(நாட்டுப்புறக்) கவிதை : “ராசாவே உனை நாடி….”

ஶ்ரீராம் விக்னேஷ்

(அவள்)
பாவை என்   முகம்  நோக்கிப்,
பதில் தருவாய்  என  எண்ணி,
பக்கம் நான்  வந்தேனே….!
வெக்கத்தை மறந்தேனே….!!
பார்வை கொஞ்சம்  கீழிறங்கிப்,
பார்ப்பதிலே என்ன விந்தை?
மாராப்பு சேலையிலே,
மர்மம்  என்ன  தெரிகிறது…?

(அவன்)
மாராப்பு தெரியவில்லை….
மச்சமும் தெரியவில்லை….!
மாராப்புக் குள்ளேயுன்,
மனசு தெரியிதடி….!
மனசுக்குள்ளே பரந்திருக்கும்,
மகிமை தெரியிதடி….!

(அவள்)
மாராப்பை நீக்காமல்…,
மச்சத்தை நோக்காமல்….,
மனசைப் படம்பிடித்த….,
மதிநுட்ப கேமராவை,
நேசமாய் வெச்சிருக்கும்….,
ராசாவே உனை நாடி,
கூசாமல் வந்ததிலே…,
குறையில்ல  என்மேல…!

பேசாமல் என்வீட்டில்,
பெண் கேட்டு வந்துவிடும்…!
ஆத்தாளைச்  சரிக்கட்டி…,
“ஆமா”சொல்ல  வைக்கின்றேன்….!

(அவன்)

ஆத்தாளைச்  சரிக்கட்டி,
ஆகிடுமா அடுத்த கதை…?
அப்பனைச்  சரிக்கட்ட….,
ஆர்வருவார்  அசடவளே…..?

(அவள்)

அப்பனின்  வெசயத்தை…,
ஆத்தாளே  பாத்துக்குவா….!
இப்போ என்   வெசயத்தை….,
இனி நீயே  பாத்துக்கணும்…!

(அவன்)
உன்னை நான்  பாத்துக்கிறேன்…!
என்னை நீ  பாத்துக்கணும்…!
துன்பம் ஏதும்   சேராமே,
துணையா சாமி  பாத்துக்கணும்….!

bairaabaarath@gmail.com