நேர்காணல் – விமர்சனத்தால் மழுங்கடிப்பதல்ல அழகு! திறனாய்வால் தெளிவுபடுத்துவதே சிறப்பு: தமிழ், ஆங்கில திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன்

கே.எஸ்.சிவகுமாரன்[எழுத்தாளரும் , திறனாய்வாளருமான கே.எஸ்.சிவகுமாரன் தினகரன் வாரமஞ்சரியில் வெளியான தன்னுடனான நேர்காணலை முகநூலில் பதிவு செய்திருந்தார். அதனை ‘பதிவுகள்’ தனது வாசகர்களுக்காக மீள்பதிவு செய்கின்றது. -பதிவுகள்] 1953களில் எழுத்துப்பணியை ஆரம்பித்து, ஊடகவியலாளர், அறிவிப்பாளர், திறனாய்வாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என பல தளங்களில் இயங்கியவர்தான் கே.எஸ். சிவகுமாரன். இன்று 76 வயதிலும் அதே சுறுசுறுப்புடன் களத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் இவரது தனித்துவ திறமையை அசைபோட்டு பார்க்க விரும்பினேன். கடந்த முதலாம் திகதி 76வது பிறந்த நாளை குதுகலத்துடன் கொண்டாடிய அவரிடம் பிறந்தகத்தைப் பற்றிக் கேட்டேன்.

என்னுடைய பிறந்தகமென்று கூறினால் அது மட்டக்களப்பாகத்தான் இருக்கும் என்னுடைய மூதாதையர்கள் யாழ் கந்தரோடையைச் சேர்ந்தவர்கள். என் தந்தையார் அரச ஊழியராக இருந்தமையால் காலத்திற்கு காலம் குட்டி போட்ட பூனைகள் போல் இடத்திற்கு இடம், எங்களை காவிச் சென்றிருந்தார். என்னை நான் உலகளாவிய மனிதன் என்று சொல்வதையே விரும்புபவன். ஏனெனில் என் வாழ்க்கைப் பின்புலத்தில் இலங்கை மண்ணும் – பாரத மண்ணும் பிணைந்திருக்கின்றது.

இலங்கையில் டச்சு ஆதிக்கம் இருந்த காலத்தில் என் (பாட்டனார்) தந்தையின் தகப்பனார் கந்தவனத்தார் பிரபலமான புகையிலை வர்த்தகர், கேரளாவிலிருந்தும் யாழிலிருந்தும் வரும் புகையிலைக்கு வர்த்தகக் தரகராகவிருந்து டச்சுக் காரர்களுக்கு விநியோகம் செய்பவராக விருந்தார். ஆகவே கேரளா தொடர்பில் இவர் மணமுடித்த வர்தான் என் பாட்டி அம்முனிப்பிள்ளை. என் தந்தை செல்லநைனார் திருமணம் முடித்தது மட்டு நகரில். என்னுடைய தாயார் கந்தவனம் தங்க திரவியத்தின் மூதாதையர்கள் யாழ் நல்லூரைச் சேர்ந்தவர்கள். ஐந்து சகோதரர்கள் நாங்கள்.

குடும்பத்தில் மூத்தவன்தான் நான். என் தாயார் ஏழாம் வகுப்பு வரை ஆங்கில மொழியில் படித்தவர். எனது அம்மாவின் வாயில் பழமொழிகள் உதிரும். தந்தையார் மகாபாரதம், ராமாயணம், புராதனக் கதைகள் மற்றும் ஆங்கில இலக்கிய சுலைஞர். தாய் தந்தை இருவருமே இலக்கிய சுவைஞர்களாகவிருந்தபடியால் இளமையிலேயே இலக்கிய தாகம் என்னுள் வேரூன்றியிருந்தது.

எனது ஆரம்பக் கல்வி 1941ல் வவுனியா பிரப்பம்குளம் கன்வன்டில்தான் ஆரம்பம். அருட் சகோதரிகள் படிப்பித்த அந்தப் பாலர் பாடசாலைக்கு மாட்டு வண்டியில்தான் போய் வருவேன். பின்பு மட்டு நகருக்கு சென்று அங்கே கல்வியைத் தொடரவேண்டியிருந்தது. அங்கே ஆணைப்பந்தி பிள்ளையார் பாடசாலையில் இணைந்து ஐந்தாம் வகுப்புவரை தமிழில் கற்றேன். கல்வியை ஆங்கிலத்தில் தொடர வேண்டுமென்று விரும்பிய என் தந்தை என்னை மட்டக்களப்பு சென் . மைக்கல் கல்லூரியில் சேர்க்க முற்பட்டார். ஏற்கனவே தமிழ் மொழிமூலம் கற்றதால், ஆங்கில ஆரம்பப்பிரிவிற்காக சென்மேரிஸ் பாடசாலையில் சேர்த்து பின்பு ஓராண்டிற்குப் பிறகே சென் மைக்கல் கல்லூரியில் என்னைச் சேர்த்துக்கொண்டார்கள்.

வீட்டுச் சூழலில் எனக்கு நல்ல ஆங்கில புலமைஇருந்தபடியால் வகுப்பில் நான் முதல் மாணவனாக வந்து கொண்டிருந்தேன். என்னுடைய சக மாணவத் தோழராக படித்தவர்தான் பொலிஸ் உதவி தலைமையதிகாரியாக விருந்த கனகரட்ணம் ஆவார். அவரின் தந்தையே எனது வகுப்பாசிரியராகவும் இருந்தார்.

1947ஆம் ஆண்டு முதல் 1952ஆம் ஆண்டுவரை மட்டு சென்ட் மைக்கல் கல்லூரியில் கல்வியை மேற்கொண்டிருந்த காலத்தில் ரெக்டர் ஈ. கிரெளதர் என்ற தமிழரே கல்லூரியின் அதிபராகவிருந்தார். இவரின் சகோதரர் கிரெளதர் 1940களில் சிலோன் டெயிலிநியூஸ் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்துள்ளார். போர்த்துக்கேயரின் வழிவந்த தமிழ் பேசும் இனத்தைச் சார்ந்தவர்கள் இவர்கள்.

இப்பாடசாலையில் இலக்கிய ஆசிரியராகவிருந்த பஸ்தியாம்பிள்ளையே என்னை நிறைய வாசிக்க ஊக்கப்படுத்தினார். வாசிகசாலையில் நூல்களை வாங்கிப்படிப்பதற்கு உந்து கோலாகவிருந்தார். தினசரி மூன்று புத்தகங்களை வாசித்து கிரகித்துக்கொள்ளக் கூடிய மனோசக்தி அந்தவயதிலேயே என்னிடம் இருந்தது. வாசிகசாலை நூலகர்கூட என் ஆற்றலைப் பார்த்து வியப்படைந்தார்.

நான் 7ஆம் வகுப்பில் படிக்கும்போது ஜூனியர் டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய ‘என்னுடைய கல்லூரி’ என்ற ஆங்கில கட்டுரையைப் பார்த்துவிட்டு கல்லூரி அசம்பிளியிலேயே ரெக்டர் பாராட்டினார். ‘ஷிinging பிish’ (பாடும் மீன்) என்ற கல்லூரி சஞ்சிகையில் பல ஆக்கங்களை அவ்வப்போது எழுதிவந்தேன். மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் குறுந்தூர ஓட்டப்போட்டியில் நான் எப்போதுமே வெற்றிவாகை சூடுவதால் அச்சஞ்சிகையின் ஆசிரியர் பேர்கர்ஸ் பல்தசார் விளையாட்டுத்துறை (ஷிports pagலீ) பொறுப்பாளராக நியமித்திருந்தார். கல்லூரிக் காலத்திலேயே சஞ்சிகைக்கு உதவி ஆசிரியராகவிருந்துள்ளேன் என்பதை நினைக்க பெருமிதமாக இருக்கின்றது. அன்று குருதலாவை சென்தோமஸ் கல்லூரிக்கும் சென் மைக்கல் கல்லூரிக்குமிடையே நடைபெறும் வருடாந்த கிரிக்கட் போட்டி தொகுப்பை சஞ்சிகையில் எழுதி பாராட்டைப் பெற்றுள்ளேன்.

இந்த நிலையில் என் தந்தையார் தொழில் நிமித்தம் கொழும்புக்கு மாற்றம் செய்யப்பட்டார். 1953ஆம் ஆண்டு கொழும்புக்கு காலடி எடுத்த வைத்தோம். என்னை பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் சேர்த்துவிட்டார்கள். அங்கிருந்து இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு மாற்றப்பட்டேன். கொழும்பு இந்துக் கல்லூரி அப்போது சரஸ்வதி மண்டபத்தில்தான் இயங்கியது. பின்பு உயர்தர கல்விக்காக கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் இணைந்து கல்வியை மேற்கொண்டேன்.

1958ஆம் ஆண்டு எச்.எஸ்.சி வகுப்பில் சேர்ந்தபோது வண பிதா பீட்டர்பிள்ளை இங்கே அதிபராக இருந்தார். உயர் வகுப்பில் நான் கற்றதில் இலங்கைச் சரித்திரமும் ஒரு பாடம். அதில் மகாவம்சம் பற்றிய வரலாறும் அடங்கி யிருந்தது. 1956ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத்தால் என் இளம் இரத்தத்தில் கசப்புணர்வு கலந்துவிட்டதுபோல் ஓர் உணர்வு. அந்தப் பாடத்தில் வெறுப்பு.

இதனால் பல்கலைக்கழக வாய்ப்பையே இழக்க வேண்டியதாயிற்று. பிற்காலத்தில் வெளிவாரி மாணவனாகவே பேராதனை பல்கலைக்கழக பட்டதாரியானேன். தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் எம்.ஏ சிறப்புக் கல்வியை மேற்கொண்டேன். இது ஐக்கிய அமெரிக்க இராஜ்யத்திற்கு ஈடான மேற்கத்தைய கலை இலக்கிய ஆய்விற்கு ஒப்பானது இக்கற்கையின் தராதரம்.

ஆரம்ப கல்வியிலிருந்து உயர் கல்விவரை புதிய புதிய சூழலில் கற்ற நீங்கள் முதல் காலடி வைத்த தொழிற்றுறை எது?

என்னுடைய முதல் தொழில் 1960ம் ஆண்டில் இலங்கை சிறுகைத்தொழில் சம்மேளனத்தில் வெளியிடப்பட்ட சஞ்சிகையின் உதவி ஆசிரியராக நியமனம் பெற்றேன். ஆர்.ஈ. ஜயதிலக அதன் தலைவராக இருந்தார். இவர் தஹநாயக்க அரசில் நாவலப்பிட்டி பாராளுமன்ற உறுப்பினராக விருந்தவர். புதிதாக இணைந்த என்னை அழைத்து. சஞ்சிகைக்கு விளம்பரம் சேகரித்தால் நல்லது, உன்னால் முடியுமா என்று கேட்டார். முயற்சித்து பார்ப்போம் என்று கூரிய நான், ஆர்வத்தோடு வெளியிறங்கினேன். அன்று லிப்டன் நிறுவனம் ஆங்கிலேயரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது, நேராக அந்நிறுவனத் தலைவராகவிருந்த வெள்ளையரிடம் சென்று நான் வந்தநோக்கத்தை சரளமாக பேசி விளங்கப்படுத்தினேன். என் இளமைத் துடிப்பையும் ஆர்வத்தையும் நேசித்த அவர் முழுப்பக்க விளம்பரமொன்றையே தந்தார். இதேபோன்று மற்றிரு நிறுவனங்களின் விளம்பரத்தையும் சேகரித்து வந்து ஒப்படைத்தேன். வியப்படைந்த தலைவர் ஜயதிலக என்னை வெகுவாகப் பாராட்டியதோடு சஞ்சிகையின் பொறுப்பாசிரியராகவே நியமித்துவிட்டார். இருந்தாலும் இதில் என்னால் நிலைக்க முடியவில்லை. என் தந்தையின் வற்புறுத்தலால் ஓய்வூதியமுள்ள தொழிலொன்றில் அமர வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தில் உள்ளூராட்சி அரச சேவையில் மொழி பெயர்ப்பாளராக இணைந்தேன். ஜனரஞ்சகமான ஊடகத்தொழிலில் இருந்த ஆர்வம் இதில் லயிக்கிவில்லை.

இச் சந்தர்ப்பத்தில் இலங்கை வானொலி தமிழ் வர்த்தக சேவையில் பகுதிநேர அறிவிப்பாளராகும் வாய்ப்பும் கிடைத்து. வானொலி அறிவிப்பாளனாக வேண்டுமென்ற அவா பள்ளி பருவத்திலிருந்தே ஆழ் மனதில் பதிந்திருந்தது. நிறைவேறிய மகிழ்வோடு வானொலி நிகழ்வில் பல்துறைகளில் பிரகாசிக்கமுடிந்தது. வர்த்தக சேவை அறிவிப்பாளனாகவிருந்த எனக்கு செய்தி ஆசிரியராகவும், செய்திப் பிரிவு பொறுப்பாளராகவும் பணிபுரிய ஏற்பட்டது. இதேவேளை வானொலி ஆங்கில சேவையிலும் பகுதிநேர அறிவிப்பாளனாகவும், செய்தி வாசிப்பாளனாகவும் இருந்தேன். 1966ம் ஆண்டு இலங்கை வானொலியில் இணைந்த என் சேவை தமிழிலும் ஆங்கிலத்திலும் இன்றுவரை தொடர்கிறது.

தகவல்தேடும் என் ஆர்வத்திற்கு களம் கொடுத்தது. ஐக்கிய அமெரிக்க தகவல் திணைக்களம். அதில் நான் இணைந்தவேளையில் காலி வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்க உயர் ஸ்தானிகர் காரியாலயத்திற்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது. அந்நிகழ்வை தொகுத்து பத்திரிகைக்கு எழுதும் வாய்ப்பு எனக்குக்கிட்டியிருந்தது. உள்ளூர் பத்திரிகைகளிலும் வெளியூர் பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்த என் தொகுப்பு பெரும் பாராட்டைப் பெற்றிருந்தது.

அமெரிக்க ஸ்தானிகராலய தகவல் பகுதியில் அப்போது தமிழ் பிரிவிற்கு என்டனி பெர்னாண்டோவும், ஆங்கில பிரிவிற்கு நானும் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் அங்கே ஆட்குறைப்பு நடவடிக்கையை ஸ்தானிகராலயம் மேற்கொண்டிருந்தது. ஆகவே ஐந்து வருட சேவைக்கான ஓய்வூதியத்துடன் நான் வெளியேறிவிட்டேன். இன்றும் கூட அந்த சிறுதொகை ஓய்வூதியம் வந்துகொண்டிருக்கிறது.

அச்சந்தர்ப்பத்தில் ‘தி ஐலன்ட்’ ஆங்கிலப் பத்திரிகைக்கு விண்ணப்பித்திருந்தேன். அப்போதைய அதன் ஆசிரியராகவிருந்த விஜிதயாப்பா (இன்றைய விஜிதயாப்பா புத்தகசாலை உரிமையாளர்) என் விண்ணப்பத்தைப் பார்த்ததும் எந்தவிதமான தேர்வுகளையும் நடாத்தாமல் உடனடியாக வேலையில் அமரும்படி பணித்தார். “ஏற்கனவே உன்னுடைய கட்டுரைகளை வாசித்துள்ளேன். அதுவே போதும் தேர்வு தேவையில்லை” என்றார்.

இதனைத் தொடர்ந்து இலங்கையில் வெளியாகும் நாளேடுகள், சஞ்சிகைகள் அனைத்திலும் என் பணியின் பங்களிப்பு நிறைந்திருக்கிறது. ஆங்கில புலமைத்துவம் எனக்கு மாலைதீவு, ஓமான், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பைத் தேடித்தந்தது. இலங்கையிலும் பல சர்வதேச பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியனாக இருந்துள்ளேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பகுதி நேர ஆங்கில ஊடகவியலாளர் பயிலுநர்களுக்கு விரிவுரையாளராகவும் இருந்து வருகின்றேன். சினிமாபடத் தணிக்கை சபையிலும் அங்கத்தவராக பணியாற்றியுள்ளேன்.

எழுத்துத்துறையில் எந்தக் துறையில் அதிக ஆர்வம் காட்டினீர்கள்?

மும்மொழி சார்ந்த கலை விடயங்களை திறனாய்வு செய்வதிலேயே அதிக ஈடுபாடுகொண்டிருந்தேன். தமிழ் சார்ந்த கலைகளை மட்டும் சாராமல் சகோதரத்துவ மொழி கலைஞர்களின் படைப்புகளையும் திறனாய்வில் மேற்கொண்டுள்ளேன். விமர்சனம் செய்து மழுங்கடிப்பதல்ல என் கொள்கை. படைப்பாளிகளின் கருவூலங்களை ஆய்வு மூலம் வாசகனுக்கு தெளிவுப்படுத்துவதையே நான் மேற்கொண்டிருந்தேன்.

விமர்சனத்திலும் பல்வேறு அணுகு முறைகள் உள்ளன. அதனால் நான் பக்தி என்ற வடிவத்தை கையாளுகின்றேன். என்னையும் விமர்சகர் என்கிறார்கள். எனக்கு விமர்சனம் என்ற சொல் பிடிப்பதில்லை. இரண்டும் ஒரு கருத்தையே கூறுகின்றன. திறனாய்வு என்பது தமிழ்சொல், விமர்சனம் சமஸ்கிருதச் சொல்.

ஆனால் இங்குள்ளவர்கள் விமர்சனம் என்றால் கண்டிப்பு என்று நினைக்கின்றார்கள். எடுத்த எடுப்பில் ஆட்களைக் கிழித்துவிட்டால் போதும் என நினைக்கின்றனர். அது அல்ல விமர்சனம். நல்லது, கெட்டது எது என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டும். நான் அதைத்தான் செய்கிறேன்.

பத்திரிகை , வானொலி, தொலைக்காட்சியென்று ஐம்பதாண்டு கால ஊடக சேவையில் தங்களுக்குத் கிடைத்த கெளரவங்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

சிறந்த ஆங்கில பத்தி எழுத்தாளனுக்கான விருதை 2007ம் ஆண்டு ஊடக கல்லூரி வழங்கியது. சிறந்த சினிமா திறனாய்வுக்கான லிவியிவி விருது, வடகிழக்கு கவர்னர் விருது, சிறந்த கலை இலக்கியப் படைப்புக்கான கனடா ஊடக தகவல் விருது, கம்பன் கழக இலக்கிய விருது மற்றும் திறனாய்வு பார்வைகளுக்கான வட கிழக்கு மாகாண சிறப்பு விருதும் கிடைக்கப் பெற்றேன். அண்மையில் கொடகே புத்தக வெளியீட்டினரால் சாகித்திய விருதும் கிடைத்தது.

தங்களின் படைப்புகள் நூலுருவில் வந்தவை பற்றி….

இதுவரை சுமார் 27தமிழ் நூல்கள் எழுதியுள்ளேன். இரண்டு ஆங்கில நூல்கள், தமிழ்சிறுகதைத் தொகுப்பும் ஏனையவைகள் அனைத்தும் இலக்கிய திறனாய்வுகள் சம்பந்தமானவை.

என்னுடைய 75ஆவதுவயது பூர்த்தியையிட்டு கடந்த ஆண்டு அக்டோபரில் ‘ஜீவநதி’ சஞ்சிகை விசேட அநுபந்தமொன்றை வெளியிட்டிருந்தது.

உங்களின் திருமண வாழ்வைப் பற்றி கூறுங்கள்…

1965 டிசெம்பர் 08ஆம் திகதி எனக்குப் பதிவுத் திருமணமும், 1966மே 26இல் வைபவரீதியான திருமணமும் மருதானை கப்டென்ஸ் கார்டின் கோயிலில் நடைபெற்றது. எனது துணைவியார் பெயர் புஷ்பவிலோச்சனி, அவருடைய தந்தையார், மறைந்த சீனிவாசகம் வேலுப்பிள்ளை. தாயார் திருகோணமலையைச் சேர்ந்த சிவசேகரம் அமிர்தநாயகி. எனது துணைவியார் திருகோணமலையில் பிறந்து பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாகி ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். பின்னர் பாடவிதான அபிவிருத்திநிலையம், பரீட்சைகள் திணைக்களம் (உதவி ஆணையாளர்) ஆகியனவற்றில் பணிபுரிந்து இளைப்பாறியுள்ளார். இவரும் திருகோணமலையில் பிறந்தவர்.

எங்களுக்கு இரண்டு குமாரர்கள். அவர்கள் பெயர் ரகுராம், அனந்தராம். அவர்கள் அமெரிக்காவிலும், அவுஸ்திரேலியாவிலும் நிரந்தரப் பிரஜைகளாக வாழ்கின்றனர். இருவரும் மணம் முடிந்து ஒவ்வொருவருக்கும் இரண்டு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். எனது புதல்வர்களின் துணைவிகள் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்கள்.

நன்றி: கே.எஸ்.சிவகுமாரனின் முகநூல் பதிவுகள் / தினகரன் வாரமஞ்சரி அக்டோபர் 7, 2012