நூல் மதிப்புரை : “உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்“

       முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத் தமிழ்ப்பிரிவின் சார்பாக 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் “உலக, இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் – என்ற பொருண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் வாசிக்கப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

இந்நூலில் மொத்தம் இருபத்து மூன்று கட்டுரைகள். தமிழில் பதினைந்து. ஆங்கிலத்தில் எட்டு. கட்டுரை வாசித்த அனைவருமே தில்லிப்பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்புலத்தில் தமிழோடு இன்னொரு மொழி பயின்ற மாணவர்கள். பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த பிறகு எங்கெங்கோ பணியாற்றுபவர்கள். திருக்குறள் உலக அளவில் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினால் மொழிபெயர்க்கப்படாத மொழி எது இருக்கிறது என்று பதில் சொல்ல வேண்டியிருக்கும்  என்றாலும் எழுத்தும் இலக்கியமும் படைத்த மொழிகள் அனைத்திலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதுவும் பலமுறைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் நாற்பது முறை. இந்தியில் இருபது முறை. நமக்கு வியப்பு ஏற்படுகிறது. இந்தியில் இருபது முறைகளா? என்றும் ஆதிக்க மொழி இந்தி என்று கருதி நாம் எரிச்சலடைகிறோம். இந்தி மக்கள் மீது நமக்கு எந்த வகையிலும் கோபமில்லை. மக்கள் சார்பில் இருபது முறை மொழிபெயர்க்கப்பட்டது வியப்பில்லை.

கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகள் இந்திய மொழிகள், அயல்மொழிகளாக உள்ளன. இந்திய மொழிகளில் மலையாளம், கன்னடம், கொங்கணி, மராத்தி, உருது, சமற்கிருதம், இந்தி, ஒடியா, பஞ்சாபி எனப் பல மொழிகள். இவற்றோடு அயல் மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு, போலிஷ், ஜப்பான், இரஷ்யன் போன்றன.

உலகியல் சார்ந்த ஓர் அறநூல் திருக்குறள். இந்நூல் தமிழர்களுக்குக் கிடைத்த அரிய பெரும் பெட்டகம். மொழிபெயர்ப்புகள் வழியே திருக்குறளுக்கு வாய்த்துள்ள பெருமைகள் ஏராளம் அவற்றை இங்குக் காணலாம். ஐரோப்பிய சூழலில் போர் நெருக்கடிகள் மிகுந்துள்ளன. இவற்றுக்கிடையில் உலக அமைதி குறித்து சிந்திப்பவர்கள் திருக்குறளை மதிக்கிறார்கள். டால்ஸ்டாய் தன் நூல்களில் இருபது குறட்பாக்களை எடுத்தாண்டிருக்கிறார். “பகைவனையும் நண்பராகக் கொள்ளவேண்டும்“ என்று திருக்குறள் கூறுவதைக் குறிப்பிடுகிறார். ஐரோப்பிய மக்கள் பெரும்பகுதி கிறித்துவர்கள் திருக்குறளின் கருத்துகள் விவிலிய மொழியில் உள் கருத்துகளோடு ஒத்துச் செல்கின்றன. நாடு, இனம், மொழி, மதம் என்ற வேற்றுமைகளை ஒதுக்கிவிட்டுக் குறள் பேசுகின்றது.

பிரெஞ்சு மொழியில் 1767ஆம் ஆண்டு முதலே மொழிபெயர்க்கத் தொடங்கிவிட்டனர். பத்தொன்பதிற்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள். பிரெஞ்சு மொழிபெயர்ப்புகளில் இருமுறை காமத்துப்பால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு மக்கள் காதலைப் பெரிதும் போற்றுபவர்கள். காதலும் காமமும் வேறுவேறாகப் பிரிக்கமுடியாத, அழகான காதல் வாழ்க்கையை வள்ளுவனின் காமத்துப்பாலில் காணமுடியும்.

மொழிபெயர்ப்புகளில் இன்னொரு தன்மை இங்குக் குறிப்பிடத்தக்கது. திருக்குறளின் முப்பாலும் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படவில்லை. அறத்துப்பால், பொருட்பால் மட்டுமே பெரும்பாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அறத்துப்பால் மட்டும் சில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பொருட்பாலை தனியாக எங்கும் மொழிபெயர்க்கவில்லை. இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளமுடியும். திருக்குறள் என்றாலே அறத்துப்பால்தான் நம்முன் முதலில் நிற்கிறது. அடுத்துதான் பொருட்பால் பற்றிச் சிந்திக்கிறோம். காமத்துப்பால் இல்லை என்றாலும் முதல் இரண்டு பால் மட்டுமே திருக்குறள் ஆகலாம். காமத்துப்பாலின் கவிதை நயம் உயரியதரத்தில் இயங்குகிறது. காமத்துப்பாலை திருக்குறளிலிருந்து பிரித்து தனிப்பாலாகக் கூடக் கொள்ளலாம்.

திருக்குறளை இராஜகோபாலாச்சாரியார் அறிமுகப்படுத்தியது போல அறத்துப்பாலில் முக்கியமான சில குறள்கள். அதுபோல பொருட்பாலில் முக்கியமான சில குறள்கள் இவை மட்டுமே போதும் என்ற முறையில் சில மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது.

வள்ளுவர்திருக்குறள் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறித்து இங்குப் பார்க்கலாம். ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துக் குறள் என்ற முறையில் தொகுத்துக் கொண்டு செல்வது ஒரு முறை. குறளை மட்டும் மொழிபெயர்த்து பொருள்விளக்கம் சொல்லியும் சொல்லாமலும் செல்வது ஒரு முறை. அறத்துப்பால், பொருட்பால் ஆகிய இரண்டு பால்களில் அதிகாரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு திருக்குறளைப் பார்ப்பது ஒருமுறை. இம்முறையில் திருக்குறளைப் பார்ப்பது நமக்குப் பழக்கமில்லை என்றாலும் இதுவும் ஒரு முறை என ஏற்கலாம்.

திருக்குறளின் முதற்குறள் எல்லோரையும் கவர்ந்துள்ளது. அதன் எளிமையும் தெளிவும் கருத்தாழமும் காரணமாக பலரையும் ஈர்த்துள்ளது. வள்ளுவரைச் சமணர் என்று சிலர் குறித்த போதிலும் ஆதிபகவன் என்பதற்கு ஆதிநாதர் என பொருள் கொள்வதை யாரும் கவனிக்கவில்லை.

சில கட்டுரைகள் மொழிபெயர்ப்பின் தன்மை பற்றி மிகுதியாகப் பேசுகின்றன. மொழிபெயர்ப்பு என்றால் என்ன? மொழிபெயர்ப்பில் தொடர்புடைய இருமொழிகளின் தன்மை என்ன? என்றெல்லாம் இவர்கள் பேசுகின்றனர். போலிஷ் மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்தவர் திருக்குறளின் கவித்துவ செழுமைகண்டு வியப்படைகிறார். திருக்குறளின் கவித்துவம் பற்றி நம்மவரும் சிந்திக்க வேண்டும். அனைத்துக் குறளுமே ஒரு வகையில் கவித்துவக் கூறு கொண்டவை என்று புரிந்து கொள்ளமுடியும்.

இன்றைய உலகில் போர் நெருக்கடிகள் அதிகம். ஏற்றத்தாழ்வுகளால் உலகம் சீரழிந்து வருகிறது. மனிதர்களிடத்தில் நேயமில்லை. ஒற்றுமை குறைந்து வருகிறது. உலகம் எல்லோருக்கும் பொது என்ற கருத்துக்கு இடமில்லை. இவ்வாறு உலகச்சீரழிவை முன்னிறுத்தி திருக்குறளை மேற்கத்தியர் போல வாசிக்கமுடியும்.

இடையில் ஒரு செய்தி. மேற்கத்தியருக்குத் திருக்குறளை முதலில் அறிமுகம் செய்தவர் ஜோசப் பெஸ்கி. இவரை வீரமாமுனிவர் என்றும் நாம் கூறுகிறோம். இலத்தீன் மொழியில் 1730இல் திருக்குறளை இவர் தந்திருக்கிறார்.

இந்த நூலில் முன்னுரை போல இரண்டு சிறந்த கட்டுரைகள் உள்ளன. இவர்களில் ஒருவர் பேராசிரியர் ந.முத்தமோகன். இன்னொருவர் முனைவர் த.வி.வெங்கடேஷ்வரன், மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர். முத்துமோகனைப் பொருத்தவரை திருக்குறளில் வள்ளுவர் கூறம் அறம் என்பது முழு அளவில் மெய்ப்பொருள் என்கிறார். அறம்தான் வள்ளுவரின் தத்துவம். புத்தம், சமணத்தின் துறவு தமிழ்மரபில் விளைந்த உலகியலுக்கு அழுத்தம் தந்தது என்றும், வள்ளுவருக்குள்ளும் எழும் கறாரான துறவு பற்றிப் பேசுகிறார் என்றாலும் துறவை மீறி அவரது சமூகஅறம் என்ற சிந்தனை மேலோங்கி உள்ளது என்கிறார். இவரைப் போலவே வெங்கடேஷ்வரனைப் பொருத்தவரை இந்தியத் தத்துவத்தில் புத்தர் காலம் முதற்கொண்டு பகுத்தறிவுவாதச் சிந்தனை இடையறாமல் இந்தியத் தத்துவம் முழுவதும் ஊடுருவி வருகிறது. வள்ளுவரிடமும் இத்தகைய சிந்தனைதான் மேலோங்கித் தெரிகிறது. இந்தியத் தத்துவத்தின் பெரும்பகுதியாகத் தோன்றுகிற வைதீகச் சிந்தனைக்கு வள்ளுவர் இடம் தரவில்லை என்கிறார் இவர். இவ்வகையில் இருவருமே வள்ளுவரைப் பெருமைப்படுத்துகின்றனர். இவ்வாறாக மொழிபெயர்ப்புகளின் வழியாலும் திருக்குறளையும் அதன் தனித்தன்மைகளையும் கற்க முடியும்.

இந்திய மற்றும் உலகமொழிகளில் அமைந்த திருக்குறள் மொழிபெயர்ப்புக்கட்டுரைகளை ஒரே நூலில் வாசித்து அறிந்துகொள்ள இந்நூல் நமக்குப் பெரிதும் உதவுகிறது.

காவ்யா பதிப்பகம் சென்னை-24.
பக்கங்கள் 282
விலை300

jothimeenaav@gmail.com