நூல் அறிமுகம்: பவானியின் ‘சில கணங்கள்’ கவிதைத் தொகுப்புப் பற்றி…

பெண் கவிஞர்களிடம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல்வேறு தளங்களில் சிந்தனைகள் பரிணமிக்கின்றன. கருத்தின் மீது ஆத்மா போய் உட்காந்து கொண்டு மனிதனின் மனதை விசாலிக்கும் ஒரு அழகியற்கலையாகக் கவிதையை என்னால் பார்க்க முடிகிறது. கவிதை என்பது எந்த வகைமைக்குள்ளும் அடங்காத உணர்வாக எண்ணுகின்றேன். கவிதையை வாழ்க்கையின் அனுபவங்கள் என்று வகுத்துக்கொண்டாலும் மனம் நிறைய சமூகத்தின்மீது பேரன்பு கொண்டவர்களால்தான் கவிதைகளைப் படைத்துவிட முடியும் என்று கருதுகின்றேன். கவிதை ஒரு பயணம். அந்த வகையில் பவானியின் ‘சில கணங்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு ‘கால ஓட்டத்தில் கிறுக்கி வைத்திருந்ததை தொகுப்பாக்கியிருக்கிறேன்’ என்கிறார் பவானி. ஈழத்தில் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பவானி சற்குணசெல்வம் நெதர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார். இலங்கையில் விவசாய விஞ்ஞானத்துறையில் பட்டம்பெற்று அங்கு விரிவுரையாளராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்ட பவானி நெதர்லாந்துக்கு வந்த பின்னர்; டச்சு மொழியிலும் ஆளுமை பெற்று மொழிபெயர்ப்பாளராகச் செயற்பட்டு வருபவர். ஈழத்தின் பிரபல கவிஞர் சேரனின் கவிதைகள் சிலவற்றை தெரிந்தெடுத்து ‘கடலின் கதை’ , ‘அன்பு திகட்டாது’ போன்ற நூல்களை டச்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்.

‘சில கணங்கள்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பில் எண்பது கவிதைகள் எண்பத்தியேழு பக்கங்களில் அடக்கமான அழகான நூலாக வெளிவந்திருக்கின்றன. ஒவ்வொரு கவிதைக்கும் பவானி தான் எண்ணுவது போன்ற புகைப்படங்களுடன் இணைத்திருப்பது வாசிக்கத்தூண்டும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

முகவரி என்ற கவிதைக்குள்(பக்37) கருத்துக்களைத் தத்தளிக்கும் வாழ்வின் நிலைப்பாட்டை சித்தரித்துப் பயணிக்கிறார் பவானி..

வீடு செல்வும் முடியாமல்
வதிவிடமும் இல்லாமல்
நடுத்தெருவில் தத்தளிப்பு
கடிதங்கள் சென்றடைய
முகவரிகள் இல்லை
கடிதங்கள் வந்தடையும்

முகவரிகள் இல்லை என்று தொடர்கின்ற பவானியின் கவிதை   

கல்லறைகளும் மௌனிக்க
தொடர்கிறது என் பயணம்… என்று முடிக்கிறார்

பவானி. வாழ்க்கையைத் தரிக்கின்ற கவிஞர்களின் இவ்வகையான போக்கு, தத்தளிப்புகள் ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்துவிடுகின்றன.

தனிமையை ருசிக்காமல் கவிஞர்களால் எழுதமுடியாது. என் அம்மா, பெண், தனிமை, ஆணும் பெண்ணும் சீதனம் போன்ற கவிதைகள் பெண்ணியச் சிந்தனையோடு பெண்ணின் மனக் குமுறல்களை வெளிப்படுத்தம் கீறல்களாகப் பார்க்க
முடிகின்றது.

பொதுவாக மனது அன்பாக இருந்தால்தானே சிரிப்பு வரும். அது அடுத்தவர்களையும் தொற்றக் கூடியது. என் மொழி, என்கடவுள், என் ஆசான், என் அப்பா, என் அம்மா, என் நினைவுகளில் என்று தனதாக வரித்து தலைப்பிட்டிருப்பது சிறப்பானவை. இலகுவான மொழி நடையில் அனுபவங்களைச் செதுக்குவது அருமையாக உள்ளது, நினைவுகளோடு உருக்கமும் இழையோடுவது கவிதையின் அழகைக் கூட்டுகின்றது. சொற்கள் சிந்திக்க வைக்கிறது.

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி விடுதலைக்கான சிந்தனயை எல்லாத் தளங்களங்களிலிருந்தும் மக்களிடையே கொண்டு வந்து குவிக்கிறது. பெண் எப்போதும் பிறரைச் சார்ந்தே வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றாள். குடும்ப அமைப்பு புரையோடிப்போய் இருப்பினும் அதன் கட்டமைப்பிலிருந்து பெண்கள் வெளிவரத் தயக்கம் கொள்கின்றனர். தன்மீது செலுத்தப்படும் ஆதிக்கத்தைப் பெண் வெறுப்புடனே எதிர் கொள்கிறாள். இதனை: 

பேசா மடந்தை என்பதனாற்தானே
அவளை நீ பேசித் தீர்த்தாய்
பதிவிரதை என்பதனாற்தானே
அவளை நீ பரிகசித்தாய்
படிதாண்டாப் பத்தினி என்பதனாற்தானே
அவளை நீ அடிமையாக்கினாய்
வீசி எறியமாட்டாள் என்ற துணிவிற்தானே
அவளை நீ வீட்டினுள் பூட்டிவைத்தாய்
வேலையில்லை என்பதனாற்தானே
அவளை நீ விரட்டி விட்டாய்

என்று தொடரும் பவானியின் கவிதை பெண்மொழி கவித்துவத்திற்கு மிகவும் நெருக்கமானது என்பதை உணர்த்துகின்றது.

இலக்கியங்களிலும், பிற படைப்புக்களிலும் சீதனம் குறித்துப் பக்கம்பக்கமாக எழுதி, பேசி எந்தப் பயனும் இல்லாமல் போயிற்று.  சீதனம் வாழ்வின் முக்கிய ஒரு அங்கமாக ஆகிவிட்டது. சீதனம் கொடுக்க முடியால் பெற்றோர்களுக்கும்
சுமையாக, முதிர்கன்னியாக வாழும் பெண்களின் அவல நிலை எம் நெஞ்சை நெருப்பாக்குகின்றது. சீதனக் கொடுமையை ஒரு பெண்ணின் வாய்மொழியாக பவானி ‘சீதனம்’ என்ற கவிதையில் கொட்டுகின்றார்:

காதலித்த பெண்ணைச் சீதனத்திற்காய்
கைவிட்ட கதையைக் கூறவா?
வீடு, காணி, பணம் என்று சீதனம்
கொடுத்ததை மாப்பிள்ளை வீட்டார்
அனுபவிக்க பெண் குடிசையில்
தஞ்சமாகிய கதையைக் கூறவா?

சீதனக் கொடுமையால் தற்கொலை
செய்த அப்பாவிப் பெண்ணின் கதையைக் கூறவா?
பெண்ணுக்கு வீட்டார் நன்கொடையாகக்
கொடுத்த வரதட்சனை இன்று
புற்று நோய் போல் புற்றெடுத்து
தொற்று நோய்போல் விரைந்து
பரவித்தாண்டவமாடும் காலமிது

என்று தொடர்கிறார் பவானி. வரதட்சணை இன்று பல பெண்களின் வராத தட்சணை ஆகவும் ஆகின்றது. பெண்களைப் பற்றிய அக்கறையும், சீதனம் போன்ற சமூகக் கொடுமைகளுக்கும் எதிரான சீற்றமும் இக்கவிதையில் பரவிக்கிடக்கின்றன.

சமுதாய மாற்றங்களை காணத்துடிக்கும் பவானியின் கவிதைகளில் உள்ளத்தின் உணர்ச்சிகள் வீறு கொள்வதை என்னால் அவதானிக்க முடிகின்றது. தூரிகை என்று தலைப்பிட்ட கவிதையில்:

அவன் பிடுங்கிய மயிற்கற்றையைத்
தூரிகையாக்கினாள்
தன் யோனியிலிருந்து பாய்ந்த
குருதியை மையாக்கினாள்
பளிச்சிடும் ஓவியம் வரைந்தாள்
அதன் ஒளியில் அவனைக் குருடாக்கினாள்

என்று ஒரு பெண்ணின் வேதனையை, அகவெளியை வௌ;வேறு கோணங்களில் பதிவு செய்கின்றார்;;.

பவானியின் முதற்தொகுப்பான இக்கவிதைத்தொகுப்பு  போற்றுதற்குரியது. இயற்கையின் அழகு, ரயில் பயணங்களின் ரசனை, கனவுகளில் ஏக்கங்கள், உணர்வுகளின் வெளிப்பாடுகள் என்று ‘சில கணங்களில்’ விரிந்து கிடக்கின்றது பவானியின் கவிதைகள். வலிகள், வேதனைகள். அறைகூவல்கள், ஏக்கங்கள் என்று பரவலாகப் பதிவு செய்திருக்கிறார். இன்னும் புதிய தேடல்களோடு தொடர்ந்து கவிதையுலகில் அவர் பயணிக்கவேண்டுமென்று வாழ்த்துகின்றேன்.


 

எழுத்தாளர் நவஜோதி யோகரட்னம்

–  நவஜோதி ஜோகரட்னம், லண்டன்  –

11.5.2020

navajothybaylon@hotmail.co.uk