தொல்காப்பியர் குறிப்பிடும் மரபுப்பெயர்கள்

தொல்காப்பியர் குறிப்பிடும் மரபுப்பெயர்கள்தமிழ் மொழியில் தோன்றிய முழுமுதற் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். இதில் உயிரினங்களின் குணங்கள் பற்றி குறிப்பிடுவதோடு தொன்றுத்தொட்டு காலம் காலமாக வழங்கி வரும் இம்மரபானது தமிழ் மொழியிலும் சொற்பொருள் நிலையிலும் மாற்றம் ஏற்படாமல் இருக்க பின்பற்றப்பட்டு வருகிறது. உலகம் தோன்றிய காலம் முதல் பல உயரினங்களுக்கு சில அடிப்படைக் குணங்கள் காணப்படுகின்றது. அவற்றை அடிப்படையாகக் கொண்டு அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். தமிழ் இலக்கிய இலக்கணங்களில் உயிரினங்களின் தோற்றம் அதன் இயல்பு, செயல் ஆகியவற்றைத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். மரபியல் கோட்பாடு என்பது உயிரினங்களின் மரபுப்பெயர்களான இளமைப்பெயர்கள், ஆண்பாற்பெயர்கள், பெண்பாற்பெயர்கள் என இவற்றை வகைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளதை இக்கட்டுரையின் வழி விளக்குவதே நோக்கமாக அமைகிறது.

மரபியல்
“சான்றோர்களும் அறிவரும் கண்ட வழக்குகளே மரபாகும். உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் காலம் காலமாகக் கடைபிடிக்கப்பட்ட ஒன்றிற்கு சொற்பொருள் உணர்த்தியதால் மரபியல் என்னும் பெயர் பெற்றது. ஒரு மரத்தின் வித்து கீழே விழுந்து மீண்டும் மீண்டும் மரமாகி தன்னுடைய சந்ததியை வளர்ப்பது போல என்றும் மாறாமல் இருப்பது மரபு” என்று தமிழண்ணல் மரபியலுக்கு விளக்கம் தருகிறார்.

“மரபென்ற பொருண்மை என்னையெனில் கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவுஞ் செய்யுளின் கண் மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனுமின்றி இருதிணை பொருட் குணனாகிய இளமையும், ஆண்மையும், பெண்மையும் பற்றிய வரலாற்று முறையும், உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும், அஃறிணைப் புல்லும் மரனும் பற்றிய மரபும், அவை பற்றி வரும் உலகியல் மரபும் உலகியன் மரபும், நூன்மரபுமென இவை மரபெனப்படுமென்பது” என்று பேராசிரியர் மரபியலுக்குத் தரும் விளக்கத்தைப் பார்க்கமுடிகிறது.

இதேபோல் மரபியலுக்கு இளம்பூரணர் உரை வகுக்கையில் “இவ்வதிகாரத்தில் கூறப்பட்ட பொருட்டு மரபு உணர்த்தினமையான் மரபியல் என்னும் பெயர்த்து” என்று எடுத்துரைக்கின்றார். ஒரு பொருளுக்கு மரபாவது எதுவெனில் அப்பொருளின் குணமாகிய இளமை, ஆண்மை, பெண்மை ஆகிய பொருள் பெற்று மரபுக் குறித்துத் தொன்றுத்தொட்டு வழங்கிவருவது மரபுப்பெயர்கள் ஆகும்.

மரபு
மரபு என்னும் இச்சொல், இலக்கணம் என்ற பொருளிலும் தொன்றுத்தொட்டுப் பொருளுக்கு உயர்ந்தோர் – அறிஞர்கள் – சொற்களை வழங்கி வந்த முறையே வழக்கு எனவே தொல்காப்பியர்,

வழக்கெனப் படுவ உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட்டாக லானே (தொல். பொருள். 638)

என்று குறிப்பிடுகின்றார். தொல்காப்பியத்திற்கு பின்னர் வந்த உரையாசிரியர்களும், இலக்கண திறனாய்வாளர்களும் உலக வழக்கு, செய்யுள் வழக்கு ஆகிய இரு வழக்கிலும் நெடுங்காலமாகத் தொன்றுத்தொட்டுப் பயின்று வரும் மரபுச் சொற்களை உயர்திணை, அஃறிணை இரு திணைகளிலும் ஒன்றன்பால், பலர்பால், பலவின்பால் என்று ஐம்பாலிலும் குறிப்பிடுகையில் அவற்றை இளமைத் தன்மை, ஆண்மைத் தன்மை, பெண்மைத் தன்மை முதலிய இயல்புகளைப் புலப்படுத்தும் வகையில் அவற்றின் இயல்புகளை நுண்மையாக ஆராய்ந்துக் கூறும்போது தொல்காப்பியரின் உயிரினங்கள் பற்றியக் கருத்துக்களை அறியமுடிகிறது. தொல்காப்பியத்திற்குப் பிறகு தோன்றிய நூல்களில் மரபுச்சொற்கள் என்பது பற்றி,

எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே (நன்: 388)

என்றும் மொழியானது, சொற்களால் ஆனது. சொற்கள் யாவும் பொருள்களை உணர்த்தும் குறியீடுகளாகும். சொல்வோனது உள்ளத்தில் உள்ளதைக் கேட்போன் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். “பண்டைக் காலத்தில் சொற்கள் எவ்வாறு வழங்கப்பட்டதோ அந்த மரபுக் கெடாமல் சொற்களைக் கையாள வேண்டும். இல்லையெனில் சொற்களுக்கு பொருள் புரியாமல் பொருளிழந்துப் பிறிது பிறிதாகும்” என்று ந.சுப்புரெட்டியார் குறிப்பிடுவதை அறிய முடிகிறது.

நூல்களில் மரபு நிலை திரியாதவாறு சொற்களைக் கையாளுதல் வேண்டும் என்பதை இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் பலரும் வற்புறுத்துவதை தொல்காப்பியர் காலத்திலேயே நடைமுறையில் இருந்துள்ளதை,

மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை
மரபு வழிப்பட்ட சொல்லி னான (தொல். பொருள்.636)

மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் (தொல். பொருள்.637)

என்னும் நூற்பாக்கள் சுட்டுகிறது. அதாவது “மரபு என்னும் இச்சொல் தொன்று தொட்டு இலக்கணம் என்ற பொருளிலும், பொருட்களுக்குரியவனாய் சொற்களுக்கு வழங்கி வரும் சொல் மரபு என்ற பொருளிலும் நெடுங்காலமாக வழங்கி வருகின்றது” என்று க. வெள்ளைவாரணர் குறிப்பிடுகிறார். மரபு நிலையைக் கூறப்புகுந்தவர் நடப்பன, பறப்பனவறறின் பெயர்களை இளமைப்பெயர் என்றும், ஆண்பாற் பெயர் என்றும் பெண்பால் பெயர் என்று வகுத்துக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் உரியவற்றைக் குறிப்பிட்டுள்ளார் என்பதை சி. இலக்குவனார் (ப. 194) தொல்காப்பிய ஆராய்ச்சி என்னும் நூலில் குறிப்பிடுவதை அறியவனாக உள்ளது.

க. வெள்ளைவாரணர் தொல்காப்பியத்தில் மரபியலை இறுதியில் வைத்துள்ளமைக்கு “முன்னர் வழக்கிலக்கணங்கூறி அதன் பின் செய்யுளிலக்கணங் கூறினான். அவ்விரண்டற்கும் பொதுவாகிய மரபு ஈண்டுக் கூறினமையின் இது செய்யுளியலோடு இயையுடைத்தாயிற்று. வழக்குஞ் செய்யுளும் என்று இரண்டு இல்லாத நூலிற்கும் ஈண்டு மரபுணர்த்தினமையின் இது செய்யுயலின் பின் வைக்கப்பட்டது. சொல்லோத்தினுள் கூறிய மரபும், மரபியல் உரைப்பனவும் ஆகிய அவை வழக்கிற்கும் செய்யுட்கும் பொது (செய்யுளியலூட் கூறப்படும்) இது செய்யுட் கேயுரித்து” என்று தனது உரையில் குறிப்பிடுவதை அறியமுடிகிறது.

இலக்கியங்களில் கையாளப்படும் அல்லது இலக்கணங்களில் இடம்பெறும் செய்யுள்களில் பொருள்களையும் அவற்றை விளக்குவதற்குப் பயன்படும் உவமைகளையும் புலவர்கள் நன்கு அறிந்திருந்தனர். எனவே அவர்கள் அவற்றின் மரபுகளை அறிந்து பயன்படுத்தியுள்ளனர் என்பதை அவர்களுடைய பாடல்கள் வழி வெளிப்படுகின்றது. எனவே தான் ஒவ்வொரு சொற்களும் செய்யுள்களில் பயன்படுத்துவதைக் கொண்டு அவற்றிற்கு வாழ்வு உண்டு, வளமும் உண்டு, சொற்கள் நாளடைவில் அழியும் தன்மை உண்டு, சொற்களின் வாழ்வும், தாழ்வும் அதனைப் பயன்படுத்தும் மக்களைச் சார்ந்தே அமைகிறது. அவற்றை இலக்கியங்களில் இடம்பெறச் செய்யும் புலவர்களைப் பொறுத்தே சொற்களின் தன்மை அமைவதை படைப்பவர், காப்பவர், அழிப்பவர், மறைப்பவர் வெளிப்படுத்துபவர் என்று அனைத்துமே அவர்களுடைய செய்யுள் இயற்றும் பண்பைக் கொண்டு காலம் காலமாக இலக்கியங்களில் பதிவுச் செய்யப்புகின்றனர்.

இளமைப்பெயர்கள்

சங்க இலக்கியங்களில் தொல்காப்பியத்தில் காணப்படும் பெயர்கள் காணப்படுவதால் அவற்றைக் கொண்டு தான் உயிரினங்களின் பெயர்களை மரபியல் சார்ந்த இளமை, ஆண், பெண் என்று பகுக்கப்பட்டு அவை சங்க பாடல்களில் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது. தொல்காப்பியர் மரபியல் என்னும் இயலை வைக்கக் காரணம் சங்கப்பாடல்களில் பொதுவாக அகப்பாடல்களில் உள்ள கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதை விளக்குவனாக உள்ளது. அதாவது இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதனின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டுவதாக சங்ககாலம் விளங்கியது என்பதும் அவற்றைக் கொண்டு இலக்கணமான தொல்காப்பியம் அவற்றிற்கு மரபு முறையில் பின்பற்றப்பட்டப் பெயர்களைக் குறிப்பிடுவதாக இவை அமைந்துள்ளது. இளமைப்பெயர்களைத் தொல்காப்பியர்,

மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின்
பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று
ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே (தொல். பொருள். 545)

என்னும் நூற்பா வழி விளக்குவதோடு பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி ஆகிய இவை ஒன்பதும் தமிழில் பொதுவாக உயிரினங்கள் அனைத்திற்கும் வழங்கப்பட்டு வந்துள்ளதை அறியமுடிகிறது. ஏனெனில் தமிழர்கள் பழங்காலத்தில் இயற்கையுடன் ஒன்றியும், உயிரினங்களுடன் பழகியும் வாழ்ந்த போது அவற்றிற்கு வழங்கிய பெயர்கள் இன்றும் மரபுவழியாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றனர். அவையே சில மாற்றம் பெற்றும் பல இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. இவற்றைக் காலத்தின் பழமைக் கருதியும் மாறுபட்டு உள்ளது என்பதை அறியவும் முடிகிறது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் மரபு வழியாக பல பெயர்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது. அவை காலப்போக்கில் மாற்றம் பெற்று வழக்கில் வந்துள்ளது. “பிள்ளை” என்னும் இளமைப்பெயர் பெருவழக்காக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எடுத்துரைகின்றனர். ஆண்பிள்ளை என்றும் பெண் பிள்ளை என்றும், ஆண்பிள்ளை (ஆம்பிள்ளை), பெண்பிள்ளை(பொம்பிள்ளை) எனவும் வழங்கி வருகின்றன.

பொருளதிகார வாழ்வியல் விளக்கத்தில் ”பிள்ளைத்தமிழ் இலக்கியம் பெருவரவினது பிள்ளை யாண்டான் எனபடும் வழக்கு இவ்வாறு வழங்கு உள்ளமையால்,

முடிய வந்த அவ்வழக்கு உண்மையின்
கடிய லாகா கடனறிற் தோர்க்கே” (தொல். பொருள். 145)

என்னும் ஆணை கொண்டு நாம் இணைத்துக் கொள்ள வேண்டும்” என்ற குறிப்பால் அறியமுடிகிறது.

இளமைப் பெயர்களும் அவற்றைப் பெறுவனவும்

பார்ப்பு    – பறவை, தவழ்பவை, குரங்கு
பறழ்    – மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல்,
குரங்கு
குட்டி    – மூங்கா, வெருகு, எலி, அணில், நாய்,பன்றி, முயல், குரங்கு
குருளை    – நாய், பன்றி, புலி, முயல், நரி
கன்று    – யானை, குதிரை, கழுதை, கடமை, ஆ, எருமை, மரை, கவரி,
கராம், ஒட்டகம், ஓரறிவுயிர். (நெல், புல் அல்லாதன)
பிள்ளை    – பறவை, தவழ்பவை, மூங்கா, வெருகு, எலி, அணில், பன்றி,

புலி,முயல், குரங்கு
மக    – குரங்கு, மக்கள்
மாறி    – ஆடு, குதிரை, நல்வி, உழை, புல்வாய்
குழவி    – குஞ்சரம், ஆ, எருமை, கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம்,

மக்கள் ஓரறிவுயிர் (நெல், புல், அல்லாதவை)

என்று உயிரினங்கள் அனைத்திற்கும் வழங்கப்பட்டு வந்துள்ளதை இவற்றின் வழி அறியமுடிகிறது.

ஆண்பாற்பெயர்கள்

தொல்காப்பியத்தில் ஆண்மைப் பற்றிய பெயர்களாகத் தொல்காப்பியர் பதினைந்து பெயர்களை குறிப்பிட்டுள்ளார். அவை,

ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்
சேவும் சேவலும் இரலையும் கலையும்
மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும்
யாத்த ஆண்பாற் பெயரென மொழிப (தொல்.பொருள்.546)

என்பனவாகும். இப்பெயர்களுக்கு உரை எழுதிய இளம்பூரணர் “ பிறவும் என்று முடிந்துள்ளதால் அவற்றிற்கு ஆண், விடை என்றும் வருவன போல எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார். இதே பெயர்களை “பிறவும்” என்பதால் “ஆண், விடை, கிடாய் என வருவன போல்வனவும் ஆண்மைப் பெயர்களாகக் கொள்ளப்படும் இச்சூத்திரத்திற் கூறப்பட்ட போத்து என்பது இளமை குறித்த மரபுப்பெயராக வழங்கப்பெரினும் ஆண்பாற்குச் சிறந்து வருமாறு இளமைக்குச் சிறந்து வராது” என க. வெள்ளைவாரணர் விளக்குகிறார்.

ச. பாலசுந்தரனார் பிறவும் என்றதனான் காளை, விடை என்றாங்கு ஆண்மைக் குறித்து வருவனவாகும். ஆண் என்பது இருதிணைக்கும் உரிய சாதிப்பெயராகும். காளை என்பது திணையொடு பழகிய பெயராதற்கண் உயர்திணையை உணர்த்தி நிற்குமென்றும் குறிப்பிடுகின்றார். எனவே ஒவ்வொரு காலக்கட்டத்திலும் குறிப்பிட்ட பெயர்கள் வழக்கில் வழங்கி வந்துள்ளன சில பெயர்கள் மட்டும் அழிந்துவிட்டது என்பதும் இவற்றையெல்லாம் கொண்டு அறிவனாக உள்ளன.

ஆண்பாற்பெயர்களும் அவற்றைப் பெறுவனவும்
ஏறு- – பன்றி , புல்வாய், உழை, கவரி எருமை, மரை, பெற்றம் சுறா.
ஏற்றை    – எல்லா ஆசைக்கும் பொது
ஒருத்தல்    – புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராகம், யானை, பன்றி, எருமை
களிறு    – வேழம், கேழல்
சே    – எருது
சேவல்    – மயில்லாப் பறவை, குதிரை
இரலை    – புல்வாய்
கலை    – புல்வாய், உணவு, முசு
மோத்தை
தகர்   
உதள்    – ஆடு
அப்பர்
போத்து    – பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய், நீர்வாழ், மயில், எழால்
கண்டி    – எருமை
கடுவன்    – குரங்கு

என்று உயிரினங்கள் அனைத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

பெண்பாற் பெயர்கள்
தொல்காப்பியர் பெண்மை குறித்த மரபுப்பெயர்களாகப் பதின்மூன்று பெயர்களை குறிப்பிடுகிறார்.அவற்றை,

பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்
மூடும் நாகுங் கடமையும் அளகும்
மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்
அந்தஞ் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்.பொருள்.547)

என்னும் இப்பெயர்கள் உரையாசிரியர்கள் உரை வகுக்கையில் “அந்தஞ்சான்ற” என்பதற்கு மாறுபட்ட பொருளைத் தருவதைப் பார்க்கமுடிகிறது. அதாவது க. வெள்ளைவாரணன் அவர்கள் முடிவுபெற்ற என்னும் பொருளை முன்வைக்கிறார். முதல் உரையாசிரியரான இளம்பூரணர் தொல்காப்பியர் கூறியதை அப்படியே பின்பற்றியுள்ளார் என்பதை “இச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின் பெண்பாற் பெயர் உணர்த்துதல் நுதலிற்று” இவற்றின் வழி விளங்கிக் கொள்ளலாம். பின்னர் வந்த ச. பாலசுந்தரனார் அவர்கள் “அற்தஞ்சான்ற” என்பதை ஆண், பெண் என்னும் மரபுப்பெயர்கள் ஓரறிவு உயிர்களான புல்லிற்கும், மரத்திற்கும் சிறுபான்மை வரும். (எ.கா.) ஆண்பனை, பெண்பனை என்றும் குறிப்பிடுகிறார். தொல்காப்பியர் மரபுப்பெயர்களை உள்ளதை குறிப்பிட்ட படியே விளக்கவில்லை. அதாவது பெயர்களில் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ளதை நூற்பாவில் முதலில் விளக்குகிறார். அதாவது மாற்றி மாற்றி முறை வைப்புமுறை செய்துள்ளார் என்பது ஒவ்வொரு நூற்பாவழி உணரமுடிகிறது.

ஆண்பால் எல்லாம் ஆணெனற் குரிய
பெண்பால் எல்லாம் பெண்ணெனற் குரிய
காண்பவை அவையவை அப்பாலான    (தொல்.பொருள். மரபு. 595)

ஆண்பாலெல்லாம் ஆண்னென்றும் பெயரைப் பெரும் என்றும், பெண்பாலெல்லாம் பெண் என்னும் பெயரும் என்று தொல்காப்பியர் எடுத்துரைக்கின்றனர்.

பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே (தொல்.பொருள்.614)

என்றும் நூற்பாவின் வழி பெண், ஆண், பிள்ளை என்பன இருதிணைக்கும் பொதுவாக அமையும் அதாவது உயர்திணை மக்களுக்கே உரியதும் ஆகும் என்று குறிப்பிடுகிறார்.

பெண்பாற் பெயர்களும் அவற்றைப் பெறுவனவும்

பேடை    – கோழி
பெடை    – ஒட்டகம், குதிரை, கழுதை, மரை
பெட்டை    – ஒட்டகம், குதிரை, கழுதை, மரை
பெண்    – மக்கள்
மூடு    – ஆடு
நாகு    – எருமை, மரை, பெற்றம்
கடமை    – ஆடு
அளகு    – கோழி, கூகை, மயில்
மந்தி    – குரங்கு, நந்து, மயில்
பாட்டி- பன்றி, நாய், நளி
பிணை    – புல்வாய், நவ்வி, உழை, கவரி
பிணவு    – பன்றி, புல்வாய், நாய்
பிடி    – யானை

முடிவாக உலகில் தோன்றிய இலக்கண நூல்களில் எழுத்து, சொல் மட்டுமே உள்ளது பொருளுக்கென்று தனியே நூல் வகுத்தவர் தொல்காப்பியர். குறிப்பாக மரபியலுக்கென்று தனி இயலை குறிப்பிடுகிறார். உயிர்களின் தன்மைகளையும், குணங்களையும் கொண்டு பகுத்துள்ளார். மரபு என்பது தொன்றுத் தொட்டு வழங்குவது. மரபுப்பெயர்கள் என்பது பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்படுவதாகும். மரபியல் என்னும் இயலில் இளமைப் பெயர்-ஒன்பது, ஆண்பாற் பெயர் – பதினைந்து, பெண்பாற் பெயர்-பதிமூன்று என்று பெயர்களை வகுத்துள்ளார். மரபு என்பதற்கு

பன்னெடுங்காலமாய்ப் பழக்கத்தின விளைவு, மருவியது மரபு, முறைமை, இயல்பு, இயல்நெறி, ஆறு சொற்களாய் பொருள் சொல்லப்படுகிறது.

இவற்றிற்கு உரை வழங்கிய உரையாசிரியர்களில் இளம்பூரணர் நடை கடினமாகவும், பேராசிரியர் உரை விரிவாக இருந்தாலும் புரிந்து கொள்ள முடியாமலும், க.வெள்ளைவாரணன் தெளிவான உரையும், ச.பாலசுந்தரனார் உரை மட்டும் எளிதில் புரியும் வண்ணம் சங்க இலக்கிய பாடல்களின் எடுத்துக்காட்டுடன் உள்ளது புரிந்துகொள்ள எளிமையாகவுள்ளது எனலாம். மரபு என்பது இலக்கண மரபு சமுதாய மரபு, உலக மரபு, செய்யுள் மரபு முதலிய பல மரபு வகைகள் உள்ளன. இயற்கைப் பொருளின் பெயர்ச்சொல் மரபினை உணர்த்துவது மரபியலாகும்.

மரபுகளை விளக்கும் இம்மரபியலில் பிற்காலத்தில் இடை செருகல் நிறையவுள்ளது. அதாவது மரபுப்பெயர்கள், உயிரின பாகுப்பாடு தவிர்த்த மற்றவை இடைசெருகல் எனக் கொள்ளலாம். அந்த அளவிற்கு அவற்றின் நூற்பாக்கள் அமைந்துள்ளதை அறியமுடிகிறது. மரபியலில் தொல்காப்பியர் நூற்பா அமைப்பு முறையிலும் வைப்பு முறையிலும் பல உத்திகளைக் கையாண்டுள்ளார் என்பதை அறியமுடிகிறது. அதாவது இலக்கிய அடைமொழி நடையும் வாய்ந்தனவாக உள்ளது. ஒவ்வொரு பெயர்களைக் குறிப்பிட்டு அவற்றிற்கு புறனடையாக மற்றொன்றைக் கூறுவதையும் அறிமுடிகிறது.

துணை நூல்கள்
இளம்பூரணர் (உரை), தொல்காப்பியம் பொருளதிகாரம்,2005.
க. வெள்ளைவாரணன் , தொல்காப்பியம் மரபியல் உரைவளம்,1994.
சி. இலக்குவனார், தொல்காப்பிய ஆராய்ச்சி,2009.
ந. சுப்புரெட்டியார், தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை,2011.
ச. பாலசுந்தரம், தொல்காப்பியம் பொருளதிகாரம்,2012.

umakrissmoo@gmail.com

* கட்டுரையாளர்: – ர. உமாராணி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம்,  சேலம் – 636 011 –