நாவல்: ‘நானா’ (2)

இரண்டாம் அத்தியாயம்: சதையின் கதை!

நாவல்: 'நானா'!எமிலி ஸோலாஅறிஞர் அ.ந.கந்தசாமிஅரங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது கிரேக்கத் தெய்வத்தினை வைத்துப் பின்னப்பட்ட புராணக் கதை. இருந்த போதிலும் மனித மாமிசத்தின் கதையாகவே அது அமைந்திருந்தது. ஆணின் சதை பெண்ணின் சதையினை அவாவுடன் அழைக்கும்போது ஏற்படும் காதல், காம, சிருங்கார ரசங்கள்தான் அம்மேடையில் ஊற்றெடுத்து சபையோரிடம் பிரவகித்துக் கொண்டிருந்தன. அந்த ரசானுபவங்களை அனுபவிப்பதற்காகத்தான் அவர்களில் அநேகமாக எல்லோருமே அங்கு வந்திருந்தார்கள். இருந்தபோதிலும் அவர்களால் கூட நானாவின் சங்கீதத்தை அனுபவிக்க முடியவில்லை. கீச்சிட்ட குரலில் அவளது மென்மையான செவ்வதரங்களினூடாக வெளிவந்த பாட்டு அபஸ்வரத்தின் உச்சத்தை அடையாவிட்டாலும், அரங்கேற்றம் பெறத்தக்க, ரசிக்கக் கூடிய இசையாக அமையவில்லை.

‘மாலை வேளையில் ரதியும்
மயக்கும் சோலையில்’

என்ற இனிய பாடலை , அதன் இனிமையை தன் கீச்சுக் குரலால் கொலை செய்த வண்ணம் குலுக்கிகக் குலுக்கி நடந்தாள் நானா.

போதினாவ் சொல்லியதில் தவறொன்றுமில்லை. அவளுக்கும் இசைக்கும் பல காததூரம் வித்தியாசம் என்பது உண்மையே.தான். அது மட்டுமல்ல, அவளுக்கு மேடையில் எப்படி நடக்க வேண்டுமென்று கூடத்தெரியவில்லை. அரங்கத்தில் எப்படி நிற்பது என்பது பற்றியும் எந்த அண்ணாவியும் கற்றுக் கொடுத்ததாகத் தெரியவில்லை.

ஜனங்கள் ஏமாற்றத்துடன் பக்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து கொண்டார்கள். சபையில் முணுமுணுப்பும், குசுகுசுப்பும் ஏற்பட ஆரம்பித்தன. நானா மேடையில் தோன்றியதும் ஏற்பட்ட ‘கப்சிப்’ மயான மெளனம் கலைந்து போயிற்று. சீழ்க்கையடிகள் ஒன்றிரண்டு கேட்க ஆரம்பித்தன.

நானா அதையெல்லாம் சட்டை செய்யாதவள் போல் தனது இடுப்பை அப்படியும் இப்படியும் அலங்கோலமாக அசைத்தாள். தன் கைகளை அகல வீசி உடம்பை ஒரு பாம்பு போல் நெளித்துக் கொண்டு நின்றாள்.

அப்பொழுது ஒரு குரல் – கூவப் பழகும் ஒரு சேவலின் “கேரல்” போன்ற குரல் – அந்தச் சபையின் குசு குசு இரைச்சலை மீறிக் கொண்டு கேட்டது. ‘ஆகா! நானா! அபாரம்! அபாரம்! ‘

அந்தக் கேரல் எந்தத் திக்கிலிருந்து வந்தது என்பதை அறிந்து கொளவ்தற்காகச் சபையிலிருந்து பலர் திரும்பிப் பார்த்தார்கள்.

அவன் ஒரு சின்னஞ்சிறு பாலன். காலேஜில் இருந்து அப்போதுதான் வெளிவந்தவனாக இருக்க வேண்டும். பால்வடியும் அவன் முகத்தில் அமைந்திருந்த குறுகுறுத்த பரிசுத்தமான கண்களில் மின்னல் போல் ஒரு ஒளி வீசியது. நானா மீது மோகித்து வீற்றிருந்தான் அவன்.

எதிர்பாராதவிதமாக எல்லோரும் அவனை ஏறிட்டுப் பார்க்க ஆரம்பித்ததும் அவன் வெட்கத்தால் துடிதுடித்துப் போனான். அவன் முகம் நாணிக் கோணிக் இரத்தச் சிவப்பாகி விட்டது.

டாக்குனே அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான். அச்சின்னஞ்சிறு பையனின் உற்சாகத்தைக் கண்டதும் அவன் முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தான் அவன்.

சபையோரிடையே சிரிப்பும் ஆரவாரமும் ஏற்பட்டன. ஆனால் சீழ்க்கையடிக்கும் மனோபாவம் அடங்கிப் போய் விட்டது. சீக்கிரமே ஒரு பேரமைதி அங்கே குடிகொண்டது. நானா உடலின் வளைவு நெளிவுகள், மேடு பள்ளங்களிலே மக்கள் ஈடுபட ஆரம்பித்தனர்.

“ஆம் நானா அபாரம்! அபாரம்! ” என்று சிரித்துக் கொண்டே சபையில் ஒருவன் ஆமோதித்தான். நானாவின் காதில் அச்சப்தம் விழுந்ததும் அவள் வாய்விட்டுச் சிரித்தாள். சபையில் உடனே ஒரு கலகலப்பு ஏற்பட்டது. எல்லோரும் பதிலுக்குச் சிரித்தார்கள். நானாவும் அவர்களும் ஒரே குடும்பத்தினர் போலாகி விட்டனர். ஒருவருக்கொருவர் சிரிப்பைப் பரிமாறிக் கொண்டு நின்றார்கள்.

நானாவின் போக்கே வேடிக்கையாயிருந்தது. அவள் சிரித்த போதெல்லாம் அவள் கண்ணாடிக் கன்னங்கள் அழகாகக் குழிந்தன. அவளது மேடைத்தோற்றம் “ஆம்! எனக்குப் பாடத் தெரியாதுதான்! ஆடவும் தெரியாதுதான்! ஆனால் பாட்டையும் கூத்தையும் வென்ற கைவரிசை என்னிடம் இருக்கிறது!” என்று பெருமிதத்துடன் கூறுவதுபோல் தோன்றியது.

நானா இரண்டாவது பாடலை ஆரம்பித்தாள். “நள்ளிரவில் கள்ள ரதி மெல்ல வந்தாளே”

நாவல்: 'நானா'!அதே கீச்சுக்க் குரல்தான். இருந்தாலும் சாகித்தியம் வாலிப உள்ளங்களிலும், வாலிபத்தைத் தேடும் வயோதிக உள்ளங்களிலும் கூட வேல் போலப் பாய்ந்து தைத்தது. நானாவின் செவ்வதரங்களிலும் கடைக் கண்களிலும் சிரிப்பின் நிலவு படர்ந்திருந்தது. பாட்டுக்கேற்ப வேறு யாது செய்யவேண்டுமென்று அவளுக்குத் தெரியவில்லை. சிரித்தாள்; இடையிடையே உடம்பை அப்படியும் இப்படியும் ஆட்டி
அசைத்தாள்; நெளிந்தாள்; மக்கள் முன்போல் இதைக்கண்டு அருவருப்படையவில்லை. தூரத்திலுட்கார்ந்து பார்த்த கனவான்கள் “ஒப்பராக் கண்ணாடிகளை (நாடகம் பார்க்கும் தூரதிருஷ்டிக் கண்ணாடி) நன்றாக மாட்டிக்கொண்டு அவளது தசைநார்களின் கண்ணுக்குத் தெரியும் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாட்டைப் பாடிவந்த நானாவுக்குத் தொண்டை திடீரெனக் கட்டிக்கொள்ள கீச்சுக் குரலுக்கும் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. மேலே பாட முடியவில்லை. ஆனால் அவளோ எவ்விதத்திலும் கவலைப் படாமல் இடுப்பை மேலும் மேலும் ஆட்டினாள். மெல்லிய மஸ்லின் பட்டுக்கடியில் சதைப்பிடிப்புடன் ஏற்பட்ட அசைவுகளில் மக்கள் மனதைப் பறிகொடுப்பதற்கு முன்னால் அவள் கீழ் நோக்கிக் குனிந்தாள். அவ்விதம் குனியும் போது த்னது வெள்ளை வெளேரென்ற கழுத்தையும் அதன் கீழ்ப்பாகங்களையும் எவ்வித மறைப்புமில்லாமல் கைகளை அகல விரித்து ஜனங்களுக்குக் காட்டினாள். அதற்கு மேலும் அவர்களால் பொறுமையுடன் இருக்க முடியவில்லை. மண்டபத்தின் நானா திசையிலிருந்தும் கரகோஷம் பிய்த்துக்கொண்டு எழுந்தது. நானா நிமிர்ந்து மறுபக்கம் திரும்பி மான்போல் துள்ளிச் சென்று திரைக்குப் பின்னே மறைந்து விட்டாள். துடித்துக் குதித்து அவள் சென்றபோது அவளது சிவந்த கூந்தல் ஏதோ ஒரு மிருகத்தின் பிடரி மயிர்போல் சிலிர்த்து நின்றது. மக்கள் கரகோஷம் செவிடுபடும்பொடியாகப் பட்டாஸ் வெடிபோல் திக்குகள் எல்லாவற்றையும் அதிர வைத்துக் கிளம்பியது…..


அதற்கடுத்து நடைபெற்ற காட்சிகள் சுகப்படவில்லை. இடைநேரம் எப்போது வரும் என்று திரை விழும்வரையில் பார்த்துக் கொண்டிருந்த ஜனங்கள் கதவுகளை நோக்கி விரைந்து நடந்தார்கள். ஒரு விமர்சகர் ” இதில் எவ்வளவோ வெட்ட வேண்டும். அப்பொழுதுதான் பார்க்க சகிக்கும்” என்று தம் அபிப்பிராயத்தை வெளியிட்டார். ஆனால் மற்றவர்கள் அவ்வித அபிப்பிராயங்களை ஆராய்ச்சியோடு கூறிக்கொண்டிருப்பதில் காலங்கடத்தவில்லை. நானாதான் அவர்களுக்கு முக்கியமாகப் பட்டாள். நானாவைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

போச்சரியும் நெக்டரும் வெளியே வந்ததும் ஸ்டீனரையும் மினோனையும் சந்தித்தனர். ஸ்டீனரோ உற்சாகத்துடன் காணப்பட்டார். “போச்சரி, அவளை எனக்கு நன்றாகத் தெரியுமே! எங்கோ பார்த்திருக்கிறேன். காசினோ ஹாட்டலிலாக இருக்க வேண்டும்! ஒரே குடிவெறியிலே மயங்கி இருந்தாள் அவள்” என்று கூறினார் அவர்.

“நானும் எங்கோ பார்த்திருக்கிறேன். கிழட்டு ட்ரிக்கோனின் விடுதியிலாக இருக்க வேண்டு” மென்று கூறி உல்லாசமாகச் சிரித்தான் போச்சரி.

“அப்படிப்பட்ட இடத்தில்தான் இந்த மாதிரிக் கழுதைகளைக் காண முடியும்! சீச்சீ! அவிசாரிகளுக்கு என்ன வரவேற்பு! நாடக மேடையே சீரழிகிறது. இனிமேல் ரோஸைக்கூட மேடை ஏற விடமாட்டேன்!” என்றான் ரோஸின் கணவன் மினோன்.

போச்சரி பீறி எழுந்த சிரிப்பை அடக்கிவிட்டாலும் மெல்லிய குறுநகையை அடக்க முடியவில்லை. லேசாகப் புன்னகைத்தான். ஜனங்களோ இன்னமும் ஆரவாரமாக வெளியே வந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் “தளுக்கு சுந்தரி! அப்படியே பிடித்துத் தின்ன வேண்டும் போலிருக்கிறது சிறுக்கியை” என்று கூறியது போச்சரியின் காதுகளில் விழுந்தது.

இரு இளைஞர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். “சீச்சீ! கேவலம்! கேவலம்!” என்று சீறினான் ஒருவன். “அபாரம்! அபாரம்! ” என்று கொண்டிருந்தான் மற்றவன்.

ஸ்டீனர் முழு நாடகத்தையும் பார்த்துவிட்டுப் போவதென முடிவுசெய்து விட்டார். மினோனுக்கு வயிற்றெரிச்சல், “ரோஸ் இரண்டாவது காட்சிக்கு அபாரமாகச் சிங்காரித்துக் ஜோடித்துக்கொண்டிருக்கிறாள். வாருங்கள்!” என்று அவரை இழுத்துக்கொண்டு சென்றான்.

போச்சரி டாகுனேவையும் வெளியில் சந்தித்துப் பேசினான். இடைநேரம் முடிவடைந்ததற்கு அறிகுறியாக மணி அடிக்க ஆரம்பிக்கவே, பேச்சை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு மண்டபத்துக்குள் போக ஆரம்பித்தார்கள் எல்லோரும்.


திரை விலகியது. காட்சிகள் ஆரம்பித்தன. இடை நேரத்தின் பின் முற்பகுதியிலும் பார்க்க அதிக விறுவிறுபாகக் கதை ஓட ஆரம்பித்தது. ஆனால் மக்களோ நானாவையே எதிர்நோக்கி உட்கார்த்திருந்தார்கள்.

கடைசியில் நானாவும் தோன்றினாள். மீன்பிடிக்காரிபோல் உடை. நெஞ்சு முன்னே நிமிர்ந்து கொண்டு நின்றது. கைகளை இடையில் வைத்துக் கொண்டு அவள் நடமாட ஆரம்பித்ததும் சபையிலே ஒரே ஆரவாரம். பித்துப் பிடித்தவர்கள்போல் தததளித்தார்கள் ஜனங்கள்.

நானாவின் ஒவ்வொரு செய்கையும் ஜனங்களுக்கு வெறியை ஊட்டிக்கொண்டிருந்தது. சபை கை தட்டியது அவள் தனக்கே இயற்கையான அபூர்வமான இடுப்பசைவுகளைச் செய்தும் ஜனங்கள் அதற்கும் கரகோஷம் செய்தார்கள். அவள் நடனமாடினாள். கரகோஷமும் கூச்சலும்
வானைப் பிளந்தன.

ஹெக்டர் போச்சரியிடம் “சீமாட்டி முபா வந்திருக்கிறாள். நான் போய் பேசிவிட்டு வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டான்.

போச்சரியும் “சரி போய் வா. என்னையும் அறிமுகம் செய்துவைக்க மறந்து விடாதே !” என்று குறிப்பிட்டான்.

ஆனா முபா சிமாட்டியை அவ்வளவு இலகுவில் நெருங்கிவிட முடியவில்லை. பல்கனிகளில்கூட அவ்வளவு ஜனநெருக்கடி காணப்பட்டது.

முபா பிரபு போச்சரியைக் கண்டு விட்டார். போச்சரி அருகில் சென்றதும் காதோடு காதாக “ஒரு நாள் ரூ – டி – பிரவன்ஸில் நாங்கள் சந்தித்த பெண்ணல்லவா இந்த நானா! ” என்று இரகசியமாகக் கேட்டார்.

“ஆமாம்” என்றடித்துச் சொன்னான் போச்சரி. “நான் கூட எங்கோ பார்த்த பெண்ணென்று யோசித்துக் கொண்டிருந்தேன்”

ஹெக்டர் போச்சரியை முபா சீமாட்டிக்கு அறிமுகம் செய்து வைத்தான். போச்சரியின் பெயரைச் சொன்னதும் “பிகாசோ” பத்திரிகையில் வெளிவந்த அவனது கட்டுரைகளை சீமாட்டி சிலாகித்துப் பேசினாள். அதன்பின்னே சமீபத்தில் நடக்கவிருந்த பொருட்காட்சியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். முடிவில் முபா சீமாட்டி ஹெக்டரையும், போச்சரியையும் தங்கள் மாளிகையில் அடுத்த செவ்வாய்க்கிழமை நடக்கவிருந்த விருந்துக்கு வரவேண்டுமென்று வற்புறுத்தினாள். நண்பர்களும் ஏற்றுகொண்டார்கள். வரும்வழியில் சேவியர் பிரபுவுக்குப் பக்கத்தில் பிளாஞ்சும், அவர்கள் பக்கத்தில் லபோர்தெத் என்பவனும் இருப்பதை ஜெக்டர் கண்டான். “இந்த லபோதெத்துக்குத் தெரியாத பெண்ணே கிடையாது போல் இருக்கிறது. பிளாஞ்சுடன் பேசிக் கோண்டிருக்கிறான் பார்!” என்று கூறினான் அவன் போச்சரியிடம்.

வழியில் லூசி சந்தித்தாள். போச்சரி தன்னோடு பேசுவதற்கு வரவில்லையென்று அவள் சிறிது கோபித்துக் கொண்டாள். “நானா ஒரு பெரு வெற்றிதான்” என்று தன் அபிப்பிராய்த்தையும் கூறினாள்.

மினோன் ஸ்டீனருடன் பியர் குடித்துக் கொண்டிருந்தான். நானா வெற்றியடைந்து விட்டாள். இனி குறைத்துப் பேசிவிடப் படாது. ஆகவே தானும் நானாவை மெச்சிப் பேச ஆரம்பித்தான். ஏற்கனவே இரண்டு தடவைகள் ஸ்டீனருக்கு ரோஸைவிட்டு வேறு பெண்களிடம் செல்வதற்கு ஒத்தாசை புரிந்திருக்கிறான். ஆனால் விஷ்யங்கள் ஒப்பேறி முடிந்ததும் ஸ்டீனரை மனைவி ரோஸிடம் இட்டுக் கொண்டு வந்து விடுவான். இந்த வகையில் மினோன் தனது மனைவிக்கு மிக உண்மையாகவே நடந்து வந்தான்.

ஸ்டீனர் போச்சரையையும், ஹெக்டரையும் பியர் குடிக்க அழைத்தார். அதே நேரத்தில் அங்கிருந்த வெயிட்டரிடம் “இரண்டு பூச்செண்டுகள் வேண்டும். நாடகத்தில் நடித்த இரண்டு பிரதான நடிகைகளுக்கும் கொடுக்க வேண்டும். தகுந்த நேரம் பார்த்துக் கொடுத்துவிடு” என்று
கூறினார் ஸ்டீனர்.

அதே அறையின் மூலையில் பதினெட்டு வயது மதிக்கத் தகுந்த ஒரு யுவதி உடகார்ந்து கொண்டிருந்தாள். சுருள், சுருளான கூந்தலும் அதற்குக் கீழே அழகான பளிச்சென்ற முகமும் எவரையும் கவர்வதாக இருந்தன; நேர்மையான நல்ல சுபாவத்தைத் தெரிவிக்கும் மெத்தென்ற பார்வை சாயம் வெளிறிக் கொண்டிருந்த பச்சை வர்ணப் பட்டுடையோடு மடியில் அகன்ற விளிம்புடைய ஒரு தொப்பியுடன் வீற்றிருந்தாள் அவள்.

போச்சரி அவளைக் கண்டதும் “அதோ ஸட்டின்” ” என்று கூறினான. ஹெக்டர் தனக்கு முன்பின் தெரியாத அந்தப் பெண்ணைப் பற்றிய விபரங்களை விசாரித்தான். அவளைப் பற்றிக் கூற எந்த விபரமுமே கிடையாதென்றான் போச்சரி; அவள் ஒரு நடுத்தெரு மோகினி. வீதிகளிலே திரிந்து தனது ஜீவனோபாயத்திற்கு பணம் தேடிக்கொண்டிருந்தவள்.

போச்சரி அவளோடு சில அறிமுக வார்த்தைகளைப் பேசினான். அப்புறம் நாடகத்தின் அடுத்த காட்சி ஆரம்பித்து விடலாம் என்று நினைத்து மண்டபத்துள் விரைவாக நழுவி விட்டார்கள் நண்பர்கள்.

மினோன் ஸ்டீனரிடம் இரக்சியமாக “சரி, நாளையே அவளைப் போய்ப் பார்த்து விடுவோம். நீங்கள் கொஞ்சமும் பயப்பட வேண்டியதில்லை. ரோசிக்குத் தெரிய வரவே வராது!” என்றான் உறுதியான குரலில்.

முன்னர் ‘கேரல்’ குரலில் “நானா அபாரம்” என்று துணிந்து கூறிய அந்தச் சிறுவன் தன் ஆசனத்தை விட்டு அன்று முழுவதும் நகரவே இல்லை. நாற்காலியில் ஒட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

அப்போ பெண்ணென்பது இப்படித்தான் இருக்கும்போலும்! – நானாவைப்பற்றி இவ்விதமான மயக்க நினைவுகளிலே அவன் பிஞ்சுள்ளம் ஈடுபட்டிருந்தது.

பக்கத்திலிருந்த டாக்குனே நானாவைப் பற்றிப் பேசியதை அவன் அவாவுடன் கேட்டுக் கொண்டிருந்தான். ஆகவே சந்தர்ப்பம் கிடைத்ததும் “மன்னிக்கவும் சார்! நாடகத்தில் நடிக்கும் அந்த நடிகையை உங்களுக்கு நேரில் தெரியுமா?” என்று கேட்டான்.

“கொஞ்சம் தெரியும்” என்றான் டாக்குனே.

“அப்படியானால் அவள் விலாசம்!”

டாக்குனே அந்தப் பையனின் நெஞ்சழுத்தத்தைக் கண்டு அருவருப்படைந்தான். முகத்தில் ஒரு அறை கொடுக்கலாமா என்றிருந்தது. “எனக்குத் தெரியாது” என்று கூறி மறுபக்கம் திரும்பிக் கொண்டான். பதிலின் தோரணை ஏதோ பிழை செய்து விட்டது போன்ற உணர்வைப் பையனுக்கு ஏற்படுத்தியது. பிழை என்ன என்பதுதான் தெரியவில்லை. இருந்தபோதிலும் டாக்குனேயின் பதில் அவனைப் பயமும் திகிலும் கொள்ளும்படி செய்தன.


நாவல்: 'நானா'!இதற்கிடையில் மேடையில் அடுத்த காட்சி ஆரம்பித்து விட்டது. வீனஸ் ஏறக்குறைய முழு நிர்வாணமாகவே அரங்கத்தில் தோன்றினாள். துணிவும், திடமும் கொண்ட நடையுடன், தன் சதையின் சர்வ பராக்கிரமத்திலே முழு நம்பிக்கையுடனும் அவள் நிமிர்ந்து நின்றாள். மெல்லிய சல்லாத்துகில் அவள் அங்கங்கள்மீது கண்ணாடியாலான ஜவுளிபோலத் தவழ்ந்துகொண்டிருந்தது. அவளது திரண்ட தொடைகளும், இடுப்பும், ஏன முழு உடம்புமே அந்தத் துகிலுக்குப் பின்னால் வெண்ணுரைபோலக் காட்சி தந்து கொண்டிருந்தது. நானா அவ்வாறு வந்து நின்று கொண்டு தன் இரு கரங்களையும் மேலே தூக்கினாள். கீழே இருந்த காஸ் லைட்டுகள் அவள் கக்கத்தில் ஒளியை அள்ளி வீசின. அந்த ஒளியிலே பொன்னிறமான உரோமங்கள் அங்கே சுருண்டு கிடப்பது தெரிந்த்து. முன்போல ஜனங்கள் இப்பொழுது எடுத்ததெற்கெல்லாம் கைதட்டி ஆரவாரிக்கவில்லை. ஒருவராவது சிரிக்கவோ, கதைக்கவோ, பாராட்டவோ இல்லை. எல்லோரும் முன்னே தள்ளி உட்கார்ந்து கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நானாவோ வழக்கமான தன் புன்னகையுடன், உலகையே பார்த்து நக்கைகும் குஞ்சிரிப்புடனே விளங்கினாள். மனித குலத்தையே நாசமாக்க வந்தவள்போல் அவள் முகத்திலே ஒரு கேலி நகையே தாண்டவமாடியது.

“பசாசு” என்றான் ஹெக்டர், மேலும் தாங்கமுடியாது, வெறுக்கப்பட வேண்டியது, ஆனால் விரும்பத்தக்கதாயிருக்கிறதே என்ற தோரணையில் அந்த வார்ததை விஷேச அர்த்த புஷ்ட்டியுடன் விளங்கியது.

நானாவைத் தொடர்ந்து மேடையில் செவ்வாய் தோன்றினான். ஒரு புறம் டயனா அவனுடன் கொஞ்சி விளையாடினாள். மறுபுறம் வீனஸ் தோன்றி சரசலீலைகளுக்கு அழைத்தாள். புரூலியரை நானாவும், ரோசுமாக படாதபாடு படுத்தி விட்டார்கள். முடிவில் டயனா கோபித்துக் கொண்டோடிவிட்டாள். இப்பொழுது வீனசுக்கு அருமையான வாய்ப்பு. அரங்கங்களில் எப்பொழுதுமே கண்டிருக்க முடியாத ஒரு சல்லாபக் காட்சி அதனைத் தொடர்ந்தது.

நானா புரூலியரின் கழுத்தைத் தனது கரங்களிலால் இழுத்தணைத்துக் கொண்டு நின்றாள். மேலும் மேலும் நெருக்கமாக இழுத்துக் கொண்டே நினறாள் அவள்.

சபை இப்பொழ்து நானாவின் ஒவ்வொரு அசைவையும் கண்களால் விழுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தது. ஒருவித வெறி அங்கே தலை எடுத்திருந்தது. சிருங்காரப் புயலிலே மெய் சிலிர்த்து வீற்றிருந்தனர் ஜனங்கள். அவர்கள் உள்ளம் என்னும் வீணையிலே எத்தனையோ இன்ப நாதங்களை மேடையில் தோன்றிக் காட்சிதந்த நானாவின் நளினத் தோற்றங்கள் மீட்டிக் கொண்டிருந்தன.


 

கடைசியில் திரை வீழ்ந்தது. நாடகம் முடிந்தது. எல்லோரும் நெருக்கி அடித்துகொண்டு வெளியேறினார்கள். எங்கும் நானா! நானா! என்ற பேச்சே ஒலியும் எதிரொலியுமாகக் கேட்டது.

போச்சரி, முபா பிரபு, ஹெக்டர், ஸ்டீனர், மினோன், சேவியர் பிரபு, லூசி, டாக்குனே, எலோரும் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். “மாலை வேளையிலே – ரதியும் – மயங்கும் சோலையிலே” என்ற இராகம் வேறு ஜனங்களைப் பிடித்துக் கொண்டது.

ஸ்ட்டின் என்ற நடுத்தெரு மோகினி அதோ இருளிலே யாரோ ஒரு பெரிய பூதாகாரமான பேர்வழியுடன் மறைந்து கொண்டிருக்கின்றாள். அவனது கரங்கள் அவள் இடையைச் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கின்றன.

நானாவில் மோகித்துவிட்ட அந்தச் சின்னஞ்சிறு பையனை முதலில் அவள் வட்டமிட்டாள். ஆனால் அவனே இடமளிக்காமல் போகவே மற்றவனை நாடினாள் அவள்.

நானாவின் சதைப்பிடிப்பான உடல் அவனது அகக்கண் முன்னே தன் இடுப்பை அசைத்துக் கொண்டு நிறக, அந்தப் பால் மணம் மாறாத பையன் நடந்து கொண்டிருந்தான்.


 “நாடகம் பலே பேஷ்! இருநூறு இரவுகள் ஓடும்!” என்றான் ஹெக்டர். “உங்கள் நாடக ம்ன்றத்தை பாரிஸ் நகரம் மிகவும் கொண்டாடும்” என்றான போதனாவிடம். “நாடகமன்றமா? என்னுடைய வேசி மாடம் என்று கூறடா மடையா!” என்றான் போதினாவ் உற்சாகத்துடன்.

– தொடரும் –

அடுத்த வாரம் மூன்றாம் அத்தியாயம்: மோகப் புயல்

– 28.10.1951ல் சுதந்திரன் வாரப்பதிப்பு.

 


 

சுதந்திரனில் அ.ந.க. மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் ‘நானா’

ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான அறிஞர் அ.ந.கந்தசாமி புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஸோலாவின் 'நானா' நாவலை மொழிபெயர்த்துச் 'சுதந்திரன்' பத்திரிகையில் வெளியிட்டார். அ.ந.க. பல மொழிபெயர்ப்புகளைப் பணிநிமித்தமும், எழுத்துக்காகவும் செய்துள்ளாரென்று அறிய முடிகிறது. அவற்றில் பெட்ராண்ட் ரஸலின் 'யூத அராபிய உறவுகள்', சீனத்து நாவலான 'பொம்மை வீடு', மேலும் பல கவிதைகள், மற்றும் 'சோலாவின் 'நானா' போன்றவற்றைப் பற்றிய தகவல்களே கிடைக்கப்பெறுகின்றன. அ.ந.க.வின் 'நானா'வின் , எமக்குக் கிடைத்த பகுதிகளை' ஒரு பதிவுக்காக பதிவுகளில் பதிவு செய்கின்றோம்.ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான அறிஞர் அ.ந.கந்தசாமி புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஸோலாவின் ‘நானா’ நாவலை மொழிபெயர்த்துச் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் வெளியிட்டார். அ.ந.க. பல மொழிபெயர்ப்புகளைப் பணிநிமித்தமும், எழுத்துக்காகவும் செய்துள்ளாரென்று அறிய முடிகிறது. அவற்றில் பெட்ராண்ட் ரஸலின் ‘யூத அராபிய உறவுகள்’, சீனத்து நாவலான ‘பொம்மை வீடு’, மேலும் பல கவிதைகள், மற்றும் ‘சோலாவின் ‘நானா’ போன்றவற்றைப் பற்றிய தகவல்களே கிடைக்கப்பெறுகின்றன. அ.ந.க.வின் ‘நானா’வின் , எமக்குக் கிடைத்த பகுதிகளை’ ஒரு பதிவுக்காக பதிவுகளில் பதிவு செய்கின்றோம்.  எமிலிசோலாவின் நாவலான ‘நானா’வைச் சுதந்திரனில் மொழிபெயர்த்து அ.ந.க. வெளியிட்டபோது அது பெரும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியதை சுதந்திரனில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடிதங்களிலிருந்து அறியமுடிகின்றது. அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் ‘நானா’ சுதந்திரனில் 21-10-51தொடக்கம் – 6-4-1952 வரையில் மொத்தம் 19 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. முதலாவது அத்தியாயம் ‘முதலிரவு’ என்னும் தலைப்பிலும், பத்தொன்பதாவது அத்தியாயம் ‘போலிஸ்’ என்னும் தலைப்பிலும் வெளிவந்துள்ளன. நாவல் வெளிவந்தபோது வெளிவந்த வாசகர் கடிதங்களிலிருந்து பெரும்பாலான வாசகர்களை நானா அடிமையாக்கி விட்டாளென்றுதான் தெரிகின்றது. எதிர்த்தவர்கள் கூட அ.ந.க.வின் மொழிபெயர்ப்பினைப் பெரிதும் பாராட்டியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. நாவலை அ.ந.க தனக்கேயுரிய அந்தத் துள்ளுதமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார். நாவல் காரணமாகச் சுதந்திரனின் விற்பனை அதிகரித்துள்ளதையும், நானாவை வாசிப்பதில் வாசகர்களுக்கேற்பட்ட போட்டி நானா வெளிவந்த சுதந்திரனின் பக்கங்களைக் களவாடுவதில் முடிந்துள்ளதையும் அறிய முடிகிறது. . மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவாவும் ஒரு கடிதம் எழுதியிருகின்றார். ‘நானா’ பற்றி வெளிவந்த வாசகர் கடிதங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.

‘”நானா” கதை சுதந்திரனில் வெளிவரத்தொடங்கிய பின்பு மார்க்கெட்டில் சுதந்திரன் பத்திரிகைக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலர் கடைகளுக்குச் சென்று பத்திரிகை கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றுள்ளதை நான் கண்ணாரக் கண்டேன். அதனால் பலர் சேர்ந்து ஒரு பத்திரிகையை வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏறபட்டுள்ளது. தமிழாக்கம் அபாரம்’ இவ்விதம் தனது கருத்தினை எழுதியிருக்கின்றார் செம்மாதெரு, யாழ்ப்பாணத்திலிருந்து டொமினிக் ஜீவா.

கொள்ளுப்பிட்டியிலிருந்து எம்.மாதவன் என்பவர் பின்வருமாறு குமுறியிருக்கின்றார்: ‘நானா’ கதையைத் தொடர்ச்சியாகப் படித்து வருகின்றேன். ஆனால் அந்தப் பிரதிகளைக் கூட அற்பத்தனமாகக் களவெடுத்துவிடும் கயவர்கள் உலகில் இல்லாமலில்லை. ஒரு நண்பன் ‘நானா’ பக்கங்களைப் பார்த்தே திருடி எடுத்து விட்டான். என் குறையை வேறு யாரிடம் சொல்லி அழுவது? இவ்வளவுக்கும் காரணமான உங்களிடமே கூறிவிட வேண்டுமென்று இதை எழுதுகிறேன்.’

சென்னையிலிருந்து ‘செங்கோல்’ பதிப்பகத்தைச் சேர்ந்த வே.கணபதி என்பவர் பின்வருமாறு எழுதியுள்ளார்: ‘எமிலி ஸோலாவின் அற்புதமான கதையை அழகான தமிழில் தந்து வருகின்றீர்கள். தமிழறிந்தோரிடையே ஸோஸாவின் நூலைத் தங்கள் பத்திரிகைதான் அறிமுகம் செய்து வைக்கிறது என்று நினைக்கின்றேன். இந்த முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.’

‘சமுதாயப் பதிப்பகம்’, சென்னையிலிருந்து சம்பந்தன் என்பவர் பின்வருமாறு எழுதியிருக்கின்றார்: ‘சுதந்திரனில் தொடர்ந்து வெளியாகும் ‘நானா’ வின் முதற் பகுதியைப் படித்தேன். கதையின் சுவையில் ஆழ்ந்து போனேன். அது ஒரு மொழிபெயர்ப்புக் கதையாகவே தோன்றவில்லை… நானா ஒரு வெற்றிகரமான மூலத்தின் சுவை குன்றாத அற்புத மொழிபெயர்ப்பு என்பதில் சந்தேகமில்லை’. இவர்களுடன் இன்னும் பலரின் கடிதங்கள் ‘அருமையான கதை- சுவை குன்றாத் தமிழாக்கம்’ என்னும் தலைப்பில் 18-11-51 சுதந்திரன் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இது போல் 30-12-51 சுதந்திரன் இதழிலும் ‘நானா திசையிலிருந்தும் ‘நானா’வுக்குப் பாராட்டு’ என்னும் தலைப்பில் பல வாசகர் கடிதங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. நானாவை வரவேற்றும், எதிர்த்தும் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றார்கள்.

அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் ‘நானா’ சுதந்திரனில் 21-10-51தொடக்கம் -6-4 -1952 வரையில் மொத்தம் 19 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. இறுதி அத்தியாயம் முற்றும் என்று போடாமலேயே முடிந்துள்ளது.

எமக்குக் கிடைத்தவை:

அ.ந.கந்தசாமியின் மொழிபெயர்ப்பில் நானா:

அத்தியாயம் ஒன்று: முதலிரவு   – சுதந்திரன் 21-10-1951
அத்தியாயம் இரண்டு: சதையின் கதை – சுதந்திரன் 28-10-1951
அத்தியாயம் மூன்று: மோகப்புயல் – சுதந்திரன் 4-11-1951
அத்தியாயம் நான்கு: குட்டிக் காதலன் – சுதந்திரன் 11.11.1951
அத்தியாயம் ஐந்து: நானாவின் நள்ளிரவு விருந்து – 18-11-1951
அத்தியாயம் ஆறு: போதை – 25-11-1951
அத்தியாயம் ஏழு: பிரபுவின் மயக்கம் – 2-12-1951
அத்தியாயம் எட்டு: காதல் வெறி – 9-12-1951 (அத்தியாயம் ஏழு என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது)
அத்தியாயம் ஒன்பது: நானாவின் மாளிகை -16-12-1951 (அத்தியாயம் எட்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது)
அத்தியாயம் பத்து: முபா பிரபுவின் பொறாமை – 23-12-1951
அத்தியாயம் பதினொன்று: செவிடன் காதில் சங்கு – 6-1-1952
அத்தியாயம் பன்னிரண்டு: பிசாசின் கரத்தில் பிரபு – 13-1-1952
அத்தியாயம் பதின்மூன்று: சீமாட்டியின் இரகசியங்கள் – 20-1-1952
அத்தியாயம் பதினான்கு: கண்ணீர் – 27-1-1952

புதிய காதலன் – 10-2-1952
நானா பெற்ற உதை – 24-2-1952 ( தொடரின் இறுதியில் அடுத்த அத்தியாயம் நானாவின் தோழி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.)
நானாவின் தோழி – 2-3-1952 (அடுத்த அத்தியாயம் மோசக்கார ஆணுலகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது)
மோசக்கார ஆணுலகம் – 28-3-1952
போலிஸ் – 6-4-1952

அத்தியாயம் ஏழுக்குப் பிறகு இரண்டாவது தடவையும் அத்தியாயம் ஏழு என்று ‘காதல் வெறி’ என்னும் தலைப்பில் வெளியான அத்தியாயம் எட்டாகவிருக்க வேண்டிய அத்தியாயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு வெளியான அத்தியாயங்களெல்லாம் இதனடிப்படையில் அத்தியாயம் 13 வரை குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தியாயம் 13ற்குப் பிறகு கீழுள்ளவாறு அத்தியாயம் என்று குறிப்பிடப்படாமல் , வெறும் தலைப்புடன் மட்டும் அத்தியாயங்கள் 6-4-1952 வரை வெளிவந்துள்ளன. இறுதியாகக் கிடைத்த அத்தியாயம் 19 , போலிஸ் என்னும் தலையங்கத்துடன் வெளிவந்திருக்கின்றது. இறுதியில் தொடரும் போட்டிருக்கவில்லை. 01-2-1952ற்குப் பிறகு 24-02-1952 சுதந்திரனில் வெளியான அத்தியாயமே அடுத்த அத்தியாயமாக எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.  இடையில் ஏதும் அத்தியாயம் வந்திருக்கவில்லையென்றே தென்படுகிறது. இதுபோல் 2-3-1952ற்குப் பிறகு 28-3-1952 சுதந்திரனிலேயே நானா வெளியாகியுள்ளது. ஆனால் 2-3-1952இல் வெளியான அத்தியாயத்தில் அடுத்த அத்தியாயம் ‘மோசக்கார ஆணுலகம்’  என்று குறிப்பிடப்பட்டுள்ளவாறே 28-3-1952இல் வெளிவந்திருப்பதால் இடையில் அத்தியாயமெதுவும் வந்திருக்கவில்லை என்று கருதலாம்.

ஆரம்பத்தில் விரிவாக ஆரம்பமான நாவல், அத்தியாயம் 13ற்குப் பிறகு மிக விரைவாகச் சென்று, 19வது அத்தியாயத்துடன் திடீரென நின்று விடுகிறது. எனவே நாவல் முடிவதற்கு முன்னரே நின்று போயிருக்கிறது போல் தெரிகிறது. ‘இலங்கைச் சுவடிகள் திணைக்கள’த்தில் எமக்காகத் தேடுதல் நடாத்தி அ.ந.க.வின் ஆக்கங்களைச் சேகரித்து அனுப்பியவர் இதன் பிறகு சுதந்திரனின் அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் நானா வெளிவரவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த மொழிபெயர்ப்பு முழுமையாக இல்லாதிருந்தபோதிலும், அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் வெளியான பகுதிகள் அவரது எழுத்தின் ஒரு பகுதியாக ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் கருதி ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றன.  – ஆசிரியர் –