நூல் அறிமுகம்: ‘வண்ணாத்திக் குளம்’ நாவல் பற்றிச் சில கருத்துகள்…..

- காவலூர் இராஜதுரை - [ 13-10-2004  திகதி அன்று காவலூர் இராஜதுரையால் எழுதப்பட்ட இக்கட்டுரை ஒரு பதிவுக்காகப் பிரசுரமாகின்றது. – பதிவுகள்]   இலங்கையில் 1980-1983 வரையிலான காலப்பகுதியை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட நெடுங்கதை.-வண்ணாத்திக்குளம் இதனால் இந்நூலை சமகால வரலாற்று நவீனம் எனக் கொள்ளத்தகும். 1952இல் உத்தியோகத்தின் நிமித்தம்  கொழும்பு வந்த நான்  2000ஆம் ஆண்டுவரை  கொழும்பிலே வாழ்க்கை நடத்தவேண்டியதாயிற்று. 1956முதல் 1983 வரை நடைபெற்ற எல்லா கலவரங்களின் போதும் கொழும்பிலேயே குடும்பத்துடன் இருந்தேன். சுமார் 35 வருடகாலம் கொள்ளுப்பிட்டியில் பின்னர் 15 வருடகாலம் நாவலயில். இது தவிர இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில்  உத்தியோகம் பார்த்த எட்டு வருட காலத்தில் இலங்கையின் பலபாகங்களுக்கும் குமண, தந்திரிமலை மகியங்கனை ஆகிய இடங்கள் உள்ளிட்ட  பகுதிகளுக்கும் பயணம் செய்திருக்கிறேன் எனவே ‘குடா நாட்டிற்கு வெளியே வாழத்தலைப்பட்ட போதுதான்  தமிழினம் தவிர்ந்த ஏனைய இனமக்களும்  எவ்வாறு அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது,’ என்று நடேசன் தமது என்னுரையில் கூறுவதை  முழு மனத்துடன் ஏற்றுக் கொள்ளக்தோன்றுகிறது. அதிலும் 1956ஆம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டத்தின் சிங்கள் வாரிசுகள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்களுக்கு சிங்களம் தவிர வேற்று மொழி தெரியாது இருக்கிறது. சிங்கள ஊடகங்கள் அரசியல்வாதிகளின் கைகளில் இருந்தன. எனவே பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் சிங்கள மக்கள் மத்தியிலே இனத்துவேசத்தை நாளும் பொழுதும் வளர்க்க  வாய்ப்புகள் இலேசாக கிடைத்தன. ஆகவே ஆட்டுவித்தால் ஆடாதவர் யார் எனும் பாங்கில் பெரும்பான்மை இனமக்கள் இன்றுவரை ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

விமர்சன நோக்கில் பார்க்கும் பொழுது அரசியல் சம்பவங்கள் இடம்பெற்றலாலும் கூட இது ஒரு காதல் கதைதான் என்னும் ஆசிரியர் கூற்றை  ஒப்புக்கொள்ள இயலாது இருக்கிறது. ஏனென்றால் யானைக்கு மரண விசாரணை நடத்துதல் மற்றும் மாடுகளை வியாபாரம் செய்யும் முகைதீன் ஆகிய அத்தியாயங்கள் கதையுடன் சேராமல் துருத்திக்கொண்டு நிற்கின்றன. இதனையே “பாண்டித்தியம் நிறைந்த அளவுகோல்களுடன் திறனாய்வு மேற்கொள்ளும் வித்தகர்கள் நடேசனின் நாவலில் குறைகாணக்கூடும்” என்று டி.பி எஸ் ஜெயராஜ்  தம் முன்னுரையில் குறிப்பிடுகிறார் போலும் ஆனால் காதல் கதையை படத்தின் சட்டம் போல் உபயோகித்திருக்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது.. ஆயினும் காதலர் ஒருவரை ஒருவர் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் இயல்பான காட்சிகளையும் உரையாடல்களையும் புகுத்தி வாசகர் கவனத்தை ஈர்ப்பதில் நடேசன் வெற்றி கண்டிருக்கிறார். குறிப்பாக கதாநாயகியை அறிமுகப்படுத்தும் அத்தியாயத்தில் வெகு இயல்பாக  அதேவேளையில் சிருங்கார ரசம் ஓழுகும் வகையில் கதையை நகர்த்தி இருக்கிறார்.

எனினும் கதாநாயகியின் பாத்திரவார்ப்பு  முன்னுக்குப் பின் முரண்பாடுடையதாக தோன்றுகிறது. கதாநாயகனை சாதாரண மத்திய தரவகுப்பு உத்தியோகத்தவனாக காட்டும் ஆசிரியரின் யதார்த்தத்தை ஒப்புக்கொள்ளலாமெனினும் சித்திரா என்ற கதாநாயகியை ஒரு வீராங்கனையாக வார்த்திருக்கலாம். அவள் தன் சகோதரனின் அடியொற்றி கணவனையும் அழைத்துக்கொண்டு ஜனதா விமுக்தி பெரமுனையில் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட எத்தனிப்பதாக காட்டியிருக்கலாம். அத்தகைய நெருக்கடியில் கதாநாயகன் இன உணர்வு சேரப்பெற்று தான் இயக்கத்தில் சேரப்போவதாக அவளோடு வாதாடி இருக்கலாம். ஈற்றில் இருவரும் தற்காலிகமாக, தலைமறைவு வாழ்க்கை நடத்திவிட்டு கலவரச் சூழல் தணிந்ததும் ஈரினத்தையும் ஒன்று சேர்ப்பதற்கு பாடுபட முடிவு செய்வதாக  காட்டி இருக்கலாம். அதிலும் சாதாரண குறிப்பாக கிராமப்புற மக்கள் மத்தியில் இனத்துவேச உணர்வு இல்லை என்கிற எ நிலையில் மக்கள் விடுதலை இயக்கத்தில்  கதாநாயகி ஈடுபடுவதாக காட்டுதல் யதார்த்தத்திற்கு புறம்பானதல்லவே. இங்கு “நோக்கங்கள் வேறாக இருந்த போதிலும் வடக்கிலும் தெற்கிலும் இளைஞர்கள் போராட்டம் செய்வதற்கு வித்திட்டவர்கள் அரசியல்வாதிகள். சாதாரண மக்களிடம் இருந்தே போராளிகள் தோன்றினார்கள் என்று நடேசன் அவர்களே என்னுரையில் குறிப்பிட்டுள்ளமை எனது கருத்துக்கு அரண் செய்கிறது  இதை விடுத்து  கதாநாயகனும் நாயகியும் வெளிநாடு செல்வதாக காட்டியிருப்பதானது ஆசிரியர் தன் செயலை நியாயப்படுத்துவதாகவே தோன்றுகிறது.

இந்த சந்தர்ப்பத்திலே சுமார் 10 வருடத்திற்கு முன்பு நான் ஓபர்ண் என்னுமிடத்தில் சுமார் 8 மாதகாலம் தங்கியிருந்த சமயத்தில் பார்த்த வீடியோ படமொன்று நினைவுக்கு வுருகிறது. த பவர் ஒஃப் ஓன்(The Power of the one) என்ற அந்தப்படத்திலே ஆபிரிக்காவில் வாழ்ந்த வெள்ளைக்கார சிறுவன் ஒருவன் கருப்பின மக்களின இன விடுதலைப்போராட்டத்தை முன்னின்று நடத்துவதாக சித்தரிக்கப்பட்டிருந்தது, ஆகவே எழுத்தாளர்கள் யதார்த்த உண்மைகளை சித்திரிக்கும்போது ஆக்கபூர்வமான முடிவுகளை அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய கடமைப்பாடு உடையவர்கள் என்பதை நடேசன் போன்றவர்கள் மனதில் இருத்தல் அவசியம். ஏனென்றால் அவரைப் போன்ற படித்தவர்கள் மக்களின் உணர்வுகளை நேரடியாக கண்டவர்கள். எழுத்தாற்றல் உள்ளவர்கள் தமிழ் சமுதாயத்திற்கு மட்டுமல்ல  எந்த சமுதாயத்திற்கும் வேண்டியவர்கள் ஏனென்றால் எழுத்தளர்கள் காலத்தின் கண்ணாடிகள் மட்டுமல்ல காலத்தின் ஒளிவிளக்காகவும் இருக்கிறார்கள்

எழுத்துத்துறையில் பிரகாசம் மிக்க எதிர்காலம் டொக்டர் நடேசனுக்கு உண்டு .ஆனால் அவர் வெறும் பார்வையாளனாக இராமல் இலட்சியவாதியாக மாறுதல் அவசியம். அப்போது அவரிடம் இருந்து உன்னதமான படைப்புகள் கிடைக்கும்

அனுப்பியவர்: நடேசன் (ஆஸ்திரேலியா) uthayam@optusnet.com.au