நூல் நயப்புரை: அமரர் பொ. கனகசபாபதியின் – மரம் மாந்தர் மிருகம் மாதுளம் கனியின் மகத்துவம் அறிந்த கிரேக்கர்களும் சீனர்களும்

அதிபர் கனகசபாபதிசுபகாரியம்   சீக்கிரம்  என்பார்கள்.  சுபகாரியம்  மட்டுமல்ல – எந்தக்காரியத்தையும்  தாமதிக்காமல்  உரியவேளையில் செய்யத்தவறிவிட்டால்  அதற்கான  பலனையும்  அடைய முடியாமல் போய்விடும்   என்பதும்  நிதர்சனமான  உண்மை. பல   மாதங்களுக்கு  முன்னர்,   எனது  அக்காவின்  சம்பந்தியான ஸ்ரீஸ்கந்தராஜா   அண்ணா,   என்னிடம்  மரம்  மாந்தர்  மிருகம்  என்ற நூலைத்தந்து,    தனது  ஆசான்  பொ. கனகசபாபதி  அவர்கள் எழுதியது  என்றார்.   அவர்  எப்பொழுதும்  நல்ல  விடயங்களை எனக்கு   அறிமுகப்படுத்துபவர்.அத்துடன்    நல்ல  இலக்கிய  ரசிகர்.  யாழ்.மகாஜனா   கல்லூரியின் பழையமாணவர்.   இக்கல்லூரியின்  பல  பழையமாணவர்கள்   கலை, இலக்கியவாதிகளாகவும்  ஊடகவியலாளர்களாகவும்  இருப்பதாக அறிவேன்.   மகாஜனா  கல்லூரியில்  விஞ்ஞானப்பட்டதாரி  அதிபராக பணியாற்றியவர்    கனகசபாபதி. மரம்  மாந்தர்  மிருகம்  நூலை   கையில்  எடுத்தவுடன்,   மரங்களின் தன்மைகளைப்பற்றிய    பட்டியல்  தரும்  நூலாக  இருக்குமோ…?  என்ற   எண்ணத்திலேயே  நூலைப்படித்தேன்.   ஆனால், அதனைப்படிக்கும்பொழுது   எனக்குள்  ஆச்சரியங்கள்  மலர்ந்தன. தனது   வீட்டில்  பெற்றவர்களினால்  வளர்க்கப்பட்ட   மற்றும் தானாகவே    வளர்ந்துவிட்ட  மரங்கள்,  செடி,  கொடிகள்  வீட்டு மிருகங்கள்    என   மரங்களையும்  மிருகங்களையும்  அவற்றை வளர்த்த    மாந்தர்களின்  மகிமைகள்  பற்றியும்  நாம் அறியத்தவறிவிட்ட   பல   அரிய  தகவல்களுடன்  நூலை   எழுதுகிறார் கனகசபாபதி.

வாசகர்களை   உடன்  அழைத்துச்செல்லும்  இயல்பு  அவரது  எழுத்தின்   வலிமை.  அதனால்  எம்  வீட்டில்   எமக்குத்தெரிந்தும்  நாம் பார்த்த   பார்வையிலிருந்து   வித்தியாசமான  கண்ணோட்டத்தில் சுற்றுச்சூழலை    சித்திரிக்கின்றார். மரங்களின்  இயல்புகள்  அவற்றின்  தனித்தன்மை  – சிறப்புகள்  பற்றிய சித்திரிப்பாகவும்  அவற்றுடனான  மாந்தரின்  உறவாடலை யதார்த்தபூர்வமாகவும்    சொல்கிறார்.   மரங்களின்   சிறப்பம்சங்களை பதிவுசெய்யும்பொழுது    அவற்றை   பராமரிக்கும்  மாந்தர்களின் எளிமையான    குணாதிசயங்களையும்  பொருத்தமாகவே இணைக்கின்றார். மாந்தர்களை   – அவர்  கற்பனைப்பாத்திரங்கள்  எனக்கூறினாலும்,  அவர்  எடுத்துரைக்கும்  விதத்தில்  அவை   நிஜமான  பாத்திரங்கள்தான்   என்ற  உணர்வை  வாசகர்களுக்குள் விதைத்துவிடுகிறார். இன்றைய   நவீனயுக  காலத்தின்  காதலைவிட  அழியாத உண்மைக்காதலும்  புரட்சித்திருமணங்களும்   அந்தக்காலத்தில் சிறப்பாகவிருந்தது   என்ற  உண்மையையும்,  அக்கால  மாந்தர்  பற்றிய   அவரது  கருத்துக்கள்  ஊடாக சொல்கிறார். மனிதர்களை    உருவகமாகவும்  அவர்களின்  இயல்புகளை அழகாகவும்   வர்ணிக்கிறார்.

கறிவேப்பிலை  மரத்துக்கு  எதற்காக  மீன்  வெட்டிக்கழுவிய  நீரை ஊற்றவேண்டும்…? என்பதற்கு  விஞ்ஞான  ரீதியில் விளக்கமளிக்கின்றார்.    அத்துடன்  இந்நூலில்  அவர்  சித்திரிக்கும் மரங்களின்    தன்மைகளைப்பற்றிக்கூறும்பொழுது  சங்க இலக்கியப்பாடல்களையும்  பொருத்தமாகவே  தெரிவிக்கின்றார். கற்பகதருவான  பனைமரத்தைப்பற்றிச்சொல்லும்போது  அதனை உச்சிகுளிரும்    வண்ணம்    புகழ்ந்துரைக்கின்றார்.   நீரைப்பற்றிய எந்தக்கவலையும்   அற்று  மக்களுக்கு  பயன்  வழங்கி  நீண்டகாலம் நிலைத்து   நிற்கும்  பனைமரம்  குறித்து  விளக்குகையில்,

”  கடையாயர்  நட்பிற்  கமுகனையர்  ஏணை
இடையாயர்    தெங்கினையர்  –   தலையாயர்
எண்ணரும்  பெண்ணைபோன்றிட்ட  ஞான்றிட்டதே
தான்மையுடையார்  தொடர்பு ” ( நாலடியார் – 216)

நட்புக்கு   அடையாளமாக  இந்த  மூன்று  மரங்களும்  மேற்கோள் காட்டப்படுகின்றன.    கீழோர்  கமுகு   மரத்தினை   ஒத்தவர்கள் – தொன்மை   உடையார்  தொடர்பு  மதிப்பு  மிக்க  பனைமரத்தின் இயல்பினை   ஒத்தவர்கள்  எனப் பனை   மரத்துக்கு  மேலும்  புகழாரம் சூட்டுகிறார். இப்படியாக    மா,  பலா,  வேம்பு,  கமுகு,  விளாத்தி,  இலுப்பை  என ஒவ்வொரு  மரமாக  அதனதன்  தன்மைகளை சுவைபடக்கூறும்பொழுது   மீண்டும்  நாம்  நமது  பழைய நினைவுகளில்    மூழ்கிவிடுகின்றோம். தாயகத்தில்   நாம்  கண்ட  மரங்களை   இங்கே  புகலிடத்தில்  காண்பது  அரிது.   இந்நூலைப்படிக்கும்தோறும்  நாம்  முன்னர்  ஊரில் அனுபவித்த  அந்த  மரங்களின்  சுகந்தத்தில்  திழைத்து  மீண்டு வருகின்றோம்.

இலங்கையில்   எமது  ஊரில்  திருமணமாகி  எனது  கணவரின் சகோதரர்    ஒருவரின்  வீட்டுக்கு  விருந்துக்குச்சென்றோம். திரும்புகையில்    அந்த  வீட்டின்  பெரியவர்  ஒருவர்  எனது  கரத்தில் ஒரு   மாதுளம்  கனியை   தந்து  ” வாழ்வு  சிறக்கட்டும்”   என்றார். அப்பொழுது   அதன்  சிறப்பு  எனக்குத்தெரியவில்லை.   அவர்  அவ்வாறு   சொல்லித்தந்ததன்   மகிமை   புரியவில்லை.  ஆனால், பலவருட  காலம்  கடந்து  அந்தக்கனி  பற்றி  இந்நூலாசிரியர் குறிப்பிடும்    தகவல்கள்  என்னை   பேராச்சரியத்திற்குள்ளாக்கியது. கிரேக்கர்கள்   புதிய  வீடு  வாங்கினால்   முதல்  முதலாக  மாதுளம் கனியைத்தான்  புதிய  வீட்டுக்கு  எடுத்துச்செல்வார்களாம்.   அதனை தங்கள்    வழிபாட்டு  அறையில்    வைத்து   வணங்குவார்களாம். மாதுளை –   வாழ்வின்  நிறைவு –  செழுமை   மற்றும் அதிர்ஷ்டத்தையும்    குறிக்கும்  கனி   என்ற  நம்பிக்கையுடையவர்கள் கிரேக்கர்கள்    என்ற  தகவல்  எமக்குக்கிடைக்கிறது. சீனர்கள்  – தமது   வீடுகளில்  மாதுளம்கனிகளின்  படங்களைத்தான் சுவர்களில்   காட்சிப்படுத்துவார்களாம்.   அதனால்  வீடு வளமுடையதாக    இருக்கும்  எனவும்  சந்தான  விருத்தியுண்டாகும் எனவும்    சீனர்கள்  நம்புகிறார்களாம். மாதுளம்கனி   எல்லாவிதமான  உயிர்ச்சத்துக்களையும்  தன்னகத்தே கொண்டது.   கனிவர்க்க  மரங்களில்  மாதுளை   முன்னணியில் திகழ்கிறது.

இவ்வாறு   பல  அரிய  தகவல்களை  தரும்  கனகசபாபதியின் கட்டுரைகளை   அவரிடமிருந்து  வெளிக்கொணர்ந்த  திலீப்குமார் நிச்சயமாகப் பாரட்டப்படவேண்டியவர். இந்நூலுக்கு   அணிந்துரை   எழுதிய  கலாநிதி  செ. சிவயோகநாதன் அறிமுகவுரை    எழுதியுள்ள  கலாநிதி  பால. சிவகடாட்சம் ஆகியோரின்   கருத்துக்கள்  விமர்சனபூர்வமானவை.   நூலில் பதிவாகியிருக்கும்    மரங்களின்  படங்கள்  கறுப்பு – வெள்ளையில் அமைந்திருப்பதனால்   சற்று  தெளிவில்லாமல்  காணப்படுகின்றன.

தமிழ்ப்பாடசாலை   நூலகங்களில்  அவசியம்  இடம்பெறவேண்டிய நூல்   மரம்  மாந்தர்   மிருகம். மீள்பதிப்பு   செய்யப்படுமாயின்  படங்களை   வண்ணத்தில்  அச்சிட்டால்    அழகாக  இருக்கும்.   ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால்   புகலிடத்தில்  ஆங்கில மொழிமூலம் கற்கும்    தமிழ்  மாணவர்களும்  பயனடைவார்கள்.  இந்நூல்   பற்றி  எனது  நயப்புரையை   நான்  எப்பொழுதோ எழுதியிருக்கவேண்டும்.   ஆனால் –  அதற்கான  சந்தர்ப்பம் கிட்டாமல்போனது   கவலைதருகிறது.    அவர்  அமரத்துவம்  எய்திய பின்னர்    எழுத  நேர்ந்தமையால்தான்   இந்த  நயவுரையின் தொடக்கத்தில்    சுபகாரியம்    சீக்கிரம்    என்ற   வரியை    எழுதினேன்

letchumananm@gmail.com