தொல்காப்பியமும் பாலவியாகரணமும்:சொற்பாகுபாடு

தொல்காப்பியர்1.0. முகப்பு

தமிழ் மொழிக்குக் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணநூல் தொல்காப்பியம். தெலுங்கு மொழிக்காக எழுதப்பட்ட முதல் இலக்கணநூல் அந்திர சப்த சிந்தாமணி(நன்னயா, கி.பி.11). இந்நூல் சமசுக்கிருத மரபைப் பின்பற்றி சமசுக்கிருதத்தில் யாக்கப்பட்டதாகும். அதன் பின்பு கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டில் தூயதெலுங்கில் இலக்கணம் எழுத முனைந்த நூல் ஆந்திர பாஷா பூஷணம்(மூலகடிக கேதனா). இந்நூலுக்குப் பிறகு கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு நூல் எழுதப்பட்டது. அந்நூல் பாலவியாகரணம். இஃது தெலுங்கு மொழியைக் கற்கும் மாணவருக்காக எழுதப்பட்டது. இந்நூலிலும் தொல்காப்பியத்திலும் அமைந்துள்ள சொற்பாகுபாடு குறித்து விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம்.

2.0. தொல்காப்பியமும் சொற்பாகுபாடும்

 தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் எனும் முப்பகுப்புடைத்து. இதனை யாத்தவர் தொல்காப்பியர். இவரின் காலம் குறித்த கருத்து வேறுபாடுகள் உண்டு. இருப்பினும் கி.மு.5 என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.

தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் மட்டுமின்றி எழுத்ததிகாரத்திலும் பொருளதிகாரத்திலும் சொல் குறித்த விளக்கங்களை முன்வைத்துள்ளார். இருப்பினும் சொல்லதிகாரத்தில்தாம் விரிவாக பேசியுள்ளார். அஃது தொடரியல், சொல்லியல்  என்றாயிரு வகைகளில் அமைந்துள்ளது.
 
 இனித் தொல்கப்பியர் வகுத்த சொற்பாகுபாடு குறித்துக் காண்போம். இவர் சொல்லுக்கான விளக்கத்தை ஒன்பது இயல்களில் விளக்கியுள்ளார். அவ்வொன்பது இயல்களுள் கிளவியாக்கம் வேற்றுமையியல் வேற்றுமைமயங்கியல் விளிமரபு ஆகியன தொடரியல் குறித்தும், பெயரியல் வினையியல் இடையியல் உரியியல் ஆகியன சொல்லியல் குறித்தும், எச்சவியல் எஞ்சியவற்றையும் விளக்குகின்றன(தெய்வச்சிலையார் 2003:58).
 
 விளிமரபு தனிச்சொல் பகுதியுடன் வைத்து எண்ணத்தக்கது எனவும், எச்சவியலைத் தொடரியலுடன் வைத்து எண்ணத்தக்கது எனவும் கருத்து நிலவுகிறது(செ.வைசண்முகம் 2004:1). இவ்வாறு சொல்லுவது ஒருபுறத்தார் கருத்து. மற்றொருபுறத்தார் தொல்காப்பியர் தனிசொற்களாக எண்ணியவை பெயர், வினை, இடை, உரி என்பவைகளையே எனக் கருதுகின்றனர்(தூ.சேதுபாண்டியன்,2013, அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழியியல் உயராய்வுப் பயிலரங்கின்போது கருத்துரைத்தக் கருத்து). இவ்வாறு கருத்து முரண்பாடுகள் இருப்பினும் தொல்காப்பியர் தொடரியல், சொல்லியல் குறித்த கருத்துக்களையே முன்வைத்துள்ளார் என்பது வெள்ளிடைமலை.

2.1. தனிச்சொற்பாகுபாட்டில் வைத்து எண்ணப்பட்டவை
 
 தொல்காப்பியர் தனிச்சொற்களாக எண்ணியவை நான்கு. அவை: பெயர், வினை, இடை, உரி என்பன. இவற்றுள் இடையும் உரியும் தனிச்சொற்களாக எண்ணப்பட்டாலும் பெயரையும் வினையையும் சார்ந்தே வரும் என்பது தொல்காப்பியர் கருத்து(சொல்.155).

2.1.1. பெயர்ச்சொல்

பெயர்ச்சொல் வேற்றுமை ஏற்கும்; காலம் ஏற்காது என்பது விதி. இதனைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.

 பெயர் < + வேற்றுமை >  < – காலம் >

இவ்வாறு வேற்றுமை ஏற்று வரக்கூடிய பெயர்களை உயர்திணை, அஃறிணை, இருதிணைப்பொது(விரவுத்திணை) எனப்பகுத்து விளக்கியுள்ளார்.

2.1.2. வினைச்சொல்

 பெயர்ச்சொல் போன்றே வினைச்சொல்லும் உயர்திணை, அஃறிணை, இருதிணைப்பொது(விரவுத்திணை) என வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரையறுக்கப்பட்ட சொற்கள் காலத்தை மட்டுமே ஏற்கும் என விதி கூறப்பட்டுள்ளது. இதனைத் தொல்காப்பியர்,

  வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
  நினையுங் காலைக் காலமோடு தோன்றும்  (சொல்.192)

எனவரும் நூற்பாவில் தெளிவுபடுத்துகிறார். இவ்விதி முறையைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.   

வினை < – வேற்றுமை >  < + காலம் >

2.1.3. இடைச்சொல்

மன், தில், கொன், உம், ஓ, ஏ, என, என்று, மற்று, எற்று, மன்ற, தஞ்சம் போல்வன வரும் சொற்கள் இடைச்சொற்கள் வகைத்து என்பார் தொல்காப்பியர். இவர் இடையியலில் நாற்பத்து மூன்று சொற்கள் குறித்து விளக்கியுள்ளார். இச்சொற்கள் சொற்களின் முன்னும் பின்னும் மொழியடுத்தும் தம்மீறு திரிந்தும் பிறிதோர் இடைச்சொல்லையடுத்தும் வருதல் உண்டு(சொல்.248).

எழுத்ததிகாரத்தில் சொல்லப்பட்ட புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக்கு உதவும் சொற்களும், வேற்றுமையியலில் சொல்லப்பட்ட வினைசெயல் மருங்கின் காலமொடு தோன்றும் சொற்களும், இடையியலில் விளக்கப்பட்டுள்ள அசைநிலைக்கிளவி, இசைநிறைக்கிளவி, தத்தம் குறிப்பில் பொருள் செய்குபவை ஆகிய சொற்களும் இடைச்சொற்கள் என்பது தொல்காப்பியர் கருத்து(சொல்.247).

2.1.4. உரிச்சொல்

 உறு, தவ, நனி, உரு, புரை, குரு, கெழு, செல்லல், இன்னல், ஏ, உகப்பு, உவப்பு, பயப்பு போல்வன உரிச்சொற்கள் என்பார் தொல்காப்பியர். இவர் உரியியலில் நூற்றிரண்டு சொற்களுக்கு விளக்கம் தந்துள்ளார்.

 இவ் உரிச்சொற்கள் இசை, குறிப்பு, பண்பு, வினை, ஒருசொல் பல்பொருள், பலசொல் ஒருபொருள், பயிலாத சொற்களைப் பயின்ற சொற்களுடன் சொல்லல், தத்தம் மரபில் வருபவை, பொருள் வேறுபாடு தரும் சொற்கள் என்பனவாக அமையும் என்பது தொல்காப்பியர் கருத்து(சொல்.293).

2.2. தனிச்சொற்பாகுபாட்டில் வைத்து எண்ணப்படாதவை

 செய்யுள் ஈட்டச்சொல், தொகைச்சொல், ஒருசொல்லடுக்கு, எச்சச்சொல் போல்வன தனிச்சொற்பாகுபாட்டில் வைத்து எண்ணப்படாத வகைப்பாட்டைச் சார்ந்தவை எனலாம்.

2.2.1. செய்யுள் ஈட்டச்சொல்

 இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பன செய்யுள் ஈட்டுவதற்குரிய சொற்கள்(சொல்.393). இவற்றுள் இயற்சொல்லாவது செந்தமிழ் நாட்டு வழக்கோடு பொருந்தி தம்பொருள் வழாமல் இசைக்கும் சொல்லாகும்(சொல்.394). திரிசொல்லாவது ஒரு பொருள்குறித்த வேறுசொல், வேறுபொருள் குறித்த ஒருசொல் என அமைந்து வருவதாகும்(சொ.395). திசைச்சொல்லாவது செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரு நிலத்துமுள்ளார் தத்தம் குறிப்பால் வெளிப்படுத்தும் சொல்லாகும்(சொல்.396). வடசொல்லாவது வடக்கேயிருந்து கடன் வாங்கப்பட்ட சொல்லாகும்(சொல்.397). இஃது வடமொழி மரபைப் பின்பற்றுபவர்களின் தத்சமக் கொள்கைக்கு ஒப்பானது(பிரயோகவிவேகம் 1973:77).

  எ – டு. சோறு, கூழ், பால், மரம்     – இயற்சொல்
   கிள்ளை(கிளி), மஞ்ஞை(மயில்) – திரிசொல்
   ஆ, எருமை – பெற்றம்                  – திசைச்சொல்
   வாரி, மேரு, குங்குமம்                  – வடசொல்.

2.2.2. தொகைச்சொல் 

 தொகைச் சொல்லாவது :- பொருளுணர்த்துஞ் சொல்லாயினும், தொழிலுணர்த்துஞ் சொல்லாயினும் இரண்டு சொல் விட்டிசைத்து நில்லாது ஒட்டி நிற்பது. இஃது ஒட்டுப்பெயர் என்னுங் குறியும் பெறும் என்பார் தெய்வச்சிலையார்(2003:255). இத்தொகைச்சொற்கள் ஆறு வகைப்படும். அவை: வேற்றுமை, உவமை, வினை, பண்பு, உம்மை, அன்மொழி என்பன(தொல்.407).

 எ –டு. ஒருகுழை ஒருவன் போல் (கலி.26:1) – வேற்றுமைத்தொகை
  புலிப்பாய்த்துள்                                                    – உவமத்தொகை
  ஆடரங்கு, செய்குன்று                                        – வினைத்தொகை
  கரும்பார்ப்பன், கரும்பார்ப்பினி                         – பண்புத்தொகை
  தூணிபதக்கு, தொடியரை                                   – உம்மைத்தொகை
  வெள்ளாடை, பொற்றொடி                                 – அன்மொழித்தொகை.

2.2.3. ஒருசொல்லடுக்கு

 ஒரு சொல் இரண்டு முறைக்குமேல் வந்து அடுக்கி நிற்பதை ஒரு சொல்லடுக்கு அல்லது அடுக்குத்தொடர் என்பர். இச்சொற்கள் இசைநிறை, அசைநிலை, பொருளொடு புணர்தல் என மூவகைப்படும்(சொல்.418).

  எ – டு. ஏஏ ஏஏ அம்பல் மொழிந்தனள் – இசைநிறை
   மற்றோ மற்றோ                                    – அசைநிலை
   போம் போம், அவன் அவன்                – பொருளொடு புணர்தல்.

2.2.4. எச்சச்சொல்

 எஞ்சி நின்ற பொருள் உணர்த்துபவை எச்சச்சொற்களாகும். இவை பத்து வகைப்படும். அவை: பிரிநிலை, வினை, பெயர், ஒழியிசை, எதிர்மறை, உம்மை, என, சொல், குறிப்பு, இசை என்பன(சொல்.423).

  எ – டு. அவனே கொண்டான்  – பிரிநிலை
   உழுது வந்தான்                         – வினை
   உண்ணும் சாத்தன்                   – பெயர்
   கூரியதொரு வாள்மன்            – ஒழியிசை
   யானே கொள்வேன்                 – எதிர்மறை
   சாத்தனும் வந்தான்                  – உம்மை
   ஒல்லென ஒலித்தது                – என
   தீங்கு அட்டான்                         – குறிப்பு
   வயிறு மொடுமொடுத்தது       – இசை
   தேனென் கிளவி(எ.340)            – சொல்.

3.0. பாலவியாகரணமும் சொற்பாகுபாடும்

 சின்னயசூரி என்பார் ஆந்திர நாட்டைச் சார்ந்தவரும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவருமாவார். இருப்பினும் அவரின் பிறப்பும் பணிச்சூழலும் தமிழகமாக அமைந்துவிட்டது(சத்தியராஜ், பதிவுகள் இதழில் குறிப்பிட்ட கருத்து). அவ்வாறு அமைந்திடினும் ”…தமிழ், பிராகிருதம் ஆகிய மொழிகளையும், இலக்கணங்களையும் குருவழிக் கல்வி மூலம் தொடர்ந்து பயின்றார்…”(இராதாகிருஷ்ணா 1999:9) எனும் கருத்து இங்கு சுட்டிக்காட்டத்தகுந்தது.

 அவர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள் தெலுங்கைக் கற்பதற்காக இலக்கணநூலொன்று எழுத எண்ணம் கொண்டார். அவ்வெண்ணத்தின் வெளிப்பாடே பாலவியாகரணம்(கி.பி.1858) ஆகும். இஃது சமசுக்கிருத மரபைப் பின்பற்றி எழுந்த நூலாகும்.
 
 இப்பாலவியாகரணம் பத்துப் படலங்களால்(பரிச்சேதங்களால்) ஆனது. அவை: சஞ்ஞா, சந்தி, தத்சமம், ஆச்சிகம், காரகம், சமாசம், தத்திதம், கிரியா, கிருதந்தம், பிரகீர்ணகம் என்பன. இனி, சின்னயசூரியின் சொற்பாகுபாடு குறித்துக் காண்போம். இவரின் சொற்பாகுபாட்டில் தத்சமம், தத்பவம், தேசியம், கிராமியம், ஆச்சிகம், நாமம், தத்திதம், கிரியா, கிருதந்தம், ஆம்ரேடிதம் ஆகியனவற்றைக் காணமுடிகின்றது.

3.1. தனித்து எண்ணப்பட்டவை

 தத்சமம், ஆச்சிகம், சமாசம், தத்திதம், கிரியா, கிருதந்தம் ஆகியன மட்டுமே தனித்து எண்ணப்பட்டவையாகத் தெரிகின்றது.

3.1.1. தத்சமம்

 தத்சமம் என்பது சமசுக்கிருத பிராக்கிருத சொற்களுக்கு நிகரன(ஒப்பான) சொற்கள் என்பது பொருள்(சஞ்19). இதன் விரிந்த சிந்தனையே தத்சம பரிச்சேதம் எனும் படலமாகும்.

சமசு. சமசு.சமம்     பிராக்.      பிராக்.சமம்
ராம: ராமுఁடு3         –               –
ஹரி: ஹரி               –               –
கடு: –                       காரோ      காரமு
ஜடா –                      ஜடா3        ஜட3

3.1.2. ஆச்சிகம்

 ஆச்சிகம் என்பதற்குத் தூய தெலுங்குச் சொல் என்பது பொருள். இச்சொற்கள் சமசுக்கிருத பிராக்கிருதங்களுடன் எவ்வித தொடர்புமின்றி வழங்குவதாகும். அதனை,

 த்ரிலிங்க3 தே3ஸ2வ்ய வஹார ஸித்3த4ம் ப3கு3 பா4ஷ தே3ஸ்2யம்பு3   (சஞ்.20)

எனவரும் உரைநூற்பா விளக்குகிறது. இவ்விலக்கணம் ஆச்சிகத்திற்குரியதாக எவ்வாறு கருதப்பெறும் என எண்ணத்தோன்றும். இதன்கண் சொல்லப்பட்ட திரிலிங்கம் என்பது மூன்று எல்லைகளைக் குறிக்கும் சொல்லாகும். அவ் எல்லைகளுக்குள் வழங்கப்படும் சொற்களே தேசியச் சொற்கள். இச்சொற்கள் யாவும் தூய தெலுங்குச் சொற்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலின் சஞ்ஞாவில் அதன் இலக்கணம் கூறி, பின்பு ஆச்சிகப்பரிச்சேதத்துக்கண் விவாகப் பேசியுள்ளார்.

  எ – டு.  ஊரு, பேரு, முல்லு, இல்லு, கோட.

3.1.3. சமாசம்

 சமாசம் என்பது தொகைச்சொல் ஆகும். இச்சொற்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து வருவதாகும். இச்சொற்களுக்கான விளக்குமுறை தனித்தப் படலத்துக்கண் பேசப்பட்டாலும் பிற படலங்களிலும் இடம்பெறுகின்றன. அவர்தரும் சமசங்களாவன: கருமதாரயம்(பண்புத்தொகை), பஹூப்ரீஹி(அன்மொழித்தொகை), துவந்தம்(உம்மைத்தொகை), துவிகு(எண்தொகை), தத்புருஷம்(வேற்றுமைத்தொகை) எனபன.

எ –டு  
ஆசந்த3மு            – கருமதாரயம்
அந்நத3ம்முலு     – துவந்தம்
முக்கண்டி            – பஹூப்ரீஹி
முச்சிச்சு               – துவிகு
நெலதால்பு           – தத்புருஷம்.

3.1. 4. தத்திதம்

 தத்திதம் என்பது பெயரொட்டு ஆகும். அஃதாவது பெயர்ச்சொற்களை அடுத்து வரும் ஒட்டுக்களைச் சார்ந்தது. இதனைத் தத்திதப்படலத்துக்கண் விளக்கியுள்ளார். இப்படலத்துக்கண் அமையப்பெற்ற ஒட்டுக்கள் பின்னொட்டுக்களே.

  எ – டு. நல்ல + ந = நல்லந, தெல்ல + ந =தெல்லந.

3.1.5. கிரியா

 கிரியா என்பது வினைச்சொல் ஆகும். சின்னயசூரி தெலுங்குக்குரிய வினைச்சொற்களை காரகம்(பெயர்ச்சொற்கள் வேற்றுமையை ஏற்ற பின்பு சேரும் வினைகள் பற்றி விளக்கும் பகுதி), கிரியா, கிருதந்தம் ஆகிய படலத்துக்கண் விளக்கியுள்ளார். கிரியா படலத்துக்கண் விளக்கப்பெற்றவை வினையின் அடிச்சொற்கள்(தாது) உருபுகள் ஏற்கும் தன்மையையாகும்.

  கிரியா < + உருபு > < + காலம் >

இங்கு உருபு எனப்பட்டது வேற்றுமை உருபுகள் அல்ல ; இடையொட்டுக்கள் எனலாம்.

  எ – டு. வண்ட3க3லடு3 – வண்ட3ఁக3லரு, படி3ந – படி3ந்நு.

3.1.6. கிருதந்தம்

 கிருதந்தம் என்பது வினையொட்டு ஆகும். அஃதாவது வினைச்சொற்கள் ஒட்டுக்களை ஏற்கும் தன்மைக் குறிப்பதாகும். இதனைக் கிருதந்தபடலத்துக்கண் காணலாம். அங்கு விளக்கப்பட்டவை பின்னொட்டுக்களே.

  எ – டு. அலுகு3 – அலுக, ஆఁகு3 – ஆఁக, கொலுசு – கொலுபு, காசு – காபு.

3.2. தனித்து எண்ணப்படாதவை

 துருதம், கிராமியம், ஆம்ரேடிதம், பிராக்ருதுலு, தத்பவம், நாமம் ஆகியன தனித்தப்படலத்துக்கண் வைத்து எண்ணப்படாதவை.

3.2.1. துருதம்

 துருதம் என்பது நகர ஈறு ஆகும்(சஞ்.11). இத்துருதம் இருவகைத்து. ஒன்று துருதப்ரக்ருதுலு. அஃதாவது நகர ஈறுகளை இறுதியாகக் கொண்ட சொற்கள்(சஞ்12). மற்றொன்று களாலு. இஃதாவது நகரம் இற்தியாக வராத சொற்கள்(சஞ்.13). இச்சொற்கள் குறித்த விளக்கங்களைச் சஞ்ஞாபடலம் முதற்கொண்டே காணலம்.

 எ-டு.  நந்நுந்,   நாசேதந்,  நாகுந்               – துருதப்ரக்ருதுலு
            அய்ய,  அம்ம,      ராமுఁடு3          – களாலு.

இத்துருத சொற்பகுப்புமுறை தெலுங்கு மொழிக்கே உரிய தனிச்சிறப்பு எனலாம். ஏனெனின் பிற திராவிட மொழி இலக்கணநூலில் இது குறித்த கருத்துக்கள் பதிவு செய்யப்பெறவில்லை என்பதே.

3.2.2. தத்பவம்

 தத்பவம் என்பது சமசுக்கிருத பிராக்கிருதங்களிலிருந்து பிறந்த சொற்கள் ஆகும்(சஞ்.20).

சமசு.         சமசு.பவம்            பிராக்.         பிராக்.பவம்
வக்ர:         வங்கர                    –                   –
வேஸர:    வேஸட2மு          –                   –
ஸமுத்ர:   ஸமுத்ரமு           –                   –
மத்ஸர:       –                           மச்சரோ       மச்சரமு
யஜ்ஞ:         –                           ஜண்ணோ    ஜந்நமு
லக்ஷ்மீ:      –                            லச்சி2           லச்சி
விஷ்ணு:    –                            விண்ணூ      வெந்நுఁடு3

3.2.3. கிராமியம்  

 கிராமியம் என்பது கல்வியறிவு இல்லாதவர்கள் பயன்படுத்தும் சொற்களைக் குறிப்பதாகும்(சஞ்.22). இச்சொற்கள் இலக்கணக் கோட்பாட்டிற்கு உட்பட்டு வராது என்பது கருத்து.

  எ –டு . வஸ்தாఁடு3, தெஸ்தாடு3, வச்செநி.

3.2.4. ஆம்ரேடிதம்

 ஆம்ரேடிதம் என்பது ஒருசொல்லடுக்கு/அடுக்குத்தொடர் ஆகும். இச்சொல் குறித்த விளக்கங்களும் புணர்ப்பு(சந்தி) மாற்றங்களும் சந்திபடலம் முதற்கொண்டே காணப்படுகின்றன.

  எ –டு. ஔர + ஔர =ஔரௌர, ஆஹா + அஹா = ஆஹாஹா

3.2.5. நாமம்

  நாமம் என்பது பெயர்ச்சொல் ஆகும். தொல்காப்பியத்தில் பெயர்ச்சொல்லுக்கான இலக்கண வரையறை தனித்த இயலமைப்பில் உள்ளது. பாலவியாகரணத்தில் அவ்வாறு அமையவில்லை. இருப்பினும் நாமம் சஞ்ஞாபடலம் முதற்கொண்டே காணப்படினும், தத்சமபடலம் முதலே விரிவாக எண்ணப்பட்டுள்ளது.

3.2.6. பிராக்ருதுலு

  பிராக்ருதுலு என்பது வாய்பாடாகும். இதனைக் குறிக்க ஆது3லு, ஆதி3, மொத3லு போன்ற சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இஃது தனித்து விளக்கப் படவில்லை. இருப்பினும் பெயர்(நாமம்), வினை(கிரியா) தொடர்பான சொற்களை விளக்குமிடத்து விளக்கப்பட்டுள்ளது. ஒரு குடம்பத்தில் ஆண்/பெண் தலைமைப் பண்பை ஏற்பதுண்டு. அதனைப் போன்றே ஒரே தன்மையுடய குழுச்சொற்களுக்கு ஒரு சொல் தலைமைப் பண்பை ஏற்கும். அவ்வொரு சொல்லுக்குப் பின்பு பிராக்ருதுலு, ஆது3லு, ஆதி3, மொத3லு என்ற ஒட்டுச் சொற்களைப் பயன்படுத்துவதைக் காணமுடிகின்றது.

 நல்லாது3லு: நல்ல, தெல்ல, பச்ச, எர்(ற்)ற், சாம, அல்ல, திய்ய, கம்ம, புல்ல, சப்ப, விந்ந,
 திந்ந, ஒய்ய, திம்ம, சக்க, ப்ரேக.
சிறுதா3து3லு: சிறுத, நதி, நெலத, மெலத, பட3தி, மட்தி3, பொலதி, வெலதி3, நிப்பு, எம்மு.
இவ்விரு வாய்பாடுகளுள் நல்ல, சிறுத என்பவை தலைமைப் பண்பை ஏற்பதால் அதன் பெயராலே அழைக்கும் தன்மையைக் காணலாம்.

4.0. முடிப்பு

 இதுவரை விளக்கப்பெற்ற கருத்தியல்களின் அடிப்படையில் பெயர், வினை, இடை, ஒருசொல்லடுக்கு, தொகை, தத்சமம், தத்பவம், தேசியம் ஆகியன இருமொழி நூல்களிலும் பொதுச்சிந்தனையாக அமைந்துள்ளது எனவும், சிறப்புச்சிந்தனையாக தொல்காப்பியத்தில் உரி,எச்சம் ஆகியனவும், பாலவியாகரணத்தில் துருதம், பிராக்ருதுலு, கிராமியம் ஆகியனவும் அமைந்துள்ளது எனவும் கூறலாம்.

துணைநின்றவை

தமிழ்
1. இராதாகிருஷ்ணா ப., 1999, பரவஸ்து சின்னையா சூரி, சாகித்திய அக்காதெமி, புதுதில்லி.
2. இளவழகன் கோ.(பதி.), 2003, தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
3. ——————-, 2003, தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
4. இளையபெருமாள்(மொ.ஆ.),1972, லீலாதிலகம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
5. கோபாலையர் தி.வே.(பதி.),1990, இலக்கணக்கொத்து, சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
6. ———————– , 1973, பிரயோகவிவேகம், சரசுவதிமகால் நூலகம், தஞ்சாவூர்.
7. சத்தியராஜ் த.,2013, சுவமிநாதம் – பாலவியாகரணம் புறக்கட்டமைப்புநிலை ஒப்பீடு, ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம்,         சென்னை.
8. ———— , 2013, பாலவியாகரணத்தில் தொல்காப்பியத்தாக்கம் (மொழித்தூய்மைக் கொள்கை), பதிவுகள்(இணைய இதழ்).
9. சண்முகம் செ.வை., 2004, தொல்காப்பியத் தொடரியல், உலகத்தமிழாரய்ச்சி நிறுவனம், சென்னை.
10. சாவித்ரி சி., பாலவியாகரணம், அச்சிடப்பெறாத ஏடு.
11. தாமோதரம்பிள்ளை சி.வை.(பதி.), வீரசோழியம், உலகத்தமிழாரய்ச்சி நிறுவனம், சென்னை.
12. வெங்கடாசலம் தண்.கி., (மொ.ஆ.), 2002, கவிராசமார்க்கம், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.       

தெலுங்கு
13. பரவஸ்து சின்னயசூரி, 2002, பாலவ்யாகரணமு, பாலசரஸ்வதி புக் டிப்போ, ஹைதராபாத்.
14. புலுசு வேங்கடரமணய்ய காரி(உரை.), 1965, பாலவ்யாகரணமு(லகுடீக சகிதமு), வாவிள்ள ராமசாமி சாஸ்த்ரலு அண்ட் சன்ஸ்,         மதராசு.

Neyakkoo27@gmail.com