நீண்ட ஆறு

ஜெயந்தி சங்கர்ஸியா, ஷாங், ஜோவ் முடியாட்சிகளுக்கெல்லாம் மூதாதையரான லுவோஜு சீனர்களின் ஆதித்தாய் என்றறியப் பெறுகிறாள். மஞ்சள் மாமன்னரின் மனைவியான லுவோஜு யாங்சே ஆற்றங்கரையோரத்தில் முற்கால சீனத்தின் ஸிலிங் என்றறியப்பட்ட நகரத்தில் பிறந்தாள். இவர்களுக்கு ஸுவான் ஸியாவ் மற்றும் ச்சாங் யீ என்று இரண்டு மகன்கள் பிறந்தனர். அரசி லுவோஜு தான் முதன்முதலில் பட்டுப்புழுக்கள் வளர்ப்பு மற்றும் பட்டிழை நெய்தல் பற்றி அக்காலச் சமூகத்துக்குக் காட்டியதால் இன்றைக்கும் சீனத்தில் லுவோஜு என்றால் பட்டுப்புழுக்கள் வளர்க்கும் தேவதை என்றே பொருள். இந்தக் கண்டுபிடிப்பு சீன நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சிக்குப் பெரிது உதவியுள்ளது. லுவோஜுவின் நினைவாக அன்றே கட்டப்பெற்ற ஓர் ஆலயம் இன்றைக்கும் யிச்சாங்கில் இருக்கிறது. ஒவ்வொரு சந்திர ஆண்டின் மூன்றாம் மாதத்தின் ஐந்தாம் நாளில் இந்தக்கோவிலில் பெரிய திருவிழா நடக்கும். லுவோஜு கலாசாரத்தைக் குறித்த கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளும் இங்கு நடைபெறும்.

முற்காலந்தொட்டே சரக்குகள் மற்றும் மனிதப் போக்குவரத்துக்கு மிக முக்கிய ஊடகமாக யாங்சே விளங்கி வந்திருக்கிறது. இன்றைக்கும் துறைமுகங்களையும் மாநகரங்களையும் இணைத்து ஒரு வலைக்குள் கொண்டு வருவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. ஆற்றோர ஊர்களெங்கும் பாவிக்கும் கிட்டத்தட்ட 0.2 பில்லியன் கிலோ வாட்டுக்கும் மேலான மின்சாரத்தை யாங்சே அளித்து வருகிறது. மீன்பிடித் தொழிலுக்கு மிக உகந்ததாக இருக்கும் இந்த ஆற்றில் கிட்டத்தட்ட 500 வகையான மீன்கள் இருக்கின்றன.

ஆற்றின் குறுக்கே கடந்த சில ஆண்டுகளாகக் கட்டப்படும் அணை இன்னும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்படாத பல்வேறு கலாசாரப் பொக்கிஷங்களை அழிக்கும் என்ற அக்கறை அறிஞர்களிடையே ஏற்பட்டுள்ளது. இன்றைய நாகரீகத்தை அடையும் பயணத்தில் சீன மக்கள் செய்த புதுமைகளை இவற்றிலிருந்து அறிய முடிவதாக இருக்கிறது. அப்பகுதியில் இருக்கும் தொங்கும் சவப்பெட்டிகள், ‘மூன்று பயணிகள்’ குகை, பேய்நகரமான ஃபெங்டு ஆகியவை தொன்மை நிறைந்த கலாசார அதிசயங்கள். கால்வாய்களே தெருக்களாக இருந்த பல ஊர்கள் பழங்காலத்திலேயே இருந்திருக்கின்றன. கிராமங்களை இணைக்கும் பொதுச்சாலைகளாக இந்த ஆற்றின் கிளைகள் விளங்கியுள்ளன. ச்சிங் முடியாட்சி காலத்தில் (1644-1911) கூட பனிக்காலக் கொடுமையிலிருந்து தப்பிக்க ஹாங்ஜோவ் மற்றும் ஸுஜோவ்வுக்கு மாமன்னர்கள் வந்தனர்.

வாரிங் காலத்தின் இறுதியில் (கி.மு 476 BC – 221) ச்சு ஆட்சியின் போது வாழ்ந்த ச்சு யுவான் தான் சீனக் கலாசாரத்தின் ஆதி தேசபக்திக் கவிஞர். இன்றும் பேசப்படும், எடுத்தாளப்படும் பல நல்ல கவிதைகளை அவர் தன் வாழ்நாளில் இயற்றியுள்ளார். அவருடைய தேசபக்தி சீன மக்களை இன்றைக்கும் உணர்ச்சியடைய வைக்கின்றது.  1953, உலகளவில் போற்றப்படும் 4 கலாசாரப் பிரபலங்களுள் ஒருவராக உலக சமாதான அமைப்பால் அறிவிக்கப்பட்டார். ச்சு யுவான் யாங்சேயின் கரையிலிருக்கும் குயீ என்றொரு மாவட்டத்தின் லெபிங்லி எனும் ஊரில் பிறந்தார். அந்தப் பகுதிகளில் இன்றைக்கும் அவரைப் பற்றிய கதைகள் புழங்கப்படுகின்றன. இவர் தொடர்பான தொன்மை நிறைந்த ஏராளமான ஆவணங்களும் பொருட்களும் பாதுகாக்கவும் படுகின்றன. 

வருடத்திற்கு 268 மில்லியன் கிலோமீட்டர் தொலை ஓடும் இந்த ஆறு இரண்டு மிக உயர மலைகளுக்கிடையிலிருக்கும் குறுகலான இடைவெளியில் ஓடுமிடத்தில் மேலும் அதிக வேகம் கொள்ளும். இது போன்ற ஆபத்து நிறைந்த இடங்கள் பலவுண்டு. குதாங், வூஸியா, ஸிலிங் ஆகிய மூன்று இடங்கள் மிகப்பிரபலம். யாங்சே ஆற்றின் கோங்லிங் என்ற இடத்தில் 1990ல் ஒரு ஜெர்மானியக் கப்பல் கடந்த போது மிகவும் கொந்தளிப்பாக இருந்த ஆற்றில் அலை பெரிதாக உயர்ந்தடித்தது. மாலுமிக்கு மிகுந்த பதற்றம் ஏற்பட்டு விட்டது. உடனிருந்த சீனரிடம் கலத்தைச் செலுத்தச் சொன்னார். பெரும்பாறையை நோக்கி நேராகச் செலுத்தியவருக்கு அங்கே நிலவிய நடைமுறைச் சிக்கல்களும் வழக்கங்களும் தெரிந்து தானிருந்தது. ஆனால், அவர் கலத்தைத் தகர்த்தழிக்க நினைப்பதாக மாலுமி நினைத்து அவரை விலக்கி தானே கப்பலைப் பாறையைவிட்டு விலகி ஓட்டினார். கலம் பாறையில் மோதி மூழ்கியது. அந்த விபத்துக்குப் பின்னர் இந்த மூன்று இடங்களில் கப்பல் போக்குவரத்துகள் ஒன்பதாண்டுகளுக்கு நிறுத்தப்பட்டன.  அதன் பிறகு தான் போக்குவரத்து நவீனகட்டத்தை எட்டியதுடன் மிகவும் அதிகரித்தது. அதற்கு முன்பெல்லாம் யாங்சேயில் பயணம் செய்வதென்பது உயிரைப் பணயம் வைப்பதற்கு ஒப்பானதாக இருந்தது. 1931 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 18 அன்றைக்கு ஏற்பட்ட கடும்வெள்ளத்திலும் அதைத் தொடர்ந்த காலங்களில் நடந்த அழிவுகளிலும் 3.7 மில்லியன் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. அது தான் 20 ஆம் நூற்றாண்டின் ஆகக் கடுமையான இயற்கைப் பேரிடர் என்றறியப்பெறுகிறது. இன்றைக்கும், வெள்ள காலங்களில் ஆபத்திலிருந்து உயிர் தப்ப 5,00,000 பேர் வரை வேறிடங்களுக்கு தற்காலிகமாகவேனும் இடம்பெயர்ந்து விடுவதைக் காண முடியும்.

யாங்சே ஆற்று நீர் வருடம் முழுவதும் போக்குவரத்துக்குப் பயன்படுகிறது. இருப்பினும், அவ்வழியே கடக்கும் போது படகுகள் பாறைகளில் அடிக்கடி சிக்கும். நீருக்குள் சென்று விலக்கினால் தான் படகு தன் பயணத்தைத் தொடரவே முடியும். படகு சிக்கிக் கொண்டிருக்கும் இடத்தில் குதித்து ஆழத்திற்குச் சென்று மூச்சைப் பிடித்தபடியே படகை விலக்கும் வேலையில் ஈடுபடுவர். இதைத் தொழிலாகச் செய்து பிழைக்கும் நதியாடிகள் நிறைய பேருண்டு. ஒரு சமூகமாகவே பல நூற்றாண்டுகளாக ஆற்றங்கரையோரங்களில் வாழ்ந்து வருகிறார்கள். விசைப் படகுகளுக்கும் இன்றைக்கும் இவர்களுடைய உதவி தேவையாகத் தான் இருக்கிறது. மற்ற இடங்களில் குறைந்து போயிருந்தாலும் ஷென்னோங் ஓடைக்கரைப் பகுதிகளில் இவர்கள் இன்றைக்கும் மும்முரமாகத் தொழில் செய்கிறார்கள்.
கிளை ஆறுகளில் இருக்கும் ஆபத்தை விட முக்கிய ஆற்றில் இன்னும் அதிகம். ஆகவே, நதியாடிகளில் பெரும்பாலோர் கிளையாற்றில் வேலை செய்யவே விரும்புவர். பொதுவாகவே, நதியாடிகளின் வாழ்க்கை பொருளற்றது. எப்போது வேண்டுமானாலும் சாகலாம். அதுவும் யாராலும் கவனிக்கப் பெறாமல் வரும் மரணங்கள் தான் அதிகம். உடலைத் தேடுவதென்ற பழக்கமே இச்சமூகங்களில் இல்லை. ஜல சமாதியை இவர்கள் வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டு காலங்காலமாக வாழ்கிறார்கள்.

அதுவும் பனிக்காலங்களில் நீரில் இறங்குவது சாவை விரும்பி ஏற்பதற்கு ஒப்பானது. காலங்காலமாக எந்த மாற்றங்களோ முன்னேற்றங்களோ இல்லாமலே இருந்து வருகிறது. இன்றைக்கும் அங்கே போகும் சுற்றுப்பயணிகள் வெறும் காலில் நதியாடிகள் செயலாற்றுவதைக் காண முடியும். சில விவசாயக் குடிகள் உழவு/அறுவடை வேலை இல்லாத காலங்களில் கூடுதல் வருவாய்க்காகவும் இதைச் செய்வார்கள். சல்லிக் காசுகளுக்காக உயிரையே பணயம் வைப்பது தான் பார்ப்பவர்கள் மனதை மிக உருக்கும். டுஜியா போன்ற சிறுபான்மையினர் வாழும் பகுதி இது. ஆதிகாலத்தில் நதியாடிகள் படகுகளை விடுவிக்க மட்டுமே உதவி வந்தனர். இன்றைக்கோ சீனாவின் வரலாற்றில் இடம்பிடித்திருக்கும் இவர்கள் சுற்றுலாத் துறையுடன் இணைந்தும் பணியாற்றுகிறார்கள்.

60 கிமீ தொலைவிற்கு ஓடும் ஓடை மிகவும் வேகங்கொண்டிருக்கும். இடுப்பில் கயிற்றைக் கட்டிக் கொண்டு குதித்து படகை விடுவித்து விட்டு மீண்டும் படகிற்குள் குதித்து விடுவர் நதியாடிகள். தேவையென்றால் படகில் கயிற்றைக் கட்டிக் கொஞ்ச தூரத்துக்கு இழுத்தும் கொடுப்பார்கள். இது ஓராளாகச் செய்யக் கூடிய வேலையாகப் பெரும்பாலும் இருப்பதில்லை. குழுவாகவே செயல் படுவர். வேலையின் போது இவர்கள் பாடுவது கேட்க மிக இயல்பாக இருக்கும்; இனிமையாக இராது. ஒரு மாதிரி மிருகக் கூச்சல் போலவே ஒலிக்கும். சீனர்களுக்கே அப்பாடலின் பொருள் விளங்காது. உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் முற்காலம் போலவே இன்றைக்கும் வேலையில் ஈடுபடுவோர் உளர். கோமணம் கட்டிக் கொண்டு வேலை செய்வோரும் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் நவீன கால குட்டைக் காற்சட்டையணிந்தும் கொஞ்சபேர் செய்கிறார்கள்.

நீரில் படப்பட மேலும் இறுகி உறுதிப்படும் தன்மையுடைய மூங்கில் விளாறுகளால் முறுக்கிச் செய்யப்பட்ட கயிறுகளையே இடுப்பில் கட்டிக் கொள்ளவும் படகைக் கட்டியிழுக்கவும் பயன்படுத்துகிறார்கள். இடுப்பு முறியும் வேலை இது. சில சமயம், இருவேறு படகுகளை விடுவிக்கும் இரண்டு குழுக்கள் உல்லாசமாகப் போட்டிகளில் ஈடுபடுவதையும் நாம் பார்க்க முடியும். வெப்பம் 40யைத் தொடும் கோடைகளில் உடலிலிருந்து வியர்வையாகிப் பெருகி வழிந்தோடும் நீரை ஈடுகட்ட தண்ணீர் குடித்து மாளாது. பாறை மிகுந்த கரையோரங்களில் குரங்குகள் தொங்குவதைக் காணலாம். உயரே வானில் பலவகையான புள்ளினங்கள் பறக்கும். இப்பகுதிகளில் இருக்கும் அடர்வனங்களில் மங்கோலிய/திபெத்திய மான் வகைகள், பனிச் சிறுத்தை போன்ற பல விலங்குகள் வாழ்கின்றன.

100 மீட்டர் வரை இருக்கும் இந்த உயர்மலைகளில் தான் பழங்காலச் சவப்பெட்டிகள் தொங்குகின்றன. முற்காலத்தில் இப்பகுதியின் இடுகாடாக இருந்திருக்கின்றன இம்மலைகள். சமூக அந்தஸ்து உயரும் போது அந்நபரின் சவப்பெட்டியும் அதிக உயரத்தில் தொங்குமாம். இந்தக் கலாசாரம் 2000 வருடப் பழமை வாய்ந்தவை. தொங்கவிடவென்று அந்த உயரத்துக்கு அந்தப் பெட்டிகளை எப்படிக் கொண்டு போனார்கள் என்பது இன்று வரை ஆராய்ச்சியாளர்களுக்குப் புதிராகவே இருந்து வருகிறது. முன்பெல்லாம் கடந்து செல்லும் போது மேலே தொங்கும் பெட்டிகளைக் காண முடியாதிருந்தது. ஆற்றின் குறுக்கே உருவாகி வரும் பெரிய அணையின் காரணமாக நீர் மட்டம் 40 மீட்டர் கூடியிருப்பதால் இப்போது கண்ணில் படுகின்றன. யாங்சேயின் மற்ற பகுதிகளில் இருக்கும் பழுப்பு நிறம் இங்கிருப்பதில்லை. மரகதப் பச்சை நிறத்தில் ஓடும் ஷென்னோங் ஓடை. இயற்கைக் காட்சிகளோ மிரட்டும் அழகுடையவை. உயர் மலையுச்சிகளும், பள்ளத்தாக்குகளும், பெரிய குகைகளும், அடர் காடுகளும், காட்டுப்பூக்களும், இரு மலைகளுக்கிடையில் தொங்குபாலங்களும் ஆங்காங்கே நிறைய இருக்கின்றன.

மூன்று மலைகள், யியூயாங், ஜிகுயீ, ஷிபாவ்ஜாய், வான்ஸியாங் கிராமம், ச்சிபி என்றறியப்படும் செம்மலை, யிச்சாங், பாய்தி, ஃபெங்டூ உள்ளிட்ட ஆற்றோர ஊர்களிலும் கிராமங்களிலும் புராணத் தன்மையுடைய, நாட்டார்தன்மையுடைய, உண்மை போன்றொலிக்கும் பல கதைகள் உலவுகின்றன. யின்வோதான் என்ற இடத்தில் யின் லோங் என்ற ஏழைச் சிறுவன் எப்படி வெள்ளி யாளியால் காப்பாற்றப்பட்டான் என்றிருக்கிறதோ, அதே போலவே ஒவ்வொரு கதையிலும் ஏழைச் சிறுவனோ, ஏழைச் சிறுமியோ, மூதாட்டியோ, முதியவரோ, படகோட்டியோ, மீனவனோ வருவார்கள். பல்வேறு விதமான கஷ்டங்களை அனுபவித்த பிறகு ஏதேனும் ஒரு புராணப் பாத்திரத்தால் காப்பாற்றப் பெறுவார்கள். பெரும்பாலும் அந்தப் பாத்திரம் யாளியாகவே இருக்கிறது.

ஆற்றில் நடக்கும் வருடாந்திரப் படகுப்போட்டிகள் ‘dragon boat festival’ என்று உலகப் பிரசித்தம். பெரிய விழாவாகப் பலநாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. மரச்செதுக்குக் கலை, சிற்பக் கலை, மூங்கில் ஓவியங்கள், குயக்கலை, மண்பாண்ட ஓவியம், தூரிகை எழுத்துக்கலை, சீன ஓவியம், தேநீர் கெண்டி/கோப்பைகள் செய்தல், பலவகை பொன்ஸாய்,  தையல்வேலை, சித்திரத் தையற்கலை, மூங்கில், சணல் மற்றும் பிரம்பு சார்ந்த நெசவு/பின்னல், கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான கலைகளைக் கொண்ட யாங்சே ஆற்றோரத்தின் ‘மயில் இறைவி’ என்ற ஓர் இடமும் பிரபலமாக இருக்கிறது. 

பருவ நிலைகளில் பல்வேறு வகைகளையும் பல்வேறு விதமான இயற்கைக் காட்சிகளையும் விதவிதமான பொருளாதார, கலாசார, நாட்டாரியல் கொண்ட யாங்சே வரலாற்று, கலாசார மற்றும் பொருளியல் கோணங்களில் சீனாவுக்கு மிக முக்கியமாக இருந்து வருகிறது. யாங்சேயின் மீன்பிடித்தொழில் 7000 ஆண்டு பழமை வாய்ந்ததென்று தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். பெரும்பாலும், பன்னிரெண்டடி நீளத்தில் மூன்று நான்கடி அகலம் கொண்ட  மரப் படகுகளையே பயன்படுத்தினார்கள். சமீப வருடங்களில் வாழ்க்கைத் தரம் உயர்ந்த போது விசைப்படகுகள் அதிகரித்துள்ளன. மீன்பிடிப்பது வாழ்க்கையோடு இயைந்திருப்பதால் எந்தக்காலத்தில் எந்த இடத்தில் எந்த மாதிரியான மச்சங்கள் பிடிபடும் என்று நன்கறிந்துள்ளனர். முக்கியமாக மீன் வகைகளின் இனப்பெருக்க காலத்தைத் துல்லியமாக அறிந்து வைத்துள்ளனர். மரக்கலங்களைப் பெரும்பாலும் கோடை மாதங்களான ஜூலை ஆகஸ்ட்களில் தான் பழுது பார்ப்பார்கள். மீனவர்கள் சந்திரப்புத்தாண்டைக் கொண்டாடுவதும் அலங்கரிக்கப்பட்ட படகில் தான். தெய்வ வழிபாடும் மறுகூடல் விருந்தும் படகிலேயே தான்.

ஜோங்ஸியான் மாவட்டத்திலிருக்கும் ஷிபாவ்ஜாய், மஞ்சள் கொக்கு கோபுரம், யூயாங் கோபுரம், பாய்திசெங், ஃபெங்டு பேய்நகரம், சுற்றுலாத் தலங்கள் ஏராளமிருக்கின்றன. தங்குமிடம், உணவு, உல்லாச ஒன்றுகூடல் என்று எல்லா ஏற்பாடுகளும் செய்கிறது சுற்றுலாத் துறை. முக்கியமாக, யாங்சேயில் படகு சவாரி சாகசமும் விறுவிறுப்புமானது. வழியெங்கும் காணக் கிடைக்கும் அசத்திடும் இயற்கைக் காட்சிகள் எல்லாமே வேறெங்கேயும் காண முடியாததும் கூட.

பல அளவுகளில் எண்ணற்ற ஏரிகள் இருக்கின்றன. அவற்றில், தெற்கு யாங்சேயுடன் இணையும் ஹுன்னன் மாகாணாத்தின் தோங்திங் ஏரி அளவில் இரண்டாமிடம் பெறுகிறது. 1949க்கு முன்பு வரை சீனாவில் பெரிய, நடுத்தர அளவிலான அணைகள், ஏரிகள் வெறும் 23 தான் இருந்தன. 1958-1960களில் அதிக அணைகள் கட்டும் பணிகள் முடுக்கப்பட்டு 15 மீட்டர் உயரத்தில் 20,000 அணைகள் கட்டப்பட்டன. இடையில் கொஞ்ச காலத்திற்கு தடைபட்ட பணிகள் மீண்டும் 1980ல் தொடங்கின. வெள்ளக்கட்டுப்பாடு தவிர மின் உற்பத்தியே முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. 18 அணுமின் உற்பத்தித் தொழிற்சாலைகளிலிருந்து பெறக்கூடிய பெரியளவு மின் உற்பத்தி செய்கிறார்கள்.
ஆப்பிரிக்காவின் நைல் மற்றும் தென் அமெரிக்காவின் அமேசான் ஆறுகளுக்கடுத்து உலகின் மூன்றாவது நீள ஆறு சீனாவின் யாங்சே. பூகோள அமைப்பின் காரணமாக சீனாவை வடக்கு தெற்காக பிரிக்கும் கோடாக கருதப்படுகிறது. யாங்சே மேற்குப் பகுதியிலிருக்கும் ச்சிங்ஹாய் மாநிலத்தில் தொடங்கி, கிழக்கு நோக்கிப் பாய்ந்து சீனக்கடலில் கலக்கும் முன்னர் 9 மாநிலங்களில் வளம் சேர்க்கிறது. மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணைகள் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன. சீனாவின் வணிகத் தலைநகரான ஷாங்காய் இவ்வாற்றின் கழிமுகத்தில் உள்ளது. இந்த ஆற்றின் வடிகால் பரப்பளவே 1.8 மில்லியன் சதுர கிமீ விரிந்து நாட்டின் மொத்த விளைநிலத்தில் 19% நிலத்தைக் கொண்டிருக்கிறது. வானிலையும் சாதகமாக இருப்பதால் மொத்த விவசாய உற்பத்தியில் 40% இங்கிருந்து தான் பெறப்படுகின்றது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியான 400 மில்லியன் பேர் இவ்வட்டாரங்களில் வசிக்கின்றனர்.
சுமார் 700 கிளைகளைக் கொண்டு ஏறத்தாழ 6,300 கி.மீ தூரம் ஓடும் யாங்சே அல்லது ச்சாங் ஜியாங் ஆசியாவின் ஆக நீண்ட ஆறு ஆகும். ச்சாங் ஜியாங் என்றாலே நீண்ட ஆறு என்று பொருள். குறைந்த பட்சம் பன்னிரெண்டு பெயர்களாவது இவ்வாற்றுக்குண்டு. திபெத்தியர் த்ரி சூ என்றும் தென்சீனத்தில் ‘சொர்க்கத்தை ஊடுருவிப் பாயும் ஆறு’ என்ற பொருளில் தோங்தியான் ஹே என்றும் அழைப்பார்கள். ஸிச்சுவானுக்குள் புகாமல் எல்லையை ஒட்டி ஓடி யுன்னானுக்குள் புகும் இவ்வாற்றை அங்குள்ள மக்கள் நீண்ட ஆறு என்ற பொருளில் ஜின்ஷா ஜியாங் என்பார்கள். ‘பத்தாயிரம் லீ தொலைவு ஓடும் நீள்நதி’ என்றும் இதை அழைக்கிறார்கள். லீ என்பது முற்கால சீனத்தில் தூரத்தை அளக்க பயன்படுத்திய அளவீட்டுச் சொல். இது இன்றைக்கும் வரலாற்றுப் பதிவுகளின் வழி பரவலாகவே புழங்கப் படுகின்றது. கடலில் கலக்குமிடத்தில் வாழும் மக்களுக்கும் வெளிநாட்டினருக்கும் மட்டும் தான் இது யாங்சே. 
2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாற்றின் கரையோரங்களில் மனித வாழ்க்கை மற்றும் நடமாட்டங்கள் இருந்ததற்கான அடையாளங்களை வரலாறு காட்டுகிறது. என்பது தான் குறிப்பிடத் தக்கது. யாங்சே ஆற்றோரங்களில் ஏராளமான புதைபொருள் தலங்கள் அகழ்வாராய்ச்சியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு மிகவும் பேணவும் படுகின்றன. வூ மலையின் டாஸி கலாசாரமும் அதில் ஒன்று.  கண்டெடுக்கப்பட்ட புதை பொருட்களில் மீன்பிடி வலைகள் முக்கியமானவை. இவை கலாசார வேர் தேடலுக்குப் பெரிதும் உதவுகின்றன.
கடந்த ஒரு நூற்றாண்டில், யாங்சேயின் கரையோரங்களில் 5000 ஆண்டு வரை பழமையுடைய பாஷு,  ஜிங்ச்சூ, வூயி, லியாங்ஜூ ஆகிய பல கலாசாரங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களாக ஏராளமான பொருட்களும் ஆவணங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. யாங்சே ஆற்றோரப்பகுதிகளில் பல அகழ்வாய்வுத் தலங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானது வூ மலையின் டாஸி கலாசாரம். அழந்தெடுக்கப்பட்ட கருவிகள், வலை, மீன்வலை போன்ற பலவும் ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவி வருகின்றன.  கடக்கவே முடியாத அளவில் வேகங்கொண்டு ஓடும் யாங்சே நாடுகளிடையேயும் குறுநிலங்களிடையேயும் அரணாக விளங்கிய வரலாற்றுப் பதிவுகள் நிறையவே இருக்கின்றன. எண்ணற்ற போர்கள் ஆற்றில் நடந்திருக்கின்றன. கி.மு 208ல் நடந்த ‘செம்மலைகள்’ போர் அந்த நீர்வழியில் நடந்த போர்களில் முக்கியமாக இன்றைக்கும் கருதப்படுகிறது. சீனா 1912-1949 வரை நான்ஜிங்கில் தலைநகரை அமைத்தற்கு முக்கிய காரணமும் இதுவே. பல நூற்றாண்டுகளில் எட்டு முடியாட்சிகளைக் கண்ட பழமை மிகு நான்ஜிங் ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட போது சீரழிந்தாலும் இன்றைக்கு தொழில்நுட்பப் பங்களித்து வருவதுடன் வரலாற்றுச் சிறப்புகள் பல கொண்டதொரு தலமாகவும் விளங்குகிறது.

மிகுந்த உள்ளடங்கிய மலைப்பாங்காக இருக்கும் ஆற்றோர மேல்பகுதிகளில் திபெத்தியர்கள், யுன்னானின் நாஸி போன்ற சிறுபான்மையினர்கள் வாழ்கிறார்கள். மத்தியில் ஸிச்சுவான், ச்சோங்பிங் நிலப்பகுதிகள் மற்றும் ஹூபேய் சமவெளி இருக்கின்றன. அங்கே, பிரமாண்ட புத்தர், ஈமெய் மலை போன்றவை காணக்கூடியன. அந்தப்பகுதி ஊர்களின் காரம் மிகுந்த உணவுப் பழக்கம் பிரபலம். இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையும் பரபரப்பற்ற ஏகாந்தம் நிறைந்தது. வூஹன் ஏரிகளிலிருந்து கிடைக்கும் செழுமை நிறைந்த மண் இருப்பதால், சூழலே செழிப்புடன் இருக்கிறது. அதன் காரணமாக, இப்பகுதி ‘அரிசி, மீன் நிலம்’ என்றறியப் பெறுகிறது.  
பெருநகரங்களுக்கருகில் போக்குவரத்து நெரிசலும் மிக அதிகம். யாங்சே மிகவும் மாசுபட்டு வருகிறது. தொடர்ந்து கழிவுகள் கலந்து ஆறு கொள்ளும் மாற்றம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. 2000 ஆண்டில் மட்டும் 23.4 பில்லியன் டன் கழிவுகள் யாங்சேயில் கலந்திருக்கிறது. விவசாய மற்றும் மர உற்பத்தித் துறை சார்ந்த நடவடிக்கைகளும் யாங்சேயில் கண்டபடி மாசு கூடுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

“கிராமங்களையும் ஊர்களையும் மூழ்கடிக்கிறார்கள்”, என்று கோஷங்கள் எழுப்பிக் கொடி பிடித்தோரில் பலருக்கு 2-7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிட்டியது. மனித உரிமைகளுக்கெதிராக தண்டிக்கப் பட்டனரென்று எழுந்த அனைத்து எதிர்ப்புக் குரல்களையும் கடந்து 20,000 தொழிலாளர்கள் இடைவிடாமல் தொடர்ந்து செய்யும் வேலைகளால் 2009-2010ல் பணிகள் முழுமையடையும் நிலைக்கு வந்தன.
அணைகள் விலங்கினங்களின் புழங்குமிடத்தைக் குறுக்கிவிடுவதோடு அவற்றுக்கான உணவையும் கட்டுப்படுத்தி விடுவதால்,  யாங்சே ஆற்றுப்பகுதியில் இருக்கக் கூடிய பல்வேறு உயிரினங்கள் அழியும் அபாயத்தை நெருங்கியுள்ளன. உதாரணத்துக்கு, ‘பாய்ஜி டால்ஃபின்’களைச் சொல்லலாம். 100க்குக் குறைவாகவே எஞ்சியுள்ளனவாம்.  யாங்சேயின் முக்கிய அணை கட்டி முடிக்கும் போது அவையும் மிஞ்சாது என்று சூழியல் வல்லுனர்கள் மிகக் கவலைப்படுகிறார்கள்.       

ஆற்றில் தூர்வாறும் பணிகளும் இரசாயனங்கள் அகற்றும் பணிகளும் மும்முரமாக நடந்தேறும் சமீப ஆண்டுகளில் புதைபொருட்களையெல்லாம் மூழ்கி மறைந்து போய்விடப் போகிறதென்ற பயத்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் வேகவேகமாக அகழ்ந்தெடுக்கிறார்கள். ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்குவதற்கும் அரசாங்கத்துடன் ஏராளமாகப் போராட வேண்டியிருந்தது. தொல்பொருட்களைப் பாதுகாக்க அரசாங்கத்திடம் இருக்க வேண்டிய ஈடுபாடு இல்லாமலே இருந்ததில் கள்வர்களும் கொள்ளையர்களும் புதைபொருட்களின் மதிப்பு தெரியாமல் திருடிக் கொண்டு போனபடியிருக்கிறார்கள். 1996ல்  2000 ஆண்டு பழமை வாய்ந்த ஹான் முடியாட்சியின் ‘குரங்கு மரம்’ வெண்கலச்சிலை ந்யூயார்க்கில் 4 மில்லியன் டாலருக்கு ஏலம் போன போது சீனாவில் பலருக்குப் பேரதிர்ச்சி ஏற்பட்டது.

jeyanthisankar@gmail.com