நூல் அறிமுகம்: “கூடுகள் சிதைந்தபோது” – ஒரு புதிய பார்வை

1_koodukal_sithainthapothu.jpg - 12.47 Kbமுனைவர் மனோன்மணி சண்முகதாஸ்- 14.35 Kbவாசிப்பு மனிதனைச் சீர்மியம் செய்யும். ஒரு நூலை நான் அண்மையில் வாசித்தபோது இக்கருத்து எனக்குத் தெளிவாகிற்று. தமிழ் இலக்கியங்களின் ஆக்கத்தில் சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தோன்றி நீண்ட காலமாகிவிட்டது. உரைநடை இலக்கியம் என்பதால் சிறுகதையைத் தமிழ் அறிந்தவர் எல்லோருமே படிக்க முடியும். சிறுகதையை நாம் படித்து முடித்த பின்னர் அது எம் உள்ளத்திலே ஓர் எண்ணத்தைத் தோற்றுவிக்குமானால் அது ஒரு சிறந்த சிறுகதை என்பதை உணரமுடிகிறது. அத்தகைய எண்ணத்தை அண்மையில் நான் படித்த சிறுகதைத் தொகுப்பின் மூலம் பெற்றேன். அகில் என்னும் புலம்பெயர்ந்த இளம் எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பு “கூடுகள் சிதைந்தபோது” என்ற பெயரில் 2011ல் வெளியிடப்பட்டது. ஆறு மாதங்களில் இரண்டாவது பதிப்பும் வெளியிடப்பட்டது. இது வாசகரிடையே இச்சிறுகதைத் தொகுப்பின் தேவையை நிறைவு செய்துள்ளது. புலம்பெயர் எழுத்து என்ற நிலையில் மட்டுமன்றி இளம் எழுத்தாளரின் ஆக்கம் என்ற நிலையில் தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் நான் என் பார்வையைச் சற்று ஆழமாகவே பதித்தேன். 14 சிறுகதைகள். அவற்றில் இரண்டு 2008ல் எழுதப்பட்டவை. ஒன்று 2009ல் எழுதப்பட்டது. ஒன்பது 2010ல் எழுதப்பட்டவை. இரண்டு 2011ல் எழுதப்பட்டவை. இச்செய்தியைத் தொகுப்பே பதிவு செய்துள்ளது.

 கதைகளைப் பற்றிய அகிலின் குறிப்பு என் பார்வைக்கு ஒரு பரப்பளவைச் சுட்டிக்காட்டியது.

“சமகால வாழ்வில் என்னைப் பாதித்த சம்பவங்கள்ää நான் எதிர்கொண்ட பிரச்சனைகள்ää புலம்பெயர்வாழ்வில் என்னைச் சூழ இருக்கின்ற மாந்தர்கள்ää அவர்களுடைய சங்கடங்கள்… இவைகளே என் கதைகள்”

சிறுகதையின் களமும் கருவும் என்னை ஒரு சமகாலம் பற்றிய நினைவு அலைகளிடையே நீந்த வைத்தன. அதனால் சில கதைகளில் நானும் ஒரு தோன்றாத பாத்திரமாக இருப்பதாக உணர்ந்தேன். என் எண்ணம் அகிலின் சிறுகதைகள் எல்லாவற்றிலும் செறிந்திருப்பது என்னை வியப்புக்குள்ளாக்கியது.

இலக்கியம் மனித வாழ்வியலைப் பதிவுசெய்யும் இலக்கு உடையதென்பர். மனித வாழ்வியலைச் சீர்மியம் செய்யும் பணியையும் இலக்கியம் தன்னகத்தே கொண்டது. சமகால நிகழ்வுகளை மட்டும் பதிவு செய்யாமல் அவற்றிடையே காலத்தின் தேவையையும் மறைமுகமாக உணர்த்திச் செல்லும் ஆற்றல் எழுத்தாளனுக்கு உண்டு. அத்தகைய ஒரு பணியை அகிலும் செய்துள்ளார்.

பெண்களின் பொழுது போக்கிற்காக என்ற நிலையில் முன்னர் சில வார இதழ்கள் வெளிவந்தன. வெளியுலகப் பணிகளிலே தமிழ்ப் பெண்கள் பங்கேற்காமல் வீட்டுப்பணியை மட்டும் மேற்கொண்டிருந்த காலமது. தமது வெளியுலகம் பற்றிய நடப்புகளை வார இதழ்களில் மட்டுமே காணும் நிலை. தொலைபேசிää  தொலைக்காட்சியின் பயன்பாடு அற்ற காலம். வானொலி மட்டும் குரல் கொடுத்துக் கொண்டிருந்த காலம். ஆனால் இன்று தமிழ்ப்பெண்களின் வாழ்வியல் பெரிதும் மாற்றடைந்துவிட்டது. ஆணுக்குச் சரிநிகர் சமானமாக வாழ்வும் இந்த நாட்டிலே வளர்ச்சி நிலையைப் பெண்கள் அடைந்துவிட்டார்கள்.

இந்த மாற்றமான வளர்ச்சிப்போக்கில் ‘புலம்பெயர்வு’ என்னும் காலத்தின் கட்டாயம் ஈழத்துப் பெண்களின் வாழ்வியலில் எவ்வாறு உள்வாங்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்கு அகிலின் கதைகள் ஒரு புதிய வாயிலாக அமைந்துள்ளது. இதனை நான் உணர்கிறேன். அதனை விளக்கிக் கூறுவதால் எல்லோரும் உணரவாய்ப்பு உண்டாகும்.

14 சிறுகதைகளிலும் பேசப்படும் பெண்மை ஒரு அடிப்படையான கருத்தைக் கொண்டுள்ளது. மனைவாழ்க்கை என்ற தமிழர் பண்பாட்டு வாழ்வியலில் பெண்ணின் பங்களிப்பு எத்தகையது என்பதை மறைமுகமாக வலியுறுத்தும் சீர்மியம் எல்லாக்கதைகளிலும் விரவியுள்ளது. மூன்று தலைமுறைப் பெண்களின் நிலையைப் ‘புலம்பெயர்வு’ என்னும் எதிர்பாராத நிகழ்வு எப்படிப் பாதித்துள்ளது. என்பதை இத்தொகுப்பு சிறப்பாகவே பதிவு செய்துள்ளது. அக்கதைகளில் ஒரு கதை ‘உறுத்தல்’ எனத்தலைப்பிடப்பட்ட கதை. மிகச் சிறப்பாக ஒரு தலைமுறைக்கான சீர்மியத்தைச் செய்துள்ளது. அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்க எண்ணிய மகன் மனம் மாறும் பாங்கு. ஒரு சிறுமியின் சொற்கள் மகன் மனத்தை மாற்றும் என்ற நம்பிக்கை. தன்னுடைய குழந்தை தன்னை எவ்வாறு கணிப்பிடுகிறது என்ற தெளிவு. அகிலின் மொழிநடை மிக அமைதியாக குழந்தை மொழியில் ஒரு விழிப்புணர்வைச் சட்டென ஏற்படுத்துகிறது. பெரியவர்கள் அமைதியாக இருக்கும் போது பிரியா கேட்கிறாள்.

“அப்பம்மா! அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உங்களை மாதிரி வயசான பிறகு நானும் அவையளை இங்கைதான் கொண்டு வந்து சேர்க்க வேணும் என்ன?”

இந்தக்கேள்வி முதியவளான அப்பம்மாவிடம் கேட்கப்படுகிறது. அது ஒரு நெஞ்சத்தை வருடும் நிலை. மகனின் செயலால் மனம் நொந்த தாயின் நெஞ்சத்தை உணர்ந்த தாய்மைப் பண்பு. தந்தையின் செயலை அவர்வழி நின்று செயற்படுத்த வேண்டுமா என்ற கேள்வி. இந்த உணர்வுநிலை ஆசிரியர் சொல்ல வந்த செய்தி. ஆனால் அதை அவர் பிரியா என்ற பெண்குழந்தையின் எண்ணமாக வெளிப்படுத்தியிருப்பது ஒரு புதிய வாயிலைத் திறந்துவிட்டுள்ளது. புலம்பெயர்நாட்டின் வாழ்வியல் மாற்றங்களை மூன்றாவது தலைமுறை எப்படி அணுக உள்ளது என்பதையும் மரபான தமிழரின் பண்பட்ட வாழ்வியலை மறந்தவர்களை நெறிப்படுத்தப் பெண்மையின் தாய்மைக்குணங்கள் தான் துணை நிற்கும் என்பதையும் அகில் எண்ணியுள்ளார்.

நூலாசிரியர் அகில்இதனை மேலும் விளக்க ஏனைய கதைகளில் வரும் பெண்மைச் சித்தரிப்புகள் சான்றாக உள்ளன. சாமினிää விசாலாட்சிää சுமனாää பூரணம் மாமிää அம்மாää ஆனந்திää கௌரிää சசிää சாந்தி எனப் பலரைக் கதைகளில் உலாவவிட்டுள்ளார். புலம்பெயர்ந்த நாட்டில் தமிழர் பண்பாடு மாற்றமடைவதையே எல்லோரும் எண்ணிக்குறை கூறும் இக்காலகட்டத்தில் அகில் ஒரு நெறிப்படுத்தலைத் தனது சிறுகதைகள் ஊடாகச் செய்துள்ளார். தமிழர் வாழ்வியலில் வீட்டுவாழ்க்கையின் பங்கு எத்தகையது என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறார். சூழ்நிலை மாற்றம் மனைவாழ்க்கையைப் பாதிக்காத ஒரு பயிற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சியைப் பெண்மையின் இரு வடிவங்களான தாயும் மனைவியும் அளிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்பதை அகில் உள்ளுறையாக அமைத்துள்ளார். கூடுகள் என அவர் கூறுவது மனை வாழ்க்கையே. புலம்பெயர்ந்து சென்ற போதும் மனை ஒன்று தேவை என்பதை உணர்ந்த தமிழர் அதை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த மனையில் வாழும் பண்பட்ட வாழ்க்கையை மறந்து விட்டனர். பண்பட்ட வாழ்க்கை நடைமுறைகளைப் பயிற்றிய பெண்மையின் பங்கும் ஆண்மையின் இணையும் அகிலின் சிறுகதைகளில் சிறப்பாகச் சித்தரிக்கபட்டுள்ளன. கண்மணியும் வெள்ளையனும் இதற்கு நல்ல குறியீடுகள். ‘புலம்பெயர் இலக்கியம்’ என்ற புதிய இலக்கியப்பரப்பில் சிறுகதை இலக்கியம் பல பண்பாட்டுப் பதிவுகளைச் செய்துள்ளது. தாயக நினைவுகளையும் புலம்பெயர் நாட்டு வாழ்வையும்  காலம் அழித்துவிடாமல் எழுத்தில் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டவர்களில் அகில் ஒருவர் என்ற கணிப்புக்கு அப்பால் அவரைப் பற்றிக் கூறுவதானால் அது வருமாறு அமையும்.

“தமிழர் பண்பாடு தளம்பும் நிலையை இனம்காட்டும் இளைய எழுத்தாளர்களில் அகிலின் எழுத்து ஒரு புதிய ஆற்றுப்படுத்தலையும் செய்ய முனைகிறது.”

‘பதிவுகளுக்கு’ அனுப்பியவர்: editor@tamilauthors.com