ந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ குறித்து… படைப்பு – படைப்பாளி – வாசகனாதிய தளங்களில் கிளர்த்தும் வினாக்களும் விடைகளும்

எழுத்தாளர் தேவகாந்தன்ந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ சென்ற ஆண்டு (ஏப்ரல் 2018) வெளிவந்திருக்கிறது. இதுபற்றி மிகுந்த வாத பிரதிவாதங்கள் ஓர் இலக்கியச் செயற்பாடுள்ள சமூகத்தில் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப் பட்டிருக்கவேண்டும். ஆனால் இலங்கைத் தமிழ்ச் சூழலில் குளத்திடை போட்ட கல்லான நிலைமைதான் வழக்கம்போல் பிரதிக்கு ஏற்பட்டிருக்கிறது. பத்திரிகை சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகளின் இத் தொகுப்பு மிகுந்த அவதானிப்பில் தோன்றிய வினாக்களுக்கு கண்டடைந்த விடைகளை மிகச் சுருக்கமாகவும், இறுக்கமாகவும் சொல்வதோடு, விடையாக எதையும் சொல்லாத இடங்களிலும் வினாக்களை எழுப்பிய அளவில் திருப்திகொண்டு தம்மை அமைத்திருக்கின்றன.  

பத்தொன்பது சிறு கட்டுரைகளின் தொகுப்பான இச் சிறு நூல் கொள்ளும் விகாசம் பெரிது. இதுபற்றி கவனம் கொள்கையில் முதலில் இதன் முன்னுரைபற்றிப் பேசவேண்டும். கட்டுரைகள் சொன்னவற்றை மிகச் சரியாக எடைபோட்டு அவற்றின் குறை நிறைகளைச் சுட்டி அதுவொரு வாசக திசைகாட்டியாக பொருத்தமாகச் செயற்பட்டிருக்கிறது. ஒரு முன்னுரையாகவன்றி நூலின் திறனாய்வாகவே அது உருக்கொண்டிருக்கிறது. அந்தளவு ஓர் கனதியான முன்னுரையை தாங்கக்கூடிய வலிமை ந.மயூரரூபனின் கட்டுரைகளுக்கு இருக்குமாவென, அதை முதலில் வாசிக்கையில், என்னில் ஐயுறவெழுந்தது. கட்டுரைகளை வாசித்த பின்னால் இது ‘காகத்தின் தலையில் பனம்பழத்தை வைத்த கதை’யாக இல்லையென்பதைத் தெரியமுடிந்தது.

இந்த பத்தொன்பது கட்டுரைகளை நோக்குகையில் படைப்பு – படைப்பாளி – வாசகன் ஆகிய தளங்களில் தனித்தனியாகவும், பின் ஒட்டுமொத்தமாகவும் ‘புனைவின் நிழல்’ தன் கருத்தை முன்வைத்திருப்பதாகக் கொள்ளமுடியும்.

இப் பிரதி முன்வைக்கும் கருத்துச் சாராததும் நூலாக்கம் சம்பந்தப்பட்டதுமான இரண்டு அம்சங்களை முதலில் குறிப்பிடுவது நல்லது எனத் தோன்றுகிறது. ஒன்று, தெளிவற்றதும் தீவிரமற்றதுமான சில கட்டுரைகளை, குறிப்பாக ‘ஆண்குறியாலான அதிகாரம்: காலம் கலங்கி மடியும் மந்திரம்’ என்பதுபோன்றவற்றை தொகுப்பில் சேர்க்காது விட்டிருக்கலாம். அவை பொருள் மயக்கமும் தெளிவின்மையும் கொண்டிருக்கின்றன. ஏனைய கட்டுரைகளோடு ஒப்பிடுகையில் அவை வலிமை குறைந்தவையும். அடுத்து, நிறுத்தக் குறியீடுகள் தேவையற்ற இடங்களிலும், அதிகமான இடங்களில் தவறான பிரயோகத்திலும் வருவதைத் தவிர்த்திருக்கலாம். இதனால் பொருள் கோடலின் இடைஞ்சல் வாசிப்பின் வேகத்தையும் சுகத்தையும் தடுக்காது இருந்திருக்கும்.  

இக் கட்டுரைகள் பலவிடங்களில் இயங்கியல், அமைப்பியல் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன. இயங்கியல் என்ற வார்த்தையை இயங்குமுறை எனக் குறிக்கவேண்டுமிடங்களிலும் பயன்படுத்துவதால் விளக்கக் குறைவு ஏற்பட்டு வாசகனை மலைக்க வைக்கின்றது. அவை கவனிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் பேச்சு வழக்கில் பயன்படும் அமைப்பியல் என்ற பதம் (சிலர் அமைப்பியலெனவே எழுத்திலும் பயன்படுத்துகின்றனர்) இன்று எழுத்திலும் அவ்வாறே பயன்படுத்தப் படுவதில்லையென்பது ஆய்வுலகில் அறிய வந்துள்ள விபரம். அது அமைப்பு மையவாதமெனவே படுகின்றது (பார்க்க: ‘அமைப்பு மையவாதமும் பின்அமைப்பயிலும்’, க.பூரணச்சந்திரன்). இது முக்கியமான அம்சமில்லையெனினும் வாசக தெளிவுக்காக இதுவும் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம்.

பிரதி தன் கவனம் குறித்த படைப்பிலக்கியமாக கவிதையை முதன்மையாகவும், பிற படைப்புத் துறைகளை தேவையான அளவிலும் கருத்தில் கொள்கிறது. அது சரியானதே. கவிதையே இன்னும் மொழியின் அரசியாக இருக்கிறதென்பது சரியான கூற்றேயாகும். அதனால் முன்பகுதியில் வரும் பெரும்பாலான கட்டுரைகளும் கவிதைபற்றியே பேசுகின்றன அல்லது கவிதையை வைத்துப் பேசுகின்றன. கவிதையின் படைப்பும், அதன் கருத்து நிலையும், வாசிப்பும், வாசக மனநிலையில் கருத்தியல் தாக்கமும் பணியும்பற்றி மிகச் சுருக்கமாக, ஆனால் பாதிப்பு ஏற்படும் விதத்தில் அறைந்தும் அடர்த்தியாகவும் கருத்துரைத்துச் செல்கின்றன.  

கவிதைபற்றிய நவீன சிந்தனைகளை பிரதியாளன் விசாரணையில் சாட்சியங்களாக அழைத்திருப்பது வரவேற்புக்குரியது. அச் சிந்தனைகளின் வழி எடுத்துக் காட்டப்பெற்ற கவிதைகளும் இதுவரை வாசக கவனம் கொள்ளப்படாதவையாக இருக்கின்றன. இதிலுள்ள முக்கியமான அம்சம் அவை சமூக, இலக்கிய நவீன கோட்பாடுகளில் உரசிப் பார்க்கப்படுவதுதான். ‘நம்பிக்கையின்மை: விட்டு விலகும் பெருங்கதையாடல்’ கட்டுரை இதற்கான சிறந்த உதாரணம்.

அமைப்பு மையவாதத்தின் மீது பின்அமைப்பியல் எழுப்பியதுபோன்ற கேள்விகளை எழுப்பி கவிதைகளில் பொதிந்துள்ள கருத்துக்களினதும், கவிஞர்களது கருதுகோட் புலத்தினதும் ஆழமும் விசாலமும் பல கட்டுரைகளிலும் பார்க்கப்பட்டுள்ளன. பிரதி பெரும்பாலும் இவற்றில் தவிர்த்துள்ள ஒரு சொல், மூன்றாவது கட்டுரை நீங்கலாக, ‘பின்நவீனத்துவம்’ என்பதாகவே எனக்குப் படுகிறது. பின்நவீனத்துவம் காலவதி ஆகிவிட்டதென்ற மாயையில் இது நடந்ததாவென எனக்கோர் ஐயமுண்டு. ஆனாலும் மேற்குலகில் அதுபற்றிய கருத்தாடல்கள் முன்புபோல் இல்லையென்பதையும் இங்கே நினைத்துப் பார்க்கலாம். இது, பிரதி பின்நவீனத்துவ அடிப்படையில் எதையும் திறனாய்வுக்கு உட்படுத்தவில்லை என்பதான குறையாக ஆகாது. அது மிகத் தீவிரமாக அதன் கூறுகளிலிருந்தே படைப்பை நோக்கியிருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். உண்மையில் பின்நவீனத்துவத்தின் பல கூறுகள் பின்அமைப்பியலின் பல சித்தாந்தங்களது செழுமைப்படுத்தப்பட்ட வடிவங்களே.

இன்னொரு முக்கியமான கட்டுரை, ‘பொதுவுடைமையாக்கப்பட்ட இருப்பு: பொதுப்புத்தியின் எதிர்முனைப் பயணம்’ ஆகும். ‘பொதுப்புத்தியின் வழி பேசப்படுகின்ற பொதுவுடைமை என்பது அதன் இயல்பான போக்கிற்கு எதிரானது’ என்று பிரதி இக்கட்டுரையில் சொல்கையில், பொதுப்புத்தி என்பதனையும் அது பின்அமைப்பியத்தில் சொல்லப்படும் பொதுப்புத்தியிலிருந்து வேறானது என்பதனையும் உணர்ந்து, அதன் செல்நெறியை மிகத் திறமாகக் கவனம் கொண்டிருப்பதைக் காணவேண்டும்.

அதுபோலவே பிரதியின் ஒன்பதாவது கட்டுரையான ‘எழுதுதல்: அகச் சொல்லுடன் சேரும் புறச் சொல்’ எழுத்தினதும், சொல்லினதும் சமூகவயப்பட்ட திறன்களைப் பேசுகின்றது. ‘எழுதுதல் என்பது தனி ஒருவரின் கொள்கை அல்லது கருத்துநிலைக்கும், வரலாற்று சமூக புறநிலைகளின் பாதிப்பிற்கும் இடையில் இயங்கும் ஒன்று’ என இக்கட்டுரையில் சொல்லப்படுவது மிக விரிவாக அலசப்படவேண்டும். நாளிதழின் இலக்கியப் பகுதிக்கு எழுதியதனால்போலும் விரிவஞ்சி விடப்பட்டுள்ளது. ஆயினும் தன் முடிவை தவற விட்டுவிடாத அவதானத்துடன் சொல்லியிருக்கிறது.

வாசக மனநிலையும் வாசிப்புச் செயற்பாங்கும்பற்றி பல கட்டுரைகளில் பேசப்பட்டுள்ளன. குறிப்பாக ‘படைப்பின் உண்மை: அபத்தப் புலனாய்வு’ மற்றும் ‘குலக்குறி இலக்கியம்: வாசிப்பின் மோட்சம்’ ஆகிய கட்டுரைகள் இவற்றையே மையப்படுத்துகின்றன. புதிய வடிவங்களுக்கும், புதிய எழுத்து முறைகளுக்கும் வாசகன் பழக்கப்பட்டிருக்கவில்லை என்பதை மிக தெளிவாகச் சொல்கிறார் ந.மயூரரூபன். அந்த பழக்கப்பட்ட பாதையிலிருந்து விடுபடுதலை முக்கியமாக வலியுறுத்துகிறார் அவர். நவீன இலக்கிய உருவாக்கத்தின் பிற்பகுதியில், பல புதுக் கவிஞர்களின் கவிதைகளும், பல படைப்பாளிககளின் படைப்பிலக்கிய எழுத்துக்களும் ‘விளங்கவில்லை’யென்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவையே. அது தீவிரத்தின் அளவாக தாமெடுக்கும் இறுக்கமென்றும், தொடர்ந்தேர்ச்சியான வாசிப்புப் பழக்கத்தின் மூலமே அவை புரிதலாகுமேயன்றி புரியாதிருப்பதற்காகவே எழுதப்படுபவையல்ல எனவும் அப்போது சொல்லப்பட்டது. அதைத் இலங்கைத் தமிழிலக்கியச் சூழலில் ஓங்கிச் சொல்லியிருக்கிறார் ந.மயூரரூபன். மேலும் இலங்கை யுத்தத்திற்குப் பின்னால் அதன் தமிழிலக்கியத்தில் வாசிப்பும் படைப்பும் சார்ந்த துறைகள் தீவிரம் பெற்றுள்ளனவென்பதையும் அவர் தவறாது குறிப்பிடுகிறார். கவிதைகளினூடு அவர் வந்தடையும் இந்த முடிவு உவப்பானதாக இருக்கிறது.

அடுத்து படைப்பின் பார்வைபற்றிய கட்டுரையான ‘முக்கோண உறவு: படைப்பின் விருப்பு’, படைப்பும் படைப்பாளியும் வாசகனனும் பிராய்டிய வழியில் பார்க்கப்படுவதுபற்றியும், அவ்வாறு செய்வதின் தவறுள்ளது எனவும் விபரிக்கின்றது.

‘கைலாசபதி: மேற்கட்டுமான மார்க்சியம்’ என்ற கட்டுரைமீதாகவே ஒரு பெரும் வாதப் பிரதிவாதம் இலக்கியச் சூழலில் எழுந்திருக்கவேண்டும். அது நிறுவப்பட்ட கருத்துப் படிமமொன்றினை நொருக்கும் ஆற்றலோடு வெளிவந்திருக்கிறது. இவ்வழி வாசிப்பும், ஆய்வு கோறலும் இலங்கைத் தமிழ் இலக்கியச் சூழலில் அவசியமென்பதை கட்டுரை வலியுறுத்துகின்றது. பரவலாக ஒரு விஷயம் அவதானிக்கப்பட்டிருக்க முடியும். பின்அமைப்பியல் மற்றும் பின்நவீனத்துவ துறை சார்ந்த பல சிந்தனையாளரும் தத்துவவாதிகளும் மார்க்சிய ஊடகங்களில் பணிபுரிந்த அல்லது மார்க்சிய அமைப்புகளில் பங்காற்றியவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்பதுதான் அது. மார்க்சியத்தை மறுதலித்த அல்ல, அதிலிருந்து கிளைபிரிந்த ஒரு சிந்தனையாக அதை அவர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். அதிலிருந்தான தொடர்ச்சியே நவீன மார்க்சியம் அல்லது பின்னை மார்க்சியம் என்றாலும் சரிதான்.  

பேராசிரியர் க.கைலாசபதியின் இருப்புநிலை விவாதத்தை இங்கிருந்தே தொடங்கவேண்டும். ஆயினும் இலங்கைத் தமிழிலக்கியம் என வருமிடத்தில் அவர் நிற்கிறார். அதுவொரு வரலாற்றுக் கால நிகழ்வு. ஈழ இலக்கியத்தினை கட்டமைத்த செயற்பாங்கு. ஆயினும் அது நவீன சிந்தனைகளின் புலத்தில் கேள்விக்குட்படுத்தல் அவசியமென்பதில் மாற்று அபிப்பிராயம் கிடையாது. லெனினியம் மார்க்சியங்களைவிட ட்ரொட்ஸ்கிய பார்வையில் கோட்பாடு சார்ந்தல்லாத இலக்கியத்துக்கு விரிவான தளம் கொடுக்கப்பட்டிருந்தது என்பதை இந்த இடத்தில் நாம் நினைத்துப் பார்க்கலாம். இக் கட்டுரையும் ஆய்வுமுறைப்படி கலாநிதி க.கைலாசபதியின் படைப்பிலக்கியம் ஊடான திறனாய்வுகளின் தவறுகளையும் சறுக்கல்களையும் சரிகளையும் தான் கண்டடைந்தபடி முன்வைத்திருக்கிறது. விவாதத்திற்கான இவ் விஷயம் விவாதத்திற்காக முன்னெடுக்கப் பட்டிருக்கவில்லை என்பது கட்டுரை செல்லும் வழியில் காணக்கூடியதாய் உள்ளது. இவ்வகையிலான அபிப்பிராயங்கள் பேசப்பட்டிருக்கின்றன வாசகர் திறனாய்வாளர் மத்தியில். ஆனால் அதற்கு உருவம்கொடுத்து உலவ விட்டிருப்பது ந.மயூரரூபனாலேயே முடிந்திருக்கிறது.

மீண்டும் நேரடியாக கவிதைபற்றிய ஆய்வுக்குள் புகும் பிரதி அதன் மொழிபற்றியும், வாசிப்பின் முறைமைபற்றியும் பேசுகின்றது. அதில் அச்சொட்டாய் வரும் ஒரு வாசகம், ‘கவிதை எப்போதும் வாசகனுக்கானதே. கவிஞனுக்கோ விமர்சகனுக்கோ உரியதல்ல’ என்பது. எல்லாப் பிரதியும் வாசகனுக்கானதே என்பதும் சரிதான். வாசக மைய விமர்சனம் வீச்சாக முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்து இப் பார்வை வலிமைகொண்டு இலக்கியவுலகில் நிலவிவருகிறது.  

இறுதிக் கட்டுரையான ‘கவிதை – கண்டாயம் – வாசிப்பு’ ரசனைமுறை வாசிப்பைச் சொல்வதாகத் தொடங்கி வாசிப்பின் சாத்தியங்களை, சமூகநிலைக் காரணிகளால் உருவாகும் கோட்பாட்டு வாசிப்பினையே இறுதியாகச் சொல்லி முடிகிறது.

படைப்பு – படைப்பாளி – வாசகன் ஆகிய தளங்களின் ஆய்வும், அவற்றினூடான திறனாய்வும் கடந்த கால ஈழத் தமிழ் இலக்கியத்தில் போதாமைகொண்டே இருந்திருக்கின்றன என்பது வெளிப்படை. இன்று இவை தீவிரப்பட்டுள்ளன. இதன் அடையாளமே திருவாளர்கள் ராஜேஸ் கண்ணன், சபா.ஜெயராசா போன்றோரின் பங்களிப்புகள். அவை ந.மயூரரூபனில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன என்பது மிகையான கூற்றல்ல. படைப்பிலக்கிய கூறுகளான கவிதை மற்றும் சிறுகதைத் துறைகளில் தானே படைப்பாளியாகவுள்ள ந.மயூரரூபன் இன்னும் வலுவான தாக்கத்தை இவற்றில் ஏற்படுத்த முடியும். இப் பிரதி அதற்கு திறமான சான்று.

baladevakanthan@gmail.com