நூல் அறிமுகம்: ஒப்பனைகள் கலைவதற்கே நாவல் விமர்சனம்

நூல் அறிமுகம்: ஒப்பனைகள் கலைவதற்கே நாவல் - விமர்சனம் - கல்பனாகடந்த ஜனவரி 2014ல் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் காவ்யா பதிப்பகம் வெளியிட்ட ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ என்ற நாவலை கையிலெடுத்தபோது என்ன பெரியதாக / புதியதாக இருந்துவிடப் போகிறது மற்ற நாவல்களைப்போல காதல், திகில் கதையாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணி வாசிப்பதற்கு சற்று அலட்சியம் கொண்டேன். ஆனால், ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ வாசித்த பிறகு தான் தாமதம் கொண்டதற்கு வருந்தினேன். தினம் தினம் எத்தனையோ காதல்கள் நம்மைச் சுற்றிப் பார்க்கிறோம். பெரும்பாலும் அதற்கெல்லாம் ‘அட!!’  என்போம். வியப்போம். எக்ஸைட் ஆவோம். ஆனால் இத்தகைய காதல்களுக்குப் பின்னால் இப்படி ஒரு கோணம் இருக்குமென்று நினைத்ததே இல்லை. பெண்கள் தங்களைப் பற்றியே அறியாத பல விஷயங்களை அறிந்து அதை சமூக நலத்தின் கோணத்தில் ஆராய்ந்து,சமூக நலனுக்கு பொருந்தாதவைகளை இனம் கண்டு நாவலில் சுட்டிக்காட்டியிருக்கிறார் எழுத்தாளர். இந்த நாவலில் வரும் ஆண் – பெண் குறித்த வரிகளில் பலவற்றை வேறெந்த நாவலிலும் படித்ததில்லை. சமையலில் கூட, அதிகமாக பயன்படுத்தினால், உப்பு கரிக்கும். குறைவாகப் பயன்படுத்தினால் ருசி இருக்காது. ஆக எந்த ஒரு பொருளின் பயன்பாட்டிற்கும் மிக நுண்ணியமாக ஒரு அளவீடு இருக்கிறது. இருபது வருடங்கள் முன்பு வரை  உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்பட்ட பெண் இனம், கடந்த பதினைந்து ஆண்டுகளில் பெற்றிருக்கும் சுதந்திரத்தின் உண்மையான அளவீடு என்ன என்பதை குறிப்பாக மஞ்சு என்கிற கதாபாத்திரம், ரவி என்கிற கதாபாத்திரத்திடமிருந்து விலகிச் செல்லும் இடத்தின் மூலம் புரியவைக்கிறார் எழுத்தாளர்.

முடிச்சு என்ற இரண்டாவது நாவல் இளைஞர்களையும் அவர்களின் தற்போதைய வாழ்க்கை  நடைமுறைகளைப் பற்றியும் இந்த சமூகத்தில் மறைந்து இருக்கும் உண்மைகளை அவிழ்த்து எறிந்திருக்கிறார் எழுத்தாளர். ஒரே கல்லூரியில் ஒன்றாகப் படிக்கும் இரு தோழிகள் இளவஞ்சி மற்றும் மது . இளமை கூட்டமான மதன் திலீப், வினீத் இவர்களுக்கு இடையே நடக்கும் விஷயங்களை படிக்கும்போது இக்காலத்து இளைஞர்களின் வாழ்க்கையில் உள்ள புதிர்கள் அனைத்தும் புரிய வருகிறது. இளமை பரவும் இக்காலத்தில் அதற்குள் இருக்கும் ஆசைகளும் பெண்களை உண்மையை அறிய விடாதவாறு தடுக்கிறது. பொதுவாகவே பாசத்திற்கும், காதலுக்கும், தங்களுக்கென ஒரு பாதுகாப்பிற்கும் ஏங்குபவர்கள் தான் பெண்கள். இவை அனைத்தும் கிடைக்கும் இடம் உண்மையானதா, சரியானதா என்று ஆராயாமல் தடுமாறுகிறோம்.. சரி தவறு எது என்று அறியாமல் தவறான பாதையினை எடுத்துப் பின் வருந்துகிறோம்.

அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி பெண்கள், தன் வாழ்க்கை முழுவதும் உடன் துணையாக வரும் துணையினை தேர்ந்தெடுப்பதில் எப்படி குழப்பம் வருகிறது என்பதை மது தன்னைப் போலவே இருக்கும் தன்னைப் போலவே யோசிக்கும் மதனிடம் நட்பு கொள்ளாமல் தன்னை ஏமாற்ற நினைத்து மதுவுக்கு ஏற்றார்போல வெளி வேஷம் கொண்டு  இருக்கும் ரகுவிடன் நட்பு கொண்டு ஆதலாம் ஏற்படும் இன்னல்களை முடிச்சின் மூலமாய் நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர்.

தங்களுக்கு வேண்டும் குணாதிசயங்கள் உள்ள ஆண்கள் எத்தகைய‌ இயல்புடையவர்களாக இருப்பார்கள் என்கிற சிந்தனை அற்று  தாங்கள் தேர்ந்தெடுக்கும் ஆண்களிடம் தங்களின் விருப்பமான குணாதிசயங்களை எதிர்பார்க்கும் தன்மையே கூட “தீவிர சிந்தனையை” புறக்கணிக்கும் பெண்மையின் இயல்பினால் விளைவதுதான் என்பதை பெண்மை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை விதைத்திருக்கிறார் ராம்.

மொத்தத்தில் , இன்றைய இளைய சமூகத்தை, இதுவரை சொல்லப்படாத கோணத்தில் புரியவைக்கிறது ராம்பிரசாத்தின் ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ நாவல்.

அனுப்பியவர்: ramprasath.ram@googlemail.com