படித்தோம் சொல்கிறோம்: ஈழத்தமிழ் மக்களிடம் திணிக்கப்பட்ட போரின் அவலங்களைப் பேசும் கருணாகரனின் வேட்டைத்தோப்பு அரசியல் அறமே கூற்றுவனாகி மக்களின் வாழ்வை குலைத்துப்போட்டதை சித்திரிக்கும் தொகுப்பு!

ஈழத்தமிழ்  மக்களிடம்  திணிக்கப்பட்ட  போரின்   அவலங்களைப் பேசும்   கருணாகரனின்     வேட்டைத்தோப்புமுருகபூபதிஇலங்கையில்   மட்டுமன்றி   தமிழகம்  மற்றும்  தமிழர்  புகலிட நாடுகளிலும்    இலக்கிய   வாசகர்களின்   கவனிப்பிற்குள்ளான கருணாகரன்  –   கவிஞராகவே    முன்னர்   அறியப்பட்டவர்.    வெளிச்சம் இதழின்    ஆசிரியராகவுமிருந்தவர்.    பத்தி   எழுத்தாளர் -ஊடகவியலாளர் –   சில நூல்களின் பதிப்பாளர்   –  இலக்கிய     இயக்க செயற்பாட்டாளர்.  எனக்கு  கருணாகரன்  இலக்கியத்தின்  ஊடாக  அறிமுகமானது  2008 இல்தான்.  லண்டனில்   வதியும்  முல்லை  அமுதன்  தொகுத்து   வெளியிட்ட இலக்கியப்பூக்கள்   தொகுப்பில்  மறைந்த  செம்பியன் செல்வனைப்பற்றி    கருணாகரன்   எழுதியிருந்த    கட்டுரை வித்தியாசமானது.    வழக்கமான   நினைவுப்பதிவுகளிலிருந்து முற்றிலும்    மாறுபட்டு    புதியகோணத்தில் எழுதப்பட்டிருந்தது. எனக்கு    அந்தத்தொகுப்பில்    மிகவும்   பிடித்தமான   அக்கட்டுரையை எழுதிய    கருணாகரன்   யார்?    அவர்    எங்கே   இருக்கிறார்?    என்று ஒரு நாள்   முல்லை  அமுதனுடன்   தொலைபேசியில் தொடர்புகொண்டு    விசாரித்தேன். கருணாகரன்   வன்னியிலிருப்பதாக தகவல்   கிடைத்தது.   2009 இல் மெல்பனில்    நடந்த   எழுத்தாளர்   விழாவில்   குறிப்பிட்ட இலக்கியப்பூக்கள் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.   பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா    அறிமுகப்படுத்தினார். இவ்விழாவில்   கலந்துகொண்ட    ஜெயமோகன்   தமிழகம் திரும்பியதும்   எழுதியிருந்த   புல்வெளிதேசம்   நூலிலும்  இந்தத் தகவலை    பதிவுசெய்திருந்தார்.

 2009   மே   மாதம்   வன்னியுத்தம்   பேரவலத்துடன்   முடிவுக்கு வந்தவுடன்   கருணாகரன்   என்னவானார்    என்ற   கவலையுடன் ஆழ்ந்து    யோசித்தேன்.    ஜெயமோகனுடன்    தொடர்புகொண்டு கருணாகரனை     தொடர்புகொள்ள   தொலைபேசி   இலக்கம் பெற்றேன்.    அச்சமயம்    வவுனியாவில்    நின்ற   அவரை   ஒருவாறு தொலைபேசியில்    பிடித்துவிட்டேன். பின்னர்   2010   இறுதியில்   இலங்கை   சென்று    கருணாகரனை யாழ்ப்பாணத்தில்   பல்கலைக்கழக     வாயிலில்   சந்தித்தேன்.   அவர் எழுதிய   செம்பியன்  செல்வன்   பற்றிய   கட்டுரையிலிருந்து தொடர்ச்சியாக   அவரது   சமூக   ஆய்வுகள்  –   இலக்கியப்பிரதிகள்  –  பத்தி   எழுத்துக்கள்   –  கவிதைகள்   –   தமிழக  இதழ்களில்   வெளியான   அவரது   இலக்கிய   கடிதங்கள்   உட்பட   அவர் சம்பந்தப்பட்ட   பிரதிகளையெல்லாம்    படித்துவருகின்றேன். அவரும்   ஒரு  சிறுகதை  எழுத்தாளர்தான்   என்பதை    அவருடைய வேட்டைத்தோப்பு   கதைத்தொகுதியைப்   பார்த்து தெரிந்துகொண்டேன்.    அவர்    படைப்பு    இலக்கியத்தில்    சகலகலா விற்பன்னர்தான்   என்ற   முடிவுக்கு   வந்து    இக்கதைத்தொகுப்பினுள் சென்றேன். பதினான்கு    சிறுகதைகளைக்கொண்ட   இத்தொகுப்பினை   ரயில் பயணங்களிலேயே    படித்து  முடித்தேன்.    பயணங்கள்   முடிவுறாமல் தொடருவதுபோன்று   அவர்   அச்சிறுகதைகள்    ஊடாக   சொல்லும் செய்திகளும்    முடிவுறாமல்    தொடருகின்றன. 1995  ஆம்  ஆண்டு  முதல்  2008  ஆம்   ஆண்டு   வரையில்   14  ஆண்டு காலப்பகுதியில்   இச்சிறுகதைகள்    எழுதப்பட்டிருக்கின்றன.   ஆனால் எந்த    இதழ்களில்   வெளியாகின    என்ற    விபரம்   தெரியவில்லை. வடக்கில்    போர்   உக்கிரமாக   நடந்த    காலப்பகுதியிலிருந்துதான் எழுதப்பட்டிருக்கின்றன. 2002 – 2003   சமாதான   காலப்பகுதியில்   அவர்   சிறுகதைகள் எழுதினாரா ?    என்பதும்    தெரியவில்லை.

போர்க்களத்தின்    நேரடி   அவலப்பாதிப்பு     தெரியாமலேயே புகலிடநாடுகளில்    பல    கவிஞர்கள்     யாரையோ   திருப்திப்படுத்த உணர்ச்சியூட்டும்   கவியரங்குகள்    நடத்திக்கொண்டிருந்தபொழுது அந்த    அவல    வாழ்வுக்குள்ளிருந்து    கருணாகரன்   கவிதைகள் -கதைகள்  படைத்தார்.     மேலும்    சொல்லப்போனால்    மரணத்துள் வாழ்ந்துகொண்டு    அவர்   எழுதியிருக்கிறார்.     இயங்கியிருக்கிறார். ஒரு  பொழுதுக்கு   காத்திருத்தல்   –  ஒரு   பயணியின் நிகழ்காலக்குறிப்புகள்   –   பலியாடு   –  எதுவுமல்ல   எதுவும்   –  ஒரு பயணியின்    போர்க்காலக்குறிப்புகள்   என    இதுவரையில்  ஐந்து கவிதைத் தொகுப்புகளை   வெளியிட்டு   கவிஞராகவே   நன்கு அறியப்பட்ட   கருணாகரன் –  வேட்டைத்தோப்பு   மூலம்   தன்னை சிறந்த   சிறுகதைப்படைப்பாளியாகவும்   அழுத்தமாக   அடையாளம் காண்பித்திருக்கிறார். அவருடைய   கவிதைகள்  சிங்களம்  –  ஆங்கிலம்  –   மலையாளம்  – கன்னடம்  –  பிரெஞ்சு   மொழிகளில்  பெயர்க்கப்பட்டிருப்பதாக அறியக்கிடைக்கிறது.

அதுபோன்று  அவரது  சிறுகதைகளும்   பிறமொழிகளில் பெயர்க்கப்படவேண்டியது  என்பதே   எனது   வாசிப்பு  அனுபவம் கூறும்   செய்தி.   அதற்கு   இச்சிறுகதைகள்   சர்வதேச  தரத்திலிருப்பதும்  காரணியாகும். சில   கதைகளை   எந்த  ஒரு   வரியையும்  நீக்காமல்   தனித்தனி வரியாக   பதிவுசெய்தால்    ஒரு   நெடுங்கவிதையை   அங்கு காணமுடியும்.   அவர்   இயல்பிலேயே   ஒரு   கவிஞர்தான் என்பதையே   அவை  நிரூபிக்கின்றன. இவ்வாறு   ஒரு   படைப்பாளி   இனம்  காணப்படுவதும்   அபூர்வம்தான். இந்தக்கதைகள்   போர்க்காலத்தில்   எழுதப்பட்டவை.   அதன் சமகாலத்து  அசைவுகளை   கடுமையாக   விமர்சனம்  செய்பவை.   படைப்பாளி  ஒருவன்    கொண்டிருக்கும்   கலைத்துவம்  –   மனிதநேயம்  – சிறுமைகண்டு  பொங்கும்  குணம்  –   பரிவு   கொண்டு  உதவும்  மனப்பாங்கு   என்பவற்றோடு   மிகத்தெளிவான    கொள்கையும் தீர்க்கதரிசனமும்    முக்கியமானவை.   அநேகமான   படைப்புகள் தோற்றுப்போன   இடம்  –   எதிர்காலம்    பற்றிய   தெளிவான  பார்வையற்று    யதார்த்தத்தின்    முன்    இடறிவிழுந்துவிடுவதுதான்.  கருணாகரன்    இவற்றிலிருந்து   அதிகம்   வேறுபடுகின்றார்.   அதற்கு இதிலுள்ள   கதைகள் சாட்சி.   என்று    ப. தயாளன்   தனது   பார்வையை   இந்நூலில் பதிவுசெய்துள்ளார். கருணாகரனின்   சிறுகதைகளுக்குள்    பயணித்தபொழுது   தயாளனின் கூற்று   சரியாகவே   இருப்பதை   உணர்ந்தேன். போர்க்காலத்தில்     மட்டுமல்ல    போர் முடிவுற்ற    காலத்திலும்   பல படைப்பாளிகளும்    அரசியல்   ஆய்வாளர்களும்   இடறி விழுந்துகொண்டுதானிருக்கிறார்கள்.

நமது   இளைய  தலைமுறைக்கு   ஈழத்துக்கனவுகள்   பற்றி அறிந்துகொள்ள    அவரது    இந்தச்சிறுகதைகள்   ஒரு  சாட்சியாக இருக்கின்றன.  என்ற   கவிஞர்   வ.ஐ.ச.   ஜெயபாலனின்   கூற்றும் ஏற்புடையதே. முதலாவது   சிறுகதை   வேட்டைத்தோப்பு –  முதல்   பந்தியே  தொடர்ந்து   படிக்க   எமக்கு   ஆர்வமூட்டுகிறது. வடக்கு   நோக்கிச்செல்லும்  கண்டிவீதியில்   இயக்கச்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும்    இடைப்பட்ட   தூரம்  குறித்து   மைல் தொலைவும்   கிலோ  மீற்றர்  தொலைவும்    அங்கிருக்கும்   நடுகற்கள் சொல்கின்றன. தர்மசேன   பத்திராஜா  இயக்கிய   ஏ 9  ஆவணப்படம்தான்   (In Search of a Road)    உடனடியாக  நினைவுக்கு   வந்தது. இக்கதையில்   முதல்   மூன்று   பந்திகளில்   இலங்கை   காலனி   ஆதிக்க காலம்   வந்துவிடுகிறது.   அத்துடன்   இயக்கச்சி   கிராமத்தின் இயற்கை   வனப்பும்   சூழலும்   ஓவியமாக    எமது   மனக்கண்ணில் பதிந்துவிடுகிறது.    ஊர்    மாறவில்லை.    ஊரிலிருந்து   பூமியின் திசைகளெங்கும்    ஆட்கள்   புலம்பெயர்ந்து செல்வந்தர்களாகிவிட்டார்கள்.   ஆனால் –  ஊர்   இன்னும் அப்படியேதானிருக்கிறது.   என்று    எழுதுகிறார்.   யதார்த்தம்  செறிந்த வார்த்தைகள்.  இயக்கச்சி    மட்டுமா   இலங்கையில்   பல  ஊர்கள்  கிராமங்களும் அப்படியேதானிருக்கின்றன.    இவையாவது     அப்படியே    இருக்கட்டும். அவற்றை    அவற்றின்    வனப்பை   வளத்தை    எவரும்   சிதைக்காது இருக்கட்டுமே    என்றுதான்    சொல்லத்தோன்றுகிறது.

வேட்டைத்தோப்பில்   ஒல்லாந்தர்   காலம்   வருகிறது.   வடக்கே பிரசித்தமான    பனங்கள்ளு    பற்றிய   வரலாற்று   ஆவணமே    அங்கு பதிவாகின்றது.    இச்சிறுகதையில்   சர்வதேச   பரிமாணத்தை கருணாகரன்    அழகியலுடன்    வெளிப்படுத்துகிறார்.    கருணாகரனின் கதைகளில்  எந்த   ஒரு  சொல்லைத்தன்னும்  நீக்கிவிட்டால் அவற்றின்   கட்டுக்கோப்பு   குலைந்துவிடும்.    அதனால்    அவர் மிகுந்த    அவதானமாகவே   சொற்களை    இணைத்து வசனங்களாக்குகின்றார்.  இத்தொகுப்பிலிருக்கும்   அனைத்துக்கதைகளிலும் அந்தப்பண்பைக்காண முடிகிறது. கருணாகரனின்   கதைகளில்   நீடித்தபோரும்    வருகிறது.    அதில் களமாடிய     போராளிகளும்   வருகிறார்கள்.   பாதிக்கப்பட்ட    மக்களும் வருகிறார்கள்.    அவர்களின்   மனக்குரலும்   பேசுகிறது.

கண்ணில்   முளைத்த   முள்வனம்    என்ற   கதையில்   மகன்  மௌனிக்கும்பொழுது   அம்மா    கேட்கிறாள்:   ஏன்   மகனே    உன்வாயில்    ஆயிரம்    பூட்டுக்கள்   ஏன்    தொங்குகின்றன? அம்மாவின்   கண்கள்   லட்சம்   சூரியன்களின்  பிரகாசமாக   தகித்து   ஒளிர்ந்தன.    கண்ணீர்   மணக்குமா?    மனம்   நாறுமா?  இக்கதையில்     இப்படி   பல   கவித்துவ   வார்த்தைகள்.  எலிகள்    வாழ்ந்த  புத்தகக்கட்டுகள்   சிறுகதை   சுவாரஸ்யமானது. வீடுகளில்   புத்தகங்களை    சேகரித்துவைப்பவர்கள்    இச்சிறுகதையுடன் தங்களையும்   ஒப்பிட்டுப்பார்க்க முடியும்.    உமாவரதராஜன்   எழுதிய எலிகள்   பற்றிய   கதையும்  அதற்கு   எதிர்வினையாற்றியவரும்    யாரோ   ஒரு   பேராசிரியரும்    தெலுங்கு    தேசத்தின்   கீரியின் கதையும்   எலிகளினால்   பரவும்   பிளேக் நோய்   குறித்து   ஆல்பர் காம்யூவின்   புகழ்பெற்ற   கதை   பற்றிய   தகவலும் இச்சிறுகதையில்   இணைந்துவருகின்றன.  இச்சிறுகதை   Frank Darabont   இயக்கிய The Green Mile  திரைப்படத்தில்    வரும்   மின்சாரக்கதிரை மரணதண்டனைக்கைதியின்  தோழனாக    அந்தச்சிறைச்சாலையில் ஓடித்திரியும்   எலியை    நினைவுக்கு  கொண்டுவந்தது.   அந்தத் திரைப்படத்தில் வரும்   எலி  முக்கியமான   பாத்திரம்.   எலிகள் வாழ்ந்த  புத்தகக்கட்டுகள்   சிறுகதையில்    எலிக்குப்பின்னாலிருக்கும் சரித்திரமும்    பேசுகிறது. புத்தகங்களை   மட்டுமல்ல   மனிதர்களையும்  அவை   சுவைக்கும். புத்தகங்களை    எலி   அரித்தால்   அடையாளம்  தெரியும்.   மனிதர்களை   அவை    சுவைத்தாலும்   அடையாளம்   நிரந்தரமாகும். மருத்துவம்   படிப்பவர்களுக்கும்   பால   பாடம்   எலியிலிருந்துதானே தொடங்குகிறது.

தேவன்   வருவாரா?  என்ற   சிறுகதையை   கேள்விக்குறியுடன்   1960 களில்   ஜெயகாந்தன்    எழுதியிருக்கிறார்.   அதுகுறித்து  ஜெயகாந்தன் :-  கிறிஸ்தவர்கள்    தேவன்  வரப்போகிறார்   என்று  ஒரு  திருநாளை எதிர்பார்த்திருப்பதுபோல்   மனித  சமூகம்  ஒரு   பொன்மயமான எதிர்காலம்  வரப்போகிறது   என்ற   நம்பிக்கையில்தான்  வாழ்கிறது. என்று எழுதியிருந்தார். இங்கே  2008  இல்   கருணாகரன்  தேவன்   வருவார்  என்ற  தலைப்பில்    கேள்வியையே    பூடகமாக   பதிவுசெய்து   ஒரு  சிறுகதை எழுதியிருக்கிறார்.    பல  வருடங்களாக    சூரியதேவனையே  நம்பியிருந்த    விடுதலைப்போராளிகளும்   மக்களும்  ஒரு  கட்டத்தில்     மனக்குமுறலுக்கு  ஆட்பட்டதை   அதிர்வுடன் பதிவுசெய்கிறது   இக்கதை. படிக்கும்பொழுது   பதட்டம்தான்   வருகிறது.   வன்னிமண்ணில் மட்டுமல்ல   அங்கு   வாழ்ந்த   போராளிகள்    மற்றும்   மக்களின் மனங்களிலும்   போர்   உக்கிரமாக   தொடர்ந்திருக்கிறது   என்பதை இக்கதை    அழுத்தமாகச்சொல்கிறது. இப்போது   படைகள்   அவனுடைய   ஊருக்கு  அருகில்   நிற்கின்றன.  ஏறக்குறைய   தமிழ்ச்சனங்களின்   இடங்களில்   பாதிக்கும்  மேல் படைகளிடம்   வீழ்ந்துவிட்டன.   இதில்   எல்லை  எங்கே?  என்ற  கேள்வி  (பக்கம் 155)   முன்வைக்கப்படுகிறது.    அதில்   அடுத்து   மக்கள் எங்கே   நகர்வது    என்ற    கேள்வி  தொக்கி நிற்கிறது.

‘ வாங்கோடா… எடேய்..  என்ரை   பிள்ளையைக்கொண்டு   போனியள். என்ர    தம்பியையும்   கொண்டு   போனியள்.    இப்ப   என்ர    புருசனையும் கொண்டு    போறியளா? தினக்கூலிக்குப்போய்ப்பிழைக்கிற   நாங்கள்  இனி  என்ன   செய்வம்? ஐயோ   கடவுளே…    அடோய்    வாங்கோடா   உழைக்கிற புருசனைக்கொண்டு    போறியள்.  . ……”    என்று    அவள்   காறித்துப்பினாள்.   (பக்கம் 162)

இந்த   வரிகளைப்படித்தபோது   – 2008   இல்   எழுதப்பட்டகதையா?   என்ற    அதிர்வுகலந்த    கேள்வி  மனதில்   தொக்கி   எழுகிறது. அந்தத்துப்பல்   யாரை   நோக்கிய   துப்பல்?   அந்த   எச்சிலில்  தீயின் சுவாலை.    எச்சிலும்   எரிக்கும்.   அந்தவரிகளில்   பார்வை   நிலைகுத்திய  கணங்கள்   நகர மறுக்கின்றன.  போர்க்காலக்கதைகள் –  போர்க்கால  கவிதைகள்  என்றெல்லாம் இலக்கிய   விமர்சகர்கள்   எழுதிவருகிறார்கள்.    அவர்கள்   அவசியம் படிக்கவேண்டிய    சிறுகதை    கருணாகரனின்   தேவன்  வருவார்.  செல்லத்தம்பியின்   குடும்பம்  இப்போது  தேசத்துரோகி  குடும்பமா? அல்லது    போராளிக்குடும்பமா?   என்ற    கேள்வியுடன்    முடிகிறது. அந்த  முடியாத   கதை.

போருக்குள்   மக்களை    திணித்தவர்கள்  –   போரை   நீடித்தவர்கள்  –  விடாக்கண்டர்கள் – கொடாக்கண்டர்கள்   –  அனைவரதும் மனச்சாட்சியை    உலுக்கும்   சிறுகதை   தேவன்    வருவார்.   இந்த வேட்டைத்தொகுப்பில்   இதுவே   மகுடக்கதை    என்பேன்.

ஒருவருக்கு    வெற்றியைத்தரும்    போர்க்களம்   இன்னொருவருக்கு தோல்வியை    பரிசளிக்கிறது.   அந்தத்தோல்வி    வெறுமனே தலைகவிழ்ந்து    கொண்டு   போவதுடன்   மட்டும்    முடிவதில்லை.   அது மரணத்தையும்     மீளமுடியா    அபாயகரமான   நிலைமைகளையும் கொண்டு    வருகிறது. (பக்கம் 187)   என்ற   வரிகள்   பரிசு   சிறுகதையில்  வருகிறது. இச்சிறுகதையில்   உலகப்புகழ்பெற்ற   கரமசோவ்   சகோதரர்கள் படைப்பும்   பேசப்படுகிறது. கருணாகரன்   தனது   தாயகத்தைவிட்டு   வெளியே   சென்றவர் அல்ல.    சிலவேளை   தமிழ்நாட்டுக்கு   மாத்திரம் சென்றிருக்கக்கூடும்.   ஆனால் –   அவரது   கதைகள்   சர்வதேச தரம் வாய்ந்திருப்பது    வியப்பளிக்கிறது.  இலங்கையில்   இவ்வாறு  சர்வதேச  தரத்தில்   பேசக்கூடிய    சிறுகதைகளை எழுதியிருப்பவர்களை   விரல்விட்டு    எண்ணிவிடலாம். கருணகரனின்    தீவிர   வாசிப்பு   அனுபவமும்    விரிந்த மனோபாவமும்   அவரிடமிருக்கும்    சிறப்பியல்புகளும்தான்  அவரது படைப்பு    ஆளுமையை   தீர்மானிக்கின்றன    என்ற   முடிவுக்கு வரச்செய்கிறது     அவரது   வேட்டைத்தோப்பு. வேட்டைத்தோப்பு    தொகுதியில்   இடம்பெற்றுள்ள  சில   சிறுகதைகள்  இதழ்கள்  ஊடகங்களில்    வெளியாகும்    முன்பே நண்பர்கள்    வட்டத்தில்   ( அவர்களில்   போராளிகளும் இருந்திருக்கலாம்)    வாசிக்கப்பட்டிருக்கும்    தகவல்   தயாளனின் குறிப்புகளிலிருந்து   தெரியவருகிறது.

கதைகளை    எழுதியவுடனே   இதழ்கள்   ஊடகங்களில்    வெளியிடும் வழக்கமான    மரபினை    கருணாகரன்   தகர்த்திருக்கிறார். அந்தத்தகர்ப்புத்தான்     தரமான   கதைகளை    தந்திருக்கின்றன. எலுமிச்சம்பழம்   அதிகநாட்களுக்கு   ஊறுகாய்  பானைக்குள்ளிருந்தால்   அதன்  சுவையே   தனி   என்பார்கள்.   நீண்ட காலம்    வைன்மது   பாதுகாக்கப்பட்டாலும்   அதன்   சுவை அலாதியானது    என்பார்கள். அதுபோன்று   படைப்பு   இலக்கியமும்   பல  நாட்கள்   பல  மாதங்கள்   ஏன்   பலவருடங்கள்   அவ்வாறு    கையெழுத்துப்பிரதியில் அல்லது   கணினியில்   விடப்படும்பொழுது    செம்மைப்படுத்துவதற்கும்    வசதியாக   இருக்கும்.   வன்னி பெருநிலப்பரப்பில்   அவ்வாறு    பல  நாட்கள்   ஊறிக்கிடந்த படைப்புகள்தான்     கருணாகரனின்   சிறுகதைகள். ஈழ   அரசியலையும்   அது   எம்மக்களுக்கு   திணித்த ஆயுதப்போராட்டத்தையும்  அதன்விளைவில்   விடிவே    தோன்றாமல் அவலமே   எஞ்சிய   கொடும்  துயரத்தையும்    கருணாகரனின்  கதைகள்   பேசுகின்றன.
மாக்ஸீய   இலக்கிய   விமர்சகர்கள்    எதிர்பார்க்கும்  சோஷலிஸ யதார்த்தப்பார்வையை    இக்கதைகள்   சித்திரிக்கவில்லை. பாதிக்கப்பட்ட   மக்களின்    ஆத்மாவையே    சித்திரிக்கின்றன.  கருணாகரனிடமிருந்து   மேலும்   பல  தரமான   கதைகளையும்   வாசகர்கள்   எதிர்பார்க்கமுடியும்    என்பதையும்    வேட்டைத்தோப்பு உணர்த்துகின்றது.

letchumananm@gmail.com