‘நூல்தேட்டம்’ நூலகவியலாளர் என். செல்வராஜா!

'நூல்தேட்டம்' நூலகவியலாளர் என். செல்வராஜா!உலகெங்கும் பிரசுரமாகும் ஈழத்தவரின்; தமிழ் நூல்களைத் தேடிப் பதிவுசெய்யும் பணியை பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருபவர் நூலகவியலாளர் என்.செல்வராஜா. ஒரு தேசிய நூலகத்தின் கடமையை தன் இனத்தின் வரலாற்றுத் தேவைக்காகத் தன் தோளில் சுமந்து, நிறுவனரீதியான பொருளாதார உதவிகள் எவையுமின்றிச் செய்துவரும் செயல்வீரர். பிரபல எழுத்தாளரும், மூத்த நூலகவியலாளரும் பன்னூலாசிரியருமாக எம்மிடையே வலம்வருபவர் செல்வராஜா. 30க்கும் அதிகமான நூல்களைத் தமிழுலகிற்கு வழங்கிய போதிலும் இவர் தன்னை எழுத்தாளர் என்று கூறிக்கொள்வதில் கூச்சப்படுபவர். நூலகவியலாளராகவே நம் மத்தியில் வாழத்துணிந்தவர். இன்று ஈழத்து நூலகவியலாளர் என்றதும் அறிவுஜீவிகளின் சிந்தையில் உதிக்கும் முதல் பெயர் செல்வராஜாவினுடையதாகவே இருக்கும். நடராஜா-சிவபாக்கியம் தம்பதியினரின் கனிஷ்ட புதல்வராக 20.10.1954இல் பிறந்த இவர், நீர்கொழும்பு விவேகானந்த வித்தியாலயம் (பின்னாளில் விஜயரத்தினம் மகாவித்தியாலயம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது), நீர்கொழும்பு புனித மரியாள் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர்.

1970களில் இலங்கை நூலகச் சங்கத்தின் நூலகவியல், தகவல் விஞ்ஞானத்துறையில் டிப்ளோமா பயிற்சிபெற்ற இவர், சுன்னாகம் இராமநாதன் பெண்கள் கல்லூரி (மே 1978-ஏப்ரல் 1979), யாழ். மாவட்ட சர்வோதய நூலகம் (ஏப்ரல் 1979-ஜனவரி 1980) ஆகியவற்றில் பணியாற்றிய பின்னர், இலங்கை உள்ளுராட்சி அமைச்சின் நூலகர் பதவியை ஏற்று (பெப்ரவரி 1980-பெப்ரவரி 1981) திருக்கோணமலை மாவட்டத்திலும் பணியாற்றியுள்ளார்.

1981 பெப்ரவரியில் ஐக்கிய நாடுகள் சபையின் UNDP இன் கீழ் இந்தோனேசியாவுக்கு கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகச் சென்று, அங்குள்ள பண்டுங் மாநிலத்தில் கிராம நூலகத் திட்டமொன்றை வெற்றிகரமாக அறிமுகம் செய்துவைத்தார்.

1982இல் நாடு திரும்பிய பின்னர் இலங்கை சர்வோதய சிரமதானச் சங்கத்தின் யாழ். மாவட்ட மத்திய நூலகப் பொறுப்பாளராகப் பணியைத் தொடர்ந்து (மார்ச் 1982-நவம்பர் 1983 வரை) பன்னிரண்டு கிளை நூலகங்களை ருNநுளுஊழு திட்டத்தின் உதவியுடன் தீவகத்திலும், கிளிநொச்சியிலும் உருவாக்கி வழிநடத்தினார். 1983 முதல் யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகராகப் பதவியை ஏற்று டிசம்பர் 1989வரை கடமையாற்றினார். 1990 மே மாதத்தில் கொழும்புக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார். அங்கும் இனத்துவ ஆய்வுக்கான சர்வதேச நிறுவனம் (ஐவெநசயெவழையெட ஊநவெசந கழச நுவாniஉ ளுவரனநைள), இந்து சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சு, கொழும்புத் தமிழ்ச் சங்கம், ஆகியவற்றின் நூலகப் புனரமைப்பைப் பொறுப்பேற்று அக்டோபர் 1991 வரை அந்நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியிருந்தார்.

அக்டோபர் 1991 முதல் தனது குடும்பத்துடன் பிரித்தானியாவுக்குப் புலம்பெயர்ந்த இவர் அங்கு பிரித்தானிய தபால் சேவையில் இணைந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரகிறார். குடும்பச் சுமையுடன், முழுநேர அலுவலகப் பணியுடன், இலங்கை அரசின் தேசிய நூலகம் பெரும் நிதி ஒதுக்கீட்டுடனும் ஆளணியுடனும் செய்யவேண்டிய ஒரு பெரும்பணியைத் தனியொருவராகத் தன் தோள்களில் சுமந்து மேற்கொள்கிறார்.

இவரின் எழுத்துகளில் நூலகவியல், வெளியீட்டத்துறை, எழுத்தாளர்களின் வாழ்வும் பணியும், நூல் வெளியீட்டு நிகழ்ச்சிப் பதிவுகள் என்பன பிரதான இடத்தைப் பெறுவதை அவதானிக்கலாம். மூத்த நூலகர் என். செல்வராஜாவின் இலக்கியப்பணியில் இமயமாகத் திகழ்வது இவரால் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும் நூல்தேட்டம் தொகுப்புகளாகும்.

இலங்கையில் தமிழ் பேசும் எழுத்தாளர்களின் தமிழ் நூல்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பரவலாக வெளியிடப்பட்டு வந்தபோதிலும்கூட எந்தவொரு நாடும், நிறுவனமும் அவற்றைத் தொகுத்து ஆவணப்படுத்தும் நடவடிக்கையைச் செய்ய முன்வரவில்லை. இலங்கையின் தேசிய நூலகம் இத்தகைய பணியைச் சட்டபூர்வமாக மேற்கொண்டுவருகின்ற போதிலும்கூட தமிழ் நூல்களை ஆவணப்படுத்துவதில் அது போதிய அக்கறை காட்டவில்லை.

இந்நிலையில் தான் உருவாக்கிய அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் மூலம் ஈழத்து எழுத்தாளர்களின் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் பணியினை 1990இல் தொடங்கி இன்றுவரை எட்டுத் தொகுதிகளை நூல்தேட்டம் எனும் பெயரில் வெளியிட்டு சாதனை படைத்துள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் நூல்களென எட்டுத் தொகுதிகளிலும் எண்ணாயிரம் தமிழ் நூல்கள் இவரால் பதிவாக்கப்பட்டுள்ளன. இன்னும் இவரது தேடல் சளைக்காமல் தொடர்கின்றது.

அத்துடன் இலங்கையிலிருந்து தமிழ்மொழி மூலமாக நூலகவியல் சம்பந்தமாக வெளிவந்துள்ள ஒரே சஞ்சிகை நூலகவியல்: காலாண்டுச் சஞ்சிகையாகும். இந்தக் காலாண்டுச் சஞ்சிகையின் ஆசிரியரும், வெளியீட்டாளரும் செல்வராஜாவே ஆவார்.

என்.செல்வராஜாவின் பணிகளைக் கருத்திற்கொண்டு கனடாவில் தமிழர் தகவல் சஞ்சிகை வெளியீட்டு நிறுவனம் 2004ம் ஆண்டுக்கான தமிழர் தகவல் சிறப்பு விருதினையும், இலங்கையில் சிந்தனை வட்டம் 2005ம் ஆண்டுக்கான எழுத்தியல் வித்தகர் விருதினையும் வழங்கிக் கௌரவித்துள்ளன.

நூல்தேட்ட இணையத்தள முகவரி: http://noolthettam.com

தொடர்புகொள்ள:

N.Selvarajah,
48, Hallwicks Road, Luton, Bedfordshire, LU2 9BH, United Kingdom
Telephone: (0044) 01582 703786,
Mobile: 0781 7402704
E-mail: noolthettam.ns@gmail.com
website: http://noolthettam.com

http://noolthettam.com/about.asp