நூல் அறிமுகம்: ஆனாலும் திமிருதான் அவளுக்கு கவிதைத் தொகுதி பற்றிய ஒரு சிறப்புப் பார்வை

நூல் அறிமுகம்: ஆனாலும் திமிருதான் அவளுக்கு கவிதைத் தொகுதி பற்றிய ஒரு சிறப்புப் பார்வைஇலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்த காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எம்.எஸ். அப்துல் மஜீத் என்பவர். இவர் பெரும்பாலும் தனது கவிதைகளை மதியன்பன் என்ற புனைப்பெரிலேயே எழுதிவருகின்றார். காத்தான்குடி அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகத்தின் மூலம் 97 பக்கங்களில் 36 பக்கங்களை உள்ளடக்கியதாக  “ஆனாலும் திமிருதான் அவளுக்கு“  என்ற மகுடத்தில் அமைந்த தனது கன்னிக் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். இந்தத் தொகுதியிலுள்ள அனைத்துக் கவிதைகளும் ஏற்கனவே பத்திரிகைகள், வானொhலிகள், இணையத்தளம், முகநூல், மதியன்பனின் வலைப்பூ போன்றவற்றில் வெளிவந்த கவிதைகளாகக் காணப்படுகின்றன. 

தான் வாழுகின்ற சமூகத்தில் காணுகின்ற பிரச்சினைகளை கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்காமல் அதனை துணிவோடு யதார்த்தபூர்வமாக மக்கள் மயப்படுத்துவதே ஒரு கவிஞரின் தார்மீகப் பொறுப்பாகும் என்ற கூற்று கவிஞர் மதியன்பனுக்கும், அவரது கவிதைகளுக்கும் மிக மிகப் பொருந்திப் போகின்றது. ஏனெனில் இந்தத் தொகுதியில் உள்ள பெரும்பாலான கவிதைகள் இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் அடக்குமுறைகளை, அட்டூழியங்களை, அநியாயங்களைப் படம்பிடித்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளன.

 

எங்கோ ஒரு மூலையில் எதையுமே செய்ய முடியாமல் சமூக சிந்தனையோடு முடங்கிப் போய்க் கிடக்கும் அந்த நல்ல உள்ளங்களுக்காகவே தனது நூலை முற்போக்கு எழுத்தாளர் மதியன்பன் சமர்ப்பித்துள்ளார். இந்த நூலுக்கான அணிந்துரையை நிலாத் தெருவில் ஒரு உலா என்ற தலைப்பிட்டு கவிஞர் அஷ்ரப் ஷிஹாப்தீனும், மதிப்புரையை மலரின் இதழ்களாகிப் போன மதியன்பனின் கவிதைகள் என்ற தலைப்பிட்டு கவிஞர் ரீ.எல். ஜவ்பர்கானும், ஆசியுரையை மாற்றத்தை வேண்டி நிற்கும் மதியன்பன் கவிதைகள் என்ற தலைப்பிட்டு பொறியியலாளர் அப்துர் ரஹ்மானும்;, வெளியீட்டுரையை ஒரு தாயின் கன்னிப் பிரசவம் என்ற தலைப்பில் எம்.எல்.ஏ. அஸீஸ் அவர்களும், நூலின் பின்னட்டைக் குறிப்பை நூலாலாளர் பற்றி என்ற தலைப்பில் மாறன் ஆகியோரும் வழங்கியுள்ளனர்.

எண்பதுகளில் கவிதை இலக்கியத் துறைக்குள் நுழைந்தவர் கவிஞர் மதியன்பன். ஆனாலும் அண்மைக்காலம் வரை இவர் கவிதைத் தொகுதியொன்றை வெளிக்கொண்டுவர நாட்டம் காட்டாமலேயே இருந்து வந்துள்ளார். ஆயினும் இவரிடம் பல கவிதைத் தொகுதிகளை வெளியிடுவதற்கான பல கவிதைகள் குவிந்து கிடப்பதாக அறிய முடிந்தது. இனிவரும் காலங்களில் அவற்றை தொகுத்து பல காத்திரமான கவிதைத் தொகுதிகளை வெளியிடுவார் என நம்பலாம்.

“ஆனாலும் திமிருதான் அவளுக்கு“ என்ற இந்தத் தொகுதியில் அரசியல், ஆன்மீகம், போராட்டம், சுனாமி, தேர்தல், போதை, இயற்கை, நடைமுறைப் பிரச்சினைகள் போன்ற விடயங்களை உள்ளடக்கியதான உணர்வுபூர்வமான பல கவிதைகள் விரவிக் காணப்படுகின்றன. குறிப்பாக சமகாலத்தில் நடக்கின்ற இடர்களை இயம்புவதாகவே இத்தொகுதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி இவரது ஒரு சில கவிதைகளை ரசனைக்காக எடுத்துக்கொள்வோம்.

வாழ்வுக்கும்  சாவுக்கும் இடைப்பட்டதே வாழ்க்கை. அதற்குள் எத்தனையோ போராட்டங்கள், கழுத்தறுப்புகள், காட்டிக்கொடுப்புகள், வஞ்சனைகள் என்று மனிதன் எதை எதையோவெல்லாம் கற்றுக்கொண்டு பிறருக்கு அநியாயம் செய்கின்றான். வாழ்கின்ற காலத்தில் யாரையும் மதிக்காமல் தன்னைத்தானே பெருமை பேசிக்கொள்ளும் பலர் இருக்கின்றார். நாம் வாழ்கின்றபோது யாரை எல்லாம் சந்தோசமாக சிரிக்க வைத்தோமோ அவர்கள்தான் நாளை நாம் இறந்தால் நமக்காக அழுவார்கள். அதல்லாமல் அவர்களை இப்போது கண்ணீர் சிந்த வைத்தால் எம் இறப்புக்கு பின் சந்தோசப்படுவார்கள். இன்று பட்டம், பதவி, பணம், அந்தஸ்து எல்லாம் இருந்தாலும் மரணித்த பின் மையித் (சடலம்) என்ற பெயரே மனிதனுக்கு எஞ்சுகின்றது. இவ்வாறான வாழ்க்கைத் தத்துவத்தை விலகிச் செல்லும் விட்டில் பூச்சிகள் (பக்கம் 01) என்ற கவிதையினூடாக கவிஞர் சொல்லியிருக்கின்றார்.

விளக்கு ஒளியிழக்கும் போது விலகிச் செல்லும் விட்டில்களாய் வந்தவர்கள் விசாரித்து விட்டுப் போகிறார்கள்.. உறவுகள் மட்டும் அங்கே ஒட்டிக் கிடக்கிறது அவனை அடக்கி விட்டுச் செல்வதில் அத்தனை அக்கறை அவர்களுக்கு.. இப்போதெல்லாம் அவனுக்கு பெயர்கூட சொந்தமில்லை மையித் மரக்கட்டை என்றாயிற்று..

விமானமும் விஞ்ஞானமும் (பக்கம் 15) என்ற கவிதை காணாமல் போன மலேசியா விமானத்தைப் பற்றியதாக எழுதப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், விஞ்ஞானம் என்று உலகம் வியக்கும் வித்தைகளின் நடுவேயும் ஒரு விமானம் காணமல்போய் உலகத்தவர்களை அதிசயிக்க வைத்தபோது எழுதப்பட்ட கவிதை இது. எத்தனையோ தினங்களாகத் தேடியும் அதுபற்றிய தகவல்களை அறியாமல் உலகமே அதிசயத்தில் மூழ்கியிருந்ததை நாம் மறந்துவிட முடியாது.

விமானம் விழுந்ததா.. கடத்தலா.. காற்றில் பறக்கிறதா..? இன்னும் தெரியாமல் வியப்பில் கிடக்கிறது உலகம்.. அதி உயர அண்டனாவையும், டவரையும் நம்பிய அமெரிக்கா கூட இப்போது வெம்பிப்போய் விழி பிதுங்கி நிற்கிறது.. சாட்டலைட்டில் சாதித்தவர்களெல்லாம் இப்போது சாத்திர காரர்களிடம் சரணடைந்து கிடக்கிறார்கள்.. தேடும் பணிகள் கூட இனிமேல் தேவையற்றுப் போகலாம்.. ஓடும் விமானங்களும் தாமாகவே ஓய்வெடுத்துக் கொள்ளலாம்..

சேமிப்பும் புத்தகமும் (பக்கம் 24) என்ற கவிதையை வாசித்துப் போகையில் பணத்தை சேமித்தல் என்ற கற்பனையே ஏற்பட்டது. ஆனால் இறுதியில்தான் அது மறுமை நாளுக்கான நன்மையை சேகரிக்கும் விடயம் பற்றி எழுதப்பட்டதாக அறிய முடிந்தது. அந்தளவுக்கு வாழ்க்கையோடு ஒப்பிட்டு இக்கவிதை எழுதப்பட்டிருக்கின்றமை கவிஞரின் திறமையைப் பறைசாற்றுகின்றது.

நிறையவே சேமித்திருக்கிறேன்.. ஆனால் இருப்பு எவ்வளவு என்று இன்னும் தெரியவில்லை.. அதிகாரிகள் கூட இன்னும் அறிவிக்கவில்லை.. வைப்புப் புத்தகத்தை வழங்கவுமில்லை.. இரவு பகலாக உழைத்தே இத்தனையும் சேமித்திருக்கிறேன்.. அதற்காக தூக்கமிழந்தேன்.. சாப்பாட்டைத் தவிர்த்தேன்..

இந்தக் கவிதையின் இறுதிப் பகுதி இவ்வாறு அமைந்துள்ளது.

மறுமைநாள் மஹ்சரில் எனக்கு வைப்புப் புத்தகம் வழங்கப்படும்.. சேமிப்பையும் சேமிக்கச் சொன்னவனையும் என்னால் காணமுடியும்..

பெட்டைகளின் உடுப்பும் பெடியன்களின் கடுப்பும் (பக்கம் 35) என்ற கவிதை நகைச்சுவை பாணியில் எழுதப்பட்டிருக்கின்றது. இக்கவிதை இன்றைய இளம் பெண்களின் போக்கை நன்கு சுட்டிக் காட்டுகின்றது. பெண் சுதந்திரத்துக்கு உதாரணமாக ஆடைக் குறைப்பைத்தான் சில பெண்கள் கூறுகின்றார்களோ என்று ஐயப்படுமளவுக்கு அவர்களின் நடைமுறை வாழ்க்கை அமைந்திருக்கின்றது. கடைத் தெருக்களில், பூங்காக்களில், பஸ்களில் எல்லாம் குறித்த சில பெண்களை அருவருப்புடன் நோக்கும் நிலையும், ஆபாசத்துடன் ரசிக்கும் நிலையும் காணப்படுகின்றது.

பெட்டைகளின் இடுப்பும் அதுகள் போடுற உடுப்பும் எங்கிட பொடியன்மார கடுப்பேத்துதாம்.. நாகரிகம் மிஞ்சிப் போய் அவங்கிட உடுப்பெல்லாம் இப்போ நடுவால பிஞ்சி போச்சுதாம்.. இடுப்புத் தெரிய பொம்புள கட்டுற புடைவையைப் பார்த்து இளசுகள் இடைத்தேர்தல் நடத்துதாம்.. இளைஞர்களின் இடுப்பின் மடிப்போடு இறங்கிப் போச்சுதாம்.. பெட்டைகளின் உடுப்பு குறையக் குறைய பெடியங்கள் மனசு நிறைஞ்சு போகுதாம்..

போதையின் தீதைக் கேளாய் (பக்கம் 61) என்ற கவிதையும் சிந்திக்க வைக்கும் ஒரு கவிதையாகும். அன்பு, ஞானம், அறிவு போன்ற எத்தனையோ விடங்களை கற்று சிறப்பாக வாழ்வதை விட்டுவிட்டு போதை தரும் இழிவான மதுவிற்குள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் எத்தனைப் பேர்? கருத்துக் கணிப்புகளிலும் குடியை மறந்தவர்களின் தொகை காலத்துக்குக் காலம் குறைவதாகத் தெரிவதில்லை. எத்தனை விளம்பரங்கள், அறிவுறுத்தல்கள் செய்தாலும் குடிக்கின்ற கூட்டம் குடித்துக் கொண்டே தான் இருக்கின்றது. மதுவை மறந்து குடிக்க வேண்டியவை எவை என்பதை கீழுள்ள கவிதை வரிகள் சுட்டிக் காட்டுகின்றது.

நான் சொல்கிறேன் குடி.. குடித்துவிட்டுத்தானே எழுதுகிறது பேனா மையை.. குடித்துவிட்டுத்தானே மழை பொழிகிறது மேகம் நீரை.. குடித்துவிட்டுத்தானே உயிர் வாழ்கிறது நுளம்பு குருதியை.. இப்படி எல்லாமே குடித்திருக்க நீ மட்டுமேன் குடிக்கக் கூடாது, குடி.. அன்பெனும் மதுவைக் குடி.. அறிவெனும் மதுவைக் குடி.. ஆன்மீகம் எனும் ஞானத்தைக் குடி.. இப்படி அழகான குடிகள் அணிவகுத்திருக்க எதற்காகத் தேர்ந்தெடுத்தாய் இந்த இழிவு தரும் குடியை..

சொர்க்கத்துக்கு சொந்தக்காரி றிஸானா (பக்கம் 82) என்ற கவிதை சவுதிக்கப் போய் தன்னுயிரை இழந்த றிஸானா நபீக்கின் மறைவையொட்டி எழுதப்பட்டிருக்கின்றது. றிஸானாவுக்கான மரண தண்டனையைக் கேட்டு உலகே ஸ்தம்பித்து நின்றது. எல்லா உள்ளங்களும் அவளுக்காகப் பிரார்த்தித்தது. வறுமையை போக்க வெளிநாட்டுக்குச் சென்று அங்கு நடந்த சம்பவத்தால் றிஸானாவின் தலைவிதியே மாறிப்போனதை உலகம் வெகுசீக்கிரம் மறந்துதான்விட்டது. இன்றும் நம் நாட்டில் எத்தனையோ றிஸானாக்கள் போலி பாஸ்போட்டுடன் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது அவர்களின் அறியாமையா என்றுகூட எண்ணத் தோன்றுகின்றது. றிஸானாவுக்காக கவிஞரின் பேனா இவ்வாறு கண்ணீர் சிந்தியிருக்கின்றது.

அழக்கூட முடியவில்லை அடைத்துப் போகிறது நெஞ்சு.. உள்ளத்தில் உறைந்தவளே றிஸானா! உன் மரணச் செய்தி இன்னும் மரணித்துப் போகவில்லை எங்களை விட்டும்! சுவனத்துக் குயிலே உன் விடுதலைக்காய் எத்தனை உள்ளங்கள் இரவு பகல் அழுதன தெரியுமா? எல்லாம் முடிந்துவிட்டது.. இறைவன் அழைத்துக் கொண்டான் உன்னை என்று நம்புகிறோம் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம்.. றிஸானா! செல்லமாய் விளையாடும் சின்ன வயதில் சிறை சென்ற வண்ண மொட்டு நீ.. 

இனவெறியர்கள் ஆடும் ஆட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் தமது உயிர்களை இழக்கின்றனர். மதங்கள் சமாதானத்தை போதித்துக் கொண்டிருக்கையில், சமாதானத்தை வேண்டி போர் நடத்தும் சில மூடர்களினால் ஒரு நாட்டின் வரலாறே சிவப்பாக மாறியிருக்கின்றது. யுத்தம், சண்டை, என்று தொடர்ந்தால் அது உலகத்தின் அமைதிக்கே பங்கம் விளைவிக்கின்றதை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும் குறித்த நாடுகளுக்கிடையில் போராட்டங்கள் நிகழும்போது மற்ற நாடுகள் மௌனித்துவிடுகின்ற துரதிஷ்ட நிலைமையும் கண்கூடாக நடந்துவரும் பேருண்மை எனலாம். உன்னால் மட்டும் முடியும் என்பதால் (பக்கம் 89) என்ற கவிதை வரிகள் அதை கீழுள்ளவாறு கூறியிருக்கின்றன.

கொடிய பருந்திடம் மாட்டிக்கொண்ட கோழிக் குஞ்சுகளாய் இன்று காஸா முஸ்லிம்கள் கருவறுக்கப்படுகிறார்கள்.. இஸ்ரேல் நாய்களின் இரத்தப் பசிக்கு இஸ்லாமியக் குழந்தைகள் இரையாக்கப்படுகின்றனர்.. சொந்த மண்ணிலே அகதிகாய் இப்போது நொந்து போய்க் கிடக்கிறது நம் சொந்தங்கள்.. 

நடைமுறையில் நிகழ்கின்ற சம்பவங்ளை கருவாகக் கொண்டு கவிதை படைக்கின்றார் கவிஞர் மதியன்பன். சமகாலத்தின் நடக்கின்ற விடயங்கள் அவர் பேனைக்குள் புகுந்து சமூகப் பற்றுமிக்க கவிதையாக வெளிவருகின்றன. பலரும் பேசத் தயங்கும் சில விடயங்களையும் மிகத் துணிச்சலாக எழுத்தயிருக்கின்றமை கவிஞரின் மனத் தைரியத்துக்கு எடுத்துக்காட்டாகும். யதார்த்தவாதியாக தன்னை கவிதைகளுக்குகூடாக இனங்காட்டிக் கொள்ளும் கவிஞரின் படைப்புக்கள் எதிர்காலத்திலும் நூலுருவம் பெற்று வெளிவர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்!!!

நூல் – ஆனாலும் திமிருதான் அவளுக்கு
நூல் வகை – கவிதை
நூலாசிரியர் – காத்தான்குடி மதியன்பன்
வெளியீடு – அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகம்
விலை – 300 ரூபாய்

poetrimza@gmail.com