பண்டாரவன்னியன் வரலாறு தொடர்பில் வரலாற்று ஆய்வாளர்களை விவாதத்துக்கு அழைக்கிறார் அமைச்சர் சத்தியலிங்கம்!

ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் முற்பகுதியிலும் வன்னியரசுகளின் கடைசி சிற்றரசனாக விளங்கி, வன்னி பெருநிலப்பரப்பின் சுயாட்சிக்காக இறுதிவரை போராடி உயிர் துறந்த தமிழ் தேசிய மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நாடகம், கடந்த 06.07.2014 ஞாயிறு அன்று வவுனியா கலாசார மண்டபத்தில் முல்லைக்கலைஞர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்டது. ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் முற்பகுதியிலும் வன்னியரசுகளின் கடைசி சிற்றரசனாக விளங்கி, வன்னி பெருநிலப்பரப்பின் சுயாட்சிக்காக இறுதிவரை போராடி உயிர் துறந்த தமிழ் தேசிய மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நாடகம், கடந்த 06.07.2014 ஞாயிறு அன்று வவுனியா கலாசார மண்டபத்தில் முல்லைக்கலைஞர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்த நாடக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, வடமாகாண சுகாதார சுதேசிய வைத்தியதுறை அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது உரையில்,  “இங்கு அரங்கேற்றம் செய்யப்பட்ட நாடகத்தை பார்த்தேன். அதில் “காக்கைவன்னியன்” எனும் மற்றுமொரு குறுநில மன்னனால், பண்டாரவன்னியன் காட்டிக்கொடுக்கப்பட்டு துரோகத்தனத்தால் மாண்டதாக இந்த கலைஞர்கள் சித்திரித்திருந்தார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.  காக்கைவன்னியன் என்று ஒரு மன்னன் இந்த உலகத்தில் வாழ்ந்ததே இல்லை. அது வெறுமனே ஒரு கற்பனை கதாபாத்திரம் மட்டுமே ஆகும்” என்று தெரிவித்தார்.

வரலாற்று கதைச்சுருக்கம்:
பண்டாரவன்னியன் முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையிலுள்ள 2000 சதுரமைல் நிலப்பரப்பை ஆட்சி செய்து வந்தான். அமைச்சராக தனது தம்பி கயிலாயவன்னியனையும், தளபதியாக கடைசிச்சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவையும் அமைத்து அரசமைப்பை பேணி வந்தான்.

அவனது ஒரே சகோதரி பெயர் நல்லநாச்சாள். அவளுக்கு கலைகள் கற்பிக்கும் அவைப்புலவன் அவள் மீது காதல் கொண்டான். அதே நேரத்தில் வன்னி நிலத்தில் ஆண்டு வந்த இன்னொரு குறுநில மன்னனான காக்கைவன்னியன் அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். அதற்காக பலமுறை பண்டார வன்னியனிடம் ஓலை அனுப்பிய போதும் பண்டாரவன்னியன் அதற்கு சம்மதிக்கவில்லை.

ஒரு முறை நந்தவனத்ததில் நாச்சியாள் புலவரிடம் காதல் கொண்டிருக்கக்கண்ட காக்கைவன்னியன் புலவரிடம் சண்டைக்குப்போக புலவர் வாள் சண்டையிட்டு நையப்புடைத்து அனுப்புகிறான். இந்தச்சம்பவத்தால், புலவன் அரச பரம்பரையிலிருந்து வந்தவனென்பதை பண்டாரவன்னியன் அறிந்து கொண்டு அவர்களின் காதலுக்கு சம்மதிக்கிறான்.

வன்னியில் பண்டாரவன்னியன் திறை செலுத்த மறுத்த காரணத்தினால் படையெடுத்து வந்து வெற்றி காண முடியாமல் வெள்ளையர்கள் புறமுதுகு காட்டிப்பின்வாங்கினர். தனிப்பட்ட காரணத்தினால் பண்டாரவன்னியன் மீது ஆத்திரம் கொண்டிருந்த காக்கைவன்னியன், வெள்ளையின தேசாதிபதியுடன் கூட்டுச்சேர்கின்றான். இருந்தும் பல முறை படையெடுத்து வெள்ளையர் தோல்வி அடைகின்றனர்.

அத்தருணத்தில் காக்கைவன்னியன் பண்டாரவன்னியனை தந்திரமாகத்தான் வெல்லலாமென்று ஆலோசனை கூறுகிறான். அந்த திட்டத்தின் ஒரு அங்கமாக, தான் திருந்தி விட்டதாக நாடகமாடி பண்டாரவன்னியனிடம் வருகிறான்.

தம்பிமார்களான மந்திரியும் தளபதியும் காக்கைவன்னியனை சேர்க்க வேண்டாமென்று கூறிய ஆலோசனையையும் மீறி “மறப்போம் மன்னிப்போம்” என்ற அடிப்படையில் அவனை சேர்த்துக்கொள்கிறான். பின்னொருநாளில், தான் ஏற்கனவே திட்டமிட்டவாறு பண்டாரவன்னியனை தனித்து கூட்டி வந்து ஒட்டுசுட்டான் கற்சிலைமடு என்னுமிடத்தில் வைத்து வெள்ளையரின் படைகளிடம் தந்திரமாக அகப்பட வைக்கிறான் காக்கைவன்னியன்.

இன்றும் நம்பி ஏமாற்றுவர்களை “நீ காக்கை வன்னியன் பரம்பரையோ” என்று ஈழத்தில் கேட்கும் வழக்கு ஒன்று உள்ளது.

கி.பி 1736ம் ஆண்டளவில் மயில்வாகனப்புலவர் எழுதிய “யாழ்ப்பாண வைபவமாலை” எனும் நூல், 1985ம் ஆண்டு மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரன் எழுதிய “இலங்கைத்தமிழர் போராட்ட வரலாறு” எனும் நூல், கலைஞர் மு.கருணாநிதி எழுதிய “பாயும்புலி பண்டாரவன்னியன்” வரலாற்று காவிய நூல், மூத்த ஊடகவியலாளர் அருணா செல்லதுரை எழுதிய “அடங்காப்பற்று(வன்னி) பாகம்-2 பண்டாரவன்னியன்” எனும் நூல், கலாநிதி ஆ.குணராசா எழுதிய “ஈவத்தவர் வரலாறு” எனும் நூல், இவை எல்லாமே மேலே குறிப்பிட்டுள்ள கதைச்சுருக்கத்தின் அடிப்படையிலேயே வரலாற்றை விளம்புகின்றன. 

ஆனால் அமைச்சர் சத்தியலிங்கம், விடாமுயற்சிக்கு எடுகோளாக எரிந்து போன சாம்பலிலிருந்து எழுந்து பறக்கும் “பீனிக்ஸ்” எனும் கற்பனை பறவையை அடையாளம் காட்டுவது போல, “துரோகத்தனத்துக்கு அடையாளம் காட்டவே காக்கைவன்னியன் எனும் கற்பனை கதாபாத்திரம் வரலாற்றில் உருவகிக்கப்பட்டதாக” கூறுகின்றார்.

அமைச்சரின் சர்ச்சைக்குரிய இந்த கருத்து தொடர்பில் விவாதிக்க விரும்பும் வரலாற்றுத்துறை பேராசியர்கள் – ஆய்வாளர்கள் – மாணவர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், தமிழின உணர்வாளர்கள், கலை மற்றும் இலக்கிய ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் தமது கருத்துகளை sathiyaitak@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அத்துடன் +094 77722 8243,  +094 77350 3394 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி விவாதிக்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.

yathumaki@gmail.com