழ்வா என்றெண்ணித் தன் உயிருக்கே அவன் ஆபத்து விளைவித்துக் கொள்ளவும் கூடும். இந்த நிலையில் அவன் இழந்து போன தன் கண் பார்வையை மீண்டும் பெறுவது தீமையே ஒழிய நன்மையில்லை.”

சிவநேசர் இவ்வாறு சொல்லிவிட்டு, சுசீலாவின் முகத்தைப் பார்த்தார். இவ்விஷயத்தில் தனது அபிப்பிராயத்தை அவர் அறிய விரும்புகிறார் எனத் தெரிந்து கொண்ட சுசீலா சுரேஷை நோக்கி “டாக்டர் சுரேஷ். நாங்கள் இங்கு ஒரு பெரிய நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறோம். உங்கள் நண்பர் பத்மாவைக் காதலித்தார். ஆனால் சந்தர்ப்ப சூழல்கள் அக்காதலை முறியடித்துவிட்டன. விதியின் விளையாட்டால் இன்று நான் அவர் மனைவி. ஆனால் கண் பார்வையை இழந்த அவர் என்னைப் பத்மா என்றே எண்ணுகிறார். என் குரல் அதற்கு உதவியாயிருக்கிறது. இன்று அவர் வழ்வது ஒரு கனவுலகம். ஆனால் அக்கனவைக் கலைக்க வேண்டாம். அவருக்கு இன்பம் அளிப்பதற்காக நாம் நடிக்கும் இந்நாடகத்தில் நீங்களும் ஒரு நடிகராக வேண்டும். இது அவரது இன்பத்துக்காக அவரது நண்பரிடம் அவர் மனைவி செய்யும் கோரிக்கை.” என்றாள்.

சுரேஷிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. திக்பிரமை பிடித்து மெளனமாக நின்றான்.

சிவநேசர் மீண்டும் பேசினார்:

தொடர்நாவல்: மனக்கண் (25)“சுரேஷ்! நீ பேராசிரியர் நோர்த்லி இலங்கை வருவதாகச் சொன்னாயல்லவா? அவர் இங்கு வர வேண்டாம். அவர் வருவதும் கண் பார்வை தருவதும் ஸ்ரீதரின் நிம்மதிக்கும் பங்கம் விளைவிக்கும். ஆகவே அடுத்த தடவை நீ ஸ்ரீதரைச் சந்திக்கும் போது டாக்டர் நோர்த்லி வேலை நெருக்கடியால் இப்போதைக்கு வர முடியாதிருக்கிறதென்று கூறிவிடு. உண்மையில் நாம் இன்று ஸ்ரீதரை ஒரு கனவுலகில் சிறை வைத்திருக்கிறோம். அவன் அக்கனவுலகில் இன்ப வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதை யாரும் கெடுக்கக் கூடாது. இன்னும், வாழ்க்கையே ஒரு கனவென்கிறார்கள் ஒரு சிலர். அப்படியானால் ஸ்ரீதர் மட்டுமல்ல நாம் அனுபவிப்பதும் கனவின்பங்கள் தானே? ஸ்ரீதரின் வாழ்வு அக்கனவுள் இன்னொரு கனவு. அவனும் இன்பங்களை அன்பவிக்கத் தான் செய்கிறான். பார்க்கப் போனால் அவன் நம்மை விட ஒன்றும் அதிகமாக இழந்து விடவில்லை. ஆனால் அவனது கனவு நீங்கினால் அவன் துன்பக் கேணியில் வீழ்ந்து விடுவான். அவன் இன்று அனுபவித்து வரும் மன நிறைவுக்கு முடிவேற்பட்டுவிடும். இதை நாம் தெரிந்து கொண்டு அனுமதிக்க முடியாது.”

சுரேஷின் நிலைமை தர்மசங்கடமாகப் போய்விட்டது. ஒருவனுக்குக் கண்பார்வை அளிப்பது பெரிய காரியந்தான். ஆனால் அதன் விளைவு அவனுக்கே தீமை விளைக்கும் என்று சுசீலாவும் சிவநேசரும் சுட்டிக்காட்டிய பின்னர் ஸ்ரீதருக்குக் கண் பார்வை அளிப்பது சரிதானா என்ற சந்தேகம் அவனுக்கே ஏற்பட்டுவிட்டது.

சிவநேசர் “சுரேஷ்! இந்த ஆள் மாறாட்ட நாடகத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காகப் பத்மாவையோ பத்மாவாக நடிக்கும் இப்பெண்ணையோ தெரிந்த எவரையும் ‘அமராவதி’க்கு வர நாங்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் இன்று அந்த ஏற்பாடுகளில் ஏதோ சிறு குழறுபடி ஏற்பட்டுவிட்டதால் எமது ஆள் மாறாட்ட நாடகத்தை நீ தெரிந்து கொண்டாய். இதன் இரகசியத்தை ஸ்ரீதரிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் காப்பாற்றுவதாக நீ வாக்களிக்க வேண்டும்.” என்றார்.

சுரேஷ் “ஆகட்டும்” என்று தலையை அசைத்தான்.

அதன் பின் சுரேஷ், ஸ்ரீதர், சுசீலா, பாக்கியம், சிவநேசர் ஆகிய யாவரும் ஒன்றாக உட்கார்ந்து மத்தியான உணவருந்தினார்கள். முரளியோ ‘ஆயா’வின் மடியில் தூங்கச் சென்றுவிட்டான்.

உணவருந்தி முடிந்த பின்னர், இரண்டு மூன்று தினங் கழித்து மீண்டும் ஸ்ரீதரைச் சந்திக்க வருவதாகக் கூறி சுரேஷ் விடை பெற்றுச் சென்றான்.

வழி நெடுக, தனது வாழ்க்கையிலேயே முதல் முதலாகத் தான் கண்ட அதிசயமான ‘அமராவதி’ வளவு ஆள் மாறாட்ட நாடகத்தைப் பற்றியே அவன் மனம் மீண்டும் மீண்டும் சிந்தனை செய்து கொண்டிருந்தது.

[தொடரும்]


அறிஞர் அ.ந.கந்தசாமி

[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்]